top of page
Search

மறுபிறவி By சிவா

  • melbournesivastori
  • Feb 19, 2022
  • 8 min read

என்னால் ஏன் மற்ற 30 வயது இளைஞனை போல் இருக்க முடியவில்லை என்று தெரியவில்லை… ஏதேதோ சிந்தனைகள்… எல்லோரும் மானாட மயிலாட தங்கள் கால்கள் ஆட பார்த்துக் கொண்டிருக்கும்போது எனக்கு மட்டும் ஏன் இவ்வாறான வாழ்க்கை பற்றிய, மனித சாபக்கேடு களைப் பற்றிய சிந்தனை என்று தெரியவில்லை.. எந்தப் புத்தகங்களைப் படித்தாலும் எந்த சினிமாவை பார்த்தாலும் மனிதனின் புரையோடிய சமுதாயத்தைப் பற்றியே உள்ளது.. இந்த அவலங்களுக்கு பரிகாரத்தை தேடாமல், முயற்சி செய்யாமல் வெறுமனே பேசிக் கொண்டிருப்பது புரையோடிய புண்ணுக்கு மருந்திட்டு நிவர்த்தி செய்யாமல் சொரிந்து அந்தக் கண நிம்மதியை தேடுவதை போன்றது என்று தோன்றியது.

இதைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் போதே வீட்டின் வெளியே சத்தம் கேட்டு ஜன்னலில் வழியாக பார்த்தேன்… அந்த தெருவின் தாதா குடித்துவிட்டு ‘ மவனே நானும் ஒரு நாள் மினிஸ்டர் ஆயிட்டு உங்களையெல்லாம் ஒருகை பார்க்கிறேன் டா…. ஸ்டேஷனுக்கு இழுத்துக்கணு போய்யா ஒதைக்க ரிங்க?’ என்று கத்திக்கொண்டே போய்க்கொண்டிருந்தான். அவனைப் பார்த்து பயந்து ஒரு கல்லூரி பெண் ஒரு வீட்டின் கேட் அருகில் ஒன்றிக் கொள்ள சென்றாள்… அந்தத் தெருவின் கடைசியில் வாழ்ந்துவந்த ஒரு ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ‘ டேய் கோவிந்தா, நான் டீ குடிச்சிட்டே வரதுக்குள்ள மரியாதையே வீடு போய் சேரு ‘ என்று மிரட்டி விட்டுச் சென்றார்.. இதையெல்லாம் எதிரே இருந்த ஒரு மாடி வீட்டின் மேல் காதை குடைந்தவாறு ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் நான் பார்க்காத காட்சிகளா இவை என்பதுபோல் சலனமே இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

முன்பொருமுறை யூட்யூபில் பார்த்த சுடுகாட்டில் வேலை செய்யும் பெண்மணி ஒருவர் கொடுத்த பேட்டி நினைவுக்கு வந்தது….. ‘மனுஷங்களோட வாழ முடியாது என்னால…. ஆனா சுடுகாட்டில் இந்த பொணங்களோட நிம்மதியா இருக்க முடியும் ‘ என்று கூறினார் அந்த பெண்மணி. இதன் உறையவைக்கும் உள்ளர்த்தம் நாகரிக சமுதாயத்தின் ஒட்டுமொத்த தோல்வியையே காட்டுகிறது என்பது எத்தனை பேருக்கு புரியப் போகிறது?

இன்று காலை என்னை காண நெருங்கிய நண்பன் வந்தான்..

இந்தப் பகுதியில் பெரிய பணக்காரன். அவனுடன் நடந்த பேச்சு சமுதாயம் சரியாகத்தான் செல்கிறதா என்றே சந்தேகிக்கும்.

‘என்ன தில்லை உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?’

‘சொன்னாதானே தெரியும் அமர்?’

‘ஒன்னும் இல்லை நேற்று ‘ ——-‘ கட்சியில் இருந்து வந்து என் அண்ணன் பாலகிருஷ்ணனை கட்டாயப்படுத்தி கவுன்சிலருக்கு நிற்க வைத்து விட்டார்கள்..’

‘அப்படியா, அவருக்கு நமக்கு தெரிந்த அரசியல் கூட தெரியாதே? புருவத்தை உயர்த்தி நான் கேட்க..’

‘ஆமா, எல்லாம் அவங்க பார்த்துக்க போறாங்களாம்… மேயர் பதவியை எப்படியாவது வாங்கி விடலாம் என்றார்கள்.’

‘அரசியலில் எதற்கு வருகிறோம் என்று தெரியாமல் வருவது தப்பு…’

‘அட நீ வேற, எவ்வளவு சம்பாதிக்கலாம் என்று அவங்க சொல்லும் போது அண்ணன் நிக்கலன்னா நானே நிக்கலாம் என்று தோணிச்சு….’

அப்போதுதான் எனக்குத் தோன்றியது எவ்வளவு தவறாக இதுவரை இவனைப் புரிந்து கொண்டிருக்கிறேன் என்று.

அடுத்த 5 வருடங்கள் ஆட்டிப்படைக்க போகும் தவறான வேட்பாளருக்கு, தவறான கட்சிக்கு புரிதல் இல்லாமல் வாக்களிப்பது பெரிய பாவம் என்று யாருக்காவது புரிய போகிறதா என்ன? மிகப் பெரிய பாவம் பணத்திற்காக தன் ஓட்டை விற்பது…. பாகுபாடில்லாமல் யோசித்துப் பார்த்தால் ஜனநாயகம் என்பது நல்லதோ கெட்டதோ அல்ல…. அதிகப்படியான ஓட்டுக்களை பணத்தாலோ, பயத்தாலோ, அடக்குமுறையாலோ, ஏமாற்றுதலாலோ வாங்கி அதிகாரத்தில் அமர்வது தான்.

மேலும் இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கும் காட்சிகள் வாழ்வின் அர்த்தத்தையே குழப்பியது…

வாழ்க்கையை ஏன் வாழ்கிறோம் என்ற குழப்பமான கேள்வி என்னுள் வந்தது… நல்லது கெட்டது என்று உண்டா? கர்மவினைகள் உண்மையா?

மறுபிறவி இருக்கிறதா? மறுபிறவி என்று இருந்தால் கிராமங்களில் குறி கேட்பது எப்படி சாத்தியமாகும்?

எண்ணற்ற கேள்விகள் அவ்வப்போது வந்து சென்றன… இரவு குழப்பத்தோடு படுத்தேன், உறங்கினேன்.

காலையில் எழும்போது ஒரு புத்துணர்ச்சியுடன் எழுந்தேன்…. என்னுடைய குழப்பங்களுக்கு விளக்கங்கள் கிடைத்துவிட்டன என்பதாலா என்றால் இல்லை, குழப்பங்கள் குழப்பங்கள் ஆகவே உள்ளன. ஆனால் கனவு தான் என்றாலும் அற்புதமான மகோன்னதமான கனவு நான் நேற்று இரவு கண்டது… ஆமாம் சரியாக ஞாபகம் இல்லை என்னை வரச் சொல்லி அழைத்தது சிவனா அல்லது முருகனா என்று… எது எப்படியோ முதல்முறையாக கடவுள் கனவில் வந்தார். அதன்படி புறப்பட தயாரானேன், மற்றவர்கள் பார்வையில் நான் செய்வது பைத்தியக்காரத்தனமாக தோன்றும்.. இருந்துவிட்டுப் போகட்டும். எங்கே செல்ல புறப்படுகிறேன் என்று கூறினால் நீங்களும் என்னைப் பைத்தியக்காரன் என்று நினைப்பீர்கள்…. கனவினில் வந்தது முருகனா சிவனா என்று சரியாக ஞாபகம் இல்லை… வா உன் குழப்பங்கள் தீரும் என்று கூறியது மட்டும் ஞாபகம் இருக்கிறது.. எந்த குழப்பம் பற்றி… யார் எனக்கு விளக்கம் தரப்போகிறார் என்று குழம்ப விரும்பவில்லை…. செல்லப் போவது திருத்தணியா, திருவண்ணாமலையா என்ற குழப்பம் மட்டுமே…

ஒரு முடிவுக்கு வந்தேன், உலகத்தை தோற்றுவித்து முதல் மொழியாக தமிழை தோற்றுவித்து முதல் பேரரசனாக நம் மூத்த குடிகளுக்கு இருந்த எல்லா சித்தர்களும் குறிப்பிடும் ஈசன்.. சிவனைக் காண திருவண்ணாமலைக்கு செல்வது என்று முடிவு செய்தேன். புறப்பட்டு திருவண்ணாமலைக்குச் சென்று அடைந்தேன். அங்கு இருந்த ஒரு கடையில் கரும்புச்சாறு வாங்கி பருக துவங்கும் போது தான் கவனித்தேன்.. பக்கத்திலிருந்த ஒருவர் மற்றொருவரிடம் குடிக்க தண்ணீர் கேட்க அவர் பையில் இருந்த தண்ணீரை எடுத்து ஒரு முழுங்கு குடித்துவிட்டு கேட்டவரிடம் தருவதை.. பெரும்பாலான எல்லோரிடமும் இந்த பழக்கம் இருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன்… இந்தப்பக்கம் திரும்பினால் ஒரு பெண்மணி மற்றொரு பெண்மணியிடம் யாரோ ஒருவரைக் குறிப்பிட்டு போட்டோ அனுப்பினாளா என்று கேட்க, ஆமாம் அனுப்பினாள் இதோ இந்த போட்டோ தான் என்று தன்னுடைய மொபைல் போனிலிருந்து ஒரு புகைப்படத்தை காண்பிக்கும்போது அருகில் இருந்த ஒரு கடையின் முன்பு ஒருவர் பூ கூடையை வைக்க.. ‘பார்த்துக்கொண்டிரு பூ வாங்கிக் கொண்டு வருகிறேன்’ என்று அந்தப் பெண்மணி கூற.. ஏனோ இவர்களை நான் கவனித்துக் கொண்டிருந்தேன்…

அப்போது நம் மக்களிடையே உள்ள இன்னொரு அநாகரிகமான பழக்கத்தை கவனிக்க நேர்ந்தது… மற்றொரு பெண் அந்த புகைப்படத்தை மட்டும் பார்க்கவில்லை… கொடுத்த பெண்மணியை பார்த்துக்கொண்டே அந்த மொபைல் போனில் உள்ள மற்ற புகைப்படங்களை எல்லாம் ரகசியமாக பார்க்கத் துவங்கினார்… அத்தியாவசிய நாகரிகங்கள் கூட ஏன் நசுங்கி போகிறது என்று புரியவில்லை… கரும்புச்சாறு பருகிவிட்டு அண்ணாமலையார் கோவிலை நோக்கி நடக்கும்போது ஒரு தந்தை தன் மகனிடம் அறிவுரை கூறிக் கொண்டு செல்வது கேட்டது….

‘ வருஷம் பூரா படிக்கிறத விட்டுட்டு கடைசி நேரத்தில் விழுந்து விழுந்து படிச்சா நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ண முடியுமா? ‘

‘ உன் பிரண்டு அந்த பையன் பெயர் இன்னா…. ராமு, அவன மாதிரி கோயிலிலேயே சுத்திக்கினு இருந்துட்டு கடைசில பரிட்சையில சரியாக எழுதலனா… கடவுள் என்ன மார்க்க தூக்கி கொடுத்துடுவாரா? ‘

இதைக் கேட்ட எனக்கு பளீரென்று வாழ்க்கை புரிந்துவிட்டது… நான் தேடிவந்த விளக்கமும் கிடைத்துவிட்டது.

கோவிலுக்குச் சென்றேன் சிவனை கண்டேன் வேண்டினேன் தரிசித்தேன்… வீட்டுக்குப் புறப்பட்டேன்.

சிங்காரச் சென்னையில் அந்தக் கூவம் ஆற்றின் படுகையில் ஆவடி தாண்டி இருந்த அந்த பாலத்தின் அடியில் நெரிசலான போக்குவரத்தின் பார்வையில் படாமல் இருக்கும் அந்த இடத்தில் ஆற்றின் துர்நாற்றத்தையும் பொருட்படுத்தாமல் இருந்த அந்த ஜோடி… பிளேடும், மங்காவும்… இவர்கள் இருவரின் உண்மை பெயர்கள் அவர்களுக்கே தெரியாது, எங்கிருந்து வந்தார்கள் என்றும் நினைவில்லை.. பலப்பல வருடங்களாக சிறுவயதிலிருந்தே ஒன்றாகவே இருந்தார்கள்.. தினமும் இருவரும் வெவ்வேறு திசையில் செல்வார்கள், கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு வந்து வாழ்க்கையை ஓட்டுவார்கள்…. இந்தக் காலகட்டத்தில் கொரோனாவின் கோரப்பிடியில் உலகம் சிக்கித் தவிக்கயில் மங்கா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். இவர்கள் இருப்பதே குப்பையில்… பிறக்கப்போகும் குழந்தை வளர போவதுவும் அதே குப்பையில் கடவுளுக்கு கண்ணில்லையோ அல்லது கண்ணியம் தான் இல்லையோ என்று தோன்றுகிறது….

ஆஸ்திரேலிய மெல்போர்ன் மாநகரில் செல்வச் செழிப்பு மிக்க பகுதியில் ஒன்று பிரைட்டன்… அடைய விரும்புவது அடைய முடியாதது ஏதுமில்லை என்று செல்வம் இருந்தும் திருமணமாகி எட்டு வருடங்கள் குழந்தை இல்லாமல் தவித்த ஆண்ட்ரூ கிளாடிஸ் தம்பதியருக்கு உலகத்தையே வென்றது போன்ற மகிழ்ச்சி அப்போது… ஆமாம் கிளாடிஸும் நிறைமாத கர்ப்பிணி.. அங்கிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தள்ளி இருந்த மென்டோனில் வாழ்ந்து கொண்டிருப்பது ஷெர்லி பாட்டி.

அவரின் துயரத்தை விளக்கமாகச் சொல்லி அன்றாட வாழ்க்கையில் எல்லோருக்கும் இருக்கும் துக்கத்தை மேலும் அதிகப் படுத்த விரும்பவில்லை. அவரின் மகளும் மருமகனும் சென்ற கார் விபத்துக்குள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டது மட்டுமல்லாமல் இரு வயது லூக்கை இவர் தலையில் கட்டி சென்றது தான் காலத்தின் கோலம். கணக்கிலடங்கா துயரங்களுடன் வளர்த்து ஆளாக்கி, இப்போது லூக்கின் வயது 26.

கொல்கொத்தா மாநகரின் பவானி பூர் பகுதியில் ஒரு மூளையில் அடர்த்தியாக இருந்த வீடுகளில் ஒரு வீட்டில் ரபீந்தர் வேலைக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தான். இருபத்தி நான்கு வயதில் குடும்பத்திலேயே முதல் ஆளாக கட்டின டையுடன் இவன் வேலைக்கு செல்வதைக் கண்டு அவனின் வயதான பெற்றோருக்கு மிகுந்த பூரிப்பு. வீட்டின் கதவை யாரோ தட்ட ரபீந்தர் சென்று பார்க்க ராணி நின்றிருந்தாள்… உடன் வேலை செய்பவள் இருவரும் சிறுவயதிலிருந்தே கல்லூரி வரை ஒன்றாகப் படித்தவர்கள்.

ரபீந்தருக்கு குடும்பத்தின் ஏழ்மை பிடிக்கவில்லை.. பலமுறை ராணியிடம் இதைப்பற்றி பேசியிருக்கிறான்… அவளுக்கும் அதே எண்ணம்.. கல்லூரி நாட்களில் பலமுறை பசி எடுக்கும் போது எந்த நண்பர்களாவது மண் ச்சொப்பு தேநீரோ ரசகுல்லாவோ வாங்கித் தர மாட்டார்களா என்று ஏங்கியது உண்டு… அப்பாவின் வருமானம் அன்றாட குடும்பத்தின் செலவுகளை சமாளிக்கவே திண்டாட்டமாக இருந்தது.. ரபீந்தருக்கு அப்பாவைக் கண்டாலே பிடிக்காது.. இவ்வளவு ஏழ்மையில் இருக்கும் போது தன்னைப் பெற்றதே அவர் செய்த பெரும் பாவம் என்று நினைத்தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் எப்படியாவது நல்ல வேலைக்கு சென்று நன்றாக சம்பாதித்து வசதியாக வாழ வேண்டும் என்று நினைத்தான்… அதன்பிறகே திருமணம் செய்துகொண்டு பிள்ளைகளைப் பெற வேண்டும் என்றும் தனக்குள்ளே உறுதி பூண்டான். ராணியும் கிட்டத்தட்ட அந்த மன நிலையிலேயே இருந்தாள்.

கல்லூரி படிப்பை முடித்துவிட்டு இந்தியாவின் கோடிக்கணக்கான இளைஞர்களைப் போல் வேலை தேடி பல படிக்கட்டுகளை ஏற தொடங்கினான்…. அதில் ஒரு படிக்கட்டு தன் வாழ்க்கையின் வசதிக்கான முதல் படிக்கட்டு என்று அன்று அவனுக்கு தெரியாது…

அவன் கல்லூரிப் படிப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுக்கும்போது இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த ஜனத்தொகையின் மாணவர்களும் அதே எண்ணத்தில் அதே கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுப்பார்கள் என்று நினைத்தும் பார்க்கவில்லை. முடிக்கும் தருவாயில் தான் தெரிந்தது எங்கு பார்த்தாலும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரிகள் என்று… மற்ற மாநிலங்களில் எப்படியோ தெரியாது ஆனால் கொல்கொத்தாவில் எங்கு பார்ப்பினும் தனக்கு போட்டியாளர்கள் ஆகவே தெரிந்தார்கள். ஒரு வெறியுடன் அவர்களை வெல்ல அதே கம்ப்யூட்டர் சயின்ஸை கரைத்துக் குடிக்க எல்லாவித முயற்சிகளையும் எடுத்தான்.. ராணிக்கும் தனக்கு தெரிந்த எல்லா விஷயங்களையும் சொல்லிக்கொடுத்தான். அன்று அந்தக் கம்பெனியின் இன்டர்வியூ.

12 மாடிக் கட்டிடத்தில் 12வது மாடியில் தான் அந்த இன்டர்வியூ நடந்தது.. இருந்த ஷர்ட் பேண்ட் களிலேயே நன்றாக இருந்தவற்றை எடுத்து அணிந்துகொண்டு.. கட்டிடத்தின் பளபளப்பை பார்த்து கூனிக்குறுகி லிப்ட்டிலும் பட்டும்படாமல் சென்று 12வது மாடியை அடைந்தான். இன்டர்வியூ இவன் எதிர்பார்த்தது போல் அல்லாமல் மிகவும் வித்தியாசமாக இருந்தது…. இவன் இளமை காலங்கள் பற்றியே அதிகமாக கேட்டார்கள்… அவனின் கோபதாபங்கள் பற்றிய கேட்டார்கள்… இது என்ன மனோத்தத்துவ முறையில் நடக்கிறதே என்று ஒரு கணம் நினைக்கையில்.. அவர்களே கூறினார்கள்… நாங்களும் உன்னைப் போன்று தான் இருந்தோம்.. அற்புதமான இந்த கம்பெனி எங்களுக்கு கிடைத்தது… இன்று செல்வச் செழிப்போடு இருக்கிறோம்.. நம்மை போன்றோருக்கு கடவுள் கொடுத்த வரமே கம்ப்யூட்டர் அறிவு தான்… பில்கேட்சை பாரு சுந்தர் பிச்சையை பாரு என்று எங்கெங்கோ சுற்றி ப்ரூஸ்லீயின் என்டர் த ட்ராகன் படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது முறுக்கேறிய உடம்புடன் வெளியே வருவார்களே அதுபோன்று முறுக்கேறிய மனதுடன் அவன் இருப்பதை உணர்ந்தான்.

ஒரு சிறிய டெஸ்ட் கம்ப்யூட்டரில் வைக்கிறோம், அதில் தேர்வு பெற்றால் இந்த வேலை உனக்கு நிச்சயம் என்றார்கள். அவர்கள் கொடுத்த டெஸ்ட் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது… இருப்பினும் வெற்றி பெற நினைத்த வெறியும் கட்டாயமும் ஒருங்கே அமைந்து டெஸ்டில் எளிதாக தேர்ந்தான். வேலையும் கிடைத்தது.. கமிஷன் பேஸ் வேலை அது…. கைநிறைய கால் நிறைய பணமும் கிடைத்தது… ஒரே மாதம் தான்… ராணியையும் அதேவேளையில் சேர்த்தான். அவனுடைய அப்பா இருபது வருடங்களில் சம்பாதித்த பணத்தை இந்த இரு மாதங்களில் சம்பாதித்தான். சிறுவயதிலிருந்து கும்பிட்ட காளியை மறந்தான்… இவ்வளவு நாள் தான் பட்ட கஷ்டத்திற்கு இந்த வேலை தமக்கு காளி செய்த பரிகாரம் என்று நினைத்தான். தன் ஏழ்மையை, இந்த ஏற்றத்தாழ்வான சமுதாயத்தை வெல்ல ஆரம்பித்து விட்டதாக உறுதியுடன் நம்பினான். ராணியை இன்னும் ஆறு மாதங்களுக்குள் திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தான்.

ஷெர்லி பாட்டிக்கு ஒரு வாரமாக அளவு கடந்த மகிழ்ச்சி.. கடவுள் தனக்கு கொடுத்த வேலையை செவ்வனே செய்ததாக தனக்குத் தானே பாராட்டிக் கொண்டார்.. அவரின் மகிழ்ச்சிக்கு காரணம் பட்டப்படிப்பையும் மேற்படிப்பையும் முடித்து தனக்கு மிகவும் பிடித்த ஒரு வேலை கிடைத்து லூக் ஒருவாரமாக செல்வதுதான்… அன்று காலை 8 மணிக்கு கம்பெனி தனக்குக் கொடுத்த புத்தம் புதிய காரில் பாட்டியிடம் சொல்லிவிட்டு வேலைக்கு கிளம்பினான். ஷெர்லி பாட்டி ஒரு இனம்புரியா மகிழ்ச்சியுடன் கதவைத் தாளிட்டுக் கொண்டு உள்ளே சென்றார்.

சுமார் மத்தியம் இரண்டரை மணி இருக்கும், ஷெர்லி பாட்டியின் மொபைல் போன் அடிக்க எடுத்து ஹலோ என்றார். மறுமுனையில் கொல்கத்தாவிலிருந்து ரபீந்தர்…..ஆங்கிலத்தில் நடந்த பின்வரும் பேச்சுக்களை நடந்ததை நடந்தவாறு தமிழில் பார்க்கலாம்…..

‘ உங்கள் பெயர்?’

‘ஷெர்லி’

‘ முழு பெயர்?’

‘ஷெர்லி ஸ்மித், யார் நீங்கள் எதற்கு கேட்கிறீர்கள்?’

‘ முழு விவரமும் கூறுகிறேன், பேசுவது நீங்கள் தானா என்று உறுதி செய்ய வேண்டும் உங்களுடைய பிறந்த தேதியை கூறவும் ‘

‘ 25/05/1943’

‘ நீங்கள் தான் என்று உறுதி செய்து விட்டோம், நன்றி. தவறுதலாக எங்கள் கம்பெனி உங்களிடமிருந்து 78 டாலர்களை எடுத்துவிட்டது… அதை மறுபடியும் உங்கள் அக்கவுண்டில் போடத்தான் இவையெல்லாம் கேட்டேன் ‘

‘ ஓ அப்படியா, நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்…. கடின உழைப்பால் சம்பாதித்த பணம்… அதனால் தான் திரும்பி வருகிறது…. இந்த வயதான காலத்தில் எனக்கு ஒவ்வொரு டாலரும் முக்கியம்… கடவுள் உங்களுக்கு அருள் புரியட்டும் ‘

‘ நீங்கள் என் பாட்டி வயது, அவர்களும் என்னை எப்போதும் ஆசிர்வதிப்பார்கள், சரி விஷயத்திற்கு வருகிறேன்.. உங்கள் எல்லோரிடமும் அதிகமாக பேசினால் என் மேனேஜர் கோபித்துக் கொள்வார்.. உங்கள் வீட்டில் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் இருக்கிறதா?’

‘ஆமாம் இருக்கிறது என் பேரன் லூக்கினுடையது ‘

‘ உங்கள் பேரன் என்னை போன்று நல்ல அன்பான பேரன் என்று நினைக்கிறேன்.’

‘ஆமாம் மிகவும் அன்பானவன், இரு வயதிலிருந்து கடந்த 24 வருடங்களாக தனியாளாக அவனை வளர்த்து வருகிறேன் ”

‘ நல்லது பாட்டி, உங்களை அன்பாக பாட்டி என்று கூப்பிடலாமா?’

‘ தாராளமாக கூப்பிடு… நீயும் என் பேரன் போல்தான்.’

‘ ஆமாம் பாட்டி, பணப்பரிவர்த்தனை எல்லாம் உங்கள் பேரன் லேப்டாப்பில் தானே செய்கிறார்?’

‘ ஆமாம் அவன் தான் செய்வான்’

‘ஐயோ, அப்படி என்றால் நான் பணத்தை மறுபடி உங்கள் அக்கவுண்டில் எப்படி போடுவது?’

‘ இன்னும் மூன்று மணி நேரம் பொறுத்தால் அவனே வந்து விடுவான் ‘

‘பாட்டி எனக்கு நேரமில்லை, யூசர் நேம் பாஸ்வேர்ட் உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள், உடனடியாக போட்டுவிட்டு உங்களைப் போன்ற நிறைய பேருக்கு உதவி செய்ய வேண்டும் ‘

‘ என்ன அன்பு; என்ன கடமை, நீ நன்றாக இருக்க வேண்டும்… ஒரு புத்தகத்தில் எழுதி வைத்துள்ளான்.. இதோ எடுத்து வருகிறேன் ‘

‘ பாட்டி, முதலில் லேப்டாப்பை ஆன் செய்யுங்கள்.. அதற்கு உள்ளே செல்ல லாகின் ஏதாவது கேட்கிறதா என்று எனக்கு தெரிய வேண்டும்’

ஷெர்லி பாட்டி லேப்டாப்பை ஆன் செய்ய…. அவருக்கு உதவியாக இருக்க லூக் லாப்டாப்பை திறந்தவுடன் அக்சஸ் செய்யுமாறு லாகின் இல்லாமல் வைத்திருந்தான்.

‘ லேப்டாப்பை ஆன் செய்து விட்டேன் ‘

‘ ரொம்ப நல்லது பாட்டி, இப்போது சொல்லுங்கள் யூசர் நேம் பாஸ்வேர்ட் ‘

ஷெர்லி பாட்டி கூற…

‘ பாட்டி உங்கள் வேலையை நீங்கள் கவனிங்கள் 5 நிமிடத்தில் முடித்துவிடுகிறேன்’

லேப்டாப்பில் சரசரவென்று ஸ்கிரீன் ஓட ஏதேஏதோ நடப்பதை ஷெர்லி பாட்டி பார்த்தார்.

சுமார் ஐந்து அல்லது ஆறு நிமிடங்களில் லேப்டாப் தானாக அணைந்தது.

ரபீந்தருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை… 20 நிமிடத்தில் ஒரு சதவிகித கமிஷன் ஆகவே சுமார் 4,038 ஆஸ்திரேலிய டாலர்கள் கிடைத்தது… இரண்டு லட்சத்தி சொச்சம் இந்திய ரூபாய்கள்.

ஆமாம், ரபீந்தர் வேலை செய்வது ஹாக்கிங் கம்பெனி… நூதன முறையில் உலகம் முழுவதிலும் உள்ள வயதானவர்களிடம் கொள்ளையடிப்பது. இந்த கம்பெனிக்கு எல்லோரிடமிருந்தும் எல்லாவித பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டிருந்தது… அதனால் கவலையில்லாமல் பயம் இல்லாமல் ரபீந்தர், ராணி போன்றோர் தொழிலை செய்ய முடிந்தது.

வெற்றியை கொண்டாட ராணியை அழைத்துக் கொண்டு எதிரே உள்ள ஓட்டலுக்கு செல்ல ரோட்டை கடக்கும் போது எதிரே வேகமாக வந்த லாரியில் அடிபட்டு அந்த இடத்திலேயே ரபீந்தர் இறந்தான்.

சென்னையில் மங்காவுக்கு பிரசவ வலி வர அருகே உள்ள அரசாங்க மருத்துவமனையில் லஞ்சம் கொடுத்து பிளேடு சேர்க்க…. இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் ஒரு குழந்தை பிறந்தது.

அந்தக் குழந்தை வேறு யாருமல்ல…. ரபீந்தரின் மறுஜென்மம்.

தில்லை திருவண்ணாமலையிலிருந்து வீடு வந்து சேர்ந்தான், ஈசி சேரில் படுத்து இருந்த தாத்தா பாலகிருஷ்ணன் புன்முறுவலுடன் அவனைப் பார்க்க, உடைமாற்றிக்கொண்டு இன்னும் சிறிது நேரத்தில் வருகிறேன் தாத்தா என்றான். உடை மாற்றிக் கொண்டு வந்து தில்லை,’ தாத்தா, மறுபிறவியில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?’ என்று கேட்க…

யாருக்கு தெரியும் என்று அவர் சொல்ல… எனக்கு தெரியும் என்று இவன் சொல்ல…. எப்படி என்று அவர் கேட்க… நடந்ததை விவரித்தான்.

“தாத்தா எனக்கு புரிந்த வரையில், எல்லோருக்கும் பிரி-வில் உள்ளது… வாழ்க்கையை முடிந்தவரை நல்லபடியாக வாழ்பவர்களுக்கு அடுத்த கட்டத்துக்கு செல்ல வழியிருக்கிறது, சரியாக வாழவில்லை என்றால், மறுபிறவி என்ற பெயரில் வாழ்க்கை ரிப்பீட் ஆகிறது…”

பாலகிருஷ்ணன் ஆச்சரியத்துடன் தில்லையை பார்க்க, தில்லை தொடர்ந்தான் ….

” அதாவது பள்ளியில் நடக்கும் தேர்வை போல… நல்ல மதிப்பெண் எடுத்து பாஸ் செய்தால் அடுத்த வகுப்பிற்கு செல்ல போவது போல நாம் அடுத்த கட்டத்திற்கு போகிறோம்… ஆனால் பள்ளியில் உள்ளது போல் அல்லாமல் வாழ்க்கையில் பாஸ் ஆவதற்கு அதிக மதிப்பெண்களை கடவுள் வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்…. பெயிலானால் அதே வகுப்பை மறுபடி படிக்கவேண்டியது போல தான் மறுபிறவி…. தொடர்ந்து வகுப்பை கவனிக்காமலோ, படிக்காமலோ இருந்தாலும்.. படிக்காமலேயே வெறும் கடவுளை மட்டுமே கும்பிட்டு கொண்டே இருந்தாலோ எப்படி பாசாக முடியாதோ அதேபோன்று அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாது “

இதுவரை வாழ்க்கையில் கிடைக்காத ஒன்று கிடைத்தது போல மகிழ்ச்சியில் பாலகிருஷ்ணன் தில்லையை கட்டிக்கொண்டார்.

லூக் அன்றைய பணியை முடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்ததும் ஷெர்லி பாட்டி நடந்ததை அவனிடம் கூற… அவன் பதற்றத்துடன் லேப்டாப்பை ஆன் செய்து பேங்கிங் பகுதியை பார்க்க….. மூச்சே நின்று விட்டது… அவன் அப்படியே சோபாவில் சாய்ந்து உட்கார, பாட்டி என்னவென்று கேட்டார்.

‘ நமது சேமிப்பு $4,03,800 முழுவதும் எடுத்துவிட்டு இருக்கிறார்கள் ‘ என்று சொன்னதுதான் தாமதம்…. அந்த கணமே ஷெர்லி பாட்டி சாய்ந்து கீழே விழ.. லூக் பதற்றத்துடன் பாட்டியை சோதித்துப் பார்க்க, இறந்து விட்டிருந்தார்.

அதே நேரத்தில் மெல்போர்ன் பிரைட்டனில் வசித்த கிலாடிஸ்க்கு குழந்தை பிறந்தது….. ஆனால் அந்த குழந்தை ஷெர்லி பாட்டி அல்ல…

ஷெர்லி பாட்டி வாழ்க்கையை வென்று மறுபிறவி இல்லாமல் அடுத்த கட்டத்திற்கு கடவுளை நோக்கிச் சென்றுவிட்டார்.

bottom of page