யோகம்! By சிவா.
- melbournesivastori
- Aug 3, 2023
- 8 min read

பர்பெக்ட் ஸ்டார்ம் என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அது மனித வரலாற்றில் இப்பொழுது துவங்க தொடங்கி இருக்கிறது என்று நினைக்கிறேன்.
தமிழில் சொல்வார்களே எல்லா கிரகங்களும் ஒன்றிணைந்து அருள் புரிகிறது என்று…. அதற்கு எதிர் வினையாக நடந்தால் அதை ஆங்கிலத்தில் பர்பெக்ட் ஸ்டார்ம் என்று கூறுவார்கள்.
நாம் வாழும், நாம் மட்டும் இல்லை உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் வாழும் ஒவ்வொரு நொடியும் நமக்கு, அவைகளுக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதம்… ஆனால் வாழ்கிறோமா என்பது வேறு விஷயம்…. கிடைத்திருக்கும் வரத்தை மனிதர்கள் எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள்? அதிலும் எத்தனை பேர் நல்ல விதமாக பயன்படுத்துகிறார்கள்?
இப்பொழுது இதைப் படித்துக் கொண்டிருக்கும் நம்மை விடுங்கள்… இல்லை வீட்டில் இருக்கும் மற்றவர்களை விடுங்கள்…. வருங்காலத்தை எதிர்கொள்ள போகும் குழந்தைகளை நினைத்து பாருங்கள்….
மழலைப் பள்ளிகளில், ஆரம்பப் பள்ளிகளில், உயர்நிலைப் பள்ளிகளில், பல்கலைக்கழகங்களில் கற்றுவிக்கப்படும் பாடங்கள் இதுவரை எவ்வளவு தூரம் வாழ்க்கைக்கு பயன்பட்டிருக்கிறது? எத்தனை சதவிகிதம் பேர் படித்ததை முழுவதுமாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்?
உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன், எனக்கு கணிதமும் அறிவியலும் பிடித்த படங்கள்.. கணிதத்தில் நான் படித்தது அல்ஜிப்ரா, ட்ரிக்னோமற்றி, கால்குலஸ், அட்வான்ஸ் கால்குலஸ் ஆனால் இவைகளில் ட்ரிக்னோமற்றியைத் தவிர மற்றவற்றை என் வாழ்நாளில் உபயோகப்படுத்தியது கிடையாது… இப்பொழுது அலுவலகத்தில் பயன்படுத்துவது பெரும்பாலும் எக்ஸெல் மட்டுமே!
மாற்றங்கள் மட்டுமே என்றுமே மாறாதது…. மிகச்சரி…
முன்பு பார்த்து ரசித்த திரைப்படங்களை இப்பொழுது பார்த்து ரசிக்க முடியவில்லை..
முன்பு பார்த்து ரசித்த திரைப்பட ஜோக்குகளை இன்று பார்த்தால் ரசிக்க முடியவில்லை…
முன்பு நாள் கணக்கில் வீணடித்துப் பார்த்த கிரிக்கெட் டெஸ்ட் மேச்சுக்களை பிறகு சுருக்கி 50 ஓவர் மேட்ச்சுகளாக பார்த்ததையும் சுருக்கி 20 ஓவராகவும் பொழுதை வீணடிக்க விரும்பாதவர்களால் பார்க்க முடியவில்லை…..
இவைகள் எல்லாம் மாறியிருக்கிறது… ஆனால் சிறுவயதில் இருந்து என் பெற்றோர்கள் படித்ததையே நானும் படித்தேன், நான் படித்ததையே இன்றும் நம் குழந்தைகள் படிக்கின்றனர்.. ஏன் கல்வி அறிவில் மட்டும் மாற்றம் நிகழவில்லை? ஒன்றை அளவுக்கு மீறி மறைத்து வைத்தாலோ அடக்கி வைத்தாலோ வெடித்து வெளிவரும்… அதுதான் இப்பொழுது நடக்க துவங்கியிருக்கிறது… இந்த நிகழ்வை புரிந்து கொள்ளக் கூட…. உலகத்தை விடுங்கள், நம் ஊரில் 99 சதவீத மக்களுக்கு விருப்பம் இல்லை, புரிதலும் இல்லை…
இது அரசியல் போன்று தான்… அறிவுள்ளோர் என்று தம்மை நினைத்துக் கொள்பவர்கள் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வது அரசியல் நமக்கு தேவையில்லாத ஒன்று என்று… இது நாகரீகத்தில் வளர்ந்த உண்மை ஜனநாயகத்தில் நடக்கும் நாடுகளுக்குப் பொருந்தும்… நமக்குப் பொருந்தாது..
அவசரப்பட்டு இதை மறுக்காதீர்கள்..
ஏன் சொல்ல வந்தேன் என்றால், மற்ற நாடுகளைப் போன்று வெளிப்படையான அரசியல் நம் நாட்டில் இல்லை… அப்படி இருக்குமேயானால் தேர்தல் சமயத்தில் மட்டும் ஆட்சி எப்படி நடந்தது என்று கருத்தில் கொண்டு அவர்களுக்கோ இல்லை மற்றவர்களுக்கோ ஓட்டளிக்கலாம்.
நம் நாட்டிலோ அரசியல், அதிகாரத்தின் பீடமாக இருக்கிறது… அதன் ஒவ்வொரு செய்கையும் ஒவ்வொரு நாளும் எதிர்காலத்தில் நம்மை பாதிக்கப் போகிறது.. இதை நாம் புரிந்து கொள்ள தவறினால் நம்மையும் நம் எதிர்காலத்தையும் பாதிக்கும்…
திறந்த மனப்பான்மை மற்றும் பரந்த மனப்பான்மை இருந்தால் மட்டுமே ஒரு சமுதாயம் முழுமையாக வளர்ச்சி காண முடியும். இவை மக்களுக்கு இருப்பதை விட முக்கியமாக அரசியல்வாதிகளுக்கு இருக்க வேண்டும்… இப்பொழுது நினைத்துப் பாருங்கள் அரசியலை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமா இல்லையா என்று….
பரந்த மனப்பான்மைக்கு உதாரணமாக மறைந்த கர்மவீரர் காமராஜரை எடுத்துக் கொள்ளலாம்.. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டத்துடன் பாடுபட்டவர் அதையே தன் ஆட்சியில் கொடுத்தவர்.
திறந்த மனப்பான்மை என்பது ஒரு சிக்கலான விஷயம்… இது ஜாதி, மத, இனம், மொழி, கலாச்சாரம் இவைகளுக்கு அப்பாற்பட்டு உண்மையை உண்மையாக அறிந்துகொண்டு உலகறிய செய்வது….. குழம்ப வேண்டாம்…உண்மையாக நடந்த ஒரு விஷயத்தை மத, இன, மொழி நாடை குறிப்பிடாமல் சொல்கிறேன்.
உலகம் முழுவதும் மக்கள் மத அடிப்படையில் மிக அதிகமாக நம்பிக்கை வைத்திருந்தனர்…. அந்த மத அடிப்படையில் உலகம் உருவாகி 6000 வருடங்கள் தான் என்று இருக்கிறது..
1980 களில் தொல்லியல் துறை ஒரு வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் அகழ் ஆராய்ச்சியை மேற்கொண்டது, சுமார் 5, 6 மாதங்கள் கடந்திருக்கும்… ஆராய்ச்சி குழுவினர் ஒரு மாபெரும் கலாச்சாரம் புதைப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்து மேற்கொண்டு ஆராய, கண்டுபிடித்தது ஆராய்ச்சியில் ஈடுபட்ட எல்லோரையும் அதிர வைத்தது..
காரணம் அங்கு கண்டுபிடிக்கப்பட்டது சுமார் 20,000 வருடங்களுக்கு முன்பான நாகரீகம். அவசர, ரகசிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து இந்த கண்டுபிடிப்பினை ஆழ, அலசி பார்த்து ஒரு முடிவு எடுத்தனர்… அதாவது கண்டுபிடிக்கப்பட்ட செய்தியினை அப்படியே மறைப்பது என்று.
கண்டுபிடிப்பு அவர்களின் மனக்கண்ணை திறந்து, திறந்த மனப்பான்மையுடன் இருக்க செய்தாலும், எல்லோரும் உலகம் தோன்றி ஆராயிரம் வருடமே என்று இருக்கும் ஆழ்ந்த மத நம்பிக்கையை அது தகர்த்து விடும், மக்களால் இதை ஜீரணிக்க முடியாது என்ற முடிவுக்கு வந்து மறைக்க முடிவு செய்தனர்.
உலகத்தின் அந்தப் பகுதியில் மட்டுமே இது போன்ற நிகழ்ச்சி நடந்தது என்று நினைத்தால் தவறு… இதே போல மற்ற மத நம்பிக்கை உடைய இடங்களிலும் நடந்தது… அதேபோன்று அந்த இடங்களிலும் இதுபோன்ற செய்திகள் மறைக்கப்பட்டது.
இந்தத் திறந்த மனப்பான்மையும், பரந்த மனப்பான்மையும் நான் சொல்லப் போகும் பின்வரும் கதைக்கு தொடர்புடையதா என்று புரிந்து கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு!
முகுந்தன் மிக அற்புதமான பொழுதுபோக்கு எழுத்தாளன், நவீன தொழில்நுட்பத்தில் தலை சிறந்தவன்… தன்னுடைய வேலையில் கிடைக்காத ஆத்ம திருப்தியை அவனுடையது சிந்தனையை மிகவும் தூண்ட வைக்கும் எழுத்துக்கள் மூலம் அடைந்தான் … ஆனால் பரிதாபம், ஏற்கனவே சிந்தனை தூண்டப்பட்ட அவனுடைய நட்பு வட்டாரங்களுக்கு மட்டுமே அவனுடைய எழுத்துக்கள் போய் சேர்ந்தது.. அவன் கதைகளை பத்திரிகைகளுக்கு அனுப்பும்படி நண்பர்களால் நிர்பந்திக்கப்பட்டதும், எந்த பத்திரிகைக்கு அனுப்பலாம் என்று பல பத்திரிகைகளை வாங்கி அந்த பத்திரிகைகளில் வெளிவந்த கதைகளை படித்து பார்த்ததும், தற்கால வாசகர்களுக்கு ஏற்றவாறு தன் கதைகள் இல்லை என்று புரிந்து புரிந்து கொண்டான்…. பத்திரிகைகளுக்கு தன் கதைகளை அனுப்பும் முயற்சியையும் கைவிட்டான்.
மேலும் வெளிநாட்டில் பணி புரிவதால் வேலைப்பளுவில் இதை பொருட்படுத்தவில்லை.
இதோ, ஒரு மாத விடுப்பில் ஊருக்கு செல்ல போகிறான். நெருங்கிய நண்பர்கள் சக்தி மற்றும் அருளை சந்திக்க பெரும் ஆவலுடன் காத்திருந்தான்.. அந்த நாளும் வந்தது…..
சக்தி ஒரு பிரபலமான இயக்குனரிடம் துணை இயக்குனராக கடந்த மூன்று வருடங்கள் பயணித்துக் கொண்டிருந்தான்.
அருள் அதே திரைப்படத்துறையில் ஒளிப்பதிவாளராக தன் தனி ரக முத்திரையை பதித்துக் கொண்டு இருந்தான்.
சனிக்கிழமை இரவு ஊருக்கு வந்து சேர்ந்த முகுந்தனை ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே சந்திக்க சக்தியும் அருளும் சென்றனர். வருடத்துக்கு ஒரு முறை சந்திப்பு நடந்து இருந்தாலும் அவர்கள் நட்பு கூடியதே தவிர குறைந்ததில்லை.
காலை சிற்றுண்டியை முகுந்தனின் வீட்டிலேயே மூவரும் முடித்தனர்.
'என்ன முகுந்த் ஒரு மாதமாக உன் கதையே இல்லை?'
'சிறுகதை எழுதவில்லை ஒரு நாவல் எழுதி இருக்கிறேன், சக்தி'
'ஓ, அதுதான் தாமதமா? என்ன கதை?'
'அதுதான் வருகிறேனே, பகிரலாம் என்று இருந்தேன் அருள்'.
'சரி சுருக்கமாக சொல்லு….'
சுருக்கமாக இல்லாமல் சற்று விரிவாகவே அவர்கள் இருவருக்கும் முகுந்தன் தன் கதையை விவரித்தான்.
கதையைக் கேட்ட சக்திக்கும் அருளுக்கும் ஆச்சரியத்தின் மலைப்பை மறைக்க முடியவில்லை…
'பிரமாதம் முகுந்த், இதுவரை யாரும் நினைத்தும் பார்க்க முடியாத கதை…'
'எனக்கு ஒரு யோசனை, நீ ஓய்வெடுத்துக் கொள் மாலை நானும் அருளும் ஒரு செய்தியோடு வருகிறோம்.'
'என்ன கதை எழுதறவனுக்கே சஸ்பென்ஸ் வைக்கிற?'
'சஸ்பென்ஸ் எல்லாம் ஒன்னும் இல்ல, இன்று மதியம் ஒரு தயாரிப்பாளரை நானும் அருளும் சந்திக்க போகிறோம்… எதுவும் முடிவுக்கு வராமலே ஏன் சொல்வது என்று சொன்னேன்…'
'எந்த தயாரிப்பாளரை, நான் வரலாமா?'
'அவரை நாளைத்தான் சந்திப்பதாக இருந்தது திடீரென்று கைபேசியில் அழைத்து மாலை 3 மணிக்கு சந்திக்க முடியுமா என்று கேட்டார்…. சரி என்றோம். நாளை உன்னையும் அழைத்துச் செல்ல தான் திட்டமிட்டோம்… நீ இன்னும் ஓய்வு எடுக்கவில்லையே அதனால் இதைச் சொல்லவில்லை..'
'அதற்கென்ன மூன்று மணிக்கு உங்களுக்கு சரி என்றால் நானும் வருகிறேன்'
'அதுவும் நல்லது தான், இரண்டரை மணிக்கு காத்திரு வந்து அழைத்து செல்கிறோம்'.
சரியாக மணி இரண்டரை மணிக்கு சக்தியும் அருளும் வந்து முகுந்தனை அழைத்துச் சென்றனர்.
கேட்டில் இருந்த செக்யூரிட்டியை கடந்து உள்ளே சென்றனர். அது ஒரு பிரம்மாண்டமான பங்களா.. மிகப்பெரிய தயாரிப்பாளர்… கேட்க வேண்டுமா?!
தயாரிப்பாளரின் உதவியாளர் வந்து இவர்களை அழைத்துச் செல்ல மூவரும் வரவேற்பு அறையில் அமர்ந்தனர்.
மூன்று மணிக்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தது….. காத்திருந்தனர். அந்த தயாரிப்பாளர் புதுமுகங்களை அறிமுகம் செய்ய எந்த தயக்கமும் காட்டியது இல்லை.
மணி மூன்றுக்கு மேல் ஆகி மூன்றறையும் கடந்தது… சந்திப்போமா, சந்திப்பு நடக்குமா என்று இருந்த சமயத்தில் உள்ளிருந்து அழைப்பு வந்தது.
'வாங்க உட்காருங்க.. என்ன குடிக்கிறீங்க? காபி, டீ இல்ல சாப்ட் ட்ரிங்ஸ்? '
'எது இருந்தாலும் பரவாயில்லை. சரி சொல்லுங்க…..'
'கொஞ்சம் பெரிய கதை… உங்களுக்கு நேரம் இருக்கிறதா?'
'இருக்குதுப்பா, அதுக்காகத்தானே ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் வர சொன்னேன் நாளைக்குன்னா நேரம் இருந்திருக்காது'
20 நிமிடங்களுக்கு மேலாகி இருக்கும் சக்தி கதை சொல்லி முடித்தான்.
'கத நல்லா இருக்குது.. இந்த ஒரே ஒரு கத தான் இருக்குதா வேற எதுனா இருக்கா?'
சக்தி சற்றென்று முகுந்தனை பார்த்தான்…
'என்ன தம்பி அவரை பாக்குற…'
'சார், இவன் நெருங்கிய நண்பன், நல்ல எழுத்தாளன்.. வெளி உலகுக்கு தெரிய வாய்ப்பு தான் கிடைக்கவில்லை.. நேற்று இரவு தான் வந்தான், இன்று காலை சந்திக்கும்போது மிக நல்ல கதையை சொன்னான். அதை நான் உங்களுக்கு கூற விருப்பம் இருக்கிறதா என்று பார்த்தேன்'.
'அதுக்கு என்ன எனக்கு சொல்ல விருப்பம் இருந்தா நீயே சொல்லு தம்பி.. 'என்று முகுந்தனை பார்த்தார்.
முகுந்தன் அதிர்ச்சியுடன் பார்த்துவிட்டு, சந்தர்ப்பம் கிடைத்தது என்ற மகிழ்ச்சி மனதிற்குள் இறங்குவதற்கு முன்பு காலையில் நண்பர்களுக்குச் சொன்ன அந்த கதையை கூற ஆரம்பித்தான்….
அந்த தயாரிப்பாளர் எந்த குறுக்கீடும் இல்லாமல் முகுந்தன் கூறிய கதையை முழுவதுமாக சுமார் 15 நிமிடங்களுக்கு கேட்டார். கேட்டுவிட்டு எந்த பதிலையும் கூறாமல் அண்ணாந்து சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தார்….
அந்த சில நொடிகள் அந்த மூவருக்கும் பல நிமிடங்களாக தெரிந்தது… என்ன சொல்வாரோ என்று எதிர்பார்ப்புடன் மூவரும் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஒரு 30 நொடிகள் கடந்திருக்கும், 'தம்பி இந்த கதையை எப்போது எழுதின?'
'ஊருக்கு வருவதற்கு ஒரு வாரம் முன்பு அதாவது சென்ற வாரம்… ஏன் கேட்டீங்க?' என்று படபடப்புடன் முகுந்தன் தயாரிப்பாளரை பார்த்து கேட்டான்.
மேலும் சில நொடிகள் அமைதியாக இருந்துவிட்டு தயாரிப்பாளர் முகத்தினை பார்த்து, 'இதுவரை இது போன்ற கதையை நான் கேட்டதே இல்லை…… இப்படியும் இருக்குமோ என்று திடுக்கிட வைக்கிறது….. மிகவும் அற்புதமான கதை… எவ்வளவு நாளா கதை எழுதினு இருக்கீங்க? எந்த பத்திரிக்கைக்கும் அனுப்பினது இல்லையா?'
'மூன்று வருடமாக, என் கதைகளை விரும்புவாங்களோ இல்லையோ என்று இதுவரை அனுப்பினது இல்லை…'
'என்ன தம்பி, இது மாதிரி கதைகளை படிக்கிறதுக்கு கொடுத்து வச்சிருக்கணும்….' என்று கூறிவிட்டு மேலும் ஒரு நிமிடம் தரையே பார்த்துக் கொண்டிருந்தார்.
பிறகு தொடர்ந்தார், ' எவ்வளவு செலவானாலும் இந்த படத்தை நான் தயாரிக்கிறேன்… ஆனா ஒரே ஒரு கண்டிஷன்…'
மூவருக்கும் மகிழ்ச்சி இருந்தாலும் பயத்துடன் என்ன சொல்லப் போகிறாரோ என்று அவரை பார்த்தனர்…
' அந்த கண்டிஷன் என்னென்னா, நான் ரெண்டு ஹீரோக்கள சொல்றேன்.. அவங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் சம்மதித்தால் கூட போதும் ' என்று கூறிவிட்டு இரு பிரபலமான கதாநாயகர்கள் பெயரை கூறினார்.
சக்தி இரு கதாநாயகர்களுடைய திரைப்படங்களிலும் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருந்ததால் அறிமுகம் இருந்தது.. சரி என்று தலையசைத்தான்.
வாய்ப்பு கைக்கு எட்டி விட்டது என்ற மகிழ்ச்சியில் மூவரும் வெளியே வந்தனர்.
இரு ஹீரோக்களின் காரியதரிசிகளையும் தொடர்பு கொண்டு சந்திக்க நேரம் கேட்டனர்.
முதல் ஹீரோ அதே வாரம் வியாழக்கிழமை மாலை சந்திக்கலாம் என்றும், இரண்டாவது ஹீரோ அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை காலை சந்திக்கலாம் என்றும் சந்திக்க நேரத்தை ஒதுக்கினர்.
மூவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்..
அப்பொழுது அவர்களுக்கு தெரியாது, கைக்கு எட்டிய வாய்ப்பு வாய்க்கு எட்ட அந்த வியாழக்கிழமையும் அந்த செவ்வாய்க்கிழமையும் இல்லை என்று…
இரண்டு வியாழக்கிழமைகள் கடந்த உடன் முதல் ஹீரோவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது…
கதையை ஊன்றி உன்னிப்பாக கேட்டார்…. ஒரு சில நிமிடங்கள் ஏதும் பேசாமல் ஏதோ யோசித்தார்.. பிறகு…
' தயாரிப்பாளர் எடுப்பதற்கு ரெடியா இருந்தாலும்… இது ரொம்ப கான்ட்ரவர்சியல் சப்ஜெக்ட்…. என் ரசிகர்கள் என்னிடத்தில் எதிர்பார்ப்பது இவற்றையெல்லாம் இல்ல, மேலும் என் எதிர்கால அரசியல் நிலைப்பாட்டுக்கு இது ஒத்து வராது '
'நீங்க நடிச்சா நல்லா இருக்குன்னு தயாரிப்பாளர் பீல் பண்றாரு…'
'புரியுது, ஆனா மன்னிக்கணும் சிக்கல்ல மாற்றத்துக்கு நான் விரும்பல… கதையை கொஞ்சம் மாத்துனா நான் நடிக்கிறேன்… என்னுடைய சம்பளத்தை என் பீ ஏ சொல்வாரு, கேட்டுவிட்டு ஒரு நாளைக்குள்ள அவரிடம் முடிவு சொல்லுங்கள் '
அவர்கள் வெளியே வந்ததும், நடிகருடைய பீ ஏ உள்ளே சென்றார்…
அவர் வெளியே வந்து இந்த மூவரிடம் சொன்ன சம்பளப் பணத்தைக் கேட்டு மூவருக்கும் ஹார்ட் அட்டாக் வராமல் பிழைத்ததே பெரிய விஷயம்! கதையை வேறு மாற்ற வேண்டுமாம்?!
சரி, அடுத்த ஹீரோவை சந்திக்க வேண்டியது தான் என்று மூவரும் கிளம்பினர்.
அடுத்து ஹீரோவையும் சந்தித்தனர்… அதே முடிவு… அதே காரணங்கள்…. எந்த சமரசமும் இல்லாமல் அரசியல்வாதிகளை எதிர்த்து என்னால் நடிக்க முடியாது என்றார்.
அன்று ஞாயிற்றுக்கிழமை, முகுந்தன் விடுமுறை முடிந்து ஊருக்கு கிளம்ப இன்னும் ஐந்து நாட்களே இருந்தது….
அற்புத வாய்ப்பு கிடைப்பது போல் இருந்து கிடைக்காமல் போய்விட்டதே என்று மூவரும் வருத்தம் தோய்ந்த முகத்துடன் முகுந்தன் வீட்டில் மாடியில் சிற்றுண்டி சாப்பிட்டனர்.
அப்போது கீழிருந்து முகுந்தனின் அம்மா அழைப்பது கேட்டது… போய் பார்த்துவிட்டு வருகிறேன் என்று முகுந்தன் கிளம்பி கீழே சென்றான்.
என்ன ஆச்சரியம் பள்ளி கால நண்பன் மோகன் வரவேற்பு அறையில் அமர்ந்திருந்தான்… எவ்வளவு நாள் ஆகியது இவனை பார்த்து…. பதினைந்து வருடங்களுக்குப் பிறகு சந்திக்கிறார்கள்.
' வாவ்! மோகன் எவ்வளவு நாட்கள் பிறகு சந்திக்கிறோம்… எப்படி இருக்கிறாய்? எப்படி நான் வந்திருப்பது தெரியும்? தொடர்பில்லாமல் 15 வருடங்கள் இருந்து விட்டோமே?'
' ஆமாம் முகுந்த், பள்ளி முடிந்தவுடன் அப்பா யு எஸ் க்கு மைகிரேட் ஆக முடிவு செய்து இருந்தார்.. நாங்களும் உடன் சென்று நான் யூனியில் அங்கேயே படித்தேன். ஆமாம் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? உங்களையெல்லாம் தெரிந்து கொண்டது மூன்று வாரங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட பள்ளி இறுதி ஆண்டு whatsapp குரூப் மூலம் தான்…'
முகுந்தன் சுருக்கமாக தன்னைப் பற்றி கூறிவிட்டு கடந்த மூன்று வாரமாக நடந்த எல்லா நிகழ்ச்சிகளையும் கூறினான்.
' என்ன ஆச்சரியம் சரியான சமயத்தில் சரியான இடத்திற்கு தான் வந்திருக்கிறேன்'
' என்ன சொல்கிறாய் மோகன்? எதுவும் புரியவில்லையே?'
' சக்தியம், அருளும் மேலேதானே உள்ளார்கள்? வா, எல்லோரிடமும் சொல்கிறேன் '
மோகன் மாடிக்கு முதலில் சென்று சக்தியையும், அருளையும் மகிழ்ச்சியில் ஆச்சரியப்பட வைத்தான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திக்கிறார்கள் அல்லவா?
'முகுந்த், நீ கதைகள் எழுதுவது அறிந்து மிக்க மகிழ்ச்சி… எல்லாவற்றையும் படிக்கப் போகிறேன், முதலில் சற்றுமுன் கூறிய உன் கதையை சொல்லு பிறகு நான் கூறுகிறேன் ஏன் சரியான சமயத்தில், சரியான இடத்திற்கு வந்திருக்கிறேன் என்று சொன்னதின் காரணத்தை…..'
முகுந்தன் மோகனுக்கு நிதானமாக கதையை கூற ஆரம்பித்தான்…
சக்திக்கும் அருளுக்கும் இந்த கதையை ஏற்கனவே தெரிந்திருந்ததால் அமைதியாக இருக்க, மோகன் மிக உன்னிப்பாக அந்த கதையை கேட்டான்.. சில இடங்களில் குறுக்கீடலுக்கு மன்னிப்பை கேட்டு விட்டு புரிந்தவுடன் மேலே தொடர சொல்லி முழுவதுமாக கேட்டு முடித்தான்.
முகுந்தன் எதிர்பார்ப்புடன் மோகன் முகத்தை பார்க்க….
' முகுந்த், இந்தக் கதையைப் பற்றி யார் என்ன நினைக்கிறார்களோ எனக்கு தெரியாது அதை பற்றி கவலையும் இல்லை… உங்கள் மூவரின் துணையோடு இந்த கதையை திரைப்படமாக நான் எடுக்கிறேன். முதலில் உன் விடுப்பை நீட்டித்து இன்னும் ஓரிரு மாதங்களாவது இங்கேயே இரு. அற்புதமான கதை, ஐ அம் வெரி வெரி ப்ரவுட் ஆஃப் யூ முகுந்த்!'
' மேலே சொல் மோகன், பணம் நிறைய ஆகுமே… மேலும் அந்த இரு ஹீரோக்களும் நடிப்பதற்கு ஒத்துக் கொள்ளவில்லையே நாம் என்ன செய்வது வேறு நடிகர்களை தான் தேட வேண்டும்'
' கவலையே வேண்டாம்' என்று மோகன் கூறிவிட்டு மேற்கொண்டு சொன்னதைக் கேட்டு மூவரும் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் சிலையானர்கள்.
முதல் வேலையாக மோகன், முகுந்தனை வேலையை விட்டு விடச் சொன்னான். கண்டிப்பாக வேலைக்கு சென்று தான் ஆக வேண்டும் என்று கூறினால், நாம் எடுக்கும் இந்த முயற்சி தோல்வி அடைந்தால், தானே அவனுக்கு இப்போது கிடைக்கும் சம்பளத்தை விட இரண்டு மடங்குக்கு மேலாக யூ எஸ் ல் வேலை வாங்கித் தருவதாக கூறினான்.
நான்கு மாதங்கள் கடந்த பிறகு…
முகுந்தன் கதையை திரைப்படமாக எடுத்து முடித்தார்கள்.. எப்படி வெளியிடுவது, எங்கு வெளியிடுவது என்று நிறைய விவாதித்து ஒரு முடிவுக்கு வந்தனர். தமிழ்நாட்டு திரையரங்குகளில் வெளியிட இருந்த அரசியல் தலையீடுகள் திரைப்படத்தின் திடுக்கிட வைக்கும் கதையை விட அதிகமாக இருந்ததால், நெட்ப்ளிக்ஸ் இடமோ அமேசானிடமோ பேச மோகன் முயற்சி செய்தான்.
இரு நிறுவனங்களுமே தற்போது நடக்கும் நடிகர்களின் வேலை நிறுத்தத்தை கருத்தில் கொண்டு, யோசித்து பிறகு ஹாலிவுட்டில் தயாரித்த திரைப்படம் இது இல்லை இந்தியாவில் தயாரித்த திரைப்படம் என்பதால் ஓ டீ டீ (OTT) யில் வெளியிட எந்த பாதிப்பும் இல்லை என்று ஒத்துக்கொண்டனர். இரு நிறுவனங்களும் இந்த திரைப்படத்துக்கு தரப்போவதாக அறிவித்த தொகை நான்கு பேருக்கும் நிமிடத்திற்கு 400 க்கும் மேலாக இதயத் துடிப்பு இருப்பதைப் போன்ற உணர்வை கொடுத்தது… நால்வருக்கும் அந்தத் தொகையை நம்ப சில மணி நேரங்கள் ஆனது…
அமேசான் பிரைமில் உலகளாவிய நிறைய சந்தாதாரர்கள் இருப்பதால் அந்த நிறுவனத்தின் மூலம் வெளியிட சம்மதித்தனர்.
அரசியல் தொல்லைகளை தவிர்க்க நால்வரும் தற்காலிகமாக யூ எஸ் ல் தங்கினார்கள்.
அந்தத் தயாரிப்பாளர் மட்டும் எவ்வித தயக்கமும் இல்லாமல் சக்தியை கைபேசியின் மூலம் அழைத்தார்.
' சக்தியிடம் பேச முடியுமா?'
'சொல்லுங்க சார் நான் தான் பேசுறேன், நாங்க நல்லா இருக்கோம் நீங்க எப்படி இருக்கீங்க? '
'நல்லது தம்பி, ரொம்ப சந்தோஷம் பழசை மறக்கல நீங்க…'
' என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க, என்ன பழசு, ஆறு மாதத்திற்கு முன்பு சாதாரணமாக இருந்த எங்களை நம்பி இந்தத் திரைப்படத்தை எடுக்க ஒத்துக் கொண்டீர்கள்… நீங்கள் தமிழ் திரை உலகிற்கு ஒரு நம்பிக்கை தரும் உன்னத தயாரிப்பாளர்'
' தம்பி, உங்கள் நாலு பேரின் நல்ல அடக்கத்தை காட்டுகிறது இது… நீங்க நாலு பேரும் நல்லா இருக்கணும் '
' சார் இனி எங்களுக்கு கிடைப்பதாக இருந்தால் கிடைக்கப் போகும் எந்த புகழுக்கும் நீங்கள் எங்களுக்கு அளித்த நம்பிக்கையே அடித்தளம்!'
' சரி தம்பி, உங்களுக்கு இருக்கும் நேர குறைவில் அதிக நேரத்தை நான் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை அதில் நடித்த நான்கு பேரும் யார் தம்பி? திரைப்படத்தில் நடித்த எந்த நடிகரின் பெயரையும் விளம்பரத்தில் போடவில்லையே நீங்கள்?'
' சார் நாளை திரைப்படம் வெளிவரும் போது நீங்களே தெரிந்து கொள்வீர்கள், அதுவரை கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்.'
'வாய்மைக்கு யோகம்!' என்று தமிழிலும், ஹிஸ்டரி பிகம் ஹிஸ்டரி! என்று ஆங்கிலத்திலும் மேலும் 23 உலகளாவிய மொழிகளிலும் அவர்கள் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. பான் சவுத் இந்தியாவை கடந்து, பான் இந்தியாவை கடந்து, அந்தத் திரைப்படம் பான் உலகமாக உருவெடுத்தது!
மனித வரலாற்றிலேயே இத்தகைய மாபெரும் வெற்றி எந்தத் திரைப்படமும் பெற்றதில்லை என்பது போல வெற்றியின் உச்சத்தை எல்லா நாடுகளிலும் தொட்டது….
நடிக்க மறுத்த இரு நடிகர்களும் மன உளைச்சலின் எல்லைக்கே சென்றனர்…
திரைப்படத் துறையில், உலகத்தில் முதல் முறையாக இது, அது என்று இல்லாமல் பல்வேறு துறைகளில் 'வாய்மையின் யோகம்!' வரலாற்றில் பதிவாகியது.
அந்த ஒரு திரைப்படத்தின் மூலமாகவே உலகம் முழுவதிலும் அந்த நான்கு பேரும் அறியப்பட்டனர்.
ஆமாம் முதன்முறையாக….
திரைக்கதையைத் தவிர, அதில் உள்ள எல்லா திரைப்படத்துறைகளுமே….
தமிழைத் தவிர மற்ற எல்லா மொழிகளுமே….
திறந்த, பரந்த மனப்பான்மையோடு மனம் என்று ஒன்று இல்லாமல் நடிகர்களை கொடுத்தது….
எல்லாமே மோகன் கற்ற செயற்கை நுண்ணறிவின் முன்னேற்றத்தால் உருவானவை.
அந்த நான்கு பேரின் அவதார்களையே நடிகர்களாக செயற்கை நுண்ணறிவின் நவீன முன்னேற்றம் உருவாக்கியது.
உலகில் உள்ள திரைப்படத் துறையின் எல்லா பரிசுகளையுமே 'வாய்மையின் யோகம்!' தட்டிச் சென்றது.
இந்த நான்கு தமிழர்களின் மாபெரும் வெற்றியை கொண்டாட தமிழ் நாடும் சரி, இந்தியாவும் சரி தவறியது….
அரசியல் சதுரங்கத்தில் அடுத்து என்ன என்ன நடக்கும் என்பதும், கிரிக்கெட் வீரர்களின் மனைவிகளின் விருப்பமான உடை என்ன என்பதும்,
எந்தெந்த நடிகர்கள் அடுத்து அரசியலுக்கு வர போகிறார்கள் என்பதும் தான் முக்கியமாக எல்லோருக்கும் பட்டதே இதற்குக் காரணம்.
ஒரு சமுதாயம் சரியான பாதையில் முன்னேற தேடுதல், தேடினதை புரிதல், புரிந்ததை தெளிதல் மிக மிக அவசியம்.
செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை, ஆதிக்கத்தை, ஆளுமையை தடுக்க எந்த ஒரு சக்தியும் உலகில் இல்லை…
மனித இனத்தின் வரலாற்றில் எவராலும் தடுக்க முடியாத இந்த மாபெரும் மாற்றத்தை புரிந்து, தெளிவது நம்மை விட நம்மை ஆள பயன்படும் சட்டங்களை இயற்றும் அரசியல்வாதிகளுக்கு மிக மிக அவசியம். அரசியல் சதுரங்க உச்சகட்ட விளையாட்டில் இதை கவனிக்க அவர்களுக்கு நேரம் இருக்குமா?