சாபமே, வரமாக!
- melbournesivastori
- Jul 5, 2023
- 8 min read

இந்தக் கதையை 'வரமா, சாபமா' எனும் கதையை தொடர்ந்தும் படிக்கலாம், இல்லை தனியாகவும் படிக்கலாம்..
தமிழுக்கே அழகு 'ழ' எழுத்து என்பர். சில பகுதி தமிழர்களுக்கு ழ எழுத்து உச்சரிப்பதற்கு வருவதில்லை… உச்சரிக்க முடியவில்லை என்றால் என்ன செய்வது அதை ஏற்றுக்கொள்ளலாம்…. ஆனால் தமிழை ஆங்கிலத்தில் எழுதும்போது 'Thamizh' என்று எழுதாமல் என்றோ ஒருவர் எழுதிய 'Tamil' என்று தொடர்ந்து எழுதுவது அறிவீனமா இல்லை உதாசீனமா? எப்படி இருப்பினும் இதை ஏற்றுக் கொள்ள முடியாது… அதைவிட கொடுமை தமிழை அழகாக உச்சரிக்க தெரிந்தவர்கள் கூட முப்பதை 'நுப்பது' என்று உச்சரிப்பது….. இங்கு உச்சரிப்பின் வரமே சாபமாக மாறுகிறது.
திருமூர்த்தியின் அரசியல் விமர்சனம் நல்லோர் இடத்து பெரும் வரவேற்பை பெற்றிருந்த காலம் அது.. நல்லது நடந்தா நன்றாக இருக்குமே என்று நினைத்த எல்லோரும், படித்தோர் மட்டுமல்லாமல் கொஞ்சம் படிக்கத் தெரிந்த நல்லோரும் விரும்பி படித்தது திருமூர்த்தியின் அரசியல் விமர்சனங்களை….. அன்றைய பெரும் அரசியல் தலைவரை, தலைவராக ஏற்றுக் கொள்ள எந்த தகுதியும் இல்லை என்று யாருமே எழுத தயங்கிய அவரின் ஊழல்களை பிட்டு பிட்டு வைத்தது எழுதியது பெரும் சலசலப்பை எங்கும் ஏற்படுத்தி இருந்தது. திருமூர்த்திக்கு பெரிய மனநிறைவை அது தந்திருந்தாலும் அதுவே அவரின் மனோதிடத்திற்கு அந்த அரசியல் தலைவரால் சாவு மணி அடிக்கப்பட்டதற்கு காரணமாக அமைந்தது ….. திருமூர்த்திக்கு அது சாபமாகவும் அந்த அரசியல் கட்சிக்கு அது பெரும் வரமாகவும் அமைந்தது.
இந்த நிகழ்ச்சி திருமூர்த்திக்கு பசுமரத்து ஆணி போல் பதிந்து இருந்தாலும்…. நடந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு எல்லாவற்றையும் விட்டுவிட்டு சொந்த கிராமத்திற்கு வந்து விவசாயத்தை தொடங்கி, திருமணமும் செய்து கொண்டு பிள்ளை பெற்று அவனுக்கும் நான்கு வயதாகி விட்டது..
மகன் அகத்தியன் வளரும் விதத்திலேயே தெரிந்தது திருமூர்த்தியின் குணத்தின் போல் அச்சாக பிறந்த பிள்ளை என்று. கடந்த பத்து வருடங்களாக தலைநகருக்கு செல்ல விரும்பாத திருமூர்த்திக்கு சோதனையாக அமைந்து முன்பு பணியாற்றிய பத்திரிகை ஆசிரியர் தீரனின் மகன் திருமணத்துக்கு செல்ல வேண்டியதாகியது. மனைவியும் மகனும் ஆர்வம் காட்டவே வேறு வழி இல்லாமல் திருமணத்தில் கலந்து கொள்ள சென்றார்கள்… திருமணமும் முடிந்தது.. அதுவரை நன்றாகத்தான் இருந்தது எல்லாம்… மனைவியும் மகளும் ஒரு நாள் இருந்துவிட்டு ஊருக்கு நாளை செல்லலாம் என்று சொல்லும் வரை… வேறு வழி இல்லை..
திருமண கூடத்திலேயே மதிய உணவை முடித்துக் கொண்டு கால் டாக்ஸியில் சுற்ற ஆரம்பித்தனர்…
ஒரு வளைவு வந்தவுடன் அகத்தியன் கத்தினான்… ' அப்பா அது நானு, அது நானு ' என்று.
திருமூர்த்திக்கு ஒரு நிமிடம் புரியவில்லை என்ன நடக்கிறது என்று… ' என்னடா சொல்ற?'
' அங்க இருந்துச்ச அந்த போட்டோல இருக்குறது நானு'
' எந்த போட்டோல?'
' அப்பா திரும்பி போங்கோ '
திருமூர்த்தி மகன் பேசுவதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை… இவன் போட்டோ ஆவது இங்கு இருப்பதாவது…
' நேரம் இல்லடா அப்புறம் பாத்துக்கலாம் '
ஒரு ஐந்து நிமிடம் தான் கார் சென்று இருக்கும்.. அங்கு இரண்டு ரோடுகள் சந்திக்கும் இடத்தில் வைத்திருந்த பெரிய பேனரை பார்த்து ' அதோ அப்பா அந்த போட்டோல இருக்குறதும் நான்தான்' என்று மகன் காட்டிய அந்த பேனரில் இருந்த புகைப்படத்தை பார்த்ததும் திருமூர்த்தி பேய் அறைந்தது போல் ஆனார்….
மகன் அகத்தியன் காட்டியது எந்த அரசியல் தலைவரால் தனக்குப் பிடித்த பத்திரிகை துறையை விட்டு வெளியேறினாரோ அந்தத் தலைவரின் புகைப்படம் தான் அது.
' என்னடா சொல்ற?' என்று ஒருவித நடுக்கத்துடன் கேட்க…
' ஆமாம்பா நான் தான் அந்த போட்டோல இருக்கிறது…. உன்ன மாதிரி இருந்த ஒருத்தர அடிக்க கூட சொன்னன் '
அவனே தொடர்ந்து சொன்னான்,
' கடைசியில் ஹாஸ்பிடல்ல இருந்தன், பொண்ணு பையன் எல்லாம் வந்து பார்த்தாங்க '
திருமூர்த்தியும் அவர் மனைவியும் பயத்தின் எல்லைக்கே போய் நடுங்கினார்கள்..
' சும்மா உளராத… நம்ம நேரா ஊருக்கு போலாம் ராத்திரி மிச்ச கதையை சொல்லு ' என்று மகனை சமாதானம் படுத்த முயன்றார்.
மகனும் வேறு சாலையில் வேறு காட்சிகள் வரவே இந்த பேச்சினை மறக்க… திருமூர்த்தியும் அப்பாடா என்று பெருமூச்சுவிட்டார்.
அந்த நிம்மதி சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை…. மற்றொரு சாலையை கடக்கும் போது…
' அப்பா, அப்பா இந்த ஹாஸ்பிடல்ல தான் என்னை சேத்தாங்க…' என்று கத்தினான்.
திருமூர்த்திக்கு முழுவதுமாக புரிந்து விட்டது… மகன் அகத்தியன் தான் தன் வாழ்க்கையையே பறித்த அந்த இறந்த அரசியல் தலைவரின் மறு ஜென்மம் என்று….
திருமூர்த்திக்கு தன் மகன் வரமா சாபமா என்றே புரியவில்லை….
நாம் வாழும் வாழ்க்கை முடியும் வரை தெரியப்போவதில்லை நாம் வாழ்ந்தது வரத்துடனா இல்லை சாபத்துடனா என்று.
திருமூர்த்தி சில நாட்களாவது இதை மறந்து விட்டு அன்றாட வாழ்க்கையை வாழ முயற்சிக்கலாம் என்று நினைத்தார். அதற்கான முயற்சியையும் செய்தார்…. சில நாட்கள் கடந்திருக்கும் அன்று ஒரு நாள் முன்பு வேலை செய்த பத்திரிகை ஆசிரியர் / நண்பர் தீரன் கைபேசியில் அழைக்கவே, ஆச்சரியத்துடன்…
' சொல்லுங்கள் தீரன் '
' புதிய சம்மந்தி வீட்டுக்கு நாளை மாலை செல்ல போகிறேன்… அவர்கள் இருப்பது உங்கள் ஊருக்கு பக்கத்திலேயே இருப்பதால் நானும் மனைவியும் காலை உங்களைப் பார்த்துவிட்டு மதியத்திற்கு மேல் கிளம்பி செல்லலாம் என்று உள்ளோம் '
திருமூர்த்திக்கு அந்த வரவு நிம்மதியை கொடுத்தது… தன் நிம்மதியின்மையை தீரனிடம் பகிர்ந்து ஒரு முடிவுக்கு வரலாம் என்று, ' விடியற்காலையில் கிளம்பி வந்து விடுங்கள்… காலை சிற்றுண்டியும் மதிய உணவும் எங்கள் வீட்டில் இருக்கட்டும் '
' அதற்கென்ன திரு … அப்படியே ஆகட்டும்'
' நன்றி தீரன், நாளை சந்திக்கலாம் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்….. '
அன்று இரவு திருமூர்த்தி மனதுக்குள் தன்னுடைய மன நிம்மதியின்மையை எப்படி தீரனிடம் சொல்வது என்று அசைபோட்டுக் கொண்டே உறங்கிப் போனார்.
மறுநாள் காலை 8 மணி இருக்கும் தீரனின் கார் வந்தது. திருமூர்த்தியும் மனைவியும் அவர்களை வரவேற்று சிறிது பேசி விட்டு சிற்றுண்டி உண்டனர். பிறகு தீரனின் மனைவியை திருமூர்த்தி மனைவி மறுவறைக்கு அழைத்துச் செல்ல… தீரனை திருமூர்த்தி வரவேற்பு அறைக்கு அழைத்துச் சென்றார்.
' என்ன திரு என் மகனின் திருமணம் முடிந்து மறுநாள் இருப்பீர்கள் என்று நினைத்தால் அன்றே கிளம்பி
விட்டீங்க ?'
' அது ஒரு பெரிய கதை தீரன், நீங்கள் இன்று வந்ததும் நல்லதாகப் போய்விட்டது….. அதைப் பற்றி உங்களிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்… நீங்களே வந்து விட்டீர்கள்'
' என்ன திரு, பீடிக்கை பலமாக இருக்கிறது?'
திரு சற்று வருத்தத்துடன், கலக்கத்துடன் மேலே ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியை பார்த்துக் கொண்டே தொடர்ந்தார்…
' ஆமாம் தீரன் நம்புவதற்கே மிகவும் கடினமான விஷயம் நான் சொல்லப்போவது…. ' என்று நடந்தது எல்லாவற்றையும் தீரனிடம் கூறி முடித்தார்.
தீரன் பேச்சற்று சில கணங்கள் தலைகுனிந்தவாறு யோசித்து விட்டு…
' கேட்பதற்கு மிகவும் கடினமாக இருக்கிறது, திரு…. எப்படி இதை எடுத்துக் கொண்டீர்களோ தெரியவில்லை…. '
' பிள்ளை வரம் கிடைத்தது என்று நினைத்தேன் அதுவே எனக்கு அமைந்த சாபமா என்று தெரியவில்லை?!'
தீரன் சில நிமிடங்களில் ஏதோ யோசித்து விட்டு…
' திரு, சென்னையில் எனக்கு தெரிந்த மிகவும் திறமை வாய்ந்த மனோ தத்துவ நிபுணர் இருக்கிறார்… அவரிடம் உங்கள் மகனை அழைத்துச் சென்று பழைய நினைவுகளை மறக்கடிக்க முயற்சி செய்யலாம்… நீங்களும் அதன் பிறகு மறுபிறவி எடுத்து வந்த அந்த அரசியல் தலைவர் தான் உங்கள் மகன் என்பதையும் மறக்க வேண்டும் '
திரு பதில் சொல்லாமல் லேசாக தலை அசைத்தார். அதே நேரத்தில் தீரன் மனைவியும் திருவின் மனைவியும் அங்கே வந்தனர்..
' சரி திரு, நாளை காலை நாங்கள் திரும்பும்போது வந்து உங்களை அழைத்து செல்கிறோம்… சம்பந்தி வீட்டிலேயே காலை சிற்றுண்டி முடித்து வருவதற்கு மணி பத்து ஆகும், வந்தவுடன் உடனடியாக கிளம்பி விடலாம்…. அதற்குள் டாக்டரிடம் நான் பேசி விடுகிறேன் '
இரு மனைவியர்களும் ஏதும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். திரு தன் மனைவியிடம் பிறகு விவரமாக சொல்கிறேன் என்று சொல்லி தீரனையும் தீரன் மனைவியையும் வழி அனுப்பி வைத்தார்.
அவர்கள் கார் கிளம்பிச் சென்றவுடன், திருமூர்த்தியின் மனைவி திருவிடம் கேட்டார், ' நாளை காலை நம்மை எங்கு அழைத்துச் செல்லப் போகிறார்கள்.. நீங்கள் எதுவுமே சொல்லவில்லையே?'
விவரமாக சொல்கிறேன் என்று திரு எல்லாவற்றையும் தன் மனைவியுடன் சொல்லி முடித்தார்.
' எல்லாம் நல்லபடியாக நடக்க ஆண்டவனை வேண்டுவோம் '
' அகத்தியனின் சோதனை முடிந்தவுடன் என்னையும் சோதித்துக் கொள்ள வேண்டும் ' என்று திரு தன் மனைவியிடம் கூற…
திருவின் மனைவி அதை புரிந்தார் போல் தலையாட்டினர்.
பல்வேறு குழப்பங்களுக்கிடையில் அன்றைய பொழுதை இருவரும் கழித்தினர்.
மறுநாள் காலை 9 மணிக்கே திருவும், திருவின் மனைவியும் அகத்தியனுடன் தயாராகி தீரனின் வருகைக்காக காத்திருந்தனர்.
சுமார் அரை மணி நேரம் கழித்து தீரனும் அவர் மனைவியும் வந்தவுடன் அவர்களுடன் காரில் ஏறி புறப்பட்டனர்.
வழி நெடுக அகத்தியன் உடன் இருப்பதால் வேறு ஏதேதோ விஷயங்களை பேசி கொண்டு சென்றனர். நேராக தீரன் வீட்டுக்கு சென்று சிறிது ஓய்வுக்கு பிறகு மதிய உணவையும் முடித்துக் கொண்டு ஓய்வெடுத்தனர். மாலை 5 மணிக்கு ஆழ்மன மனோதத்துவ டாக்டர் திரு நன்னன் அவர்களை காண இரு மனைவியரும் வீட்டில் இருக்க கிளம்பிச் சென்றனர்.
திரு நன்னன் தீரனுடைய நெடுநாளைய நண்பர், வியாபார நோக்கில் தன்னுடைய தொழிலை விரிவு படுத்தாமல் சேவை நோக்கில் செய்ததால் அவ்வளவாக பிரபலமாகவில்லை…. ஆனால் தீரனுக்கு தெரியும் டாக்டர் நன்னன் அபார அறிவு கொண்டவர் என்று. அவரின் தனியார் மருத்துவமனை சென்று அடைந்தபோது ஐந்தரை மணிக்கு மேல் இருக்கும்.
டாக்டர் வேறொரு நோயாளியை பரிசோதித்துக் கொண்டிருப்பதாக அவருடைய காரியதரிசி கூறியதால் மூவரும் அங்கு அமர்ந்து காத்துக் கொண்டிருந்தனர்.
சிறிது நேரம் இருக்கும் பரிசோதனை அறையை திறந்து கொண்டு ஒரு நபர் வெளியே வந்து அவர்களை கடந்து சென்றார்… அதுவரை அவரை காணிக்காமல் இருந்த அகத்தியன், சற்றென்று திருவைப் பார்த்து
' அப்பா, அதோ ரங்கன் போகிறான் ' என்றதும் திடுக்கிட்டு திரு தீரனை பார்க்க…
'என்னடா செல்லம், பெரியவங்கள அது மாதிரி கூப்பிடக்கூடாது… அது சரி அவரை ரங்கன் என்று ஏன் சொல்கிறாய்?'
' எனக்கு அவனைத் தெரியும் பா '
இருவரையும் குழப்பம் தொற்றிக்கொள்ள மேலும் ஏதும் அறிவுரை கூற தயங்க .. அதே சமயத்தில் டாக்டர் இவர்களை அழைக்க மூவரும் சென்றனர்.
டாக்டர் நன்னன், ' எப்படி இருக்கீங்க தீரன்.. இவர் தான் உங்களுடைய நண்பர் திருவா…. ஏண்டா குட்டி பையா உன் பெயர்தான் அகத்தியனா?'
அகத்தியன் தலையை அசைக்க … தீரன் 'ஆமாம்… நான் நன்றாக இருக்கிறேன் டாக்டர்'
' தீரன் சிறிது நேரம் வெளியே குழந்தையை வைத்துக் கொண்டிருங்கள் நான் திரு திருவிடம் சிறிது பேசிவிட்டு உங்களை அழைக்கிறேன்' என்றதும் தீரன் அகத்தியனை அழைத்துக் கொண்டு வெளியே சென்றார்.
டாக்டர் திருவிடம் நடந்த எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டு தெரிந்து கொண்டார்… அவர் ஏதோ திருவை கேட்க துவங்கும் முன்பு..
திரு டாக்டரை பார்த்து கேட்டார், ' டாக்டர் சற்று முன்பு சென்றவர் பெயர் ரங்கனா?'
டாக்டர் திடுக்கிட்டு, 'உங்களுக்கு எப்படி தெரியும்?' என்று கேட்டார்.
டாக்டருக்கு எல்லா விஷயம் தெரியும் ஆதலால் திரு, அகத்தியன் சொன்னதை சொன்னார்.
டாக்டர் சிறிய நேரம் ஆழ்ந்த சிந்தனையில் இருந்து விட்டு,' ஆமாம் திரு அவருடைய பெயர் ரங்கன் தான் '
' யார் அவர்? எப்படி அவர் அகத்தியனுக்கு தெரிந்திருக்க முடியும்?'
' அவர் மறைந்த அரசியல்வாதியினுடைய இடது கரம் என்று வைத்துக் கொள்ளுங்கள் '
திருவிற்கு இப்பொழுது புரிந்து விட்டது ஏன் அகத்தியன் அவரைத் தெரியும் என்று சொன்னான் என்று.
டாக்டர் தொடர்ந்தார்…. ' தீரன் என்னுடைய நெடுநாளை நண்பர்… இருவருக்கும் நம் மக்கள் ஏமாளிகளாக இல்லாமல் மேம்பட்ட அறிவார்ந்த மக்களாக இருக்க வேண்டும் என்ற தீராத ஆசை உண்டு '
' எனக்கும் அதே ஆசைதான், அதை ஒரு கடமையாகவே கருதி செயல்பட்டேன்…. விளைவு என் வாழ்க்கையை இழந்தது தான் '
' கவலை வேண்டாம்… அதை திறம்படவே செய்யலாம் இப்போது… தீரனையும் அழைத்து வாருங்கள், இன்னும் விரிவாக பேசலாம்.. ஆனால் உங்களுடைய முழு சம்மதமும் வேண்டும் '
' என்னுடைய சம்மதம் எதற்கு? எல்லாவற்றிற்கும் சம்மதித்துத்தான் அழைத்து வந்திருக்கிறேன் '
' இல்லை இது மிக முக்கியமான, வித்தியாசமான சோதனை… அகத்தியன் உங்கள் குழந்தை… அவனுக்கு எந்த பாதிப்பும் வராது…இருப்பினும் தந்தையாக உங்களுடைய அனுமதி இருந்தால் மட்டுமே இதை நான் செய்ய முடியும்'
' தீரனையும் அழைத்து வருகிறேன் பிறகு விளக்கமாக சொல்லுங்கள் '
டாக்டர் நன்னன் சரி என்று தலையசைத்தார்.
சிறிது நேரம் கழித்து திரு, தீரனுடனும் அகத்தியனுடனும் டாக்டர் அறைக்குள் நுழைந்தார்.
' தீரன் அமருங்கள், மிக முக்கியமான விஷயத்தை உங்கள் இருவரிடமும் பேச போகிறேன்….. நீங்களோ பத்திரிகை ஆசிரியர், திருவோ நிருபராக இருந்தவர்.. என்னைப் பற்றி உங்களுக்கு தெரியும்… நம் இருவருக்குமே நம் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று உயரிய நோக்கம் என்றுமே இருந்திருக்கிறது '
' என்ன டாக்டர் பீடிக்கை பலமாக இருக்கிறது? '
' விஷயம் அப்படி… விளக்குகிறேன் '
டாக்டரே தொடர்ந்தார்…
' சென்ற பிறவியின் நினைவுகள் சிலருக்கு வருவது நிரூபிக்கப்பட்டுள்ளது…. நமக்கு அகத்தியன் மூலமாக அது நேரடியாகவே நிரூபணம் ஆகி உள்ளது… இதில் முக்கியத்துவம் என்னவென்றால் அகத்தியனுக்கு நினைவு மங்கலாக இல்லை மாறாக பளிச்சென்று நினைவுகள் வருகின்றன, இதை நாம் பயன்படுத்தி நம் குறிக்கோளை மறைமுகமாக நிவர்த்திக்கலாம் '
' அது எப்படி டாக்டர்? '
' அகத்தியனுக்கு சென்ற பிறவியின் நினைவுகளை மறக்கடிக்க செய்வதுதான் இப்போதைய பிரதான குறிக்கோள், அதற்கு முன்னதாக எவ்வளவுக்கெவ்வளவு மறைந்த அரசியல் தலைவரின் ரகசிய தகவல்களை பெற முடியுமோ அதை ஆழ்மன இப்னாடிசம் மூலமாக பெற்று அது நம் மக்களுக்கு எதிரான செயல்கள் என்றால் வெளியிட்டு நல்ல அரசியலை துவங்க முடியுமா என்று பார்க்கலாம்'
தீரனுக்கும், திருவுக்கும் புரிந்து விட்டது… இது உண்மையிலேயே மிக மிக முக்கியமான தருணம் என்று..
திருவிற்கு சிறிது பயம் தொற்றிக் கொண்டது… மகனின் வாழ்க்கை பாழாகி விடுமோ என்று… சில நிமிடங்கள் தான்… மகனை எப்படியும் குணப்படுத்த வேண்டும் அதன் மூலமாக இந்த சோதனையையும் செய்து பார்த்து விடலாம் என்று முடிவெடுத்து,
' எனக்கு சம்மதம் டாக்டர், ஆனால் ஒன்று நம் மூவரைத் தவிர உலகில் எவருக்கும் இந்த ரகசியம் தெரிய கூடாது '
' நானே சொல்லலாம் என்று நினைத்தேன்,அப்படியே செய்யலாம்… என்ன தீரன் உங்களுக்கும் சம்பந்தம் தானே?'
'அதில் என்ன சந்தேகம்? '
' சரி இப்போதே துவங்கலாம், அகத்தியா எப்படி இருக்கிறாய் டா செல்லம்? '
' நல்லா இருக்கேன் டாக்டர் '
டாக்டர் நன்னன் மூவரையும் பரிசோதனை அறைக்கு அழைத்துச்சென்றார்.
இந்த அறை பொதுவாக நோயாளிகளை பார்க்கும் வரை அல்ல, அதற்கு பக்கத்தில் உள்ள ஒரு அறை. அங்கு சென்றவுடன் அகத்தியனை சாய்வு நாற்காலி போன்ற ஒன்றில் படுக்க வைத்தார்… தீரனையும் திருவையும் சற்று தள்ளி இருந்த சோபாக்களில் அமரச் சொன்னார்.
தொடர்ந்து, ' இன்று சுமார் அரை மணி நேரம் எடுத்துக் கொள்ளலாம்… நீங்கள் இருவரும் எக்காரணத்தை முன்னிட்டும் நான் கேள்வி கேட்கும் போது அகத்தியன் பதில் சொல்லும் போதோ தலையிடக்கூடாது… இது மிக மிக முக்கியமானது'
சரி என்று இருவரும் தலை ஆட்டினர்.
' குட்டி பையா, இப்போ நீ கொஞ்சம் கொஞ்சமா தூங்க போறே…. டாக்டர் உன்னை ஒன்னும் செய்து விடமாட்டேன்… சரியா?'
' ஓகே டாக்டர்'
டாக்டர் நன்னன் அந்த சாய்வு நாற்காலிக்கு அருகில் தனக்கு ஒரு விசேட நாற்காலியை இழுத்து அதன் அருகில் போட்டுக் கொண்டார்… அந்த விசேட நாற்காலியில் ஒரு பேனல் போன்று கட்டுப்பாடு கருவிகள் இருந்தன.
' அகத்தியா இப்போ கொஞ்சம் கொஞ்சமா இருட்டும் நீ தூங்க போற….' என்று சொல்லிக் கொண்டே விளக்குகளின் ஒளியை குறைத்துக் கொண்டே வந்தார்… அதே சமயத்தில் சாய்வு நாற்காலி அருகில் இருந்த ஒரு பலகையில் பொருத்திருந்த பல வண்ண மின்விளக்குகளை எரிய செய்தார்.
'அகத்தியா இப்போ உனக்கு கொஞ்சம் கொஞ்சமா தூக்கம் வரும்…. இந்த கலர் லைட்டுகளை பார்த்துக் கொண்டே இரு…' என்று சொல்லிக் கொண்டே ஒவ்வொரு கலர் பல்புகளையும் அணைத்துக் கொண்டே வந்தார்… கடைசியாக ஒரு ஒளிர்நீல வண்ண விளக்கை மட்டும் விட்டுவிட்டு..
' தலைவரே, உங்களுக்கு உடம்பு எப்படி இருக்கிறது?' இப்படி டாக்டர் அகத்தியனை பார்த்து கேட்டவுடன் தீரனுக்கும் திருவுக்கும் அதிர்ச்சியாக இருந்தது… பிறகு புரிந்தது.
' எனக்கு என்னய்யா நல்லாத்தான் இருக்கேன் ' என்று அகத்தியன் குழந்தை குரலில் கூறினாலும் அது அந்த அரசியல் தலைவரிடம் இருந்து வந்த குரல் தான் என்று புரிந்தது.
' இல்ல IT, ED ன்னு சொல்றாங்களே, நம்ப சேப்பாத்தானே இருக்கோம்?'
' எனக்கே பாடம் எடுக்குறியா?, எத்தனை பேரை பார்த்து இருக்கேன்…. இது என் அரசாங்கம்…. ஞாபகம் இருக்குது இல்ல?'
இதற்கு மேலும் டாக்டர் நன்னனின் ஹிப்னாடிச கேள்விகளையும் அதற்கான அகத்தியனின் பதில்களையும் தொடர்ந்து கூறுவது பின்வருவனவற்றை நீர்க்க செய்யும்.
இதுபோன்று அகத்தியனிடம் பல நாட்கள் தொடர்ந்து ஹிப்னாட்டிஸ பகுதிகளை நடத்தி பல பல அதிர்ச்சிகரமான தகவல்களை அந்த மூவரும் பெற்றனர். பெற்ற தகவல்களை முழுமையாக ஒரு மாதம் எடுத்துக் கொண்டு தகவல்களின் உண்மைத் தன்மையை துப்பறிந்து உறுதி செய்து கொண்டனர். குழந்தை அகத்தியனை தற்காலிகமாக அமைதிப்படுத்தி வைத்தனர்.
மறைந்த தலைவர் கட்சியின் வரலாற்றை அறிந்து ஒருவித முன்னேற்பாடுடன் இணையதளத்திலிருந்து செய்திகளை வெளியிட தேவையான எல்லா கருவிகளையும், உபகரணங்களையும், கணினிகளையும் எடுத்துக்கொண்டு தீரன் குடும்பத்துடன் டாக்டர் நன்னனின் பண்ணை வீட்டுக்கு தற்காலிகமாக குடியேறினார்.
பிறகு தன்னுடைய ' தமிழ் மூலம்' பத்திரிகை அலுவலகத்திற்கு சென்று நாளைய செய்தித்தாளின் முதல் பக்கத்தை வடிவமைக்கத் தொடங்கினர்… அதே சமயத்தில் தன்னுடைய காரியதரிசியிடம் முக்கிய ஊடகங்களில் 30 நொடிகளுக்கான விளம்பரத்தை மறுநாள் வருமாறு கொடுக்கச் சொன்னார்.
விளம்பரத்தியே விரும்பாமல் உண்மைச் செய்திகளை மட்டும் வெளியிடும் தமிழ்மூலம் பத்திரிகையின் ஆசிரியர் தீரன் இவ்வாறு விளம்பரம் ஊடகங்களின் மூலமாக வெளியிட விருப்பம் தெரிவிப்பார் என்று அந்தக் காரியதரிசி நினைத்தும் பார்க்கவில்லை…..
அதைவிட அதிர்ச்சி அடுத்த தீரன் சொன்னதைக் கேட்டு அடைந்தார் அந்த காரியதரிசி…
' உமாபதி, நாளைய செய்தித்தாள்களை எல்லா ஊர்களுக்கும் அனுப்பிய பிறகு எல்லோரையும் ஒரு நாள் விடுமுறை கொடுத்து அனுப்பிவிட்டு நீங்களும் விடுமுறை எடுத்துக் கொண்டு அலுவலகத்தை பூட்டிவிட்டு செல்லலாம்'
உமாபதி மேற்கொண்டு தீரனை கேள்வி கேட்க துவங்கும் முன்பு தீரனே தொடர்ந்து, ' இப்போது என்னை எதையும் கேட்காதீர்கள்…நாளை நீங்கள் வீட்டுக்குச் சென்றவுடன் தெரியும்' என்றார்.
மறுநாள் காலை… தமிழ்நாட்டு மக்களுக்கு சாதாரணமாகத்தான் துவங்கியது…..தமிழ்நாட்டின் அரசியலையும், தொடர்ந்து இந்திய அரசியலையும் புரட்டிப் போடப் போகும் செய்தியை உலகெங்கும் உள்ள முக்கிய ஊடகங்களும் செய்தித்தாள்களும் பரபரப்பாக வெளியிட போகும் அன்றைய நாள் என்று அப்போது தெரியாது….
காலை 6 மணியிலிருந்து… எல்லா முக்கிய தொலைக்காட்சி ஊடகங்களிலும் தீரன் அளித்த விளம்பரம் ஒளிபரப்பானது…..
அந்த விளம்பரத்தை சாதாரணமாக பார்க்கத் துவங்கிய மக்கள் இது என்ன புதிதாக இருக்கிறது என்று தமிழ் மூலம் செய்தித்தாள்களை வாங்க புறப்பட வைத்தது…..
விளம்பரத்தில்…..
" இந்த விளம்பரத்தை பார்த்துக் கொண்டிருக்கும் உங்களைத்தான்…. உங்கள் ஒவ்வொருவரையும் தான்… தூய அரசாங்கம் அமையாதா, தூய அரசியல் அமையாதா என்று நீங்கள் நாள்தோறும் எண்ணி மனதில் புழுங்கி கொண்டிருப்பது தெரிந்தே எங்கள் உயிரை பணயம் வைத்து இன்றைய 'தமிழ் மூலம்' செய்தித்தாளை வெளியிடுகிறோம். நாட்டையும், எங்களையும், உங்களையும் காக்க போவது இன்றைய 'தமிழ் மூலம்' செய்தித்தாளை நீங்கள் எல்லோரும் வாங்கி படித்து முன்னெடுக்க போகும் செய்கையில் தான் உள்ளது!"
மக்களிடம் பரபரப்பு தொற்றிக்கொள்ள தொடங்கி… அன்றைய 'தமிழ் மூலம்' செய்தித்தாளை எல்லோரும் வாங்க…
அதில் முதல் பக்கத்தில்…..
மறைந்த தலைவரின், தலைவரின் குடும்பத்தின், தலைவரின் சுற்றத்தாரின், தலைவரின் நண்பர்களின் ( பினாமிகளின் ) பல நாட்டு வங்கி கணக்குகள்….
ஒவ்வொரு வங்கியிலும் உள்ள அந்த நபர்களின் மொத்த தொகை…
வங்கி கணக்கு யாரால் துவங்கப்பட்டது…..
எந்த தேதியில் துவங்கப்பட்டது…
அந்தப் பணம் எப்படி வந்தது என்பதைப் பற்றிய முழு விவரங்களும் புள்ளி விபரங்களுடன் வெளியிடப்பட்டிருந்தது..
அது மட்டுமல்லாமல், நாளைய செய்தித்தாளில் மேற்குறிப்பிட்ட எல்லோருடைய சொத்து விவரங்களையும், சொத்து மதிப்புகளையும், யாரால், என்று, எப்படி வாங்கப்பட்டது என்ற மொத்த விவரங்களையும் படிக்கத் தவறாதீர்கள்! என்று வெளியிட்டு இருந்தார்கள்.
அன்றைய தமிழ் மூலம் செய்தித்தாளை படித்த மக்கள் முதலில் பெரும் அதிர்ச்சி அடைந்தாலும் பிறகு எப்போதுமே இது நடக்கிறது… ஓரிரு வாரங்களில் எல்லோரும் மறந்து விடுகிறார்கள்… இதுவும் அது போல் தான் என்று நினைக்கத் துவங்கி அவரவர்கள் அன்றைய, அன்றாட வேலைகளில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தனர்.
ஆனால், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும், இந்தியாவையும் அன்று மதியம் நடந்த நிகழ்ச்சி அதிர்ச்சிக்குள்ளாக்கியது……
எல்லா ஊடகங்களும் ஒளிபரப்பிய செய்தி தான் அது……
' தமிழ் மூலம் ' பத்திரிகை அலுவலகம் சூறையாடப்பட்டு முழுவதுமாக தீக்கிரையாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்.
அந்தக் கட்சியின் வரலாற்றை தெரிந்த, அறிந்த முதியோர்களுக்கு இந்த கொடூரம் அதிர்ச்சி தரவில்லை.
அந்தக் கொடூர நிகழ்ச்சி அன்றைய செய்தித்தாளில் வந்த செய்தி அனைத்தும் உண்மை என்பதை உறுதிப்படுத்தியது!
மக்கள் அனைவரும் 'தமிழ் மூலம்' அலுவலகம் முழுவதும் தீக்கிரையாக்கப்பட்டதால் மறுநாள் செய்தித்தாள் வராமல் போகிறதே என்று உண்மையாக, உளப்பூர்வமாக வருந்தினர்..
எப்போதும் போல காவல்துறை இதற்குக் காரணமானவர்களை விரைவில் கண்டுபிடித்து தண்டிப்போம் என்று அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
பத்திரிகை ஆசிரியர் தீரனின் கதி என்னவாயிற்று என்று யாருக்கும் தெரியாமல் குழம்பினர்.
மறுநாள் காலை….. செய்தித்தாள் வரப்போவதில்லை என்ற ஏமாற்றத்துடன் எல்லோரும் அன்றாட வேலைகளை கவனிக்கத் துவங்க… பரபரப்பாக மின்னலென வாட்ஸ் அப்பில் செய்திகள் வரத்துவங்கியது..
ஆமாம், தமிழ் மூலத்தின் அன்றைய செய்தி மின்னணு பதிவாக இணையதளத்தில் வந்துவிட்டது என்ற செய்தி தான் அது… வாட்ஸ் அப்பில் அந்த செய்தியை மட்டும் பகிராமல் அந்தப் பதிப்பின் லிங்கையும் பகிர்ந்திருந்தார்கள்..
அதில் எல்லோருடைய சொத்து விவரங்களும் துல்லியமாக புள்ளி விவரங்களுடன் வெளியிடப்பட்டிருந்தது…..
ஆறு மாதங்கள் கழிந்தது……
பெரிய விளையாட்டு அரங்கில் வாய்மை வெல்வதற்கு காரணமான திரு தீரன் அவர்களை முதல்வர் திரு பாலமுருகன் அழைத்து பொன்னாடை போர்த்தாமல் திருமூர்த்தி எழுதிய ' 'குமரிக்கண்டம் நம் தொடக்க வரலாறு!' என்ற புத்தகத்தை கொடுத்து, தன் அரசாங்கத்தில் செய்தித் துறை அமைச்சராக பதவி ஏற்க அழைத்ததை அன்போடும், பண்போடும் தீரன் மறுத்ததும்…. அதை தீரனை நன்கு அறிந்த டாக்டர் நன்னனும், திருமூர்த்தியும் புன்முறுவலுடன் பார்க்க, அந்த நிகழ்ச்சியை சென்ற பிறவியின் நினைவுகள் துளியும் இல்லாமல் மறக்கடிக்கப்பட்ட அகத்தியன் கவனிக்காமல் விளையாடிக் கொண்டிருந்தான்.