top of page
Search

பெயர்! By சிவா.

  • melbournesivastori
  • Mar 10, 2023
  • 4 min read

குமரன் சங்கர வடிவேல், குமரன் குரூப் ஆப் கம்பெனிஸ்னுடைய சேர்மன். கடின உழைப்பால் முன்னேறி பெரிய தொடர் கம்பெனிகளை உருவாக்கியவர். 95% எந்தவித பாகுபாடும் பார்க்காமல் தன்னுடைய கம்பெனிகளை நடத்தி வந்தார். அது என்ன 95 சதவீதம் மீதி 5 சதவீதம் என்ன ஆனது என்று உங்களுக்கு தோன்றும்…. கடைசியில் அதற்கு வருகிறேன்… குமரன் பார்ப்பதற்கு பர்சன் ஆப் இன்ட்ரஸ்ட் தொடரில் வரும் ஜிம் கவிசல் போல் இருப்பார்.. ஒரு விதமான இறுக்கமான முகம்.. என்ன நினைக்கிறார் என்பதை அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள முடியாது.. அவர் கம்பெனிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதே மிக வித்தியாசமாக இருக்கும்.. விண்ணப்பத்தில் பெயர் படிப்பு மட்டுமே போட வேண்டும். தேர்வு செய்யும்போது வயது ஜாதி மதம் இனம் தெரியக்கூடாது என்பதில் கருத்தாய் இருப்பவர்… தகுதி அடிப்படையிலேயே தேர்வு செய்ய வேண்டும் என்று தன் கம்பெனிகளின் நியதியாகவே வைத்திருந்தார்… தன்னுடைய அந்தரங்க காரிய தரிசியை கூட அதேபோன்று தேர்வு செய்து இருந்தார்.. அதே தொடரில் வரும் ஷா போன்ற பெண் அவர்.. கடமையில் கண்ணாய் இருப்பார்.. அந்தப் பெண்ணின் முகத்தில் இருந்து எந்தவித அறிகுறிகளையும் கண்டுபிடிக்க முடியாது…. சிபாரிசு என்று எவரும் அணுக முடியாது. குமரன் மழை நாட்களில் காரிலும் மழை அற்ற நாட்களில் மோட்டார் சைக்கிளிலும் வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். அன்று மழை இல்லை, மோட்டார் சைக்கிளில் தனது கம்பெனிகளின் ஹெட் ஆபீஸ்க்கு வந்தார். அவர் தனக்கு தேவையில்லாமல் கோழை கும்பிடு போடுவதை அறவே வெறுப்பவர் என்று தெரிந்திருந்து கம்பெனி மொத்தமுமே அவர் வரும்போது சிறிய புன் சிரிப்போடு அவரவர்கள் வேலையை தொடர்ந்து செய்வர். போலித்தன்மையை பொதுவாக காண முடியவில்லை. தன்னுடைய கேபினுக்குள் நுழைந்து அங்கு இருந்த முன்னோர்களின் புகைப்படங்களுக்கு வணக்கத்தை செலுத்திவிட்டு சூழல் நாற்காலியில் அமர்ந்தார். எதிரே இருந்த மானிட்டரில் கதவிற்கு பின்னால் அந்தரங்க காரியதரிசி சரஸ்வதி நிற்பது தெரிந்தது.. இக்காலத்தில் இப்படி ஒரு பெயரா என்று தனி கவனம் செலுத்தி எல்லாவித தகுதியும் இருப்பதை உறுதி செய்து கொண்டு இந்த பெண்ணை தேர்வு செய்திருந்தார். சரஸ்வதி நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நல்ல படிப்பாளி திறமைசாலியும் கூட என்பதை வேலையில் சேர்ந்த ஒரு மாதத்திலேயே நிரூபித்தார். குமரன் குரூப்ஸ் சேர்மன் உடைய அந்தரங்க காரியதரிசியை தெரிவு செய்யப் போகிறார்கள் என்று அறிந்ததும் பல சிபாரிசுகள் நெருங்கியவர்கள் நேரடியாகவும் கொஞ்சம் தெரிந்தவர்கள் மறைமுகமாகவும் முயற்சி செய்தனர்.. குமரன் பொறுமையாக வந்தவர்களை எல்லாம் நேர்முகத் தேர்வு செய்தார்.. யாரிடம் தனக்குத் தேவையான தகுதிகள் இருப்பதாக நினைக்கவில்லை… சரி பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று வேலையை முடித்துக் கொண்டு கிளம்பத் தயாராக இருக்கும்போது சரஸ்வதி வேக வேகமாக உள்ளே நுழைய முற்பட்டு காவலரால் தடுக்கப்படுவதை பார்த்து அந்த காவலரிடம் அவரை விடும்படி கூறிவிட்டு சரஸ்வதியை வரச் சொன்னார். தானும் அறைக்குள் சென்று சரஸ்வதியும் வரச் சொல்லி எதிர் இருக்கையில் அமர சொன்னார்.. ‘ என்னம்மா இவ்வளவு தாமதமாக வந்திருக்கிறாய்?’ ‘ மன்னிக்கவும், வீட்டில் எனக்கு பொறுப்பு அதிகம் அதை முடித்துக் கொண்டு வருவதற்கு நேரம் ஆகிவிட்டது… மேலும் என்னுடைய நேர்முக நேரத்திற்கு சரியாகத்தானே வந்தேன்?’ அப்போது தான் குமரனுக்கு புரிந்தது யாரும் இல்லை என்று சற்று முன்னதாகவே கிளம்பி விட்டது… ‘ சரியான நேரத்திற்கு தான் வந்தீர்கள், பொறுப்பு அதிகம் என்றீர்களே இங்கும் பொறுப்பு அதிகம் எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?’ ‘ தன்னுடைய பொறுப்பை உணர்கிறவர்கள் எங்கும் பொறுப்பாக நடந்து கொள்வார்கள், நீங்கள் வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில் புரிந்து கொள்வீர்கள் ‘ ‘ குமரன் குரூப் ஆஃப் கம்பெனி சேர்மென்னிடம் பேசுகிறோம் என்ற பதட்டமே உங்களிடம் இல்லையே?’ ‘ நான் ஏன் பதட்டப்பட வேண்டும்? நீங்கள் கேள்வி கேட்கப் போகிறீர்கள்… என்னால் முடிந்தவரை பதில் சொல்லப் போகிறேன்… உங்களுக்கு பிடித்திருந்தால் தேர்வு செய்யப் போகிறீர்கள்… அவ்வளவுதானே?’ சரஸ்வதியை மனோதத்துவ ரீதியில் ஆராய நினைத்து, ‘ சுமார் 30 பேரை நேர்முகத் தேர்வு செய்தேன் எல்லோரும் இக்காலத்துக்கேற்றவாறு நாகரிகப் பெயர்களை வைத்துக் கொண்டிருந்தார்கள்.. உங்களுக்கு உங்களுடைய சரஸ்வதி என்ற பெயர் எப்போதாவது பிடிக்காமல் போய் இருக்கிறதா?’ ‘ என்றுமே அவ்வாறு நினைத்ததில்லை, ஏன் நினைக்க வேண்டும்? என் அடையாளம் தமிழ்.., எனக்கு பெற்றோர்கள் வைத்த பெயரை மறுபரிசீலனை செய்யும் அளவிற்கு தாழ்ந்த மனப்பான்மை கொண்டவள் அல்ல நான் ‘ இந்தப் பட்டவர்த்தனமான பதில் குமரனுக்கு மிகவும் பிடித்தது. மேலும் அவரை சோதிக்க நினைத்து, ‘பாவ புண்ணியத்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ ‘ அதில் நினைப்பதற்கு ஏதுமில்லை… நல்லவர்களுக்கு, நேர்மையானவர்களுக்கு அதைப் பற்றி நினைப்பதற்கே ஏதும் முகாந்தரம் இல்லை…’ இந்த பதிலால் குமரன் ஆடியே போய்விட்டார்.. அக்கணமே முடிவு செய்தார் இந்த பெண் தான் தன்னுடைய அந்தரங்க காரிய தரிசி என்று. ‘ எவ்வளவு ஊதியத்தை எதிர்பார்க்கிறீர்கள்? ‘ ‘ இவ்வளவு பெரிய நிர்வாகத்தில் நீங்கள் ஏற்கனவே முடிவு செய்து இருப்பீர்கள், நபரைப் பார்த்து கொடுக்கப் போவதில்லை.. அவ்வாறு கொடுத்தால் அவ்விடத்தில் நான் சேரப் போதும் இல்லை ‘ நறுக்குத் தெறித்தார் போன்ற இந்த பதில் குமரனுக்கு வெகுவாக பிடிக்கவே, ‘ உங்களுக்கு நாளை மருத்துவ தேர்விற்கான மின்னஞ்சல் வரும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அதை செய்யுங்கள்… தேர்வாகும் பட்சத்தில் நீங்கள் வேலையில் சேரலாம்’ பல இடங்களில் தன்னம்பிக்கையுடன் பட்டவர்த்தனமாக பதில் அளித்ததால் வேலை கிடைக்காமல் போனதில் எந்த விதத்திலும் தன்னை மாற்றிக் கொள்ளாமல் இங்கும் அதே போல் பேசி அதைத் தவறாக எடுக்காமல் இருக்கும் ஒருவரிடம் வேலையில் சேரப்போவது சரஸ்வதிக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. வேலையில் சேர்ந்து கடந்த ஐந்து வருடங்களில் சரஸ்வதி குமரன் குரூப் ஆப் கம்பெனியில் நேர்மையில் திறமையில் மனிதத்தில் பேர் பெற்று விளங்கினார். எதிரே இருந்த மானிட்டரில் சரஸ்வதியை பார்த்தவுடன் பொத்தானை அழுத்தி இயந்திர கதவை திறந்தார். ‘ வணக்கம், நீங்கள் கேட்ட சுருக்கப்பட்ட 30 பேர்களுடைய பட்டியலை எடுத்து வந்துள்ளேன் ‘ ‘ நன்றி, அமருங்கள்.. பார்க்கலாம் ‘ ஆறு பொறியாளர்களை தேர்வு செய்வதற்கான பட்டியல் இது…. 5 சதவிகித பாகுபாடு என்று முன்பு கூறினேனே… அது பாகுபாடல்ல நிர்வாகத்தின ஒரு நியதி! அதாவது, குமரன் குரூப் ஆப் கம்பெனியில் 50% தமிழர்களுக்கான இடம்.. மற்ற 50 சதவீதம் மற்ற மாநில மக்களுக்கு… ஜாதி மத மொழி வேறுபாடு இல்லாமல்.. அந்த 30 பெயர்களில் வடிகட்டி ஆறு பேரை தெரிவு செய்தார். மற்ற மாநிலத்தவர்கள்… ரித்விக், கௌஷிக், ரோகித். தமிழ்நாட்டினர்… பிரசன்ன குமார், ராஜேந்திரன், ராமானுஜம். இந்த ஆறு பேருக்கும் நாளை அரை மணி நேர இடைவெளியில் நேர்முகத் தேர்வுக்கான அட்டவணையை அனுப்பச் சொல்லி சரஸ்வதி இடம் கூறினார். மறுநாள் நேர்முகத் தேர்வு காலை 10 மணிக்கு… முதல் நபராக பிரசன்னகுமாரை அனுப்பக்கூறினார். கேள்விகளை ஆங்கிலத்தில் துவங்கி தமிழுக்கு மாற்றி பிரசன்னா குமாரின் அனுபவங்களை பகிர சொன்னார். பிரசன்னா குமாரின் தெள்ளத் தெளிவான தமிழ் பதில்கள் குமரனுக்கு பிடித்து விடவே… தற்செயலாக கேட்டார்… ‘சிறுவயதிலிருந்தே தமிழ் மீடியத்தில் படித்தவரா நீங்கள் ‘ ‘ இல்லை என் தாய்மொழி கன்னடத்தில் தான் படித்தேன்… பிறகு தமிழை கற்றுக் கொண்டேன் ‘ இந்த பதில் குமரனுக்கு அதிர்ச்சியை தந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல், ‘மிக்க மகிழ்ச்சி என்னுடைய முடிவை நாளை உங்களுக்கு தெரிவிக்கிறேன். ‘ பிரசன்னாவை வெளியே அனுப்பிவிட்டு குமரன் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தார்.. தன்னுடைய 50 சதவிகித தமிழர்களுக்கான இடம் தவறிவிடுமோ என்று… சில நிமிடங்கள் கழித்து அடுத்து ராஜேந்திரனை வரச் சொன்னார். முன்பு போன்றே ஆங்கிலத்தில் துவங்கி தமிழுக்கு மாறினார்… ராஜேந்திரனும் தமிழில் ஆங்கிலத்துக்கு நிகராக தெள்ளத் தெளிவாக பதில்களை கூறினான். அந்த பதில்கள் குமரனுக்கு முழு திருப்தி அளித்தது… முன்பு பட்ட சூட்டினால் தொடர்ந்து, ‘ ராஜேந்திரன் உங்களுடைய தாய்மொழி என்ன? ‘ ‘ என் தாய்மொழி மலையாளம். ‘ குமரனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி, ‘ ‘இவ்வளவு சரளமாக தமிழ் பேசுகிறீர்களே எங்கே கற்றுக் கொண்டீர்கள்?’ ‘ அப்பாவிற்கு வேலை சென்னைக்கு மாறியதால் ஆறாம் வகுப்பில் இருந்து தனியாக பயிற்சி எடுத்து கற்றுக்கொண்டேன் ‘ ராஜேந்திரனிடமும் நாளை தன்னுடைய முடிவை தெரிவிப்பதாக கூறி அனுப்பிவிட்டு அடுத்து ராமானுஜத்தை வரச் சொன்னார்.. ராமானுஜம் உள்ளே வந்ததும் அமர்ச் சொல்லி சம்பிரதாயக் கேள்விகளை ஆங்கிலத்தில் கேட்டுவிட்டு தாய்மொழி என்ன என்று கேட்டார். அதற்கு ராமானுஜமோ,’ என் தாய்மொழி தெலுங்கு ஆனால் நான் படித்ததெல்லாம் தமிழ் மீடியத்தில்தான் ‘ குமரனுக்கு குழப்பம் மேல் குழப்பம்… மனதுக்குள் நினைத்துக் கொண்டார், இனி தாய்மொழியையும் கேட்க வேண்டும் என்று. தொடர்ந்து ராமானுஜத்தின் அனுபவங்களை கேட்டு தெரிந்து கொண்டார். அவனிடமும் நாளை தன்னுடைய முடிவை சொல்வதாக கூறி அனுப்பினார். அடுத்து ரித்விக்கை அனுப்ப கூறினார். அறிமுக கேள்விகளை கேட்டுவிட்டு தாமதிக்காமல் அவனுடைய தாய்மொழி என்ன என்று கேட்டார்.. ‘ என் தாய்மொழி தமிழ் ‘ என்று ரித்விக் கூறியதும் மேலும் அதிர்ச்சி உற்றார். தன்னுடைய அனுபவத்தில் இன்று அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கிடைப்பதை உணர்ந்து மேலும் அதிர்ச்சிகளுக்கு தயாரானார்… ஆமாம் அவருக்கு அதிர்ச்சிகளுக்கு குறையவில்லை…. அடுத்து வந்த கௌஷிக், ரோஹித் இருவருமே தமிழர்கள் தான். தான் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்று இருந்தாலும் 50% நியதி மாறாமல் இருந்தது குறித்து மகிழ்ந்து வேலை தருவதற்கான மருத்துவ பரிசோதனை விண்ணப்பங்களை மின்னஞ்சலில் அனுப்ப சரஸ்வதியிடம் கூறினார். அன்றையிலிருந்து குமரன் குரூப் ஆஃப் கம்பெனிகளுக்கு விண்ணப்பத்தில் பெயர், படிப்பு இவைகளுடன் தாய்மொழியும் சேர்க்கப்பட்டது.

bottom of page