ஞானக்கண்! By சிவா.
- melbournesivastori
- Jul 19, 2023
- 6 min read

ஒரு வளர்ந்த சமுதாயத்திற்கு அறிகுறியே இரண்டு கண்கள்….
லா அண்ட் ஆர்டர் எனப்படும் நீதித்துறையும், காவல்துறையும். இந்த இரு துறைகளின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அலசினாலே போதும் அந்த சமுதாயம் நாகரீகமாக வளர்ந்து இருக்கிறதா இல்லையா என்று தெரிந்துவிடும்..
என்ன தேவையில்லாமல் அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறான் என்று யோசிக்க வேண்டாம், நான் பின்னால் சொல்லப்போகும் செய்திகளுக்கு இந்த அஸ்திவாரம் தேவைப்படுகிறது……
இந்த இரு துறைகளும் நியாயமாக, உண்மையாக இயங்கினால் மட்டுமே அந்த சமுதாயத்தில் இருக்கும் எல்லா தரப்பு மக்களும் சுதந்திரமாக இருக்க முடியும்… இதில் ஒரு துறையோ அல்லது இரு துறைகளுமே அந்தத் துறைக்கு வரையறுக்கப்பட்ட நியதிகளுக்கு புறம்பாக இருந்தால் அவைகள் அந்த சமுதாயத்தை சீர்கேட்டை நோக்கி நகர்த்தி கொண்டிருக்கிறது என்று அர்த்தம். இது நடக்காமல் கண்காணிக்க வேண்டியது மூன்றாவது கண்ணின் கடமை… அந்த மூன்றாவது கண்…. ஞானக்கண்…. அது நேர்மையுடன் நடந்தால் மட்டுமே சமுதாய சீர்கேடு பேரிடர் வராமல் தடுக்க முடியும்…. நீங்கள் நினைப்பது போல 'அது' அந்த ஞானக்கண் அல்ல!
தமிழர்களின் சிறப்புமிக்க வரலாற்றை பல இடங்களில் தவறாகவும், பல இடங்களில் திரித்தும், குறைத்தும் கூறப்பட்டுள்ளது…. இது தவறுதலாக நடந்ததா இல்லை தமிழை தவிர்க்க நடந்ததா என்று இப்போது யோசித்து எந்த பயனும் இல்லை.. ஆனால் இனி வரும் காலங்களில் பண்டைய தமிழின் தேடுதலும்; புரிதலும்; தெளிதலும் இக்கால மற்றும் வருங்கால இளைஞர்களிடம் இருக்க வேண்டும், இருக்கப் போவது தவிர்க்க முடியாததாக போகப்போகிறது.
திருவள்ளுவன், தொல்காப்பியன், திருமூலர், அகத்தியன் போன்றோர் ஒளவையார், அதியமான் போன்றோர் மற்றும் சமீபத்திய இராமலிங்க அடிகள், சுப்பிரமணிய பாரதி போன்ற எண்ணற்ற, ஒப்பற்ற தமிழ் அடையாளங்களால் சிறப்பைப் பெற்ற நாம் எக்காலத்திலும் நாகரீகத்தில் சிறந்து விளங்கியவர்கள் என்பதை மறப்பது நாம் நம் முன்னோர்களுக்கு செய்யும் துரோகம்.
இப்போது சொல்லுங்கள்… தமிழ் இன நாகரிகத்தின் வயது எவ்வளவு என்று.. தமிழ்நாட்டின் நாகரிகம் 60 வருடங்கள் என்றால் நமக்கு மட்டுமல்ல தமிழ் நாட்டில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் கோபம் வரும், வரவேண்டும் ...
தமிழை காட்டுமிராண்டி மொழி என்ற போதும், திருக்குறளை பெரிய விருந்தில் வைக்கப்பட்ட மலம் என்று கூறியபோதும் சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்டது நம் முட்டாள்தனத்தை காட்டுகிறதா அல்லது இயலாமை காட்டுகிறதா என்று புரியவில்லை…. அதே போல் தான் நம் வரலாற்றை நாம் தவறாக தெரிந்து; புரிந்து கொண்டுள்ளோம். என்ன எங்கெங்கோ செல்கிறேன் என்று நினைக்கிறீர்களா? விவரமாக சொல்கிறேன்… இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைந்து விட்டோம்.. கண்ணெதிரே இருக்கும் கீழடிக்கு வயதை நிர்ணயிக்க போராடுகிறோம்.
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா என்று பழக்கத்தில், புழக்கத்தில் சொல்லி வைத்த நாம் கீழடிக்கு அங்கீகாரத்தை யாராவது தர மாட்டார்களா ஏங்குவது நம் பரிதாபமான நிலையை காண்பிக்கிறது…. ஒரு சிறிய விளக்கம் தருகிறேன்… ஒருவர் முனைவர் பட்டம் பெற (Phd) குழந்தைப் பருவத்திலிருந்து எல்லாவற்றையும் கல்லூரி மேற்படிப்பு வரை கற்க வேண்டும் பிறகு ஒரு பிரிவை ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டு ஆராய்ந்த பிறகு அந்த ஆராய்ச்சிக் கட்டுரையை சமர்ப்பித்து வெற்றி பெற்ற பிறகே முனைவர் பட்டம் கிடைக்கும். இதன் அடித்தளம் கல்வியின் கட்டமைப்பு அது ஓரிரு ஆண்டுகளில் நிகழக்கூடியது அல்ல.. நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் தொகுப்பு.
திருவள்ளுவரின் காலத்தை போகிற போக்கில் சுமாராக 2100 ( கிமு 100) என்று நிர்ணயித்தார்கள்.. அந்த மகான்; அந்த சித்தன்; அந்தப் பெரும் கல்வியாளன் எதைப் பற்றி எழுதாமல் விட்டான்? இவர்களெல்லாம் சொல்வது போலவே சுமார் இரண்டாயிரத்து 150 வருடங்களுக்கு முன்பு இருந்ததாகவே வைத்துக் கொள்ளலாம்… அவ்வளவு அற்புதமான திருக்குறள்களை இயற்ற, எழுத எவ்வளவு அறிவு இருந்திருக்க வேண்டும், அந்த அறிவினைப் பெற அக்காலத்திய கல்வி கட்டமைப்பு எப்படி இருந்திருக்க வேண்டும்... அந்தக் கல்வி கட்டமைப்பை அமைக்க எவ்வளவு அற்புதமான சமுதாய கட்டமைப்பு இருந்திருக்கவேண்டும்? இவைகளெல்லாம் உரு பெற சில ஆயிர வருடங்களாவது எடுத்திருக்கும். இப்போது நினைத்துப் பாருங்கள் நம் பண்டைய தமிழ் நாகரிகம் எவ்வளவு ஆயிரக்கணக்கான வருடங்கள் கடந்து, சுமந்து வந்தது என்று.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடியவர்கள் நாம்,
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்று சொன்னவர்கள் நாம்,
எம்மதமும் சம்மதம் என்று மதத்தை தாண்டி மனிதத்தை போற்றியவர்கள் நாம்!
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்னவர்கள் நாம்!
இருந்த இடத்திலிருந்து தூரதேசம் காண்பேன் ( இது அமெரிக்காவும் ரஷ்யாவும் பலப்பல ஆண்டுகள் கடுமையான ஆராய்ச்சிக்குப் பிறகு கண்டுபிடித்த ரிமோட் வீவிங் தான் ) என்றார் திருமூலர்.
பகுத்தறிவு எல்லா உயிரினங்களுக்கும் உள்ளது என்ற புரட்சிக் கருத்தை சொன்னவன் நம் தலைசிறந்த மண்ணின் மைந்தன் தொல்காப்பியன்!
முருகன் தோற்றுவித்த நம் மொழியை; இனத்தை; வரலாற்றை; நாகரீகத்தை அளவிட கணக்கிட மானிடர்க்கு ஏது அறிவு? அன்பே சிவம் என்று போற்றிய நாம் நாகரீக கலாச்சாரத்தின் அடையாளம்!
நீ யார், எங்கிருந்து வந்தாய், எங்கே செல்லப் போகிறாய்? இது போன்ற கேள்விகள் அன்றாட பிரச்சினைகளிலிருந்து ஓரளவுக்கு வெளிவந்தோருக்கும், ஓய்வு பெற்றோருக்கும், இல்லை அதீத சிந்தனையுள்ளோருக்கும் தோன்றும் சாதாரண கேள்விகள்.. அதற்கு விடை காண நம் மூலத்தைத் தேடிச் செல்ல மனதை உந்தும்… நான் இங்கே சொல்வது மதத்தையோ, ஜாதியையோ அல்ல நம் இனத்தை, நம் மொழியை…
இப்போது எங்கும் சோழ பேரரசை பற்றி பேச்சு, நல்லது! தமிழர் வரலாற்றை தெரிந்துகொள்ள இளைஞர்கள் எப்போதும் இல்லாத அளவிற்கு விரும்புவது கண்கூடாக தெரிகிறது. நம் இன பொற்காலம் ராஜேந்திர சோழனுக்குப் பிறகு தேயத் துவங்கியது ஏன் என்ற கேள்வி அந்த இளைஞர்களுக்கு ஏற்பட்டால் மிகவும் நன்றாக இருக்கும். சோழப்பேரரசுக்கு முன்பு எத்தனை பொற்காலங்கள் வந்து சென்றன என்பதைக் கூறுவதும் வரலாற்றுக் கடமை.
அதிகம் பேர் வரலாற்றை எழுதாதால் தான் இந்த காலகட்ட இளைஞர்களுக்கு மிகவும் குறைவாகவே நம் இன வரலாறு தெரிகிறது.
உன் இன வரலாறை தெரிந்து கொள்ளவில்லை என்றால் பின்வரும் இனம் துக்க மற்றும் இரத்த ஆறாகத்தான் போகும்….
சேவல் கொக்கரிப்பதைக் கேட்டு நாலரை மணிக்கு மேல் கடந்து விட்டிருக்கும் என்று நினைத்து மங்க லட்சுமி அம்மாள் அந்தத் தட்டை ஓலை வீட்டுக்கு முன் பெருக்கி கோலம் போட அந்தத் தள்ளாத வயதிலும், உடல் வலியிலும் காலம் காலமாக பின்பற்றிய கலாச்சாரத்தை தொடர்ந்தார். காலைக்கடன்களை முடித்து கலாச்சாரத்தையும் தொடங்கி நேற்று வடித்த சாதத்தின் பழுதை சிறு வெங்காய துண்டை கடித்துக்கொண்டு, குடித்துவிட்டு வெளியே வந்து திண்ணைப் போன்ற அமைத்த மண் திட்டின் மேல் அமர்ந்து கொண்டு யோசித்துக் கொண்டே கண்கலங்கினார்.. இது அவருடைய அன்றாட வாழ்க்கையாக போய்விட்டது…. மழைக்காலங்களில் அவர் விடும் கண்ணீர் போதாது என்று வீடு முழுவதும் கண்ணீர் விடும்..
அன்றாடம் கண் கலங்குவது அவராக விரும்பி ஏற்றுக் கொண்டதல்ல… காலம் செய்த கோலம்…. முருகன் இருக்கிறானா இல்லை நம் இனத்தை விட்டு சென்று விட்டானா என்று அவர் மனதிற்குள் ஆயிரம் கேள்விகள்…
கணவரை கண்ணெதிரே சுட்டுக்கொன்றார்கள், அமைதியாக அந்த கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்போது எதற்காக எல்லோரையும் சரணடைய சொல்கிறார்கள் என்று தெரியாமலேயே சரணடைந்த இளம் வயது மகனையும், இளம் வயது மகளையும் ராணுவத்தினர் அடித்த, இழுத்துச் சென்றது மங்கலக்ஷ்மி அம்மாவின் மனதிற்குள் பசுமரத்து ஆணி போல் படிந்து, துருவும் பிடித்து விட்டது!…
இதற்கு சற்று தள்ளி ஓரிரு வீதிகள் கடந்து குண்டுகளால் துளைத்து சிதிலமடைந்த ஒரு வீடு….. முன்பு நன்றாக, அழகாக இருந்திருக்கும் வீடு போலும்…. முகப்பில் யாரும் இல்லை.. பக்கவாட்டில் புகை வந்து கொண்டிருந்தது.. ஒரு இளம்பெண் மரக்கிளைகளின் சுல்லிகளை வைத்துக்கொண்டு அடுப்பில் ஏதோ சமைத்துக் கொண்டு இருந்தாள், அவள் தேவிகா. அருகே ஒரு நாய் அமர்ந்து உணவிற்காக காத்துக் கொண்டிருந்தது….
மங்களக்ஷ்மி அம்மாவின் கணவர் கொலை செய்யப்பட்டு மகனும், மகளும் ராணுவத்தால் இழுத்துச் செல்லப்பட்ட அதே தினத்தில் தேவிகாவின் தந்தையும், தம்பியும் ராணுவத்தாலும், வெறிபிடித்த கூட்டத்தாலும் கொடூரமாக கொல்லப்பட்டு, தேவிகாவும் அவளுடைய அம்மாவும் ராணுவத்தால் இழுத்துச் செல்லப்பட்டனர்… அவளுடைய அம்மாவுக்கு என்ன கதி ஆனதோ தெரியவில்லை…. ஆனால் தேவிகா வலது கையையும் இழந்து முகத்தின் வலது பக்கத்தில் தீக்கிரையாக்கப்பட்டு, சின்னாபின்னம் ஆக்கப்பட்டு, துரத்தி அடிக்கப்பட்டு….. இப்போது சிதைந்து ஆறிய உடலோடு சித்தம் எப்போது கலங்குமோ என்ற பயத்தில்…… அந்த நாய் உயிருடன் இருக்கும் வரை தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று இருக்கிறாள்….
மங்களக்ஷ்மி அம்மாவோ கணவர் கண் எதிரே இறந்ததை இல்லை இல்லை கொடூரமாக கொல்லப்பட்டதை மறக்க முடியாமல் இருந்தாலும் கணவர் இறந்து விட்டார் என்பதை மனது ஏற்றுக் கொண்டது…. ஆனால் மகனோ, மகளோ 13 வருடங்கள் கடந்தும் என்ன ஆனார்களோ? எங்கிருக்கிறார்களோ? எப்படி இருக்கிறார்களோ? என்ற எண்ணம், சிந்தனை மனது சிதிலமடைந்து பைத்தியம் பிடிக்கும் அளவிற்கு சென்று; சென்று; சென்று திரும்பியது……
மங்களக்ஷ்மி அம்மாவின் கணவர் கொல்லப்பட்ட, மகனும், மகளும் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட அதே காலகட்டத்தில்…. சென்னையில் மே மாத வெயிலின் புழுக்கத்தை தாங்க முடியாமல்…. ஏர் கண்டிஷனரை தட்டி விட்டு… மானாட, மயிலாட தங்கள் கால்கள் ஆட பெரும்பாலானோர்… முதியவர்கள் ஆக இருந்தால் மாமியார் மருமகளின் சண்டைகளையும்.. குடும்பங்களுக்குள் நடக்கும் சூழ்ச்சிகளையும் தங்கள் வாழ்க்கையில் நடக்கும் எரிச்சல்களை போக்க வடிகாலாக சீரியல்களை பார்த்தனர்… இளைஞர்களோ சென்னை என்ற பெயர் இருந்தால் மட்டுமே போதும் சென்னையை சேர்ந்தவர்களோ இல்லை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களோ யாரும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவது போல வெறிகொண்டு தங்கள் அணியின் கிரிக்கெட் மேட்ச்சுக்களை பார்த்தார்கள்…
தொலைக்காட்சி ஊடகங்களோ, தங்களுக்கு சம்பந்தமில்லாத யாருக்கோ, எங்கோ, ஏதோ நடக்கிறது என்பது போல தங்கள் டிஆர்பி ரேட்டுகளை அதிகரிக்க போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்பியவைகள் கலாச்சார சீர்கேடுகள் என்று சந்தேகிக்கா வண்ணம் பார்த்துக் கொண்டனர். ஓரிருவர் மனசாட்சிக்கு பயந்தோ இல்லை இன பற்றினாலோ ஊடகத்தின் வாயிலாக தெரிவிக்க முயன்று அரசாங்கத்தின் அதீத கெடுபிடிகளால் மௌனித்தனர். அரசாங்கம் யாருக்கானது என்பதே பெரிய கேள்விக்குறியானது..
எல்லோராலும் மிகவும் மதிக்கப்பட்ட மூத்த பத்திரிகையாளர் கோபாலகிருஷ்ணன் காலை 7:30 மணி அலாரம் அடித்தும் எழ முடியாமல் புரண்டு கொண்டிருந்தார்…. முந்தைய நாள் இரவு ஆளும் கட்சிகள் கொடுத்த விருந்தில் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டது அதற்கு காரணமாக போய்விட்டது….. போலி மதுக்கள் எங்கும் இருக்க அவர் குடித்த அளவில் பாதி அளவை குடித்தாலே மறுநாள் மண்டையை பிளக்கும் வின் வின் என்று ஏற்படும் தலைவலி ஆளும் கட்சிகளின் கலப்படம் இல்லாத தூய அயல்நாட்டு சரக்குகளால் அந்த பாதிப்பு ஏதும் அவருக்கு ஏற்படவில்லை.
சோம்பேறித்தனத்தால் எழ முடியாமல் எழுந்து காலைக்கடன்களை முடித்தார்.. வேலை செய்யும் பெண்மணி தேநீர் எடுத்து வந்து தர…
அம்மாவும், மகன்களும் எங்கே என்று கேட்டார்…
இன்னும் அவர்கள் எழுந்திருக்கவில்லை என்று தெரிந்து… மெதுவாக தேனீரை பருகினார்… (அதற்கு முந்தின நாள் தான் கடல் கடந்த இடத்தில் இளம் பெண் தேவிகாவுக்கு நடந்த கொடுமைகளும், மங்களக்ஷ்மி அம்மாள் கொடூர கொலையில் தன் கணவரை இழந்ததும்… மகனையும், மகளையும் ராணுவத்திடம் பறிகொடுத்ததும்…..)
கைப்பேசியில் யாரோ அழைக்க அதை எடுத்து பேச துவங்கினார்….
குட் மார்னிங், எப்படி இருக்கீங்க?...
செமையா இருந்தது, அடுத்த பார்ட்டியிலும் அதையே தான் குடிக்கப் போகிறேன்….
சொல்லுங்க,......
அதுக்கு என்ன எழுதிட்டா போச்சு…
உப்பு சப்பு இல்லாம இருக்குதே வேற ஏதாவது எழுதட்டுமா?...
ஜனங்களுக்கு கோவம் வராமல் இருக்க மடைமாற்றனும் அவ்வளவு தானே….. என்கிட்ட விடுங்க…..
கைப்பேசியின் மறு முனையில் ஆளும் கட்சிகளின் ஆலோசக வட்டாரத்தின் பெரும்புள்ளி…
கோபாலகிருஷ்ணன் கைபேசியை வைத்ததும் தற்காலத்தில் சமூக நீதி எப்போதும் இல்லாத அளவிற்கு மேலோங்கி இருப்பதை பற்றி எழுத ஆரம்பித்தார்….
இதை அடுத்து அடுத்த ஏரியாவில் ஒரு நவீன பங்களாவின் ஏசி அறையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த கோபாலகிருஷ்ணனின் நண்பர் தமிழ்நாட்டின் முக்கிய தொலைக்காட்சி ஊடகத்தின் தலைமை தொகுப்பாளர் பலராமனின் கைப்பேசி அழைக்க ஆரம்பித்தது…..
குட் மார்னிங், சொல்லுங்க….
என்ன இப்படி கேட்டுட்டீங்க நீங்க கொடுக்கும் பார்ட்டி என்றால் சும்மாவா?!..
GK போல என்னால குடிக்க முடியாது இருந்தாலும் சரக்கு நன்றாக இருந்ததால் என் மாமூலை விட அதிகமாக குடித்தேன்….
இதோ, நீங்க கூப்பிட்ட உடனே எடுத்தேனே.. தலைவலி அது, இதுன்னு சுத்தமா இல்ல….
சொல்லுங்க….
தொலைக்காட்சிகளில் முதன்முறையாக என்று சொல்லி வரிசையா செம ஹிட் படங்களை போட்டா போச்சு…..
தெரியும் தெரியும்… வெத்துவேட்டு விவாதங்களுக்கு ஒரு குரூப்பையே வைத்துக்கொண்டு இருக்கிறேன்…..
பலராமன் சந்தோஷமாக கைப்பேசியை வைத்துவிட்டு காலைக்கடன்களை முடிக்கச் சென்றார்.
தொழில் தர்மம் தோற்றது கோபால கிருஷ்ணனிடமும், பலராமனிடமும் மட்டும் இல்லை… அந்தக் காலகட்டத்தில் எல்லோரிடமும் தோற்றது… தொழில் தர்மத்தை நேசித்தவர்கள்… கட்டிக் காக்க நினைத்த மனச்சாட்சியாளர்கள்… இயலாமையின் பிடியில் சிக்கி சின்னாபின்னமானார்கள்..
14 வருடங்கள் கடந்தும் ஊடகச் செயல்களில் எந்தவித மாற்றமும் இல்லை என்றே தோன்றுகிறது.
2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம்… ஒரு நாள் மங்களக்ஷ்மி அம்மாள் முருகனிடம் செல்லும் நாள் என்று வருமோ என்று தினம் தினம் நினைத்துக் கொண்டிருந்ததை அன்றும் நினைத்துக் கொண்டு அந்த திண்ணையில் சாய்ந்து கொண்டிருந்தார்….
அப்போது அந்த வழியாக தேவிகாவும் அவளுடைய நாயும் அவசர அவசரமாக எதையோ நோக்கி எங்கோ செல்ல, மங்களக்ஷ்மி அம்மாள் என்ன பிள்ளை எங்கம்மா போற? என்று கேட்டது அவருடைய காதுகளுக்கே கேட்டிருக்காது… பிறகு எப்படி அவசரமாக ஓடும் தேவிகாவிற்கு கேட்டிருக்கும்?!
சில நிமிடங்களுக்குப் பிறகு, மூன்று ஆண்களும், சில பெண்களும், சில சிறுவர்களும் அதே அவசரத்துடன், அதே பாதையில், அதே கோணத்தில் செல்ல…. மகாலட்சுமி அம்மாள் கூப்பிட்டும் திரும்பாத, ஆனால் கை அசைத்ததை பார்த்து ஒரு இளைஞன் மட்டும் அருகில் சென்றான்…
'என்னப்பா எல்லோரும் ஓடுறீங்க?'
' பாட்டி உனக்கு விஷயம் தெரியாதா?' என்று பின்வரும் செய்தியை சொன்னான்…..
"முல்லைத்தீவில் உள்ள கொக்கிளாய் என்னுமிடத்தில் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த, குழாய் பதிக்கும் வேலைகள் நடந்து வந்தது. அதற்காக தோண்டப்பட்ட குழியில்தான் சர்ச்சை வெடித்து கிளம்பியுள்ளது..... ஏனெனில் தோண்டத் தோண்ட, தோண்டிய குழியில் பல விடுதலைப்புலிகளின் சீருடைகளும், பொதுமக்களின் உடுப்புக்களும், பெண்களின் உள்ளாடைகளும், மனித எலும்பு கூடுகளும் நூற்றுக்கணக்கில் கிடந்துள்ளன".
மங்களக்ஷ்மி அம்மாவிற்கு அந்த விபரீத செய்தி என்னவென்று, சற்றென்று புரிந்தது…. அந்த எலும்புக்கூடுகளில் தன் மகனுடை, மகளுடைய எலும்புக்கூடுகளும் இருக்கக்கூடுமோ என்ற பதட்டத்தில் அவரும் அவர்களுடன் செல்ல அவசரத்தில் எழ… தடுமாறி படிக்கட்டுகளில் விழுந்ததையும்… அந்த அம்மாவுடைய கால் உடைந்ததையும் பார்க்கவோ, உதவி செய்யவோ அந்த அவசரகதியில் யாரும் இல்லை….
அதே நேரத்தில், தமிழ்நாட்டில் தொலைக்காட்சி ஊடகங்களிலும், செய்தி ஊடகங்களிலும், பெரும்பாலான காணொளி ஊடகங்களிலும் பரபரப்பாக திகில் ஊட்டும் மர்ம தொடர்க்கதை போல அரசியல் செய்திகள் மாற்றி மாற்றி பரப்ப, பகிரப்பட்டன….. சுமார் 95 சதவிகிதம் அரசியல், கிரிக்கெட் மற்றும் திரைப்படச் செய்திகளே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது…
வெகுஜன பத்திரிகைகளில் எதிலுமே மேலுள்ள செய்தி வராமல் இருக்க…
நொந்து, நூலாகி இருக்கும் உணர்வுள்ள சில காணொளிகளை நடத்துபவர்களே இந்த செய்தியை வெளியிட்டிருந்தனர்…
இதே நேரத்தில் மேற்கத்திய ஊடகங்களில், வேற்று கிரகங்களைப் பற்றிய…. சுமார் 75 வருடங்களாக பொதுமக்களிடமிருந்து மறைக்கப்பட்ட பல திடுக்கிடும் தகவல்களை படிக்க,காண முடிந்தது.
இதில் கருத்தில் கொள்ள வேண்டிய செய்தி என்னவென்றால் அந்த முல்லைத்தீவில் உள்ள கொக்கிளாய் பகுதி எப்போதுமே ராணுவ கட்டுப்பாட்டில் போரின் போது இருந்து இருக்கிறது…
சமுதாயத்தின் இரு கண்களான நீதித்துறையையும், காவல்துறையையும் தடம் புரளாமல் கண்காணித்து கட்டுப்பாட்டில் வைக்க வேண்டிய ஞானக்கண் ஊடகத்துறையே…. அந்த ஞானக்கண் அரசியல் என்று நினைத்திருந்தால் நான் பொறுப்பாக முடியாது…. இருப்பினும் எப்படி இந்த ஒட்டுமொத்த மக்கள் தொகையும் இதைப் பற்றி எங்கோ, யாருக்கோ நடக்கிறது என்ற உணர்வோடு இருக்க முடிந்தது, முடிகிறது என்று நினைத்து, நினைத்து புரிந்து கொள்ள முயற்சி செய்து……
மன்னிக்கவும் புரிந்து கொள்ள முடியவில்லை!