top of page
Search

நரகத்தின் பிடியில்....

  • melbournesivastori
  • Nov 17, 2023
  • 5 min read

உண்மைக்கு, நம்பகத்தன்மைக்கு  ஒவ்வாத விடயத்தை  சொல்வதாக நினைக்க வேண்டாம், ஆனால் அப்படிப்பட்ட விஷயத்திற்கு தான் மக்களிடம் பெரும் வரவேற்பிருக்கிறது…

    இப்பொழுது இந்தியாவைப் பொறுத்தவரை  மக்களின் பெரும் கவனத்தைக் கவர்ந்திழுப்பது மூன்று விடையங்கள் திரைப்படம், கிரிக்கெட் ( விளையாட்டு என்று பொதுவாக குறிப்பிடாததற்கு முக்கிய காரணம் உண்டு… இந்தியாவைப் பொறுத்தவரை  கிரிக்கெட்டைத் தவிர மற்றவைகள் விளையாட்டு என்று எடுத்துக் கொள்ளப்படுவதில்லை ) அடுத்து அரசியல்.

    திரைப்படத்தை எடுத்துக் கொள்வோம்…

    அற்புதமான திரைப்படங்கள் வருகிறது, இல்லை என்று சொல்லவில்லை…. அவைகளை கூச்சல் இல்லாமல் கூக்குரல்கள்  இல்லாமல் விசில்கள் இல்லாமல் திரை முன்பு  நடனங்கள் இல்லாமல் அமைதியாக திரையரங்குகளில் பார்க்க முடியும். மறுபக்கம் பிரம்மாண்ட தயாரிப்பு  திரைப்படங்கள்…. அதில் ஒரு திரைப்பட கதையை எடுத்துக் கொள்வோம்….  கோல்ட் கேஸ் எனப்படும் முன்பு எப்போதோ  நடந்த ஒரு குற்ற செயலை  அது கொலையாக கூட இருக்கலாம் கண்டுபிடிக்க முயற்சி செய்வது..

   கொலை என்று எடுத்துக் கொள்ளலாம், இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் திணறி  முடிவு செய்து முடித்து வைக்கப்பட்ட விசாரணை ஒன்று.  பல வருடங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட ஒருவரின் மறு விசாரணை பற்றிய கதை….. அந்தத் திரை படத்தின் கதாநாயகன் மக்களின் மாபெரும் வரவேற்பு பெற்ற கதாநாயகன்… அந்தக் கதையில் அவர் துப்பறியும்  புலி.. காவல்துறையின் சிறப்பு பிரிவிலிருந்து இந்த கொலையை கண்டுபிடிப்பதற்காக வரவழைக்கப்பட்டவராக கதை. கண்டுபிடிக்க வந்தது ஒரு கொலை பற்றி. துப்பறிய சென்ற இடத்தில் எல்லாம்  வெட்டி கொலை செய்தது, சுட்டு கொலை செய்தது, அதி பயங்கர  கார் சேஸில் மற்ற கார்களை நொறுக்கி கொலை செய்தது சுமார் 26 கொலைகள். கண்டுபிடிக்க சென்றதோ பல வருடங்களுக்கு முன்பு கொலையான ஒருவரை பற்றி.

  அற்புத திறன் கொண்ட கிரிக்கட்டர்கள் ஐபிஎல் மூலமாக கூட வர முடியாமல் வெளி உலகத்துக்கு தெரியாமல்  போவதுண்டு… அதே நேரத்தில் பல வருடங்களுக்கு முன்பு என்றோ ஒருவர் அதிவேகத்தில் அடித்த அரை சதத்தை பற்றி அரை நூற்றாண்டுகள் பேசுவது உண்டு…. தன் வீட்டில் வளர்த்த கோழி முட்டைகளை உண்டு, தான் உழைத்து சம்பாதித்த பணத்தில்  வாரம் ஒரு முறை இறைச்சியை உண்டு, பயிற்சி கூடங்களுக்கு செல்ல பணம் இல்லாமல் பக்கத்து மலையில் அடிக்கடி ஏறி, வலுப்பெற்று, அன்றாட இளைஞர்கள் போல் இல்லாமல் முழு மூச்சாக ஒருமித்த மனதுடன் தளர்வின்றி முயற்சி செய்து நாட்டுக்காக ஆசிய போட்டியிலோ அல்லது  ஒலிம்பிக் போட்டியிலோ  கலந்துகொண்டு நாட்டின் மானத்தைக் காப்பாற்றிய ஒருவன் பதக்கத்துடன் திரும்பி வந்தும், படித்த பட்டத்தை கையில் வைத்திருந்தும் நல்ல வேலை கிடைக்காமல் திண்டாடிய பலரை நாம் கண்டு கொள்வதே இல்லை.

   அரசியலை எடுத்துக் கொள்வோம்… மனச்சான்றுடன் நினைத்துப் பாருங்கள் எத்தனை அரசியல்வாதிகள் தகுதியுடன் இருக்கின்றனர்? வெற்றி பெறும் முன் சொன்ன சொல் ஒன்று, வென்ற பின் செய்யும் செயல் வேறு ஒன்று… கேட்க யாருமில்லை, பணம் வாங்கி ஓட்டளித்ததால் கேட்பதற்கு முகமும் இல்லை. குமரிக்கண்டத்தில் இருந்து தோன்றிய பழம் பெரும் தமிழ் நாகரீகத்திற்கு இப்போது மகுடம் சூட்டுவது போலா இருக்கிறது அரசியல்வாதிகளின் நடத்தைகள்? குறைந்தபட்சம் தாய் மொழியை  தவறு இல்லாமல் பேசுவோர் எத்தனை அரசியல்வாதிகள்? தாய் மொழியையே தவறில்லாமல் பேச முடியவில்லை என்றால் அவர்களுக்கு தன் இனத்தின் மகத்துவம் எங்கே தெரிந்திருக்க போகிறது……  குறைந்தபட்ச தகுதி கூட இல்லாமல் கூசாமல் பொய்களை கூறி நம்மையும், மண்ணையும் புண்ணாக்கி வைத்தது தான் மிச்சம். உண்மை கண்டறியும் கருவியின் முன் எத்தனை அரசியல்வாதிகள் அமர முன் வருவார்கள்?  ஆனால் அவர்களை ரசிக்கிறோம், புகழ்கிறோம், கொண்டாடுகிறோம், முன்மாதிரியாக வரும் சமுதாயத்திற்கு காட்டுகிறோம்.

   இவைகளை எல்லாம் தாங்கிக் கொள்ளும் நாம் சொர்க்கத்தில் இருக்கிறோமா அல்லது நரகத்தில் இருக்கிறோமா? ஆனால்  நான் சொல்ல வந்தது இது இல்லை….

   அது ஒரு பாழடைந்த முருகர் கோவில், ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ளது. இந்த வழியில் நூற்றுக்கணக்கான முறை சென்றிருப்பேன் ஆனால் ஒரு முறை கூட கோவிலை ஏறெடுத்தும் பார்த்ததில்லை.. அந்தக் கோவிலின் தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தேன்.  பக்தர்கள் வர மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன், கடந்த இரண்டு மணி நேரத்தில் ஒருவர் வந்து கும்பிட்டு விட்டுப் போனார்… என்னைப் போன்றவரோ என்னவோ!

    அந்த நிகழ்ச்சி நடக்கும் வரை எவ்வளவு சந்தோஷமாக இருந்தேன்.. நினைத்ததை நடத்தினேன், விரும்பினதை செய்தேன்… சொர்க்கத்தில் திளைத்தேன்! அது ஒரு கனாக்காலம்!

    நான் கேசவ் பள்ளி படிப்பு முடியும் வரை கேசவனாக தான் இருந்தேன், அடி உதவுவது போல் அண்ணன் தம்பிகள் கூட உதவ மாட்டார்கள் என்ற மொழிக்கேற்ப  பள்ளிப் பருவம் வரை  என்னை திருத்த, அந்த மொழியை உண்மையாக இருக்கும் என்று நம்பிய அப்பாவிடம், பெரியப்பாவிடம், சித்தப்பாவிடம், மாமாவிடம் பாகுபாடில்லாமல் அடி வாங்கி இருக்கிறேன்..  வீட்டுக்கு அடங்காதவன் ஊரில் அடங்குவான் என்று என் காதுப்படவே  கூறுவார்கள்… எனக்கு எப்போதும் டேக் இட் ஈசி பாலிசி! எவனையும் மதித்ததில்லை. +2 வில் எப்படி பாஸ் செய்தேன் என்று யாரும் கேட்கக் கூடாது…. அது ஒன்றும் பிரம்ம ரகசியம் இல்லை… அந்த சிறு வயதிலேயே என் பள்ளி ஆசிரியர்களை மிரள வைத்தது சுற்றுவட்டாரத்தில் எல்லா பள்ளிகளுக்கும் வைரஸ் போன்று பரவியது. அங்கு தேர்வு நடத்த வந்தவர்களுக்கு தெரியாமலா போகப்போகிறது?

   கல்லூரி முதல் நாளிலேயே சொர்க்கத்தில் கால் வைத்தது  போல இருந்தது… உடன்படித்தவர்கள் கொடுத்த மரியாதை அப்படி… ராஜாவா….இல்லை மகாராஜா போல் உணர்ந்தேன். என்னுடன் பழகிய நண்பர்களும் உண்மை நட்புடன் பழகியதாக தெரியவில்லை  ஒருவித பயம் கலந்த நட்பு அவர்களுக்கும் இருந்தது… அது எனக்குத் தெரிந்தும் காட்டிக்கொள்ளாமல் ரசித்தேன். என் வீட்டில் வாங்கிய அடிகளால் என் உடம்பு மட்டுமல்ல  மனதும் மறுத்து விட்டிருந்தது.. பள்ளி கடைசி வரிசையில் இருக்கையிலேயே சரக்கு அடித்தவன், அது போர் அடித்து கல்லூரி காலங்களில் பொட்டலம் புகைத்தேன்.

  வீட்டிற்கே சென்றதில்லை …. அவர்களும் என்னை தேடி வந்ததில்லை, இப்பொழுது எப்படி இருக்கிறார்கள் என்றும் தெரியாது. பணத்திற்கு பஞ்சமில்லை…. அமுதசுரபி போல அதைத் தருவதற்கு என்னிடம் பட்டாளம் இருந்தது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் எல்லா அதிகாரிகளின் மகன்களும் என் பட்டாளத்தில் இருந்தனர்.. அதுவே மிகப் பெரிய பாதுகாப்பாக மாறியது. மக்கள் என்னை ரவுடியாகவும் பார்க்கவில்லை தாதாவாகவும்  பார்க்கவில்லை கட்டப்பஞ்சாயத்து தலைவனாகவும் பார்க்கவில்லை.. என் பட்டாளத்தில் உள்ளவர்களை தான் அவர்களாக பார்த்தார்கள். நான் கட்டுப்படாதவனாக தொட முடியாதவனாக இருந்ததற்கு இரண்டு காரணங்கள்….. என் பட்டாளத்தில் உள்ளவர்கள் எக்காரணத்தை முன்னிட்டும்  பெண்களை தொந்தரவு செய்யக் கூடாது, எந்த அரசியல் கட்சிகளையும் சாரக்கூடாது. அதனால் ஆளும் கட்சி எதிர்க்கட்சி எங்கும் எனக்கு எதிரிகள் இல்லை… மாறாக என் நட்பு அவர்கள் எல்லோருக்கும் தேவைப்பட்டது. குற்றம் என்று மற்றவர்களுக்குப் பட்டது எனக்கு அவ்வாறு படவில்லை போதையாகப்பட்டது… வெறிகொண்டு மற்றவர்களை தாக்கும் போது கூட போதை ஏறியது போல் தான் இருந்தது… இரக்கம் என்பது என் மனதில் இம்மி அளவு கூட இருந்ததில்லை… வருடங்கள் ஏற ஏற வயது மட்டும் ஏறவில்லை என் செல்வாக்கும் ஏற ஆரம்பித்தது…. தனி சாம்ராஜ்யத்தை அமைத்து நடத்தி வந்தேன்…. நிழல் உலகம் என்று சொல்வார்கள்… என்ன முட்டாள்தனம்? நான் வெளிச்ச உலகத்தில் தான் ராஜ்யத்தை நடத்துகிறேன், நல்லவர்கள் தான் நிழல் உலகத்தில் இருக்கிறார்கள். அட…. நானும் நல்லவர்கள் என்று கூறுகின்றேனே!

   கண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் என்று கூறுவார்கள்…. ஏன் திருந்திய பிறகு சூரிய வணக்கம் என்று கூறலாமே?!  நான் நானாக திருந்தினேனா என்றால் இல்லை…  மற்றவர்களால் திருந்தினேனா  என்றால் அதுவும் இல்லை….. பெரிய அடி விழுந்தால் திருந்துவார்கள் என்பார்கள், ஆமாம் எனக்கு பெரிய அடி விழுந்தது.. என்னை அடிக்க இந்த உலகத்தில் யாரும் இல்லை என்று நினைத்தேன்.. எவ்வளவு பெரிய மடத்தனம்? என் எதிரி  என் உள்ளேயே இருந்து இருக்கிறான் என்று எனக்கு தெரியாமல் போய்விட்டது.. இது என்ன புது கதையாக இருக்கிறது என்கிறீர்களா? இல்லை உயிர் கொள்ளும் நோய் ஏதாவது எனக்கு வந்துவிட்டது என்று நினைக்கிறீர்களா? ஈவ, இரக்கம், பச்சாதாபம் இல்லாத ஒருவனுக்கு எந்த ஒரு வலியினாலும் மாற்றம் வராது. 

  நல்லவர்களுக்கு அவர்கள் நல்லவர்கள் என்றே தெரியாது… மற்றவர்களும் அவர்கள் காதுப்பட நல்லவர்கள் என்று கூற மாட்டார்கள் எல்லோருடைய தான்மையும் அப்படி! அப்படி இருக்கும் உலகுக்குத் தெரியாத முகம் தெரியாத நல்லவர்களுக்கு பெரும் நரகமே அவர்கள் மனசான்று  தான்!

     எல்லோரும் அவரவர்களை நல்லவர்கள் தான் என்று நினைத்துக் கொள்கிறார்கள், என்னைப் பொறுத்தவரை  எப்பொழுது ஒருவன் உண்மையாக, நல்லவனாக மாறுகிறான் என்றால் அவன் மனச்சான்று  பூதாகரமாக உருவெடுக்கும் போது தான். ஆமாம் நல்லவர்களுக்கு அவர்கள் மனச்சான்றே உண்மை நரகம்!

   என்னடா இவன், பெரிய சமூக விரோதி… ஈவு இரக்கம், பச்சாதாபம் இவைகள் ஏதும் இல்லாதவன் மனச்சான்றை பற்றி பேசுகிறானே என்று நினைக்கிறீர்களா? புரிகிறது….

 பல் வலி வரும்போது  உலகிலேயே கொடூரமான வலி அது தான் என்று நினைக்கத் தோன்றும், வயிற்று வலி வரும்போதும் அதேபோலத்தான், நீங்காத நோய்கள் இருப்பவர்களை கேட்டால் அதெல்லாம் ஒன்றும் இல்லை எங்களுக்கு இருப்பது தான் வலி என்பர். எப்பேர்ப்பட்ட உடல் வலியும் பொறுத்துக் கொள்ளும் எனக்கு இந்த மனச்சான்றின் வலி கொடூர வலியாகப்பட்டது…. பள்ளிப் பருவத்தில் இருந்து அந்த நிகழ்வு நடக்கும் வரை… (ஆமாம் அது நிகழ்ச்சி அல்ல… என்னை அக்கு வேறு ஆணிவேராக கழற்றி துன்புறுத்தும் நிகழ்வு அது..)  நான் செய்தவை, நடத்தினவை ஒவ்வொன்றும் என் இதயத்தை ஈட்டி போல் குத்தினாலும் பரவாயில்லை குத்திக் கொண்டே இருந்தது, இருக்கிறது…..  மனசான்றிற்கு இவ்வளவு சக்தி இருக்கும் என்று நினைத்தும் பார்க்க முடியவில்லை.

  ஒவ்வொரு குற்றத்தையும் எவ்வளவு எளிதாக செய்தேன், அது மற்றவர்களுக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சிறிதளவு யோசித்ததில்லை… உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால் நான் செய்தவைகள் சிறு குற்றமோ பெரும் குற்றமோ… ஏதோ… எல்லாம் மட்பாண்டங்களை, கண்ணாடி பொருட்களை அல்லது பீங்கான் ஜாடிகளை  போட்டு உடைப்பது போன்று…. அவ்வளவு எளிதாக செய்தேன்.. ஆனால் இப்போதோ உடைத்த ஒவ்வொன்றையும் பார்த்து, பார்த்து, சேர்த்து ஒட்ட வைப்பது போன்ற கடினத்தை என் மனசான்று ஏற்படுத்தியது.

   இதற்கெல்லாம் காரணமான அந்த நிகழ்வை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடு நடுங்குகிறது… கை கால்கள் என் கட்டுப்பாட்டில் இல்லாமல் உதறுகின்றன.

   அன்று ஒரு நாள் காலை, எனக்கு மிகவும் நெருங்கிய அதிக அதிகாரம் படைத்த ஒரு அரசியல்வாதி ஒரு புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் அனுப்பினார்…. அப்படி அவர் அனுப்பினால் அதன் அர்த்தம் அந்தப் புகைப்படத்தில் உள்ளவரை முடித்து விடும்படி……. அந்தப் புகைப்படத்தை பார்த்தவுடன் எங்கோ பார்த்த நினைவு வந்தது.. பொதுவாக நான் யோசிப்பதே இல்லை, ஆனால் அந்தப் புகைப்படத்தில் இருந்த இளைஞன்  எனக்கு மிகவும் அறிமுகமானவன் போன்று தோன்றியது…. ஏதோ உந்துதலில் யாராக இருக்கும் என்று யோசிக்க சட்டென்று  நினைவுக்கு வந்தது…. அந்த இளைஞன் வளர்ந்து வரும் ஒரு கட்சியின் அரசியல் மேடைகளிலும், இளைஞர்களின் காணொளிகளிலும் மிகவும் பிரபலமானவர்.  யாராக இருந்தால் எனக்கென்ன எனக்கு வேண்டியது அந்த அரசியல்வாதியின் பெருத்த தொகை.. அந்த இளைஞன் பிரபலமானவன் என்பதால் என் பட்டாளத்தில் உள்ளவரை உபயோகப்படுத்தாமல், புதிதாக என்னிடம் சேர்ந்த  வட மாநிலத்தவனை அழைத்து அந்த இளைஞனை போட்டுத்தள்ளும் பொறுப்பை ஒப்படைத்தேன். இதை என் பட்டாளத்தில் உள்ள யாருக்கும் தெரிவிக்கவில்லை.

   அன்று மாலை எனது வலது கரம் போன்ற நண்பன் பாண்டி தலை தெரிக்க ஓடிவந்து, ‘ கேசவ், எப்படி சொல்வது….இந்த வடக்கன் செய்த வேலையை பார்த்தாயா, உன் வீட்டிலேயே கையை வைத்து விட்டான் ‘

‘ என்னடா சொல்ற, விவரமா சொல்லு.’

‘... கட்சியின் முகுந்தனை அதாவது உன் தங்கை கணவனை அந்த வடக்கன் போட்டு தள்ளி விட்டான் ‘

என் வீட்டைப் பற்றி எந்த செய்தியையும் எனக்கு தெரிவிக்கக் கூடாது என்று என் கூட்டத்திற்கு இத்தனை வருடங்களாக சொன்னது இவ்வளவு பெரிய இடியை என் தலையில் இறக்கும் என்று நினைத்தும் பார்க்கவில்லை......

 இதற்கு மேலும் உங்களிடம் சொல்ல  ஏதும் இல்லை….. மரணம் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்…. இதிலிருந்து வெளியே வர, தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்தவுடன் உடம்பெல்லாம் நடுங்க தொடங்கியது…. உயிர்களை எடுப்பது எவ்வளவு எளிது  என்று நினைத்தேன்…. இப்போதோ என் உயிரையே என்னால் எடுக்க முடியவில்லை! 

 
 
bottom of page