top of page
Search

தடம் மாறி சொர்க்கத்திற்கு!

  • melbournesivastori
  • Jun 12, 2023
  • 7 min read

    பத்து நாள் பயணத்திற்கு எல்லாம் எடுத்து அடுக்கி வைத்தாகி விட்டது… நாளை நேபாளம் காட்மாண்டுவிற்குச் செல்ல வேண்டும்.. ஏன் காட்மாண்டுக்கு….?  எனக்கே புரியவில்லை ஏதோ தோன்றியது போக வேண்டும் என்று…  முடிவு செய்தேன், கிளம்பி விட்டேன்… நான் சக்திவேல்.

    சீக்கிரமாகவே உறங்கச் சென்றேன், தூக்கமே வரவில்லை.. தடுமாற்றமா, குழப்பமா என்று புரியவில்லை  என்னென்னவோ நினைவுகள்.. பிரபஞ்சத்தைப் பற்றி,  ஆன்மாவைப் பற்றி,  கடவுளைப் பற்றி,  வாழ்க்கையைப் பற்றி…. இது, அது என்றில்லாமல் என்னென்னமோ நினைவுகள் வந்து சென்றன. வாழ்க்கை! பிறந்த எல்லா உயிரினங்களும் வாழ்கிறது மனிதர்களும் வாழ்கிறார்கள்…. வாழ்கிறார்களா அல்லது பிறப்பதிலிருந்து இறப்பது வரை இருந்து விட்டு செல்கிறார்களா? அவரவர்களுக்கே வெளிச்சம். வாழ்க்கை என்று நான் குறிப்பிடுவது குடியும் கும்மாளமுமாக, மதுவும் மாதுவுமாக, மண்ணும் பொன்னும் ஆக  இல்லை…. வாழ்வதற்கான அர்த்தம் நாம் பிறந்த இந்த பூமிக்கு ஏதாவது நன்மை பயக்கும்படி செய்தோமா….குறைந்தது  பிறந்த இனத்திற்கும் மொழிக்கும் நன்மை செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை இருப்பதை காப்பாற்றவாவது செய்தோமா என்று நினைத்து வாழ்வது… உடன் வாழும்  மற்ற உயிரினங்களை காப்பாற்றவில்லை என்றாலும் அழிக்காமல் இருப்போம் என்று வாழ்வது…

   திடீரென்று சொர்க்கம், நரகம் இவைகளை பற்றி நினைவு வந்தது… இல்லை என்று அடித்து சொல்வதை விட இருப்பதற்கான சாத்தியக்கூறு மிக மிக மிக குறைவு என்று முடிவு செய்தேன்… அதற்கான காரணம் மறுபிறவியை பற்றி  என்னுடைய கருத்துக்கள்… எப்படி யோசித்துப் பார்த்தாலும்  மறுபிறவி இருப்பதற்கான  சாத்திய கூறுகள் அதிகமாக உள்ளது. மறுபிறவியே இல்லை என்று முடிவு செய்தால் மக்கள் இடையே இருக்கும் பெரும் ஏற்றத்தாழ்வுகள் ஒரு நியதிக்கு உட்படாமல்  இருப்பது புலப்படும். நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் மறுபிறவி என்று ஒன்று இல்லை என்றால் இந்த ஒரு பிறவி அதிர்ஷ்டத்தால் கிடைத்தது போல் இருக்கும்.. இதை பகுத்தறிந்து, புரிந்து, தெளிய நமக்கு அறிவு இருப்பதால் நம்புவதும்,  ஏற்றுக்கொள்வதும் முடியாத காரியம்.

   சொர்க்கம் இருப்பதாக வைத்துக் கொள்வோம்… என் நினைவுக்கு வருவது ஒரு வருத்தகரமான ஜோக் தான்….

   வேறு வேறு அகதி முகாம்களில் இருந்த இரண்டு இலங்கை தமிழர்கள் ஆக்ரோஷமாக விவாதம் செய்து கொண்டிருந்தனர்  யார் மோசமான சித்திரவதைகளை அனுபவித்தது என்று….. இதைப் பார்த்த கடவுள்  அவர்களிடம் சென்று, ' அது முடிந்து போன கதை இப்போது இருவரும் இறந்து சொர்க்கத்தில் இருக்கிறீர்கள்… ஆத்ம சாந்தியோடு இருப்பதை அனுபவியுங்கள்' என்றார்.

 அந்த இருவரில் மூத்தவர், ' கடவுளே நீங்கள் இதில் தலையிடக்கூடாது… எங்களின் இரு கருத்துக்களையும்  உங்களால் எடை போட முடியாது…'

 கடவுள் அதிர்ச்சியுடன் ஆச்சரியமாக கேட்டார் ஏன் என்று..

 அதற்கு அந்த மூத்தவர் கூறினார்,

' நாங்கள் இருந்த இரு இடங்களிலும் நீங்கள் இல்லை அப்படி இருக்க எவ்வாறு எங்கள் கருத்துக்களை நிர்மாணிக்க முடியும்?'

 இதைக் கேட்ட கடவுள் வாயடைத்து போனார். 

    இரவு நேரம் அதிகமாக தூக்கம் வர ஆரம்பித்து உறங்கி போனேன்.

   மறுநாள் காலை எழுந்து விமான நிலையத்துக்கு கிளம்ப ஆரம்பித்தேன்… டெல்லி சென்று அங்கிருந்து காட்மாண்டுக்கு செல்ல வேண்டும்.

    ' பத்து நாட்கள் எந்தவித வியாபார சம்பந்தமான பேச்சுக்களையும் வைத்துக்கொள்ள போவதில்லை… என் மொபைல் சிம்மையும் மாற்றி கொள்ள போகிறேன்… அந்த சிம்முடைய நம்பர்  உனக்கும் நம் பிள்ளைகளுக்கு மட்டுமே தெரிய வேண்டும்.. யாரிடம் கொடுக்காதே….  நிம்மதியாக பத்து நாள் இருந்து விட்டு வருகிறேன் ' என்று டெல்லியில் இருக்கும் மேகநாதன் மனைவியிடம் கூறினார். அவரும் காட்மாண்டு செல்ல தயாராகிக் கொண்டிருந்தார். கோடிக்கணக்கில் வியாபாரம் செய்யும் பிசினஸ் மேக்னெட்…

    ' ஜென்னி, அடுத்த 10 நாட்களும் நான் என் மொபைல் போனை தொடப்போதில்லை…. காட்மாண்டு சென்று அடைந்தவுடன் என் ஓட்டல் அறையின் நம்பரை உனக்குத் தெரிவிக்கிறேன்.. ஏதாவது முக்கிய தகவல் இருந்தால் மட்டுமே என்னை  கூப்பிடு' என்று காட்மாண்டு செல்ல தயாராகிக் கொண்டே 'சாரதா மாடலிங் ஸ்கூல்' தலைவி சாரதா தன் காரியதரிசி ஜென்னியிடம் கூறிக் கொண்டிருந்தார்.

   இதுபோல இன்னும் 12 பேர் அதே விமானத்தில் காட்மாண்டுவிற்கு  செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர். அவர்கள் எல்லோரும் அவரவர்கள் துறையில் அதிக வேலை சுமையில் இருந்து விடுபட பத்து நாட்கள்  ஓய்வெடுக்கவே காட்மாண்டுவிற்கு செல்கின்றனர்.  

   அதில் ஒருவர் தான் பழுத்த அரசியல்வாதி தேவராஜன்… நாட்டு அரசியலில் எல்லா சூட்சுமங்களையும் தெரிந்த எந்தக் கட்சியினாலும் தவிர்க்க முடியாத அரசியல்வாதி அவர். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோருக்கும் பினாமி கைடன்ஸ் வழங்குபவர்.

     புதுடெல்லி விமான நிலையம்….

 காட்மாண்டு செல்ல அந்த 14 பேரும் காத்துக் கொண்டிருந்தனர்…. என்னுடன் சேர்த்து 15 பேர். ஏதோ ஒரு இனம் புரியாத பயம்… காட்மாண்டு செல்வதற்கா இல்லை அங்கு தங்குவதற்கா இல்லை அங்கு ஏதோ நடக்கப் போகிறது என்ற உள்ளுணர்வின் பயமா  என்று தெரியவில்லை புரியவில்லை… இதோ அழைத்து விட்டார்கள், ஒவ்வொருவராக  எல்லோரும் சென்றோம்.  அது ஒரு சிறிய விமானம் 20 பேர் அமரக்கூடியது… நாங்கள் 15 பேர் தான்  பயணிகள்.

   விமானம் கிளம்பியது, நூற்றுக்கணக்கான முறை பயணம் செய்திருந்தாலும்  அது வானில் எம்பி எழும்போது  ஜிவ் என்று வயிறு இருக்கி பிடிப்பது மாறப்போவதில்லை…. ஒரு வழியாக விமானம்  நிலைக்கொண்டது.

 மறுபடியும் என் எண்ணங்கள் எங்கெங்கோ சென்றது… நினைவுகள, ஞாபகங்கள் எல்லாம் எங்கு சேமித்து வைக்கப்படுகிறது என்று கேட்டால் 99.9999999999999% மக்கள் அது மூளையில் என்பார்கள். எனக்கு அந்த கருத்தில் பல வருடங்களாகவே உடன்பாடு இல்லை…. உடன்பாடு இல்லாததற்கு காரணமும் உண்டு.. நினைவுகள் மூளையில் சேமித்து வைக்கப்படுகிறது என்றால் உலகில் பல மூலைகளில் பலவிதமான  மக்களிடையே ஏற்படும் மறுபிறவி நினைவுகள் தடுமாற்றத்தை ஏற்படுத்தும்…. இறந்தவுடன் இறந்த உடலுடன் சேர்த்து மூளையும் மக்கிவிடும், அழிந்துவிடும், அப்படி இருக்கையில் எவ்வாறு முன் பிறவியின் நினைவுகள்  மறுபிறவியில் தொடர முடியும்?

  இது புரிந்து கொள்ள மிகவும் கடினமான கருத்து…. வாழ்க்கையின் முக்கிய நினைவுகள் எல்லாமே ஆன்மாவில் சேமித்து வைத்திருப்பதற்கான சாத்திய கூறுகள் தான் அதிகம் உண்டு. எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இப்பொழுது நம் எல்லோருடைய டிஜிட்டல் பைல்களையும்  கிளவுடில் சேர்த்து வைப்பது போல. இதற்கு மேலும் நான் என்னென்ன நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்பதை உங்களுக்கு கூறி  குழப்பப் போவதில்லை..

   இதோ இன்னும் அரை மணி நேரத்தில் காட்மாண்டு போய் சேர்ந்து விடுவோம்… நல்ல முன்னேற்பாடுடன் வந்திருந்தும் ஒருவித தயக்கம் இருந்தது… மற்றவர்களை பார்த்தேன் அவர்கள் என்னைப்போல் இல்லாமல் அந்தப் பத்து நாட்களின் ஓய்வுக்காக எதிர்பார்த்து காத்து  இருப்பது தெரிந்தது..

 அப்போதுதான் சற்றும் எதிர்பாராமல் விமானம் தடுமாற்றத்துக்குள்ளாகியது… என்ன நடக்கிறது என்று நினைப்பதற்குள் விமானம் ஒரு தீப்பிழம்பிற்குள்  சென்றது போல் இருந்தது…. ஆனால் சுடவில்லை… எல்லோரும் பேய் அறைந்தது போல் கத்துவது தெரிந்தது ஆனால் காதில் விழவில்லை… நான் முடிவிற்கு வந்தேன், இதோ இன்னும் சில நொடிகளில் இறக்கப் போகிறோம் இந்த விமானம் விபத்துக்குள்ளாகி விட்டது… வயதான அப்பா அம்மாவை விட்டு தான்தோன்றித்தனமாக இந்த பயணத்தை மேற்கொண்டதன் விளைவுதான் இந்த தண்டனை என்று என்னால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

  விமானம் மேலே உந்தி எழும்போது ஏற்படும் ஜிவ்வென்ற  உணர்வை போல்  ஆயிரம் மடங்கு உணர்வு இப்பொழுது வந்தது.. சுற்றிலும் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை… ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகமாக தெரிந்தது…. மரண பயத்தை கடந்து வேறு ஏதாவது இருக்க முடியும் என்றால் முடியும் அதுதான் இப்போது நடக்கிறது.. ஏதோ ஒரு பெரிய நெருப்புக் குழாய்க்குள்  அதிவேகமாக  விமானம் சென்றது… நெருப்புக்குள் செல்வது போல் இருந்தாலும் ஒருவிதக் குளிர்ச்சியே ஏற்பட்டது. ஒருவருக்கொருவரை பார்க்கவும் முடியவில்லை… உணர்வுகளை பரிமாற கொள்ளவும் முடியவில்லை… என் அப்பா அம்மாவிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்… பணம் இருக்கிறது அவர்களைக் கடைசி காலத்தில் கவனிக்க யார் இருக்கப் போகிறார்கள் என்ற சில நொடிகள் நினைப்பே என்னை மேலும் கொன்றது.

 இப்பொழுது நினைவு மட்டுமே இருந்தது… உடல் செயலிழந்து விட்டது… கண் இமைக்க கூட முடியவில்லை.. இந்த நொடிகளே  நரகம் போன்று இருக்கிறது.. இதைவிட கொடுமையாகவா நரகம் இருக்கப் போகிறது?

   இல்லை இல்லை கடவுள் எங்களை கைவிடவில்லை… இதோ ஒரு அற்புதமான  நிலப்பரப்பிற்கு வந்து விட்டோம்… விமானம்,  விமானம் இறங்குவதைப் போல் இல்லாமல் ஹெலிகாப்டர் இறங்குவது போல் பாதுகாப்பாக அந்த மைதானம் போன்ற இடத்தில் இறங்கியது. அந்த நொடியில் இருந்து தான்  எல்லோரும் ஒருவருக்கொருவரை  பார்த்துக் கொண்டோம். எல்லோரிடத்திலும் இருந்து ஒரு நீண்ட பெருமூச்சு வந்தது..

  சரி இறங்கி விட்டோம் இது எந்த நாடு? நேபாளமா இல்லை சைனாவில் இறங்கி விட்டோமா?  ஒரு மூன்று நான்கு நிமிடங்கள் கழித்து பைலட் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தார்.. ஒரே நேரத்தில் எல்லோரும் கேட்டோம் என்ன நடந்தது…எங்கு வந்து இறங்கி இருக்கிறோம்  என்று…

 பைலட்டின் இறுகின  முகத்தைப் பார்க்க முடியவில்லை… இன்னமும் பேய் அறைந்தது போல் இருந்தார்.  சற்று நிதானத்திற்கு வந்து.. மன்னிக்கவும் எனக்கும் தெரியவில்லை எங்கு இருக்கிறோம் என்று. உள்ளே எல்லா  கருவிகளும் செயலிழந்து விட்டன.

   தப்பித்தோம் என்று நினைத்தோம்.. இல்லை என்ற கவலை தொடர்ந்தது…

 அப்பொழுதுதான் கவனித்தேன், நான் பெரும்பாலான நாடுகளுக்குச் சென்று இருக்கிறேன்.. எந்த ஒரு  நிலப்பரப்பு போலும்  இந்த இடமில்லை… மிக மிக அற்புதமாக இருந்தது…  பைலட் இறங்கும் கதவை திறக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கையில்… நான் அவரிடம் கூறினேன், ' வந்து இறங்கி விட்டோம்… இனி வெளியில் செல்லாமல் இருப்பது முட்டாள்தனம். வெளியே சென்று யாராவது உதவிக்கு வருகிறார்களா என்று பார்ப்போம்'

 எல்லோரும் சரி என்று கூறவே பைலட் வெளி கதவை திறந்து  இறங்குவதற்கான விபத்து நேர சறிக்கிச் செல்லும் காற்றடைத்த படிக்கட்டு இல்லாத படிக்கட்டை விரித்தார்… நான் முதலில் சறுக்கி வெளியே சென்றேன். தொடர்ந்து மற்றவர்களும் வெளியே வந்தனர். விமானம் கிளம்புவதற்கு முன் நான் பைலட்டை பார்த்ததில்லை  ஆனால் மற்ற 14 பேரையும்   இரண்டு ஏர் ஓஸ்டஸ்ட்களையும் பார்த்திருக்கிறேன்.. எல்லோரும் சிறிது மெலிந்து இளமையுடன் இருப்பது தெரிந்தது அதிர்ச்சியாகவும் ஆனந்தமாகவும் இருந்தது…

   எனக்கு புரிந்து விட்டது, நாங்கள் இறந்து விட்டோம்  இப்போது இருப்பது சொர்க்கம். இதை மற்றவர்களுக்கு சொல்ல  தயங்கினேன். அதே நினைவு எல்லோருக்கும் வந்தது புரிந்தது… வெளிப்படையாக பேச ஆரம்பித்தோம். வாழும்போது சொர்க்கத்துக்குச் செல்ல வேண்டும் என்று அதீத விருப்பத்தில் எல்லோரும் இருந்தோம்… இப்போது சொர்க்கத்திலேயே இருக்கும் போது அந்த மகிழ்ச்சி இல்லை… எல்லாவற்றையும் எல்லோரையும் அப்படியே விட்டு விட்டு வந்தது பெரும் கவலையை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் இதே போன்ற  மனநிலையே இருக்க அரசியல்வாதி தேவராஜனுக்கு மட்டும் வித்தியாசமான நினைவு வந்து குழப்பியது…..

 அது வேறொன்றுமில்லை அவரே சொல்ல கேட்போம்…

' நீங்க சொல்றதெல்லாம் சரிதான், ஆனா நான் சொர்க்கத்துக்கு செல்வேன் என்று இல்லை இல்லை வருவேன் என்று ஒரு சதவீதம் கூட நினைத்ததில்லை…. என்னைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும், நான் சிறு வயதில் இருக்கும் போது மட்டுமே நன்மை செய்திருக்கிறேன்…. அரசியல்வாதியாக எண்ணற்ற, கணக்கில் அடங்கா மக்கள் விரோத செயல்களை செய்திருக்கிறேன்…. ஒருவேளை கடவுள் என்னை மன்னித்து விட்டாரா?'

' விடுங்கள் தேவராஜ், இப்போது நாம் அனைவரும் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிப்போம்… என்ன இது பசிக்கிறதே…. சொர்க்கத்திலும் பசிக்குமா? குழப்பமாக இருக்கிறது'

 ஆமாம் எங்களுக்கும் பசிக்கிறது என்று எல்லோரும் கூற, விமானத்தில் இருந்த பிரட், பட்டர் போன்றவற்றை சாப்பிட்டோம்.

  ஓரிரு  மணி நேரம் ஆகி இருக்கும்… சொர்க்கத்தில் நம் முன்னோர்களை சந்திப்போம் என்று கூறியிருக்கிறார்களே யாராவது தென்படுகிறார்களா என்று சுற்றும் முற்றும்  பார்த்தோம்.. கண்களுக்கு எட்டிய தூரம் வரை அற்புதமான இயற்கை காட்சி தெரிந்ததை ஒழிய எங்கள் முன்னோர் யாரும் தென்படவில்லை. சிறிது தூரம் சென்று பார்க்கலாம் என்று எல்லோரும் நடக்க ஆரம்பித்தோம்..  நயாகரா நீர்வீழ்ச்சியை மிஞ்சும் அளவிற்கு  மிக மிக அற்புதமான நீர்வீழ்ச்சியை கண்டோம்..  சுற்றிலும் இருந்த செடி, கொடிகள்,  மரங்கள் நான் எங்கும் இதுவரை கண்டதில்லை…  நீர்வீழ்ச்சியை கண்டுக்களித்துக்  கொண்டிருக்கும்போதே சில அழகான, இதுவரை கண்டிராத பறவைகள் அங்கு வந்து அமர்ந்து  தேனிசை போன்ற குரலில்  பாடத் துவங்கின.  கண்டிப்பாக இது சொர்க்கமாகத்தான் இருக்க வேண்டும்… நினைத்துக் கொண்டிருக்கும் போதே  குதிரை அளவில்  ஒளிரும் அழகான மான்கள்  எங்களைக் கண்டும் காணாமல் சென்றன.. இரவு நெருங்க எல்லோரும் விமானத்துக்கு  திரும்பினோம். ஒன்றைச் சொல்ல மறந்து விட்டேன்… வெப்பநிலை காற்று இல்லாமல்  ஒரு இருபதில் இருந்து 22க்குள் இருக்கும்…. வெப்பநிலையில்  ஏற்றம் இறக்கம் இருப்பதாகவே உணர முடியவில்லை.

   இப்பொழுதுதான் உறங்கச் சென்றோம் போலிருந்தது  ஒரு மூன்று மணி நேரம் மட்டுமே ஆகியிருக்கும்…. விமான ஜன்னல்கள் வழியே பொழுது விடிந்து விட்டது தெரிந்தது. அசதி அதிகமாக இருந்ததால் இருக்கையை விட்டு எழவே மனமில்லை. 

   அப்போதுதான் கண்டோம், ஒரு பெரிய ஊர்தி விமானத்தின் பக்கத்தில் வந்து இறங்கியது… எங்களுக்கோ குழப்பம்… கடவுள் கூட மகிழ்வூந்தில்  பயணம் செய்கிறாரோ என்னவோ…. இதை நினைத்து முடிப்பதற்குள்  அந்த ஊர்தியில் இருந்த கதவு திறக்க அதே நேரத்தில் எங்கள் விமான கதவும் திறந்து நேராக எங்கள் விமானத்திற்கு வர  ஒரு பாலம் போன்ற அமைப்பு வந்தது. அந்தப் பாலத்தின் மேல் இரண்டு ஆண்கள் இரண்டு பெண்கள் நால்வரும் பார்ப்பதற்கு ஹாலிவுட் நடிகர், நடிகைகள் போன்று இருந்தனர்… நால்வரும் ஆறடிக்கு மேல்  சுமார் 7, 8 அடி வரை இருந்தனர், நேராக குனிந்து எங்கள் விமானத்திற்குள் வந்து ஒரு பெரிய ஐபேட் போன்ற ஒன்றை காண்பித்தனர்.. அதில் ஆங்கிலத்தில் எழுதி இருக்கவே…

தேவராஜன், ' என்னையா யாராவது படித்து சொல்லுங்கள் சொர்க்கத்துக்கு வந்தாலும் ஆங்கிலத்தின் தொந்தரவு  இருக்கிறது' என்று கேட்க..

 இதைக் கேட்ட அந்த நால்வரின் முகத்திலும்  எந்தவித உணர்ச்சி மாறுதலும் இல்லை…

 நான் படித்தேன்… அதில் குறிப்பிட்டு இருந்தது, 'தவறுதலாக இங்கே வந்து விட்டீர்கள்… எங்களுடன் இப்போதே வாருங்கள் உங்களைப் பத்திரமாக திருப்பி அனுப்பி விடுகிறோம்' என்று எழுதி இருந்தது.. இதை தேவராஜ் இடம் கூறினேன்.

 அதைக் கேட்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்த தேவராஜ்,' அட நாம சாகலையா? ஒரு கணம்  கடவுள் மன்னித்துவிட்டார் என்றே நம்பி விட்டேன்… அப்படின்னா எந்த நாட்டுக்கு வந்து இருக்கிறோம்?'

 'தெரியவில்லை கேட்டு சொல்கிறேன்..'

 நான் ஆங்கிலத்திலேயே அவர்களிடம் கேட்க… அவர்கள் பதில் சொல்வதற்கு பதிலாக அந்த ஐபேட் போன்றதை காண்பிக்க… அதில் எழுதி இருந்து

' எல்லா விளக்கங்களும் கிடைக்கும்  எங்களுடன் வாருங்கள் ' என்று கட்டளை போன்று எழுதி இருந்தது. இதை எல்லோரும் புரிந்து கொண்டு  அவர்களுடன் பாலத்தில் நடந்து  அந்த ஊர்திக்குள் சென்றோம்.

  வெளியே பார்த்தல் மினி பஸ் போல் இருந்த அந்த ஊர்தி உள்ளே சென்றவுடன் பார்த்தால் ஒரு பெரிய அலுவலகம் போல் தெரிந்தது. அங்கு அமர  எந்த நாற்காலியும் இல்லை…. நின்று கொண்டிருக்கும்போதே பாலம் உள் இழுக்கப்பட்டு கதவு மூடிக் கொண்டது. எப்போது கிளம்ப போகிறது  என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே மறுபடி கதவை திறந்தது…. பாலம் வெளியே நீட்டி கீழ் நோக்கிச் சென்றது, அவர்கள் எங்களை அழைக்க… எங்களுக்கு ஏதும் புரியவில்லை எங்கேயோ அழைத்துச் செல்கிறேன் என்று சொன்னார்களே என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே  வெளியே பார்த்தால்  ஒரு நகரம் போன்று  இருந்தது..  நான் இது போன்ற நகரத்தை உலகில் எங்கேயும் பார்த்ததில்லை… குழப்பத்திற்கு மேல் குழப்பம் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி… அவர்களுடன் பக்கத்திலேயே இருந்த ஒரு கட்டிடத்துக்குள் நுழைந்தோம். அது ஒரு திரையரங்கு போல் இருந்தது… அங்கு நாற்காலிகள் இல்லை… இல்லை நாற்காலிகள் போல் இருந்த ஊஞ்சல்கள் மிதப்பது போன்று இருந்தது. எங்களை அமரச் சொன்னார்கள்.

    அமர்ந்தோம்.. எதிரே  இருந்த திரையில் எழுத்துக்கள் மின்னின… என்ன ஆச்சரியம் அவை தமிழில் இருந்தது…. படித்துப் பார்த்தோம். மிகவும் அதிர்ச்சியாக இருந்தது, எப்படி நடந்திருக்க கூடும்  என்று ஆச்சரியமாகவும் இருந்தது.. ஏற்கனவே பேய் அறைந்தது போல் இருந்த நாங்கள்…. மரண பயத்தின் உச்சிக்கே சென்றோம்.. அதில் என்ன எழுதி இருந்தது என்று தெரிந்தால் யாருக்குமே இந்த மனநிலை தான் ஏற்படும்.

' உங்கள் விமானம் தவறுதலாக எங்கள் கிரகத்துக்குள் வந்துவிட்டது. உங்களை இன்றே உங்கள் பூமிக்கு திருப்பி அனுப்பி விடுகிறோம்… யாரும் பயப்பட தேவையில்லை இன்னும் சிறிது நேரத்தில் உங்கள் மொழி தெரிந்த எங்கள் கிரகத்தவர் வருவார் உங்களுக்குத் தோன்றும்  எந்தவிதமான கேள்விகளையும் அவரை கேட்கலாம் ' என்று இருந்தது.

 நாங்கள் எல்லோரும் பேச மறந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.

   சில நிமிடங்கள் கழிந்திருக்கும், எங்களை அழைத்து வந்த இரு பெண்களைப் போலவே  ஒரு பெண்  தோன்றி எங்களுக்கு வணக்கத்தை தெரிவித்தாள்.. அவளுக்கு திருப்பி வணக்கத்தை தெரிவிக்கவும் மறந்த நிலையில் நாங்கள் இருந்தோம். அவளே தொடர்ந்தாள், ' இப்போது நான் கூறப்போவது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும் சிலருக்கு ஆச்சரியமாகவும் இருக்கும், நீங்கள் உங்கள் பூமியிலிருந்து தவறுதலாக எங்கள் கிரகத்துக்குள் நுழைந்து விட்டீர்கள் ' அவள் தொடர்ந்து பேசுவதற்கு முன்பே நான் குறுக்கிட்டு

' அது எப்படி சாத்தியமாக்கும் ' மேதாவி தனமாக கேட்டதாக  நினைத்துக் கொண்டு  மற்றவர்களை பார்த்தேன்… அவர்களும் மேதாவித்தனமாக  நான் கேட்டது சரி என்று தலையாட்டினார்கள்.

' எல்லாவற்றையும் விளக்கமாக சொல்கிறேன் சிறிது நேரம் நான் பேசும் போது குறிக்கிடாமல் கேட்கவும் ' என்று அந்தப் பெண்  கேட்டுக் கொண்டதாக எங்களுக்கு படவில்லை  கட்டளையிட்டதாகவே நினைத்து தலையாட்டினோம்.


   ' நெடுங்காலமாக நாங்கள் பூமிக்கு சென்று உங்களுடைய நாகரிக வளர்ச்சியை கவனித்துக் கொண்டு வருகிறோம்… அது எங்கள் பொறுப்பும் கூட… ஏனென்றால் உங்களையெல்லாம் உருவாக்கியது  எங்கள் கூட்டமைப்பு' நான் குறிக்கிட  முனைந்து  அமைதியானேன்..

 அவளைத் தொடர்ந்தாள், ' விளக்கமாக சொன்னாலும் உங்களுக்கு புரியாது… புரியக்கூடாத அளவிற்கு தான் நாங்களும் கட்டமைத்தோம்… இருந்தும் இந்த தவறு நடந்து விட்டது… நீங்கள் பூமிக்குச் சென்று  யாரிடம் இதைப் பற்றி கூறினாலும் யாரும் நம்ப போவதில்லை.. நாங்கள் டால் ஒயிட் எனப்படும்  நார்டிக்குகள். பூமியில் உள்ள சில அரசாங்கங்களுக்கு நாங்கள் அறிவுரை வழங்கி வருகிறோம்..  அதுபோல ஒரு பயணத்திற்கு  செல்லும்போது  திறந்த வோர்ம் ஹோலில் தான் தவறுதலாக நீங்கள் வந்த விமானம் நுழைந்து விட்டது… அப்படித்தான் எங்கள் கிரகத்திற்கு வந்து விட்டீர்கள்.. அதே வழியை நாங்கள் திறக்க போகிறோம் உங்கள் விமானமும் திரும்பிச் செல்லப் போகிறது… ஏதேனும் முக்கியமான கேள்விகள் இருந்தால் கேட்கவும்' என்றாள்.

 கேள்விகள் ஒன்றா இரண்டா ஆயிரக்கணக்கான கேள்விகள் உண்டு… எதை முதலில் கேட்பது என்று புரியவில்லை. இருந்தும்  அவளிடம் கேட்டேன், ' உங்கள் கிரகத்தை நாங்கள் சுற்றி பார்க்க முடியுமா?'

' மன்னிக்கவும் அதற்கு நீங்கள் இன்னும் தயாராகவில்லை…. வருங்காலத்தில் அதற்கான திட்டங்கள் உண்டு ' என்று கூறி அனுமதி மறுத்து விட்டாள்.

  ' நாங்கள் கொஞ்சம் இளமையாக இருப்பது போல் தெரிகிறது…' மேகநாதன் கேட்டார்.

' ஆமாம் நீங்கள் தவறுதலாக எந்த ஏற்பாடும் இல்லாமல் வந்ததால்  அது போல் தான் நடக்கும் '

' நீங்கள் பூமிக்கு செல்லுங்கள், உங்களில் எவருக்காவது இன்னும் சில வருடங்களுக்கு பிறகும் இங்கு வர வேண்டும் என்ற ஆசை இருந்தால் அழைத்து வந்து எங்கள் கிரகத்தை காண்பிக்கிறோம் '

 இதற்குப் பிறகு ஏதும் பேசுவதற்கில்லை… உடனடியாக செல்கிறோம் என்று கூறிவிட்டோம்.

 நாங்கள் வந்து 24 மணி நேரத்திற்குள்  மீண்டும் பயணப்பட்டோம்.

 நாங்கள் பூமியில் வழி தவறவிட்ட இடத்தில் மீண்டும் எங்கள் விமானம் பயணித்து தொடர்ந்தது.

  அந்த நேரம்…புது டெல்லி விமான நிலையத்தில் இருந்தவர்களுக்கு பேரிடியாக விழுந்தது என்று பிறகு தான் தெரிந்தது…

  அதன் காரணத்தைக் கேட்ட  எனக்கும் அது பெரும் அதிர்ச்சியாக இருந்தது….

 வேறொன்றும் இல்லை…. 24 மணி நேரத்துக்குள் திரும்பி விட்டோம் என்று நினைத்த நாங்கள் திரும்பும் பொழுது பூமியில் மூன்று மாதங்கள் கடந்து விட்டிருக்கிறது… மூன்று மாதங்களாக எங்கள் விமானத்தை தேடி வந்திருக்கிறார்கள்.  

 

 
 
bottom of page