மனிதம் by சிவா
- melbournesivastori
- Jun 14, 2021
- 4 min read
‘விடியற்காலை மோட்டர் பைக்கில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வருவதே அலாதி’
இதில் எனக்கு எந்த வித சிலிர்ப்பும் வரவில்லை…. ஆனால் இதை தன் முகநூலில் போட்ட பிரசாரத்திற்கு கிட்டத்தட்ட 800 லைக்குகள் அள்ளியது…
பிரசாத் அவனுடைய வட்டத்தில் சோஷியல் நெட்வொர்க் கிங், பள்ளி பருவத்திலேயே தன் குரலினால் பிரபலம் அடைந்தவன் பிரசாத்… குரலை வளர்த்துக்கொண்டு கல்லூரி நாட்களில் மிகப்பிரபலமானான் ஃபேஸ்புக் இன்ஸ்டகிரம் கிங்! அவன் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் போல… அரைமணிக்கு ஒரு முறை அவனுடைய அப்டேட்கள் வந்து கொண்டே இருக்கும்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு அவனுடைய திருமணம் நடந்தது, திருமணம் நடந்த கல்யாண மண்டபத்திற்கு மட்டுமல்லாமல் அது நடந்த தெருவிலும் நண்பர்கள் கூட்டம் அலைமோதியது. பிரசாத்தின் முகநூல் நண்பர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லலாம்…. கிட்டத்தட்ட 4 ஆயிரத்துக்கும் மேல் நண்பர்கள் நண்பர்களுக்கு நண்பர்கள் இருந்தார்கள் அவனுடைய முகநூலில்.
எல்லாமே அரட்டை ஜாலி என்று சொல்லிவிட முடியாது… சென்னை வெள்ளத்தின் போது முக நூலின் வாயிலாக அவன் உதவி செய்தது ஆயிரக்கணக்கான மக்களுக்கு.
உணவு பொட்டலங்களை கொடுப்பதும் சரி, தேவையான பொருட்களை அவர்களுக்கு சென்றடைய வைப்பதும் சரி, அவனுடைய முகநூல் நன்றாகவே வேலை செய்தது.
இந்த உதவிகளில் குறை என்று சொல்ல வேண்டுமென்றால் ஒன்றே ஒன்று சொல்ல வேண்டும் அதாவது அவ்வப்போது உதவிகளின் ஊடே எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு கொண்டே இருப்பான். பெரிய உதவிகளை கணக்கில் கொண்டு இந்த சிறு தவறை புறம்தள்ளி விடலாம்.
பிரசாத்தின் தந்தை பாலகிருஷ்ணன் தபால் தந்தி அலுவலகத்தில் இருந்து இரண்டு வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றவர், மற்ற ஓய்வு பெற்றவர்கள் போல் இல்லாமல் இவருடைய பொழுதுபோக்கே வீட்டுக்கு அருகாமையில் உள்ள மூன்று குடிசைகளில் வசிக்கும் தன் பழைய நண்பர்களுடன் பேசி பொழுதை கழிப்பது தான். அவர்கள் கந்தசாமி, மார்க்கபந்து மற்றும் மூர்த்தி. அதில் கந்தசாமி தினக்கூலி மற்ற இருவரும் நடைபாதை வியாபாரிகள். இவர்கள் மூவரும் பாலகிருஷ்ணன் மீது அபார மதிப்பும் மரியாதையும் வைத்துக்கொண்டிருந்தனர்… அதற்கேற்றாற்போல் பாலகிருஷ்ணனும் அவர்கள் மீது மிகுந்த பாசத்தை வைத்திருந்தார்.. மகனுக்குத் தெரியாமல் அவ்வப்போது அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வந்தார். இந்த நட்பு பிரசாரத்திற்கு ஏளனமாக தெரிந்தது, இருப்பினும் அப்பாவை நேரடியாக எந்த விதத்திலும் குறை சொல்லவில்லை அந்த ஒரு நிகழ்ச்சி நடக்கும் வரை.
பிரசாத் தன் பெண்ணிற்கு மூன்றாவது பிறந்தநாள் விழாவை நட்பு வட்டாரம் பெரிதாக இருந்த காரணத்தால் Hall எடுத்து கொண்டாடினான். பிரசாத் கொடுக்கும் பார்ட்டி என்றாலே நண்பர்களுக்கு அலாதி பிரியம்… சகல சௌகரியங்களையும் செய்து கொடுப்பான். பிறந்தநாள் விழாவும் நன்றாக தொடங்கியது…. நட்பு புடைசூழ ஒரே அமர்க்களமாக நடந்து கேக் வெட்டும் நேரத்தில் நண்பன் ஒருவன் பிரசாத் பார்த்து கேட்டான் ‘உன்னுடைய அப்பா எங்கே ஆளையே காணோமே?’ என்று. அதற்கு பக்கத்தில் இருந்த வேறு ஒரு நண்பன்…. பார்ட்டிக்கு வரும் வழியில் அவரைப் பார்த்தேன் ‘ஒரு சாக்கடை ஓடிக் கொண்டிருக்குமே அதன் மேலிருந்த பாலத்தில் ஒரு பிச்சைக்காரன் உடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்’ என்றான். பிரசாத்துக்கு ஜிவ்வென்று கோபம் வந்தது… அடக்கிக்கொண்டு அவர்கள் இல்லை என்றால் என்ன நாம் அனுபவிப்போம் என்றான்… ஆனால் பிரசாத்துக்கு மட்டுமே தெரியும் அவன் அப்பாவை ஒரு பேச்சுக்கு கூட அழைக்கவில்லை என்று. அன்று முதல் சமயம் கிடைக்கும்போதெல்லாம் சாக்கிட்டு ஏளனமாக அப்பாவை பேச தொடங்கினான்.
ஒரு மாதம் கடந்திருக்கும், கோரோனா வைரஸின் இரண்டாவது அலையின் கோர பிடி தமிழ்நாட்டை தாக்கியது.. பயம் என்பது என்னை கண்டாலே பயந்து ஓடி விடும் என்று முகநூலில் பதிவிட்டவர்கள் எல்லாம் பயந்து நடுங்க ஆரம்பித்தனர்.
இதையே சாக்காக வைத்துக் கொண்டு பாலகிருஷ்ணனை பிரசாத் கட்டுப்படுத்த ஆரம்பித்தான்… சாதாரணமாக வேலையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்று கூறியிருந்தாலும் பரவாயில்லை…..
அவனோ அவரைப்பார்த்து ‘ இந்த வயதான காலத்தில் வெளியே சென்று கொரோனவைரஸை என் வீட்டுக்கு எடுத்து வந்து விடாதீர்கள்… நீங்கள் வாழ்ந்து முடித்தவர்கள் நாங்களோ இப்போதுதான் வாழ்க்கையை தொடங்கியுள்ளோம் உங்கள் பேத்தி வேறு இருக்கிறாள்’ என்று குத்திக் காட்டி குதர்க்கமாக பேசினான். மனமுடைந்த பாலகிருஷ்ணன் லேசாக தலையை ஆட்டிவிட்டு மாடியில் அவர் அறைக்கு சென்றுவிட்டார். பிரசாத் சொல்லவில்லை என்றாலும் அவர் வெளியே சென்று கோரோனா வைரஸ் பரவலை அதிகப்படுத்தவோ எடுத்து வரவோ விரும்பாதவர். பிரசாத் பேச்சில் மனம் நொந்து புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தார்.
ஆனால் சோசியல் கிங்கான பிரசாத் அவ்வப்போது வெளியே சென்று வந்தான். பெரும் தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க தொலைக்காட்சியில் வரும் செய்திகளையும் யூடியூபில் வரும் செய்திகளையும் பார்த்து மனம் நொந்தார்.
அன்று சனிக்கிழமை பொதுவாக பிரசாத்தும் மனைவியும் குழந்தையும் காலை 9 மணிக்கு மேல் தான் எழுந்து வருவார்கள்.. அதற்குள் பாலகிருஷ்ணன் அவருக்கு காப்பி வைத்துக்கொண்டு மற்ற இருவருக்கும் காப்பி போட்டு வைத்துவிட்டு சென்றிருப்பார்… ஆனால் அன்றோ பிரசாத் எழுந்து வரும்போதே மணி பத்தாகி விட்டிருந்தது… பாலகிருஷ்ணன் வந்து சென்ற அடையாளமே தெரியவில்லை காப்பி போட்டதற்கான அடையாளமும் இல்லை.
மணி பத்தரை இருக்கும் பிரசாத்தின் மனைவி பாலகிருஷ்ணருக்கு காலை சிற்றுண்டியாக இட்லி எடுத்துக்கொண்டு சென்று கதவைத் தட்டும்போது உடனே திறக்கும் பாலகிருஷ்ணன் அன்று பலமுறை தட்டியும் திறக்காததால் பிரசாத்தை அழைக்க, அவன் பலமாக கதவை தட்ட.. சில நிமிடங்கள் கழித்து பாலகிருஷ்ணன் கதவை திறந்தார்…. அப்பாவை கண்டு என்றுமே உதாசீனம் செய்யும் பிரசாத் பதறிப் போனான்.
பாலகிருஷ்ணனுக்கு பெரு மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. ஒரே இரவில் ஒருவருக்கு இப்படியும் ஆகுமோ என்று நினைக்கும் போது அவர் தளர்ந்து விட்டிருந்தார்… பிரசாத் உடனடியாக மனைவியையும் குழந்தையும் கீழே அனுப்பிவிட்டு, பாலகிருஷ்ணனை டாக்டரிடம் அழைத்துச் சென்றான். போகும் வழியில் அவனுக்கே தெரியும் தான் கேட்பது சரியில்லை என்று இருப்பினும் கேட்டான் ‘ எனக்கு தெரியாமல் வெளியே எங்கேயாவது சென்று வந்தீர்களா’ என்று. அவர் இல்லை என்று தலையாட்டினார். டாக்டர் அவரைப் பரிசோதித்துவிட்டு கோவிடுக்கான எல்லா சிம்பிட்டம்களும் உள்ளது என்று பரிசோதனை செய்து கொள்ள சொன்னார். அரசாங்க மருத்துவமனையில் பரிசோதனையும் செய்து கொண்டு ஆகிவிட்டது… வீட்டிலேயே மாடி அறையில் தனிமைப்படுத்திக்கொள்ள இரண்டு நாட்களில் பரிசோதனை முடிவு வந்த வர கோவிட் பாசிட்டிவ் உறுதியானது.. பிரசாத்துக்கு புரிந்துவிட்டது அவனால் தான் இந்த தொற்று வீட்டுக்குள் வந்தது என்று. உடனடியாக அவனும் மனைவியும் சென்று பரிசோதித்துக் கொண்டனர். முடிவு வர இருந்த இரு நாட்களில் பயத்தின் உச்சிக்கே சென்றான்.. பாலகிருஷ்ணனை நினைத்து அல்ல அவன் முடிவை நினைத்து… முடிவும் வந்தது மனைவிக்கு நெகட்டிவ் என்றும் அவனுக்கு பாசிட்டிவ் என்றும். பிரசாத் A சிம்பிட்டமட்டிக்காக இருந்திருக்கிறான்.
அவ்வளவுதான் அன்று வாழ்க்கையே முடிந்தது போல் குழப்பமும் பயமும் அவன் மனதை ஆக்கிரமித்தது.
அன்றைய மறுநாள் காலை பிரசாத்தின் மனைவி பாலகிருஷ்ணனுக்கு காலை சிற்றுண்டி எடுத்து மாடிக்குச்செல்ல முன்தினம் வைத்திருந்த உணவே எடுத்துக் கொள்ளாமல் வெளியே இருக்க ஒருவித நடுக்கத்துடன் கதவை தட்ட, பதில் வராமல் போக…. கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தாள். அதிர்ச்சியில் பேய் அறைந்தது போலிருந்தது, ஆமாம் பாலகிருஷ்ணன் இறந்துவிட்டிருந்தார். கலக்கத்துடன் கீழே ஓடி வந்து பிரசாத்திடம் சொல்ல, பிரசாத் அதிர்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு கணம் தயங்கி மறுகணம் நெருங்கிய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவிக்க…. பிறகு முகநூலில் தன் தந்தைக்கும் நேர்ந்ததை அப்டேட் செய்தான். ஒரு மணி நேரம் ஆகியும் ஒரு சிலரே போன் செய்து வர இயலாமைக்கு வருந்துவதாக கூறினர். சாதாரணமாக முகநூலில் சில நிமிடங்களிலேயே நூற்றுக்கணக்கில் பதில் வரும்… இன்றோ 50க்கும் குறைவான பதில்களே… அதுவும் ‘RIP’ மட்டுமே. இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் எந்தவித ஒத்துழைப்பும் யாரிடமிருந்து கிடைக்காததால் கார்ப்பரேஷனுக்கு போன் செய்தான்.
திடீரென்று வந்த யோசனையில், அப்பாவின் போனை எடுத்து கந்தசாமிக்கு செய்தியைச் சொன்னான். தன்னை விட பல மடங்கு கந்தசாமி அதிர்ச்சி அடைந்ததை பிரசாரத்திற்கு நன்றாக தெரிந்தது. சரியாக ஐந்து நிமிடங்களே கந்தசாமி மார்கபந்து மற்றும் மூர்த்தி மூவரும் முக கவசம் அணிந்து வீட்டுக்கு வந்து விட்டனர். ‘என்னப்பா காலையிலேயே இறந்து விட்டிருக்கிறார் எங்களிடம் சொல்ல வேண்டியது தானே? முழு முடக்கத்தால் தான் எங்களை சந்திக்க வில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தோம்…. ‘
என்று கூறியபடியே நடக்க வேண்டியவைகளை கவனித்தனர். கார்ப்பரேஷனில் இருந்து 4 பேர் முழு கவச உடையில் வந்தனர்.. கந்தசாமி பிரசாத்தை பார்த்து ‘நீங்கள் இளம்வயது நீங்கள் வராதீர்கள் நாங்களே பார்த்துக் கொள்கிறோம்’ கூறிவிட்டு கார்ப்பரேஷனில் இருந்து வந்த அந்த நான்கு பேருடன் இந்த மூவரும் சேர்ந்து கடைசிவரை இருந்து இறுதி யாத்திரையை முடித்தனர்.
அந்த மூவரும் முகநூலின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டதை புரிந்துகொண்டான் பிரசாத்.