மறைந்த ‘மனிதம்
- melbournesivastori
- May 15, 2022
- 6 min read

நான் நினைத்தும் பார்க்கவில்லை உயர்ந்த ‘மனிதம்’ பற்றி எழுதிவிட்டு ஒர்இரு மாதத்திற்குள்ளாகவே ‘மனிதம்’ தாழ்ந்தது பற்றி எழுதுவேன் என்று.. என்ன சொல்வது, காலத்தின் கோலம் அது….
எழுதலாமா வேண்டாமா என்று மனதிற்குள் இருக்கும் மிகப்பெரிய போராட்டத்தின் ஊடே இது ஒரு சிறிய போராட்டம்… கடைசியில் மரண வேதனையில் இருக்கும் என் மனவேதனையை கடந்து எல்லோரும் அறிவது என்றாவது ஒரு நாள் நன்மை பயக்கும் என்றே இதை எழுதுகிறேன். நான் அனுபவித்ததை பிறகு கூறுகிறேன் … பின்வரும் நிகழ்ச்சிகளின் இன்டன்சிடியை புரிந்துகொள்ள அவர் அவர்கள் கூறுவது போல் எழுதுகிறேன்…..
மூத்த சகோதரர் :
நேற்று வாயுத்தொல்லைக்காக மருத்துவரை
பாா்த்துவிட்டு வந்தேன்..கடந்த சில நாட்களாக வலது மாா்வலி வாயுவினால் தோன்றுகின்றது.
வெகு சில நாட்கள்
அரைமணி நேரம்
வலித்தொடா்கின்றது..குறிப்பிட்ட ஒரேயிடத்தில் மட்டும் அந்தச்சமயம் மூச்சு இயல்பாக
விடமுடியாமல் இரைக்கின்றது..நரம்பில் ஒரு ஊசியும்,
புட்டத்தில் ஒரு ஊசியும்,மூன்று நாட்களுக்கு மாத்திரைகள் தந்தாா்…தூக்கம் வராததால்அல்பராஸ் .5mg தினமும் இரவில் எடுத்துக்கொள்கின்றேன்..அதனால் ஏதாவது பாதிப்பு?
Dr.said no and allowed me to continue,because
your age need calm and deep sleep for atleast 5 hours per day.
இதுவல்லாது பனங்கற்கண்டுடன் உலர் கருப்பு திராட்சையை தண்ணிரில் போட்டு நன்றாக கொதிக்க
வைத்து காலிவயிற்றில் குடிப்பதாக சொன்னதில் அவர்,
its good .என்றாா்..and it will help for the gastro problem..
நேற்றயமாலைச்செய்தி இது.
70க்கு மேலே எதோ ஒரு பிரச்சனை நம்மை நேசித்து
துன்பத்தை தருகின்றது.
ஆனால் இன்று என்னால் தாங்க முடியவில்லை.. பொதுவாக நான் என்றுமே என்னுடைய மன வலியையோ உடல் வலியையோ யாரிடமும் குறிப்பாக என் குடும்பத்தாரிடம் சொன்னதில்லை.. ஆனால் இன்று இந்த கணத்தில் நான் அனுபவிக்கும் இந்த வலியோ காலம் காலமாக நான் காத்து வைத்திருந்த மனவலிமையை உடைத்து என் தம்பி வீட்டில் விடுமுறையை அனுபவித்துக் கொண்டிருக்கும் என் மகனிடம் செய்தியை சொன்னேன்… பதற்றத்துடன் உடனே வருவதாக கூறிய அவனுக்கு காத்திருந்தேன்..
மூத்த சகோதரரின் மகன் :
சித்தப்பா வீட்டில் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும் சித்தப்பா மகனிடம் சந்தோஷமாக அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் போதுதான் அந்த போன் கால் அப்பாவிடம் இருந்து வந்தது… இன்றுவரை அப்பா அதுபோன்று பேசியதை கேட்டதில்லை.. பொதுவாக நான் வெளியில் இருக்கும் போது என்னை என்றுமே அழைத்துப் பேசியது இல்லை… முதல் வித்தியாசத்தை இன்று கண்டேன்.. அவர் பேச்சிலும் பதற்றம்.. அது எனக்கு தொற்றிக்கொண்டது.. உடனடியாக வருகிறேன் என்று அங்கு வீட்டில் இருப்பவர்களிடம் கூறிவிட்டு கிளம்பினேன்.. சித்தப்பா மகன் என் தம்பியும் உடன் கிளம்பினான். வீட்டிற்கு சென்றடைந்து அப்பா இருக்கும் நிலைமையை கண்டு உடனடியாக அவரை அழைத்துக்கொண்டு இந்தியா முழுவதிலும் புகழ்பெற்ற அந்த மருத்துவமனைக்கு சென்றேன். அதற்குள் என் சித்தப்பாவும் அவருடைய நண்பரும் அங்கு இருந்தனர்… சித்தப்பாவின் நண்பர் அந்த மருத்துவமனையில் சிறிது செல்வாக்கு வாய்ந்தவர்.. மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக பணத்தை கட்டச் சொன்னது… என் சேமிப்பில் இருந்து பெரும் தொகையை அட்வான்ஸாக கட்டிவிட்டு என்னுடைய இன்சூரன்ஸ் விபரங்களையும் கொடுத்துவிட்டு வந்தேன். மனிதம் சறுக்குவதை முதலில் கண்டேன்.. என்னிடம் பணம் இருந்தது நான் கட்டி விட்டேன்… பணம் இல்லாதோர் அங்கு வந்தால் என்ன செய்வார்கள் என்று அப்போது நான் யோசிக்கவில்லை. உடனடியாக காஷுவால்டியில் அட்மிட் செய்யப்பட்டு அங்கிருந்த டூட்டி டாக்டர் அப்பாவைப் பரிசோதனை செய்தார்.. அந்த டாக்டர் அவருடைய வேலையை தான் செய்கிறார் என்றாலும் அட்மிட் செய்யப்பட்டு இருப்பவர் ஒரு குடும்பத்தை தாங்கி நிற்கும் தலைவர் என்றும் சுற்றியுள்ளோர் அவரின் பாசத்துக்கு உரியவர்கள் என்றும் பார்க்காது முகத்தில் அறைந்தாற்போல் அவர் கூறியவை…. அவர் உடலில் மட்டுமல்லாமல் மனதிலும் ஊனம் இருப்பது தெரிந்தது.. அங்கு அவரின் தொழில் தர்மம் தொலைத்ததை கண்டேன்.
‘ இவர் இன்னும் அரை மணி நேரம் கூட தாங்க மாட்டார் ‘ என்று கூறியது தான் அது.
ஒரு பெரிய நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருக்கும் நான் எத்தனையோ சந்தர்ப்பங்களை சந்தித்திருக்கிறேன்… ஆனால் இன்று இப்போது கதி கலங்கினேன்.
மூன்றாவது சகோதரர் :
நான் சர்வீசில் இருந்தவரை என்னால் முடிந்தவர்களுக்கு எந்த சமயத்திலும் உதவிகள் செய்தேன்… அதன் பலனாக இப்போது சர்வீஸில் இல்லை என்றாலும் நான் உதவி செய்தவர்கள் எப்போது கேட்டாலும் எனக்கு அவர்களால் முடிந்தவரை எல்லா உதவிகளை செய்தார்கள்… அதுபோல்தான் என் அண்ணனிடம் இருந்து அண்ணன் மகனுக்கு வந்த போன் காலுக்கு பிறகு உடனடியாக என் நண்பரை தொடர்பு கொண்டேன்… அவரும் உடனடியாக மருத்துவமனைக்கு நேரடியாக வருகிறேன் என்றும் எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்றும் எனக்கு ஆறுதல் கூறிவிட்டு அவரும் கிளம்ப நானும் கிளம்பினேன்.. அவருக்கு இருதய சிகிச்சை பிரிவின் தலைவரை நன்றாக தெரியும். அவரை தொடர்பு கொண்டார்… அவரும் குறிப்பிட்ட இடத்திற்கு போன் செய்து என் அண்ணன் உடனடியாக ஐசியூவில் அட்மிட் செய்யப்பட்டார்.
மூன்றாவது சகோதரரின் மகன் :
என் அண்ணன் தன் அப்பாவின் நிலை கண்டு கதிகலங்கி நிற்பதை பார்த்தேன் என் பெரியப்பா என்றுமே உடல்நிலை முடியாமல் படுத்து இருந்து பார்த்ததில்ல….. இன்று பார்க்கிறேன்.. அந்த டாக்டர் கூறியது எவ்வளவு குரூரமானது என்பது இதுபோன்ற சூழ்நிலையில் இருந்தவர்களுக்கு மட்டுமே புரியும்… என் அண்ணன் பெரியப்பாவின் மீது வைத்திருந்த பாசத்தை போலவே நாங்கள் எல்லோரும் மூன்று தம்பிகளின் மகன்களும் மகள்களும் வைத்திருந்தோம்.. அந்த டாக்டரின் ஈட்டி குத்தியது போன்ற பேச்சை உள்வாங்கி வேதனையும் கோபமும் பெறுவதற்கு முன்பே என் அப்பாவின் நண்பர் மூலமாக சீப் டாக்டர் போன் செய்ய உடனடியாக கேஷுவாலிட்டிலிருந்து ஐசியுக்கு மாற்றம் செய்யப்பட்டார்… நாங்கள் செய்வதறியாது வெளியே காத்துக் கொண்டிருந்தோம். ஊரில் இருந்து வந்தது முதல் இடிமேல் இடியாக இருந்தும் இது பேரிடியாக என்னுள் இறங்கியது….
இரண்டாம் சகோதரரின் மகன் :
நான் வொர்க் பிரம் ஹோம் செய்து கொண்டிருக்கும்போது அந்த போன் கால் ஊரிலிருந்து வந்திருந்த என் தம்பியிடம் இருந்து வந்தது…. பெரியப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை நாங்கள் அவர் வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கிறோம் என்று… பேசியது என் சித்தப்பா மகன். எனக்கு அன்றைய வேலை இரவு எட்டு முப்பதுக்கு முடிந்தவுடன் நேராக மருத்துவமனைக்கு சென்றேன். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து என் அண்ணனையும் தம்பியையும் இதுபோன்ற கோலத்தில் பார்த்ததில்லை… பேய் அறைந்தாற்போல் என்று சொல்வார்களே அதுபோல்தான்… அந்த நிமிடத்தில் அவர்களிடமிருந்து கேட்டு தெரிந்த விஷயத்தில் நானே அந்த நிலைமைக்கு தள்ளப்பட்டேன்.
முத்த சகோதரரின் மகள் :
என் அண்ணன் எப்போதுமே வருத்தப்பட்டோ கோபப்பட்டோ என்னிடம் பேசியதே கிடையாது… அன்று அவன் என் அப்பாவின் நிலைமையை பற்றி பதற்றத்துடன் எனக்கு போன் செய்து கூறியபோதே எனக்குள் தொற்றிக் கொண்டது அதே பதற்றம் உடனடியாக கணவருடனும் மகளுடனும் என் கீழ் வீட்டில் இருக்கும் என் சித்தப்பா மகளின் கணவருடனுடம் ஊருக்கு கிளம்பினோம்.. சிறுவயதிலிருந்து இன்றுவரை எந்த ஒரு பெரிய துக்கத்தையும் காணாத நான் ஒட்டுமொத்த துக்கத்தையும் ஒருசேரக் கண்டேன்….. அப்பாவின் மீது எல்லோரும் பாசம் வைத்திருந்தார்கள்.. ஆனால் என்னுடைய பாசம் அவர் மீது வைத்திருந்த அந்த பக்தி…. என்னால் தாங்க முடியவில்லை… இந்த ஒரு நிலையை எந்த ஒரு நொடியும் நான் நினைத்தும் பார்த்ததில்லை… என் அண்ணனின் கோலமும் இரு தம்பிகளின் கோலமும் என் சித்தப்பாவின் முகமும் இதுவே முதல் முறை நான் காண்பது… ஐசியூவில் இருக்கும் அப்பாவின் தற்போது உடல்நிலையை தெரிந்துகொள்ள பதற்றத்துடன் வெளியே காத்துக் கொண்டிருந்தோம்….
மூத்த சகோதரரின் மருமகன் :
என் மாமனார் எனக்கு மாமனாராக மட்டுமில்லாமல் நண்பராகவும் இருந்தார்… என் மனைவி, மைத்துனர் மற்றும் குடும்பமும் துடிப்பதை என்னால் பார்க்க இயலவில்லை….. நல்ல மருத்துவமனையில் இருக்கிறார் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று நம்புகிறேன்.
மூன்றாம் சகோதரரின் மகள் :
ஊரிலிருந்து வந்த அண்ணனுடன் நேரம் கழிக்க வந்த நான் குழந்தைகளை கவனிக்க வீட்டில் இருந்துவிட்டு கணவனை மருத்துவமனைக்கு அனுப்பினேன்…
மூன்றாம் சகோதரரின் மருமகன்:
என்னுடைய பெரிய மாமனாரை எல்லோருக்கும் எவ்வளவு பிடிக்குமோ அவ்வளவு எனக்கும் பிடிக்கும்… நன்றாக பேசுவார் உடல் நிலையை நன்றாக காத்துக் கொள்வார்.. அவருக்கு இந்த நிலைமை என்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்று… சென்ற வாரம் அவரைக் கண்டுதுவர. நான் திருமணம் ஆனது முதல் அவர் நலிந்து படுத்து என்றுமே பார்த்ததில்லை.
மூத்த சகோதரரின் மனைவியின் தம்பி மகன்:
நான் டாக்டர் தான், என் வேலையில் என்றுமே ஏற்படாத வேதனையும் குழப்பமும் இன்று என் மாமாவின் இந்த நிலையைக் கண்டு ஏற்பட்டது… மனதுக்குள் முடிவு செய்துவிட்டேன்.. இவர் உடல்நலம் தேறும்வரை உடன் இருப்பது என்று…
மூத்த சகோதரர் :
லேசாக கண் விழித்து பார்க்கிறேன்… என் வாயிலும் மூக்கிலும் குழாய்கள் செருகபட்டு தனியறையில் படுக்க வைக்கப்பட்டு இருந்தேன்.. சுற்றிலும் சினிமாவில் பார்ப்பது போன்ற மருத்துவமனை உபகரணங்கள்….. எனக்கு நேற்று மாலை மருத்துவமனை வரும்வரை நன்றாக நினைவிருந்தது… கடைசி நினைவு ஒரு டாக்டர் என் மகனிடம் ஏதோ சொல்ல என் மகன் நிலைகுலைந்து என்னை பார்த்ததுதான்… அவர் என்ன கூறினார் எதனால் அவன் என்னை இப்படிப் பார்த்தான் என்று எனக்கு தெரியாது.. நான் நானாக இல்லை என்று மட்டும் புரிந்தது. எனக்கு நோயுற்று படுத்து பழக்கம் இல்லை.. முதல் முறை அதுவும் நான் என்றுமே செல்ல தயங்கும் மருத்துவமனையில்…. கடவுளே ஏன் எனக்கு இந்த சோதனை?
மூத்த சகோதரர் மகன் :
ஐசியூவில் இருந்து டூட்டி டாக்டர் வெளியே வரக் கண்டு அவரை அணுகினேன்… ‘ அபாய நிலை இன்னும் தாண்டவில்லை… ஆனால் வெகு சிறிதளவு முன்னேற்றம் உள்ளது’ என்றார். அந்தப் பேர் அதிர்ச்சியிலும் சிறு நம்பிக்கை பிறந்தது.. சில தினங்கள் அப்பாவின் முன்னேற்றம் நத்தையாக ஊர்ந்தது…. என் தங்கை,தங்கையின் கணவர், இரு தம்பிகள், சித்தப்பாவின் மருமகன் மற்றும் என் மாமாவின் டாக்டர் மகன் எல்லோரும் மாற்றி மாற்றி கவனித்துக்கொள்ள, நான்காம் நாள் காலை நான் சென்று அப்பாவைப் பார்க்கும்போது நேற்று இருந்த அந்த சிறிது தெளிவு இன்று இல்லாதது கண்டு நெற்றியில் கை வைத்துப் பார்த்தேன்.. அவருக்கு காய்ச்சல் அடிக்க கண்டு.. டூட்டி செவிலியரை அழைத்து காண்பிக்க அவர் சொன்ன பதில் என் கோபத்தை தலைக்கேற்றியது…
‘நேற்று இரவு நீங்கள் யாரும் பேராசிட்டம்மல் டேப்லெட்டை வாங்கி வரவில்லை அதனால்தான் நாங்கள் தரவில்லை ‘
மனிதம் இவ்வளவு தரம் தாழ்ந்து அழிவதைக் கண்டு என்னால் பொறுக்க முடியவில்லை.. இது மருத்துவமனையா அல்லது மருந்துக்கு ஒரு மணயா என்று வெறுப்பு தலைக்கேறியது. நான் கோபத்துடன் இதை ரிப்போர்ட் செய்ய கிளம்ப என் சித்தப்பா தடுத்து நிறுத்தினார்.. நீ ஏதாவது சொல்லப்போய் அவர்கள் வேறு விதமாக……. வேண்டாம் உன் அப்பாவிற்கு ஏதாவது நேர்ந்து விடப் போகிறது என்றார்.
மூத்த சகோதரர் :
நான் காய்ச்சல் இருப்பதை உணர்ந்து அதை செவிலியரிடம் கூற ‘உங்கள் ஆட்கள் யாரும் மாத்திரை வாங்கி வரவில்லை அதனால் தர முடியாது’ என்று என்னிடம் கூறினார்… எனக்கு இருந்த உடல் வலியில் இந்த விஷயத்திற்கெல்லாம் நொந்து போக விரும்பவில்லை…..
இதைவிட கொடூரம் இதற்கு மறுநாள் நடந்தது…. இரவு மூன்று மணி இருக்கும் இயற்கையின் உபாதையால் அந்த இரவு டூட்டி நர்ஸிடம் அதைச் சொல்ல, அவர் கூறியது வெறுப்பு கலந்த கோபத்தின் உச்சத்துக்கு என்னை அழைத்துச் சென்றது.. நானிருக்கும் நிலைமை, என் இயலாமை என்னால் ஏதும் செய்ய முடியவில்லை..
” ஆறு மணிக்கு இன்னும் மூன்று மணி நேரம் இருக்கிறது பொறுத்துக் கொள்ளுங்கள்… அடுத்த நர்ஸ் வந்து விடுவார்கள் அவரிடம் சொல்லுங்கள் ” இதைத்தான் அந்த நர்ஸ் என்னிடம் கூறினார்… இதுவே என் இயலாமையின் உச்சத்துக்கு கொண்டு சென்றது என்றால்… அடுத்து அவர் செய்த காரியம் இயலாமை, வெறுப்பு, கோபம் மற்றும் இந்த நிர்கதியில் அவமானம்……
என்னிடம் அதை கூறிவிட்டு அவருடைய செல்போனில் பத்து நிமிடத்திற்கு மேலாக என் காதுபடவே சல்லாபித்ததுதான்.
மூத்த சகோதரரின் மகன் :
தொடர்ச்சியான சீரான முன்னேற்றம் இல்லாததால் இருதயத்தில் ஸ்டெண்ட்ஸ் வைப்பதில் குழப்பம் நீடிக்க காத்திருந்தோம்..
இவ்வளவு பெயர் பெற்ற மருத்துவமனையில் நோயாளிகளை கவனித்து வருபவர்கள் தங்க, ஓய்வெடுக்க ஒரு வசதியும் இல்லாதது ஒரு புறம்… கொடூர வெயிலில் நிழல் இல்லாமல் தவித்தது மறுபுறம்.
இரு நாட்களுக்குப் பிறகு முடிவு செய்து விட்டார்கள் மதியம் ஸ்டென்ட் வைக்கும் சிகிச்சை செய்யலாம் என்று… அந்த நேரமும் வந்தது.. பெரிய டாக்டரே உடனிருந்து செய்வதாக கூறினார்.. அதன்படியே அவர் செய்ய எனக்கு மானிட்டரில் பார்க்க அனுமதி அளித்தார். இரண்டு மணி நேரம் கழித்து ஆப்ரேஷன் வெற்றிகரமாக முடிந்தது என்று அவர் கூற என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் வெளியே வந்து காத்திருந்த எல்லோரிடமும் கூறினேன்…. சிறிது நேரத்தில் அப்பாவை வார்டுக்கு எடுத்து வந்து விட்டார்கள்.. கால் மணி நேரம் கூட இருக்காது வார்டுக்கு வந்து… மருத்துவர்கள் பதைபதைக்க அப்பாவை மறுபடி உள்ளே அழைத்துச் சென்றார்கள்.. எனக்கு சரியாக செய்தி சொல்லவில்லை..
மூத்த சகோதரர் :
எனக்கு ஆபரேஷன் செய்யப் போவதாகக் கூறினார்கள்.. இந்த மரண வேதனையில் இருந்து விடிவு கிடைத்தால் போதும் என்று ஒரு எதிர்பார்ப்புடன் காத்து இருந்தேன்… அந்த நேரமும் வந்தது எனக்கு மயக்க மருந்தும் கொடுத்தார்கள்….
எனக்கு லேசாக நினைவு திரும்பியது ஆனால் கண் திறந்து பார்க்க முடியவில்லை… டாக்டர்கள் பேசிக்கொள்ளும் சத்தம் கேட்டது.. அவர்கள் கூறியது ஒரு சிறிய அதிர்ச்சி ஆனாலும் பரவாயில்லை ஆப்ரேஷன் நன்றாக முடிந்ததாக அவர்கள் கூறியது எனக்கு மன நிம்மதியை தந்தது..
‘ ஐசியூவில் இடமில்லை ஆகையால் நேரடியாக வார்டுக்கு எடுத்துச் செல்லலாம்’ என்று அவர்கள் பேசிக் கொண்டது தான் அந்த சிறிய அதிர்ச்சி!
வார்டுக்கு அழைத்துச் சென்றார்கள்… தூரத்தில் என் குடும்பம் முழுவதும் என் தேர்ச்சியை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன்.. என்னால் பேச இயலவில்லை, ஒரு சிறு புன்னகை மட்டுமே என்னால் முடிந்தது.
ஒரு பத்து நிமிடங்கள் மட்டுமே ஆகியிருக்கும்… என்னால் சரியாக சுவாசிக்க முடியவில்லை வயிற்றின்
மேற்பகுதியில் ஏதோ ஒன்று என்னவென்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை…..தடுமாறினேன்…. உடனடியாக என் தடுமாற்றம் பதற்றம் எல்லாம் டாக்டர்களிடம் தொற்றிக்கொள்ள என்னை மறுபடியும் ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் சென்றார்கள்… ஏதோ முயற்சி செய்ய தொடங்கினார்கள்….
மிகப் பிரம்மாண்டமான, அற்புதமான, அமைதியான, நம்மை அரவணைக்க கூடிய ஒளி எனக்கு தெரிந்தது….. என்னை அழைக்கவும் செய்தது…. அதை நோக்கிப் போக நினைத்தாலும் என் குடும்பத்தை சென்று பார்க்கவே மனம் விரும்பியது…. ஏன் எல்லோரும் கதறி அழுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை…. என் மகனின், மகளின், மனைவியின் கட்டுக்கடங்கா கதறல் எனக்கு ஏதோ நேர்ந்து விட்டது என்று மட்டும் புரிந்தது.. அங்கு எல்லோரையும் பார்த்தேன்… வீட்டில் இருக்கும் என் அம்மாவை மற்றொரு வீட்டில் இருக்கும் என் தம்பியை பார்த்தேன் எங்கோ இருக்கும் கடைசி தம்பியையும் பார்த்தேன் …. எல்லோரையும் ஒரே நேரத்தில் என்னால் எப்படி பார்க்க முடிந்தது என்று புரியவில்லை. காணும் காட்சிகளில் அலைபாய்ந்தேன்…..
நான் :
மேலே விவரிக்கப்பட்ட எல்லா நிகழ்வுகளையும் இடைவிடாத இடைவெளியில் போன் செய்து தெரிந்து கொண்டே இருந்தேன்… மூன்று முறை என் அண்ணனிடம் வீடியோ காலில் பேசினேன்….. தைரியமாக இருப்பதாக என்னிடம் கூறினார்… கடைசி நாளுக்கு முன்னால் வீடியோவில் பேசும் போது மறுநாள் ஆப்பரேஷன் என்றும் எல்லாம் சரியாகப் போய்விடும் என்றும் கூறினார்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்று கூறிய வள்ளலார் பிறந்த மண்ணில் தற்பொழுது மனிதம் தாழ்ந்து மறைவதைக் கண்டு நொந்து கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் நம்மால்……
அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்றும் கூறினர்…. அத்தகைய மனித உயிருக்கு இன்றைய மதிப்பு நம் நாட்டில்………….
நாம் மருத்துவமனைக்கு செல்வதே நம்மை காப்பாற்றிக் கொள்ளத்தான்… அந்த மருத்துவமனையிலேயே அவ்வப்போது தேவைப்படும் மருந்துகளை நம்மையே வாங்கி வரச் சொல்வது அவலத்திலும் அவலம்! மனிதத்தின் சறுக்கல் அங்கேயே தொடங்குகிறது… டூட்டி நேரத்தில் போனில் பேசுவது அதுவும் முக்கியமான காரணமாக இருந்தாலும் பரவாயில்லை நோயாளிகளின் முன்னே அவர்கள் காதுபட சல்லாபிப்பது அனாநாகரீகத்தின் உச்சம்…. தாழ்ந்தது மனிதம் இல்லை இல்லை மறைந்தது ‘மனிதம்’