தமிழும் நிலவும்! By சிவா.
- melbournesivastori
- Oct 14, 2022
- 8 min read

நீ யார், எங்கிருந்து வந்தாய், எங்கே செல்லப் போகிறாய்? இது போன்ற கேள்விகள் அன்றாட பிரச்சினைகளிலிருந்து ஓரளவுக்கு வெளிவந்தோருக்கும், ஓய்வு பெற்றோருக்கும், இல்லை அதீத சிந்தனையுள்ளோருக்கும் தோன்றும் சாதாரண கேள்விகள்.. அதற்கு விடை காண நம் மூலத்தைத் தேடிச் செல்ல மனதை உந்தும்… நான் இங்கே சொல்வது மதத்தையோ, ஜாதியையோ அல்ல நம் இனத்தை, நம் மொழியை… இப்போது எங்கும் சோழ பேரரசை பற்றி பேச்சு, நல்லது! தமிழர் வரலாற்றை தெரிந்துகொள்ள இளைஞர்கள் எப்போதும் இல்லாத அளவிற்கு விரும்புவது கண்கூடாக தெரிகிறது. நம் இன பொற்காலம் ராஜேந்திர சோழனுக்குப் பிறகு தேயத் துவங்கியது ஏன் என்ற கேள்வி அந்த இளைஞர்களுக்கு ஏற்பட்டால் மிகவும் நன்றாக இருக்கும். சோழப்பேரரசுக்கு முன்பு எத்தனை பொற்காலங்கள் வந்து சென்றன என்பதைக் கூறுவதும் வரலாற்றுக் கடமை. அதிகம் பேர் வரலாற்றை எழுதாதால் தான் இந்த காலகட்ட இளைஞர்களுக்கு மிகவும் குறைவாகவே நம் இன வரலாறு தெரிகிறது. உன் இன வரலாறை தெரிந்து கொள்ளவில்லை என்றால் பின்வரும் இனம் துக்க ஆறாகத்தான் போகும். என்னால் முடிந்தது கற்பனையில் அறிவியலையும் வரலாற்றையும் கலந்து ‘குமரி கண்டத்தை’ எழுதியது. குமரிக்கண்டம் எப்படி அழிந்திருக்கும் என்று இப்போது ஒரு அளவுக்கு புரிகிறது…. அதை குமரிக்கண்டம் போலவே அடுத்து எழுத நினைக்கின்றேன்… குமரிக்கண்டமும் நிலவும். அது ஒரு பொற்காலம், உலகம் முழுவதும் இருந்த நான்கு நாகரிகங்களுக்கு. இப்போதைய காலகட்டத்தில் இருந்து சுமார் 13,000 வருடத்திற்கு முன்னால் தான் அந்த நான்கு நாகரீகங்கள் உலகத்தில் உச்சத்தில் இருந்தது….. எகிப்திய நாகரீகம் , சுமேரிய நாகரீகம் , அட்லாண்டிஸ் நாகரீகம் மற்றது மிக முக்கியமான நம் பெருமைமிகு நாகரீகம் குமரிக்கண்ட நாகரீகம் ! பளிங்கு போல் பள பளவென பூசப்பட்ட பிரம்மாண்டமான மூன்று பிரமிடுகள், சற்று தள்ளி அதை பார்ப்பது போல் ஸ்பிங்ஸ் எனும் ஒரு சிங்கம் கம்பீரமாக அமர்ந்திருப்பது போன்ற உடல் ( பிற்காலத்தில் சிங்கத்து தலையை மனித தலையாக மாற்றியமைத்தனர்) அதற்கும் தள்ளி மிக மிக பிரம்மாண்டமான வானத்தை முட்டும் அளவிற்கு அரண்மனை.. அங்கிருந்த சிற்பங்கள் ஒவ்வொன்றும் தற்போதைய இரண்டு மூன்று மாடி கட்டிடங்கள் அளவிற்கு உயரமானது. இக்காலத்தில் உள்ள சகாரா பாலைவனம் முழுவதும் பச்சை பசேல் என்று விலை நிலங்களாக இருந்தது. இவைகளுள் கார்நாக், லக்சர், அரசர்கள் சமவெளி மற்றும் அபு சிம்பல் முக்கியமானவை.. இவைகள் ஒவ்வொன்றின் சிறப்பையும் கூறப்போனால் நம் வாழ்க்கை பத்தாது.. அக்காலக் கட்டத்தில் அங்கு சித்திர எழுத்துக்கள் இல்லை… மாமன்னர்கள் யாரும் புதைக்கப்படவும் இல்லை.. அந்த மாபெரும் பிரமிடுகள் கட்டப்பட்டதே ஒட்டுமொத்த நாட்டுக்கும் தேவையான சக்தி வழங்கவே. தற்கால அறிவியல் முற்றுப்பெற்றது என்று நினைப்போர் அதில் சிறிதளவு சிந்தனையுள்ளோர் கேட்கக்கூடும் கேள்விகள். .. உலோக பொருட்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லையே அது செம்பு காலமும் இரும்புக்காலமும் இல்லையே என்று…. எல்லாம் இருந்தது அதை பற்றி பின்னால் விவரிக்கிறேன். இந்த இடத்தில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்று, எல்லா உலோகங்களும் அதிகபட்சம் தட்பவெப்ப சூழ்நிலையில் ஒரு ஆயிரம் வருடங்கள் தாங்கும் பாதுகாக்கப்பட்ட சூழ்நிலையில் சில ஆயிரம் வருடங்கள் தாங்கும். இந்த பிரமிடுகள் கட்டப்பட்டது அக்காலத்திய ஒராயன் கன்ஸ்டல்லேஷன் படி…. ஸ்பிங்ஸ் அக்காலத்திய லியோ கன்ஸ்டல்லேஷன் படி… இவைகளின் பிரம்மாண்டத்தை இன்னும் விவரித்துக் கொண்டே போனால் நான் கூற வந்ததை அவைகள் நீர்த்துப் போக செய்யும்… தேவை என்றால் பிறகு அவற்றை பற்றி கூறுகிறேன். சுமேரிய பாபிலோனிய நாகரிகங்கள் இப்போதுள்ள மத்திய கிழக்கு நாடுகளை ஒருங்கிணைத்து அக்காலத்தில் இருந்தது.. இந்த நாகரிகம் யாரால் உருவாக்கப்பட்டது அவர்கள் தான் மனித இனத்தை உருவாக்கினார்கள் என்பதைப் பற்றி பல தீவிர சிந்தனை உள்ள ஆராய்ச்சியாளர்கள் கூறியதை கூறுவது இங்கு தேவையற்றது… இருப்பினும் இவர்கள் அசாதாரணமானவர்கள் மிகப் பிரம்மாண்டமான தொழில்நுட்பத்தை கொண்டு இருந்தவர்கள் என்பதை மட்டும் தெரிவிக்கிறேன்.. அது பிற்காலத்தில் நடக்கப் போவதற்கு தொடர்புடையது.. சிங்க உடலில் மனித தலை, மனித உடலில் சிங்கத்தலை போன்ற சிலைகள் ஏன் வடிக்கப்பட்டன என்பதை யோசித்துப் பார்க்க தொடர்புகள் இல்லாமல் இருந்தது… இந்த நாகரிகத்தை நிறுவியோர் வேற்று கிரகத்திலிருந்து வந்த மிக பிரம்மாண்டமான தொழில்நுட்பத்தில் தேர்ந்தவர்கள் பிற்காலத்தில் இவர்கள் அன்றைய மனிதர்களுடன் உறவு கொண்டவர்கள் என்பதும் நான் கூறப்போவதற்கு தேவையில்லாதது… தேவையானவை… தங்களுக்கு சிறந்தோர் யாருமில்லை என்று இவர்கள் நினைப்பது மட்டுமே! அட்லாண்டிஸ் நாகரிகம், இவர்களும் சுமேரியர்கள் தான் என்றும் அவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் பிரிந்து சென்ற புரட்சியாளர்கள் என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் நினைப்பதுண்டு. கிரேக்க அறிஞர் பிளாட்டோ இவைகளைப் பற்றி கூறாமல் அது ஒரு மிகச்சிறந்த நாகரிகம் என்பதைக் கூறி அவர்களது தொழில்நுட்பம் சிறந்த கலாச்சாரம் இவைகளை மட்டுமே கூறினார். நமக்குத் தெரிந்தவை, எல்லோரும் சதுர அல்லது செவ்வக வடிவில் நகரங்களை அமைத்தால் இவர்களுடைய தலைநகரம் வட்ட வடிவில் வடிவமைக்கப்பட்டது. அந்த தலை நகரத்தை சுற்றி அகழி போன்று தண்ணீர் இருந்ததாகவும் அல்லது அது கடலின் நடுவே தீவான தலைநகராக இருந்ததாகவும் கருத்துண்டு. வான்வெளி விண்வெளி தொழில்நுட்பத்தில் மிகச் சிறந்தவர்கள் விண்வெளி பயணத்தில் தொடர்பில் இருந்தார்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்களுக்கும் சுமேரியர்களுக்கும் எப்போதும் ஒரு பகைமை இருந்து கொண்டே இருந்தது… என்ன இவ்வளவு தொழில்நுட்பத்தில் உயர்ந்தவர்களாக இருந்தாலும் ஏன் இந்த பகைமை உணர்ச்சி என்று நினைக்கிறீர்களா… ஒன்றாய் இருந்து பிரிந்த நாடுகளைப் பற்றி நினைத்துப் பாருங்கள்… ஒன்றாய் இருந்து பிரிந்த உறவுகளைப் பற்றி நினைத்துப் பாருங்கள்…. விட்டுக் கொடுக்காத… தான் என்ற அகம்பாவம் மனிதர்களுக்கு பிறவியில் இருந்தே இருந்தது புரியும். இதில் விதிவிலக்கு தான் நமது ‘குமரிக்கண்டம்’ ‘குமரிக்கண்டம் எனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே!’ யாருக்கு என்று கேட்கிறீர்களா? தமிழ் மீதும், தமிழர் மீதும், தமிழ் கலாச்சாரத்தின் மீதும், தமிழ் முன்னோர்கள் மீதும் யார் யாருக்கு மதிப்பும் பற்றுதலும் இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் கேட்கும். ‘கல்தோன்றி மண் தோன்றா முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ் குடி!’ இதை நான் சொல்லவில்லை அலெக்ஸ் கோலியர் எனும் ஆராய்ச்சியாளரிடம் வேற்றுகிரக வாசி கூறியதாக அவரே பல நாடுகளில் கூறியுள்ளார்…. ஆமாம் வந்து விட்டான் ஒரு வெள்ளைக்காரன் கூறியதை வைத்து…. எங்காவது ஒருவர் எரிச்சலுடன் நினைப்பது தெரிகிறது… குமரிக்கண்டம் என்ற பெயரைக் கேட்ட உடனே எரிச்சல் அடையும் நபர்கள் இதைப் படிக்க மாட்டீர்கள் என்று தெரியும்… படிப்பதில் சிலர் இதை நினைத்தால் அவர்களுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன்… ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தமிழனாக பிறந்திருந்தால் இங்குள்ள மற்றும் இந்தியாவில் உள்ள பல யூடியூபர்களாலும் தொலைக்காட்சிகளாலும் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆட்படுத்தப்பட்டு நொந்து நூலாகி இருப்பார்… இது நம் சாபக்கேடு. வீட்டில் தமிழ் பேசும் அனைவரும் தமிழர் மரபை பெருமையாக நினைக்காமல் இருப்பது தான் மற்றவர்கள் ஊடுருவ எதுவாக இருக்கிறது…. தர்க்கங்களும் விவாதங்களும் இருந்து கொண்டே தான் இருக்கும்.. குமரிக்கண்டம் இருக்கிறது என்பதை முழு மனதாக உணர்கிறேன் என்பவர்களை கேலிக்கூத்தாக்கி பரிகாசம் செய்து பைத்தியக்காரர்கள் ஆக்குவது தான் இன்றைய நிலைமை… பணபலமும் அதிகார பலமும் இல்லாத ஒரு நிரபராதி இந்த பொய் சாட்சிகள் சூழ்ந்து இருக்கும் காலகட்டத்தில் தன்னை நிரபராதி என்று நிரூபித்துக் கொள்ள என்னவெல்லாம் பாடுபட வேண்டி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்…. தோற்றுப் போவதற்கு தான் அதிக வாய்ப்பு இருக்கிறது.. அதே நிலைமை தான் இன்று நமக்கும் உள்ளது, அகழ்வாராய்ச்சி செய்ய மன பலமும் பணபலமும் இல்லை… அவை இரண்டையும் அளிக்கும் அதிகார பலமும் இல்லை… அதனால் இவைகளுக்கு அனுமதியும் இல்லை! வாய்மையே என்றாவது ஒரு நாள் வெல்லும் என்று நம்பினால் சிவன் தோற்றுவித்து முருகனால் வழிநடத்தப்பட்ட குமரிக்கண்டம் வரும் காலங்களில் கண்டுபிடிக்கப்பட்டு மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும். இங்கு நான் கூற வந்தது அதைப்பற்றி அல்ல… குமரிக்கண்டம் இருந்தது என்பது உண்மை என்று நம்புபவர்களை விட இல்லை இல்லை அது கற்பனையே என்று உறுதியாக சொல்பவர்களுக்கு அதிகமாக தெரியும் குமரிக்கண்டம் இருந்தது என்று … அவர்கள் அவ்வாறு கூறுவது எரிச்சலின் வெளிப்பாடு என்பதை புரிந்து கொண்டு கடந்து போவது தான் சரி. இருந்தது என்போர் அதற்கான வேலையை செய்கிறோம்… இல்லை என்று புறம் பேசுவோர் அங்கேயே தான் அமர்ந்திருப்பர். குமரிக்கண்டம் இருந்தது என்பதை நிரூபிக்கச் சொல்லி நம்மை அலைக்கழிக்கும் கூட்டத்தை நாம் திருப்ப முடியும்…. இல்லை என்று சொல்பவர்கள் கடலில் சென்று ஆய்வு செய்து இல்லை என்று நிரூபிக்கட்டும்… இருந்திருக்கிறது என்று கூறும் நம்மை உழைக்க கூறுபவர்கள் ஏன் இல்லை என்று கூறுபவர்களை அந்தக் கூற்றுக்கு உழைக்க சொல்வதில்லை? கூற வந்ததை விட்டுவிட்டு எங்கெங்கோ சென்று விட்டேன் ஞான பண்டிதனே! இனி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை… குமரிக்கண்டத்திற்கு செல்வோம்.. பொற்காலம் என்று எல்லோரும் கேள்விப்பட்டு உள்ளோம், அதன் உச்சம் தொட்டது தான் குமரிக்கண்டத்தின் அன்றைய அரசாட்சி… எத்தனை ஆயிரக்கணக்கான வருடங்கள் கடந்ததோ தெரியவில்லை நாம் இப்போது காண்பது சுமார் 13,000 வருடத்திற்கு முன்பு. எங்கு நோக்கினும் ஒரு வளர்ந்த நாட்டைக் காண முடிந்தது, அறிவு சார்ந்த சமுதாயத்தை பார்க்க முடிந்தது, இக்காலத்தைய கல்வி முறைக்கும் மேன்மையான பல்கலைக்கழகங்களை காண முடிந்தது. சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டது கொஞ்சமே… கண்டம் ஏழு நாடுகளாகவும் ஒவ்வொரு நாடும் ஏழு மாவட்டங்களை போன்றும் ஆட்சி செய்ய ஏதுவாக பிரிக்கப்பட்டு இருந்தது. உயிரியல், வானியல், பௌதீகம், ரசாயனம், கட்டிடக்கலை, விவசாயம், வணிகம், தொழில்நுட்பம் போன்ற எல்லா பிரிவுகளிலும் மாணவர்கள் பயின்றனர்.. நிக்கோலா டெஸ்லா முயற்சி செய்த கம்பி இல்லாமல் மின்சாரத்தை கடத்துவது அந்த கண்டத்தில் சாத்தியமாக இருந்தது.. அன்றைய நான்கு நாகரிககளிலும் இயற்கையில் இருந்து உருவாக்கப்பட்டு சேமிக்கப்பட்ட ஒருவகை மின்சாரம் பயன்பாட்டில் இருந்தது. உடை நாம் சிலைகளில் பார்ப்பதை விட நேர்த்தியாகவும் பிரம்மாண்டமாகவும் தெரிந்தது… வணிகம் எகிப்தியர்களுடனும் அட்லாண்டிஸ் மக்களடனும் நடைபெற்றதைப் பார்க்கும்போது சுமேரியர்கள் தனித்துவிடப்பட்டது போன்றே தோன்றியது. தமிழ் வணிகர்களின் வணிக முறையை பார்க்கும் போதும் அவர்களுக்கு மற்ற இரு சமுதாயங்களும் கொடுத்த மதிப்பிலிருந்தும் அன்றைய நாகரிகங்களுக்கு குமரிக்கண்டம் தான் முன்னோடி என்று எளிதாக நம்ப முடிந்தது. மிகவும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் கொடுக்கும் மூன்று விஷயங்களை குறிப்பிட வேண்டும்.. சப்தமே இல்லாமல் மிதந்து பறந்து செல்லும் ஊர்திகள் பயன்பாட்டில் இருந்தது ஒன்று. உலகத்தின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் நம் காலத்திய இருபதில் இருந்து 25°C வரை வெப்பமே இருந்தது. வானத்தில் எங்கு நோக்கினும் மிக தூரத்தில் பணி படர்ந்தது போலவே இருந்தது.. இந்த இயற்கையின் அதிசயமே குமரிக்கண்டத்திற்கு அழிவாக வரப்போகிறது என்று அப்போது யாருக்கும் தெரியாது. இவற்றிற்கெல்லாம் தலையாய அதிர்ச்சி எங்கு நோக்கினும் நிலவைக் காண முடியவில்லை. சுமேரிய நாட்டிற்கு செல்வோம்… ஆட்சியாளர்களிடம் ஏதோ ஒரு பதட்டம் தெரிந்தது… அதற்கு மிக முக்கிய காரணம் அட்லாண்டிஸ் புரட்சியாளர்களின் ஆட்சி தான் என்று புரிந்து கொள்ள முடிகிறது. சுமேரிய ஆட்சியாளர்கள் அணுநாக்கிகள் ஏதோ ஒரு பெரிய திட்டத்துடன் தங்களின் தாய் கிரகத்துடன் அடிக்கடி தொடர்பில் இருந்தனர்… இருந்தும் பதட்டம் இருந்து கொண்டே இருப்பதை பார்க்கும் போது தாய் கிரகத்திலிருந்து அவ்வளவாக ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்பதையே காண்பிக்கிறது. வருடங்கள் உருண்டோடி சென்றன, அட்லாண்டிஸ் புரட்சியாளர்கள் சுமேரியா ஆட்சியாளர்களிடம் அடங்க மறுத்து ஆட்டிப்படைக்க ஆரம்பித்தனர்… தொழில்நுட்பத்திலும் உச்சம் தொட்டுவிட்டனர். இப்போது நாம் 13000 வருடங்களுக்கு முன்பு இருந்து 12,800 வருடங்களுக்கு வந்து விட்டோம். தற்காலிகமாக நாம் இந்த நாகரீகங்களில் இருந்து விடுபட்டு வான் வெளியில் நடந்த அற்புதத்தை கவனிக்கலாம்…… அதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது…. புரிந்து கொள்ள வேண்டியது… எல்லாவற்றிற்கும் மேலாக திறந்த மனத்துடன் இருக்க உங்களை நீங்கள் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்… என்ன முத்தாய்ப்பு பலமாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? தொன்று தொட்டு நாம் நினைத்துக் கொண்டிருக்கும், நம்பிக்கை கொண்டிருக்கும் ஒன்று நாம் நினைத்தது வேறு, உண்மை வேறு என்று புரியும் போது தடுமாற்றமும் அதிர்ச்சியும் மேலோங்கும்.. இனி வரும் காலங்களில் நிறைய கருத்துக்களை மாற்றிக் கொள்ள வேண்டி இருக்கும். நிலா… இயற்கையின் விதிகளுக்கு அடங்க மறுத்து அறிவியல் ஆராய்ச்சியாளர்களை ஆட்டிப்படைக்கும் அற்புதம்! ஆமாம் நிலவு எந்த ஒரு விண்வெளி விதிகளுக்கும் கட்டுப்படாமல் இருப்பது ஆச்சரியத்தில் தோன்றி அதிர்ச்சியில் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட வைத்து முடிவுக்கு வந்த பிறகு இதனால் தானா என்று நொந்து நூலாக்க வைத்தது. நமக்குத் தெரிந்த எல்லா சூரிய குடும்பங்களிலும் எல்லா துணைக்கோள்களும் நீள் வட்ட பாதையில் சுற்ற இந்த இயற்கையின் விதிகளுக்கு சவால் விட்டு நம் நிலவு மட்டும் 99 சதவிகிதத்துக்கு மேல் சரியான வட்டப்பாதையில் நம் பூமியை சுற்றுகிறது. அதுமட்டுமல்ல எல்லா துணைக்கோள்களும் தானும் சுற்றிக்கொண்டு தன்னைச் சார்ந்த கிரகத்தையும் சுற்றும்…. ஆனால் நிலவு மட்டும் தன்னைத்தானே சுற்றிக் கொள்ளாமல் ஒரு பகுதி மட்டும் பூமியை பார்த்தவாறே சுற்றும். கீழே சில கணக்குகளை கொடுக்கிறேன் ஏனெனில் விளக்கிச் சொன்னாலும் முழுவதும் புரிந்து கொள்ள கடினமாக இருக்கும். அடுத்து நான் கூறப்போவது நம் தமிழ் கலாச்சாரத்தில் தொன்று தொட்டு வரும் ஒரு வழக்கம்! சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் 93312000 மைல்கள். சூரியனின் விட்டம் 864000 மைல்கள் அதிலிருந்து இதை வகுத்து பார்த்தால் கிடைக்கும் எண் 108. நிலவுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் 233280 மைல்கள். நிலவின் விட்டம் 2160 மைல்கள். அதிலிருந்து இதை வகுத்து பார்த்தால் கிடைக்கும் என் 108. நம் இனத்திற்கு 108 தேங்காய் உடைக்கும் பழக்கம் ஏன் வந்தது என்று புரியவில்லை… அதற்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ? இன்னொரு மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால் பூமியிலிருந்து நிலவு ஒரு மடங்கு தெரிகிறது என்றால் சூரியன் 400 மடங்கு தெரிகிறது.. பூமியிலிருந்து நிலவு ஒரு மடங்கு தூரம் என்றால் சூரியன்
400 மடங்கு தூரம்! இதனால்தான் சூரிய கிரகணம் கிட்டத்தட்ட 100% பொருந்துகிறது. இது தற்காலிகமாக நடந்தது என்று நினைத்தால் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாக தோன்றுகிறது… மேலும் செல்லலாம்…… முன்பெல்லாம் நினைத்தார்கள் பூமியிலிருந்து பிரிந்தது தான் நிலவு என்று.. இதுவும் ஆராய்ச்சியில் சுக்கு நூறாக போய்விட்டது… ஆமாம் பூமியின் வயது 4.5 பில்லியன் வருடங்கள் ஆனால் மிகவும் அதிர்ச்சியான கண்டுபிடிப்பு நிலவின் வயது 5.18 பில்லியன் வருடங்களுக்கும் மேல். ஆராய்ச்சிக்கு மேல் ஆராய்ச்சி செய்யும்போது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியான நிலவின் செய்திகள் நமக்கு கிடைத்தது…. பூமியில் அரிதாக கிடைக்கும் இதே யுரேனியம் செரிவுஊட்டப்பட்ட நிலையில் அதாவது அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட துணைப் பொருளாக மாறும் யுரேனியம் 236 நிலவின் மேல் எங்கும் காணப்படுகிறது அது மட்டும் இல்லாமல் இதேபோன்று நெப்டியூனியம் 237 னும் காணப்படுகிறது. இதற்கு விளக்கத்தை நான் கூறத் தேவையில்லை அறிவியல் அறிவு உள்ளோர் எல்லோருக்கும் புரியும்.. மேலும் பூமியில் அரிதாக கிடைக்கும் டைட்டானியம் நிலவில் எங்கும் உள்ளது.. இது ஒரு மிகவும் வலிமையான உலோகம். பூமியில் கால் பங்கு உடைய நிலவு அடர்த்தியும் அதே அளவு இருக்கும் என்று நினைக்கும் போது இயற்கைக்கு மாறாக மிக மிக மிக குறைவாக அடர்த்தி இருப்பதால் நிலவின் உட்பகுதி வெற்றிடமாக இருக்க அதிக சந்தர்ப்பம் உள்ளதாக ஆராய்ச்சியில் கருதினார்கள் இதை சோதிக்க முயற்சியும் எடுக்கப்பட்டது. அப்போலோ 12 பயணம் முடிந்த பிறகு ஆராய்ச்சிக்காக மேலிருந்து ஒரு பொருளை கீழே விடுவித்தனர்… நாசா எதிர்பார்த்தது நடந்தது.. ஆமாம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சப்தம் ரிங்காரமிட்டது… இந்த முடிவால் ஊக்குவிக்கப்பட்டு அப்போலோ 13 பயணத்தில் மிக அதிக எடையுள்ள பொருளை அதிக உயரத்தில் இருந்து மோத வைத்தனர்… ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.. சுமார் மூன்று மணி நேரம் 20 நிமிடங்கள் சப்தம் ரிங்காரமிட்டது… இதை உறுதி செய்வது போல் எரி கற்களால் உண்டான குழிகள் அதிக பள்ளத்தை ஏற்படுத்தாமல் நாம் உண்ணும் உணவு தட்டுகளைப் போன்று மிகக் குறைவான பள்ளமே இருந்தது… இதிலிருந்து மேலும் ஒரு முடிவுக்கு வந்தனர்… நிலவின் உட்பகுதியில் வெற்றிடம் மட்டுமில்லாமல் மிக வலிமையான உலோகத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கலாம் என்றும். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்… அவைகளைப் பற்றி வேறு ஒரு கட்டுரையிலோ அல்லது அறிவியல் புனைவு கதையிலோ பார்க்கலாம். மேலுள்ள எல்லாவற்றையும் பொருத்திப் பார்க்கும்போது நிலவு செயற்கையான ஒன்று என்றோ அல்லது இயற்கையான ஆனால் இறந்த துணைக்கோளோ அதை மாற்றி அமைத்து இங்கு செலுத்தி வந்து இப்போது இருக்கும் வட்டப்பாதையில் சுற்ற விட்டனரோ என்று தோன்ற வைக்கிறது… இவைகளை உறுதி செய்வதுபோல் மூன்று பழமை நாகரீகங்களின் சொற்கேள்வி அமைந்துள்ளது…. பண்டைய பொலிவியாவில் வாழ்ந்த டிவினாக்கு இன மக்களுக்கு நிலவு தெரியாது. 2500 வருடங்களுக்கு முன் வாழ்ந்த கிரேக்க ரோம தத்துவ மேதைகள் எழுதிய பதிவில் நிலவு வருவதற்கு முன்னே வாழ்ந்தவர்கள் என்று இருக்கிறது … இவைகளுக்கெல்லாம் மேலாக ஆப்பிரிக்காவின் ஜூலூ இன மக்களின் தொன்று தொட்டு இருந்த நெடுங்கால நம்பிக்கை, நிலவு ஒரு விண்வெளிக்களம் என்றும் தொழில்நுட்பத்தில் மிகவும் சிறந்த ரெப்ட்டிலியன் இன வேற்று கிரக வாசிகள் அதை இயக்கி இப்போது இருக்கும் இடத்தில் நிலைநாட்டியதாகவும் அதனுள் இன்றும் இருக்கிறார்கள் என்றும் அங்கிருந்து நம்மை கண்காணித்து வருகிறார்கள் என்றும் இன்றும் நம்புகின்றனர். இதற்கு நம் காலத்திய ஆதாரம் அப்போலோ பயணத்தின் போது எடுத்த பல புகைப்படங்கள் வெளியிடப்பட்டு அதில் தெரிந்த பல செயற்கை கட்டிடங்களையும் தொழிற்சாலைகளையும் பலர் பார்த்துவிட்டு எழுப்பிய கேள்விகளில் பதில் கிடைப்பதற்கு பதிலாக அத்தகைய எல்லா புகைப்படங்களும் இணையத்திலிருந்து நீக்கப்பட்டன. இவைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தார் போல், அப்போலோ 11 பயணம் முடித்துக் கொண்டு வந்த குழு செய்தியாளர்கள் சந்திப்பில் வெற்று பார்வைகளுடன் எதையோ பார்த்து மிரண்டது போல் நிலையற்று நிலை குலைந்து உயிர்ப்பு இல்லாத பேட்டியை கொடுத்தனர்… அது மட்டுமல்ல நிலவில் முதலில் காலடி வைத்துவிட்டு வந்த நீல் ஆம்ஸ்ட்ராங் சுமார் 30 வருடங்கள் பொது வாழ்க்கையில் இருந்தே விலகினார். இந்த விளக்கங்கள் போதும் என்று நினைக்கிறேன்…. இப்போது நாம் விட்டு வந்த குமரிக்கண்டத்திற்கு தற்காலத்திலிருந்து சுமார் 12,800 வருடங்களுக்கு முன்பு செல்வோம். சுமேரிய அனுநாக்கிகளுக்கும் அட்லாண்டிஸ் புரட்சியாளர்களுக்கும் உச்சகட்ட பகைமை இருந்தது.. இந்த சண்டையில் நம் தமிழ் குமரிக்கண்ட மக்களும், எகிப்திய அன்றைய நாகரிக மக்களும் தலையிடாமல் இருந்தும் பாதிக்கப் போவது அவர்களுடன் ஒட்டுமொத்த உலகமே என்பது அப்போது யாருக்கும் தெரியாது… ஆம் அப்போதுதான் மிகப் பிரம்மாண்டமான போர்க்கப்பல் போன்று நிலா இப்போது இருக்கும் இடத்தில் நிலை நிறுத்தப்பட்டது. அதுவரை பணிப்படர்ந்த நீராவி போல் உலகம் முழுதும் வான்வெளியில் பரவி இருந்த அந்தத் திரை நிலவின் புவியீர்ப்பு தன்மையால் தகர்ந்து அதுவரை பூமி சந்தித்திராத பெரும் மழையாக பல நாட்கள் பொழிந்தது…. கடல் மட்டம் சுமார் நானுறு அடிகள் உயர்ந்து உலகம் முழுவதும் வெள்ளக்காடானது. அட்லான்டீஸ் முழுவதும் கடலில் முழுக, சுமேரியாவும் எகிப்தும் கடல் தண்ணீரால் சூழ நாம் மட்டும் தப்பித்தோமா…. இல்லை…. குமரிக்கண்டத்தின் வடக்கோடியில் இருந்த சுமார் 5% குறைவான மக்களே இன்றைய தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் தப்பிக்க மற்றைய குமரிக்கண்டம் முழுவதும் கடலில் மூழ்கியது. எகிப்திலும் சுமேரியாவிலும் தண்ணீர் வற்ற பல வருடங்களாக தங்கிய கடல் மணல் அப்பகுதிகளை பாலைவனமாக்க…மற்றவை உங்களுக்கே தெரியும்! இரு பெரும் நாகரிகங்களை அடக்க நினைத்து எடுக்கப்பட்ட முடிவு அற்புதமான, நாகரிகத்தில் செழித்தோங்கிய நம் தமிழ் குமரிக்கண்டத்தையும் பலி வாங்கியது வரலாற்று சோகம். தப்பித்து வந்த ஐந்து சதவிகித தமிழர்கள் இந்தப் பேரழிவிலிருந்து தங்களை காத்து நிலை நிறுத்திக் கொள்ள சில ஆயிரம் வருடங்கள் பிடித்தது… அவர்கள் வழிவழியாக அளித்த அறிவு செல்வத்தில் திருக்குறள், தொல்காப்பியம் முதல் இன்றைய திருவருட்பா வரை இயற்றப்பட்டாலும் அன்றைய தொழில்நுட்பத்தை இன்று வரை நம்மால் மீட்க முடியவில்லை, மீட்க முனைவோருக்கு பண பலமும் அதிகார பலமும் இல்லை என்பது என்றென்றும் மனம் வெதும்பும் நமது இன்றைய சோகமே!