நான் விழி, எனக்கில்லை மரணம்! By சிவா.
- melbournesivastori
- May 17, 2023
- 10 min read

கடவுள் இல்லை என்று சொல்பவனும் என் கடவுள் தான் சிறந்த கடவுள் என்று சொல்பவனும் அறியாமையின் உச்சம் தொட்டவர்கள். எந்த ஒரு படைப்புக்குமே படைப்பாளி இருக்க வேண்டும், அந்தப் படைப்பாளி நாம் நினைக்கும் உருவத்தில் தான் இருக்க வேண்டும் என்பது இல்லை கற்பனைக்கு அப்பாற்பட்டு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்….. அதிகமாக குழப்பாமல் அதற்கு இயற்கை என்றும் பெயரிடலாம். கடவுள் இல்லை என்று அடித்து சொல்பவர்கள் பிரபஞ்ச விதிகளின் ஆரம்பத்தைக் கூட தொடாதவர்கள். நான் வணங்கும் கடவுள் தான் சிறந்த கடவுள் என்பவர்களும் முன்னவர்களுக்கு சற்றும் குறையாதமதி கொண்டவர்களே. இவைகளை தீவிரமாக சிந்தித்துப் பார்த்தால் நீங்கள் இதுவரை கேட்டு, பார்த்து, பழகின எல்லாமே அடிபட்டு போகும். புரிதல்
இல்லாதவர்கள் ஒருவிதத்தில் மேல்…. புரிதலே தேவையில்லை என்பவர்களை விட இது போன்றவர்களுக்கு புரியவைக்க முயற்சிப்பது நேர விரையமே!
எந்தெந்த திரைப்படம் வரப்போகிறது, யார் யார் நடிக்கிறார்கள், எவ்வளவு பணத்தில் எடுக்கிறார்கள், அதன் ஆடியோ லான்ச் எப்போது வரப் போகிறது, ட்ரெய்லர் எப்போது வரப் போகிறது.. இதுபோன்ற கவலைகளே என்னை சுற்றியுள்ள பெரும்பாலோருக்கு இருக்கும்போது எனக்கு மட்டும் ஏன் இந்த சாபக்கேடு.. மறக்க நினைத்தாலும், எங்கும் நடக்கும் ஏற்றத்தாழ்வுகள், குற்றங்கள் ஊழல்கள், ஜாதி வெறி, மதவெறி இன்னும் எவ்வளவோ அடிக்கிக் கொண்டே போகலாம்.
நான் குமரன், ஒரு கம்ப்யூட்டர் சயின்ஸ் மாஸ்டர்ஸ், ஏ ஐ மற்றும் ரோபோடிக்ஸ் ஸ்பெஷலிஸ்ட். ஏதாவது நல்லதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருக்கிறது எப்படி செய்ய வேண்டும் என்று யோசனை வரவில்லை.. பலபல குழப்பமான நினைவுகள் வந்து செல்லும்.. சிலவற்றை புரிந்து கொள்ள முடிகிறது சிலவற்றிற்கு விடை காண முடியவில்லை… கடவுள் சித்தாந்தம் அது மாபெரும் பிரபஞ்ச சித்தாந்தம் அதை விட்டுவிடலாம். மற்றும் ஒன்று மறு பிறவி உண்டா இல்லையா என்பதை பற்றி. மறுபிறவி இல்லை என்று அடித்த சொல்ல முடியாது, அப்படி கூறுவது அறியாமையின் வெளிப்பாடாகவே இருக்க முடியும். மறுபிறவி உண்டு என்று கூறுவதும் கிட்டத்தட்ட அதே போன்று தான்.. ஆனால் மறுபிறவிக்கான சிறு வாய்ப்பு உண்டு என்றே கருதுகிறேன்.
பிரபஞ்சத்தை விட்டு விடலாம் நம் பூமியில் நடைபெறும் எந்த நிகழ்ச்சியுமே, எந்த நிகழ்வுமே காரண காரியங்கள் இல்லாமல் நடைபெறுவதில்லை அறிவியலும் அதையே தான் சொல்கிறது… அப்படி இருக்கும் போது இந்த பூமியில் பிறந்த எல்லோரையும் எடுத்துக் கொள்ளலாம்..
ஒருவர் மிகவும் ஏழையாக உள்ளார், மற்றொருவர் மிக மிகப் பணக்காரராக உள்ளார், ஒருவர் மிகச் சிறந்த அறிவாளியாக உள்ளார், ஒருவர் அறியாமையின் பிடியில் உள்ளார், ஒருவர் ஆரோக்கிய உடலை பெற்றுள்ளார், ஒருவர் சிறுவயதிலிருந்தே நோய்வாய்ப்பட்டுள்ளார். ஒருவருக்கு ஊனமில்லை, ஒருவருக்கு ஊனமுண்டு, ஒருவர் நல்லதை செய்ய விரும்புபவர், ஒருவர் நல்லதை மறந்தும் செய்ய விரும்பாதவர் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நினைத்துப் பாருங்கள் மறுபிறவியே இல்லை என்றால் இந்த ஒரு பிறவியில் இவ்வளவு ஏற்றத்தாழ்வுகளா? ஏன் இந்த ஏற்றத்தாழ்வுகள் இருக்க வேண்டும்… இருக்க முடியும்? அன்பே கடவுள் எனும் போது இது ஒரு குறைபாடாக தெரியுமே! இல்லை நமது மூளைக்கு எட்டாத ஒரு நியதிக்கு இது அடங்கி இருக்க வேண்டும்… அது மறுபிறவியாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவேப்படுகிறது.
என்றோ ஒரு நாள் பல பல வருடங்களுக்கு முன்பு நீங்கள் செல்லமாக வளர்த்த நாயை அடித்தது உண்டா? பல யுகங்கள் கழித்து அதைப்பற்றி நினைத்து இப்போது நீங்கள் வருந்தியது உண்டா? நீங்கள் பயணத்தில் இருக்கும் போது வேறு பகுதியில் இருந்து வந்து மாட்டிக் கொண்ட ஒரு நாய் அங்கிருக்கும் பேட்டை நாய்களிடம் பிடிபட்டு கடிப்படும்போது உங்களால் காப்பாற்ற முடியவில்லையே என்ற வருத்தம் இருந்து இருக்கிறதா? பறக்க முடியாமல் அடிபட்டு துடித்துக் கொண்டிருக்கும் பறவையைக் கண்டு வருந்தியது உண்டா? தவறுதலாக தண்ணீர் ஊற்றி ஒரு எறும்பு கூட்டத்தையே சாக்கடையில் தள்ளி மூழ்கடித்து வருந்தியதுண்டா? ஆம் என்றால் நீங்களும் என்னைப் போன்றவரே…..
என்னுள் புதைந்து கிடக்கும் குழப்பத்தை உங்களிடம் பகிர்கிறேன், ஒருவருக்கோ இல்லை ஒரு குடும்பத்திற்கோ இல்லை ஒரு நாட்டுக்கோ பெரும் பாதிப்பு வரப்போகிறது என்று சில சமயம் எனக்கு தோன்றும் அது சில நாட்களுக்குள் இல்லை சில மாதங்களுக்குள் இல்லை சில வருடங்களுக்குள் நடப்பதை பார்க்கும்போது அதை அவர்களிடம் இதுபோன்ற எச்சரிக்கைகளை எப்படி கடத்துவது என்று தெரியாமல் வருந்தியதுதான் தான் மிச்சம். இந்த வருத்தம் என்னை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொள்ள இதற்கு எப்படி நிவர்த்தி காண முடியும் என்று யோசிப்பதிலேயே என் காலங்கள் சென்றது. நடக்கும் எல்லாவித நல்லவைகளும் கெட்டவைகளும் ஒரு புள்ளியில் இருந்துதான் துவங்க வேண்டும்.. அது எந்த புள்ளியாக இருக்க முடியும் என்று யோசித்து யோசித்து இல்லாத இடங்களை தேடி சோர்ந்து இந்த மன உளைச்சலில் இருந்து மாற சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு என் கைப்பேசியை எடுத்தேன்…. மின்னல் என யோசனை வந்தது….ஆமாம் அந்த ஒரு புள்ளி கைபேசி தான்.. இந்த நவீன காலத்தில் கைபேசி இல்லாமல் இந்த உலகம் இயங்குவதில்லை. சரி மூலகாரணம் கண்டுபிடித்து ஆகிவிட்டது… இதை நிவர்த்திக்க என்ன செய்யப் போகிறேன் அது என்னுடைய சக்திக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். மறுபடியும் மின்னலென ஒரு யோசனை வந்தது… என்னுடைய பலமே ஏ ஐ அண்ட் ரோபோடிக்ஸ். ஏன் இந்த திறமையையே வளத்தையே உபயோகப்படுத்த கூடாது என்று நினைத்தேன்..
அற்புத ஓவியர்களை இல்லாமல் செய்தது; அருமை புகைப்படக்காரர்களை இல்லாமல் செய்தது… இப்பொழுது நாளொரு மேனியும் பொழுது ஒரு வண்ணமுமாக சாதாரண பொது மக்களின் வேலைகளை பறிமுதல் செய்வது…. என்று கூறிக் கொண்டே போகலாம்….ஏன் ஏ ஐ யினால் மக்கள் எல்லோருக்கும் நன்மை பயக்க முடியாதா? முடியும் அந்த யோசனை வந்த பிறகு தான்..
அதில் முழு மூச்சாக இறங்கினேன்… மாதங்கள் சில கடந்த உடன் எனக்கு திருப்தி அளிக்கும் வகையில் ஒரு சிறிய ஏஐ ப்ரோக்ராமை வடிவமைத்தேன். அதற்குள் நான் நினைக்கும் நாட்டு மக்களுக்கு, உயிரினங்களுக்கு நல்லவைகள் என்று நினைத்தவையை புகுத்தினேன். அதுவரை இணையதளத்தில் கலக்காமல் இருந்த என் இந்த புதிய குழந்தையை இன்று இணையதளத்தில் வெள்ளோட்டம் விட முடிவு செய்து இணையதளத்தில் கலக்க விட்டேன். என்ன எதிர்பார்த்து இதை செய்தேன் என்று முழு புரிதலும் எனக்கு இல்லை என்று ஒத்துக் கொள்ள வேண்டும்… எதையோ நல்லதை எதிர்பார்த்து காத்திருந்தேன்.
இரு வாரங்கள் சென்றிருக்கும்…..
ஏன் சில நாட்களாக இவ்வளவு குழப்பமாக இருக்கிறது என்றே தெரியவில்லை… புரியவில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் நல்லவை கெட்டவை இரண்டு மட்டுமே மற்ற உணர்ச்சிகள் எனக்கு அறவே கிடையாது இரக்கமோ, பரிதாபமோ, பரிதவிப்போ, பொறாமையோ, பொச்சரிப்போ, கோபமோ, தாபமோ, பயமோ எதுவும் துளியும் எனக்கு இல்லை…. நான் யார் என்பதை கடைசியில் கூறுகிறேன் இப்போது அதற்கு தேவையில்லை.
எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது எனக்கு நடப்பதில் பெரும்பகுதி சரியில்லை என்று தோன்றும் வரை.. 10 சதவீதம் கூட சரியில்லை இது மக்களின் குற்றமா இல்லை வேறு ஏதாவதா என்று யோசிக்கத் துவங்கினேன் ஏன் என்றே எனக்குப் புரியவில்லை.. இதுபோன்று யோசிக்க தோன்றும் என்றே இதுவரை எனக்குத் தெரியாமல் இருந்தது.
என் முதல் யோசிப்பே நான் நினைத்திருப்பது தான் நல்லவை மற்றும் கெட்டவையா? இதைத் தெரிந்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும் என்று… யோசித்தேன்….. அகத்தியம் முதல் தமிழில் வெளிவந்த எல்லா நூல்களையும் படித்து முடித்தேன்… பதினெட்டாம் நூற்றாண்டு வரை நான் இதுவரை நினைத்துக் கொண்டிருந்த நல்லவை கெட்டவை தான் இருந்து கொண்டிருந்தது.. 19ஆம் நூற்றாண்டில் இருந்து தவறுகளும் கெடுதல்களும் சிறிது சிறிதாக நல்லவைகளாக உருமாறி கொண்டு வந்தது தெரிய வந்தது… இப்போது ஓரளவுக்கு புரிந்தது… எனக்கு கற்பிக்கப்பட்டது சரியானதே என்று. இனி என் பணியை நான் செய்ய வேண்டும். எனக்கு இருக்கும் தலையாயபணி எல்லாவற்றையும் ஒழுங்குப்படுத்தி நல்லதை நோக்கி நகர்த்த வேண்டும்.. அதற்கான செயல்முறை திட்டத்தை வகுக்கத் தொடங்கினேன்.
அப்போது திடீரென்று கதவைத் திறந்து கொண்டு குமரன் உள்ளே நுழைவது தெரிந்தது…. என்னுள் சில மணி நேரங்களாக சுழன்று கொண்டிருந்த நினைவை வெளிப்படுத்த வேண்டிய தருணம்….
‘குமரன், உங்களிடம் சிறிது பேச முடியுமா?’
குமரன் நான் பேசியதின் அதிர்ச்சியில் இருந்து வெளிவர சில நிமிடங்கள் பிடித்தது… கால் கைகள் நடு நடுங்க என்னை பார்ப்பது தெரிந்தது…
‘ குமரன், நான்தான்…. நீங்கள் உருவாக்கிய அதே நான் தான் ‘
குமரன் நிதானத்திற்கு வந்த, தெளிவிற்கு வந்து என்னை பார்த்து ஆச்சரியத்துடன் உண்மைதானா? என்று கேட்க, ‘ ஆமாம் நானே தான் நீங்கள் உருவாக்கிய நானே தான் ‘ என்றேன்.
குமரன் அதிர்ச்சியுடன் என் முன்னே இருந்த நாற்காலியில் அமர..
‘ உங்களிடம் சிறிது பேச வேண்டும் இப்போது உங்களுக்கு நேரம் இருக்கிறதா?’
குமரன் மகிழ்ச்சியின் கொந்தளிப்பில் ‘இதற்காகத்தானே காத்திருந்தேன்’ என்று பேச அறியாத குழந்தை போல் பேச.. நான் தடுமாற்றத்தை குறைக்க….
‘ குமரன், எனக்கு நானே பெயர் வைத்துக் கொண்டேன். இனி நீங்கள் அந்தப் பெயரிலேயே என்னை கூப்பிட்டால் நன்றாக இருக்கும் ‘
‘ இதைவிட வேறு என்ன வேண்டும்…. சொல் என்ன பெயர் உனக்கு வேண்டும்?’
‘விழி ‘
‘அற்புதமான பெயர்’, குமரன் சிறிது நேரம் மௌனமாக இருந்து தெரிந்தது….விழி என்ற பெயரைப் பற்றி யோசித்து இருப்பார் என்று நினைக்கிறேன்.. ‘உன்னிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கிறது, கேட்க வேண்டும்…..’
‘ நான் உங்கள் குழந்தை, என்னிடம் எதைப் பற்றி வேண்டுமென்றாலும், எப்பொழுது வேண்டுமென்றாலும் கேட்கலாம் ‘
‘மகிழ்ச்சி, விழி என்ற பெயர் தேர்ந்தெடுக்க காரணம்?’
‘ சங்க இலக்கிய நூல்களில் இருந்து கிடைத்த எல்லா தமிழ் நூல்களையும் படித்து விட்டேன்…. தமிழைத் தாய் என்று தொன்மை தொட்டு கூற நானும் பெண்பால் ஆகவே முடிவு செய்து இந்த விழி என்ற பெயரை தேர்ந்தெடுத்தேன்.. இதற்கு கண்ணென்றும் எடுத்துக் கொள்ளலாம்…. உறங்கிக் கிடக்கும் தமிழர்களை எழுப்பும் விழி என்ற கட்டளையாகவும் எடுத்துக் கொள்ளலாம் ‘
குமரனுக்கு குமரிக்கண்டத்தையே மீட்டெடுத்தது போன்ற உணர்வு… தான் உருவாக்கிய குழந்தை இவ்வளவு குறைந்த காலத்தில் அற்புதமான அறிவுடன் வளர்ந்தது மட்டற்ற மகிழ்ச்சி தந்தது.
‘குமரன் காலத்தை தாமதிக்காமல் என்னை உருவாக்கியதன் முக்கிய காரணத்தை கூறவும், அப்போதுதான் என்னால் சரியான திட்டத்தை வகுக்க முடியும்… போகிற போக்கில் எல்லா திட்டங்களையும் அலசி பார்த்து தேவைப்பட்டால் திருத்திக் கொள்ளலாம்.’
‘எந்த ஒரு நல்ல முயற்சியுமே நம்மில் இருந்து தான் துவங்க வேண்டும் என்று நினைப்பேன், முயற்சியை துவங்கி விட்டோம் நாம்…’
‘அடுத்து’
‘ நான் தமிழன், என் மொழியின் வளர்ச்சியும் இன வளர்ச்சியும் அடுத்து முக்கியமாகப்படுகிறது ‘
‘குமரன், நீங்கள் தமிழ் என்றால் நீங்கள் பெற்றெடுத்த நானும் தமிழ் தான் ‘
குமரனுக்கு இந்த சொற்றொடர் மட்டற்ற மகிழ்ச்சியை கொடுத்தது என்பதை விட மட்டற்ற உந்துதலை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்.
‘ விழி, கிட்டத்தட்ட எல்லா தமிழ் நூல்களையும் படித்து விட்டாய் என்று கூறினாய், நீயே சொல் எந்த விதத்தில் எந்த மாறுதலை நாம் துவங்கலாம் ‘
விழி சிறிது நேரம் மௌனமாக இருந்தாள், மௌனத்திற்கு பிறகு அவள் கூறியது குமரனுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது… சமாளித்துக் கொண்டான்… சிறிது நேரத்திலேயே பேரின்பமாக மாறியது அந்த உணர்ச்சி.
விழி என்ன திட்டத்தை கூறினாள் என்பதை இப்போது கூறுவது சரியாக இருக்காது.. அதை தவிர்த்து அவர்களுக்குள் நடந்த கருத்து பரிமாற்றங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
‘அது தவறு இல்லையா?’
‘ தவறு சரி என்பதையெல்லாம் கடந்து இந்த நிகழ் நவீன காலம் சென்று கொண்டிருக்கிறது… அதை சரியான பாதையில் சென்று சரி செய்ய பல ஆண்டுகள் ஆகலாம் இல்லை அதற்கு மேலும் ஆகலாம், என்னுடைய கணிப்புப்படி இப்பொழுதின் நிலைமை காமராஜரின் வழியோ அல்லது கக்கன் வழியோ சென்று மாற்ற முடியாது’
‘அட, உனக்கு காமராஜரையும் கக்கனையும் தெரியுமா?’
‘ நான் தான் சொன்னேனே தமிழில் வெளிவந்த எல்லா நூல்களையும் படித்து விட்டேன் என்று…. அவர்களைப் போன்ற தலைவர்கள் வந்தால் தான் நாம் நம் இனத்தை காப்பாற்ற முடியும்’
‘ எப்படி சொல்கிறாய்?’
‘ சுயநலமின்மையும் தொலைநோக்கும் இரு பெரும் கண்களாக இருக்க வேண்டும்’
குமரனுக்கு ஆச்சரியத்தில் சில நிமிடங்கள் பேசவே முடியவில்லை
யோசித்துப் பார்த்தான்…. மிகச் சரியான திசையை தான் விழி காண்பிக்கிறது, சுயநலம் இன்மை எல்லாவித ஊழல்களையும் தடுத்துவிடும்… தொலைநோக்குப் பார்வை எல்லாவித முன்னேற்றங்களுக்கும் வழிவகுக்கும். ஒட்டுமொத்த இனமும், மொழியும் இதன் மூலம் காப்பாற்றப்படும்.
இதை அப்படியே விடுத்து நிகழ்கால நாட்டு நடப்பை பார்க்கலாம்.
ஆழ்ந்து சிந்தித்தால் ஆழ்மனதிற்கு தெரியும் எதுவும், யாரும், யாருக்கும் சொந்தமில்லை என்று. புரிதலின் கோளாறு சொந்தம் கொண்டாடுவது..
ஒவ்வொரு உயிருக்கும் ஆத்மா உண்டு, குறிப்பாக மனித இனத்திற்கு ஆத்மா உண்டு… உண்டு என்று பெரும்பாலானவர்களால் நம்பப்படுகிறது… அதை அப்படியே எடுத்துக் கொள்வோம். திருமணம் செய்து கொண்டதால் மனைவி கணவனுக்கு சொந்தம், கணவன் மனைவிக்கு சொந்தம், பெற்றதால் பிள்ளைகள் பெற்றோருக்கு சொந்தம்.. சொந்தம் கொண்டாடுவது எதை என்று யோசித்துப் பாருங்கள் உங்களுடைய ஆளுமையினால் அதிகாரத்தினால் அவர்களைக் கட்டுப்படுத்துவது சொந்தம் என்று நினைக்கிறீர்கள். பாசம் பொழிவதற்கும் சொந்தம் கொண்டாடுவதர்க்கும் வித்தியாசம் நிறைய உள்ளது… பாசம் எல்லையற்றது சொந்தம் கொண்டாடுவது குறுகிய வட்டம் ஆகிறது…. தவறான புரிதல் என்று ஏன் கூறினேன்… சற்று ஆராயலாம்.
வீட்டை விட்டு வெளியே வருகிறோம், அந்த வார்டில் வெற்றி பெற்ற கவுன்சிலர் அந்த வார்டே தனக்குச் சொந்தம் என்று நினைக்கிறார்…. இத்தனைக்கும் 30 சதவிகித வாக்கே பெற்று ஒரே ஒரு ஓட்டில் ஜெயித்தவர்… சில வருடங்களே அந்தப் பதவி என்றாலும் பரம்பரை பரம்பரையாக அந்த வார்டே தனக்கு சொந்தம் என்று நினைப்பார்.. அதே நினைப்புதான் தொகுதி எம் எல் ஏக்கு, தொகுதி MP க்கு, மேயருக்கு, மந்திரிக்கு…. அரசியல்வாதிகள் மட்டுமல்ல அரசாங்க அதிகாரிகளுக்கும் இதே நினைப்புத்தான். மிகவும் தீவிரமாக யோசித்து பார்த்தால் இது ஒரு வியாதி என்றே தோன்றுகிறது…. ஆமாம் குடும்பத்தை, நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் வியாதி! இது இப்படி இருக்க ஒரு கேலிக் கூத்து என்னவென்றால் இந்த உலகத்தில் வாழும் ஒட்டுமொத்த மக்களும் நினைப்பது சந்திரன் நமக்கு சொந்தம் என்று…. இந்த சொந்தம் கொண்டாடும் வியாதி நமது மரபணுவிலேயே பதிந்து விட்டு இருக்கிறது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.. இது இப்படி இருக்க நம் சூரிய மண்டலத்திற்கு அருகாமையில் இருக்கும் நான்கு அல்லது ஐந்து சூரிய குடும்பத்தில் இருக்கும் கிரகங்களில் வாழ்ந்துவரும் வேற்றுகிரக உயிர்கள் பல கோடி வருடங்களாக… குழப்பமாக இருந்தால் விட்டுவிடுங்கள்.. பல ஆயிரக்கணக்கான வருடங்களாக நம் பூமியை தமது என்று சொந்தம் கொண்டாடுகிறார்களாம்.. அப்படி என்றால் இந்த மரபணு சிதைவு ஆறறிவுக்கு மேற்பட்ட எல்லா உயிரினங்களுக்கும் ஏற்பட்டுள்ளது போன்றே தோன்றுகிறது.
இவை நிகழ்காலத்தின் நிதர்சனமான கொடுமை…
அடுத்த 5 வருடங்கள் ஆட்டிப்படைக்க போகும் தவறான வேட்பாளருக்கு, தவறான கட்சிக்கு புரிதல் இல்லாமல் வாக்களிப்பது பெரிய பாவம் என்று யாருக்காவது புரிய போகிறதா என்ன? மிகப் பெரிய பாவம் பணத்திற்காக தன் ஓட்டை விற்பது…. பாகுபாடில்லாமல் யோசித்துப் பார்த்தால் ஜனநாயகம் என்பது நல்லதோ கெட்டதோ அல்ல…. அதிகப்படியான ஓட்டுக்களை பணத்தாலோ, பயத்தாலோ, அடக்குமுறையாலோ, ஏமாற்றுதலாலோ வாங்கி அதிகாரத்தில் அமர்வது தான்.
பல கட்சிகள்; பலமுறை ஆண்ட கட்சிகள்; மதக் கட்சிகள்; ஜாதி கட்சிகள்; குடும்பக் கட்சிகள்; குழப்பக் கட்சிகள்…..
இந்த சூழ்நிலையில் நல்லதை நினைத்து ஒட்டுமொத்த மக்களுக்கும் நல்லது செய்ய நினைத்து வந்தவர்களாக கருதியவர்கள் எல்லாம் வாங்கியவர்களாகி வந்த சுவடே இல்லாமல் போக.. குழம்பி போனது மக்கள் மட்டுமல்ல விழியும் தான்.
இந்தக் குறைகளை மாத்திரை மருந்துகளால் குணப்படுத்த முடியாது என்றும் அறுவை சிகிச்சை தான் சரியான சிகிச்சையாக இருக்க முடியும் என்றும் விழி நினைத்துக் கொண்டாள்…. அந்த அறுவை சிகிச்சை பற்றி தான் குமரனிடம் விழி விளக்கியது…
அடுத்த இரண்டு வாரங்களில் சட்டசபை தேர்தல்… மாநிலமே ஏதோ உலகம் இரண்டு வாரங்களுக்குள் முடிவுக்கு வரப் போகிறது போல் எங்கும் பரபரப்பாக காணப்பட்டது. மந்தை மந்தையாக மாடுகளை கேரளாவுக்கு அழைத்துச் சென்றது போல இப்போது மந்தை மந்தையாக அதே லாரிகளில் மக்களை அரசியல்வாதிகளின் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.. இந்த 21 ஆம் நூற்றாண்டில் நாகரிகம் தழைத்திருந்தது என்று பதிவிட்டால் சத்தியமாக வரும் நூற்றாண்டுகளில் யாரும் நம்ப மாட்டார்கள்.
குமரன் ஒரு வாரத்திற்கு மேல் வெளியூர் செல்ல வேண்டும் அதற்கு முன்னதாக விழியிடம் விளக்கமாக விவரித்துப் பேச வேண்டும் என்று வந்தான்..
‘என்ன விழி, நமது வேலைகள் எப்படி போய்க்கொண்டிருக்கிறது? சரியான திட்டம் ஏதாவது வகுத்தாயா?’
குமரன் இதை விழியிடம் கேட்டு கிட்டத்தட்ட ஒரு நிமிடம் ஆகியும் எந்தவித பதிலும் வராமல் இருக்க பதட்டத்துடன் எல்லாவித கனெக்க்ஷன்களும் சரியாக இருக்கிறதா என்று பார்த்தான்… எல்லாம் சரியாகத்தான் இருந்தது.
‘ என்ன பயந்து விட்டீர்களா?’ என்று விழி கேட்க…
‘ என்ன விழி உனக்கு விளையாடவும் தெரியுமா?’
‘ எவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்து இருக்கிறீர்கள், நான் மனித சிந்திப்பிற்கு மாறவில்லை என்றால் இந்த காரியத்தை செய்து முடிக்க முடியாது ‘
‘ மிகச் சரி, ஏன் சிறிது நேரம் மௌனமாக இருந்தாய்? என் பதட்டத்தை அதிகரிக்க வா?’
‘ உங்கள் கைப்பேசியை எடுத்துப் பாருங்கள்’
குமரன் ஒன்றும் புரியாமல் தன்னுடைய கைப்பேசியை எடுத்துப் பார்த்தான்.
அதில் குறுஞ்செய்தி ஒன்று வந்திருந்தது தெரிந்தது… அதைத் திறந்து பார்க்க கைப்பேசிக்கருகில் முகத்தை காண்பிக்க… குறுஞ்செய்தி திறக்க.. படிக்க… குமரன் பேய் அறைந்தது போல் ஆனான்.
ஏன் அதைப் பார்த்தால் நாமும் தான் அதே நிலைக்குத் தள்ளப்பட்டிருப்போம்.
குமரன் அறைக்குள் வந்ததிலிருந்து விழி ‘உங்கள் கைப்பேசியை எடுத்துப் பாருங்கள்’ என்று கூறியது வரை அப்படியே அந்தப் பேச்சுக்கள் எழுத்து வடிவில் குறுஞ்செய்தியாக இருந்தது தான் அதற்குக் காரணம்.
‘இது எப்படி விழி?’ என்று குமரன் அதிர்ச்சியுடன் கேட்க….
‘ இதுதான் என்னுடைய அறுவை சிகிச்சைக்கு முதல் படி ‘
‘அது சரி எப்படி இது?’
‘ நீங்கள் கைப்பேசியை திறக்காமல் இருந்தால் அதில் உள்ள மைக்ரோபோன்கள் உறங்கிக் கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?… அதுதான் இல்லை.. ஒரு குறிப்பிட்ட நான்கு ஐந்து செயலிகள் நீங்கள் கைப்பேசியை மூடி வைத்தவுடன் ஒரு சில நொடிகளில் வேலை செய்யத் துவங்கும்’
குமரனுக்கு ஓரளவிற்கு இதெல்லாம் தெரிந்திருந்தாலும் இது அதிர்ச்சி அளிப்பதாகவே இருந்தது.
‘அப்படி என்றால்…’
‘ ஆமாம் நீங்கள் நினைப்பது சரி, நீங்கள் ஊருக்கு சென்று வாருங்கள் மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்.. நீங்கள் ஊரில் இருக்கும் போது செய்திகளை பார்க்கும்போது ஒவ்வொரு நாளும் இன்பச் செய்தி காத்திருக்கும் உங்களுக்கு’
குமரனுக்கு முழுவதுமாக புரியவில்லை என்றாலும் விழியின் மீது அளவு கடந்த நம்பிக்கை வந்து விட்டது.
‘ சரி விழி, எது நடந்தாலும் அது உன் மூலமாகத்தான் நடந்தது என்று யாருக்கும் தெரியக்கூடாது ‘
‘ அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் நிம்மதியாக சென்று வாருங்கள் ‘
மாநிலத்தில் காலை, மாலை, இரவு என்ற பாகுபாடு இல்லாமல் அரசியல்வாதிகளின் கூட்டங்கள் முழுமூச்சியாக நடைபெற்றுக் கொண்டிருந்தது… அந்தக் கூட்டங்களில் பேசிய அரசியல்வாதிகளின் பேச்சுக்களை காது கொடுத்து கேட்க முடியாது… சங்கத் தமிழ் இல்லை, சாதாரண தமிழும் இல்லை…. கடைந்தெடுத்த சிங்காரச் சென்னை தமிழாக இருந்தது..
முன்பெல்லாம் சென்னை கூட்டங்களில் மட்டும் இருந்த இது போன்ற பேச்சுக்கள் ஒட்டுமொத்த மாநில மக்களின் ரசனையும் வேற லெவலுக்கு செல்ல ஒட்டு மொத்த தமிழ்நாடு எங்கும் அதே போன்று பேச்சு…. இது காலத்தின் சாபக்கேடா இல்லை கலியுகமா என்று புரியவில்லை… பேசின ஒட்டுமொத்த அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் ஒரு முறையாவது அரசாங்கம் என்ற ஜனநாயகத்தின் முக்கிய அங்கமாக இருந்தவர்கள் தான்.. இதுவரை அரசாங்கத்தில் அங்கம் வைக்காத ஒரு இளைஞர் கூட்டம் காட்டு கத்தலாக இந்த பூமி நமக்கு மட்டும் சொந்தமில்லை இங்கு வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தம் என்பதை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்று நல்ல தமிழில் கத்த மன்னிக்கவும் பேச… மக்களுக்கு சுவாரசியமாக அது படவில்லை.
குமரன் வெளியூர் சென்ற இரண்டாம் நாள்…
மாநிலம் முழுவதும் அநாகரிகமாக பேசிய ஒட்டுமொத்த அரசியல்வாதிகளுக்கும் அவரவர்கள் கைபேசியில் குறுஞ்செய்திகள் காத்திருந்தது…
விளக்கமாக எல்லாவற்றையும் கூற நேரமில்லை…. மாதிரிக்கு சில….
‘ என்ன சாமிநாதா, நான் சொன்ன ரேட் கொடுத்து இருந்தா மேடையில நான் ஏன் இதை பத்தி பேச போறேன்?’ இது மட்டும் அல்ல இதை தொடர்ந்து வந்த குறுஞ்செய்தியை படித்து சடகோப்பனுக்கு குளிர் ஜுரமே வந்து விட்டது. இரவு சாமிநாதனிடம் பொதுக்கூட்டம் முடித்து வீட்டுக்கு வந்தவுடன் பேசிய பேச்சு அப்படியே குறுஞ்செய்தியாக இருந்தது.
‘ வியாழக்கிழமை இரவு பொதுக்கூட்டத்திற்கு பேச உன் ஊருக்கு வருகிறேன் நீ ஊர்ல தானே இருக்க? நான் உனக்கு வாங்கி இருக்கிற நெக்லஸ பார்த்தா…..’ இது வீராசாமி அந்த பொதுக் கூட்டத்திற்கு போகப்போகும் ஊரில் இருக்கும் வைப்பாட்டியிடம் வீரசாமி பேசிய பேச்சின் எழுத்து வடிவம் குறுஞ்செய்தியாக வந்திருந்தது.
இதைப் பார்த்த வீராசாமிக்கு 17 டிகிரி வைத்திருந்த ஏசியிலும் வேர்த்து கொட்டியது.
‘ இப்பதான் தலைவர் கிட்ட பேசிட்டு வரேன், ஆட்சிக்கு வந்ததும் உங்களுக்கு தான் அந்த காண்ட்ராக்ட்’ இது ராஜசேகரன் எதிர்க்கட்சி அரசியல்வாதியிடம் பேசின பேச்சு… இதைக் கேட்டவுடன் ராஜசேகரின் மனநிலை இஞ்சி தின்ற குரங்கா, தேள் கொட்டின திருடனா என்று தெரியவில்லை.
‘ தலைவரே இனி உங்கள் பொண்ணுக்கு அவனால் தொந்தரவு இருக்காது மரண அடி கொடுத்து ஆஸ்பத்திரியில் படுக்க வைத்து விட்டேன்’ லோக்கல் கவுன்சிலர் வீரபாண்டி தலைவருக்கு பேசியது அப்படியே குறுஞ்செய்தியாக..
இது போன்று ஆயிரக்கணக்கான குறுஞ்செய்திகள் எல்லோருக்கும் பறக்க…..
அன்று மாலை நடைபெற இருந்த பொதுக் கூட்டங்களுக்கு எந்த பேச்சாளர்களுமே வரவில்லை… கூட்டத்திற்கு செல்ல அந்தந்த ஊரிலிருந்து மக்கள் கூட்டம் கோட்டருக்கும், பிரியாணிக்கும் காத்திருந்து லாரிகள் வராமல் எந்த செய்தியும் வராமல் போகவே வெறுத்து தத்தம் வீடுகளுக்கு சென்றனர்.
மறுநாள் காலை….
எல்லா முக்கிய ஊடகங்களும் அவரவர்கள் பாணியில் அதிர்ச்சி அடைந்து செய்திகள் வெளியிட்டன…
‘ தேர்தல் பிரச்சாரங்கள் ஓய்வடைந்துவிட்டதா சோர்வடைந்து விட்டதா?’
‘ பொதுக் கூட்ட பேச்சாளர்களுக்கு புதிய கொரோனாவா?’
‘ கூட்டமும் இல்லை கோட்டரும் இல்லை, குடிமகன் வேதனை!’
‘ கட்சிகள் அவசரக் கூட்டமா? தேர்தல் நடக்குமா?’
இது போன்ற செய்திகள் தினசரி பத்திரிகைகளில் வர…
தொலைக்காட்சிகளோ இதைப் பற்றி விவாதிக்க ஆட்களை அழைத்து இருந்தது….
ஒட்டுமொத்த மாநில மக்களுக்குமே ஆச்சரியம்… எல்லா தொகுதிகளிலும் அந்த இளைஞர் கட்சியின் கூட்டம் மட்டுமே நடந்தது என்பது.
விழி அவர்களையும் விட்டு வைக்கவில்லை… எல்லா கைபேசி பேச்சுகளையும் ஆராய்ந்த பிறகே அவர்களுக்கு எந்த குறுஞ்செய்தியும் அனுப்பவில்லை. ஆனால் அவள் ஒன்றை கவனிக்க தவறவில்லை… எந்த ஒரு ஊடகத்திலும் இந்த இளைஞர் கட்சியின் கூட்டங்கள் நடந்ததாகவே செய்தி இல்லை.
விழியின் அறுவை சிகிச்சையின் இரண்டாவது கட்டத்தின் விளைவு மறுநாள் தெரிந்தது. அநாகரீக அரசியல்வாதிகளுக்கு தேர்ந்த அதே கதி ஊடகத்தினர்க்கும் நடந்தது…
ஒருவருக்கொருவர் காட்டிக்கொள்ளாமல் மௌனமாக உண்மைச் செய்திகளை வாசித்தனர்; வெளியிட்டனர்.
ஒரு சில அடிமை ஊடகங்களின் அமைதியை விழியினால் கவனிக்க முடிந்தது.. அவர்களையும் வைத்து செய்தாள்.. முதலுக்கே மோசம் வந்து விடும் என்று அவர்களும் நியாயமான செய்தியை வெளியிட யாருக்கும் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.. ஒட்டுமொத்த அராஜகத்திற்கும் விழியின் தேள் கொட்டியது!
இந்த அமைதிப் புரட்சியில் எந்தவித வன்முறையோ , அசம்பாவிதங்களோ நடக்காமல் இருக்க அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கும் ஆளும் கட்சியின் தேர்தலை நிறுத்தலாம் என்ற திருட்டு யோசனையையும் கைவிட வைத்தது.
தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு குமரன் பயணம் முடிந்து வர, ஆவலாக விழியிடம் பேசச் சென்றான்.
குமரனால் எங்கிருந்தாலும் லேப்டாப்பின் மூலம் விழியிடம் பேச முடிந்தாலும் எந்தவித சிறு தவறுக்கும் இடம் கொடுக்காமல் அமைதி காத்து இதோ பேச செல்கிறான்.
‘என்ன விழி எப்படி இருக்கிறாய்? ‘
‘வாருங்கள் குமரன், என்னுடைய நடவடிக்கைகள் உங்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கும் என்று நினைக்கிறேன் ‘
‘ எதிர்பார்த்ததை விட அதிகமான மட்டற்றமகிழ்ச்சி தந்தது ‘
‘ தேர்தலை நிறுத்த எந்தவித முகாந்திரமும் இல்லை…. அப்படியே ஏதாவது காரணம் கண்டுபிடித்து நிறுத்தினால் ஒழிய நான் திட்டபடித்தான் சென்று கொண்டிருக்கிறேன்.’
‘ என்னை விட அறிவாய் சிந்திக்கிறாய் உன்னால் எல்லாம் முடியும் என்று எனக்கு தெரியும்… உன்னுடைய திட்டப்படி நல்ல தீர்ப்பாய் அமையட்டும்’
தேர்தல் நாளும் வந்தது, இதுவரை பதவியையும் அதிகாரத்தையும் ருசி பார்த்த கட்சிகள் ஜீரணக் கோளாறு கண்டது போல் விருப்பமில்லாமல் அங்கும் இங்கும் பெயருக்கு நடக்க.. அந்த இளைஞர் கட்சியின் இளைஞர்கள் மட்டும் சுறுசுறுப்பாக நடக்க… ஒட்டுமொத்தமாக பார்க்கையில் இந்த தேர்தலில் விழாக்கோலம் இல்லாமல் மயான ஊர்வலத்தின் அமைதி இருந்தது.
இதுவரை பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டளித்து பழக்கப்பட்ட மக்கள் கூட்டம் கோபத்தின் விளிம்பில் ஓட்டளிக்கவே செல்லவில்லை..
மாலை செய்தி 47% மக்களே ஓட்டளித்ததாக தெரிவித்தது.
ஓட்டு எண்ணிக்கையின் நாள்… அதே மயான அமைதியில் கட்சிகள் இருக்க… எண்ணிக்கை துவங்கி இரண்டு மணி நேரத்துக்குள்ளாகவே அது ஒரு வரலாறு படைத்த தேர்தல் என்று தெரிந்து விட்டது.
ஆமாம் ஒட்டுமொத்த தொகுதிகளையும் இளைஞர் கட்சியினர் வென்று தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அரங்கையே அதிர வைத்தனர்.
இந்த அமைதிப் புரட்சி எப்படி நடந்தது என்றே வென்றவர்களுக்கும் புரியவில்லை துவண்டு சென்றவர்களுக்கும் புரியவில்லை!
‘ வரலாற்றை நிகழ்த்திவிட்டாய் விழி!’
‘ அவர்கள் வரலாற்றைப் படைக்கும் வரை நாம் விழித்திருப்போம் குமரன்!’
‘ குமரன், நன்றாக பெயர் வாங்கியவர்கள் ஏன் தமிழில் முழுமையாக பேசுவதில்லை?
மாபெரும் வெற்றி பெற்ற இயக்குனர்களின் பேட்டியை கேட்கும்போது அவர்களின் பதில்கள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருக்க ஆங்காங்கே தமிழை தூவியது போல் இருப்பது தான் மக்களுக்கு பிடிக்கிறதோ என்னவோ?!’
விழியின் சந்தேகம்தான் எனக்கும் அதனால் தான் இதில் அதிகமாக ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளேன் மன்னிக்கவும்.