கடைசி ஆசை! By சிவா.
- melbournesivastori
- Dec 23, 2022
- 5 min read

நான் நியூசிலாந்தில் குடியேறிய பிறகு இரண்டாவது முறை இந்தியா செல்கிறேன். இந்தியா செல்ல டிக்கெட் புக் செய்த உடனே சொந்த ஊருக்கு செல்லும் அந்த பரபரப்பு, எதிர்பார்ப்பு எல்லாம் கலந்து ஒரு இனம் புரியாத இன்பம் சூழ்ந்து கொள்ளும்…
அக்காவிற்கும்,அக்காவின் பிள்ளைகளுக்கும், அக்காவின் கணவர் என் தாய் மாமாவிற்கும், என் தம்பிக்கும் எல்லாவற்றிற்கும் மேலாக என் அம்மாவிற்கும் யோசித்து அவர்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்கி செல்வதே ஒரு தனி சுகம்! என்னதான் எல்லா பொருட்களுமே இப்போது அங்கு இந்தியாவில் கிடைத்தாலும் நான் வாங்கி எடுத்துச் செல்லும்போது அதை அவர்கள் பெற்றுப் பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியே தனி.
நான் குடியேறிய பகுதி நியூசிலாந்தின் குயின்ஸ் டவுன். உலகின் வேறு எந்த பகுதியிலாவது இவ்வளவு அழகு கொட்டிக் கிடக்குமா என்பது ஒரு பெரிய கேள்விக்குறியே. நான் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா இந்த பகுதிகளுக்கு குடியேற வாய்ப்பு இருந்தும் நியூசிலாந்துக்கு வந்து குடியேறியது ஒரு விசித்திரமான காரணத்தால்…. Xena தி வாரியர் தொடரைப் பார்த்த போதும் லார்ட் ஆப் த ரிங்ஸ் திரைப்படத்தை பார்த்த போதும் இவைகளை எங்கு எடுத்திருப்பார்கள் என்று தேடியபோது நியூசிலாந்தை பற்றி அளவுக்கு அதிகமாக தெரிந்து கொண்டேன்… ஒரு விதத்தில் முடிவே செய்து விட்டேன் இங்கு தான் குடியேற வேண்டும் என்று…. குடியேறியும் விட்டேன் நான்கு வருடங்களுக்கு முன்பு… நான் ஒரு தனிமை விரும்பி, அம்மாவும் அக்காவும் மாமாவும் ஒவ்வொரு முறை பேசும்போதும் தவறாமல் நிர்பந்திப்பது என்னை திருமணம் செய்து கொள்ள சொல்லி… இன்னும் ஓரிரு வருடங்களில் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். சிறுவயதில் இருந்தே எனக்கு தனிமையும் இயற்கை அழகை ரசிப்பதும் மிகவும் பிடிக்கும், அதற்கு ஏற்றால் போல் குடியேறிய நாடும், குடியேறிய இடமும் அமைந்தது.
இந்த முறை திட்டமிடாமல் இப்போது நான் செல்வது அக்காவின் அதீத வற்புறுத்தலால்.. இன்னும் ஆறு மாதம் கழித்து வருகிறேன் என்று சொல்லியும் கேட்காமல் கண்டிப்பாக வரவேண்டும் என்று மிகவும் நிர்பந்தத்தார்… சரி என்று சம்மதித்து இப்போது சென்று கொண்டும் இருக்கிறேன்… மனதில் ஒரு மூலையில் ஏதோ ஒரு நல்ல பெண்ணை பார்த்து விட்டிருக்கிறார்… அதைப் பற்றி பேச தான் பேசி முடிவெடுக்க தான் இந்த நிர்பந்தம் என்று நினைக்கிறேன்.
சிங்கப்பூரில் விமானம் தரை இறங்கியது…. மெயின் லக்கேஜ் நேராக சென்னை சென்று விடும்… என்னுடைய ஹேண்ட் லக்கேஜை மட்டும் எடுத்துக் கொண்டு/ உருட்டிக்கொண்டு விமானத்தை விட்டு வெளியே வந்தேன். சிங்கப்பூர் விமான நிலையம் மூன்று டெர்மினல்களைக் கொண்டது, மிக பிரம்மாண்டமாக இருக்கும். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் பயணம் செய்யும் பட்சத்தில் எல்லா கனெக்டிங் பிளைட்டுகளும் ஒரே டெர்மினலில் இருக்கும். வேறு வேறு ஏர்லைன்ஸ்கள் மூலம் பயணத்தை புக் செய்தால் ட்ரான்சிட் டைம் அதிகம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.. ஏனெனில் கனெக்டிங் பிளைட் வேறொரு டெர்மினலலிலும் இருக்கக்கூடும். வெளியே வந்து தகவல் டிஸ்ப்ளே போர்டை பார்த்து என்னுடைய சென்னை விமானதிற்கு எந்த கேட்டிற்கு செல்ல வேண்டும் என்று பார்த்தேன். எந்த கேட் என்று நியூசிலாந்திலேயே பார்த்துவிட்டேன்.. இருப்பினும் மறுமுறை சரி பார்த்துக் கொள்வது முக்கியம்… சில தவிர்க்க முடியாத காரணங்களால் வேறு கேட்டிற்கும் மாற்றியிருக்க கூடும். என்னுடைய கேட் அதே தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டு சென்றேன்.
சென்னை விமான நிலையம். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கழிந்தும் ஏன் நம்மால் மேற்கத்திய நாடுகளைப் போன்ற ஒரு நல்ல விமான நிலையத்தை கட்ட/ அமைக்க முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் சொந்த மண்ணை வந்தடைந்த மகிழ்ச்சி உள்ளமெல்லாம் வியாபித்திருந்தது. சுங்க சோதனை முடித்து லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு வெளிய வந்தேன்…
மாமாவும் தம்பியும் மட்டும் நின்று கொண்டிருந்தனர், அக்காவை எதிர்பார்த்து ஏமாந்தேன். வேலூரைச் சென்றடைய சுமார் இரண்டரை மணி நேரங்கள் ஆகும், அதுவரை ஓய்வு எடுத்துக்கொள்ளுமாறு மாமா என்னிடம் கூறினார். இல்லை மாமா பயணத்தில் நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டேன் என்ற அவரிடம் கூறினேன்.. அக்காவும் அம்மாவும் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டேன்.. இருவரும் நன்றாக இருப்பதாக கூறினார். தம்பியின் முகத்தில் வாட்டம் தெரிந்தது.. ஏன் என்று கேட்டேன், அதெல்லாம் ஒன்றும் இல்லை தூக்கம் இல்லை அதனால் தான் என்றான். சரி இப்போது தூங்கு என்று சொல்லி நானும் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டேன். ரத்தினகிரி நெருங்கும் போது முழிப்பு வந்து விட்டது, தூக்க கலக்கத்தில் முருகனைப் பார்த்து மனதிற்குள் கும்பிட்டுக் கொண்டேன். நான் வலது பக்கம் இருக்கும் முருகனின் ரத்தினகிரி கோவிலை பார்க்கும்போது மாமாவும் தம்பியும் அதற்கு எதிர் புறமாக இடது பக்கம் எதையோ பார்த்து பெருமூச்சு விட்டனர். வேலூர் வீட்டுக்கு சென்றடைய விடியற்காலை இரண்டு 45 ஆகிவிட்டது.. அம்மாவையும் அக்காவையும் எதிர்பார்த்து விட்டுக்குள் சென்ற எனக்கு அம்மா மட்டுமே வரவேற்க வந்தது சிறிது ஏமாற்றமே!
அக்கா தூங்கிக் கொண்டிருக்கிறார்களா என்று அம்மாவை கேட்க, அம்மாவினால் அழுகையை அடக்க முடியவில்லை.. நான் தடுமாறி விட்டேன், ஏன் அழுகிறீர்கள் என்று கேட்க… மாமாவே சொன்னார், சில நாட்களாக உடல்நிலை சரியில்லை அதனால் மருத்துவமனையில் சேர்த்துள்ளோம் என்று. எனக்கு கோபம் வந்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டு ஏன் இதை எனக்கு முன்னமே சொல்லவில்லை என்று கேட்டேன்.
எப்படியும் வருகிறாய் ஏன் உன்னை குழப்ப வேண்டும் என்று சொல்லவில்லை என்று கூறியதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. என்ன பிரச்சனை என்று இப்பவாவது சொல்லுங்கள் என்று கேட்டேன்.
அதெல்லாம் பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை காலையில் பேசி கொள்ளலாம் நீ இப்போது சென்று ஓய்வெடுத்துக் கொள் காலையில் எழுந்தவுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறேன் என்றார். நான் தம்பியை பார்த்தேன், நான் பார்த்ததை பாக்காதது போல வேறு எங்கோ பார்த்தான். அம்மா அழுகையின் ஊடே ஏதோ சொல்ல வந்ததை மாமா தடுத்து என்னை ரூமிற்கு அழைத்துச் சென்று படுக்க சொன்னார். அக்காவிற்கு துணையாக யார் இருக்கிறார்கள் என்று கேட்டதற்கு, ‘ காந்தம்மா ‘ என்றார். கணவனை இழந்து பிள்ளைகள் யாரும் இல்லாத தூரத்து உறவினர் கந்தம்மா என் குடும்பத்துடன் என் சிறுவயதிலிருந்தே இருக்கிறார்.
எனக்கு தூக்கம் வரவில்லை 7:00 மணிக்கே குளித்துவிட்டு தயாராகி வரும்போது தம்பி, மாமா, அம்மா மூவரும் தயாராக இருந்தனர். எந்த மருத்துவமனை என்று கேட்டேன்.
‘ இது புதிது, உனக்கு தெரியாது ‘
‘அப்படியா, எங்கே உள்ளது?’
‘ ரத்தனகிரி முருகன் கோவிலுக்கு எதிரில் ‘
‘ நல்ல மருத்துவமனை தானே?’
‘ இதுவும் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியின் கிளை, சிஎம்சி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் ‘
‘ அப்படியா?, இப்பொழுதாவது சொல்லுங்கள் அக்காவுக்கு என்ன?’
‘ டெஸ்டுகள் எடுத்துள்ளனர் இன்று என்னவென்று தெரியும்’
நான் அமைதி காத்தேன், 15 நிமிடம் கடந்திருக்கும்.. ரத்தினகிரி கோவிலின் பாலத்திற்கு கீழே இறங்கி கார் வலது பக்கம் திரும்பியது… இதற்கு முன் இந்த இடத்தில் வெறும் விளைநிலங்களே இருந்தது..
ஒரு பிரம்மாண்டமான கட்டிடம் தெரிந்தது, இவ்வளவு நல்ல மருத்துவமனையை நான் எதிர்பார்க்கவில்லை.. காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றோம். அக்காவை பார்க்கும் மனநிலையில் இருந்ததால் மருத்துவமனையின் மற்ற வசதிகளை பார்க்கத் தோணவில்லை. நேராக அக்கா இருந்த அறைக்கு சென்றோம்.
‘ உமா, பிரபு வந்திருக்கிறான் பார் ‘ உறங்கிக் கொண்டிருந்த அக்காவை மாமா எழுப்பினார்.
தட்டு தடுமாறி மகிழ்ச்சியுடன் அக்கா எழுந்து அமர முயற்சி செய்வதைப் பார்த்து அவசர அவசரமாக மாமா ‘ ‘வேண்டாம் உமா படுத்துக் கொண்டே பேசு’ என்று சொன்னதை வைத்து பார்த்து இது சீரியசான உடல்நிலை என்று புரிந்து கொண்டேன்.
‘என்ன அக்கா உனக்கு?’
‘ கொஞ்ச நாட்களாக பசி எடுப்பதில்லை, மிகவும் அயற்சியாக இருந்தது அதனால் தான் ட்ரீட்மென்ட் எடுத்துக்கொள்ள இங்கு வந்தேன் ‘ என்று அக்கா கூறும் போது மாமா வேறு பக்கம் திரும்பியதை நான் கவனிக்காமல் இல்லை. சிறிது நேரம் பேசிவிட்டு மாமாவை அழைத்துக் கொண்டு வெளியே வந்தேன்.
‘ உண்மையை சொல்லுங்கள் மாமா அக்காவிற்கு என்ன?’
‘ நீ கவலைப்படாதே எல்லாம் சரியாகிவிடும் ‘
‘ என்னவென்று கூறுங்கள்’
‘புற்றுநோய் என்று கூறுகிறார்கள் ஆனால் நான் நம்பவில்லை…’
எனக்கு பேரதிர்ச்சி, ‘ ஏதோ டெஸ்ட் என்று சொன்னீர்களே அதன் முடிவு வந்து விட்டதா?’ என்று கேட்டுக் கொண்டிருக்கும்போதே மருத்துவர் குழு அங்கு வந்தது..
நான் என்னுடைய விடுப்பை அதிகரித்து தங்கியும் எந்த பயனும் இல்லை….. ஒவ்வொரு உயிரினத்திற்கும் என்ன நடக்குமோ அது நடந்தே விட்டது.
எங்களையெல்லாம் சோகத்தின் உச்சியில் விட்டு விட்டு அக்காவின் உயிர் ஒரு மணி நேரத்துக்கு முன்பு பிரிந்து விட்டது.
என் தந்தை இறந்த போது எனக்கு சிறு வயது… மாமாவின் அரவணைப்பில் தான் வளர்ந்தேன். எனக்குத் தெரிந்தவரை எனக்கு நானே கட்டுப்படுத்த முடியாமல் அழுதது இதுவே முதல் முறை… துக்கம் என்பது இவ்வளவு கொடுமையானது என்பதே இதுவரை எனக்கு தெரியாது..
மறுநாள் இறுதியாத்திரைக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.. சுற்றமும் நட்பும் சூழ இருப்பினும் யார் முகத்தையும் பார்க்க பிடிக்கவில்லை… என்னை மீறி கண்களில் நீர் வடிந்து கொண்டே இருந்தது. அக்காவின் சடலத்தை இறுதியாத்திரைக்கு தயார் செய்து கொண்டிருந்ததை கண்டு துக்கத்தையும் மறக்க செய்து அதீத கோபத்தை கிளப்பியது…
நான் கடவுள் மறுப்பாளன் இல்லை, கலாச்சாரத்திற்கு எதிர்ப்பானவனும் இல்லை.. இருப்பினும் காலத்திற்கு ஒவ்வாத சடங்குகளை அறவே வெறுத்தேன்…. அத்தகைய வெறுப்பிற்குக் காரணம் தான் இப்போது என் கோபத்தை கிளறியது.. சடங்குகள் என்ற பெயரில் அக்காவின் சடலத்தை காட்சி பொருளாக்கியது அதை சுற்றிலும் இருந்த சுற்றம் பார்த்தது வருத்தத்தையும் மீறி கோபத்தில் என்னை பேச வைத்தது.
‘ இந்த சடங்கு எல்லாம் செய்ய வேண்டாம் அப்படியே விடுங்கள்’ இன்று நான் கத்தியது மாமாவிற்கு கோபத்தை உண்டாக்கியது.
‘ உனக்கு என்ன தெரியும் நம் கலாச்சாரத்தையும் சடங்குகளையும் பற்றி? நாங்கள் பெரியவர்கள் இருக்கும்போது நீ சின்னவன்
இதில் தலையிடாதே..’ என்று மாமா கூற என்னைத் தவிர எல்லோரும் என் தம்பி அம்மா இவர்களையும் சேர்த்து அதை சரி என்றனர்.
நான் நிர்கதியாக நின்று, சம்மதிக்காமல் அமைதியாக இருந்தேன். அக்காவின் இறுதி யாத்திரையும் நடந்தேறியது.. எனக்கு புரியவில்லை என்னைத் தவிர இங்கிருந்தோர் எல்லோரும் சில சமயங்களில் அக்காவின் மரணத்தை மறந்து நடக்க வேண்டியதை கவனிக்க முடிந்தது, என்னால் முடியாது போனது.
துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டே இருந்தது.
15 ஆம் நாள் காரியமும் நடந்து முடிந்தது… மறுநாள் பெரியவர்களுடன் சேர்க்கும் பழக்கம் என்று ஒரு சடங்கு!
இரு வாரங்கள் மாமிசம் உண்ணாதது மிகப்பெரிய தியாகம் போல் அன்று பிரியாணிக்கு தடபுடலான ஏற்பாடுகள் செய்தது எனக்கு அருவருப்பை தந்தது.
அன்று இரவு எல்லோரும் சென்று விட்ட பிறகு நெருங்கிய சொந்தம் மற்றும் வீட்டாரை தவிர யாரும் இல்லை.
எந்தவித பேச்சுக்களில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் கூட்டத்தில் நடுவில் அமர்ந்திருந்தேன்.
திடீரென்று என் தம்பி என்னை பார்த்து கேட்டான், ‘ நம் முன்னோர்கள் ஏற்படுத்திய காலம் காலமான சடங்குகளை எதிர்க்கிறாயே உன் கடைசி ஆசைதான் என்ன? நீ இறந்தால் எப்படி அணுக வேண்டும்?’ என்று அவன் கேட்டு முடித்தவுடன் அம்மா அவனை கோவமாக திட்ட..
‘ நீ கேட்பது புரிகிறது, என்னுடைய சிந்தனைகள் எளிதானவை எதையும் திருந்த மனத்துடன் அணுக வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்… நான் இறந்தால்…நான் இறந்த பிறகு என் உடலுக்கு சரியான மரியாதை என்னவென்றால் இறந்த முறையுடனே நெற்றியில் விபூதி மட்டும் வைத்து திருவருட்பாவில் இருந்து ஓரிரு பாடல்கள் பாடி இறுதியாத்திரைக்கு கொண்டு சென்று அப்படியே சாம்பலாக்கி நம் நிலத்தில் கலந்து விடுங்கள் ‘
‘ முட்டாள் மாதிரி பேசாதே, நம் கலாச்சாரம் என்ன, பண்பாடு என்ன?’ என்று மாமா கூச்சலிட…
‘ மாமா நீங்கள் கோபப்படுவது தவறு, இது அண்ணனின் விருப்பம், அதை கடைசி ஆசையாக கூறுவது தவறு ஒன்றும் இல்லையே…. கடைசி ஆசையை முடிந்தவரை நிறைவேற்றுவது தான் நாம் இறந்தவருக்கு செய்யும் கடைசி மரியாதை என்று நினைக்கிறேன்’ இன்று தம்பி கூற..
‘நடக்கும்போது பார்க்கலாம், பேச வேறு ஏதும் இல்லையா?’ என்று என் பெரியப்பா ஒருவர் எல்லோரையும் அடக்க.. எல்லோரும் வேண்டா வெறுப்பாக அமைதி காத்தனர்.
என் அழுகையை யாரும் கவனிக்கவில்லை… என்னால் தடுக்கவும் முடியவில்லை… என் கடைசி ஆசை நிராசையாக போனது….
ஆமாம், ஒரு வருடம் கூட ஆகவில்லை… அதே புற்றுநோயில் நானும் இறக்க எனக்கு பிடிக்காத எல்லா சடங்குகளும் என் உடலின் மீது நிறைவேறிக் கொண்டிருந்தது….