top of page
Search

நெஞ்சம் உண்டு, நேர்மை இல்லை!

  • melbournesivastori
  • Jan 15, 2022
  • 9 min read

இங்கு கோயில் கட்ட யாருக்கு ஏன் தோன்றியது என்று தெரியவில்லை.. இது ஒரு சிறிய மலை குன்று… கிட்டத்தட்ட என்பது சதவிகித உயரத்தில் அந்த சிறு முருகர் கோவில் இருந்தது. இளம் வயதில்…. 20 வயதுக்குள் இருக்கும் என்று நினைக்கிறேன் அப்போதுதான் முதல்முறையாக வந்தேன்… அதன் பிறகு இதோ இப்போது ஓய்வு பெற்ற பிறகு வர நினைத்து வாழ்க்கை வெறுக்க துவங்கியபோது… வெறுக்க என்று நான் சொல்வது தவறான வார்த்தை…. போரடிக்க துவங்கியபோது அதே முருகனை நாடி வருகிறேன். சிறிய படிக்கட்டுகள் செங்குத்தாகவும் இருந்தது… வயதான காலத்தால் ( நம் முன்னோர்கள் கேட்டால் சிரிப்பார்கள் இது ஒரு வயதா என்று ) ஏறுவது சற்று சிரமமாக இருந்தது.

ஆழ்ந்து சிந்தித்தால் ஆழ்மனதிற்கு தெரியும் எதுவும், யாரும், யாருக்கும் சொந்தமில்லை என்று. புரிதலின் கோளாறு சொந்தம் கொண்டாடுவது..

ஒவ்வொரு உயிருக்கும் ஆத்மா உண்டு, குறிப்பாக மனித இனத்திற்கு ஆத்மா உண்டு… உண்டு என்று பெரும்பாலானவர்களால் நம்பப்படுகிறது… அதை அப்படியே எடுத்துக் கொள்வோம். திருமணம் செய்து கொண்டதால் மனைவி கணவனுக்கு சொந்தம், கணவன் மனைவிக்கு சொந்தம், பெற்றதால் பிள்ளைகள் பெற்றோருக்கு சொந்தம்.. சொந்தம் கொண்டாடுவது எதை என்று யோசித்துப் பாருங்கள் உங்களுடைய ஆளுமையினால் அதிகாரத்தினால் அவர்களைக் கட்டுப்படுத்துவது சொந்தம் என்று நினைக்கிறீர்கள். பாசம் பொழிவதற்கும் சொந்தம் கொண்டாடுவதர்க்கும் வித்தியாசம் நிறைய உள்ளது… பாசம் எல்லையற்றது சொந்தம் கொண்டாடுவது குறுகிய வட்டம் ஆகிறது…. தவறான புரிதல் என்று ஏன் கூறினேன்… சற்று ஆராயலாம்.

வீட்டை விட்டு வெளியே வருகிறோம், அந்த வார்டில் வெற்றி பெற்ற கவுன்சிலர் அந்த வார்டே தனக்குச் சொந்தம் என்று நினைக்கிறார்…. இத்தனைக்கும் 30 சதவிகித வாக்கே பெற்று ஒரே ஒரு ஓட்டில் ஜெயித்தவர்… சில வருடங்களே அந்தப் பதவி என்றாலும் பரம்பரை பரம்பரையாக அந்த வார்டே தனக்கு சொந்தம் என்று நினைப்பார்.. அதே நினைப்புதான் தொகுதி எம் எல் ஏக்கு, தொகுதி MP க்கு, மேயருக்கு, மந்திரிக்கு…. அரசியல்வாதிகள் மட்டுமல்ல அரசாங்க அதிகாரிகளுக்கும் இதே நினைப்புத்தான். மிகவும் தீவிரமாக யோசித்து பார்த்தால் இது ஒரு வியாதி என்றே தோன்றுகிறது…. ஆமாம் குடும்பத்தை, நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் வியாதி! இது இப்படி இருக்க ஒரு கேலிக் கூத்து என்னவென்றால் இந்த உலகத்தில் வாழும் ஒட்டுமொத்த மக்களும் நினைப்பது சந்திரன் நமக்கு சொந்தம் என்று…. இந்த சொந்தம் கொண்டாடும் வியாதி நமது மரபணுவிலேயே பதிந்து விட்டு இருக்கிறது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.. இது இப்படி இருக்க நம் சூரிய மண்டலத்திற்கு அருகாமையில் இருக்கும் நான்கு அல்லது ஐந்து சூரிய குடும்பத்தில் இருக்கும் கிரகங்களில் வாழ்ந்துவரும் வேற்றுகிரக உயிர்கள் பல கோடி வருடங்களாக… குழப்பமாக இருந்தால் விட்டுவிடுங்கள்.. பல ஆயிரக்கணக்கான வருடங்களாக நம் பூமியை தமது என்று சொந்தம் கொண்டாடுகிறார்களாம்.. அப்படி என்றால் இந்த மரபணு சிதைவு ஆறறிவுக்கு மேற்பட்ட எல்லா உயிரினங்களுக்கும் ஏற்பட்டுள்ளது போன்றே தோன்றுகிறது.

என்னப்பன் ஞானபண்டிதன் முருகனை பார்க்கச் செல்லும்போது ஏன் இந்த தேவையற்ற சிந்தனைகள் மனதில் வந்து போகிறது என்றே தெரியவில்லை. இதுவும் முருகனின் தந்தை சிவபெருமானின் திருவிளையாடலோ என்னவோ……. நம்மை நாமே அறிவாளிகளாகவும் ஆற்றல் மிக்கவர்களாகவும் நல்லவர்களாகவும் எல்லாம் தெரிந்த ஞானிகளாகவும் நினைத்துக் கொள்வது பிரச்சனைகள் இல்லாத போது வரும் நினைவுகள்.. இதில் தப்பிப்பார் பொதுவாக யாரும் இல்லை, இருப்பதற்கும் வாய்ப்பில்லை.

இதே போன்று தான் பொறாமை, கோபம், வஞ்சம், எரிச்சல் அடைவது போன்ற மனோபாவங்களும்… கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் உங்களுக்கான கோபம் நீங்கள் கோபம் ஊட்டியவராக கருதப்படுவரை தண்டிப்பதாக நினைத்து நீங்கள் உங்களுக்கே கொடுத்துக் கொள்ளும் தண்டனை. பொறாமை மற்றும் வஞ்சம் மனதிற்கு புற்றுநோய் போன்றது….. இத்தகைய நினைவுகளை அசைபோட்டு தெளிபவர்கள்… மன அமைதியை நாடி செல்வார்கள்.

நான் வாழ்க்கையை முழுவதுமாக வாழ்ந்துவிட்டேன் என்றே நினைக்கிறேன்… அதனால்தானோ என்னவோ சில மாதங்களாக இக்கணமே இறந்து விட்டாலும் வருத்தப்படுவதற்கோ இழப்பதற்கோ ஏதுமில்லை என்று தோன்றுகிறது. பாதி தூரம் ஏறி வந்துவிட்டேன்.. இங்கிருந்து பார்க்கும்போது அந்த பொற்கோவில் அழகாக தெரிந்தது… அப்போது எண்பத்தி ஆறு எண்பத்தி ஏழுகளில் எனக்கு ஏற்பட்ட சிறு அனுபவம் நினைவில் வந்து சென்றது.ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி ஆறு பின்பகுதியோ எண்பத்தி ஏழின் பின்பகுதியோ சரியாக நினைவில்லை,

மாலை சுமார் 5 மணி அளவில் என் அண்ணனின் நண்பர் ராணுவத்தில் பணிபுரிகிறவர் வீட்டுக்கு வந்திருந்தார்.. அவர் பேசுகையில் ராணுவ எல்லையில் பயன்படுத்தப்படும் வினோத சிக்னல் வெடிபொருட்களை பற்றி குறிப்பிட்டு அன்று இருட்டத் துவங்கியதும் தன்னுடன் வைத்துள்ள ஒன்றிரண்டை வெடித்துப் பார்க்கலாம் என்றும் கூறினார்… அந்த சமயத்தில் என் நண்பனும் வர, சுமார் மணி ஆறு முப்பது இருக்கும்… மற்றொரு அண்ணனும் சேர 5 பேரும் தோட்டத்திற்குச் சென்று அண்ணனின் நண்பர் ஒரு கடப்பாரையை தரையில் செருகி அந்த வெடியை சேர்த்துக் கட்டினார்… அப்போதுதான் கவனித்தோம்.. இது நடந்தது வேலூரில்… நான்கு பேரும் என்ன ஏது என்று புரியாமல் பார்த்தது, விசித்திரமாக கால்பந்து அளவில் ஆரஞ்சு கலரில் மெதுவாக வானத்தில் நகர்ந்த அந்த 3 ஒளி உருண்டைகளை பார்த்துத்தான்….. சுமாராக சொல்லவேண்டுமென்றால் நாங்கள் இருந்த இடத்திற்கும் அந்த ஒளி உருண்டைகளுக்கும் இடைவெளி ஒரு மூன்று கிலோமீட்டர்கள் இருக்கும்.. மெய்மறந்து பார்த்துக் கொண்டிருக்கும்போதே மெதுவாக மூன்றும் நகர்ந்து ஊசூர் மலை அடிவாரத்தில் மறைந்தது… மற்ற மூவரும் அன்றைய பேச்சிலேயே ஒரு சில மணி நேரங்களில் அதைவிட்டு வேறு விஷயங்களை பேச… நான் மட்டும் மறுநாள் செய்தித்தாள்களில் அதைப் பற்றி தேட எந்த செய்தியும் எங்கும் வரவில்லை…

ஏனோ மனது வேற்றுகிரகவாசிகளை பற்றித்தாவியது…. பல வருடங்களாக ஏலியன்களை பற்றிப் பல பல காணொளிகளை புத்தகங்களை படிக்க படிக்க நிறைய யோசனைகளும் சந்தேகங்களும் தான் வந்ததே ஒழிய ஒரு முடிவுக்கு வர முடியவில்லை…நம் வரலாற்றை நாம் தவறாக தெரிந்து; புரிந்து கொண்டுள்ளோம் என்று நினைக்கிறேன். என்ன எங்கெங்கோ செல்கிறேன் என்று நினைக்கிறீர்களா? விவரமாக சொல்கிறேன்… இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைந்து விட்டோம்.. கண்ணெதிரே இருக்கும் கீழடிக்கு வயதை நிர்ணயிக்க போராடுகிறோம்.

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா என்று பழக்கத்தில், புழக்கத்தில் சொல்லி வைத்த நாம் கீழடிக்கு அங்கீகாரத்தை யாராவது தர மாட்டார்களா என்று ஏங்குவது நம் பரிதாபமான நிலையை காண்பிக்கிறது…. ஒரு சிறிய விளக்கம் தருகிறேன்… ஒருவர் முனைவர் பட்டம் பெற (Phd) குழந்தைப் பருவத்திலிருந்து எல்லாவற்றையும் கல்லூரி மேற்படிப்பு வரை கற்க வேண்டும் பிறகு ஒரு பிரிவை ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டு ஆராய்ந்த பிறகு அந்த ஆராய்ச்சிக் கட்டுரையை சமர்ப்பித்து வெற்றி பெற்ற பிறகே முனைவர் பட்டம் கிடைக்கும். இதன் அடித்தளம் கல்வியின் கட்டமைப்பு அது ஓரிரு ஆண்டுகளில் நிகழக்கூடியது அல்ல.. நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் தொகுப்பு.

திருவள்ளுவரின் காலத்தை போகிற போக்கில் சுமாராக 2100 ( கிமு 100) என்று நிர்ணயித்தார்கள்.. அந்த மகான்; அந்த சித்தன்; அந்தப் பெரும் கல்வியாளன் எதைப் பற்றி எழுதாமல் விட்டான்? இவர்களெல்லாம் சொல்வது போலவே சுமார் இரண்டாயிரத்து 150 வருடங்களுக்கு முன்பு இருந்ததாகவே வைத்துக் கொள்ளலாம்… அவ்வளவு அற்புதமான திருக்குறள்களை இயற்ற, எழுத எவ்வளவு அறிவு இருந்திருக்க வேண்டும், அந்த அறிவினைப் பெற அக்காலத்திய கல்வி கட்டமைப்பு எப்படி இருந்திருக்க வேண்டும்… அந்தக் கல்வி கட்டமைப்பை அமைக்க எவ்வளவு அற்புதமான சமுதாய கட்டமைப்பு இருந்திருக்கவேண்டும்? இவைகளெல்லாம் உரு பெற சில ஆயிரம் வருடங்களாவது எடுத்திருக்கும். இப்போது நினைத்துப் பாருங்கள் நம் பண்டைய தமிழ் நாகரிகம் எவ்வளவு ஆயிரக்கணக்கான வருடங்கள் கடந்து, சுமந்து வந்துள்ளது என்று.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடியவர்கள் நாம்,

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்று சொன்னவர்கள் நாம்,

எம்மதமும் சம்மதம் என்று மதத்தை தாண்டி மனிதத்தை போற்றியவர்கள் நாம்!

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்னவர்கள் நாம்!

இருந்த இடத்திலிருந்து தூரதேசம் காண்பேன் ( இது அமெரிக்காவும் ரஷ்யாவும் பலப்பல ஆண்டுகள் கடுமையான ஆராய்ச்சிக்குப் பிறகு கண்டுபிடித்த ரிமோட் வீவிங் தான் ) என்றார் திருமூலர்.

முதலில் தோன்றியது ஒரு செல் உயிரினம் என்று மேலைநாடுகளின் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுவதற்கு முன்பே அன்றே சொன்னான் தொல்காப்பியன்.

பகுத்தறிவு எல்லா உயிரினங்களுக்கும் உள்ளது என்ற புரட்சிக் கருத்தை சொன்னவன் நம் தலைசிறந்த மண்ணின் மைந்தன் தொல்காப்பியன்!

சிவன் தோற்றுவித்த நம் மொழியை; இனத்தை; வரலாற்றை; நாகரீகத்தை அளவிட கணக்கிட மானிடர்க்கு ஏது அறிவு? அன்பே சிவம் என்று போற்றிய நாம் நாகரீக கலாச்சாரத்தின் அடையாளம்!

ஏலியன்களின் ஒத்துழைப்பும் கற்பித்தலும் நம் முன்னோர்களுக்கு இருந்திருக்குமா? ஏன் இந்த கேள்வி என் மனதில் தோன்றுகிறது என்றால்…. சுமார் 300 வருடங்களாக நமது கலாச்சார சமுதாய முன்னேற்றங்கள் தடைப்பட்ட நிலையிலேயே இருந்துள்ளது.. இதுபோன்ற சம்பந்தமே இல்லாத பல நினைவுகள் வந்து வந்து சென்றது… அதில் குறிப்பிட்டு ஒன்று சொல்ல வேண்டுமென்றால் இரு தினங்களுக்கு முன்பு படித்த ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் பற்றிய கட்டுரை… அதில் கூறப்பட்ட சாராம்சம் என்னவென்றால் செயற்கை அறிவு ஒரு கட்டத்தில் நம் கட்டுப்பாட்டை மீறி செல்லக்கூடும் என்று… இதையேதான் டெஸ்லா ஓனர் இலான் மஸ்க்கும் காலஞ்சென்ற ஸ்டீபன் ஹாக்கிங்கும் தங்களது எண்ணங்களை சேர்க்கை அறிவைப் பற்றி பகிர்ந்தனர். 2 உதாரணங்களை மட்டும் பகிர்கிறேன்…

செயற்கை அறிவு சாப்ட்வேர் உள்ளடக்கிய ட்ரோன்களை ஒரு கலவரத்தை அடக்க பயன்படுத்தப்பட்டது என்று வைத்துக்கொள்வோம்… காவல்துறையில் ஒருவருடைய மிகப்பழமையான ரெக்கார்ட்ஸ் இருந்து பொய் வழக்குகளாலோ அல்லது உண்மையாகவே ஒரு பயங்கரவாதியாக சித்தரிக்கப்பட்டு இருந்தால்…. அந்த ட்ரோனின் கண்ணில் பட்டால் ( லென்ஸ்) அல்காரித முறைப்படி அதுவே கணக்கிட்டு அவர் இருப்பது நல்லதல்ல என்று முடிவெடுத்து கொன்றுவிடும்….

பிரச்சினை என்னவென்றால் அந்த நபர் அதன் பிறகு தண்டனை அனுபவித்து வெளியே வந்தவராக கூட இருக்கக்கூடும்…. இந்த இடத்தில் அந்த ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்க்கு மனிதத்தின் ஜட்ஜ்மென்ட்… இறக்கத்துடன் சூழ்நிலையுடன் சீர்தூக்கிப்பார்க்கும் மனநிலை இருக்காது…. இது உங்களுக்கு குழப்பமாக பட்டால் வேறு ஒரு சிறிய உதாரணத்தை தருகிறேன்…

இன்னுமொரு 100 வருடங்களில் எல்லோர் வீட்டிலும் இப்போது ரோபோ வேக்கும் கிளீனர் இருப்பதுபோல் நமக்கு துணை புரிய மனிதர்களைப் போன்ற ரோபோக்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம்…… உங்களுக்கே தெரியும் தீமையும் நன்மையும் கலந்தே இருப்பதுதான் எங்கும் எப்போதும் என்று…. ஹேக் செய்வது என்பது என்ன என்று தெரியும் உங்களுக்கு.. ஒரு வீட்டில் உள்ள ஒருவரை இந்த ஹேக் செய்பவருக்கு பிடிக்காது என்று வைத்துக்கொள்வோம். அந்த வீட்டில் இருப்பவரை கொலை செய்வது மிகவும் எளிது.. அந்த ரோபோவின் சிஸ்டத்தை ஹேக் செய்து அந்த காரியத்தை செய்து விடலாம்…

ஒருவழியாக எங்கெங்கோ அலைந்த மனதை…… வந்து சென்ற நினைவுகளை கடந்து கந்தனின் கோவிலை அடைந்தேன்.. நீங்கள் எல்லாம் எதிர்பார்ப்பது போல் சிறிதளவும் இருக்காது இந்த கோவில் சிறிய கோவில் சிறிய கருவறை இரண்டு பேர் அமரக்கூடிய சிறிய திண்ணை… யாரோ ஒருவர் சில நாட்களுக்கு முன்போ சில வாரங்களுக்கு முன்போ இங்கு வந்து வணங்கிச் சென்ற அடையாளம் தெரிந்தது…..

உடன் எடுத்து வந்த கற்பூரத்தை ஏற்றி அந்த கற்பூரம் அணையும் வரை தியானத்தில் முருகனை மனதார பிரார்த்திக்க ஆரம்பித்தேன்.

அந்தப் பிரார்த்தனையை கலைக்கும் படியாக யாரோ ஒரு நபர் என் முதுகில் தட்டினார்… சிறிது கோபத்துடன் சடாரென்று திரும்பினேன்… வயதே கணிக்க முடியாத படி ஒருவர் புன்முறுவலுடன் என்னைப் பார்த்தார்.

என் கோபம் தலைக்கேறியது… ‘உங்களுக்கு என்ன மூளை குழம்பி விட்டதா யாராவது கடவுளைக் கும்பிடுபவரைதட்டி எழுப்புவார்களா?’ என்று கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்டேன்… இதைக் கேட்டவுடன் அவர் என்னைப் பார்த்து சிரிக்கிறரா என்று கூட என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை…. நான் என் கட்டுப்பாட்டில் இல்லை…

என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டார்..

என்ன முட்டாள்தனமான கேள்வி கும்பிட்டுக் கொண்டிருந்த என்னை தட்டி எழுப்பி விட்டு… இப்படி கேட்காமல் முருகனை கும்பிட வந்தேன் என்றேன்.

எதையாவது குறிப்பாக வேண்டிக் கொண்டு வந்தாயா என்று கேட்டார்…

எனக்கு வரவேண்டிய கோபம் வரவில்லை மாறாக அவர் கேட்பதற்கு பணிவாக பதில் சொல்லவே தோன்றியது…… எதையும் குறிப்பிட்டு இல்லை கடமையை முடித்து விட்டேன்.. வாழ்க்கை போரடித்துவிட்டது இனி இறப்புக்குப் பிறகு எப்படி இருக்கும் என்று அவ்வப்போது நினைவுக்கு வர நிம்மதி நாடி இங்கு வந்தேன் என்றேன்.

சரி இப்போது உனக்கு இருக்கும் பிரதான கேள்வி என்ன என்று கேட்டார்.

சற்று யோசித்தேன்… சொர்க்கம் இருக்கிறதா? இருக்கிறது என்றால் எப்படி இருக்கும்? நான் அதற்கு செல்வேனா? இதுதான் என் மனதில் பிரதானமாக இருப்பது….

புரிகிறது… உன் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் வேறு முக்கியமான கேள்விகளை கேள் என்றார்..

மனிதர்கள் அதிகபட்சமாக 9 ஜி போர்ஸ் தாங்க முடியும் அது அதிகரிக்கும் பட்சத்தில் இல்லை இதே 9 ஜி யில் சிறிது நேரம் இருக்கும் பட்சத்தில் உடல்நிலையில் பல கோளாறுகள் ஏற்படும் உடனடியாக மயக்கமும் ஏற்படும்… இதை ஒப்பிட்டுப் பார்க்கலாம் F 16 ஏரோபிளேன்கள் 17 ஜி வரை தாங்கும்… அதற்கு மேல் போகும் பட்சத்தில் உடனடியாக சிதறும் வாய்ப்புண்டு. இந்த இடத்தில் UAP யை ஒப்பிட்டால் அவைகள் 600 G யை எளிதாக கடக்கின்றன..

இரண்டாவது, ஹைபர்சானிக் வெலாசிட்டி.. விளக்கமாக கூற வேண்டுமென்றால் இதை விமானங்களில் அடையமுடியாது ஆனால் ஏவுகணைகள் ராக்கெட் போன்றவற்றால் அடைய முடியும். இப்போது உலகத்தில் உள்ள விமானங்களில் மிக அதிகபட்ச வேகம் SR 71 பிளாக் பேர்டினால் சுமார் 3200 கிலோமீட்டர் வரை செல்ல முடியும். ஆனால் அது உடனடியாக ஒரு குறிப்பிட்ட கோணத்தில் திரும்ப முடியாது மாறாக பெரிய வளைவு எடுத்துத்தான் திரும்ப முடியும்… இதைப் புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறேன். இந்த இடத்தில் UAP சுமார் 14,000 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் சென்றாலும் எந்த ஒரு கோணத்திலும் மேலும் கீழுமகவும் கணநேரத்தில் திரும்ப மற்றும் செல்ல முடிகிறது. இது ரேடார்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மூன்றாவது, கண்காணிப்புக்கு கிட்டாமல் பறப்பது… அதுபோன்று இப்போது உலகத்தில் இருப்பது B2 பாமர் ஸ்டெல்த் விமானங்கள் மட்டுமே.. அதுவே கோடான கோடிகள் செலவு செய்து உருவாக்கப்பட்ட தொழில்நுட்பமாக இருந்தாலும் ரேடாரில் கிட்டுகிறது. ஆனால் UAP யோ ரேடாரில் ஒரு நொடியில் தெரிந்தும் மறு நொடியில் மறைகிறது…

நான்காவது, டிரான்ஸ் மீடியம் ட்ராவல்.

அதாவது விமானங்கள் பறக்க ரெக்கைகள் இருக்கவேண்டும் சில ஏற்ற இறக்கங்களுக்கு தொழில்நுட்பங்களும் வேண்டும் ப்ரொபேலர்கள் வேண்டும் வால் வேண்டும் ஜெட் என்ஜின் வேண்டும் … இவ்வாறு இருக்கும் போது தான் விமானத்தால் வளைய மேலெழும்ப கீழே இறங்க முடியும். இந்த சமயத்தில் ராக்கெட்டை நினைத்துப்பாருங்கள் அவைகளுக்கு ரெக்கைகள் இல்லை.. அதனால் ஒரு திசையை நோக்கி மட்டுமே பயணம் செய்ய முடியும். இந்த சமயத்தில் UAP யை ஒப்பிட்டுப் பார்க்கலாம்…. அவைகளுக்கு இறக்கைகள் இல்லை ப்ரோப்பலர் இல்லை ஒரு வினோத நிகழ்வில் காணப்பட்டதில் ( அதைப் பற்றி பின்னால் கூறுகிறேன்) வெளிப்படையான ஜன்னல்கள் கூட இல்லை…. இருப்பினும் அது எல்லா கோணத்திலும் திரும்பவும் மேலும் கீழும் பறக்கவும் முடிகிறது. அதுமட்டுமில்லாமல் மனித தொழில்நுட்பத்தால் தண்ணீரில், தண்ணீருக்குள், வான்வெளியில் செலுத்த பறக்க சில சக்திகளை இழக்காமல் சில மாற்றங்களை செய்யாமல் இதுவரை எந்த ஊர்தியும் உருவாக்க முடியவில்லை… ஆனால் இவை அனைத்தையும் UAP செய்தது.

ஐந்தாவது, எதிர் புவியீர்ப்பு விசை.

அதாவது புவியீர்ப்பு விசையை கடந்துதான் எல்லா பயணமும் ஏற்பட முடியும். சில உதாரணங்களை கூறுகிறேன்… பெரிய பலூன்களில் பயணம்… அதிலுள்ள காற்றின் அடர்த்தி வெளியில் உள்ள காற்றின் அடர்த்தியை விட குறைவாக இருப்பதால் தான் அதனால் மேலே செல்ல முடிகிறது. ராக்கெடில் மிகப்பிரம்மாண்டமான அதன் இன்ஜின் எரிபொருளை எரித்து கீழ்நோக்கி செலுத்துவதால் ராக்கெட் மேல் நோக்கிச் செல்கிறது. விமானங்களிளோ என்ஜினின் வேகம் மற்றும் சில தொழில்நுட்பங்கள் அதை மேலே செலுத்துகிறது… இவை வேறு ஏதும் இல்லாமலேயே UAP இவைகளையெல்லாம் கடந்து எதிர் புவியீர்ப்பு விசையை எளிதாக கடந்து பறக்கிறது.

ஓரளவிற்கு புரிய ஒப்பிடல் போதும் என்று நினைக்கிறேன்…

நம்பர் 14, 2004 மிக முக்கியமான நிகழ்வு மேலுள்ள எல்லாவற்றையும் ஒருங்கே நிகழ்த்தியது.. இது இந்த அறிவியல் பகுதியில் அதிக ஈடுபாடு உள்ளவர்களுக்கு மிகப் பிரபலமான டிக் டேக் நிகழ்வுதான் அது. 2004 கலிபோர்னியா கடற்கரை பகுதியில் போர் ஒத்திகைக்காக இருந்த நிமிட்ஸ் கடற்படை கப்பலில் இருந்த வீரர்களால் சந்திக்க நேர்ந்து 17 வருடங்கள் கழித்து வெளிவந்த செய்தி அது. அரசல்புரசலாக 2016 & 17 வருடங்களில் வெளிவந்த செய்தி தான் அது… அமெரிக்க அரசாங்கமே சென்ற வருட ஜூலை மாதம் அந்த நிகழ்வை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது அது இந்த வட்டத்தில் உள்ளளோருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

என் கேள்வியே அதனுள்ளே இருப்பவருக்கு இல்லை இருக்கும் உயிரினங்களுக்கு இந்த ஜி போர்ஸின் பாதிப்பு இல்லாமல் பயணம் எப்படி சாத்தியம் என்பது தான்…..

என்னுள் அந்த கேள்வி தொடங்கிய அந்த நொடியே ஒரு நீள் வட்ட அறைக்குள் இருந்தேன்…. முழுவதுமாக எங்கும் பார்க்கும்படியாக கண்ணாடியால் அமைத்தது போன்று இருந்தது அந்த அறை….. அப்போதுதான் கவனித்தேன்… அந்த அறைக்கு வெளியே இருபுறங்களிலும் F16 ஜெட் பிளேன்கள் பறந்து கொண்டிருப்பதை…. அதற்கு ஈடாக இந்த அறையும் பறந்து கொண்டிருப்பதை அப்போதுதான் புரிந்து கொண்டேன்… ஒரு நொடியின் பகுதிதான் நான் இருக்கும் அறை முன்னோக்கி சென்றது… பக்கத்திலிருந்த ஜெட்கள் எங்கோ மறைந்தது… சற்றென்று நான் இருக்கும் அறை அந்த F16 களுக்கு எதிராக திரும்பி கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்து சென்றது….. இப்போது எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது… அந்த அறையினுள் தனிப்பட்ட புவியீர்ப்பு விசை இருப்பதும் அதனால் தான் உள்ளே இருப்பவருக்கு எந்த ஜி போர்ஸின் பாதிப்பும் நிகழவில்லை என்பது…

இது புரிந்த அந்த கணத்திலேயே மறுபடியும் நான் கோவிலில் அவர் எதிரே இருந்தேன்….

அவர் புன்முறுவலுடன் அதைவிட பெரிய கேள்வி ஏதாவது உன்னை துளைத்துக்கொண்டு இருக்கிறதா என்று கேட்டார்…..

அவர் கேள்வி கேட்ட அந்த நொடியிலேயே என்னுள் வந்து மறைந்த தலையாய கேள்வி….

1947இல் அமெரிக்காவில் நடந்த அந்தப் பறக்கும் தட்டு விபத்து… இது உலகறிந்த அரசாங்கத்தால் இன்றுவரை உறுதி செய்யப்படாத நிகழ்வாக இருந்தாலும் அதற்கு முன்பே 1941லும் இதுபோன்ற விபத்து நடந்ததாக கூறப்படுகிறது…

என் கேள்வி என்னவென்றால் இதுபோன்ற நிகழ்வுகளும் பல ஆயிரக்கணக்கான UFO/UAP சைட்டிங்குகளும் காலம் காலமாக பலரால் பகிரப்பட்டாலும் ( எனக்கு 80 களில் நடந்த நிகழ்வும் இதில் ஒன்று )

இன்றுவரை அரசாங்கத்தால் UFO களை பற்றியும் ஏலியன்கள் பற்றியும் ஏன் உறுதி செய்யப்பட முடியவில்லை என்பதுதான்….

நான் எங்கு இருக்கிறேன் என்பதே புரியவில்லை…. ஒரு பெரிய பிரம்மாண்டமான கட்டிடத்துக்குள் இருக்கும் நடைபாதையில் இருந்தேன்…

என்னை கடந்து சிலர் கோட்டு சூட்டுடனும் மற்றும் பலர் மிடுக்கான ராணுவ உடைகளுடனும் போவதும் வருவதுமாக கடந்து சென்றனர்… ஆனால் அதில் ஒருவர் கூட என்னை கவனித்ததாக தெரியவில்லை.. அருகே ஒரு கணினி சுவற்றில் பதிந்தால் போல் இருக்க அருகே சென்று அதை அழுத்தி பார்த்தேன்… அதிர்ச்சியில் உறைந்தேன்.. நான் இருப்பது அமெரிக்காவின் பென்டகன் கட்டிடத்தில் அண்டர் கிரவுண்டில் எட்டாவது அடுக்கு…… கணினியை மற்றுமொருமுறை அழுத்த இன்னும் சில நிமிடங்களில் அமெரிக்காவின் மிக உயரிய ஐ லி கிளாசிஃபைட் பாதுகாப்பு துறையின் முப்படைகளின் மிக உயரிய பதவிகளில் இருக்கும் அதிகாரிகளின் மிக மிக முக்கியமான மீட்டிங் துவங்க போவதாக ஒளிரும் எழுத்துக்களில் தெரிந்ததுதான்…

நான் என்னை மீறி அந்த அறையை நோக்கி சென்றேன்… இப்பொழுது அந்த அறையை என்னால் காண முடிந்தது.. எண்ணிப் பார்த்ததில் பதிமூன்று இருக்கைகள் நீள்வட்ட மேஜையை சுற்றி போடப்பட்டிருந்தது… அதில் ஒரு இருக்கை மட்டும் தலைவருக்கானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.. ஏனெனில் மற்ற 12 இருக்கைகளிலும் முப்படைகளின் தலைவர்களும் துணை தலைவர்களும் அமர்ந்திருந்தனர்.. தலைவருக்கான இருக்கை மட்டும் காலியாக இருந்தது.. எனக்கு ஆவல் அதிகரிக்க இதயத்துடிப்பு UAP ஏ ஐ விட வேகமாக இருந்தது.. அந்த கணத்தில் என்னுள் தோன்றி மறைந்தது.. இந்த மீட்டிங்கை தலைமை தாங்க அமெரிக்க ஜனாதிபதி அங்கு வருவார் என்று… மீட்டிங் துவங்க மூன்று நிமிடங்கள் இருந்தது… அந்த 180 நொடிகள் காத்திருப்பு எனக்கு 180 நாட்களாக தெரிந்தது….. எப்படியும் என்னை கடந்து தான் அந்த அறையை திறந்து கொண்டு அவர் உள்ளே செல்ல முடியும்… காத்திருந்தேன்….

175வது நொடி…. அந்தப் பன்னிரண்டு பேரும் ஒரே நேரத்தில் எழுந்து நிற்க.. என் இதயம் வெளியே சென்று உள்ளே வந்தது போலும் நின்று விட்டது போலும் தோன்றியது…… எனக்கு வந்தது ஆச்சரியமில்லை…..விபரீத அதிர்ச்சி!

எங்கிருந்து எப்போது தோன்றியது…. மன்னிக்கவும் தோன்றினார்…… என்ன சொல்வது, எப்படி சொல்வது, எதைச் சொல்வது……. எனக்கு தோன்றியது மரண பயமா? இல்லை மயான அமைதியா? ஒட்டுமொத்தமான உலக மக்களின் கேள்விக்கு கிடைத்த பதிலில் அந்த கண நொடியில் எல்லாமே புரிந்தது!

ஆம், அந்த தலைவர் இருக்கையில் கணநேரத்தில் தோன்றி அமர்ந்த அது.. அவர்…. டால் கிரே ஏலியன்!

நான் மீண்டும் அவரருகில் கோவிலில் இருந்தேன்….

பிரதான கேள்வி ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டார்… நான் கிட்டத்தட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிட்டதால் சலனமற்ற சடலம் போல் இருந்தேன்… லேசாக தலையை ஆட்டினேன் நியாபகம் இருக்கிறது என்று……

திடீரென்று… எப்படி சொல்வது…. இது நியூசிலாந்தா ஸ்விட்சர்லாந்தா இருக்க முடியாதே அற்புதமான அருமையான தட்பவெப்ப நிலை இருக்கிறதே ஆனால் இயற்கை அழகு எங்கும் கொட்டிக் கிடக்க நான் எங்கு இருக்கிறேன் என்பதை விவரிக்கவே முடியவில்லை…. அதிர்ச்சியில் உறைந்தேன்…. ஆச்சிரியத்தில் மிதந்தேன்…. சென்ற மாதத்தில் இறந்த என் கடைசி உறவினர் வரை இதுவரை காலம்சென்ற என் உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் எல்லாம் அங்கிருந்து என்னை புன்முறுவலோடு பார்த்தனர்…. என் வாழ்க்கையே முற்றுப்பெற்றது போன்ற உணர்வு…. எங்கும் அன்பு…. அன்பே சிவம் என்று சொன்னது எவ்வளவு பொருந்தும்…..

மறுபடி கோவிலுக்குள் அவரின் முன்னால் இருந்தேன்… சொர்க்கத்தை கண்டாயா என்று கேட்டார்…..

ஆமாம் என்று தலையாட்டினேன்…..

நீ இறந்த பிறகு சொர்க்கத்திற்கு தான் செல்லப் போகிறாய், உன் விருப்பப்படியே இந்த கணமே நீ விரும்பினால் சொர்க்கத்திற்கு அனுப்புகிறேன்….. உன் விருப்பத்தைச் சொல் என்று கேட்டார்…..

ஒரு கணம் ஒரே கணம் ஆடிப்போய்விட்டேன்…. கண் முன்னால் என் குடும்பம் வந்து நின்றது…. பேரக்குழந்தைகள் வந்து நின்றனர்… அவர்கள் எப்படி வளர போகிறார்கள் என்ற நினைவு… நான் இல்லை என்றால் அவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்ல போவது யார் என்ற நினைவு… நான் இல்லாமல் என் மனைவி எப்படி இருக்கப் போகிறாள் என்ற நினைவு…. என் மகனும், மகளும் எப்படி என் மரணத்தை ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்ற நினைவு…..

ஒரு தர்மசங்கடத்துடன் அவரைப் பார்த்து கூறினேன், ‘ இப்பொழுது நான் சொர்க்கத்துக்கு செல்ல விரும்பவில்லை… எனக்கு கடமைகள் பல இருக்கின்றன ‘ என்று.

என்னை நானே புரிந்து கொண்டேன், கூனிக் குறுகி நின்றேன்…..

காலம்காலமாக தொன்றுதொட்டு எல்லோரும் கோவிலுக்கு சென்று வழிபட்டும் காணக்கிடைக்காத தரிசனம் கிடைத்தும்…… புரிந்து கொண்டது…

எனக்கு நெஞ்சம் உண்டு ஆனால் அதில் நேர்மை இல்லை!

bottom of page