வரமா, சாபமா?
- melbournesivastori
- Jun 22, 2023
- 6 min read

உலகம் எங்கோ சென்று கொண்டிருக்கிறது… ஒவ்வொரு நாட்டின் முக்கிய செய்திகளை எடுத்துக் கொண்டால் நம்மை விட்டு, நம் நாட்டை விட்டு மற்ற நாடுகள் அதிவேகமாக எங்கோ சென்று கொண்டிருக்கிறது தெரிகிறது… நாகரிகத்தில், தனி மனித உரிமையில், தனிமனித சுதந்திரத்தில், கட்டமைப்பில், நாட்டு மக்களை காப்பதில், நாட்டு மக்களின் வசதிகளை காப்பதில்…..
நாகரிகத்தில் என்று சொல்வதை பெரும்பாலோர் எடுத்துக் கொள்வது உடுக்கும் உடை, உண்ணும் உணவு, இருக்கும் இருப்பிடம், அனுபவிக்கும் கேளிக்கைகள் இவைகளைத்தான். பேராண்மையை பெரும்பாலானோர் தவறாக புரிந்து கொண்டிருக்கின்றனர்… பாமர மக்களை கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை கட்டினவர், பல பிள்ளைகளை பெற்றவர் என்று நினைப்பது நம் காலத்திய சாபம்.
பல நாடுகளை சுற்றிப் பார்த்தவர்கள் இருப்பார்கள், அவ்வசதி இல்லாதவர்கள் கண்டிப்பாக பல நாடுகளை காணொளிகளிலோ திரைப்படங்களிலோ கண்டிருப்பர்…. அங்கு கட்டமைக்கப்பட்டிருக்கும் கட்டிடங்கள் ஆனாலும் சரி, சட்ட திட்டங்கள் ஆனாலும் சரி மக்களின் ஒவ்வொரு தேவையையும் தொலைநோக்கியே அமைக்கப்பட்டிருக்கும்….. அதுதான் பேராண்மை என்பதை நம் மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே சாபம் அதுவே பெரிய சோகம். நூறாண்டுகளுக்கு முன் நம் நாட்டில் பல வெகுளிகள் இருந்தார்கள் அவர்களே இப்போது ஏமாளிகளாக உருமாறி இருப்பது சாபமா இல்லை நேர்மையை விட்டு வெகு தூரம் சென்றதின் சோகமா? இப்பொழுது இவர்களால் வாழ்ந்து மறைந்த நாகரிகங்களையும் புரிந்து கொள்ள முடியவில்லை, வரப்போகும் பிரம்மாண்ட மாறுதல்களையும் புரிந்து கொள்ள முடியவில்லை, நிகழ்காலத்தில் நடக்கும் அரசியலையும் புரிந்து கொள்ள முடியவில்லை….. இந்த சாபத்தின் விளைவு சோகமே; துக்கமே. சிந்தனையை தூண்டுபவர்கள், சிந்திக்க வைப்பவர்கள் சீரழிக்கப்படுகிறார்கள் அல்லது சிரிப்புக்குளாகிறார்கள்… நாட்டைப் பொறுத்தவரை இது தீவிர சிகிச்சை பிரிவில் இருக்க வேண்டிய நோயாக மாறிவிட்டது..
நாம் வாழும் வாழ்க்கை வரமா, சாபமா?
சிறிது சிறிதாக நம்மை ஆட்கொள்ளும் செயற்கை நுண்ணறிவு வரமா, சாபமா?
நன்றாக சிந்தித்து பார்த்தால் சிந்திப்பவர்களுக்கு இது சாபமாகவும், இவைகளை சிந்திக்காமல் இருப்பவர்களுக்கு வரமாகவும் வாழ்க்கை மாறுகிறது..
விளக்கங்களால் வெகு தூரம் வந்து விட்டோம்…. நம் இக்கதையின் கதாபாத்திரங்களை பார்க்கலாம் அவர்களின் வாழ்க்கை வரமா, சாபமா என்று.
சுந்தரம், குமார், ராஜன் மூவரும் பள்ளி படிப்பில் இருந்து கல்லூரி படிப்பு வரை ஒன்றாக படித்த நண்பர்கள்.. சுந்தரம் சொந்த ஊரிலேயே அரசாங்க வேலையில் இருக்க, குமார் கனடாவில் நிரந்தரமாக குடியேற, ராஜனோ பிறந்தது எதையாவது சாதிக்க என்று எல்லோரும் துவங்கும் காணொளி ஊடகத்தை துவங்க அது அதிர்ஷ்ட தேவதையின் அரவணைப்பில் இருக்கும் என்று பார்த்தால் அதிஷ்ட தேவதை தொடர்ந்து ராஜனை துரத்த ஒரு லட்சம் இரண்டு லட்சம் மூன்று லட்சம் என்று இருந்த சந்தாதவர்கள் ஒரு மில்லியன் இரண்டு மில்லியன் மூன்று மில்லியன் தற்போது ஆறு மில்லியன் என்று இமயம் ஏற புகழின் உச்சிக்கு சென்று கொண்டே இருந்தான். ராஜனின் காணொளி ஊடகம் 'இதுவும் கலாச்சாரம்!' இங்கு அங்கு என்று இல்லாமல் இவர்கள் அவர்கள் என்று இல்லாமல் இளைஞர்களிடத்தும் முதியோர்களிடத்தும் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது….
சுந்தரத்தின் வாழ்க்கை அமைதியாக தான் சென்று கொண்டிருந்தது, சுந்தரம் ஒரு சன்னியாசி போல எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஏமாற்றங்கள் அடையாமல் இருந்து வந்தாலும்… சுற்றம் அவனை சுற்றி வார்த்தைகளால் அடித்தது… உன்னுடன் படித்த உன் நண்பன் தானே ராஜன்? அவனின் வாழ்க்கையை இப்போது பார்த்தாயா… புகழின் உச்சிக்கே சென்று விட்டான் உனக்கு ஏன் அது தோன்றவில்லை இன்று பல பல…
மன நிம்மதி, மன நிறைவு தான் வாழ்க்கையின் அடிப்படை என்று அவர்களுக்கெல்லாம் சொல்ல நினைத்து செவிடர்கள் காதில் ஊதிய சங்காக தான் அது இருக்கும் என்று மௌனித்தான். அந்த ஒப்பீடு சுற்றுத்துடன் நிற்காமல் சுற்றி வளைத்து குடும்பத்திலிருந்தே துவங்க மன நிம்மதியுடன் வாழ தன் மனது மட்டுமே போதாது என்று புரிந்து கொண்டான்.
குமார் டொரன்டோ ஏர்போர்ட்டில் ராஜனின் வருகைக்காக காத்திருந்தான். ஆமாம் 32 நாடுகளை சுற்றி சுற்றி காணொளிகளை அளித்த உலகம் சுற்றும் வாலிபன் ராஜன் குமாருடன் பத்து நாட்கள் தங்க கனடா வருகிறான்.
மறுநாள் மாலை ராஜன் நன்றாக ஓய்வெடுத்த பிறகு குமாரின் குடும்பம் உள்ளிருக்க ராஜனும் குமாரும் பர்கோலாவின் கீழே வெளியே அமர்ந்திருக்க…. குமார் பார்பிக்யூவில் கோழி இறைச்சியும், ஆட்டு இறைச்சியும் நன்றாக வேகத் திருப்பி போட்டுவிட்டு ராஜன் வாங்கி வந்த ப்ளூ லேபிள் பாட்டிலை திறந்து இரு கண்ணாடி குவளைகளில் ஊற்ற….
லேசாக அருந்தி கொண்டே இருவரும் பேச ஆரம்பித்தனர்.
'குமார், கனடாவில் நீ செட்டில் ஆனதுக்கு ரிக்ரட் ஏதாவது இருக்கிறதா?'
' ஏன் இப்படி கேக்குற? ஐ அம் என்ஜாய்ங் மை லைப்…… ஒரே ஒரு வருத்தம்…. உன்னை போல புகழ் பெறவில்லையே என்று தான்.. நாம் பிறந்ததற்கு ஒரு சாதனை நீ செய்து விட்டாய்… நானும் சுந்தரமும் உன்னைப் போன்று ஏதும் செய்யவில்லையே என்று மட்டும்'
ராஜன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான்… அதற்குள் இருவரும் இரண்டு ரவுண்ட் குடித்து விட்டிருந்தனர். இரண்டு தட்டுகளில் நன்றாக வருத்த சிக்கன் ட்ரம்லெட்ஸ் எடுத்து வந்து குமார் தர… இருவரும் சாப்பிட்டுக் கொண்டே பேச்சை தொடர்ந்தனர்.
' என்ன ராஜன் ஆழ்ந்த சிந்தனையில் போய்ட்ட?'
' இல்ல குமார் நீ இப்போது சொன்னதை யோசித்துப் பார்த்தேன்….. இங்கு வரும்போது விமானத்தில் 10 மில்லியன் கனவு கண்டு கொண்டிருந்தேன்…'
' புரியலையே…'
' இப்போது ஆறு மில்லியன் சந்தாதாரர்களை கொண்டிருக்கிறேன்…. என் கனவின் முதல் படி 10 மில்லியன் எட்டுவது… இதே வேகத்தில் நான் சென்றால் இன்னும் ஒரு வருடத்தில் அடைந்து விடுவேன்… ஆனால் ஏனோ தெரியவில்லை இப்போது இங்கு உன்னுடன் அமர்ந்து கொண்டிருக்கும்போது 10 மில்லியன் சந்தாதாரர்களை அடைந்து என் கனவின் முதல் படியை அடைந்து விட்டேன் என்று வைத்துக் கொள்ளலாம்… அதன் பிறகு?'
' என்ன இப்படி கேட்கிறாய் உன் லட்சியமே அதுதானே?'
' நீ சொல்வது சரிதான்… இங்கு அமர்வதற்கு முன்பு வரை… ஏனோ தெரியவில்லை… என்னைப் பொறுத்தவரை புகழின் உச்சியை அடைகிறேன்… ஒரு மன திருப்தி அது எதற்காக, யாருக்காக..'
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் அதே சமயத்தில் சுந்தரம் வாட்ஸ் அப்பில் குமாரை அழைக்க…
' நூறு வயது ஆயிசுடா சுந்தரம் உனக்கு'
' என்ன ஆச்சு என்னைப் பற்றி நினைத்துக்கொண்டு இருந்தியா?'
' ராஜன் வந்து இருக்கான், அவனோட பேசிக் கொண்டிருக்கும் போது உன்னை பற்றி பேச்சு வந்தது '
' அங்கு இருக்கானா? அவன் புகழே என் நிம்மதியை குலைக்கிறது '
' என்ன சுந்தரம் இப்படி சொல்ற, பொறாமை என்பது உன் அகராதியிலேயே இல்லையே?'
' பொறாமை இல்ல தான்…. ஆனா என்னை நிம்மதியா இருக்க விடல என்னை சுற்றி இருக்கிறவங்க….'
' என்ன சொல்ற சுந்தரம்?'
' ஸ்பீக்கரில் போடு, மூணு பேரும் பேசலாம் '
குமார் கைப்பேசியை ஸ்பீக்கரில் போட…
'என்ன ராஜா, கன்னடா ட்ரிப்பா இப்போ?'
' ஆமா சுந்தரம் '
' ராஜா, நீ எவ்வளவுக்கு எவ்வளவு வாழ்க்கையில் புகழ் பெறுகிறாயோ அவ்வளவு எனக்கு மன நிம்மதி தொலைய போகிறது என்று நினைத்தும் பார்த்ததில்ல…'
' என்ன சொல்ற சுந்தரம்?'
சுந்தரம் நடந்ததை இருவரிடம் சொல்ல…
' என்ன கொடுமை இது…. இந்த புகழை வைத்து என்ன செய்ய முடியும் யாருக்காக இதை சேர்க்கிறேன்… எதையோ இழந்து கொண்டு இருக்கிறேன்னு இப்போ இன்னைக்கு பீல் பண்றேன்…. நீயும் குடும்பத்துடன் நிம்மதியா சொந்த ஊரிலேயே இருக்கிற…. இவனோ இவன் நினைத்த மாதிரி கனடாவில் வந்து செட்டில் ஆயிட்டான்'
குமார் குறுக்கிட்டு…
' என்ன இருந்தாலும் தமிழ் தெரிஞ்ச ஜனங்கள் கிட்ட உன்ன தெரியாதவங்கள தேடினாலும் கிடைக்க மாட்டாங்க'
' அதான் இதுவரையிலும் வரம்னு நினைச்சிருந்தேன்…. இன்னைக்கு தான் புரியுது அது எனக்கு சாபம்னு '
' இன்னைக்கு தான் நானும் நெனச்சேன் சொந்த ஊரிலேயே செட் ஆவது சாபம்னு ' என்று சுந்தரம் சொல்லிக் கொண்டே பெருமூச்சு விட்டான்.
' இன்னா ஒற்றுமை…. நேற்று ராத்திரியில் இருந்து கனடாவுல செட்டிலானது வரம்னு நினைத்து இருந்த நான் அதை இவன மாதிரி புகழ்பெற வரம் கிடைக்கலையேன்னு சாபம்னு நினைக்க ஆரம்பித்திருக்கிறேன் ….'
பார்க், ஹாங் இருவரும் கொரிய சகோதரர்கள். காலத்தின் காலக்கூத்தா இல்லை காலத்தின் கொடுமையா என்று சொல்ல முடியவில்லை… பார்க் தென்கொரியாவிலும் ஹாங் வடகொரியாவிலும் பல வருடங்களுக்கு முன்பே பிரிந்து வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஒரே இனம், ஒரே மதம் சந்தர்ப்ப சூழ்நிலையால் இரு வேறு நாடுகளில் வாழ வேண்டிய துர்பாக்கியம். ஒரு வரியில் கூற வேண்டுமென்றால் தென்கொரியா அமெரிக்க தலைமை ஏற்று மேற்கத்திய நாடுகளுடனும், வடகொரியா கம்யூனிச சைனாவின் தலைமையேற்று சைனாவை மட்டுமே நட்பு நாடாக கொண்டும் இருக்கிறது. உலகெங்கும் கைப்பேசிகளில் கோலோச்சும் சாம்சங் கைப்பேசிகளில் மட்டும் இல்லாமல் பலவகை மின்னணு, மின்சார தொழில்நுட்பங்களின் வடிவங்களிலும், மகிழுந்து, பேருந்து இவைகளில் கொடிகட்டி பறக்கும் கியா, கியாவின் கிளையான ஹுண்டாய் இவைகளுடன் தென் கொரிய மக்களுக்காக மட்டுமே சாம்சங் நிறுவனம் தயாரிக்கும் சாம்சங் கார்கள் இப்படி மேற்கத்திய நாடுகளுக்கு சவால் விடும் படியாக இருக்கும் தென்கொரியாவில் வாழும் பார்க், இவைகளை வரமாக கருதி எவ்வளவுதான் சந்தோஷமாக இருந்தாலும் தன் சகோதரர் ஹாங்கை பார்க்க முடியாமல் இருப்பது பெரிய சாபக்கேடாகவே நினைத்து நாள்தோறும் வருந்துவது வாடிக்கை.
ஹாங்கோ பேரன்கள் கட்டாய ராணுவத்தில் இருப்பதும் மகளும் பேத்திகளும் வறட்சியின் பிடியில் சிக்கி விவசாயத்துக்கும் வழி இல்லாமல் உலகமெங்கும் கைவிட்ட கை துடைப்பத்தை முக்கிய சாலைகளில் நாள்தோறும் கையாள்வதும் வாடிக்கை. உலகெங்கும் பரவி இருக்கும் சாம்சங் அதி தொழில் நுட்ப தொலைக்காட்சிகள் தென்கொரியாவில் இருந்தாலும்… வடகொரியாவின் நிலைமையே வேறு அங்கு ஹாங்கின் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் ஒரே ஒரு காலாவதியான பெட்டி போன்ற சிறிய தொலைக்காட்சி மட்டுமே… அதையும் பொறுத்துக் கொள்ளலாம்… ஆனால் அதில் ஒளிபரப்பப்படுபவை அரசாங்கத்தின் போர் விளம்பர காணொளிகளே… பெயருக்கு ஸ்மார்ட் போன் போன்ற ஒன்று.. நாட்டிற்குள் மட்டுமே பேச முடியும்.. இணையதளம் இருக்கும் அதில் வெளிநாட்டு விஷயங்களை தேடுவதற்கு முடியாது.
ஹாங் இவையெல்லாம் வாழ்வதற்கு போதுமான வரம் என்று நினைத்தாலும் சகோதரனைப் பார்க்காமல் இருந்த துக்கம் சாபமாகவே பட்டது. காலத்தின் கொடுமை வடகொரியாவில் வாழும் மக்களுக்கு அரசாங்க நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது சிரிப்பும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது…
அவர்களுக்கு அங்கு வாழ்வதும், உயிருடன் இருப்பதும் வரமா, சாபமா என்று நினைக்க கூட தோன்றுவதில்லை…. நட்பு நாடான சைனாவில் தென்கொரியாவுக்கு நிகரான எல்லாம் முன்னேற்றங்களும் இருந்தும் அவைகளை தன்னாட்டு மக்களுக்கு அளிக்காமல் இருக்கும் வடகொரியா அரசாங்கம் தன்னாட்டு மக்களுக்கு வரமா, சாபமா?
திருமூர்த்தியின் அரசியல் விமர்சனம் நல்லோர் இடத்து பெரும் வரவேற்பை பெற்றிருந்த காலம் அது.. நல்லது நடந்தா நன்றாக இருக்குமே என்று நினைத்த எல்லோரும், படித்தோர் மட்டுமல்லாமல் கொஞ்சம் படிக்கத் தெரிந்த நல்லோரும் விரும்பி படித்தது திருமூர்த்தியின் அரசியல் விமர்சனங்களை….. அன்றைய பெரும் அரசியல் தலைவரை, தலைவராக ஏற்றுக் கொள்ள எந்த தகுதியும் இல்லை என்று யாருமே எழுத தயங்கிய அவரின் ஊழல்களை பிட்டு பிட்டு வைத்தது எழுதியது பெரும் சலசலப்பை எங்கும் ஏற்படுத்தி இருந்தது. திருமூர்த்திக்கு பெரிய மனநிறைவை அது தந்திருந்தாலும் அதுவே அவரின் மனோதிடத்திற்கு அந்த அரசியல் தலைவரால் சாவு மணி அடிக்கப்பட்டதற்கு காரணமாக அமைந்தது ….. திருமூர்த்திக்கு அது சாபமாகவும் அந்த அரசியல் கட்சிக்கு அது பெரும் வரமாகவும் அமைந்தது.
இந்த நிகழ்ச்சி திருமூர்த்திக்கு பசுமரத்து ஆணி போல் பதிந்து இருந்தாலும்…. நடந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு எல்லாவற்றையும் விட்டுவிட்டு சொந்த கிராமத்திற்கு வந்து விவசாயத்தை தொடங்கி, திருமணமும் செய்து கொண்டு பிள்ளை பெற்று அவனுக்கும் நான்கு வயதாகி விட்டது..
மகன் அகத்தியன் வளரும் விதத்திலேயே தெரிந்தது திருமூர்த்தியின் குணத்தின் போல் அச்சாக பிறந்த பிள்ளை என்று. கடந்த பத்து வருடங்களாக தலைநகருக்கு செல்ல விரும்பாத திருமூர்த்திக்கு சோதனையாக அமைந்து முன்பு பணியாற்றிய பத்திரிகை ஆசிரியரின் மகன் திருமணத்துக்கு செல்ல வேண்டியதாகியது. மனைவியும் மகனும் ஆர்வம் காட்டவே வேறு வழி இல்லாமல் திருமணத்தில் கலந்து கொள்ள சென்றார்கள்… திருமணமும் முடிந்தது.. அதுவரை நன்றாகத்தான் இருந்தது எல்லாம்… மனைவியும் மகளும் ஒரு நாள் இருந்துவிட்டு ஊருக்கு நாளை செல்லலாம் என்று சொல்லும் வரை… வேறு வழி இல்லை..
திருமண கூடத்திலேயே மதிய உணவை முடித்துக் கொண்டு கால் டாக்ஸியில் சுற்ற ஆரம்பித்தனர்…
ஒரு வளைவு வந்தவுடன் அகத்தியன் கத்தினான்… ' அப்பா அது நானு, அது நானு ' என்று.
திருமூர்த்திக்கு ஒரு நிமிடம் புரியவில்லை என்ன நடக்கிறது என்று… ' என்னடா சொல்ற?'
' அங்க இருந்துச்ச அந்த போட்டோல இருக்குறது நானு'
' எந்த போட்டோல?'
' அப்பா திரும்பி போங்கோ '
திருமூர்த்தி மகன் பேசுவதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை… இவன் போட்டோ ஆவது இங்கு இருப்பதாவது…
' நேரம் இல்லடா அப்புறம் பாத்துக்கலாம் '
ஒரு ஐந்து நிமிடம் தான் கார் சென்று இருக்கும்.. அங்கு இரண்டு ரோடுகள் சந்திக்கும் இடத்தில் வைத்திருந்த பெரிய பேனரை பார்த்து ' அதோ அப்பா அந்த போட்டோல இருக்குறதும் நான்தான்' என்று மகன் காட்டிய அந்த பேனரில் இருந்த புகைப்படத்தை பார்த்ததும் திருமூர்த்தி பேய் அறைந்தது போல் ஆனார்….
மகன் அகத்தியன் காட்டியது எந்த அரசியல் தலைவரால் தனக்குப் பிடித்த பத்திரிகை துறையை விட்டு வெளியேறினாரோ அந்தத் தலைவரின் புகைப்படம் தான் அது.
' என்னடா சொல்ற?' என்று ஒருவித நடுக்கத்துடன் கேட்க…
' ஆமாம்பா நான் தான் அந்த போட்டோல இருக்கிறது…. உன்ன மாதிரி இருந்த ஒருத்தர அடிக்க கூட சொன்னன் '
அவனே தொடர்ந்து சொன்னான்,
' கடைசியில் ஹாஸ்பிடல்ல இருந்தன், பொண்ணு பையன் எல்லாம் வந்து பார்த்தாங்க '
திருமூர்த்தியும் அவர் மனைவியும் பயத்தின் எல்லைக்கே போய் நடுங்கினார்கள்..
' சும்மா உளராத… நம்ம நேரா ஊருக்கு போலாம் ராத்திரி மிச்ச கதையை சொல்லு ' என்று மகனை சமாதானம் படுத்த முயன்றார்.
மகனும் வேறு சாலையில் வேறு காட்சிகள் வரவே இந்த பேச்சினை மறக்க… திருமூர்த்தியும் அப்பாடா என்று பெருமூச்சுவிட்டார்.
அந்த நிம்மதி சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை…. மற்றொரு சாலையை கடக்கும் போது…
' அப்பா, அப்பா இந்த ஹாஸ்பிடல்ல தான் என்னை சேத்தாங்க…' என்று கத்தினான்.
திருமூர்த்திக்கு முழுவதுமாக புரிந்து விட்டது… மகன் அகத்தியன் தான் தன் வாழ்க்கையையே பறித்த அந்த இறந்த அரசியல் தலைவரின் மறு ஜென்மம் என்று….
திருமூர்த்திக்கு தன் மகன் வரமா சாபமா என்றே புரியவில்லை….
நாம் வாழும் வாழ்க்கை முடியும் வரை தெரியப்போவதில்லை நாம் வாழ்ந்தது வரத்துடனா இல்லை சாபத்துடனா என்று.