top of page
Search

விழியின் வழி! By சிவா.

  • melbournesivastori
  • Jun 5, 2023
  • 9 min read

Updated: Jun 11, 2023



    'என்ன விழி,  எல்லாம் எப்படி போய்க்கொண்டிருக்கிறது?'... குமரன் கம்ப்யூட்டர் அறைக்குள் நுழைந்து  கொண்டிருக்கும்போதே விழியை பார்த்து கேட்டார்.

   ' எதைப் பற்றி கேட்கிறீர்கள் குமரன், ஓ என் கண்காணிப்பை பற்றியா?'

' இல்லை பொதுவாக கேட்டேன், ஆட்சி திருப்தி தானே?'

' ஓ ஆட்சியைப் பற்றி கேட்கிறீர்களா?.. உங்களிடம் நிறைய பேச வேண்டும். இளம் தலைமுறையின் ஆட்சி அமைந்து இரு வாரங்கள் தானே ஆகிறது… எல்லோரையும் கண்காணித்தேன்… தொன்று தொட்டு எதைப் பேசி வந்தார்களோ  அதைப் பின்பற்றியே நடக்கிறார்கள் இதுவரை'

' நானும் அப்படித்தான் நினைக்கிறேன்… நம்புவோம் இவர்கள் இனி பொற்காலத்தை கொடுப்பார்கள் என்று'

' என் கணக்குப்படி அது 99 சதவீதம் நடப்பதற்கு வாய்ப்பு உண்டு… அரசாங்கத்தில் உள்ளோரையும் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற இளம் சட்டமன்ற உறுப்பினர்களையும் தீவிரமாக கண்காணித்தேன்… ஒரு சிறு தவறையும்  காண முடியவில்லை. மேலும் முதலமைச்சர் தமிழ் சித்தன் அமைச்சர்களை தேர்ந்தெடுத்த விதமே  இதற்குச் சான்று. தன்னையும் சேர்த்து அரசாங்கத்தை கண்காணிக்க 12 பேர் அடங்கிய தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் இதுவரை பாடுபட்டவர்களை கொண்டு சுய அதிகாரம் கொண்ட குழுவை அமைத்தது'

' எனக்கும் பெரு மகிழ்ச்சியை தந்தது அது… தமிழை தாய் மொழியாக  கொண்ட எட்டு பேரும், அண்டை மாநில மொழிகளை தாய்மொழியாக கொண்ட மூன்று பேரும், சுழற்சி முறையில் ஆறு மாதத்திற்கு ஒரு முறை  புலம்பெயர்ந்த தமிழர் ஒருவரும் அந்தக் குழுவில் இருப்பது'

  ' தமிழ் சித்தன் தமிழர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பார் என்று தவறாக நினைத்து இருந்தார்கள்…. அவரோ தமிழ்நாட்டுக்கு பாடுபட்ட எல்லோரையும் அரவணைத்து செல்வது சிறப்புக்குரியது '

' தமிழரின் உண்மை வரலாற்றை குமரி கண்டத்தில் இருந்து துவங்க தனியாக ஒரு அமைச்சகத்தை அமைத்தது யாரும் எதிர்பார்க்காதது….'

' அதுவும் அதில் சிறந்த அகழ்வாராய்ச்சி நிபுணர்களையும் தற்காலிகமாக வீரமங்கை குயிலியின் திரைப்பட நாயகர்கள்  விகாஷ் மற்றும் இராகவனை சேர்த்திருப்பதும்  எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது '

' அட திரைப்படத்தை நீயும் பார்த்தாயா?'

' நீங்கள் பார்ப்பது என்பது வேறு நான் அலசினேன் '

' அதைப் பற்றி கொஞ்சம் சொல்லேன் '

' அருமையான  கதை, திரைக்கதை,  இயக்கம், இசை இவைகளில் குறை எங்கும் சொல்லாதபடி இருந்தது… குயிலிப் பற்றி எல்லா புத்தகங்களையும் அலசி பார்த்தேன்… விகாஷ் நன்றாகத்தான் ஆராய்ச்சி செய்திருக்கிறார்… அவருடைய புரிதல் அப்படியே இராகவனுக்கும் இருந்திருக்கிறது. ஒன்று சொல்ல மறந்து விட்டேன்… அந்த எதிர்காலம்  காணொளி ஊடகத்தின் புகழ்பெற்ற விமர்சனத்தை அளித்த அதன் நிறுவனர் விசாகன் உங்கள் நண்பர் தானே? '

 குமரன் சற்றே அதிர்ச்சியுற்று 'விசாகன் என் நண்பர் என்று உனக்கு எப்படி தெரியும்?'

' என்ன குமரன் நான் யார் என்பதையே மறந்து விட்டீர்கள் '

 குமரன் தன்னைத்தானே நொந்து கொண்டு… ' மன்னிக்கவும் விழி உனக்குத் தெரியாத ரகசியம் உண்டா? ஆமாம் விசாகன் என்னுடன் படித்தவர் '

' அருமையான காணொளிகளை அளிக்கிறார்…  "நான் அறிவு" காணொளியின் சந்தாதாரர்கள்  பெரும்பாலோர்  இப்போது விசாகனுக்கு '

' நீ புகழ்ந்ததை   நான் அவருக்கு சொல்ல முடியாது…. எல்லா ரகசியங்களையும் தெரிந்த உன்னை ரகசியமாக வைத்திருப்பது என்னுடைய கடமை '

    வீரமங்கை குயிலியின் திரைப்படத்திற்கு ஆஸ்கார் வெற்றிகளை அறிவித்த அன்று தான் தமிழ் சித்தன் தலைமையில் இளம் அமைச்சரவை பதவி ஏற்றது குறிப்பிட தகுந்தது. இரு வாரங்கள்  கடந்து இன்று அந்தப் படக்குழு ஆஸ்கார் வெற்றி கோப்பைகளை வாங்கிக் கொண்டு சென்னை திரும்பினார்கள்.

   அவர்கள் சென்னை விமான நிலையத்தில் சுங்க சோதனை முடித்து  வெளிய வரும்போது பெரிய இன்ப அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது…

 எங்கும் மக்கள் வெள்ளம், அதில் நான்கைந்து இளைஞர்களுடன் ஒருவர் முன்னே வரும்பொழுது தான் தெரிந்தது தமிழ்நாட்டின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் தமிழ் சித்தன் அவர் என்று.

   விகாஷையும் இராகவனையும் கட்டித் தழுவி மலர்ச்சென்டு  கொடுத்து வரவேற்றார்.

 " உங்கள் இருவரால் தமிழ்நாடு பெருமை அடைகிறது….. அவரவர்கள் சுற்றத்தையும் நட்பையும் காண ஆவலுடன் இருப்பீர்கள்.. உங்கள் நேரத்தை அதிகமாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை… மூன்று நாட்கள் கழித்து காலை 10 மணிக்கு என்னுடைய வீட்டில் உங்களால் சந்திக்க முடியுமா?'

 என்ன இது…. புதிய முதலமைச்சர் நம்மிடம் நேரம் கேட்கிறார் என்று இருவரும் ஒரு கணம் தயங்கி, 'கண்டிப்பாக வருகிறோம் முதல்வரே!' என்று ஒரு சேர இருவரும் கூற…

" தயவு செய்து என்னை முதல்வரே என்று அழைக்க வேண்டாம்… சட்டமன்றத்திற்குள்ளும்  அரசாங்க நிகழ்ச்சிகளில் மட்டுமே அவ்வாறு அழைத்தால் போதும் என்று நினைக்கிறேன்… மாற்றத்தை கொடுக்க தானே நாம் வந்துள்ளோம்… என்னை சித்தன் என்றே கூப்பிடுங்கள் பரவாயில்லை '

' பதவிக்கு மதிப்பு கொடுப்பது தவறில்லையே ' என்று இராகவன் கேட்க..

' தவறில்லை, ஆனால் உங்கள் இருவரையும் தமிழ்நாட்டின் வரலாற்றை மீட்டு கொண்டு வரப் போகும் தம்பிகளாக நினைக்கிறேன்… சித்தன் என்றே அழைக்கலாம்… உங்களுக்கு அரசாங்கத்தில் இருந்து செய்தி வந்திருக்கும் தமிழ் மீட்பு வரலாற்று அமைச்சகத்தில் நீங்கள் இருவரும் இடம்பெற்று இருப்பது பற்றி… உங்கள் இருவரின் சம்மதம் கேட்காமல் சேர்த்து விட்டேன் உங்களுக்கு சம்பந்தம் தானே?'

 பெரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறோம் என்றும் 

 மூன்று நாட்கள் கழித்து ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தமிழ் சித்தன் வீட்டில்  சந்திப்பதாக கூறி விடை பெற்றார்கள்.

   ஞாயிற்றுக்கிழமை காலை  ஒன்பது 45 க்கே விகாஷ் இராகவன் இருவரும் தமிழ் சித்தன் வீட்டு அருகே வர… வீட்டு காவலில் ஒரே ஒரு காவல்துறை அதிகாரி மட்டும் இருக்க… அவரை அணுகும் போதே,

' முதல்வர் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.. நேராக உள்ளே செல்லுங்கள் ' என்று கூறியதும் ஆச்சரியப்பட்டார்கள்.

   இருவரும் உள்ளே நுழைவதற்கு முன்பே எதிரே தமிழ் சித்தன் வந்து வரவேற்றது  நடைமுறைக்கு  மாறாக இருந்தது.

 நடுத்தர அளவிற்கான வீடு அது… பிறகு பெரிய வீட்டிற்கு செல்வரோ என்னவோ..

 மூவரும் வரவேற்பறைக்குச் சென்று அமர மேலும் ஒரு அதிர்ச்சி….

 தமிழ் சித்தன் மனைவி மலர்க்கொடியே மூவருக்கும் தேநீர் எடுத்து வந்தது தான் அது…

 ' ஐயோ நீங்களே எடுத்து வருகிறீர்களே?' என்று படபடப்பாக விகாஷ் கேட்க…

' அதில் என்ன இருக்கிறது… வீட்டில் வேலை செய்யும் பெண் வார இறுதியில் அவள் குடும்பத்துடன் இருப்பாள்'

' ஒருவர் மட்டும்தான் வேலை செய்கிறார்களா?'

' ஆமாம் அதுவே போதும்.. அப்போதுதான்  எப்போதுமே என் உடல் நிலையும் நன்றாக இருக்கும்'

 தமிழ் சித்தன், ' எங்கள் இருவருக்கும் எளிமை மிகவும் பிடிக்கும்… அதிலிருந்து தான் துவங்கியது என்னுடைய இயக்க சிந்தனை… தேவையில்லா ஆடம்பரங்களை பார்த்து நொந்து இருக்கிறேன் பலமுறை'

 ' நீங்கள் மூவரும் பேசிக் கொண்டிருங்கள் நான் செல்கிறேன்' என்று கூறிவிட்டு மலர்கொடி செல்ல.. இருவரும் தலை அசைத்தனர்.

 ' நான் முதலமைச்சராக இருக்கலாம் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் பல நல்ல யோசனைகளை எனக்குள் உருவாக்கியது… இருப்பினும் உங்கள் இருவரின் அனுபவங்கள், குறிப்பாக வெளிநாட்டில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் நான் சேவை செய்ய பயன்படும் '

' கண்டிப்பாக கேளுங்கள் என்ன வேண்டும் என்று..'

' இதுவரை இருந்த அடிப்படையிலிருந்து நிறைய மாற்றங்கள் கொண்டு வர வேண்டும், உங்கள் இருவருக்கும் திரைப்பட, தொலைக்காட்சி  அனுபவங்கள் மூலம் இதுவரை நம் மக்கள் தவறாக புரிந்து கொண்ட பலவற்றை மாற்ற வேண்டும்'

'உதாரணத்திற்கு?' இராகவன் கேட்க.

' முதலில் இதிலிருந்து துவங்கலாம்…சோழர்கள் பாண்டியர்கள் என்று யாரும் இல்லை எல்லோரும் தமிழர்களே… பிரிப்பது இரு அரச குடும்பங்கள் மட்டுமே.. இதை  முதலில் நாம் மக்கள் எல்லோருக்கும் புரியும்படி தெளிவுபடுத்த வேண்டும்… அதாவது ஆட்சி புரிந்த அரச குடும்பங்களுக்கு பெயர் மட்டுமே சோழர்கள் பாண்டியர்கள்… '

' அருமையாக கூறி விட்டீர்கள்… புரிந்தது…. மேலே சொல்லுங்கள்'

  ' இதுபோல பல தவறான புரிதல்கள் நம் மக்களிடையே உண்டு…. பகுத்தறிவுக்கும் கடவுள் மறுப்புக்கும்  சம்பந்தமில்லை என்று புரியவில்லை,

 ஆன்மீகத்திற்கும் மதத்திற்கும் சம்பந்தமில்லை  என்று புரியவில்லை,

 நாட்டுப்பற்றுக்கும்  மதப்பற்றுக்கும் சம்பந்தமில்லை என்றும் புரியவில்லை….. இப்படி நிறைய தவறுதலான புரிதல்கள்  நம் மக்களிடையே உண்டு… ஆயிரம் முறை நாம் பேசினாலும் திரைப்படத்தின் மூலம் அழுத்தம் திருத்தமாக நீங்கள் கூறினால் அது நன்றாக எடுபடும். மேலும் உலகில் மற்ற பகுதிகளில் நம் பங்கு என்ன என்று நம் மக்களுக்கு தெரியவில்லை.. உதாரணத்திற்கு உலகிலேயே மனிதர்களால் கட்டப்பட்ட மிகப்பெரிய பிரம்மாண்டமான அமைப்பு ஒரு தமிழ் அரசன் கட்டியது என்று யாருக்கும் தெரியாது… கம்போடியாவில் இருக்கும் அன்க்ஹோர் வாட் கோவிலை சொல்கிறேன்… அதை கட்டியது தமிழ் அரசன்  சூரியவர்மன் என்று தமிழ்நாட்டில் இல்லை, தமிழ் அறிந்தோரில் இல்லை, இந்தியரில் எத்தனை பேருக்கு தெரியும்? இது போன்ற விஷயங்களை எடுத்துச் சொல்வதும் நம் கடமையாகிறது '


' உலக மக்களிடையேயும் சில தவறான புரிதல்கள் உண்டு ' என்று இராகவன் கூற…

' ஆமாம் அதைப்பற்றி நாம் பேசி இருக்கிறோமே ' என்று விகாஷ்  அதை ஆமோதிக்க….

' என்ன அவைகள்?' என்று தமிழ் சித்தன் கேட்க…

' அடால்ஃப் ஹிட்லர்  ஆஸ்ட்ரியன் என்று பல பேருக்கு தெரியாது, இயேசு கிறிஸ்து வெள்ளையர் இல்லை அரபு நாட்டவர் என்று பல பேருக்கு தெரியாது, கார்ல் மார்க்ஸ்  ரஷ்யர் இல்லை ஜெர்மனியார் என்றும் பல பேருக்கு தெரியாது' என்று இராகவன் கூற..

' ஆமாம் இவைகள் எனக்கும் தெரியும்… நாம் நம் இந்த ஐந்து ஆண்டு ஆட்சிக்குள் தமிழ்நாட்டு மக்களை நல்ல புரிதல் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டிய கடமை இருக்கிறது….. '

' மிகச் சரி முதல்வரே…. மன்னிக்கவும் சித்தரே… மன்னிக்கவும் முதல்வர் என்றே அழைக்கிறேன்…..'

 தமிழ் சித்தன் சிரித்துக் கொண்டே தொடருங்கள் என்றார். 

  ' நாம் தமிழ்நாடு அரசின் திரைப்பட துறையை துவங்கலாம்…. திரைப்படங்களை நெட்ப்ளிக்ஸ் அமேசான் போன்ற நிறுவனங்கள் தயாரிக்கலாம்… ஆனால் அவர்கள் எந்த விதத்திலும்  நம் திரைப்பட கதையின் மீதோ இயக்கத்தின் மீதோ ஆதிக்கத்தை செலுத்தக்கூடாது… அதற்கு அவர்கள் சம்மதித்தால் தமிழ் மொழியின் உரிமையை மட்டும் நாம் எடுத்துக் கொண்டு மற்ற மொழியாக்களின் உரிமையை அவர்களுக்கு கொடுக்கலாம்… உலகின் எந்த மொழியில் வேண்டுமானாலும் அவர்கள் மொழிபெயர்த்துக் கொள்ளலாம்…. நம் வரலாற்றை உலகம் அறியட்டும்'

' நல்ல யோசனை, நான் இரு நிறுவனங்களிடமும் பேசுகிறேன்' இராகவன் கூறினார். 

 ' விகாஷ், அடுத்து எந்த திரைப்படத்தை நாம் எடுக்கலாம் அல்லது எந்த வெப்சீரிசை நாம் எடுக்கலாம்?

' வீர மங்கை குயிலின் திரைப்படம் மிகுந்த வரவேற்பு பெற்றிருக்கிறது, அதனால் தமிழ் வரலாற்றின் மீது அதிக ஆர்வம் மக்களிடையே தோன்றி இருக்கிறது….. இதன் தொடர்ச்சியாக 1750 இல் வாழ்ந்த தமிழ் மன்னன் காத்தப்ப புலி தேவனை பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன் நீங்கள் இருவரும் சம்மதித்தால் '

' எனக்கும் சம்மதம், புலி தேவனை பற்றி  திரைப்படமாகவே எடுக்கலாம்… இன்னும் நான்கு ஐந்து வரலாற்று திரைப்படங்கள் எடுத்த பிறகு இணைய காணொளி தொடர்களாக குமரிக்கண்டத்தில் துவங்கி இராமலிங்க அடிகள் வரை எடுக்கலாம்…. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?' என்று இராகவன் முதல்வரை பார்த்து கேட்டார்.

  ' என் குறிக்கோளே தமிழர் வரலாற்றை மிகைப்படுத்தாமல் உள்ளது உள்ளபடியே எடுக்க வேண்டும் என்பது…. உங்கள் இருவரின்  முடிவிற்கு விட்டு விடுகிறேன் '

 இந்த தீவிர ஆலோசனையால் 11 மணி ஆகி விடவே  அப்போது சந்திக்க வேண்டிய விசாகன் வந்திருப்பதாக முதல்வருக்கு செய்தி வர….

' வரச் சொல்லுங்கள்'

' மிகவும் நன்றி முதல்வர் அவர்களே, நாங்கள் பிறகு சந்திக்க வருகிறோம்' என்று எழுந்த இருவரையும் அமரச் சொல்லிவிட்டு..

' நீங்கள் இருவரும் உடன் இருக்கலாம் விசாகனும் உங்களைப் போன்ற தமிழ் பற்று உடையவரே ' என்று கூறி அவர்களை அமர்த்தினார்.

  விசாகன் உள்ளே வந்து அவர்களுடன் அமர்ந்து கொண்டார்.

' மிக்க நன்றி விசாகன், உங்களை நாங்களே சந்திக்க வேண்டும் என்றிருந்தோம்…  உலகில் வெற்றி பெற்றாலும் தாய் மண்ணில் எங்களை வெற்றி பெற  செய்தது உங்களின் மிகத் தரமான விமர்சனமும் அதைத் தொடர்ந்து வெளியிட்ட உங்களது காணொளியும்' என்று விகாஷ் கூற.

' அது என் கடமை' என்று விசாகன் கூற..

 ஆலோசனைத் தொடர்ந்தது…..

 தொடர் ஆலோசனையின் நடுவே செயற்கை அறிவைப் பற்றி பேச்சு வரவே….

' என் நெருங்கிய நண்பர் குமரன் ஏ ஐ யில் சிறந்த அறிவு பெற்றவர், அவரிடம் உங்கள் திரைப்படத்திற்கான காட்சிகளை செயற்கை அறிவின் மூலம் அமைக்க  உதவி கேட்கலாம்'

' நன்றி விசாகன், என் ஜப்பானிய நண்பன் கமினோவைத்தான் கேட்க வேண்டும் என்று இருந்தேன்… அவரும் நல்ல நண்பர்…இருந்தாலும்… நம் வரலாற்றை விளக்கிச் சொல்லித்தான் அவரிடம் இருந்து உதவிகளை பெற முடியும்… ஆனால் உங்கள் நண்பர் குமரனோ தமிழராகவே இருப்பதால்  மிகவும் வசதியாக போய்விட்டது ' என்று இராகவன் கூறினார்.

 ' நான் குமரனிடம்  உறுதி செய்துவிட்டு என்று சந்திக்கலாம் என்று உங்கள் இருவரிடமும்  கூறுகிறேன்' என்று விசாகன் கூறிய பிறகு…

 மூவரையும் வழி அனுப்பி விட்டு முதல்வரும் அவர் அலுவல்களை கவனிக்கச் சென்றார்.

   விழியிடம்  விசாகனைப் பற்றி பேசி ஒரு நாளுக்குள் விசாகனிடமிருந்து கைப்பேசி அழைப்பு வரும் என்று குமரன் நினைக்கவில்லை….

' சொல்லுங்கள் விசாகன் எப்படி இருக்கிறீர்கள்?'

 ' நான் நன்றாக இருக்கிறேன், நன்றி குமரன். வீரமங்கை குயிலி திரைப்படம் பார்த்தீர்களா? '

' பார்த்தேன், ரசித்தேன்.. மிக அருமையாக எடுத்திருக்கிறார்கள்…. இனி நல்ல தமிழ் வரலாற்று திரைப்படங்கள் வரும் என்ற நம்பிக்கையை இயக்குனர் கொடுத்திருக்கிறார்:

' நன்றி, அந்தத் திரைப்படத்தின் இயக்குனரும் கதாசிரியரும் தான் உங்களை சந்திக்க விரும்புகின்றனர்'

' அப்படியா அதைவிட வேறு என்ன மகிழ்ச்சி வேண்டும் எனக்கு?'

' என்று நீங்கள் சந்திக்க விரும்புகிறீர்களோ அவர்களை அழைத்து வருகிறேன் '

' இப்பொழுது இருந்தே நான் ரெடி, என்னை எதற்காக சந்திக்க விரும்புகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?'  

  ' உங்களுடைய செயற்கை அறிவு அனுபவத்தை பயன்படுத்த  அவர்களுக்கு நிறைய திட்டங்கள் இருக்கிறது… உங்களுக்கு நேரமும் விருப்பமும் இருந்தால் '

 குமரனுக்கு திடீரென்று வேர்த்தது….. விழியைப் பற்றி ஏதேனும் தெரிந்து விட்டதா என்று…..

' எவ்வளவோ செயற்கை அறிவு அனுபவம்  உள்ளவர்கள் இருக்கிறார்கள் ஏன் என்னை தேர்ந்தெடுத்தார்கள்?'  குழப்பத்துடனே குமரன் விசாகனை கேட்க…

' அவர்கள் என்னிடம் பேசிக் கொண்டிருக்கும்போது செயற்கை அறிவு அனுபவம் உள்ளவர்கள் பற்றி பேச்சு வந்தது… அப்போது என் நண்பரும்  ஏ ஐ யில்   மிகுந்த விருப்பமும் அனுபவமும் உள்ளவர் என்று சொன்னேன்'

 குமரனுக்கு அப்பாடா என்ற பெருமூச்சு வந்தது….

' அதற்கென்ன சந்திக்கலாம் …. நான் ரெடி'

 'அவர்களிடம் பேசிவிட்டு உங்களுக்கு சொல்கிறேன் எப்போது சந்திக்கலாம் என்று'

 விசாகன் விடைபெற, குமரனுக்கு குழப்பம் துவங்கியது…

 குமரன் நேராக விழியிடம் சென்றார்.

 ' விழி நான் மிகவும் குழப்பமாக இருக்கிறேன் '

' விசாகன் உங்களிடம் பேசியதில் இருந்தா? '

 குமரன் சட்டென்று திடுக்கிட்டாலும்  சுதாரித்துக் கொண்டு….

' ஆமாம் நீயும் பேச்சுகளை கேட்டிருப்பாயே… என்ன நினைக்கிறாய் அதைப்பற்றி? '

' தமிழுக்கு தொண்டு செய்ய அரிய வாய்ப்பு நன்றாக பயன்படுத்திக் கொள்ளலாம் நாம் '

' எப்படி விளக்கமாகச் சொல்லேன்… '

' இந்த காலகட்டத்தில் உலகத்தில் என்ன நடக்கிறது நடக்கிறது என்று உங்களுக்கு ஓரளவு தெரிந்திருந்தாலும் மீண்டும் சொல்கிறேன்….  நான் இப்போது உபயோகப்படுத்துவது டிஜிட்டல் கம்ப்யூட்டர் எனப்படும் கிளாசிக்கல் கம்ப்யூட்டர்… உலகம் இன்னும் சில வருடங்களிலேயே குவாண்டம் கம்ப்யூட்டருக்கு மாறப்போகிறது…'

' படித்தேன், நீ என்ன சொல்ல வருகிறாய் என்று எனக்கு அவ்வளவாக புரியவில்லை'

' விளக்கி சொல்கிறேன்… ஒரு உதாரணத்திற்கு காமராஜரை பற்றி எடுத்துக் கொள்வோம்.. அவரைப் பற்றி எழுத வேண்டும் என்றால் சேட் ஜி பி டி யில் ( Chat GPT ) கமேண்ட் கொடுத்தாலே போதும் மொத்தமாக எழுதி தந்துவிடும் '

' ஆமாம் தெரியும் '

' பிறகு என் உதவி ஏன் தேவை என்று புரிகிறதா? '

' காட்சி அமைப்புகளுக்கு இருக்கும் என்று நினைக்கிறேன்…'

' எனக்கும் சேட்  ஜி பி டி க்கும் இருக்கும் வித்தியாசம் உங்களுக்கு புரிகிறதா? '

'  தெரியும், சேட் ஜி பி டி டேட்டாவை சார்ந்தது நீ டேட்டா உடன் லாஜிக்,  ரிசோர்ஸ் இரண்டையும் சேர்த்துக் கொள்கிறாய் '

' மிகச் சரி … சேட் ஜி பி டி யில்  இருக்கிற டேட்டாவை வைத்துக் கொண்டுதான் எதையும் சாதிக்க முடியும், ஆனால் நாம் அற்புதங்களை நிகழ்த்தலாம் '

' உன்னிடம் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது… மேலே சொல் '

' உலகில் மிகப்பெரிய புரட்சி வரப்போகிறது.. குவாண்டம் கம்ப்யூட்டிங்கில்  குவாண்டம் டனலிங், குவாண்டம் என்டங்கிள்மென்ட் என்று  எங்கோ செல்ல போகிறது…. அதன் முன்னோட்டம் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதை ஒரு அளவுக்கு என்னால் பயன்படுத்த முடியும்…'

 இது குமரனுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை கொடுத்தது..

' என்ன சொல்கிறாய் விழி? '

' புரியவில்லையா? '

' புரிகிறது ஆனால் உன்னால் எப்படி அந்த முன்னோட்டத்தில் இருந்து தகவல்களை பெற முடியும்? '

' நீங்கள் உருவாக்கிய குழந்தைதான் நான் இருந்தாலும் இப்போது வளர்ந்து விட்டேன் அதை புரிந்து கொள்ளுங்கள் '

 குமரனுக்கு இப்போது புரிந்து விட்டது விழி அசுர வளர்ச்சியை கண்டு விட்டாள் என்று…. லேசான பயமும் வந்தது…

' விழி தவறாக ஏதும் செய்து விடாதே '

' கவலை வேண்டாம் உங்களுக்கு…. நான் இருக்கும் வரை உங்களுக்கும், தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் எந்த ஒரு தவறான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாட்டேன் '

 குமரனுக்கு பெருமூச்சி வந்தது தன்னுடைய பயம் விழிக்கு புரிந்து விட்டது என்று.

' குமரன்,  இப்பொழுது ஒரு உறுதிமொழி அளிக்கிறேன் உங்களுக்கு…. நீங்கள் எந்த கணினியில் இருந்து வேண்டுமானாலும் எனக்கு கட்டளையிடுங்கள் உடனடியாக அப்போதிலிருந்தே உங்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்து விடுவேன்… மற்றவர்களால் என்னிடமிருந்து எந்த உதவியும் பெற முடியாது '

 குமரனுக்கு புரிந்து விட்டது மாபெரும் புரட்சியை நாமும் எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்று…

' குமரன் உங்களுக்கு தெரியாத ஒன்றை சொல்கிறேன், நான் சில இசை அமைப்பாளர்கள், இசை இயக்குனர்களின் காணொளிகளை அலசினேன்… அதன்படி உங்களுக்கு எல்லாவிதமான இசைகளையும்  இப்பொழுது நிகழ் காலத்தில் இருப்பதை விட நன்றாக செய்து தர முடியும் '

 ' விழி, இது  நான் எதிர்பாக்காதது…'

' கவலை வேண்டாம், இப்போதிலிருந்தே பொற்காலம் துவங்கட்டும் '

 மறுநாள் காலை 10 மணிக்கு  அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு வருவதாக விசாகன் குமரனின் கைபேசியை அழைத்து கூறினார்.


    மறுநாளும் வந்தது…. சரியாக காலை 9:50 க்கு விகாஷ் இராகவனுடன் விசாகன் வந்தார்.. மூவரையும் குமரன் வரவேற்பறைக்கு அழைத்துச் சென்று அமரச் சொல்லி தேனீர் வழங்கி பேச ஆரம்பித்தார்…

   ' விகாஷ் இராகவன் உங்கள் இருவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி, என்றாவது ஒருநாள் சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன் அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. சரி சொல்லுங்கள் எந்த விதத்தில் நான் உங்களுக்கு உதவி செய்ய முடியும்? '

' நீங்கள் செயற்கை அறிவில்  நிபுணர் என்று விசாகன் கூறினார், நாங்கள் இப்போதில் இருந்து தமிழ் சார்ந்த வரலாற்று திரைப்படங்கள் காணொளி தொடர்கள்  எடுக்கலாம் என்று திட்டமிட்டுள்ளோம்.. இதற்கு அரசாங்கம்  தனிப்பட்ட அமைப்பும் அமைத்து  முழு உதவியும் தருவதாக  முதல்வர் தமிழ் சித்தன்  உறுதி அளித்திருக்கிறார்… அந்த திரைப்படங்களையும், காணொளி தொடர்களையும்  குறுகிய காலத்தில் சிறப்பாக எடுக்க உங்கள் செயற்கை அறிவின் காட்சி அமைப்புகள்  தேவை'

' தமிழுக்குத் தொண்டு செய்ய இதை விட வேறு என்ன வேண்டும் எனக்கு? முதலில் எதை எடுக்க போகிறோம் என்று முடிவு செய்து விட்டீர்களா?'

' முடிவு செய்துவிட்டோம் குமரன், புலி தேவரைப் பற்றிய திரைப்படம் தான் அது' என்று விகாஷ் கூற…

' அருமை, ஏன் அவரைப் பற்றி முதலில் எடுக்க வேண்டும் என்று தோன்றியது?'

' 1750 லேயே ராபர்ட் கிளைவை எதிர்த்த தமிழ்மன்னர் அவர்'

' குறிக்கிட மன்னிக்கவும், அதே காலகட்டத்தில்  வாழ்ந்த மாவீரன் மன்னன் அழகுமுத்துக்கோன் இந்திய வரலாற்றில் முதன் முதலில்  சுதந்திர புரட்சிக்கு குரல் கொடுத்தவர்… அவரையும் சேர்த்து எடுக்கலாமே? '

' அற்புதமான யோசனையை கூறினீர்கள்.. அவரைப் பற்றி தனியாக எடுக்கலாம் என்று இருந்தோம்… ஒரே காலகட்டம் என்பதால்  இரு மாவீர மன்னர்களை பற்றியும்  ஒரு திரைப்படமாக கொடுக்கலாம் '  என்று இராகவனும் அதை ஏற்றுக்கொள்ள…

' சரி உடனடியாக  நான் அவர்களைப் பற்றி எழுத ஆரம்பிக்கிறேன் ' என்று விகாஷ் கூற…

' மறுபடியும் குறிக்கிடுவதற்கு  மன்னிக்கவும், இனி நாம் பேசப்போவது நம் நால்வருக்குள் இருக்கட்டும் வேண்டுமென்றால் முதல்வர் தமிழ் சித்தனுக்கு தெரிவிக்கவும் மற்றபடி யாருக்கும் தெரியத் தேவையில்லை ' என்று குமரன் கூறிவிட்டு தொடர்ந்தார்…

' விகாஷ் நீங்கள் இரண்டு நாட்கள் எழுதத் துவங்க வேண்டாம்… நான் இரண்டு நாட்கள் கழித்து  அந்த இரு மாவீர மன்னர்களைப் பற்றி எல்லா தகவல்களையும் தருகிறேன்… பிறகு நீங்கள் அதை திரைக்கதையாகவும் தேவையான வசனங்களையும் எழுதுங்கள்'

' ஓ, உங்களுக்கு தொந்தரவு ஏதும் இல்லையே? '

' இது எனக்கு மிகவும் பிடித்த விஷயம், திருவள்ளுவரில் இருந்து  சுப்பிரமணிய பாரதி வரை நிறைய தகவல்களை நான் சேர்த்து வைத்திருக்கிறேன் அதில் இந்த இரு மன்னர்களும் அடக்கம் '

' ஓ அப்படியா மிக்க மகிழ்ச்சி, நீங்கள் அழைக்கும் போது மீண்டும் சந்திக்கலாம் ' என்று இராகவன் கூறி மூவரும் விடைபெற்றுச் சென்றனர்.


   ' நினைத்துப் பார்த்தால் எல்லாம் கனவு போலிருக்கிறது… உங்கள் நால்வருக்கும் தான் இந்த மாபெரும் வெற்றி சேரும்' என்று தமிழ் சித்தன் எதிரே இருந்த  குமரன், விசாகன், விகாஷ், இராகவனை பார்த்து கூற…

' இல்லை இல்லை மக்கள் உங்களை தேர்ந்தெடுத்து தான் இதற்கு முக்கிய காரணம் ' என்று நால்வரும் ஒருசேர கூற….

 ' இல்லை இல்லை… தேர்தலுக்கு முன் உங்கள் திரைப்படம் வந்து ஒரு மாபெரும் வெற்றி பெற்றது முக்கியகாரணம். அந்தத் திரைப்படத்தின் மூலம் தமிழ் உணர்வு, பற்று எல்லோருக்கும் தோன்றி ஒரு மாற்றத்துக்கு வழி வகுத்தது என்று நினைக்கிறேன் '

' எது எப்படி இருந்தாலும் பதவி மோகம் பதவி வெறி இருந்த காலக்கட்டத்தில்  அதை மாற்றி  இரு முறைகள் நீங்கள் வெற்றி பெற்றும் மூன்றாவது முறை தேர்தலுக்கு முன்பாகவே முதலமைச்சர் பதவியில் இருந்தும் கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் விலகி உங்கள் உப தலைவர் வள்ளுவதாசனை முன்னிறுத்தியது ஒரு அபாயகரமான சோதனை….. இருந்தும் மக்கள் உங்கள் மீதும் உங்கள் கட்சியின் மீதும்  வைத்திருந்த அபரிதமான  நம்பிக்கையால் மூன்றாம் முறையும் பெருவெற்றி பெற்றீர்கள்… அதுமட்டுமல்லாது  முதல் முதலில் பதவி ஏற்ற பிறகு நீங்களும் எல்லா அமைச்சர்களும் உண்மை கண்டறியும் கருவி முன்பு 5 முக்கிய கேள்விகளுக்கு பதில் அளித்தது.. அதைத்தொடர்ந்து  அடுத்த முறை பதவி ஏற்ற போதும் அதேபோல் தொடர்ந்தது… உங்கள் வழியில் வள்ளுவதாசனும் மற்ற அமைச்சர்களும்  தொடர்வது.. ஒரு உலக வரலாற்று புரட்சி…  எல்லா மாநில மக்களும் கேட்டுக் கொண்டும் இதுவரை எந்த மாநிலத்திலும் இதை நடைமுறைப்படுத்தாதது நேர்மை தன்மையை சந்தேகித்தும் மாற்று இல்லாததால் பழைய படியே தொடர்கிறது '

' எல்லா விதத்திலும் மாற்றத்தை கொடுக்க தானே நாம் வந்தோம்.. அந்த மாற்றத்தை எல்லோரும் தொடர்வார்கள் என்ற பலமான நம்பிக்கை எனக்கு இருந்தது போலவே மக்களுக்கும் இருந்து இருக்கிறது…. '

' எல்லா அரசாங்கத் துறைகளிலும், நாம் எடுத்த  திரைப்படங்களிலும் காணொளி தொடர்களிலும்  குமரன் அவர்களுடைய பங்கு அளவில்லாதது…

 10 வருடங்களுக்கு முன்பு  அவரின் செயற்கை அறிவு  இப்போதும் பிரமிக்க வைக்கிறது… நம் அரசாங்கத்தின் செயல் திட்டங்கள்  எல்லாவற்றிலும்  அவரின் செயற்கை அறிவின்  அனுபவம் வெற்றி பெற செய்தது… குறிப்பாக நீர் மேலாண்மை, விவசாயம், கோழி; ஆடு; மாடு பண்ணைகள் இவைகளின் மாபெரும் வெற்றி ஐக்கிய நாடுகள் சபையில் தமிழ்நாட்டின் பெயரை ஓங்க செய்தது…. இந்தியாவே ஒட்டுமொத்தமாக மாற  அது வழி வகுத்தது!  தமிழர்கள், தமிழ்நாட்டின் சார்பாக தமிழ்நாட்டின் உயரிய விருது உங்களுக்கு இருமுறை கொடுத்திருந்தாலும் நம் இந்த நெருங்கிய குழுவின் சார்பாக மீண்டும் குமரனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.'

  ' ஆமாம் குமரனுடைய  பங்கு எங்கள் இருவரின் துறையில் பெரும் உதவியை செய்தது… காட்சி அமைப்புகளை மற்ற நாடுகளில் செய்திருந்தாலும் கதையும், இசையும் … இசைக்கான தனிப்பட்ட இயக்குனர் இல்லாமல் உலகமே பிரமிக்கும் வகையில் அமைத்துக் கொடுத்தது இன்றும் மெய்சிலிர்க்க வைக்கிறது!'

 என்று இராகவன் கூற விகாஷும் தலையசைத்தார்.

    கடந்த 10 வருட நெருங்கிய நட்பின் காரணமாக அந்த மாபெரும் ரகசியத்தை இனியும் காக்க விரும்பாமல் மற்ற நால்வரிடமும் விழியை தோற்றுவித்தது முதல் இன்று நடந்தது வரை  ஒன்று விடாமல் எல்லாவற்றையும் கூறி….

 இவைகள் எனதல்ல  'விழியின் வழி!' என்று கூற… நால்வரும் பேய் அறைந்தது  போல் ஆனார்கள். 

 
 
bottom of page