மரணம் by சிவா.
- melbournesivastori
- Dec 2, 2022
- 6 min read

பிறப்பு இருந்தால் இறப்பு நிச்சயம் என்ற இயற்கையின் நியதி தெரிந்த ஒரே உயிரினம் இந்த பூமியில் மனிதர்கள்… மற்ற கிரகங்களில் அடுத்த நிலைக்குச் சென்ற உயிரினங்கள் எவ்வாறு இருக்கும் என்பது நமக்குத் தெரியாது அதனால் தான் இந்த பூமியில் என்று கூறினேன். நாம் நிறைய நினைக்க நினைக்க அது புரிய புரிய புரியாதது அதிகம் உள்ளது என்று தெரிய வரும்… அந்த அதிகத்தை தெரிந்து கொண்டவன் சித்தன் ஆகிறான். பிரபஞ்சத்தை அடுத்து பிரதானமாக உள்ளது மரணம் தான். ஆறாவது அறிவுள்ள மனிதன் தான் மரணம் நிச்சயம் என்று தெரிந்தும் ஆடாத ஆட்டம் என்ன, சேர்க்காத சொத்து என்ன, காட்டாத கர்வம் என்ன… மனிதர்களின் மனோதத்துவ கோளாறுகளை கூற ஆரம்பித்தால் பொழுது விடிந்து விடும்!
ஆறாவது அறிவை பகுத்தறிவு என்று நம்புகிறோம் … மனிதர்கள் இந்த வாழ்க்கையை பகுத்து அறிந்திருந்தால் இந்த உலகில் ஏன் இவ்வளவு அக்கிரமங்கள், அநியாயங்கள் நடக்கப் போகின்றது? வரலாறு எழுதப்பட்டது முதலே போர் மனிதர்கள் வாழ்க்கையில் இருந்திருக்கிறது.. புரிந்து தெரிந்து தீர்க்க முடியாவிட்டால் பகுத்தறிவு என்பது இருந்தென்ன பயன்? இந்த சமயத்தில் மிகப்பெரிய கேள்வி ஒன்று எழுகிறது.. நம் நாட்டில் மட்டுமல்ல எந்த ஒரு நாட்டின் இதிகாச காலங்களை எடுத்துக் கொண்டாலும் மக்களை நல்வழிப்படுத்த அவதாரம் எடுத்த அவதார புருஷர்களின் காலங்களிலும் போர் இருந்திருக்கிறது… ஏன் போரே இல்லாமல் மக்களை நல்வழிப்படுத்த முடியாதா என்ன? சரி மக்களுக்கு போதிக்க தான் அவ்வாறு ஒரு எடுத்துக்காட்டு என்று வைத்துக் கொண்டாலும் அதன் பிறகும் இன்றுவரை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் போர் நடந்து கொண்டே இருக்கிறது… இதை கடவுளின் போதனையை மனிதர்கள் எடுத்துக் கொள்ளவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா அல்லது பகுத்தறிவு என்பது நாம் நினைப்பதற்கும் மேலான ஒன்றா?
மரணம் என்ற ஒன்று நம்மை என்றுமே நெருங்காது என்ற இறுமாப்புடன் அதோ அமர்ந்திருக்கிறாரே அவர்தான் பழுத்த அரசியல்வாதி வீராசாமி.. அவர் என்று நான் கொடுத்தது அவர் வயதிக்கான மரியாதை… நடத்தைக் காண மரியாதை கொடுத்தால் அவன் இவன் என்ற ஏக வசனத்தில் தான் பேச வேண்டியது இருக்கும்… மரியாதை நிமித்தமாக அவர் என்றே குறிப்பிடுவோம்.
‘களவும் கற்று மற!’ என்பார்கள், இவர் சகல விதமான களவையும் கற்றார் ஆனால் மறப்பதற்கு பதில் தினமும் அந்த அனுபவத்தை பயன்படுத்தி அரசியல் நடத்துகிறார். அவரை அரசியல்வாதி என்று சொல்வதை விட அரசியல் வியாதி என்று சொன்னால் மிகவும் பொருத்தமாக இருக்கும். ஆமாம் அவர் கற்ற களவுகள் வியாதி போல் எங்கும் பரவி விட்டது. மற்றவர்களின் ஒவ்வொரு செய்கையையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார். ஈவு இரக்கம் கிலோ எவ்வளவு விலை என்று கேட்பார்… தன்னலமே தான் சார்ந்த நிலம் என்பது போல் வாழ்க்கையை நடத்துவார். தனது குறுக்கு மூளையினாலும் அதிகாரத்தினாலும் எதிர்த்தவர்கள் எல்லோரையும் அடக்கினார், ஒடுக்கினார்… இரவுகளில் தூங்குவதற்கு முன் தன்னைத்தானே கடவுளுக்கு அடுத்தபடியாக நினைத்துக் கொண்டார்.. நினைத்தது எதையும் சாதிக்க முடியும் என்றும் தன்னை எதிர்க்க எவரும் இல்லை என்று கர்வம் கொண்டார்… அவருக்கு வரலாற்று அறிவு அவ்வளவாக இல்லை, இருந்திருந்தால், வரலாற்றை பின்னோக்கி பார்த்திருந்தால்.. தன்னைப்போல் இறுமாப்பு கொண்டவர்கள் இருந்து, இருந்ததை இழந்து பின்வரும் சமுதாயத்தால் இகழப்பட்டு இருந்தார்கள் என்று தெரிந்திருக்கும்..தெரிந்திருந்தாலும் வீராசாமியின் மனநிலையில் மாற்றம் வந்திருக்குமா என்பது கடவுளுக்கே வெளிச்சம்.
அதோ அந்த மலையின் மேல் இருக்கும் வயல்வெளியின் நடுவே உள்ள சிறிய வீட்டில் இருப்பவர் தான் ஆறுமுகம். நன்றாக நேர்மையாக உழைத்தவர் சம்பாதித்தவர் சம்பாதித்த பெரும் பகுதியை மகனுக்கும் மகளுக்கும் சரிசமமாக பங்கிட்டு விட்டு எஞ்சி இருக்கும் காலங்களை இந்த வீட்டில் கழிக்க குடியேறியவர். மனிதத் தன்மை தான் மனித நேயம் என்று முழுமையாக உணர்ந்தவர். பரவலாக எல்லோரும் நினைப்பது போல மனிதநேயம் என்பது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு காட்டும் பரிவு என்பது போல் தவறாக கட்டமைப்பு பெற்றுள்ளது என்று நம்பியவர். தன்னுடைய எந்த ஒரு செய்கையும் மனிதத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்கும் மேலாக உயிர்மை தன்மை வேண்டும் என்று நினைப்பவர்… வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறிய வள்ளலாரின் ‘எம்மதமும் சம்மதம், எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!’ கோட்பாட்டின்படி தினமும் வாழ்பவர். அவரின் வீட்டைச் சுற்றி எப்போதுமே பறவைகளுக்கு தானியங்கள் போடப்பட்டு இருக்கும் குரங்குகளுக்கு காய்களும் பழங்களும் இருக்கும்.. பழங்களைப் பறித்து உண்ணும் குரங்குகளை என்றுமே அவர் துரத்தியது கிடையாது.. இதுபோல இயற்கையின் மைந்தனாகவே வாழ்ந்தார்.
இதோ சுனாமி பின்னால் துரத்துவது போல் ஓடிக்கொண்டிருக்கும் மக்களின் நடுவே வாழ்பவன் ராஜா. அவன் இந்துவா, இஸ்லாமியரா, கிறித்துவரா? என்பது இக்கதைக்கு தேவையில்லாத ஒன்று..
ராஜா ஒரு அலாதியான பேர்வழி! ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு நான் காண்பதெல்லாம் வெறும் புன்சிரிப்பு! என்ற கண்ணதாசன் போல இவனும் மது அருந்துவான், தான் மது அருந்துபவன் என்று கூறினால் கூட யாரும் நம்ப மறுக்கும் அளவிற்கு என்றுமே நிலைத்தடுமாறியது இல்லை.. வேலைக்கு அதனால் விடுப்பு எடுத்ததும் இல்லை. நேர்மை ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய கட்டாய குணம் என்று நினைப்பவன்.
கடவுளைப் பற்றி ராஜாவின் எண்ணமே வெகு வித்தியாசமானது… சிறுவயதில் இருந்தே மதத்தை நம்பியவன் கிடையாது.. வரலாற்றில் மதத்தாலேயே அதிக மரணங்கள் நிகழ்ந்துள்ளது என்பதை நன்றாக அறிந்திருந்தும் எந்த மதத்தினரிடமும் அவர்களின் நம்பிக்கையை என்றுமே குறை கூறியது இல்லை. ஆனால் கடவுளை நம்புபவன், நேசிப்பவன்.
எந்த இடமும் எந்த நேரமும் கடவுளை வணங்க வேண்டும் என்று நினைத்தால் சற்றும் தயங்காமல் சில நொடிகளாவது மனதிற்குள்ளே வணங்கி விடுவான். எந்த ஒரு தனி ஒருவரும் தான் விரும்பும் கடவுளை வணங்க இடையில் இடைத்தரதர்கள் போல் யாரும் இருக்கத் தேவையில்லை என்று திடமாக நம்பியவன். மத போதனைகளுக்கோ மதப் பிரச்சாரத்திற்கோ என்றுமே செவி சாய்த்ததில்லை.
இதோ ஆர்டீஓ ஆபீஸ் எதிரில் நின்று கொண்டிருப்பவன் மனோகர், மோட்டார் வாகனங்களுக்கு இடைத்தரகன். தான் செய்வது தவறா சரியா என்பதெல்லாம் இவனுக்கு கவலையில்லை.. செய்யும் தொழிலே தெய்வமாக நினைப்பவன். மிக நேர்மையாக அதை செய்பவனும் கூட.. எப்பொழுதும் தன்னால் யாரும் ஏமாறக்கூடாது என்பதை குறிக்கோளாகவே வைத்திருந்தான். கடவுள் நம்பிக்கை இல்லையா என்று தெரியவில்லை ஏனோ இதுவரை கடவுளைப் பற்றி நினைத்ததும் இல்லை. எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவன். எதெல்லாம் கெட்ட பழக்கம் என்று அவரவர்கள் பார்வையை பொறுத்தது என்றாலும்.. பொதுவாக மக்கள் நினைக்கும் கெட்ட பழக்கங்கள் இல்லாதவன்.
மரணம் என்பது எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது, நிச்சயமானது. மரணத்தின் வலி தன்னைச் சுற்றி இருக்கும் மனிதர்களுக்கு மட்டும்தான் என்று இல்லை… பறவைகள் மிருகங்கள் இறந்தாலும் அவைகளை நெருங்கியவைகளுக்கு சில மணி நேரங்களோ சில நாட்களோ இல்லை பல நாட்களோ இருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.. மனிதர்களுக்கு அவரவர்களின் வசதிக்கேற்ப பிரச்சனைகளுக்கு ஏற்ப வலியின் தன்மை, அதன் தொடர்ச்சி வேறுபடுகிறது. பிரச்சனையே இல்லாத ஒருவரின் சொந்தத்தின் இழப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது… பிரச்சனை அதிகம் உள்ளவர்களுக்கு நெருங்கியவர்கள் மரணம் அடைந்தாலும் அந்த வலியிலே, வருத்தத்திலே, சோகத்திலே தொடர்ந்து இருக்க முடியாமல் தன்னைச் சுற்றியுள்ள பிரச்சனைகள் நேரத்தை எடுத்துக் கொள்கிறது. இரும்பு மனத்தை கொண்டவர்களை கூட மரணத்தின் வலி விட்டு வைக்காது… இருந்தும் கொஞ்சம் யோசித்து பாருங்கள்… சில திரைப்படங்களில் வருவது போல தனக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி என்பது போன்ற மனோநிலை, மனோபாவம் எங்கும் பரவி இருக்கிறது.. ஒரு சிறு சதவிகிதமே யார் இறப்பினும் எங்கு இறப்பினும் மரணம் ஒன்றுதான் என்று நினைப்போர். இந்த சிறு சதவீதத்தினர் மனிதத் தன்மையை கடந்து உயிர்மை தன்மையை மதமாக கொண்டவர்கள்.. இவர்களைப் போன்றவர்களை மற்றவர்களால் அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள முடியாது… ஆகையால் இவர்களை பைத்தியக்காரர்கள் என்று பார்ப்போரே அதிகம்… அந்த சிறு கூட்டத்தில் ஒருவன் தான் நம் இந்த கதையின் கதாநாயகன். தமிழில் கதாநாயகன் கதாநாயகி என்று இரு வார்த்தைகள் உண்டு.. அதனால் ஹீரோ என்ற சொல்லை இருபாலருக்கும் நாம் பயன்படுத்தலாம்.. யாரும் அவர் அவருடைய வாழ்க்கையில் ஹீரோக்களே… ஹீரோக்கள் என்றால் புகழ்பெற்றவர்கள் பிரபலமானவர்கள் என்று அல்ல… மற்ற உயிர்களை தன் உயிர் போல மதிக்கும் எல்லோரும் ஹீரோக்களின் ஹீரோ. அவர்தான் நம் கதையின் ஹீரோக்களின் ஹீரோ ரத்தினம்.
ரத்தினம், சிறு வயது முதலே தன்னைச் சுற்றி நடக்கும் மடமைகளை கண்டு வருத்தப்பட்டவன், வெறுப்புற்றவன். கடவுளைப் பற்றி ஏன் இவ்வளவு தவறாக உலகம் புரிந்து கொண்டிருக்கிறது என்று தினம் தினம் யோசிப்பவன்.. அவன் சிந்தனைகளின் உண்மை இருந்தாலும் மற்றவர்களுக்கு அது புரியவில்லை, மற்றவர்கள் புரிந்து கொள்ளும் நிலைமையிலும் இல்லை என்பதை புரிந்து கொண்டவன்.
அவன் சிந்தனைகள் நமக்கு புரிகிறதா என்று பார்ப்போம்……
எல்லோரும் ஒத்த கருத்தில் ஒத்துப் போகின்றனர்… அதாவது எல்லோரையும் படைத்தவர் கடவுளே என்பதில்.. அந்தக் கருத்தையே இன்னும் தீவிரமாக யோசித்தால்.. கடவுள் ஒரு குடும்பத்தலைவரை ( இரு பாலருக்கும் இது பொருந்தும் ) போல, பல குழந்தைகளைப் பெற்ற தாய் தந்தையர் அவர்களிடமிருந்து என்ன எதிர்பார்ப்பர்? தன் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும், நன்னடத்தை இருக்க வேண்டும், வாழ்க்கையில் மேம்பட வேண்டும், நல்வாழ்க்கை அமைத்துக் கொண்டு வாழ வேண்டும்… இவைகளை தானே? இதில் ஓரிரு பிள்ளைகள் அவர்கள் விரும்பிய எதையும் செய்யாமல் தாய் தந்தையை புகழ்வதையே வேலையாகக் கொண்டிருந்தால் அதுவே பெற்றோருக்கு பிடிக்கும் என்று நீங்கள் நினைத்தால் ரத்தினத்தை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்… நம்மைப் படைத்தனர், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமை நன்றாக வாழ்ந்து காட்டுவது மட்டுமே என்று நினைப்பவன்.. ஜாதியும் மதமும் இதற்கு குறுக்கீடு என்று நினைப்பவன். உன்னைப் படைத்த இறைவன் தானே உன் எதிரியையும் படைத்தான், அவ்வாறு இருக்க உன் கடவுள் வேறு அவன் கடவுள் வேறு என்று எப்படி இருக்க முடியும்… கடவுள் என்ற மகா சக்தியை, பிரபஞ்சத்தின் மூலத்தை குறுகிய வட்டத்துக்குள் வைத்து ஒவ்வொரு குழுக்கும் ஒவ்வொரு கடவுள் என்று நினைப்பது பகுத்தறிவின் பழுது என்றே நினைத்தான். இறைவன் தூணிலும் இருப்பார் உன்னிலும் இருப்பார் என்று திடமாக நம்பும்போது ஏன் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று வணங்க வேண்டும் என்று நினைப்பவன்… ஒருமித்த தூய பிரார்த்தனை எங்கு செய்தால் என்ன என்று நினைப்பான். எல்லா உயிர்கள் மேலும் அன்பு செலுத்துவது மட்டுமே நம் வாழ்க்கையின் உயரிய குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன். பிரபஞ்சத்தில் பூமி ஒரு தூசி போன்றது… இதில் எத்தனை நாடுகள், எத்தனை மதங்கள், எத்தனை இனங்கள்? ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு கடவுள் என்றால் இந்தப் பிரபஞ்சத்தில் கோடான கோடி கடவுள்கள் இருக்க வேண்டும். இப்போது ஒரு கேள்வி, அவர்களில் எந்தக் கடவுள் சக்தி வாய்ந்தவர்? இப்படி நினைப்பது ரத்தினத்தின் வழக்கம். இவ்வாறு நாம் எல்லோரும் நினைக்க நினைக்க தான் பிரபஞ்சத்தின் அற்புதங்கள் புரியவரும் அன்பு பெருகும் ஒருவருக்கொருவரை மதிக்க தோன்றும்…
இப்போது உங்களுக்கு இருக்கும் சொத்தை நினைத்துப் பாருங்கள்.. நகைகளை நீங்கள் வாங்கியதாக வைத்துக் கொள்ளலாம். இருக்கும் இடம் முன்பு யாருக்கு சொந்தம்… அதற்கு முன்பு, அதற்கு முன்பு, அதற்கு முன்பு யாருக்கு சொந்தம்? தான் இருந்த இடத்தை சொந்தமாக்கிக் கொண்டது தெரியவரும்… இருக்க இடம் வேண்டும், வசதியாக இருக்க பெரிய இடமாக வேண்டும் அவ்வளவு தானே? அளவுக்கதிகமாக தேவை அதிகமாக சேர்க்க சேர்க்கத்தானே அன்பு, பண்பு மறந்து குறுக்கு வழியில் நாட தோன்றுகிறது? இப்படி ரத்தினம் நினைக்காத நாள் இல்லை..
அமெரிக்காவில் புதிதாக இறங்கிய வெள்ளையர்கள் கொன்று குவிக்காத செவ்விந்தியர்கள் இல்லை, மெக்சிகோவில் இறங்கிய ஸ்பானியர்கள் கொன்று குவிக்காத தென் அமெரிக்க மக்கள் இல்லை… ஆஸ்திரேலியா டாஸ்மேனியாவில் இறங்கிய வெள்ளையர்கள் கொன்று குவிக்காத அபாரஜினர்கள் இல்லை…. இவர்களுக்கெல்லாம் அந்த உரிமையை கொடுத்தது யார்? இதற்கும் கடவுளுக்கும் சம்பந்தமில்லை என்றே வைத்துக் கொள்வோம்.. அப்போது அவரவர்கள் Freewill ( தற்சார்பு நிர்ணயம்) யாருடைய கட்டாயமும், எந்த கட்டுப்பாடும் இல்லாமல் தானாக எடுக்க முடிவு தான் இதற்குக் காரணம். இவைகளை கடவுள் நம்பிக்கை உள்ளோர் செய்வார்களா? அன்பை போதிக்காத மதம் ஏதாவது உண்டா? தான் என்ற அகங்காரம் தவிர இவர்களுக்கு வேறு ஏதாவது இருக்க வாய்ப்பு உண்டா?
நவீன காலத்தில் உங்கள் உயிரே உங்களுக்கு சொந்தமில்லை… கொடுமையான வியாதியில் துன்பப்பட்டாலும் கூட உங்கள் உயிரை நீங்களே மாய்த்துக் கொள்ள முடியாது…. இப்படி இருக்க மற்ற உயிரை பறிக்க இந்த பிரபஞ்சத்தின் இயற்கை அனுமதிக்குமா? ஆனாலும் எங்கும் நடக்கிறது, இன்றும் நடக்கிறது…. ஜாதி கலவரங்கள், மதக் கலவரங்கள், இனக் கலவரங்கள்… போர்கள்.. இவைகள் எல்லாம் நாகரீகம் அடைந்த மனிதர்களின் அடையாளமாக இருக்க முடியாது.. குறிப்பாக சொல்லப் போனால் கடவுளின் மேன்மையை உணர்ந்தவர்கள் செய்யக்கூடிய செயல்கள் அல்ல… மிகவும் ஆழமாக யோசிக்கும் பட்சத்தில் மற்ற எந்த உயிருக்குமே நாம் சொந்தம் கொண்டாட முடியாது.
ஆடு மாடு கோழி வாத்து இவைகளை வளர்க்கிறார்கள்… வளர்த்து விட்டுப் போகட்டும் அது பாசம், அன்பு.. இதையே மறுகோணத்தில் யோசித்துப் பாருங்கள்…. அவைகளை வாங்கியதாலையே வளர்த்ததாலேயே தங்களுக்கே சொந்தம் என்று நினைக்கிறோம்… அதுவரை சரி, வளர்ப்பதாலயே அவைகளை கொலும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது? இதே போன்ற உரிமையை தான் தங்களுக்கு இருப்பதாக வெள்ளையர்கள் பல நூற்றாண்டுக்கு முன் நினைத்தனர்.
இப்படிப்பட்ட பல எண்ணங்களை அன்றாடம் அனைத்து நினைத்து வருந்துபவன் ரத்தினம்.
இதோ இன்று, வீராசாமி, ஆறுமுகம், ராஜா, மனோகர், ரத்தினம் இவர்கள் எல்லோரும் வெவ்வேறு காரணங்களினால் மரணம் அடைந்தனர்.
இறந்த கணத்திலிருந்தே வீரசாமியின் வீட்டு அருகில் நூற்றுக்கணக்கான இல்லை இல்லை ஆயிரக்கணக்கானோர் கூட ஆரம்பித்தனர்.. அங்கு குழுமியிருந்த மீடியாக்களில் தங்கள் முகம் தெரிய படாத பாடுபட்டனர். அன்றைய மாலை செய்தித்தாளிலும் மறுநாள் செய்தித்தாளிலும் மரணச் செய்தி இரங்கலை பக்கம் பக்கமாக வெளியிட போட்டி போட்டனர்… எங்கும் வீராசாமியின் மரணத்தைப் பற்றியே பேச்சு. மறுநாளும் வந்தது…..
அன்று வெளிவந்த எல்லா நாளிதழ்களிலும் வீராசாமியின் இரங்கல் இல்லாத பக்கங்களே இல்லை… பெரும்பாலான யூட்யூபுகளில் எல்லாரும் அழுதனர்.. தொலைக்காட்சிகளும் வீராசாமியின் இல்லாத அருமை பெருமைகளை பறைசாற்றின. வீராசாமியின் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இறுதி ஊர்வலம் பல ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
ஆறுமுகத்தின் இறுதி ஊர்வலம் சுற்றமும் நட்பும் சூழ அமைதியாக நடந்தது.
ராஜாவின் இறுதிப் பயணம் ஒரு சில அலுவலக நண்பர்களின் மூலம் விரைந்து சுடுகாட்டிற்கு சென்றது.
மனோகரின் இறுதிப் பயணம் குடும்பமும் சொந்தமும் ஒரு சில நண்பர்கள் மூலமும் அமைதியாக நடந்தது.
பலவித புரட்சிகர எண்ணங்களோடு இருந்த ரத்தினத்தின் இறுதி ஊர்வலம், அவனை முழுவதுமாக புரிந்து கொண்ட சில நண்பர்களுடனும் அவனுடைய சொந்தங்களுடனும் மிக எளிமையாக நடந்தது.
மரணத்தின் வலியைப் பற்றி பேசினோம்…. அவரவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் அளவுகோல் தான் என்ன? இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கைகளா? செய்தித்தாள்களில் வந்த இரங்கல் செய்திகளின் எண்ணிக்கைகளா? ஊடகங்களில் இறந்தவரை பற்றி வந்த இரங்கல் செய்திகளா? அல்லது இறப்பினால் உண்மையாக வருந்துவோரின் எண்ணிக்கையா?
வீராசாமி வீட்டு அருகில் இருந்து துரத்தி அடிக்கப்பட்டு மாற்று இடம் என்று ஒரு பாழடைந்த கதவு இல்லாத இடத்தில் ரேஷன் அட்டையும் கொடுத்து அந்த வீட்டிற்கு இலக்கமும் கொடுத்து குடியேற்றப்பட்ட ஒரு ஏழையின் தறுதலை மகனுக்கு வீராசாமி மறுபிறவியில் குழந்தையாக பிறந்ததும், ஆறுமுகம், ராஜா, மனோகர், ரத்தினம் இவர்களின் ஆத்மா பூமியை விட்டு அடுத்த நிலைக்குச் சென்றதும் யாருக்கும் தெரியப்போவதில்லை.