மனிதர்களின் தான்மை by சிவா.
- melbournesivastori
- Oct 23, 2023
- 6 min read

இக்கதை சென்ற காலத்தின் கோலத்தின் தொடர்ச்சி….
2027… இன்னும் நான்கே வருடங்கள்.. அது உண்மையாக நடக்கும் பட்சத்தில், நினைக்கவே கதி கலங்குகிறது… கவலை என்பது ஆடு நாற்காலியில் அமர்ந்து ஆடுவது போல்… அங்கேயே ஆடிக் கொண்டிருக்க வேண்டியது தான் எங்கும் செல்லப்போவதில்லை… ஆமாம் கவலைப்படுவதை விட்டுவிட்டு இதிலிருந்து மீண்டு வேறு எதையாவது யோசிக்க வேண்டும்.. வேறு எதை யோசிப்பது…. பயம் கொரோனா வைரஸ் போல உடல் முழுவதும் பரவி இருக்கிறது.. திடீரென பயத்தின் உச்சமான மரண பயம் வந்து விட்டது. ஒட்டு மொத்த உலகமே அழியப் போகிறது, அதை நினைக்கத் தோன்றவில்லை நான் இறக்கப் போகிறேன்… இறந்தால் என்னாகுவேன்.. எங்கு செல்வேன்? இறந்த பிறகு என்னுடைய பெயரை சொல்லப்போவதில்லையே… பூத உடல் என்று தானே சொல்வார்கள்…. என்ன ஒரு முட்டாள்தனமான நினைப்பு… எல்லோரும் இறக்கப் போகிறார்கள் அதில் யார் யாரை பார்த்து பூத உடல் என்று சொல்ல தோன்றும்? எப்படிப்பட்ட மரணம் என்று கண்முன்னே வந்து சென்றது.. தீப்பிழம்பில் கருகி இறக்கப் போகிறோம். என் ஆத்மா எங்கு செல்ல போகிறது? நினைக்கும் போதே நடுக்கமாக இருக்கிறது… சுற்றமும், நட்பும் உலகத்தில் உள்ள ஒட்டும், உறவும் ஏதுமில்லாமல் பிரியப் போகிறோம்… ஒருவேளை எல்லோரும் இறப்புக்குப் பிறகு சந்திப்போமா என்னவோ!? அப்படி சந்திக்கும்போது இதே உடல் இருக்குமா… இல்லை ஆவி வடிவில் இருப்போமா? ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்வோமா? நினைக்க நினைக்க குழப்பமும், பயமும் சிவதாண்டம் ஆடின.
இந்த நாகரிக உலகத்தில் தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ந்தும் என்ன பயன்… இயற்கை வெகுண்டு எழும்போது பெட்டி பாம்பாக அடங்கத்தானே முடிகிறது? ஆமாம் நாகரீகம் என்பது என்ன? நம்மை நாமே நாகரிகம் அடைந்தவர்கள் என்று கூறி கொள்ள முடியுமா? கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன்…
பொறாமை, தான்மை, குரூரம், வஞ்சம், அதிகாரம், பணபலம், தற்புகழ்ச்சி, ஏற்றத்தாழ்வுகள் இவை போதாது என்று ஜாதி, மத, மொழி, இன வேறுபாடுகள். மிகவும் ஆழ்ந்து யோசித்துப் பார்க்கையில் இவைகளுக்கு இரண்டே மூல காரணங்கள் தான். பரந்த மனம், மற்றும் திறந்த மனம் இல்லாது தான்.. பரந்த மனம் எல்லோரையும் சமமாக நடத்த தோன்றும், திறந்த மனம் எவ்வித மாற்றுக் கருத்துக்களையும் செவி சாய்க்கும். சற்றே யோசித்துப் பார்த்தாலும் தெரியும் நாகரீகம் என்ற சொல்லுக்கு நெருக்கத்தில் கூட நாம் வரவில்லை என்று.
சரி தொழில்நுட்பத்திற்கு வருவோம்… ஆமாம் தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமான முன்னேற்றங்களை கண்டிருக்கிறோம், நினைக்கும் போது யாரிடத்திலும் உலகத்தில் எந்த மூலையிலும் தொடர்பு கொண்டு பேசலாம், பார்க்கலாம். 32 வயது என்பது நியாண்டர்தால் மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் முழுமை பெற்ற வயது, அதாவது நூறு வயது போல். இப்போதோ இந்த நவநாகரிக உலகத்தில் அதே 32 வயதில் தான் வாழ்க்கையே தொடங்குகிறது. நோய்களும் அவைகளை சரி செய்ய மருந்துகளும் ஓடுகளத்தில் ஓட்டப்பந்தயத்திற்கு ஓடுவது போல் சரி நிகராக ஓடிக்கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சி பெட்டிகள் நம்மை இழுத்து அமர வைத்து உடல் சோர்வுக்கு வித்திட்டது பெரிதல்ல என்று தோன்றும் அளவிற்கு சிரிக்கள், அலெக்சாக்கள், google கள் நமக்கு இருக்கும் இடத்திலேயே பதில் சொல்வது மட்டுமல்லாமல் நாம் விடும் கட்டளைகளை ஏற்று அதற்கு தொடர்புடைய எல்லா மின்னணு சாதனங்களையும் நாம் எழுந்து சென்று இயக்காதவாறு அவைகளே இயக்குவது நம் உடல் கூறு எந்த வகையில் எல்லாம் பாதிக்கப் போகிறது என்று வர வரத்தான் தெரியப்போகிறது. மனித முன்னேற்றத்திற்கு தான் தொழில்நுட்பம் உதவுகிறது என்று ஏற்றுக் கொண்டாலும் நம்மை அறியாமல் எல்லா தொழில்நுட்பத்திற்கும் நாம் சிறிது சிறிதாக அடிமையாகி இயற்கையிலிருந்து வெகு தூரம் வந்து விட்டோம் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இயற்கையிலிருந்து நாம் விலகி வந்த தூரம் தேவை ஏற்பட்டால் மறுபடி அதே இயற்கைக்கு சென்று அடைய முடியுமா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
' மகேந்திரா வந்து சாப்பிட்டு விட்டு செல் ' என்று அம்மா கத்தின கத்தில் தான் சுய நினைவுக்கு வந்து,
இதோ இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்து விடுகிறேன் என்று கூறினேன்.
அம்மாவிடம் கூறி விடலாமா என்று ஒரு கணம் யோசித்தேன்… இல்லை அலுவலக வேலையாக வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் அப்பா வந்தவுடன் இருவருக்கும் கூறலாமா? இல்லை இருக்கும் நான்கு வருடங்களை நிம்மதியாக கழிக்க அப்படியே விட்டு விடலாமா என்று பல வித யோசனைகள் வந்து சென்றன.
மதிய உணவை உண்டு விட்டு வந்தபின் பலவித யோசனைகள் வந்து சென்றன. ஏன் பாதகமாகவே நினைக்க வேண்டும் சாதகமாக ஏதாவது இருக்கிறதா என்று பார்க்கலாமே என்று தோன்றியது.. அந்த எண்ணம் தோன்றிய உடனே மின்னல் என ஒரு நம்பிக்கை பிறந்தது… ஏன் உலகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் சென்று பிம்பங்களை பார்க்கலாமே, ஏதாவது ஒரு இடம் இதில் பாதிப்பு இல்லாமல் இருக்குமா என்று …
உடனடியாக செயலில் இறங்கினேன். ஆய்வுக்கூடத்திற்கு சென்று 2027 என் பிறந்தநாள் அன்று 25 முக்கிய இடங்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொன்றாக பார்க்க துவங்கினேன்.
முதலில் கனடா நாட்டின் மூன்று நகரங்களை பார்த்தேன் வான்கூவர்,மான்ட்ரியால், டொரன்டோ…. பெருத்த ஏமாற்றம், ஆமாம் மூன்று நகரங்களும் கருகி விட்டு காண கலங்க வைக்கும் காட்சியாக இருந்தன.
அடுத்து யூ எஸ் ஏ வின் ஏழு நகரங்களை தேர்ந்தெடுத்து பார்த்தேன்… அதில் உலகப் பொருளாதாரத்தின் மூலமாக இருந்த நகரமும், நாகரிகத்தின் அடையாளமாக இருந்த நகரமும், தொழில்நுட்பத்தின் உச்சத்தைத் தொட்ட நகரமும், திரைப்படத் துறையில் உலகத்தை ஆட்டி படைத்த ஆலிவுட்டும் அதே விதியின் கோரப் பிடியில் சிக்கி, கருகி செயலற்று மயானமாக இருந்தது வருத்தப்படுவதற்கு வாய்ப்பையும் தரவில்லை.
சிறிது நேரம் சிலையாக அமர்ந்திருந்தேன்.. என் கருவிக்கு ஜார்ஜும் போட வேண்டி இருந்தது….. பிரபஞ்சத்தை விடுவோம், இந்த உலகின் அழிவின் பிரம்ம ரகசியத்தை என் மனதுக்குள்ளேயே பூட்டி வைப்பது மிகவும் ஆபத்தானது என்று புரிகிறது… அதில் என் இதயம் தாங்காமல் சற்றென்று உறைந்து நின்று விடவும் வாய்ப்பு உள்ளது… இருப்பினும் ஏதேனும் நம்பிக்கை இருந்தால் ஒழிய யாரிடமும் இந்த உலகின் அழிவின் ரகசியத்தை பகிர விரும்பவில்லை.
மனதை தளரவிடாமல், மெக்சிகோ மற்றும் தென் அமெரிக்காவின் முக்கிய நகரங்களை பார்த்தேன்… இதுவரை ஏமாற்றமே.. தொடர்ந்து நான் பார்த்த ஐரோப்பா, ஆசிய, ஆஸ்திரேலிய நகரங்களையும் அவைகளின் கொடூர முடிவுகளையும் சொல்ல மனம் வரவில்லை…
இதில் கிழக்கு ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவிலும் காணப்பட்ட நிலை மற்ற இடங்களில் இருந்து கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது….
நம்பிக்கை இன்மையில் மனது வெடித்து விடும் போல் இருந்தது.. அப்படியே சாய்வு நாற்காலியில் சாய்ந்தேன். ஓய்வு எடுக்க முடியவில்லை பதற்றம் தான் அதிகரித்தது. இதற்கு மேலும் என்னால் பதற்றத்தை தணிக்காமல் இருக்க முடியவில்லை… கண்ணாடி குவலையில் ஹென்னசியை ஊற்றி குடித்தேன்… சிறிது நேரத்துக்குப் பிறகு என்னை அறியாமல் உறங்கி விட்டிருக்கிறேன். சில சமயம் மாலை நேரத்தில் உறங்கி எழும்போது நம் மனது ஒரு நிலையில் இருப்பதில்லை… இனம் புரியா பீதி மனதை ஆக்கிரமித்து இருக்கும்.. சாதாரண நிலைமையிலேயே இப்படி என்றால் நான் இருக்கும் நிலையில் மாலை 7 மணி இருக்கும், நான் எழும்போது பீதி உச்சத்தில் இருந்தது.. நான் இதே நிலைமையில் இருந்தால் 2024 ஐ பார்ப்பதே கடினம்… புரிந்தது, ஏதாவது செய்து என் மனதை சமநிலைக்கு கொண்டு வர வேண்டும். குடும்ப டாக்டரின் காரியதரிசிக்கு தொலைபேசியில் அழைத்து சந்திக்க நேரத்தை கேட்டேன். முடியும் என்றால் இப்பொழுதே கிளம்பி வர சொன்னார்கள்.
டாக்டரிடம் போகும் வழியில் யோசித்துக் கொண்டே சென்றேன், பதற்றம் எதனால் என்று அவருக்குச் சொல்வது? இனம் புரியா பயம் என்று சொல்ல வேண்டியதுதான்..
குடும்ப டாக்டர் என்பதால் என்னைப் பற்றி எல்லாமே தெரியும்… கேள்விகளால் துளைத்து எடுத்தார்.. நான் சமாளித்துக் கொண்டு, ஏனோ தெரியவில்லை ஒரு வாரமாக இப்படித்தான் இருக்கிறது என்று சொன்னேன். பதற்றம் வரும் போது மட்டும் போட்டுக்கொள்ள மாத்திரையை கொடுத்தார். ஒரு வாரத்திற்குப் பிறகும் சரியாகவில்லை என்றால் மறுபடி வந்து சந்திக்கும்படி கூறினார்.
வீட்டுக்கு வந்து ஒரு சப்பாத்தி மட்டும் சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்றேன். உறக்கமே வரவில்லை எப்படி வரும்? நெடுநேரம் புரண்டு புரண்டு படுத்துவிட்டு எப்பொழுது உறக்கம் வந்தது என்றே தெரியவில்லை…
அம்மாவின் அழைப்பு மணி சப்தம் கேட்டு எழுந்து பார்த்தபோதுதான் காலை மணி எட்டரை ஆகிவிட்டது என்று தெரிந்தது. இன்னும் அரை மணி நேரத்தில் வருகிறேன் என்று கூறிவிட்டு தயாரானேன். காலை சிற்றுண்டி முடித்து மேலே வர மணி 10 ஆகிவிட்டது… சிந்தனை தடுமாறி தாறுமாறாக ஓடியது… இன்னும் நான்கு வாரங்கள் விடுமுறை உள்ளது… நான்கு வாரங்கள் முடிந்து வேலைக்கு செல்லத்தான் வேண்டுமா? செல்லப் போவதில்லை என்று முடிவெடுத்தால் மற்றவர்களுக்கு என்ன சொல்வது? குழப்பமே மிஞ்சியது. எங்கும் ஓடுவதற்கும் இடமில்லை.. ஒளிவதற்கும் இடமில்லை…
அப்போது சட்டென்று ஒரு யோசனை தோன்றியது… நான் பார்க்காத இடமும் ஒன்று உண்டு என்று. ஆமாம் அண்டார்டிகாவை பற்றி பார்க்கவே இல்லையே…. ஓரிரு சதவீத புத்துணர்ச்சி மட்டுமே இருந்தது அதையும் சென்று பார்த்து விடலாம் என்று, ஆய்வு கூடத்திற்குச் சென்று.. ரேகைகளின் புள்ளி விவரங்களை கொடுத்து இயக்கி காத்திருந்தேன்.
என் கண்களால் நம்ப முடியவில்லை …இது எப்படி சாத்தியம்? மறுபடி சரியான ரேகை புள்ளிகளையும் காலத்தையும் கொடுத்தேனா என்று பார்த்து சரி செய்து மறுபடியும் இயக்கி காத்திருந்தேன்….. அதிர்ச்சி மகிழ்ச்சியிலும் வரும் என்று தெரிந்து கொண்டேன்.. ஆமாம் தெரியும் பிம்பம் அண்டார்டிகாதான்… ஒரு பெரிய வித்தியாசம், பணிப்படர்ந்திருக்கவில்லை மாறாக கீசா பிரமிடை விட மிகப்பெரிய கருப்பு பிரமிட் ஒன்றும் அதைச் சுற்றி இதுவரை மனிதர்களால் கண்டிராத கண்டுபிடிக்கப்படாத மிக மிக பிரம்மாண்டமான கருப்பு கட்டிடங்கள் தெரிந்தது..
எனக்கு சில நிமிடங்கள் என்னவென்றே புரியவில்லை, நான் ஏற்கனவே அண்டார்டிகாவை பற்றி நிறைய படித்து இருந்ததால் சிறிது சிறிதாக புரிய வந்தது…. இந்தப் பிரமிடையும், இந்த கட்டிடங்களையும் தேடித்தான் முதன் முதலில் ஹிட்லரின் நாசி ஜெர்மனியப்படைகளும், பிறகு அமெரிக்க ஐக்கிய நாடுகளும், தொடர்ந்து முக்கிய நாடுகளும் இந்தியா உட்பட ஆராய்ந்தன.. இன்று வரை எந்த நாடும் கண்டுபிடித்த உண்மைகளை மக்களுக்கு தெரிவிக்கவில்லை அதன் ரகசியம் இன்று எனக்குத் தெரிந்தது.
எனக்கு இனம் புரியா மகிழ்ச்சியும் யோசனையும் ஒருங்கே வந்தது.. ஆமாம் 2027 உலகமே அழியும்போது அண்டார்டிகா மட்டும் தப்பித்துள்ளது… மாபெரும் துன்பத்திலும் பேரழிவிலும் ஒரு இன்பம், மக்கள் தப்பித்து வாழ ஒரு இடம் இருக்கிறது.. அதுவும் கொடூர பனிப் படலம் இல்லாமல் வாழ்வதற்கு ஏற்ற இடமாகவும் உடனடியாக தங்குவதற்கு பெரிய கட்டிடங்களும் இருப்பது.
சரி 2027 க்கு பிறகும் வாழலாம்… அதற்கு வழி உள்ளது… அதை எப்படி செயல்படுத்துவது? நான் அறிந்த உண்மைகளை தெரிவித்தால் என்னை பைத்தியக்காரன் என்று நினைப்பார்கள்…. தெரிவிக்காமல் நான் மட்டும் அண்டார்டிகா செல்லவும் முடியாது.. என்ன செய்யப் போகிறோம் என்ற கவலையில் படபடப்பு அதிகமானது… அப்போது தான் நினைவுக்கு வந்தது குடும்ப மருத்துவர் கொடுத்த மாத்திரை. மாத்திரையை உட்கொண்டு சாய்வு நாற்காலியில் அப்படியே சாய்ந்தேன்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மனது அமைதியானது. எப்படி அண்டார்டிகாவுக்கு செல்வது என்பதை பிறகு யோசிக்கலாம், முதலில் நிரந்தரமாக அங்கு சென்று குடியேற வேண்டும் என்றால் என்ன என்ன எடுத்துச் செல்வது என்று திட்டமிட ஆரம்பித்தேன்.
அத்தியாவசிய தேவைகளுக்கு பட்டியலிட்டேன்.
முதலில் உணவு, நிறைய காய்கறிகள், பழ வகைகள், கீரை வகைகளின் விதைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இறைச்சி என்பதை மறந்து விட வேண்டும்… வேண்டுமென்றால் அங்கிருந்து மீன் பிடித்துக் கொள்ளலாம்.
உடை, எவ்வளவுதான் எடுத்துக் கொள்வது.. இயற்கையில் இருந்து எப்படி உடை தயாரிப்பது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.
இருக்க இடத்தைப் பற்றி கவலைப்பட தேவையில்லை ஏனெனில் நல்ல கட்டிடங்கள் உள்ளன.
படிப்பதற்கு நிறைய புத்தகங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்…. என்ன முட்டாள்தனமான யோசனை உலகமே, உயிரினங்களே பெரும்பாலும் அழியப் போகிறது இதில் புத்தகத்தை படிப்பதற்கு ஏது நேரம்? புதிதாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
அத்தியாவசிய மாத்திரைகளை, மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அவைகள் செயலிழக்கும் தேதிக்குப் பிறகு என்ன செய்வது… நினைக்கும் போதே நடுக்கமாக இருந்தது.
டார்ச் லைட்டுகள், மின்விசிறிகள், வெப்ப மின்விசிறிகள், கைப்பேசி, மடிக்கணினி…. வேறேன்ன தேவை? திசை காட்டும் கருவி….. இது தேவையில்லை கைபேசியிலேயே உள்ளது…. அப்போதுதான் சுளீரென்று உரைத்தது…. மின்சாரமும் இருக்கப்போவதில்லை, கைப்பேசி கோபுரங்களும் இருக்கப் போவதில்லை… அப்பொழுதுதான் புரிந்தது இயற்கையின் கோரத்தாண்டவம் மனித இனத்தின் கர்வம் மிகுந்த தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு சாவு மணி அடிக்கப் போகிறது என்று!
கற்கால மனிதர்களைப் போல வாழக் கற்றுக் கொள்ள வேண்டும், மிக மிக முக்கியமாக விவசாயத்தை முழுவதுமாக கற்றுக் கொள்ள வேண்டும். இப்படி எல்லாம் வாழக் கற்றுக் கொண்டு வாழ்ந்து என்னதான் செய்யப் போகிறேன்?! இந்த நினைவு வந்தவுடன் மறுபடியும் சோர்ந்து சாய்வு நாற்காலியில் அமர்ந்தேன்.
எதையோ விட்டு விட்டோமே என்று மனது குழம்பியது… தீவிரமாக யோசித்து பார்த்தேன், கிழக்கு ஐரோப்பாவும் மேற்கு ஆசியாவும் ஏன் வேறுபட்டு காணப்பட்டது என்பது தான் அது…
அது ஏன் என்று கண்டிப்பாக பார்க்க வேண்டும், மறுபடியும் கிழக்கு ஐரோப்பாவின் மத்திய ரேகை புள்ளியை எடுத்துக்கொண்டு 2027 ஜனவரி மாதம் நேரத்தை குறிப்பிட்டு கருவியை இயக்கி பார்த்தேன்.
அதிர்ச்சியாக இருந்தது… உலகம் அழிவதற்கு பல மாதங்களுக்கு முன்பே அழிந்து விட்டிருக்கிறது… 2026 ஜனவரி மாதத்தை குறிப்பிட்டேன்… அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அப்போதும் அதே நிலைமை தான்.
தேதியை குறைத்துக் கொண்டே வந்து பார்த்தேன்…. என் கை கால்கள் உதற ஆரம்பித்து விட்டன.. நடுக்கத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை..
இப்படியும் நடக்குமா? பகுத்தறியும் குணம், ஆறாம் அறிவு மனிதர்களுக்கு உண்டு என்பதே கேலிக்கூத்தானது.
லேசாக மாரடைப்பது போன்று இருந்தது. ஒரு அரை மணி நேரம் இருக்கும் சமாளித்துக்கொண்டு மத்திய கிழக்கு நாடுகளின் மத்திய நாட்டை எடுத்துக்கொண்டு கடைசியாக சோதித்த நாளை எடுத்து கருவியை இயக்கி பார்த்தேன்..
கண்ட காட்சி என் இதயத்தை வெடிக்கச் செய்யும் போல் இருந்தது.. கை கால்கள் நடுங்க…. என்னை மீறி கண்கள் குளமாக நம் இந்தியாவின் ஒரு பகுதியை எடுத்துப் பார்த்தேன்..
மேலும் ஒரு பகுதியைப் பார்த்தேன்….
2027 ல் இயற்கையின் கோர தாண்டவம் என்றால்…. 2024 ல் ஜனவரியில் மனிதர்களின் காட்டுமிராண்டித்தனத்தால், சகிப்புதன்மை இல்லாததால், இந்தியாவில் மீதமிருந்தது, கொஞ்சம் கேரளா, கொஞ்சம் கர்நாடகா, கொஞ்சம் ஆந்திரா, கொஞ்சம் தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு. மீதமிருந்து என்ன பயன்…. அணு கதிர்வீச்சு ஈழத்தையும் தீண்டியிருந்தது.