top of page
Search

மதியா விதியா? By சிவா.

  • melbournesivastori
  • May 9, 2021
  • 4 min read

20 வயதில் போனியம்,அபா,பீஜிஸ் பாடல்களை கேட்டு அர்த்தம் புரியவில்லை என்றாலும் கையை காலை உதறிக்கொண்டு நடனமாட முயற்சிகளை செய்தது இன்று நினைத்தாலும் மனதுக்குள்ளேயே சிரிப்பு தோன்றுகிறது. இந்த 40 களிலும் அதையேதான் செய்து கொண்டிருக்கிறேன்… என்ன… பாட்டுகளுக்கு அர்த்தம் புரிகிறது….. இருப்பினும் இந்தப் பாடல்களில் உள்ள இசையினாலேயேத் தவிர பாடலின் அர்த்தம் புரிந்ததால் அல்ல என்று இப்போது புரிந்து கொண்டேன்…. அதைப் புரிய வைத்தது அன்பாக நான் வளர்க்கும் ஒரு கிளியினால், ஏனென்றால் என்னுடன் சேர்ந்து அதுவும் நடனமாடும்!

நான் முகுந்தன் ஒரு நீரோசர்ஜன்… நானும் என் நண்பன் குமரனும் சிறுவயது முதலே ஒன்றாக வளர்ந்தோம்… ஒன்றாகவே; நன்றாகவே படித்தோம்…. இது மருத்துவக் கல்லூரி வரை தொடர்ந்தது. குமரன் இருதய அறுவை சிகிச்சை நிபுணர், மொனாஷ் ஹாஸ்பிட்டல் மெல்போர்னில் பணிபுரிகிறான்.

சில வருடங்களாக என்னை அழைத்துக் கொண்டே இருந்தான்.. விடுமுறைக்கு வருமாறும், ஊர் பிடித்தால் அங்கேயே குடியேறுமாரும் கேட்டுக்கொண்டே இருந்தான். சென்ற வருடம் கோவிட் அதிகமாக இருந்ததால்… வர இயலாமல் இந்த வருடம் ஏப்ரல் தமிழ் வருடப் பிறப்பிற்கு பின்பு இங்கு வந்தேன். உடன் மனைவி, மகள், மகன். குமரனுக்கும் ஒரு மகன் ஒரு மகள். மனைவிகள் இருவரும் ஒருபுறம் பிள்ளைகள் அனைவரும் ஒருபுறம் இருக்க எனக்கும் குமரனுக்கும் எளிதாக போய் விட்டது வெளியே சென்று வர.

மெல்பன் முழுவதுமாக வைரசை வெளியேற்றி விட்டதால் மாஸ்க் அணிய வேண்டிய அவசியமில்லை. நீங்களெல்லாம் மாஸ்க் அணியாத போதும் நாங்கள் வாழ்நாள் முழுவதும் மாஸ்க் அணிய வேண்டும்… இந்த விடுமுறை நாட்களில் மாஸ்க் அணியாமல் வெளியே செல்வது சங்கடம் இல்லாமல் இருந்தது.

இரு குடும்பமாக எல்லா சுற்றுலா இடங்களுக்கும் சென்று வந்தோம், இரவு நேரங்களில் நானும் குமரனும் மட்டும் தனியாக மெல்போர்ன் நகரில் யாரா நதிக்கரையில் பள்ளி, கல்லூரி நாட்களைப் பற்றி பேசியது புது அனுபவமாகவும் மனதுக்கு நிம்மதியாகவும் இருந்தது.

அந்த சமயத்தில் குமரன் என்னிடம் கூறியது மிகவும் ஆச்சரியத்தை தந்தது… அதாவது ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் ஆண்ட்ரூ பாரஸ்ட் அரசாங்கத்திற்கு கோவிட் வைரஸிலிருந்து மீள உதவியாக 2 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை வழங்கியதை பற்றி கூறியது… நம்ம ஊர் மதிப்பில் கன்வெர்ட் செய்து பார்க்கும்போது மிகவும் மலைப்பாக இருந்தது… அதாவது 11,411 கோடிகள். அவரை விட பெரிய பணக்காரர்கள் நம் நாட்டில் இருக்கிறார்களே எவ்வளவு கொடுத்து இருப்பார்கள் ஒரு நாள் தேட வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

நம்ம ஊரில் தான் அதிக வேலைப்பளு இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்… நான் தினமும் 12லிருந்து 15 மணி நேரம் உழைத்தது போலவே குமரனும் உழைத்துக் கொண்டிருக்கிறான். ஒரு நாள் குமரன் தான் வேலை செய்யும் இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றான். மொனாஷ் கிளேட்டன் ஹாஸ்பிடல். தமிழ்நாட்டில் இருந்து வந்து குடியேறிய 2 அறுவை சிகிச்சை நிபுணர்களை சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அந்த தமிழ் பந்தம் என்னை மீறி சந்தோஷத்தை கொடுத்தது.

அந்த மருத்துவமனையில் தொடக்கத்திலிருந்து டிஸ்சார்ஜ் செய்து வெளியே செல்லும் வரை என்னென்ன ஏற்பாடுகள் உள்ளன என்று விளக்கிக் கூறினான். எல்லா நாடுகளிலும் இருப்பது போலவே இருந்தாலும் எல்லாமே இலவசம் என்று அறியும்போது மலைப்பாக இருந்தது.

லேசாக எனக்கும் இங்கு குடியேறினால் என்ன என்ற எண்ணம் வந்தது. இந்த கருத்தை அன்றிரவு என் மனைவியிடம் சொன்னேன்… உடனே அவள் நான் எதிர்பார்க்காத பதிலை தந்தாள், ‘இந்தக் குளிரிலியா நீங்களே வேண்டுமென்றால் இருந்து கொள்ளுங்கள்’ இந்த அப்பட்டமான படாரென்று பதிலை நான் எதிர்பார்க்கவில்லை…..

பிறகு நிதானமாக யோசித்து பார்த்ததில் தெரிந்தது.. இருவார விடுமுறைக்காக வந்த நாங்கள் இந்தியாவில் கோவிட் கேசஸ் அதிகமாக அதிகமாக ஆஸ்திரேலிய அரசாங்கம் போக்குவரத்தை தடை செய்தது எங்கள் விடுமுறையை நீடிக்க வைத்தது… குடும்பத்தார் அனைவரும் அங்கு இருக்க குழப்பம் கலந்த பயம் அவளை ஆட்கொண்டிருந்தது பிறகுதான் புரிந்தது.

இந்தியா இந்த கோரப் பிடியில் சிக்கிக் கொண்டிருப்பது எதனால் இருக்கும் என்று நானும் குமரனும் ஆராய்ந்து கொண்டிருந்தது பற்றி இப்போது கூறுவது எந்த விதத்திலும் பயன் தரப்போவதில்லை.

குமரனைப் போன்ற ஆட்கள் இந்தியாவின் மருத்துவ ஆலோசகராக இருந்திருக்க வேண்டும்… விதி வலிமையானது என்று நினைத்துக்கொண்டு கடவுளின் மேல் பாரத்தைப் போட வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு விட்டோம்.

இங்கு நாங்கள் தினசரி மீடியாவில் பார்க்கும் செய்திகள் எந்தவிதத்திலும் நிம்மதியை மகிழ்ச்சியைத் தரவில்லை…

வீட்டாரிடமும் நண்பர்களிடமும் பேசும் போது அவர்கள் தெரிவித்தது என்னவென்றால் கடந்த 5 நாட்களாக யாரும் தொலைக்காட்சியை பார்க்காமல் ஒருவித இனம்புரியாத பயத்தில் இருப்பதாக தெரிவித்தது… நானும் குமரனும் ஒரு முடிவுக்கு வந்தோம் இனி வீட்டார் இடமோ இல்லை நண்பர்களிடமோ பேசும்போது எல்லாவித தைரியத்தையும் வரவழைக்கும் பேச்சுக்களே பேசுவது என்று.

இனியும் குமரன் விடுமுறையில் இருக்க முடியாது, இன்று வேலைக்கு சென்றுவிட்டான். என்ன இதுபோல் இங்கு தங்க வேண்டி ஆகிவிட்டதே என்று நினைப்பதை விடுத்து ஏதாவது இந்த கட்டாய விடுமுறை காலத்தில் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

நான் நீரோ சர்ஜன் மட்டுமே மனோதத்துவ நிபுணர் இல்லை.. இருப்பினும் கோவிட் வைரசினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை மீறி மன அழுத்தம் நோயாளிக்கும் நோயாளிகளை சார்ந்தவர்களுக்கும் எப்படி ஏற்படுகிறது என்பதைப் பற்றி ஒரு சிறு கட்டுரை எழுதலாம் என்று துவங்கினேன்…..

அதற்காக ஊரிலுள்ள என்னுடைய நண்பர்களிடம் இந்த இரு வார காலங்களில் என்னென்ன நடந்தது என்று விசாரித்து குறிப்பெடுக்க துவங்கினேன். வட இந்தியாவில் சுனாமி போன்ற கோவிட் பிரச்சினைகள் இருப்பினும் எனக்கு யாரும் நண்பர்கள் அங்கு இல்லை ஆதலால் தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகளைத் தவிர குறிப்பாக அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளை தெரிந்துகொள்ள முடியவில்லை…

இவைகளை வூன்று கவனிக்கும்போது ஒன்று மட்டும் புரிகிறது எல்லாவற்றிற்கும் நம்மவர்களுடைய அஜாக்கிரதை தான் மூல காரணமாக தெரிகிறது… தொடக்கப்புள்ளியாக தொடங்கிய அது இன்று நாட்டில் கணிசமான சதவிகிதம் மன அழுத்தமாக மாறியுள்ளது. அரசாங்கத்திற்கு பயந்து கட்டுக்குள் அடங்கி இருக்கும் நமது தொலைக்காட்சிகளின் மூலம் எந்த ஒரு உண்மை நிலவரங்களையும் கண்டறிய முடியவில்லை…… வெளிநாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து நடுங்கி நொந்து மனதுக்குள் என்னவோ செய்தது….. அந்த சமயத்தில்தான் DW ஜெர்மனிய தொலைக்காட்சியின் தற்போதைய வாரணாசி ஆற்றங்கரையோர நிகழ்வுகளின் காணொளியை பார்க்க நேர்ந்தது.

ஒரு நான்கைந்து நிமிடங்கள் பார்த்திருப்பேன்…. எனக்கு மன அழுத்தம் அதிகமாகியது…. நெஞ்சை பிழிந்தது….. தோள்பட்டையின் மேல் யானை அமர்ந்தது போல் இருந்தது… நடு வயிற்றில் வலி தொடங்கி மெல்போர்ன் குளிரிலும் லேசாக வியர்க்க தொடங்கியது…. எனக்கு புரிந்துவிட்டது ஹார்ட் அட்டாக் என்று. உடனடியாக ஆம்புலன்ஸை அழைக்க என் மனைவியிடம் கூறி.. அவள் குமரன் மனைவியிடம் கூறி ஆம்புலன்சுக்கு தொடர்புகொண்ட அதே சமயத்தில் குமரனுக்கும் செய்தி அனுப்பினார்கள்… சுமார் எட்டு பத்து நிமிடங்கள் இருக்கும் ஆம்புலன்ஸ் வந்தது.. இதற்கிடையில் மனைவி எனக்கு ஒரு ஆஸ்பிரின் கொடுத்தாள்…. வலியின் பிடியில் நான் சிக்கியிருக்க மற்றபடி நடந்தது அரைகுறையாகத்தான் என் மனதுக்குள் படிந்தது.

மொனாஷ் கிளாய்டனில் இருக்கும் மருத்துவமனை… ஆம்புலன்ஸ் திறக்கும்போதே முறை பார்த்துவிட்டேன்.. வலியிலும் மனதின் ஒரு மூலையில் நிம்மதி.

எதற்கும் கவலைப்படாதே நான் இருக்கிறேன் என்று குமரன் கூறியது எங்கோ கூறியது போல் இருந்தது.

என்னவென்றே புரியவில்லை ஆப்ரேஷன் தியேட்டரில் படுக்கையில் என்ன படுக்க வைத்திருந்தார்கள்… அறுவை சிகிச்சையும் நடந்தது போன்றே தெரிந்தது…. ஆனால் ஏன் குமரனும் உடனிருந்த 2 இரண்டு டாக்டர்களும் மூன்று நர்சுகளும் ஒருவித சோக நிலையில் இருந்தார்கள் என்று புரியவில்லை….. அருகிலிருந்த மானிட்டரில் ஹரிசாண்டல் கோடு மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது… பிரஷர்; பல்ஸ்; ஆக்சிஜன் என்ற எந்த ஒரு அளவுகளும் தெரியவில்லை… உடன் இருந்த இரண்டு டாக்டர்களும் குமாரனை தேற்றினார்கள். அவர்கள் கூறியது எனக்கு நன்றாக கேட்டது ‘குமரன் உங்களால் முடிந்த வரை முயற்சி செய்தீர்கள் அதற்குமேல் நம்மிடம் இல்லை எல்லாம் கடவுள் செயல்’ என்றார்கள். இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை ஏன் இவ்வளவு சோகம் என்றும் புரியவில்லை….

திடீரென்று காட்சி மாறியது…. என் முன்னே அற்புதமான ஒரு ஒளி தோன்றியது.

அதன் நடுவே ஒரு உருவம்…உருவமா இல்லை… என்னவென்று கணிக்க முடியவில்லை… ஆனால் என் மனதிற்குள் என் வாழ்நாளில் அனுபவித்திராத அற்புதமான வார்த்தைகளால் விவரிக்க முடியாத அமைதியை உணர்ந்தேன். இந்த உணர்ச்சி பேர் இன்பமாக தெரிந்தது! அந்த உருவம் ஏதோ சொல்ல விழைந்தது… கேட்க தயாரானேன்.. அந்த உருவம் கூறியது காதால் கேட்க முடியவில்லை இருப்பினும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

” நீ செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது, உன் கடமையும் நிறைய இருக்கிறது.. நீ இப்போது இங்கு வந்தது விபத்தாக நடந்துவிட்டது… திரும்பிச்சென்று உனக்காக இருக்கும் பணிகளை செய்”

குமரன் யார் சொல்லியும் கேட்காமல் என் உடலில் மின்சாரம் பாச்சி எழுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தான்….. திடீரென்று மானிட்டரில் எல்லா அளவுகளும் திரும்ப ஆரம்பித்தது…

குமரனை அங்கிருந்த எல்லோரும் கட்டிப்பிடித்து சக்ஸஸ் சக்ஸஸ் என்று கூக்குரலிட்டனர்! எனக்கு வலி இருப்பினும் கண்ணை திறந்து குமரனை பார்த்து கேட்டேன் ஏன் சோகமாக இருந்தாய் சிறிது நேரத்திற்கு முன்பு என்று. அவன் கண்களில் நீர் துளிர்த்தது… பிறகு சொல்கிறேன் என்றான்.

மருத்துவமனையில் இருந்து குமரன் வீட்டிற்கு வந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது… குடும்பத்தாரை விட்டு குமரன் உடன் தனியாக இருக்கும் சந்தர்ப்பத்தில் அவனை பார்த்து கேட்டேன், “கடவுள் நம்பிக்கையற்ற எனக்கு ஏன் இந்த நிகழ்ச்சி நடந்தது? நான் கண்ட அந்த உருவம் கடவுளா?”

குமரணுக்கோ ஒரே குழப்பம்…. தன் திறமையினால் தான் முகுந்தனை காப்பாற்றினோம் என்று நினைத்துக்கொண்டுயிருக்கும் நிலையில், முகுந்தன் கேட்ட கேள்வியில்… ஒருவேளை இது விதியோ என்று….

bottom of page