top of page
Search

வேல் – ஊர்! -2 By சிவா.

  • melbournesivastori
  • Jan 17, 2023
  • 8 min read

மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் காதல் என்பது இருப்பதாக தெரியவில்லை… அது வெறும் உடல் ஈர்ப்பு என்று தான் நான் நினைக்கிறேன் என்றார். நன்றாக யோசித்துப் பார்த்தாலும், இன்று நடப்பவைகளை ஒப்பிட்டு பார்த்தாலும் அது சரியே என்று தோன்றுகிறது. பட்ட மேற்படிப்பு படித்த ஒரு படிப்பாளி பெண் தெரு முனையில் படிப்பறிவே இல்லாத ஒரு மெக்கானிக் மோட்டார் சைக்கிள் ஓட்டும் திறமையை கண்டு மயங்கினாள் என்றால் அதை காதலாக  ஏற்றுக்கொள்வது  மடமையாகப்படுகிறது. ஒரு படித்த நல்ல வேலையில் இருக்கும் இளைஞன் தான் தினமும் சிகரெட் வாங்கும் பெட்டிக்கடையில் இருக்கும் ஒரு படிப்பறிவு இல்லாத பெண்ணை விரும்பினால்  அதையும் காதலாக எடுத்துக் கொள்ள முடியாது…. அது இரக்கத்தின்  வெளிப்பாடே. திரைப்படங்களின் மூலம் இக்காலத்திய காதல் என்பது… கல்லூரிக்கு செல்லும் ஒரு பெண்ணை வேலையில்லாமல்  தொடர்ந்து தொடரும் ஒருவன் செய்வதும் காதல்..

ஒரு பெண் தன்னிடம் இருந்த பணப்பையை திருடி சென்றவனிடமிருந்து அடித்து பிடுங்கி திருப்பிக் கொடுக்கும் ஒருவனிடம் உடனடியாக கொள்வதும் காதல்…

இவைகள் திரு சுஜாதா அவர்கள் சொன்னது போல் உடல் ஈர்ப்பு மட்டுமல்லாமல் நன்றி, இரக்கம், நட்பு போன்ற மனநிலைகளில் அடங்கும். தெய்வீக காதலிலிருந்து திருமணத்தில் முடிந்து ஒரு வருடத்திற்குள்ளாகவே விவாகரத்திற்கு நீதிமன்றத்தில் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான வழக்குகளே இதற்கு சாட்சி..

இந்த நம் கதையின் கதாநாயகன் வேலாயுதத்திற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன் நடந்தது வித்தியாசமான ஒன்று…

‘வேலா, நீ கேட்டது போல் நம் உடற்பயிற்சி கூடத்தில் இருந்து ஒரு நம்பகமானவனை அந்த வீட்டுக்கு கண்காணிக்க அனுப்பி விட்டேன்.’

‘ நன்றி மருது, அந்த கோபாலிடம் ஏதோ தவறு இருப்பதாகப்படுகிறது ‘

‘ மருது, சங்கரனை இரு நாட்களாக காணவில்லையே ஏன்?’

‘ எனக்கும் தெரியவில்லை இன்று சென்று பார்க்கலாம் ‘

சங்கரன், மருது, வேலாயுதத்தின் நண்பன். இன்றைய வேலூரில் இருக்கும் சங்கரன் பாளையம் தான் சங்கரனின் அன்றைய வாழ்விடம். அவனுடைய பெயருக்கும் அந்த பகுதியின் இக்காலத்திய பெயருக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்று தெரியவில்லை. வேலாயுதம் வீட்டில் இருந்து சங்கரன் வாழ்விடத்திற்கு வரவேண்டும் என்றால் வேல மரங்கள் நிறைந்த இன்றைய வேலப்பாடியை கடந்து வரவேண்டும். வேல மரங்கள் காடு போன்று அதிகம் இருந்தால் பிற்காலத்தில் வேலப்பாடி என்று அழைக்கப்பட்டதோ என்னவோ?!

‘ மருது, சங்கரன் வந்தால் நாளை அவனையும் அழைத்துக் கொண்டு ஆலங்காயம் செல்லும் வழியை பார்த்து விட்டு வர வேண்டும்.. அங்கிருந்து நம்மூர் சந்தைக்கு வருபவர்கள் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறினார்கள் அதற்காகத்தான்’

‘சரி வேலா, அப்படியே செய்யலாம்’

தாய் மரகதத்திற்கு ஏதாவது தேவையா என்று கேட்டுவிட்டு இருவரும் சங்கரனை பார்க்க கிளம்பினார்கள்.

இன்று போகி, அன்றைய தமிழ்நாட்டில் அறுவடை காலத்தில் உழவர் திருநாள் தமிழரின் பெருநாள் பொங்கல் தான் முதன்மை… போகி முதல் ஒரு வாரத்திற்கு எங்கும் விழாக்கோலம் காணப்படும். அந்த சமயத்தில் எங்கும் விழாக்கள், கேளிக்கைகள், விளையாட்டுகள்.. வயது வித்தியாசம் இன்றி அந்த ஒரு வாரம் எல்லோராலும் கொண்டாடப்படும். அந்த காலகட்டத்தில் வேற்று மதங்கள் இல்லை ஒரே மதம் சிவசமயம் சிவனும் முருகனும் தான் தமிழ்நாடு எங்கும் வழிபாட்டில் இருந்தனர்..மற்றும் ஒவ்வொரு ஊரிலும் குல தெய்வங்கள் வழிபாடு.

அரை மணி நேரத்திற்க்குள்ளான சவாரியில் வேலனும் மருதுவும் சங்கரன் வீட்டை அடைந்தனர். வீடு மூடப்பட்டு இருந்தது.. மருது வீட்டைத் திறந்து உள்ளே சென்று பார்க்க சென்ற சமயத்தில் வேலன் சங்கரன் எங்கே சென்றிருப்பான் என்று நினைத்துக் கொண்டு நின்று இருக்கையில் சடார் என்று ஒரு கை அவனை வீட்டின் திண்ணை பகுதியில் இழுத்துப் போட, தடுமாறி சமாளித்து எழுந்து நிற்பதற்குள் நிலைமையை புரிந்து கொண்டான்… ஒரு முரட்டு மாடு தறிக்கட்டு தன்னை முட்ட வந்ததை பார்த்து தான் இந்த பெண் தன்னை இழுத்தது தெரிந்து நன்றியுடன் பார்த்து தலையசைத்தான். இக்காலத்திய திரைப்படத்தை போல் உடனடியாக காதல் மலரவில்லை..

‘மன்னிக்கவும் நீங்கள் சங்கரன் அண்ணனுடைய நண்பர்கள் தானே?’

‘ ஆமாம் எங்கே இருக்கிறான்?’

‘ இரு நாட்களாக காய்ச்சல், மருத்துவரை காண பாடிக்குச் சென்று இருக்கிறார்கள் வரும் நேரம் தான், பருக உங்கள் இருவருக்கும் ஏதாவது வேண்டுமா?’

‘ இல்லை, இல்லை நன்றி வேண்டாம் ‘

ஏதாவது வேண்டுமென்றால் எங்களை கேளுங்கள் நாங்கள் பக்கத்து வீடுதான்’ என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அந்தப் பெண்ணின் தாயார், ‘ குயிலி யாரம்மா அங்கே?’ என்று கேட்டுக் கொண்டே வந்தார்.

‘ பக்கத்து வீட்டுக்கு வந்திருக்கிறார்கள்’ என்று சொல்லி முடிப்பதற்குள்…

‘தம்பி உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேனே….’ என்று சொல்லி குயிலியின் தாயார் வேலனை பார்த்து கேட்க..

வேலனுக்கும் அவர்களை எங்கேயோ பார்த்தது போல் தான் தோன்றியது ஆனால் எங்கே என்று நினைவுக்கு வரவில்லை.

‘ எனக்கும் அதே தான் தோன்றுகிறது அம்மா… ஆனால் நினைவுக்கு தான் வரவில்லை’

‘ ஆ எனக்கு ஞாபகம் வந்துவிட்டது… சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு சித்திரை பௌர்ணமிக்கு சித்தேரிக்கு வந்திருந்தவர் அல்லவா நீங்கள்?’

‘ ஆமாம், நான் எல்லா வருடமும் அங்கு செல்வேனே ‘

‘ முருகன் அவதாரம் எடுத்து என்னை காப்பாற்றியவர் அல்லவா நீங்கள்? தம்பி என்னை நினைவில்லையா நீங்கள் தானே என்னை யானையிடமிருந்து காப்பாற்றினீர்கள்?’

வேலனுக்கு நினைவுக்கு வந்தது..

‘ஆமாம் தாயே, மறந்து விட்டேன் ‘

‘ தம்பி உங்கள் நண்பரையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வாருங்கள்… குயிலி இவர்களுக்கு மோர் கடைந்து எடுத்து வா’

இருவரும் சென்று மோர் அருந்தினார்கள்… அதற்குள் சங்கரன் வந்து விடவே, குயிலிடமும் அவளுடைய தாயிடமும் விடை பெற்றுக் கொண்டு சங்கரனை காண சென்றார்கள்.

‘என்ன சங்கரா, இப்போது உடல்நிலை எப்படி இருக்கிறது?’

‘ வேலா, மருது எப்போது வந்தீர்கள்? இப்போது நன்றாக இருக்கிறேன் இரு நாட்களாக கொஞ்சம் காய்ச்சல் அவ்வளவுதான் ‘

‘ நாளை ஆலங்காயம் செல்லும் சாலைக்கு செல்லலாம் என்று இருக்கிறோம் உனக்கு உடல்நிலை சரியில்லை நீ வர வேண்டாம் இரு நாட்களாக பார்க்கவில்லையே என்று வந்தோம்’

‘ நான் இப்பொழுது முழு குணமடைந்து விட்டேன்…. நானும் வருகிறேன்’

‘ வேண்டாம் நீ ஓய்வெடுத்துக் கொள் ஏதோ சிறுத்தை நடமாட்டம் என்று சொன்னார்கள்… நல்ல உடல் நிலை இருந்தால் மட்டுமே எங்களுடன் வா ‘

‘ எதற்கும் நாளை வீட்டுக்கு வருகிறேன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் ‘

இப்போது தற்செயலாக வெளியே வந்த குயிலியின் தாய் ‘ கேட்பதற்கு மன்னிக்கவும் ஆலங்காயம் எதற்காக சொல்கிறீர்கள் தம்பி?’

‘ வேறு ஒன்றும் இல்லை அம்மா, நம்ம ஊர் சந்தைக்கு வருவதற்கு அந்த சாலையை பயன்படுத்துகிறார்கள் ஆலங்காயம் மக்கள் வழியில் சிறுத்தையைப் பார்த்ததாக ஒரு சிலர் கூறினார்கள், அந்த பயத்தை போக்க தான் சென்று பார்த்து வரலாம் என்று செல்கிறோம் ‘

‘ தம்பி, இன்னும் ஒரு வாரத்திற்கு யாரும் சந்தைக்கு வரப்போவதில்லை, நாளையோ நமக்கு பொங்கல்… இந்த நன்னாளில் தாய் தந்தையுடன் வீட்டில் இருக்கலாமே?!’

‘ வேலா இந்த அம்மா சொல்வதும் சரி, அடுத்த வாரம் செல்லலாம்… சங்கரா நீயும் நாளை காலை வரத் தேவையில்லை, நாம் மாலை சந்திக்கலாம்’

‘ குயிலின் அப்பாவிற்கு சற்று உடல்நிலை சரியில்லை, இல்லாவிட்டால் மாட்டுப்பொங்கலுக்கு உங்கள் மூவரையும் அழைத்து இருப்பேன் ‘

‘ ஏன் அவர் உடல் நிலைக்கு என்ன?’

‘ தம்பி சங்கரன் போல் தான் அவருக்கும் காய்ச்சல்… ‘

‘ மாட்டுப் பொங்கலுக்கு என்ன செய்வதாக உத்தேசம் இருந்தது?’

‘ எங்க வீட்டுக்கு கொம்பனை ஜல்லிக்கட்டு அழைத்து செல்வதாக இருந்தோம்…’

‘ அதற்கு என்ன நாங்கள் அழைத்து செல்கிறோம் ‘

‘ இல்லை தம்பி, அவன் குயிலிக்கும் அவள் அப்பாவிற்கும் தவிர யாருக்கும் அடங்க மாட்டான்’

இந்த பேச்சுக்களை எல்லாம் கதவின் பின்னால் இருந்து கேட்டு கொண்டிருந்த குயிலி, தன்னையும் மறந்து வெளியே வந்து…

‘ அம்மா நீங்கள் அனுமதிப்பதாக இருந்தால் சரி… அண்ணன் சங்கரன் தான் வருகிறாரே நான் இவர்களுடன் செல்லட்டுமா?’

குயிலியின் தாய் தனலட்சுமிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை… சிறிது மௌனம் காத்து விட்டு இதோ அப்பாவை கேட்டுவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு உள்ளே செல்லும்போதே குயிலியின் மனது அவருக்கு புரிந்து விட்டது…

கர்மவீரன் வேலனுக்கு தான் ஏதும் புரியாமல் குயிலியின் அப்பா முடிவை எதிர்பார்த்து காத்திருந்தான்.

தனலட்சுமி அம்மாள் சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்து ‘ உங்களுக்கு தொந்தரவு இல்லை என்றால் கொம்பனையும் குயிலியையும் அழைத்து போகச் சொன்னார்’

‘ அப்படியே செய்கிறேன் அம்மா எத்தனை மணிக்கு வர வேண்டும்?’

‘ மதிய உணவுக்கு சற்று முன் வாருங்கள் இங்கே உணவருந்தி விட்டு பிறகு செல்லுங்கள் ‘

‘ எதற்கு உணவெல்லாம்… சரி வருகிறோம்’ இன்று விடை பெற்றுக் கொண்டு வேலனும் மருதுவும் புறப்பட்டு சென்றனர்.

குயிலி வேலனையே பார்த்துக் கொண்டிருந்ததை வேலனைத் தவிர மற்றும் மூவரும் கவனித்தனர்.

வேலனுக்கு குயிலியை திரும்பிப் பார்க்க நினைத்தாலும்… பார்ப்பது தனலட்சுமி அம்மாவை காப்பாற்றியதால் வந்த உரிமை என்று யாரும் நினைத்து விடக்கூடாது என்று நினைத்ததால் திரும்பிப் பார்க்காமல் சென்றான்.

சங்கரன் பாளையத்தை கடந்து வேலப்பாடியில் நுழையும் போது வேலனும் மருதுவும் மாட்டுப் பொங்கலுக்கு மறுபடி வரப்போவதை மறந்து கோபாலை பற்றிய தீவிர பேச்சுக்கு மாறினர்..

‘மருது நீ கோபாலை கண்காணிக்க அனுப்பியவன் எப்போது வரப் போகிறான், ஏதாவது கால நேரம் கொடுத்திருக்கிறாயா?’

‘ ஆமாம் வேலா பொழுது சாய்வதற்குள் உடற்பயிற்சி கூடத்தில் சந்திக்க சொல்லி இருக்கிறேன்’

‘ சரி நேராக அங்கே செல்வோம்’

‘ வேலா ஒரு செய்தி கேள்வி பட்டாயா, காஞ்சி அரசர் ஏதோ பிரமாண்டமாக சிவனுக்கு கோவில் கட்டப் போவதாக..’

‘ நானும் கேள்விப்பட்டேன், அடுத்த மாதம் சென்று பார்த்துவிட்டு வரலாம் ‘

இருவரும் உடற்பயிற்சி கூடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

‘ அண்ணா நானும் இப்போதுதான் வந்தேன், நான் நெடுநேரம் காத்திருந்தும் அந்த கோபால் வெளியே வரவில்லை… அக்கம் பக்கத்தில் விசாரிக்கும் போது அவனைப் பற்றி பாதகமான கருத்து ஏதுமில்லை சோம்பேறி என்பதை தவிர ‘

‘ நன்றி மாரி, பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்று மருது அவனைப் பார்த்து கூறிவிட்டு வேலனுடன் உடற்பயிற்சி கூடத்திற்குள் சென்றான்.

தற்காலத்தில் காலம் காலமாக ஒரு மாய பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது அதிக படிப்பு படித்தவர்களுக்கு அதிக மூளை என்று… படிப்பாளிக்கும் அறிவாளிக்கும் நூல் இழை வித்தியாசம் என்று இல்லை இரண்டுக்கும் வேறுபாடு உண்டு … நம் வேலன் அற்புதமான அறிவும், சமையோசித புத்தியும், கலாச்சார பண்பும், பரிவும், இரக்கமும் எல்லாம் ஒருங்கிணைந்த நல்ல தலைவன்.. அரச வம்சத்தில் பிறந்திருந்தால் ஒருவேளை பேரரசை நிறுவியிருப்பானோ என்னவோ?!

உடற்பயிற்சி கூடத்தில் சிறிது குத்து சண்டை, சிறிது களரி, சிறிது கோல் சண்டை பயிற்சி எடுத்துக் கொண்டே பயிற்சி கொடுத்துவிட்டு வீட்டிற்கு திரும்பினான். காலை பூமியை முன்னிட்டு கொளுத்திய பழையவற்றை அப்புறப்படுத்திவிட்டு வீட்டுக்குள் சென்றான்.

தாய் மரகதம் வேலனைப் பார்த்து’ ‘காணும் பொங்கல் அன்று எங்கேயும் சென்று விடாதே.. உன் மாமன் குடும்பம் ரத்தினகிரியில் இருந்தும், சித்தப்பா குடும்பம் விரிஞ்சிபுரத்திலிருந்தும் வருவார்கள்’.

‘ சரி அம்மா அப்படியே செய்கிறேன் ‘

இரவு படுக்கும்போது அன்று நடந்தவைகளை ஒரு முறை யோசித்துப் பார்த்தான்.. குயிலியின் நினைவு வந்து போகாமல் இல்லை… இருப்பினும் அது தான் செய்த உதவிக்காக என்று நினைத்து விடக்கூடாது என்று அந்த நினைவை கடந்தான்.

இக்காலத்திய வெய்யல் ஊர் என்று அழைக்கப்படும் வேலூர் போல் அப்போது இல்லை, மாறாக சுற்றிலும் மலை சூழ்ந்து இருந்ததால் நவம்பர் முதல் மார்ச்சு வரை குளிர் இருந்து கொண்டிருந்தது…

மறுநாள் உழவர் திருநாள் தைப்பொங்கல் தமிழர் பெருநாள்.. பொழுது விடிவதற்கு முன்பே மரகதம் அம்மாள் வீட்டு வாசலை மறுபடியும் பெருக்கி சுண்ணாம்பு செம்மண் மாவு கோலம் போட்டு விட்டிருந்தார்.

வேலன் ஐந்து மணிக்கே எழுந்து பாலாற்றில் குளிக்கச் சென்றான்..

ஜனவரி மாத குளிர் இருப்பினும் 25 வயது வேலனுக்கு அது ஒரு பொருட்டே இல்லை… வேட்டி சட்டையை மாமரத்தின் கிளையின் மீது போட்டுவிட்டு தன் குதிரையை அங்கே கட்டிவிட்டு ஆற்றில் இறங்கினான்.. தன்னை யாரோ கவனித்துக் கொண்டு இருப்பது போன்ற ஏதோ ஒரு உள்ளுணர்வு… திரும்பி மாந்தோப்பை பார்த்தான், யாரும் இருப்பதாக தெரியவில்லை. அந்த நிமிடமே அதை பிரமையாக நினைத்து மறந்து விட்டு உடல் வலி தீர எதிர்நீச்சல் அடித்தான்.

குளித்துவிட்டு வீடு திரும்பும் போது மணி ஆறரை ஆகிவிட்டது.. நேராக தன் தோட்டத்திற்கு சென்று மள மள வென்று வளர்ந்து இருந்த இரண்டு பெரிய கரும்புகளை வெட்டிக்கொண்டு, அருகில் இருந்த மூன்று மஞ்சள் செடிகளை பிடுங்கிக் கொண்டு, பல பூசணி மலர்களைப் பறித்துக் கொண்டு வீட்டில் நுழைந்து தாய் மரகதத்திடம் கொடுத்தான்.

அதே சமயத்தில் உள்ளே நுழைந்த தந்தை முனுசாமி, ‘ ஏனப்பா வேலா அம்மா சொல்லி இருப்பார்கள் காணும் பொங்கல் அன்று எங்கேயும் சென்று விடாதே உன் தாய் மாமன் குடும்பத்துடன் வருகிறார்’

‘ சித்தப்பாவும் குடும்பத்துடன் வருவதாக அம்மா சொன்னார்களே?’

‘ ஓ, சொல்லிவிட்டாளா, ஆமாம் வருகிறார்கள்… தை பிறந்தால் வழி பிறக்கப் போகிறது’

‘ என்னப்பா சம்பந்தமே இல்லாம பேசுகிறீர்கள்?’

முனுசாமி சுதாரித்துக் கொண்டு ‘இன்றிலிருந்து தை மாசம் தானே அதைத்தான் கூறினேன் ‘

வேலன் அதை பெரிதாக பொருட்படுத்தவில்லை…

வீட்டின் வாயில் வெளியே கிழக்கு நோக்கி பொங்கல் பொங்க பெரிய பானையையும் அரிசி மற்றும் மற்ற பொருள்களையும் ஏற்பாடு செய்தான்.. பனிமூட்டம் அதிகம் இருந்ததால் 9 மணிக்கு மேல் தான் சூரியன் தெரிந்து தீ மூட்டி பொங்கல் பொங்க வேண்டும்..

மருதுவையும் சங்கரனையும் மாலைதான் வர சொன்னான் ஏனோ தெரியவில்லை அவர்கள் இப்பொழுது இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான்… இந்த நினைவுகளின் ஊடே குயில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற நினைவு தோன்றாமல் இல்லை…..

ஒத்த கருத்து எவ்வளவு சக்தி வாய்ந்தது என்று புரிந்தது… அதோ வீட்டு எல்லையில் மருதுவும் சங்கரனும் வருவது தெரிந்தது..

‘வேலா மன்னிக்கவும், நீ மாலைதான் வரச் சொன்னாய்.. மூவரும் மூவர் வீட்டிலும் இந்த பொங்கலை கொண்டாடினால் என்ன என்று வந்து விட்டோம்.’

‘ நன்றி மருது, நானும் அதையே தான் யோசித்தேன் ‘

இதேபோன்று குயிலியும் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்…. அவள் எப்படி வர முடியும் என்ன மடத்தனமான நினைப்பு என்று தனக்குத் தானே ஆறுதல் கூறிக் கொண்டான்.

வேலன் வீட்டில் உங்களை கொண்டாடிவிட்டு மருது வீட்டுக்கு சென்று அங்கேயும் பொங்கலை கொண்டாடிவிட்டு கடைசியாக சங்கரன் வீட்டுக்கு செல்ல வேலனுக்குள் ஒரு இனம் புரியா எதிர்பார்ப்பு இருந்தது…

சங்கரன் வீட்டை அடைய குயிலி வீட்டைக் கடக்கும் போது மிகவும் அழகான பெரிய கோலத்தை கண்டான்.. கோலமிடலும் பெரிய கலை என்று நினைத்துக் கொண்டான்..

சங்கரன் வீட்டில் பொங்கல் கொண்டாடும் போது நினைவில் அவ்வப்போது எப்போது குயிலியும் தனலட்சுமி அம்மாளும் வரப்போகிறார்கள் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது…

அதில் இடி விழுந்தது போல, ‘ இன்னும் சிறிது நேரம் முன்னே வந்திருந்தால் குயிலியுடனும் அவள் தாய் தந்தையுடனும் கொண்டாடி இருக்கலாம்’ என்று சங்கரன் தாயார் சொல்ல.

‘ஏன் அவர்கள் இல்லையா?’

‘இருந்தார்கள், இங்கே பொங்கல் கொண்டாடிவிட்டு அவர்கள் நிலத்திற்கு சென்று விட்டார்கள்’

வேலனுக்கு சற்றே ஏமாற்றம் அடைந்து அதைக் கடந்து சங்கரன் வீட்டிலும் பொங்கல் கொண்டாடிவிட்டு மூவரும் புறப்பட்டு சென்றனர்.

அன்று மாலை நடக்கவிருந்த விளையாட்டுப் போட்டிகளுக்கு ஏற்பாடுகளை செய்த உடற்பயிற்சி கூடத்தின் வாலிபர்களுக்கு வழிகாட்டி செம்மைப்படுத்தினர்…

வாள், வில், கம்பு, குத்துச்சண்டை, களரி சண்டை, குதிரை சவாரி இவைகளை ஆண்களுக்கும். குத்துச்சண்டை தவிர்த்து மற்ற விளையாட்டுகளை பெண்களுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.

விழா துவங்குவதற்கு முன் சங்கரின் குடும்பத்துடன் குயிலி குடும்பமும் வந்தது வேலனுக்கு பெரிய ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது… சரி விளையாட்டை வேடிக்கை பார்க்க வந்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கயிலேயே சங்கரன் குயிலியும் விளையாட்டில் கலந்து கொள்ளப் போகிறாள் என்று கூறியது பெருத்த ஆச்சரியத்தை உண்டாக்கியது. ‘எந்தெந்த விளையாட்டில்?’ என்று வேலன் கேட்க..

முதல்முறையாக குயிலியின் தந்தையை பார்த்த வேலன் வணக்கம் தெரிவித்தவுடன் அவர், ‘ என்னப்பா இப்படி கேட்டுவிட்டாய்? எல்லாவற்றிலும் கலந்து கொள்ள போகிறாள்’ என்று கூறி முடிக்கும் முன்..

தனலட்சுமி அம்மாள்,’ இவர் சிறு வயது முதலே அவளுக்கு எல்லா பயிற்சியும் கொடுத்துள்ளார் தம்பி ‘ என்றார்.

வேலன் தன் தாய் தந்தையை அறிமுகப்படுத்தி வைத்ததும் மூன்று தாய் தந்தையரும் மருதுவின் தாய் தந்தை குடும்பம் அமர்ந்திருந்த இடத்திற்கு பக்கத்தில் அமர்ந்து வேடிக்கை பார்க்க துவங்க.. சங்கரன் உடல்நிலையால் கலந்து கொள்ளாமல் இருக்க பல வெற்றிகளை மருதுவும் உடற்பயிற்சி கூடத்தில் இருந்து சிலரும் பெற, பெண்களுக்கான போட்டியில் பெரும்பாலான வெற்றிகளை குயிலி பெற்றாள்.

‘ ஏன் அண்ணா உங்கள் நண்பர் போட்டியில் கலந்து கொள்ளவில்லை?’ என்று சங்கரனை பார்த்து குயிலி கேட்க..

‘ அவன் தான் விழாவை ஏற்பாடு செய்தவன் அவன் தான் பரிசுகளை கொடுக்கப் போகிறான் அதனால் தான்’ என்றான் சங்கரன்.

குயிலுக்கு வேலன் மீது மேலும் மதிப்பு உண்டாகியது. விளையாட்டு விழா அமைதியாகவும் சிறப்பாகவும் முடிந்தது.

இருட்ட துவங்கும் முன் எல்லோரும் அவரவர்கள் வீட்டுக்கு செல்ல துவங்கும் போது வேலன், குயிலியின் தந்தையை பார்த்து,’ நாளைக்கு ஒரு 11 மணிக்கு வருகிறேன் ஐயா’ என்று கூற வேலனின் தாயும் தந்தையும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டனர்..

குயிலியின் தந்தை சரி என்று தலை அசைக்க தைப் பொங்கல் இனிதே முடிந்தது.

மறுநாள் மாட்டுப் பொங்கலுக்கு தன் வீட்டில் இருக்கும் இரண்டு பசு மாடுகளை குளிப்பாட்டி அலங்கரித்துவிட்டு பூஜையை முடித்து மருது வந்தவுடன் சங்கரன் வீட்டுக்கு கிளம்பினான்.

இருவரும் சங்கரின் வீட்டை அடைந்தவுடன் குதிரைகளை சங்கரின் வீட்டில் கட்டி விட்டு குயிலின் வீட்டுக்குச் சென்று குயிலியையும் குயிலி அழைத்துக் கொண்டு வந்த கொம்பனையும் அழைத்துக் கொண்டு கால்நடையாக இன்றைய விருபாட்சிபுரத்திற்கும் தொரப்பாடிக்கும் மத்தியில் மலைக்குன்று சாரலில் அமைந்திருந்த பெரிய மைதானத்திற்கு வந்தனர். ஏற்கனவே திரளான மக்கள் கூடி இருந்தனர். வேலனுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து குயிலிக்கு தன்னை அறியாமல் மகிழ்ச்சியாக இருந்தது.

இன்றைய ஜல்லிக்கட்டு போன்ற மாடுபிடி விழா பிரம்மாண்டமாக நடந்தது.. குயிலியின் கொம்பனை யாராலும் அடக்க முடியவில்லை.. வேலன் உடன் வந்ததால் அவன் அதை அடக்க பங்கேற்க முடியாது…

கொம்பனுக்கு நிகரான கொம்பனுக்கு கொம்பன் இன்றைய பாகாயத்திலிருந்து வந்திருக்க அடுத்ததாக இறங்கியது.. போட்டி துவங்க, நேரம் கடந்ததே தவிர யாரும் அதை அடக்கினபாடாக இல்லை… சரி இனியும் தாமதிக்க கூடாது என்று அதை அடக்க வேலன் இறங்க…

ஒட்டுமொத்த மக்கள் கூட்டமும் எதிர்பார்ப்போடு பார்க்க, கிட்டத்தட்ட வேலன் அந்த கொம்பனுக்கு கொம்பனை அடக்கமுயற்சித்த அந்த வினாடியில் தான் பார்த்தான் கூட்டத்தில் கோபால் அவனை கூர்ந்து பார்ப்பதும் அவனுக்கு பக்கத்தில் முன்பு பாலாற்றங்கரையில் பார்த்த அந்த வடக்கத்தியன் இருப்பதையும்… அந்த ஒரு வினாடியின் தயக்கத்தை கொம்பனுக்கு கொம்பன் பயன்படுத்திக் கொண்டான்.. யாரும் எதிர்பார்க்காதது நடந்தது.. வேலன் தூக்கி வீசப்பட்டான்.. தடுமாறி விழுந்த வேலன் எழ முயற்சிக்க கொம்பனுக்கு கொம்பன் அவனை நோக்கி வர….

குயிலி துர்கையாக மாறி சடார் என்று சென்று கொம்பனுக்கு கொம்பனின் இரு கொம்புகளையும் பிடித்துக் கொண்டாள்.. இதை மக்களும் எதிர்பார்க்கவில்லை, வேலனின் நண்பர்களும் எதிர்பார்க்கவில்லை… ஏன் கொம்பனுக்கு கொம்பனா அந்த காளையும் எதிர்பார்க்கவில்லை…

மந்திரத்தால் கட்டுண்டது போல குயிலிக்கு அடங்கியது.

மக்களின் ஆரவாரத்துடனான பாராட்டை ஏற்கும் மனநிலையில் குயிலி இல்லாமல் எழ முயற்சிக்கும் வேலனை தன்னால் தானே இவ்வளவும் என்ற மன வேதனையில் பார்த்தாள்.

bottom of page