கதை அல்ல, நிஜம்!
- melbournesivastori
- Mar 8, 2022
- 5 min read
மாறாவிர்க்கும் ஜீவாவுக்கும் இதுவரை எந்த பிரச்சனையும் வந்ததில்லை.. இந்த கிரானைட் கல்லை தேர்வு செய்யும் வரை. திருமணமாகியே 50 வருடங்கள் கடந்துவிட்டது… முதல் முறையாக கருத்து வேறுபாடு. இருவரின் விருப்பு-வெறுப்பு எல்லாமே ஒத்த கருத்தாகவே இருந்திருக்கிறது…. வீட்டில் இருக்கும் பொருள்கள் முதல் வீடு வரை வாங்கியவை, கட்டியவை எல்லாமே இருவரும் ஒரே கருத்து ஒரே எண்ணத்தைக் கொண்டு தான். இப்போது இதில் ஏன் இருவருக்கும் வேறுபட்ட விருப்பங்கள் வந்துள்ளது என்பதே அவர்களுக்கு புரியவில்லை….
அவர்களைப்பற்றி சொல்லாமலேயே கருத்து வேற்றுமையை பற்றி மட்டும் சொல்லிவிட்டேன்… மாறா- மனைவி ஜீவா- கணவன்.. தமிழ்நாட்டிலிருந்தோ இல்லை தமிழ் பேசும் நாட்டில் இருந்தோ வந்தவர்கள் என்று நினைப்பீர்கள்.. அதுதான் இல்லை அவர்கள் இருவரும் ருமேனியா நாட்டை சேர்ந்தவர்கள். அங்கிருந்து ஆஸ்திரேலியாவிற்கு குடியேறி 35 வருடங்களுக்கு மேல் கடந்துவிட்டது. அவர்களுடைய ஒத்தகருத்து சொந்த மகளுக்கே எப்போதும் ஆச்சரியத்தைத் தந்தது. எங்கு சென்றாலும் எதை வாங்கினாலும் இவர் வாங்கினால் அவருக்கும் அவர் வாங்கினால் இவருக்கும் மாற்றுக் கருத்து வந்ததே இல்லை… இனிதே மகிழ்ச்சியாக இவ்வளவு நாட்களும் வாழ்ந்து விட்டார்கள், ஆனால் இந்த கிரானைட் கல்லின் செலெக்க்ஷனில் ஒத்த கருத்துக்கு வரவே முடியவில்லை.. ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் பல மணி நேரங்கள் விவாதத்திற்குப் பிறகும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை.
இந்த கிரானைட் கல்லை பற்றிய முழு விவரங்களையும் சென்ற வருடம் எனக்கு நேர்ந்ததைப் பற்றி கூறிவிட்டு பிறகு சொல்கிறேன்.
2021 மார்ச் 2-ஆம் தேதி வொர்க் பிரம் ஹோம் என்றாலும் மாலை வந்ததும் அசதியாக இருக்கும்… அன்றும் அப்படித்தான் வேலையை முடித்து சிறிது ஓய்வு எடுக்கலாம் என்று படுக்கையில் சாய்ந்தேன். ஏனோ தெரியவில்லை அதிகநேரம் படுக்க முடியவில்லை எழுந்து அமர்ந்தேன். அதிக நேரம் அமரவும் முடியவில்லை படுக்கவும் முடியவில்லை…. இது தொடர ஆரம்பித்து மாலை கடந்து இரவும் முழுவதும் இதே நிலைமைதான்…. இங்கு நான் சொல்ல வருவது என்னுடைய உடல் நிலையைப் பற்றியோ அதைத்தொடர்ந்து அதிலிருந்து நான் தேர்ச்சி பெற்றதையோ பற்றி அல்ல.
இங்கு ஆஸ்திரேலியாவில் குறிப்பாக மெல்போர்னில் இருக்கும் மருத்துவ வசதிகளை பற்றியது. அன்றிரவு நான் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் போதே என் மனைவி HotDoc எனும் App இல் மறுநாள் முதல் அப்பாயின்மென்ட் டாக்டரிடம் செய்து விட்டாள். பொழுதும் விடிந்தது, வீட்டின் அருகே உள்ள கிளினிக்கில் டாக்டரை காண சென்றோம்.
இங்கு முக்கியமான சிலவற்றை கூறியே ஆக வேண்டும், நான் வசிக்கும் இந்த Suburbயில் சுமார் மூவாயிரம் குடும்பங்கள் உள்ளன. எங்களுக்கு இரண்டு கிலோமீட்டர் சுற்று வட்டாரத்திலேயே ஐந்து கிளினிக்குகள் உள்ளன அதில் நான் இன்று வந்த கிளினிக் எல்லாவற்றையும் உள்ளடக்கியது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் ரத்தப்பரிசோதனை முதல் எம் ஆர் ஐ வரை எல்லா வசதிகளும் உள்ளது. இங்கு ஆஸ்திரேலியாவில் நீங்கள் வசிப்பவர் என்றால் உங்களுக்கு மருத்துவ ஆலோசனை தேவை என்றால் வருடம் முழுவதும் தினமும் நீங்கள் மருத்துவரை சென்று பார்க்கலாம் எந்தவித பண செலவும் இன்றி இது மெடிகேர் எனப்படும் அரசாங்க பொதுமக்களுக்கான வசதி. மருந்து மாத்திரைகளுக்கு மட்டும் நாம் செலவு செய்ய வேண்டும்… இங்கு உங்களுக்கு ஒரு கேள்வி எழும்… ஆமாம் ரத்தப்பரிசோதனை முதற்கொண்டு அல்ட்ரா சவுண்ட் சோதனை வரை எல்லாம் இலவசம். இது தரமான இலவச மருத்துவ வசதி எல்லா ஆஸ்திரேலிய பிரஜைகளுக்கும்.
காலை மருத்துவரை சந்தித்தேன் முன்தினம் மாலை முதல் அன்று காலை வரை நடந்த எல்லாவற்றையும் அவரிடம் கூறினேன்.. எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டறிந்த அவர் உடனடியாக எனக்கு ரத்தப் பரிசோதனையும் அல்ட்ராசவுண்ட் சோதனையும் செய்து பார்க்க வேண்டுமென்றும் அதற்கான படிவங்களை எழுதிக் கொடுத்து விட்டு அதில் அவசரம் என்று சிவப்பு ஸ்டாம்பிங் செய்து கொடுத்தார். அதற்கான முடிவுகள் சில மணிநேரங்களிலேயே தெரிந்து விடும் அதனால் நான்கைந்து மணிநேரம் கழித்து மறுபடியும் வந்து சந்திக்கச் சொன்னார். ரத்தப்பரிசோதனை அடுத்த பதினைந்து நிமிடங்களுக்குள் முடிந்து விட்டது அல்ட்ராசவுண்ட் மற்றவர்கள் இருந்ததினால் இரண்டு மணி நேரம் கழித்து அதையும் முடித்து இன்னும் இரண்டு மணி நேரம் கழித்து மருத்துவரை சந்திக்க சென்றேன்…. அதிக வேலைப்பளுவின் காரணமாக ஸ்பெஷலிஸ்டின் ரிப்போர்ட் வர தாமதத்தின் காரணமாக என்னை வீட்டுக்கு செல்ல கூறி ஏதாவது அவசியம் ஏற்பட்டால் போன் செய்வதாக கூறினார்கள்.
நானும் வீட்டிற்கு வந்து ஆஸ்திரேலியா நியூசிலாந்து 20-20 கிரிக்கெட் பார்க்கத் துவங்கினேன். அப்போதுதான் கிளினிக்கில் இருந்து எனக்கு போன் வந்தது…. வந்த செய்தி எனக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் நானும் என் மனைவியும் கிளம்பத் தயாரானோம். கிளினிக்கில் இருந்து வந்த செய்தி ஏதுமில்லை என்னை உடனடியாக அவசர பிரிவுக்கு ஹாஸ்பிடலுக்கு செல்ல அறிவுறுத்தினார்கள்… என்னுடைய ரத்த பரிசோதனை முடிவுகளையும் அல்ட்ரா சவுண்ட் முடிவுகளையும் ஏற்கனவே ஹாஸ்பிடலுக்கு அனுப்பி விட்டதாகவும், மருத்துவமனைக்குச் சென்று அவசர பிரிவில் என் பெயரை கூறினால் உடனே அவர்களால் என்னுடைய எல்லா ரிப்போர்ட் களையும் பார்க்க முடியும் என்றும் கூறினார்கள். நான் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுடன் கிளம்பினேன் ஏனெனில் நான் ஹாஸ்பிடலுக்கு செல்வது இதுவே முதல் முறை… மருத்துவமனை அவசர பிரிவுக்கு சென்று அடைந்தோம்… முகப்பில் covid-19 செக்கப் பிடித்து உள்ளே அனுப்பினார்கள்… ED ரிசப்ஷனில் என்னுடைய பெயரை கூறினேன் எங்கிருந்து வருவதாகவும் கூறினேன் அவர்கள் சிஸ்டம் ரெக்கார்டுகளை பார்த்துவிட்டு எமர்ஜென்சி டிபார்ட்மெண்டில் என்னை அனுமதிக்க படிவங்களை பூர்த்தி செய்துவிட்டு என் கையில் சிவப்பு நிற டேப்பை கட்டினார்கள். பிறகுதான் தெரிந்தது ஏதேனும் அலர்ஜி இருந்தால் சிவப்பு நிற டேப்பை கட்டுவார்கள் என்று.
அட்மிஷன் படிவங்களைப் பூர்த்தி செய்த பிறகு என்னை எதிரே உள்ள தங்கும் அறையில் அமரச் சொன்னார்கள், டாக்டர் வந்தவுடன் என்னை அழைப்பார்கள் என்று கூறினார்கள். ஒரு அரை மணி நேரம் கழிந்திருக்கும் என்னை அழைத்தார்கள் நானும் உள்ளே சென்றேன். அவர் ஒரு தமிழ் டாக்டர் என்னை ஒருமுறை முதலில் இருந்து எனக்கு நடந்ததை எல்லாவற்றையும் கேட்டு தெரிந்து கொண்டு என்னை அங்கேயே அமர சொல்லி சென்றுவிட்டார். ஒரு பத்து நிமிடம் கழித்து ஒருவர் வந்து என்னை சக்கர நாற்காலியில் அமரச் சொல்லி அழைத்துச் சென்றார். அப்போது இரவு ஒரு பதினோரு மணி இருக்கும்… எனக்காக எமர்ஜென்சி டிபார்ட்மெண்டில் ஒரு அறை ஒதுக்கி இருந்தார்கள்.. நான் உடுத்திச் சென்ற உடைகளை களைந்துவிட்டு மருத்துவமனை அங்கியை அணிந்து கொள்ளச் சொன்னார்கள். பிறகு எல்லாம் மடமடவென்று நடந்தது… ரத்த அழுத்தத்தை பரிசோதித்தனர் பிறகு சர்க்கரை அளவை பரிசோதித்தனர்… ஒருவர் வந்து மூன்று tube களில் ரத்தம் எடுத்துச் சென்றார். சிறிது நேரம் கழித்து அங்கேயே படுக்கையிலேயே ஈசிஜி எடுத்தனர்… ஒரு ஒரு மணி நேரம் கழித்து ஒருவர் வந்து சக்கர நாற்காலியில் என்னை அழைத்துச் சென்று எக்ஸ்-ரே எடுத்தனர். நான் நினைத்ததெல்லாம் அப்சர்வேஷனில் அன்று இரவு இருந்துவிட்டு மறுநாள் என்னை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் என்று…. ஆனால் மறுநாள் எனக்கென்று ஒரு வார்டை ஒதுக்கி அங்கு அட்மிட் செய்தார்கள்.
என்னடா இவன் தன்னுடைய உடல் நிலையைப் பற்றியோ தனக்கு நேர்ந்ததை பற்றியோ எதுவும் கூறாமல் மருத்துவ வசதிகளைப் பற்றி மட்டும் கூற போகிறேன் என்று கூறிவிட்டு இவ்வளவையும் சொல்கிறானே என்று நீங்கள் நினைக்கலாம்… இப்போதும் கூறுகிறேன் இது என்னுடைய உடல்நிலை பற்றி அல்ல எந்தெந்த வசதிகள் அரசாங்க மருத்துவமனையில் ஆஸ்திரேலிய வாசிகளுக்கு உள்ளது என்பதைக் கூற மட்டுமே இது.
ED இல் எனக்கு மாட்டின ஐ வி வார்டிலும் தொடர்ந்தது…. காலை 9 மணி இருக்கும் ஒருவர் வந்து என்னிடம் ஒரு படிவத்தை கொடுத்து பில்லப் செய்து சொன்னார்கள்…. ஆச்சரியமாக இருந்தது அது ஒரு சாப்பாட்டு மெனு படிவம்.
ஸ்டார் ஓட்டல்களில் தனக்குத் தேவையான சாப்பாட்டைத் தேர்ந்தெடுப்பது போலிருந்தது..
அன்று துவங்கி ஒரு வாரத்துக்கு மேலாக அங்கு இருக்க வேண்டி வந்தது.
தினமும் ஆறுமுறை 3 ஷிப்டுகளில் வேலை செய்யும் நர்ஸ்கள் மூலமாக ஷிப்ட் துவங்கும் போதும் முடியும் போதும் ரத்தஅழுத்தம், சர்க்கரை அளவு, ஆக்சிஜன் அளவு இவைகளை கண்காணித்தார்கள். இவைத்தவிர தினமும் காலை 9 மணிக்கு ரத்தப் பரிசோதனையும் நடந்தது.
பத்து நாட்களுக்குப் பிறகு இறுதியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தார்கள். மருத்துவர் குழுவுடன் வந்த சீப் டாக்டர் என்னிடம் எல்லாவற்றையும் விளக்கி கூறினார்.
இந்த இடத்தில் நான் மருத்துவமனையை பற்றி அதுவும் அரசாங்க மருத்துவமனை பற்றி கூறியே ஆக வேண்டும்……

மேலே உள்ள மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று அறுவை சிகிச்சையும் செய்து கொண்டேன். இப்போது நான் பகிரப் போகும் விஷயத்தை நன்றியுடன் பகிர்கிறேன்.தயவுசெய்து இதை நம் நாட்டுடன் ஒப்பீடாக கருதவேண்டாம். பைவ் ஸ்டார் ஓட்டலுக்கு நிகரான சர்வீஸ் உடன் சிகிச்சையும் நடந்தது.bஇது ஒரு அரசாங்க மருத்துவமனை. டிரான்ஸ்போர்ட் வசதி இல்லாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் எந்த ஒரு விக்டோரியனையும்
ஹெலிகாப்டரில் அழைத்து வந்து மருத்துவமனை முன்பே இறங்கி உடனடி சிகிச்சி கொடுக்கும் வசதியும் உண்டு. இவை எல்லாமே சாதாரண கூலித்தொழிலாளர்கள் முதற்கொண்டு முதலமைச்சர் வரை எல்லோருக்கும்….
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் எல்லாமே இலவசம்!
ஒவ்வொரு நோயாளிக்கும் தனித்தனியாக டிவி வசதி….. வால்யும் சவுண்ட் கையில் உள்ள ரிமோடீலேயே இருந்தது
மாலை ஒரு 7 மணி இருக்கும் அறுவை சிகிச்சை மருத்துவர் வந்து அன்றிரவு எனக்கு அறுவை சிகிச்சை என்றும் தயாராக இருக்கும்படியும் கூறிவிட்டுச் சென்றார். மணி இரவு 8.15 என்னை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்ல ஒரு ரஷ்ய பெண்மணி வந்திருந்தார்… நான் குளிரில் மெல்லியதாக நடுங்குவதை கண்டு உடனடியாக சென்று அடர்த்தியான சூடான பிளாங்க்ட்டை எடுத்து வந்து என் மீது முழுவதுமாக போர்த்திவிட்டு நான் படுத்திருந்த கட்டிலிலேயே ஆப்ரேஷன் தியேட்டர் நோக்கி அழைத்துச் சென்றார். ஆப்ரேஷன் கேட்டிருக்கு செல்லும் வழி ஹாலிவுட் சினிமாக்களில் வருவது போன்ற அண்டர்கிரவுண்ட் வழி… இறுதியாக ஒரு அறைக்குள் என்னை விட்டு அந்த ரஷ்ய பெண்மணி வாழ்த்துக்கள் கூறிவிட்டுச் சென்றுவிட்டார். பிறகு மயக்க மருந்து கொடுக்கும் டாக்டர் வந்து எல்லாவற்றையும் விசாரித்து என்னுடைய உயரம் எடை இவைகளை கேட்டு சரிபார்த்து விட்டு சென்றார். பிறகு ஆபரேஷன் தியேட்டருக்குள் அழைத்துச் சென்றனர்…. அங்கு பெயர் வயது எங்கிருந்து வருகிறேன் எதற்காக வந்திருக்கிறேன் எல்லாவற்றையும் மீண்டும் ஒரு முறை கேட்டு தெரிந்து கொண்டு எனக்கு மயக்க மருந்து கொடுக்கப் போவதாக கூறி என்னுடைய சம்மதத்தைப் பெற்றுக் கொண்டனர்.
சிறிது நேரம் கழித்து என்னுடைய பெயரை கூறி என் காதருகில் யாரோ பலமுறை கூப்பிடுவது கேட்டு கண் விழித்து பார்த்தேன். என்னருகில் எனக்கு மயக்க மருந்து கொடுக்கப் போவதாகக் கூறிய டாக்டர் நின்றுகொண்டிருந்தார். என்ன என்பது போல அவரை பார்த்தேன். அவர் என்னை நோக்கி வாழ்த்துக்கள் எல்லாம் நல்லபடியாக முடிந்தது என்றார். எனக்கு ஒரே ஆச்சர்யம்… ஒரு துளி நினைவும் இல்லை ஆபரேஷன் முடிந்து விட்டிருக்கிறது.
அந்த டாக்டர் எனக்கு குட்நைட் சொல்லிவிட்டு விடைபெற்றார். திடீரென்று ஒரு குரல் கேட்டது, ‘Are you from South India?’ என்று. நான் ஆம் என்று தலையசைத்தேன் அப்போதுதான் அவரைப் பார்த்தேன். ஒரு இளம் வயது நர்ஸ் தான் கேரளா என்றும் ஆனால் வளர்ந்தது எல்லாம் கர்நாடகாவின் பெல்காம் என்றும் கூறினார்… குடிக்க ஜூஸ் வேண்டுமா அல்லது ஐசிப் போல் வேண்டுமா என்றும் கேட்டார்.. நான் என்றுமே சுவைக்காத ஐசி போலை அன்று கேட்டு வாங்கி நன்றி கூறினேன்.
மருத்துவமனையில் இருந்தவரை ஐந்து இந்திய நர்சுகள் எனக்கு பணிவிடை செய்தனர் எல்லோருமே கேரளாவில் இருந்து வந்தவர்கள். மூன்று தமிழ் டாக்டர்களை பார்த்தேன். 90 சதவிகித சமையலறை வட இந்தியர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. எந்தத் தொழிலுமே கேவலம் இல்லை இருந்தும் கிளீனர்கள் ஆக குஜராத்திகளை பார்க்கும்போது மனது ஏதோ செய்தது.
இது கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பு நடந்தது.. மரணத்தின் நுழைவாயிலில் சென்று திரும்பியதால் மரணத்தைப் பற்றி யோசிக்கவே இன்றும் பயப்படுகிறேன்.
ஆனால் மாறா ஜீவா விஷயமே வேறு ….. அவர்கள் ருமேனியா சென்றபோது ஒரு இடத்தை வாங்கி விட்டு வந்திருக்கிறார்கள்… அதேபோல மெல்போர்னிலும் ஒரு இடத்தை வாங்கினார்கள்… அந்த இடம் ஏன் என்று தெரிந்த பிறகு …. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்று நினைத்து அந்த நினைவுகளை ஜீரணிக்கவே முடியவில்லை.
அவர்கள் ருமேனியாவில் வாங்கிய இடமும் மெல்போர்னில் வாங்கிய இடமும் அவர்கள் இருவரும் இறந்த பிறகு சமாதி கட்டுவதற்கான இடம்… அவர்கள் இருவருக்குமான கருத்து வேற்றுமையே அதில் பதிக்கப்படும் கிரானைட் கல்லின் நிறத்தைப் பற்றித்தான்.