முடிவு By சிவா.
- melbournesivastori
- Feb 18, 2023
- 6 min read

தன்னுடைய காலை நடை பயிற்சிக்கு மிடுக்காக கிளம்பி சென்றார் மாவேல். எதிர் வீட்டில் அமர்ந்திருந்த இளைஞன் அருகில் அமர்ந்திருந்த மற்ற இளைஞனைப் பார்த்து கேட்டான், ‘பிரபு எதிர் வீட்டில் இருந்து தினமும் காலை 6 மணிக்கு ஒருவர் கிளம்பி செல்கிறாரே யார் அவர்?’ ‘ ஓ உனக்கு தெரியாதா நவீன், அவர்தான் பிரபல எழுத்தாளர் மாவேல்’ ‘ ஓ அவரா இவர்? அவரை சந்திக்க முடியுமா?’ ‘ மாலை சென்று அவரைக் கேட்கிறேன் ‘ ‘ என்ன அற்புதமான எழுத்துக்கள் அவருடையது…. அவரின் எழுத்துக்களை படிக்கும் போது தான் தமிழனாக பிறந்தது எவ்வளவு பெருமை என்று கருத தோன்றுகிறது…’ ‘ ஆமாம் நவீன், அற்புதமான எழுத்துக்கள்…’ ‘ அவரது குடும்பம் பெரிதா?’ ‘ இல்லை அவர் தனி மனிதர், எப்போதும் தனிமையை விரும்புபவர்… அவர் மட்டும்தான் வீட்டில் உள்ளார் ‘ ‘ ஏன் அவருக்கு குடும்பம் இல்லையா?’ ‘தெரியாது, நாங்கள் இந்த வீட்டுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிறது அதற்கு முன்பிருந்தே அவர் இருக்கிறார் ‘ ‘ அவர் எழுத்தில் அத்தனை பண்புகளையும் தெறிக்க விடுகிறாரே… அதனால் நினைத்தேன் அவர் குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்று ‘ மாவேல் ஒரு சிறந்த எழுத்தாளர்.. அவருடைய சமூக நாவல்கள் உலகத் தமிழ் உள்ளங்களை பல நாள் உலுக்கி உள்ளது… உணர்ச்சி பூர்வமான சமூக சிறுகதைகள், சிறுகதைகளாக இருந்தாலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவை.. அவரைப் பற்றிய செய்திகள் யாருக்கும் தெரியாது ஆனால் அவரின் எழுத்தை தெரியாத தமிழ் உள்ளங்கள் யாரும் இருக்க முடியாது. அவருடைய புத்தகங்கள் பலமுறை உச்சத்தை தொட்டன விற்பனையில். காதலைப் பற்றி அவர் எழுதிய ‘காதலின் நிறம்’ நாவலை படித்து பண்பட்ட காதலர்கள் ஏராளம்.. சமூக அக்கறை கொண்ட அவரின் நாவல் ‘நான் நீ!’ ஒரு புரட்சியை கல்லூரி மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை ஏற்படுத்தியது. விவசாயத்தைப் பற்றி அவர் எழுதிய ‘அரிசியல்’ பல இளைஞர்களை விவசாயத்தை நோக்கி திரும்ப வைத்தது.. அவரின் ‘கலாச்சார சீரழிவு’ எல்லோரையும் ஒரு முறை சுய பரிசோதனை செய்து கொள்ள வைத்தது. இப்படிப்பட்ட அவர் தன் சொந்த வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ள பல பேட்டிகளுக்கு அழைப்பு வந்தும் செல்லாதிருந்தார். தன்னைப் பற்றிய செய்திகள் மக்களிடம் சேராமல் தன் எழுத்துக்கள் மட்டுமே மக்களிடம் சேர வேண்டும் என்று நினைத்தவர். சரியாக மணி 7:15க்கு மாவேல் காலை நடைப்பயிற்சி முடித்து திரும்பினார். ‘பிரபு இப்போது போய் கேட்கிறாயா?’ ‘ மாலை கேட்கலாம் என்று இருந்தேன் சரி போய் கேட்கிறேன் ‘ பிரபு அவர் வீட்டுக்குச் சென்று அழைப்புப் பொத்தானை அமுக்கினான். கதவைத் திறந்து வெளியே வந்த மாவேல் ‘ என்ன தம்பி, நீ எதிர் வீட்டில் தானே இருக்கிறாய்?’ ‘ ஆமாம் சார், என் வீட்டிற்கு பெரியப்பா மகன் வந்திருக்கிறான் அவன் உங்களுடைய தீவிர ரசிகன்… உங்களை சந்திக்க முடியுமா என்று கேட்டான்.. நான் அவர் தனிமையை விரும்புகிறவர் கேட்டுப் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன் ‘ மாவேல் சில நொடிகள் யோசித்து விட்டு, ‘ சரி தம்பி அழைத்து வா ‘ என்றார். இப்பொழுதே அழைத்து வர சொல்லுவார் என்று சற்றும் எதிர் பார்க்காத பிரபு சற்று தடுமாறி இதோ இன்னும் ஐந்து நிமிடங்களில் அழைத்துக் கொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றான். மாவேல் உள்ளே சென்று உடைமாற்றிக் கொண்டு நாற்காலியில் அமர்ந்த சிறிது நேரத்தில் பிரபுவும் நவீனும் உள்ளே நுழைந்தனர். ‘வாங்க தம்பி நீங்க தான் அவர் பெரியப்பா மகனா?’ ‘ஆமாம் சார், உங்களை சந்தித்து பெரும் மகிழ்ச்சி.. அதற்கு இப்போதே அனுமதி அளித்தது அதைவிட மகிழ்ச்சி.’ ‘அதற்கென்ன, இந்த தம்பியை சில வருடங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்.. நல்ல குடும்பம், நல்ல நட்பு வட்டாரம், நல்ல ஒழுக்கங்கள்… அதனால் நான் தயங்குவதற்கு ஏதுமில்லை’. ‘மிகவும் நன்றி சார், உங்களை சில கேள்விகள் கேட்கலாமா?’ ‘உங்கள் இருவருக்கும் முதலிலேயே கூறி விடுகிறேன்…. என்னைப் பற்றி எந்த கேள்வியும் கேட்கக் கூடாது.. எல்லா கேள்விகளும் என் எழுத்து பற்றி மட்டும் தான் இருக்க வேண்டும்.’ ‘கண்டிப்பாக சார், அந்த நாகரிகம் எங்கள் இருவருக்கும் தெரியும் ‘ ‘உங்கள் பெயர் என்ன நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?’ என்று பிரபுவை பார்த்து கேட்டார். ‘ நான் பிரபு, டிசிஎஸ் கம்பெனியில் ஆர்க்கிடெக்ட் ஆக வேலை செய்கிறேன்’ அவர் நவீனை நோக்கும் முன்னரே… ‘ நான் நவீன், வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருக்கிறேன் ‘ ‘மிகவும் மகிழ்ச்சி கேளுங்கள்’ நவீன் கேட்க துவங்கினான், ‘ உங்களின் காதலின் நிறத்தில் இரு கதாபாத்திரங்களும் வெவ்வேறு குண நிலைகளில் இருக்கின்றனரே அவைகள் உங்கள் முழு கற்பனையா இல்லை நீங்கள் சந்தித்த மனிதர்களா?’ ‘ கற்பனை அல்ல அந்த இரு கதாபாத்திரங்களும் எனக்கு அறிமுகமானவர்களே! ‘ ‘ இந்திரனின் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக இருக்கிறதே.. உண்மையில் அது போன்ற மனிதர் இருக்க முடியுமா?’ மாவேல் மெல்லிய சிரிப்புடன், ‘தம்பி சில சமயங்களில் உண்மை கற்பனையை விட சுவாரசியமானது ‘ ‘ஆச்சரியமாக இருக்கிறது சார், அந்த கதாபாத்திரத்தை பற்றி நாவலில் இல்லாத வேறு ஏதாவது கூற முடியுமா?’ சிறிதே யோசித்து விட்டு, ‘ இந்திரன் கதாநாயகனா இல்லை வில்லனா என்று அவருக்கு மட்டுமல்ல, அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, எனக்கு மட்டுமல்ல, நம்மைப் படைத்த முருகனுக்கே தெரியாது என்று நினைக்கிறேன்….: இதற்கு பிரபு நவீன் இருவருமே சிரித்தனர். ‘உண்மைதான்.. தன் காதல் தோற்றுப் போனதையும் அந்தக் காதலியை பற்றி மனைவி, மகள்கள், மகன்கள், பேரன்கள் முன்னிலையில் ஒருவர் உணர்ச்சி பூர்வமாக அந்த வயதில் பேசுவதை கண்டும் புன்முறுவலுடன் அவர் மனைவி அவரைப் பார்ப்பதும், இதைக் கேட்ட என்னை பார்த்து மகன்களும் மகள்களும் லேசாக சிரிக்க… பேரன்கள் தாத்தாவிற்கு இதே வேலை என்று கூறிவிட்டு எழுந்து செல்ல…. என்னால் இன்னும் நம்ப முடியவில்லை இது போன்ற மனிதரும், குடும்பமும் சாத்தியமா என்று…. இந்த கதாபாத்திரம் உண்மை தான் இன்னும் அதி சுவாரசியமான மனிதர் அவர்… அவைகள் அந்த நாவலுக்கு ஒவ்வாதவை.’ இதைக் கேட்ட பிரபுவும் நவீனும் மாவேலை சந்தேகத்துடன் பார்த்தனர். ஆயிரக்கணக்கான கதாபாத்திரங்களை படைத்த மாவேல் இதை கடந்தார். மற்றும் ஒரு கதாபாத்திரம் வாக்கியர் எனக்குத் தெரிந்து மிக சிறந்த நேர்மையாளர், பிறந்தது முதல் இன்று வரை எல்லா நிலைகளிலும் சிறிதும் நேர்மை தவறாமல் நடந்தவர் நடப்பவர்..அலுவலகத்தில் பணிபுரிந்து உயரிய பதவியை அடைந்து ஓய்வு பெற்றவர். அவரைப் பற்றி சுருங்கச் சொன்னால்…. காமராஜரையும் கக்கனையும் கலந்த கலவை என்று சொல்வேன். படித்தது நுண் பொறியியலில் மேற்பட்டபடிப்பவரை.. அதைப் படித்து முடித்து வேலை கிடைத்து அமரும் வரையும் எங்கும் காதல் வயப்படவில்லை…. வேலையில் சேர்ந்து இரு வருடங்களுக்குப் பிறகு அவரது தந்தையே அவரை அழைத்து தன் தங்கை மகளையே திருமணம் செய்து கொள்ள கூற, தட்டாமல் சம்மதம் தெரிவித்து திருமணமும் செய்து கொண்டார்… மணமுடித்த பிறகு தான் காதல் தன் மனைவியுடன்.. இன்றைய இளைஞர்களின் காதலோ இல்லை திரைப்பட காதலோ அல்ல.. நட்பு, பண்பு, பாசம், இரக்கம், பரிவு எல்லாவற்றையும் கலந்ததாக அவர்கள் காதல் இருந்தது… அவரைக் குறிக்கிட்டு நவீன், ‘ஓ தெய்வீக காதலா?’ ‘என்ன தம்பி சினிமா அதிகம் பார்ப்பீர்களா?… தெய்வீக காதல் என்ன எப்படி என்று எனக்குத் தெரியாது… அவர்களுடைய மண வாழ்க்கையின் காதலை சொன்னேன். அவருடைய கல்லூரியின் முதல் ஆண்டு உங்களுக்கெல்லாம் மிகவும் தெரிந்த திரு சாலமன் பாப்பையாவின் வேலூர் ஊரிஸ் கல்லூரியில் முதல் பணி ஆண்டும் கூட. ‘தெய்வீக காதல் என்பது இல்லை என்கிறீர்களா?’ நவீனே தொடர்ந்தான்… ‘அதைப் பற்றி தெரியாது என்று தான் சொன்னேனே… வெற்றிகரமான தமிழ் உலகம் அறிந்த காதல் ஜோடியை உங்கள் எல்லோருக்கும் தெரியுமே… சூர்யா ஜோதிகா…. அவர்களின் ஒற்றுமையும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையையும் மற்றவர்கள் எடுத்துக்காட்டாக எடுத்துக் கொண்டால் உண்மை காதல் நிலைக்குமோ என்னவோ? நீங்கள் இருவரும் தான் பதில் சொல்ல வேண்டும்.’ ‘மன்னிக்கவும் சார் அதிக பிரசங்கித்தனமாக கேட்டுவிட்டேன்…’ ‘ பரவாயில்லை வேறு ஏதாவது கேட்க வேண்டுமா?’ பிரபு குறிக்கிட்டு ‘ கலாச்சார சீரழிவில் நீங்கள் எழுதியதெல்லாம் உங்கள் அனுபவத்தில் கண்டதா?’ ‘ஆமாம்’ ‘ தன் இனப்பெருமையோ வரலாற்று புரிதலோ இல்லாத மூடர்கள் என்று கோபமாக எழுதி இருக்கிறீர்களே அதற்கு ஏதாவது ஒரு உதாரணம் தர முடியுமா?’ ‘ தம்பி நவீன் நீங்கள் வேலூரில் இருந்து வந்திருக்கிறீர்கள் உங்கள் ஊரில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் ஜைனர்களுடைய ஆயிரம் வருடத்திற்கு முந்தைய மலை குகை கோவில் உள்ளது உங்களுக்கு தெரியுமா?’ நவீன் தெரியாது என்று தலையசைத்தான். ‘ உங்கள் ஊரின் பெருமையாக எதை கருதுகிறீர்கள்?’ ‘ நிறைய இருக்கிறது சிஎம்சி, விஐடி, பொற்கோவில் என்று அடுக்கிக் கொண்டே போகலாம் ‘ ‘பார்த்தீர்களா படித்த விரிவுரையாளராக உள்ள நீங்களும் வரலாற்று முக்கியம் வாய்ந்த ஒரு இடத்தை விட்டு விட்டீர்கள்’ நவீனுக்கு தன் தவறு புரிந்தது… ‘ மன்னிக்கவும் வேலூர் கோட்டை ‘ ‘ஆம் இதைத்தான் சொன்னேன்… இக்காலத்து இளைஞர்கள் நம் முன்னோர்கள் வாழ்ந்த சிறப்புமிக்க வரலாற்றை மறக்கிறார்கள் என்று ‘ ‘நம் வரலாறு தெரிந்தால்தான் நம் இன பெருமை தெரியும் அத்தகைய பெருமை கொள்வதில் தவறில்லை… நாம் தாழாமல் அடிமை உணர்ச்சி கொள்ளாமல் இருக்க அது பயன்படும் ‘ ‘சரிங்க சார், ஏதோ மலை குகை என்று சொன்னீர்களே அது எங்கே இருக்கிறது?’ ‘ வேலூரில் இருந்து சந்தவாசல் வழியாக கேளூர் கடந்த உடன் திருமலை என்ற ஊர் இருக்கிறது… அந்த ஊரின் மலையின் மீதுதான் அந்த குகை கோவில் உள்ளது’ ‘ கலாச்சார சீரழிவுக்கும் இந்த கோவிலுக்கும் என்ன சம்பந்தம்?’ மாவேல் சற்றே கோபம் முற்றார்… சற்று தணிந்து, ‘ அந்தக் கோவிலின் குகைக்குள் ஆயிரம் வருடத்திற்கு முந்தைய வர்ண சித்திர வேலைபாடுகள் உள்ளன… அவைகளை நான் கண்ட போது எனக்கு ரத்தக்கண்ணீரே வந்தது…: சிறிது நேரம் பேசாமல் நிறுத்தினார்…’ ‘ ஏன் சார்?’ ‘ கல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி என்ற பெருமை ஏட்டில் மட்டும் தான் இருக்கிறது… இப்போது நம் குடி மூடர் குடி ஆகிவிட்டது… அத்தகைய வரலாற்று புராதான வர்ண சித்திரங்களை காப்பாற்ற மக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், அரசாங்கத்திற்கும் அக்கறை இல்லை… இந்த மூடர் கூட்டத்தில் கடைந்தெடுத்த கயவர்கள் தன்னுடைய பெயர்களை அந்தச் சித்திரத்தில் கிறுக்கி உள்ளனர்.. இதுவே என் கோபத்திற்கு ரத்தக்கண்ணீருக்கு காரணம்… ‘

பிரபுவும் நவீனும் வெட்கி தலை குனிந்தனர். நாம் இதனுடன் முடித்துக் கொள்ளலாம் பிறகு ஒருமுறை சந்திக்கலாம்… சற்று உணர்ச்சி வசப்பட்ட மாவேல் அவர்களை வழி அனுப்பி விட்டு சாய் நாற்காலியில் சாய்ந்தார். ஆற்காடு பாரதி தெருவின் ஒரு வீட்டின் திண்ணையில் ஓய்வு பெற்றவர் போல் இருந்த ஒருவர் அமர்ந்திருந்தார். அந்த வீட்டிலிருந்து வெளியே வந்த ஒரு 25 வயது மதிக்கத்தக்க இளைஞன் அவரைப் பார்த்து, ‘ அம்மா சொன்னாங்க போய் மார்க்கண்டமா ஒரு கிலோ கறி வாங்கிக் கொண்டு வாங்க ‘ ஏன் நீ போய் வாங்கி வர முடியாதா என்று கேட்டிருக்க முடியும்…. நினைவு தெரிந்த நாளிலிருந்து அது போல் போல் கேட்டதில்லை… ‘ சரி நீ போ, நான் வாங்கி வருகிறேன் ‘ என்று கூறினவர் மாணிக்கம். போக்குவரத்து துறையில் RI ஆக இருந்து இரு வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றவர். மனைவி இரு மகன்கள்… ஒருவன் காமேஷ் இப்போது அவரிடம் உத்தரவிட்டு சென்றானே அவன். மற்றொரு மகன் சென்ற வருடம் திருமணம் ஆகிய உமேஷ். மாணிக்கத்திற்கு தீவிர தமிழ் பற்று உண்டு ஆனால் அவர் மனைவி ஊர்மிளாவிற்கு சிறிதும் கிடையாது… அதனால் தான் மகன்களுக்கு மனைவியே உமேஷ், காமேஷ் என்று பெயரிட்டார்… மாணிக்கத்திற்கு திருமணமான சில மாதங்களுக்குள்ளாகவே தன்னை எந்த விதத்திலும் ஊர்மிளா மதிக்கவில்லை என்று புரிந்து விட்டது.. இருந்தும் ஐந்து வருடத்திற்குள் இரண்டு மகன்கள். மனைவியின் பேச்சை தாங்க முடியாத அவர் பல இரவுகள் தாழ்வாரத்தில் படுத்துக் கொண்டு வருத்தத்தில் அழுது இருக்கிறார். மனைவி தான் அப்படி என்றால் அதே வழியில் இரு மகன்களும் இருந்தனர். இந்த உதாசீனம் மாணிக்கத்தின் நேர்மைக்கு பரிசாக கிடைத்தது. மனைவி ஊர்மிளாவைப் பொறுத்தவரை நல்ல பசை உள்ள வேலையில் இருக்கிறார் என்று திருமணம் செய்து கொண்டால் இந்த மனிதரோ நியாயம், நீதி, நேர்மை என்று காந்தியின் வாரிசாக இருக்கிறாரே என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொற்களால் சுட்டு தீர்த்தாள். இரு மகன்களும் அவர் மனைவிக்கு கொஞ்சமும் சலித்தவர்கள் அல்ல… ஈவு இரக்கமின்றி தந்தையை நடத்தினர். மாணிக்கத்தின் குடும்பம் வருத்தப்படுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை… ஆனால் மாணிக்கத்தின் நெருங்கிய நண்பர்கள் அவரின் இந்த நிலைமையை மாணிக்கம் பொறுத்துக் கொள்வதை பொறுத்துக் கொள்ளாமல் பலமுறை மாணிக்கத்திற்கு இருப்பது ஒரு வாழ்க்கை ஏன் இப்படி அடிமை போல் இருக்கிறாய்…. உன்னை மூவரும் மதிக்கவில்லை உன் மனைவி செல்வந்தர் மகள், நீ அவர்களைப் பிரிந்து சென்றாலும் பாதிப்பு ஏதும் இல்லை என்று பலமுறை எடுத்துக் கூறினர். மாணிக்கமோ விரக்தியான பார்வையை பதிலாக அவர்களுக்கு கொடுத்தார். வாழ்க்கை என்பது நேர்கோடு அல்ல, ஒவ்வொருவருடைய செய்கையும் ஒவ்வொரு நிலையிலும் பல கோடுகளாக பிரியும் சிலந்தி வலை போன்றது.. அது போன்ற ஒரு செய்கை… நிலைப்பாடை தான் மாணிக்கவேல் என்கிற மாணிக்கம் இரண்டாவது மகன் காமேஷ் பிறந்த ஒரு வருடத்திற்குள் எடுத்தார்… மனைவியின் உதாசீன அவமானங்களை தாங்க முடியாமல் குடும்பத்தை பிரிய நினைத்து ஒரு திங்கட்கிழமை காலை அதை நிறைவேற்றினார். அவர்தான் நீங்கள் மேலே அறிந்த எழுத்தாளர் மாவேல் என்கிற மாணிக்கவேல்!