top of page
Search

மண்ணுலக கடவுள்கள். by சிவா.

  • melbournesivastori
  • Feb 12, 2022
  • 7 min read

மண்ணுலக கடவுள்கள்.

திரு கிரகாம் ஹான்காக் ஒரு அற்புதமான சரித்திர ஆராய்ச்சியாளர். அக்குவேறு ஆணிவேராக நிறைய சரித்திர அகழ்வாராய்ச்சிகளை ஆராய்ந்து அதிலுள்ள பிழைகளை அழுத்தம் திருத்தமாக தைரியமாக மக்களுக்குத் தெரிவித்தவர். அவர் எழுதிய ‘பிங்கர் பிரிண்ட்ஸ் ஆப் தி காட்ஸ்’ முதல் சென்ற வருடம் எழுதிய ‘அமெரிக்கா before’ வரை இவரின் சமரசம் இல்லாத கருத்துக்கள், அவரின் எழுத்துக்கள், பேட்டிகள் ஒவ்வொன்றிலும் பதிந்திருக்கும். இவருக்கும் நமக்கும் ஒரு பந்தம் உள்ளது… ஆம் இவருடைய மனைவி ஒரு மலேசிய தமிழ் பெண்மணி பெயர் சாந்தா.. திருமதி சாந்தாவின் பங்களிப்பு அவரின் புத்தகங்களில் உள்ள போட்டோக்கள் எல்லாவற்றிலும் பிரதிபலிக்கும்… ஆம் அவர் ஒரு புகைப்படக் கலைஞர்.

நம் இனத்தின், மொழியின் வரலாற்றை பின்நோக்கி பார்த்தால் நிறைய மறைமுக துரோகங்களும், தொன்மையை சிதைக்க முயன்று இருப்பதும் தெரியவருகிறது …. இது போதாதென்று ஆய்வாளர்களுக்கு முட்டுக்கட்டைகள் கூட…. இன, மொழி ஆய்வு செய்வதற்கு முட்டுக்கட்டை போடுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதற்கு சமமான துரோகம் என்றே நினைக்கத் தோன்றுகிறது.. இதை ஏனோ தானோ என்று நினைக்கவில்லை… மேலே குறிப்பிட்ட அற்புதமான சரித்திர ஆய்வாளர் திரு கிரகாம் ஹான்காக் இதை வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.. உலகம் முழுவதும் ஆய்வு செய்த அவர் மாமல்லபுரத்து கடற்பகுதியில் ஆய்வை மேற்கொள்ள எவ்வளவு முயன்றும் அனுமதி கிடைக்காதது இத்தகைய எண்ணம் எனக்குள் வர காரணமாகியது..அவரின் கருத்துக்களும் அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளும் எக்காலமும் போற்ற கூடியவை…. எகிப்தை பற்றி அவர் எடுத்து வைத்த சான்றுகளை மறுக்க முடியாமல் திண்டாடிய அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் என்று பல்கலைக்கழகங்களால் உறுதி செய்யப்பட்டவர்களால் பெரிதும் தூற்றப்பட்டார்…. இது இந்தக் காலக்கட்டத்தில் எல்லா நாடுகளிலும் சர்வ சாதாரணமாக நடக்கின்றது…. திறந்த மனப்பான்மை இல்லாமல் தாங்கள் ஏற்றுக்கொண்ட கருத்துக்கு மாற்றுக்கருத்தின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட போகிறதோ என்ற பதட்டதில் மாற்றுக் கருத்தை வைப்பவர்களை கருத்துகான விவாதம் இல்லாமல் தனிமனித அடக்கு முறையைக் கையாண்டு அடக்க நினைப்பது…. ஏனோ இவைகளையெல்லாம் நினைத்து கோபபடுவதற்கு பதிலாக இயலாமையின் உச்சத்தில் வருத்தம் தான் மேலோங்கி உள்ளது…. இது ஒரு தனிமனிதனின் கையாலாகாத்தனம். கிரகாம் ஹான்காக்கின் தமிழ் மனைவியின் பங்களிப்பும் மிக முக்கியம்… அவரின் ஆராய்ச்சியின்; அகழ்வாராய்ச்சியின் ஒவ்வொரு தடயங்களையும் புகைப்படமாக எடுத்து பதித்து பகிர்வது அவருடைய முக்கியமான வேலை.. அவரும் போற்றுதலுக்குரியவரே!

ஐந்தரை அடி முதல் 6 அடி வரை உள்ள மக்கள் கூட்டத்தில் ஒருவன் 7 அடி உயரம் இருந்தால், காலத்தின் கட்டாயம் அவனை கூண் போட செய்துவிடும்… வாழ்க்கைக் கோலத்தின் கூத்தும் இதேதான்… ஊழல் மிகுந்த சமுதாயத்தில் ஒருவன் நல்லவனாக இருக்கும் பட்சத்தில் அவனை சமரசம் செய்து கொள்ள சமுதாயத்தால் தள்ளப்படுவான்.

இதுவரை நான் கூறியது இனி நான் கூறப்போவதற்க்கு சம்பந்தமுடையதா என்று தெரியவில்லை….

அன்று சனிக்கிழமை தாமதமாக எழுந்து சோம்பலாக தேனீர் தயாரித்துக் கொண்டு தேனீர் கோப்பையுடன் பின்புறத் தோட்டத்தில் அமர்ந்து பருக சென்றேன். தோட்டக்கலையில் அதிக ஆர்வம் இருந்ததால் அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் தோட்டத்திற்குச் செல்வேன். காய்கறிகளைப் பயிரிட ரைஸ்ட்பெட் எனப்படும் உயர்த்தப்பட்ட நான்கு பாத்திகள் கட்டி இருந்தேன்.. அவைகள் எல்லாவற்றிலும் விதவிதமான கீரைகள் காய்கறிகளை முடிந்தவரை ரசாயனம் கலக்காத இயற்கை முறையில் பயிரிட்டேன். இப்போது இருப்பது பெரிய தோட்டம்… எங்கும் என் குழந்தைகள்… சொர்க்கமே இதுதான் என்று எண்ணத்தோன்றும்.

அங்கு அமர்ந்து கொண்டு தேநீர் பருகும்போது தான் சிந்தனைகள் சீறிக் கொண்டு வரும்… அதுபோன்று வந்ததுதான் நான் மேலே கூறியவை.

என் சுற்றமும் நட்பும் கூறுவதுபோல் இவையெல்லாம் தேவையற்ற சிந்தனையோ என்னவோ?!

முன்பொருமுறை இதேபோன்று ஒரு விடுமுறை நாளில் அமர்ந்து தேநீர் பருகிக் கொண்டு இருக்கும்போதுதான் லேசாக வலித்தது.. எங்கு வலித்தது என்பது நான் கூற போவதற்கு முக்கியமல்ல. கடந்த மூன்று நான்கு மாதங்களாகவே இதுபோன்று வலித்தது… இன்று கொஞ்சம் வித்தியாசமான வலி, பெரும் வலியை பொறுத்துக் கொள்ளும் எனக்கு அது கொஞ்சம் வித்தியாசமாக தெரிந்தது நேரம் செல்லச் செல்ல வலி அதிகமாக கிளினிக்குக்கு போன் செய்தேன். நல்ல காலமாக என்னுடைய குடும்ப டாக்டர் இருந்தார் அவரிடம் அப்பாயின்மென்ட்டும் கிடைத்தது. புறப்பட்டுச் சென்றேன். பொறுமையாக கேட்டார்… மூன்று நான்கு மாதங்களாக இந்த வலி இருந்தது என்று கூறியதற்கு கடிந்து கொண்டார். சரி முதலில் முழு ரத்தப்பரிசோதனை உடனடியாக எடுத்துப் பார்த்துவிடலாம் என்று கூறி அதற்கான அறிவுறுத்தல் சீட்டையும் வழங்கினார். எப்போதும் போல கொடுக்கும் சீட்டாக கருதி எடுத்துப் பார்க்கும் போது தான் தெரிந்தது…. அவசரம் என்று அதில் இருந்தது, அதைக் கண்டவுடன் அவரை அண்ணாந்து பார்க்க ஆமாம் உடனடியாக ரத்தப் பரிசோதனை கூடத்திற்கு சென்று கொடுக்கவும்… இன்னும் மூன்று மணி நேரத்திற்குள் முடிவுகள் வந்து விடும் வந்தவுடன் உங்களை அழைக்கிறேன் எங்கும் செல்லாமல் வீட்டில் இருங்கள் என்று கூறியது எனக்குள் என்னமோ செய்தது.

இரத்தப் பரிசோதனைக் கூடத்திற்கு சென்றேன் சீட்டை நீட்டியவுடன் உடனடியாக என்னை அமர்த்தி… ஒரு ட்யூப் இரத்தம் தான் எடுப்பார்கள் என்று நினைத்தால் எட்டு ட்யூப் ரத்தம் எடுத்தார்கள். என்னை நானே தைரியசாலி என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில் 8 ட்யூப் ரத்தம் ஏன் எடுக்கிறார்கள் என்று நினைத்து லேசான பயம் வருவதை உணர்ந்தேன்…. ஆல் த பெஸ்ட் இனி டாக்டர் உங்களை அழைப்பார் என்று கூறி வீட்டுக்கு செல்லலாம் என்றார்கள். வீட்டுக்கு செல்லும் வழியில் தான் நினைத்தேன் என்னென்ன டெஸ்ட் எடுக்கச் சொல்லி டாக்டர் எழுதியிருந்தார் என்று பார்த்து இருந்தால் டாக்டர் நண்பரிடம் செக் பண்ணி இருக்கலாமே என்று தோன்றியது. வீட்டிற்கு வந்தவுடன் வேறு எதுவும் செய்யப் பிடிக்காமல் மௌனமாக அமர்ந்தேன். அந்த மௌனமும் அமைதியும் பிடிக்காமல் டிவியை பார்க்க தொடங்கினேன்… அப்போதுதான் டி20 கிரிக்கெட் மேட்ச் துவங்கியிருந்தது… சிறிது நேரம் என்னை மறந்து பார்க்கத் துவங்கி விறுவிறுப்பாக நடந்த கிரிக்கெட்டில் முழுகி ரத்தம் கொடுத்ததையே மறந்து விட்டிருந்தேன்… வெற்றி பெற இன்னும் 12 பந்துகளே இருந்தது எடுக்கவேண்டிய ரன்களோ இருபத்தி ஒன்று… அப்போது என் மொபைல் அழைக்க எடுத்துப் பேசினேன் டாக்டர் தான் பேசினார்… உடனடியாக என்னை அருகிலிருந்த அரசாங்க மருத்துவமனை அவசர பிரிவுக்கு செல்லச் சொன்னார். எதற்காக என்று பதட்டத்துடன் நான் கேட்க.. அவருக்கு சில சந்தேகங்கள் இருப்பதாகவும் அதை நிவர்த்திக்க கிளினிக்கில் வசதிகள் இல்லை என்றும் அதனால் தான் என்றும் கூறினார். கவலை என்னை தொற்றிக்கொள்ள கிளம்பிச் சென்றேன். சுமார் 15 நிமிடம் கழித்து என்னை அழைத்தார்கள்.. ஒருவித வெறுமையுடன் சென்றேன். நான் சந்தித்த டாக்டர் நடைமுறைக்காக சில கேள்விகள் கேட்டு விட்டு பயப்படும்படியாக ஏதுமில்லை ஒரு எக்ஸ்ரே, ஒரு அல்ட்ரா சவுண்ட் எடுத்துவிட்டு என்னை வீட்டுக்கு அனுப்பி விடுவதாகவும் தேவைப்பட்டால் மறுநாள் அழைப்பதாகவும் கூறினார். அப்பாடா என்றிருந்தது எனக்கு… கவலை மறைந்து லேசாக நம்பிக்கை வந்தது. அவர் கூறிய இரண்டையும் முடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

அந்த 2 ஓவர்கள் மீதமிருந்த கிரிக்கெட் மேட்ச் என்ன ஆகிiற்று என்று பார்க்கக் கூடத் தோன்றவில்லை…. அப்படியே படுக்கையில் சாய்ந்தேன். தூக்கம் வரவில்லை என்னவாக இருக்குமோ என்று நினைக்க ஏதாவது மோசமாக இருந்திருந்தால் என்னை ஏன் மறுபடி வீட்டுக்கு அனுப்பி இருப்பார்கள் என்று நினைக்க என்னை நானே தேற்றிக்கொண்டேன். கவலையுடன் அந்த இரவைக் கழித்தேன்… மறுநாள் காலை சுமார் பத்தரை மணி இருக்கும் மருத்துவமனையில் இருந்து உடனடியாக வரச்சொல்லி எனக்கு அழைப்பு வந்தது… சென்றேன் அமர்ந்தேன்… அழைப்பார்கள் என்று கூறினார்கள்…. என்னமோ ஏதோ என்று ஒவ்வொரு நொடியும் ஒரு நிமிடமாக கழிந்தது… அழைத்தார்கள் அழைத்து டி டு ரூம் நம்பர் ஆறுக்கு செல்லுமாறு பணித்தார்கள். சென்றேன்… அங்கிருந்து பெண்ணிடம் கூறினேன், சற்றுநேரம் காத்திருக்கச் சொன்னார். அப்போதுதான் கவனித்தேன் டாக்டர் ரூமின் கதவினில் அறுவை சிகிச்சை நிபுணர் என்று இருந்தது. தொலைத்திருந்த பயம் தொற்றிகொண்டது….. டாக்டர் அழைத்தார் சென்றேன்.. அல்ட்ராசவுண்டில் எதோ கண்டு பிடித்ததாகவும் அதை உறுதி செய்துகொள்ள மேலும் எம்ஆர்ஐ மற்றும் ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டுமென்றும் ஆகையால் இன்னும் இரண்டு நாட்களுக்கு மருத்துவமனையிலேயே அட்மிட் செய்து கொள்ளப் போவதாகவும் கூறினார். என்ன கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டேன்… அவரும் கூறினார்… அப்படியானால் என்ன என்றும் கேட்டேன்.. அதற்கு அவர் கூறிய பதிலில் என் நெஞ்சம் உறைந்து சுதாரித்துக்கொண்டு எனக்கா இருக்காது என்ற கர்வ எண்ணம் மேலோங்க தலையாட்டிக் கொண்டே வெளியே வந்து அந்தப் பெண்ணிடம் அட்மிட் ஆக வேண்டிய நடைமுறைகளை கேட்டறிந்து அவள் உடனே சென்று அட்மிட்டும் ஆகினேன். இவ்வளவு பரபரப்பில் எனக்கு கவலைப்படக் கூட நேரம் கிடைக்கவில்லை.. மருத்துவமனை படுக்கையில் சாய்ந்தேன்.. சில நிமிடங்களில் ஒரு பெண்மணி வந்து மேலும் மூன்று ட்யூப்களில் ரத்தம் எடுத்துச் சென்றார். சுமார் இரண்டு மணி நேரம் கடந்திருக்கும் ஒரு தலைமை டாக்டருடன் டாக்டர் பட்டாளமே என்னை காண வந்தது…. அப்போதைய என் மனநிலையை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை… வந்தார் சொன்னார்.. அன்று எனக்கு எடுக்க வேண்டிய டெஸ்டுகளுக்கு இடம் கிடைக்கவில்லை என்றும் மறுநாள் எல்லாம் எடுப்பதாகவும் பிறகு பார்க்கலாம் என்றும் ஆல் த பெஸ்ட் கூறி சென்றார். ஆல் த பெஸ்ட் என்ற சொற்றொடர் துக்கத்தையும் வரவழைக்கும் என்று அப்போதுதான் புரிந்து கொண்டேன். அன்றிரவு என் மனது என் கட்டுக்குள்ளேயே இல்லை… தாறுமாறாக ஓடத் துவங்கியது.. மனம் ஒரு குரங்கு என்று கண்ணதாசன் பாடல் நூற்றுக்கு நூறு உண்மை. இன்றைய நிகழ்ச்சிகளை மறந்து மற்றவற்றை நினைக்க முற்பட்டாலும் மறக்க முடியவில்லை…

மருத்துவமனை படுக்கை எனக்கு ஏதுவாக இல்லை… அதிலிருந்த சரி செய்து கொள்ளும் மெக்கானிசம் எனக்கு தெரியவில்லை… மருத்துவமனையில் தங்குவது இது தான் முதல் முறை… இரவு பத்து மணி இருக்கும் இரவு பணி செவிலியர் வந்து ஒருவித கரிசனத்துடன் என்னை கேள்விகள் கேட்டது எனக்கு எந்தவித பாதுகாப்பையும் அமைதியையும் தரவில்லை மாறாக ஏன் இந்த கேள்விகள் எல்லாம் என்னை கேட்க வேண்டும் என்று மனம் உறுத்தியது. விடியற்காலை சுமார் இரண்டு மணிக்குத்தான் தூக்கம் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்… பொதுவாக எல்லா நாட்களிலும் ஆறு மணிக்கு எழுந்து பழக்கப்பட்ட நான் காலை பணிக்கு வந்த செவிலியர் எழுப்பி தான் எழுந்தேன்…. மணி 7 ஆகியிருந்தது… ரத்த அழுத்தம் சர்க்கரை எல்லாம் பரிசோதித்து சென்றார். நிமிடங்கள் இவ்வளவு நிதானமாக ஊர்ந்து செல்லுமா என்று நினைக்கும் அளவிற்கு நேரம் கடத்துவதே பெரும்பாடாக இருந்தது. ஒரு பத்து மணி இருக்கும் வந்து அழைத்துச் சென்றார்கள்… என்னால் நன்றாக நடக்க முடிந்தால் கூட சக்கர நாற்காலியில் அமர வைத்து அழைத்துச் சென்றது மனதில் ஒருவித கிலியை வரவைத்தது.. என்னவோ நடக்கிறத…. நடப்பது நடக்கட்டும் என்று மனதை தேற்றிக்கொண்டு எம்ஆர்ஐ எடுக்கும் அந்த அறைக்கு வந்து சேர்ந்தேன். மனதிற்குள் லேசான நிம்மதி எம்ஆர்ஐ எடுக்கப் போவது ஒரு இந்திய பெண்.. என்னவோ இந்திய பெண்ணாக இருப்பதால் எம்ஆர்ஐ எடுக்கும்போது 50% நன்றாக ஆகிவிடும் என்று முட்டாள்தனமாக நினைத்தேனோ என்னவோ… உலோகம் ஏதாவது இருந்தால் கழட்டி வைத்துவிட்டு ஒரு வெள்ளை அங்கியை மட்டும் உடுத்திக் கொள்ளச் சொன்னார்கள்… உடுத்திக்கொண்டு எம்ஆர்ஐ மிஷின் குகைக்குள் சென்றேன்… முதல் முறை.. தொடர்ந்தார் போல் அரை மணி நேரம் டங்கு டங்கு டங்கு என்று அடித்து மில்லி மீட்டர் மில்லி மீட்டராக நகர்ந்து ஒருவழியாக முடிந்தது. சோர்வுடன் அந்தப் பெண்ணிற்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பினேன்.. அந்தப் பெண்ணும் ஆல் தி பெஸ்ட் சொன்னது எனக்கு கிலியை தான் உண்டாக்கியது.

என் படுக்கைக்கு வந்து படுத்து அரை மணி நேரம் கூட ஆகியிருக்காது.. மறுபடியும் வந்து அழைத்தார்கள், அழைத்துச் சென்றார்கள். இந்த முறை எவ்வளவு நேரம் ஆகுமோ என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது ஒரு இன்ஜக்ஷன் போட்டுவிட்டு இன்னும் மூன்று மணி நேரம் கழித்து வரச் சொல்லிவிட்டு அனுப்பி விட்டார்கள். அப்போது எனக்கு தெரியாது என்ன இன்ஜக்க்ஷன் போட்டார்கள் என்று. வரும்போது டூட்டியில் இருந்த செவிலியர் இடம் கேட்டேன் ‘காண்ட்ராஸ்ட்’ என்று சொன்னார்… புரியவில்லை.. வந்து படுக்கையில் ஓய்வு எடுத்தேன். நினைவுகள் இருட்டில் அமைதியை தேடி அலைந்தது.. கல்லூரி நாட்களில் எதற்கும் அஞ்சாதவன் போல் நான் நடந்தது நினைவிற்கு வந்து என்னை நானே தேற்றிக் கொள்வதற்கு பதிலாக என் பயத்தை கண்டு தூற்றிக் கொண்டேன்.

மூன்று மணி நேரம் கழித்து அழைத்துச் சென்றார்கள் வேறொரு மிஷின் சுமார் 15 நிமிடங்கள்… எல்லாம் முடிந்தது செல்லலாம் என்றார்கள், வந்தேன் படுக்கைக்கு… என்னதான் நடக்கிறது எனக்கு என்று மாலை உலா வரும் டாக்டரிடம் கேட்க உறுதி பூண்டேன். தலைமை டாக்டர் பட்டாளமாக உலாவும் வந்தார்… கேட்டேன், ரிப்போர்ட்டுகள் வந்தபிறகுதான் சொல்ல முடியும் நாளை காலை வரை பொறுத்திரு என்றார். இரண்டாம் இரவு தேர்வுக்கு செல்லும் அரையும் குறையுமாக படித்த மாணவன் போல் ஒருவித பதட்டத்தோடு கழிந்தது… சுமார் பதினோரு மணி இருக்கும், டூட்டியில் இருந்த செவிலியர் நான் இன்னும் சிறிது நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட போவதாகவும் தயாராக இருக்கும்படியும் சொன்னார். மனம் ஒரு கணம் துள்ளி குதித்தது அப்பாடா எல்லாம் நன்றாக முடிந்தது என்று. பிறகு ஞாபகம் வந்து கேட்டேன் அப்படி என்றால் ரிப்போர்ட் எல்லாம் கிளியர் தானே என்று….. அதற்கு செவிலியர் ஒரு கணம் தயங்கி இன்னும் சிறிது நேரத்தில் டாக்டர் வந்து உங்களிடம் பேசுவார் என்று பூடகமாக கூறிச் சென்றார்.. வந்த மகிழ்ச்சி நீர்க்குமிழி போல அந்தக் கணமே மறைந்தது. டாக்டர் வரும்வரை அந்த அரைமணி நேரம் ஆடித்தான் போனேன்.

பெரிய பட்டாளத்துடன் எப்போதும் வரும் டாக்டர் அப்போது தனியாக வந்தார்…. அந்த கண நேரம் மனதில் குழப்பம் தோன்றி மறைய மறுத்தது….

 எப்போதும் நின்று கொண்டே பேசும் அவர் அருகில் இருந்த நாற்காலியை இழுத்து என்னருகில் அமர்ந்ததும்… குழப்பம் பயமாக உருமாறியது.. எப்படி இருக்கிறாய் என்று கேட்டுக்கொண்டே வலது கையைப் பிடித்தார்… நான் குழப்பத்துடன் ‘நாட் பேட் எனிதிங் இம்பார்டன்ட் டாக்டர்’ என்று கேட்டேன். உனக்கு தெரிந்திருக்கும் இன்று நீ டிஸ்சார்ஜ் ஆகப் போகிறாய்.. ஆம் என்று தலையை ஆட்டினேன். இந்த மருத்துவமனையில் உனக்கு சிகிச்சை தர வசதிகள் இல்லை, ஏற்கனவே உன்னை போன்றோர்க்கு  சிகிச்சை தர உள்ள பிரத்தியேக மருத்துவமனையை தொடர்புகொண்டு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துவிட்டோம், நீ இன்று வீட்டிற்கு சென்றுவிட்டு நாளை காலை 10 மணிக்கு அந்த மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றார்…. எனக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை…. எனக்கு அப்போது இருந்தது என்ன உணர்வு என்றே தெரியவில்லை.. எனக்கு என்ன டாக்டர் என்று கேட்டேன்.

அவர் சுற்றி விளக்கவில்லை, நேரடியாக போட்டு உடைத்தார்… உனக்கு மெட்டா ஸ்டேட் புற்றுநோய் என்று அவர் சொல்ல… அந்த கணத்திலேயே நான் உயிரற்றவன் ஆனேன்… நாக்கு குழற ஆரம்பித்தது.. நான் என்ன கேட்டேன் என்றே தெரியவில்லை அவர் கூறினார்… நீ மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பே வந்திருக்க வேண்டும் இப்போது புற்றுநோய் முழுவதுமாக பரவி விட்டிருக்கிறது.. புற்றுநோய்க்காக உள்ள மருத்துவமனைக்கு உன்னுடைய ரெக்கார்ட்ஸ் அனைத்தும் அனுப்பி விட்டோம் நாளை காலை 10 மணிக்கு அப்பாயின்மென்ட்டும் ஏற்பாடு செய்துவிட்டோம்.. இனி அவர்கள் உனக்கு சிகிச்சை அளிப்பார்கள் என்றார். என்னை மீறி கண்களில் நீர்வீழ்ச்சி போல் கண்ணீர் வந்தது.. பேச முடியவில்லை… அவர் ஆறுதலாக தட்டிக் கொடுத்தார்.. ஒரே ஒரு கேள்வி கேட்டேன், அங்கு கொடுக்க போகும் சிகிச்சை பலன் அளிக்குமா? சாரி என்ற ஒற்றைச் சொல்லே அவர் கூறினார். தைரியமா அல்லது விரக்தியா என்று தெரியவில்லை… எவ்வளவு நாள் உயிரோடு இருப்பேன் என்று கேட்டேன். என்னால் சரியாக சொல்ல முடியவில்லை.. மூன்று மாதத்திலிருந்து ஆறு மாதத்திற்குள்… என்று முடிக்காமலே விட்டார். அதன் பிறகு நடந்தது அனிச்சை செயலாகவே நடந்தது… வீட்டை நோக்கி கிளம்பினேன்.

மருத்துவமனை வெளியே வந்தவுடன் எதிரே ஒருவர் தன்னுடைய வளர்ப்பு நாயை வாக்கிங் அழைத்துக்கொண்டு செல்ல… அடுத்த பிறவியில் நான் அந்த நாயாக பிறப்பேனோ? சிறுவயதில் நான் கல்லால் அடித்து அடிப்பட்ட அந்த நாயக பிறப்பேனோ? எலி தொல்லையில் இருந்து போது சென்ற மாதம் நான் விஷம் வைத்துக் கொன்ற மூன்று எலிகளில் ஒன்றாக பிறப்பெனோ? கொளுத்தும் அக்னி வெயிலில் பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டை தண்டுவடத்தில் வைத்தது போலிருந்தது… இல்லை அண்டார்டிகா குளிரில் தண்டுவடமே உறைந்தது போலிருந்தது…. ஓரிரு அடி எடுத்து வைக்கவே யானை பலம் தேவைப்பட்டது… எப்படித்தான் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தேனோ தெரியவில்லை .. இன்னும் இருக்கும் மூன்று மாதங்களை எப்படியெல்லாம் கழிக்க வேண்டும் என்று மின்னல் வேகத்தில் காட்சிகள் வந்து மறைந்தது.. நான் என்னவெல்லாம் யார் யாருக்கு எப்படி செய்ய வேண்டும் என்றும் தோன்றி மறைந்தது. ஆச்சரியப்படத்தக்க வகையில் அழுகை நின்றுவிட்டது… ஏதோ தீர்மானம் மனதிற்கு வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.. இறப்பை எதிர்கொள்ள தயாரானேன். முருகரை நினைத்தேன்.. முருகா உன்னை காண வந்து கொண்டிருக்கிறேன், அந்தக் கணத்தில் நான் என் வாழ்க்கையில் நல்லவை தான் செய்திருக்கிறேன் என்று எனக்கு நானே முடிவு செய்து விட்டேன். எப்படியோ வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்.. 4 மாதத்திற்கு முன்பு நான் வாங்கிய டொயோட்டா காரின் சீட்டுகளின் லெதர் வாசனை கூட இன்னும் குறையவில்லை.. அதை இன்னும் மூன்று மாதத்திற்கு மேல் அனுபவிக்க முடியாது என்ற எண்ணமே நெஞ்சம் வெடித்து விடும் போல் இருந்தது, வாங்கின கேனன் 5D கேமராவில் இன்னும் 1000 போட்டோக்கள் கூட எடுக்கவில்லை… எவ்வளவோ இடங்களுக்குச் சென்று எவ்வளவோ போட்டோக்கள் எடுக்க வேண்டுமென்ற திட்டமெல்லாம் நினைவிலேயே சுக்கு நூறாக வெடித்து சிதறியது…. வீட்டில் திரும்பின பக்கமெல்லாம் காணும் இடமெல்லாம் காணாமல் போகப் போகிறது என்ற எண்ணமே நெஞ்சம் சுருங்கி சுருங்கி உறைவது போல் இருந்தது. என்னை மீறி கலங்கிய கண்களுடன் ஒரு யானையின் எடை நெஞ்சத்தின் மீது இருக்கும் பாரத்தில் வீட்டின் பல இடங்களை பைத்தியக்காரன் போல் தொட்டு பார்த்தேன்… இவைகளையெல்லாம் விட்டுச் செல்லப் போகிறேன் என்று நினைக்கும் தருவாயில் தான் என்னையறியாமல் எவ்வளவு ஆசை வைத்திருந்தேன் என்று புரிந்தது.

திடீரென்று என் மீது என் செல்ல பறவை வந்து அமர சுயநினைவுக்கு வந்தேன்…. என் தோட்டம் முழுவதுமே பறவைகள் சரணாலயம், நான் வளர்ப்பதுவும் உணவைத்தேடி; என்னை நாடி தினமும் வருபவைகளுக்கும் …… மேற்கூறியவை நிகழ்ந்து எட்டு வருடங்கள் கடந்து விட்டன என்று நினைக்கும் போதே நிலையற்ற இந்த வாழ்க்கையில் வாழ்வை; வாழ்க்கையை பற்றி நிலையான பதில் யாரிடமும் இல்லை என்பதே நிதர்சனம் என்று புரிந்து கொண்டேன்.

bottom of page