வேல் – ஊர்! – 1 By சிவா.
- melbournesivastori
- Dec 27, 2022
- 7 min read
பாகம் 1

இன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சி, காணொளி ஊடகம், சமூக ஊடகங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் பங்கை வகிப்பதால் எந்த ஒருவரையும் அவர் எப்பேர்பட்டவராக இருந்தாலும் மாபெரும் வீரனாக காட்ட முடியும், அற்புத மகானாக காட்ட முடியும்… ஆனால் காலம் காலமாக தேர்ந்த எழுத்தாளர்களே இத்தகைய பணியை செவ்வனே நடுநிலையுடன் செய்து வந்தனர்… இந்நிலை இருந்தும் மாபெரும் வரலாற்று கதாநாயகர்களின் வாழ்க்கை வரலாறு அவர்கள் வாழ்ந்த பகுதியில் தேர்ந்த எழுத்தாளர்கள் இல்லை என்றால் உலகுக்குத் தெரியாமலே போய்விடும்….. இந்த நிலைதான் நிறைய வரலாற்று நிகழ்வுகள் நடந்தும் இன்றைய வேலூர் மாவட்டம், முந்தைய வட ஆற்காடு மாவட்டம் அவ்வளவாக வெளி உலகத்திற்கு தெரியாமலே போய்விட்டது… திரு சாவி, பவா மற்றும் ஒரு சில எழுத்தாளர்களை தவிர இங்கிருந்து…. என் மாவட்டத்திலிருந்து யாரும் வரவில்லை
அதைப் போக்க என்னுடைய சிறு முயற்சி தான் வேலூரை பற்றி நான் எழுத போகும் வரலாற்று கற்பனை நாவல்!
இவ்வாறு எழுத போகிறேன் என்று அன்பிற்கினிய அண்ணன் சிவகுமாரிடம் தெரிவித்த போது, துவக்கத்தை படித்து, பாராட்டி ஊக்குவித்தார்!
அவருக்கு எனது இதயம் கனிந்த முதல் நன்றி.
அடுத்த நன்றி, எப்போதும் என்னை ஊக்குவிக்கும் நண்பன் வைத்தியநாதனுக்கு.
மற்றும் உங்கள் எல்லோருடைய ஆதரவும் இந்த நாவலுக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
வேலூர்.
வடக்கிலிருந்து சித்தூர் வழியாக தெற்கு நோக்கி வந்தால் காட்பாடியை கடந்து பாலாற்றில் அமைந்துள்ள இரு பாலங்களின் மேலே செல்லும் போது இந்தியா அளவில் புகழ்பெற்ற கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை காணலாம்…. அதற்கு சற்று பாலத்தின் தொடக்கத்திற்கு முன்பே வலது புறத்தில் இருக்கும் ஐடா ஸ்கட்டர் ஸ்கூல் தவிர்க்க முடியாதது… அந்த ஐடா ஸ்கட்டர் அம்மையார் தான் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை வேலூரில் துவங்கியவர்.. காட்பாடியில் இருந்து வரும் போது சித்தூர் பஸ் ஸ்டாண்டில் இடது புறமாக திரும்பினால் சில கிலோமீட்டரிலேயே பிரம்மாண்டமான VIT பல்கலைக்கழகத்தை பார்க்கலாம்..
கிழக்கில் சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் வழியில் ஆற்காடு கடந்து செல்லும்பொழுது முருகப்பெருமானின் இரத்தினகிரி மலைக்கோவில் வலது புறத்திலும் இடது புறத்தில் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலும் காணலாம்.. தொடர்ந்து வந்தால் சத்துவாச்சாரியை தொடும் போதே தெரிவது பிரமாண்டமாக நிற்கும் மலையின் மீது அமர்ந்துள்ள கோட்டை…. அதை ரசித்துக் கொண்டே மேலும் தொடர்ந்தால் காகிதப்பட்டறையை கடந்து வேலூர் நகரத்தின் மத்திய முகத்துவாரத்தில் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையை காணலாம்.
தெற்கில் திருவண்ணாமலையில் இருந்து வேலூரை நோக்கி வரும் போது போளுரை தாண்டி கண்ணமங்கலத்தை கடக்கும்போது இயற்கையின் அழகு கண்ணை பருகும்… அங்கு இடதுபுரத்தில் துவங்கி ஏலகிரி மலை வரை பரவி இருக்கும் அமிர்தி காடு ஒரு அமைதி காடு! அதையும் கடந்து வரும்போது பாகாயத்தில் ஆங்காங்கே கிருத்துவ மருத்துவக் கல்லூரியின் பல மருத்துவமனை கிளைகளை பார்க்கலாம்.
மேற்கிலிருந்து வரும்போது வேலூருக்கு முன் அற்புதமான விரிஞ்சிபுரத்தில் அமைந்துள்ள கோவிலின் கோபுரத்தை கண்டுகொளித்துக் கொண்டே கடக்கும்போது பள்ளிகொண்டாவின் கோவிலையும் கடந்து வரும்போது அப்துல்லாவரத்தின் விமான தளம் வலது பக்கம் தெரியும்… தொடர்ந்து வரும் போது இந்தியாவின் பிரம்மாண்டமான ஏழு கோட்டைகளில் ஒன்றான வேலூர் கோட்டை உங்களை அன்புடன் வரவேற்கும்! அந்தக் கோட்டையின் உள்ளிருந்து விரிஞ்சிபுரம் கோவிலுக்கு சுரங்கப்பாதை உள்ளதாக கருத்து இன்றைய வேலூர் மக்களுக்கு பரவலாக உண்டு..
சூலை 10, 1806 இல் தமிழ்நாட்டில், வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்தது மாபெரும் எழுச்சியாகும். திப்பு சுல்தான் 1799 இல் இறந்த பின்னர் ஆங்கிலேயர்கள் திப்புசுல்தானின் குடும்பத்தாரை வேலூர்க் கோட்டையில் சிறை வைத்திருந்தனர். அங்கே, சீராடை பற்றிய புதிய சட்டத்தை எதிர்த்தவர்களை, ஆங்கிலேயர் தண்டித்ததை அடுத்து ஒரு திட்டமிட்ட எழுச்சி நடந்தது. இதில் அங்கிருந்த 350 ஐரோப்பியரில் 100 பேர் கொல்லப்பட்டனர். இதுவே முதல் இந்திய விடுதலைக்கான எழுச்சி எனப்படுகின்றது. இதன் 200 ஆவது ஆண்டு நினைவாக இந்திய அஞ்சலகம் ஒரு நினைவு அஞ்சல் தலையை சூலை 10, 2006 இல் வெளியிட்டது.
இது இன்றைய, முந்தைய வேலூர், இதைப் பற்றி இப்போதைக்கு கூற நான் வரவில்லை… இன்றும்; அன்றும்; என்றும் மலைக்குன்றுகள் சூழ மத்தியில் அமைந்த ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இருந்த வேலூரை பற்றி……
இந்த நாவல் வரலாற்று கற்பனை நாவலாக இருந்தாலும் கூட அக்காலத்திய சொற்களை பயன்படுத்தாமல் இப்போது வழக்கில் இருக்கும் சொற்களை பயன்படுத்தும் போது படிக்க ஏதுவாக இருக்கும் என்று நினைக்கிறேன், அதையே செய்கிறேன்.
ACE ( After Common Era ) 966 ஆண்டுக்கு நாம் செல்ல போகிறோம்.. கிட்டத்தட்ட உலகத்தையே ஆட்டிப்படைத்த இங்கிலாந்து அதே காலகட்டத்தில் நார்த்மேன் எனப்படும் வைக்குங்களினாலும், டேன் எனப்படும் டென்மார்க்கின் டேனிஷ்களாலும் படாது பாடுபட்டுக் கொண்டிருந்தது… இத்தாலிய ரோமன்களால் ( ACE 43 to 410 ) அவதிப்பட்டு சொல்லோன்னா துயரங்களில் இருந்து மீண்டால் இந்த இரு நாட்டவர்களின் மிருகத்தனமான அடக்குமுறைகள். அன்றைய காலகட்டத்தில் தென்னிந்திய நிலப்பரப்பை தவிர குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இன்றைய தமிழ்நாட்டைத் தவிர உலகின் வேறு எங்கு பிறந்திருந்தாலும் குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் நீர்க்குமிழி போன்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர்… எந்த நேரத்தில் எந்த நாட்டில் இருந்து எத்தகைய கொடியவர்கள் வருவார்கள் என்று யாருக்குமே எப்போதுமே தெரியாது.. இப்போது நாம் போற்றும் மனிதத்தன்மை என்பதே அந்த காலகட்டத்தில் எந்த நாட்டிலும் இருந்ததில்லை. அதைக் காட்சிப்படுத்தினால் மனிதன் நாகரிகமிக்கவன் என்று அன்றைய தமிழர்கள் ஒரு சதவீதம் கூட நம்பியிருக்க மாட்டார்கள்.. அன்றைய தமிழகத்தின் நாகரிக போர் முறை உலகின் வேறு எங்கிலும் காண முடியாது இருந்தது. தமிழ்நாட்டை ஆண்ட அரசர்களுக்கு எந்த சமயத்தில் போர் நடந்தாலும் அரசர்களும் தளபதிகளும் போர் வீரர்களும் மட்டுமே பாதிப்படைந்தனர். அந்த நேரத்தில் எப்போதுமே பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டதில்லை. மேலே வர்ணித்த எந்த ஒரு அடையாளங்களும் இல்லாத வேலூர் ஆக இருந்தது அப்போது…. இப்போதைய பாலாறாக இல்லாமல் அன்றைய வடக்குத் தமிழகத்தின் ரத்த நாளமாக இருந்தது எப்போதும் கரை புரண்டு ஓடும் பிரம்மாண்ட பாலாறு..
இன்றைய சத்துவாச்சாரி அருகே பாலாற்று கரையின் ஓரத்தில் மரத்தின் அருகே கட்டப்பட்டிருந்த ஒரு முரட்டு அரேபிய வெண்புறவியின் அருகே 25 வயது மதிக்கத்தக்க ஒரு முரட்டு தமிழ் காளை நின்று கொண்டிருந்தான். சில நிமிடங்கள் கடந்து இருக்கும்…. செம்மண் நிற புரவியின் மீது அதிவேகமாக சவாரி செய்து கொண்டு அங்கு வந்து இறங்கினான் வேறொரு வாலிபன்.
அவன் ஏற்கனவே நின்று கொண்டிருந்த வாலிபனை பார்த்து ‘வணக்கம் இளவரசரே!’ என்று கூற…
‘வா வந்திய தேவா’ என்று அழைத்த வாலிப இளவரசன் வேறு யாரும் இல்லை பிற்காலத்தில் ஆளப்போகும் சோழப்பேரரசின் மாபெரும் பேரரசன் ராஜராஜ சோழனின் அண்ணன் ஆதித்த கரிகாலன் தான்..
துரதிர்ஷ்ட வசமாக இந்த ஒரு சிறு நிகழ்ச்சியை தவிர இந்த இருவரும் இந்த சரித்திர நாவலில் எங்கும் வரப்போவதில்லை. ஏனென்றால், நம் கதையின் கதாநாயகன் வேலாயுதம் அங்கு வரும்போது இந்த இருவரும் காஞ்சிபுரம் நோக்கி பயணப்பட்டு விட்டனர். வேலாயுதம் மட்டும் அவர்கள் இருவரும் இருக்கும் சமயத்தில் வந்திருந்தால் சோழப் பேரரசு இன்னும் விரிவடைந்து பலகாலம் இருந்திருக்குமோ என்னவோ!?
வேலாயுதம் 25 வயது கட்டுக்கடங்கா தமிழ் காளை! சிறிய வயது தானே தவிர சுமார் 50 கிலோமீட்டர் சதுர பரப்பு வரை தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்தவன். எந்த அரசரின் அதிகாரமும் செல்வாக்கும் அந்த காலகட்டத்தின் வேலூரில் பரவாமல் இருந்தது..
வேலாயுதத்தை கற்பனையாக காட்சிப்படுத்தி பார்க்க வேண்டும் என்றால்… மிகச் சரியான உதாரணமாக நெட் ஃப்லிக்ஸில் தொடராக வந்த தி லாஸ்கிங்டமின் அலெக்சாண்டர் டிரைமான் நடித்த மிக வலிமையான உஹ்ட்ரேட் என்ற கற்பனை கதாபாத்திரம். நம் வேலாயுதம் கற்பனையாக இல்லாமல் வேலூர் வரலாற்றில் உண்மையாக வாழ்ந்து இருக்கலாம் என்று கற்பனை செய்து படைக்கப்பட்ட பாத்திரம். வீரம்; அன்பு; பண்பு; பாசம்; காதல்; தொலைநோக்குப் பார்வை; கடமை; வாக்கு தவறாமை; பெண்களை மதித்து போற்றும் தன்மை என்று நம் தமிழ் பண்பாட்டின் சிறந்த குணாதிசயங்களை எல்லாம் உள்ளடக்கியவன். ஒரு சாதாரண விவசாயி முனுசாமியின் மகன்.. இப்போது உள்ள வேலூர் கோட்டையின் நிலத்தில் பெரும் பாறைகளுடன் ஒரு குன்று தான் இருந்தது அந்தக் குன்றின் அடிவாரத்தில் தான் சிறிய நிலத்துடன் வேலாயுதத்தின் வீடும் இருந்தது.
ஆதித்திய கரிகாலனும் வந்திய தேவனும் காஞ்சிபுரம் நோக்கி பயணப்பட்டு சுமார் அரை மணி நேரம் கழித்து அங்கு வந்தான் வேலாயுதம்.
பாலாற்றில் ஓடும் நீரில் எதிர்நீச்சல் போட்டு குளிப்பது வேலாயுதத்தின் அன்றாட உடற்பயிற்சியின் ஒரு அங்கம். சிறுவயதில் இருந்தே எதிலும் எதிர்நீச்சல் போடுவது வேலாயுதத்தின் குணம். குளித்துவிட்டு கரையேறி உடலை துவட்டி கொண்டிருக்கும் போது தூரத்து மாந்தோப்பில் இருவர் சந்தேகத்துக்கிடமாக பதுங்குவது தெரிந்தது… மெல்ல அவர்களுக்கு தெரியாமல் நெருங்கினான்.
சற்று அருகில் வரும்போதே அவர்களின் குரல் கேட்டது, ‘ அவர்கள் வந்தவுடன் நாம் இருவரும் இங்கு இருப்பதை காட்டிக் கொள்ளக் கூடாது. நமக்கு வந்த தகவல் படி இன்னும் ஒரு சில மணி நேரத்துக்குள் அவர்கள் வந்து விடுவார்கள்’
‘ அவர்கள் மிகச் சிறந்த போர்வீரர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ‘
‘ஆமாம், அதனால் தான் கூறுகிறேன் நாம் இருவரும் இங்கிருப்பது எந்த விதத்திலும் அவர்களுக்கு தெரியக்கூடாது ‘
‘ எந்த போர் முறையின் மூலமும் அவர்களை வெல்ல முடியாது அதனால் தான் தகவல் சேகரிக்க மட்டுமே வந்தோம் ‘
இவைகளைக் கேட்ட வேலாயுதத்திற்கு ஓரளவிற்கு தான் புரிந்தது அவர்கள் இப்பகுதியை சேர்ந்தவர்கள் அல்ல என்று. அவர்கள் பேசிய மொழி வடக்கத்தி மொழி.
என்னதான் நடக்கப் போகிறது என்று மறைந்திருந்து எதிர்நோக்கி காத்திருந்தான்…
அப்போது அவர்களில் ஒருவன் கேட்டான், ‘ இவ்வளவு நேரமாகியும் அவர்களை காணவில்லையே ஒருவேளை நாம் தாமதமாக வந்து விட்டோமோ?’
‘ எனக்கும் அதே சந்தேகம் தான் ‘ என்று மற்றும் ஒருவன் கூற..
அந்த சமயம் பார்த்து ஒரு குதிரை வர இருவரும் சற்றென்று மறைந்தனர். குதிரை அருகில் வந்ததும் வந்தவனைப் பார்த்து இருவரும் வெளியே வந்தனர்..
‘ கோபாலா என்ன செய்தி?’
‘ எனக்கு தாமதமாகத்தான் செய்தி கிடைத்தது….. மாலை தான் சந்திப்பதாக இருந்தார்கள் ஏனோ தெரியவில்லை காலையிலேயே சந்தித்து விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன்’
அப்போதுதான் அந்த இருவருக்கும் புரிந்தது, இங்கு காத்திருந்தது பயனற்றது என்று.
‘ சரி யாராவது பார்த்து விடப் போகிறார்கள், நீ ஊருக்குள் சென்று விடு… தகவல் ஏதேனும் இருந்தால் மட்டுமே எங்களை மறுபடியும் தொடர்பு கொள் ‘
அந்த இருவரும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மர பாலம் வழியே கடந்து அக்கரைக்குச் செல்ல கோபால் என்று அழைக்கப்பட்டவன் மட்டும் ஊரை நோக்கி செல்ல வேலாயுதம் அவனைத் தொடர்ந்தான்.
ஒரு ஐந்து நிமிடம் கழிந்திருக்கும் ஒரு வீட்டின் முன் குதிரையை நிறுத்தி கட்டிப்போட்டு விட்டு அந்த கோபால் வீட்டுக்குள் சென்றான். சற்று தூரத்தில் வேலாயுதமும் குதிரையை நிறுத்திவிட்டு காத்திருந்தான்…. அரை மணி நேரம் கழிந்தும் அவன் வெளியே வராததால் வேலாயுதம் தன் குதிரை மீது ஏறி தன் வீட்டை நோக்கி சென்றான்.
வீட்டின் முன் கட்டப்பட்ட வேலியில் நண்பன் மருதுவின் குதிரையை கட்டப்பட்டதை பார்த்து மகிழ்ச்சியுடன் தன் குதிரையை கட்டிவிட்டு உள்ளே சென்றான்.
‘ என்ன மருது, வந்து நிறைய நேரம் கடந்து விட்டதா?’
‘ இல்லை வேலா, கொஞ்ச நேரம் முன்புதான் வந்தேன்… வந்தவுடன் அம்மா கொடுத்த கேழ்வரகு கூழை குடித்துவிட்டு திரும்பும் போது தான் உன்னை பார்த்தேன் ‘
‘ மருது மிக முக்கியமான வேலையை உனக்கு தரப் போகிறேன், நம் உடற்பயிற்சி கூடத்தில் இருந்து நம்பகமான ஒருவனை நான் காண்பிக்கும் வீட்டில் சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகள் ஏதாவது நடக்கிறதா என்பதை கண்காணிக்க சொல் ‘
‘ அப்படியே செய்கிறேன் வேலா ‘
‘ எந்த வீடு அது, ஏன்?’
வேலாயுதம் மருதுவிடம் நடந்ததை கூறினான்.
வேலாயுதம் துவக்கி வைத்த இது போன்ற சிறு சிறு நடவடிக்கைகள் அந்தப் பகுதியின் இளைஞர்களின் மரபணுவாகவே மாறிவிட்டது… அது அடுத்த 500 வருடங்களுக்கு தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து எந்தவித ஊடுறுவல்களும் வராமல் தடுக்கப் போகிறது என்று அவர்களுக்கு அன்று தெரியாது . பேரரசர்களும் இத்தகை செயல்களை அங்கீகரிக்க சுய அரணாகவே அப்பகுதி இருந்தது.
கடந்த ஐந்து வருடங்களாக சுற்று வட்டாரத்தில் இருந்த இளைஞர்களுக்கு உடற்பயிற்சியும், கம்பம், சிலம்பு, கலரி போன்ற பயிற்சிகளையும் வேலாயுதமும், மருதுவும் அளித்து வந்தனர்.
வேலாயுதம் தலைவனாக உருவெடுத்ததே ஒரு தற்செயலான நிகழ்ச்சி..
அப்போதைய வேலூரில் வருடத்திற்கு இரு முறை எல்லா கிராமங்களிலும் ஊர் கூடி பொங்கல் திருவிழா நடைபெறும்.. மூன்று நாட்களுக்கு நடத்துவார்கள்… அதுதான் அன்றைய மிகப்பெரும் கேளிக்கை விழா.. முதல் விழா தைப்பொங்கல் அன்றும் இரண்டாவது சித்திரை பௌர்ணமி அன்றும் துவங்கும்.
அக்காலத்தில் அங்கு நான்கு ஏரிகள் இருந்தன, இப்போது ஓட்டேரி எனப்படும் ஓடை ஏரி, இப்போது சித்தேரி எனப்படும் சிற்றேரி, தொரப்பாடி ஏரி எனப்படும் பாடி ஏரி மற்றும் இப்போது சதுப்பேரி எனப்படும் சதுப்பு ஏரி..
ஐந்து வருடங்களுக்கு முன்பு சித்தேரியில் சித்திரை பௌர்ணமி ஊர் குடி பொங்கல் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது… அப்பகுதி மக்கள் எல்லோரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்து கொண்டிருந்தனர். மதிய உணவு உட்கொண்டு விட்டு கிளம்பிய வேலாயுதம் சித்தேரியை நெருங்கும் போது கண்ட காட்சி சிறு அதிர்ச்சியுடன் அவனை நிற்க வைத்தது, தூரத்தில் ஆலங்காயத்தில் இருந்து இறங்கிய யானைக் கூட்டம் ஒன்று முகாமிட்டிருந்தது…. பொதுவாக கூட்டமாக இருக்கும் யானைகள் இதுவரை அங்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.. சற்றே தயங்கிய வேலாயுதம் மேற்கொண்டு பயணித்தை தொடர்ந்தான். சித்தேரியை நெருங்கிக் கொண்டிருக்கும் போது ஒரு சிறு மக்கள் கூட்டம் அலறி அடித்துக் கொண்டு தன்னை நோக்கி வருவதைப் பார்த்தான்… அதில் ஓர் இருவரை நிறுத்தி என்ன ஏதுவென்று கேட்பதையும் பொருட்படுத்தாமல் அவர்கள் தலை தெரித்து ஓடுவதைக் கண்டு ஏதோ அசம்பாவிதம் நடக்கிறது என்று புரிந்துகொண்டு இன்னும் வேகமாக குதிரையை ஊரை நோக்கி ஓட்டினான்.
ஊரின் எல்லையை அடைந்ததும் கொஞ்சம் தைரியம் உள்ள ஒரு சிறு கூட்டம் மலைக் குன்றின் அடிவாரத்தை பார்ப்பதைக் கண்டு அத்திசையை நோக்கி வேலாயுதம் பார்த்தான். எதற்கும் அஞ்சாத கல்லுளி மங்கனாக இருந்த வேலாயுதமே சற்று ஆடிவிட்டான்….. அங்கு மலை குன்றின் அடிவாரத்திலிருந்த சிறிய குடிசையில் ஒரு நடுத்தர வயது பெண் பேய் அறைந்தது போல் இருக்க அவளை நோக்கி ஒரு வாலிப வயது யானை அவள் ஓடி விடாமல் மறைத்துக் கொண்டிருப்பது போல் தோன்றியது.. அந்த நொடியில் அங்கு சூழ்ந்திருந்த ஆபத்தை புரிந்து கொண்டான்.. அந்த யானை மக்களை நோக்கிப் பார்க்காமல் அந்தப் பெண்மணியே பார்த்து கொண்டிருந்தது. வேலாயுதம் அந்த யானையை நோக்கி மெதுவாக தன் குதிரையை செலுத்த சிறு கூட்டமாக இருந்த அந்த மக்கள் ‘ஐயோ வேண்டாம், வேண்டாம் போகாதீர்கள்!’ என்று கெஞ்ச.. வேலாயுதத்திற்கு இதெல்லாம் காதில் விழாதது போல் தொடர்ந்து குதிரையை மெதுவாக செலுத்த அந்த யானை மெதுவாக திரும்பி வேலாயுதத்தை பார்த்தது.
அந்த ஒரு சில நொடிகளில் வேலாயுதத்தின் மனதில் அந்த யானையின் மனநிலை பற்றி சிந்தனைகள் ஓடின. உடனடியாக ஒரு முடிவுக்கு வந்தான்… ஒற்றை யானை எப்போதுமே மிகவும் ஆபத்தானது, மதம் பிடித்திருக்கவும் வாய்ப்புண்டு ஆனால் இந்த யானை அமைதியாக அதே இடத்தில் நின்று கொண்டு அந்தப் பெண்ணை பார்த்ததை கண்டு ஒரு முடிவுக்கு வந்தான்… இந்த யானைக்கு மதம் பிடிக்கவில்லை ஒரு ஆர்வக்கோளாறினால் கூட்டத்திலிருந்து தனியே வந்து விட்டது என்று. அன்றைய வேலாயுதத்தின் அந்த சமயோசித நிலைப்பாடு தான் ஒரு நல்ல தலைவனாக உருவாக்கி வைத்தது.
தன் குதிரையை அங்கேயே நிற்க வைத்து விட்டு தான் மட்டும் யானையை விட்டு விலகி ஒரு ஓரமாக அந்த குடிசையை நோக்கிச் சென்றான்.. அப்படி நடக்கும் போதும் அந்த யானையின் செயல்பாட்டை கவனிக்க தவறவில்லை. அவன் நினைத்தது சரியே, இந்த யானை ஆர்வக்கோளாறினால் தான் வந்திருக்கிறது… வேலாயுதத்தையே ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தது.. அதற்குக் கோபமும், பதட்டமும் துளியும் இல்லை.. அந்த நொடியில் தனக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அந்த குடிசையை நோக்கிச் சென்று அடைந்தான். அந்தப் பெண்மணி பதட்டத்தில், படபடப்பில் ஓடி வந்து வேலாயுதத்தைப் பற்றிக் கொண்டாள். தன்னால் எந்தவித ஆபத்தும் வராது என்று அந்த யானைக்கு உணர்த்துவது போல் அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு மெதுவாக மக்கள் கூட்டத்தை நோக்கி நடந்தான், அந்த யானை இவர்களை நோக்கி பார்த்துக் கொண்டே திரும்பியது ஆனால் நெருங்கவில்லை.. அந்தக் கூட்டத்தில் அந்தப் பெண்மணியை ஒப்படைத்து விட்டு திரும்பிப் பார்க்கும் போதும் யானை அந்த இடத்திலிருந்து விலகாமல் இருந்தது.
வேலாயுதம் அங்கு விழாவிற்காக கட்டப்பட்டிருந்த வாழை மரத்தின் தாரை தன் வாளால் வெட்டி அந்த யானையை நோக்கி எடுத்துச் சென்றான், கூட்டமோ பதட்டம் அடைந்து ‘வேண்டாம், வேண்டாம் செல்ல வேண்டாம்!’ என்று கூச்சலிட அது வேலாயுதத்தின் காதிலே விழவில்லை.. அந்த யானை மெதுவாக திரும்பி வேலாயுதத்தை நோக்கி வந்து துதிக்கையை நீட்ட அவன் வாழைத்தாரை அதற்கு கொடுக்க அதுவும் அதை வாங்கிக் கொண்டு உட்கொள்ள அந்த சிறு கூட்டமே ஆச்சரியத்தில் மூழ்கியது… அதன் பிறகு அடுத்த பத்து நிமிடங்கள் அங்கு நடந்த நிகழ்ச்சிகள் கற்பனைக்கு எட்டாததாக இருந்தது… மேலும் சில வாழைத்தார்களை வேலாயுதம் கொடுக்க.. அந்த யானை நாயைப் போல வேலாயுத்துடன் பழகியது.. வேலாயுதம் குதிரையின் மீது ஏறி யானைக் கூட்டத்தை நோக்கி மெதுவாக செல்ல இந்த யானையும் தொடர… ஒரு வழியாக அந்த யானை அதன் கூட்டத்துடன் கலந்தது..
இந்த நிகழ்ச்சி அந்த 20 வயதிலேயே வேலாயுதத்தின் புகழை அந்தப் பகுதி முழுவதற்கும் வாய் வழியாக, காட்டு தீயாக பரவச் செய்தது. வேலாயுதத்திற்கும் இந்த நிகழ்ச்சி மனதை விட்டு நீங்காமல் தொடர ஆர்வகோளாறினால் தினமும் அங்கு வர அந்த யானையும் அவனிடம் பழக பிற்காலத்தில் வேலாயுதம் கட்டப் போகும் சிறு முருகன் கோவிலில் தஞ்சம் அடையப்போவது அன்று அவனுக்கு தெரியாது…
இப்படியாக அப்பகுதி வேலாயுதத்தின் ஊராக அறியப்பட்டு, வேலன் ஊராக மாறி, வேல் ஊராக எல்லோராலும் அறியப்பட்டு ஆயிரம் வருடங்கள் கழித்து வேலூர் ஆக மாறும் என்று அன்றல்ல இன்றும் யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்!