top of page
Search

காலத்தின் கோலம்.

  • melbournesivastori
  • Sep 15, 2023
  • 9 min read

Updated: Sep 17, 2023

     


மிகத் தீவிரமாக யோசித்துப் பார்த்தால் அறிவியலும், மதமும் ஒன்று என்றே தோன்றுகிறது… இரண்டிலும் மாற்றுக்கருத்து இருந்தால் ஏற்றுக் கொள்வது என்பது மிக மிக கடினம்.. மிகத் தீவிர முயற்சியில் நிரூபிக்க முற்பட்டாலும் இவை இரண்டின் அதிகார பீடமும் அதனை தகர்த்துவிடும். இதையே வேறு விதமாக யோசித்துப் பார்த்தால் ஆன்மிகத்திற்கும் அமானுஷ்ய நிகழ்வுகளுக்கும் ஒருவித ஒற்றுமையைக் காண முடிகிறது… இவை இரண்டும் தனி ஒருவருடைய அனுபவமும், புரிதலும் மட்டுமே… இந்த அனுபவங்களைப் பெற்ற ஒருவர் அதை மற்றவர்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லை…. இவைகளை நோக்கித்தான் நம் உலகம் வேகமாக சென்று கொண்டிருக்கிறது  என்று தோன்றுகிறது…. இவைகளை ஏன் நான் குறிப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதா? இனி நான் கூற போவதற்கும் இவைகளுக்கும் தொடர்புள்ளதா என்று நீங்களே தெரிந்துகொள்ளுங்கள், புரிந்துகொள்ளுங்கள்.

' காக்கை குருவி எங்கள் ஜாதி' என்றான் நம் பாட்டன் சுப்பிரமணிய  பாரதி!

  நாம் ஒரு படி மேலே சொல்வோம்,

' கல்லும் மண்ணும் கூட எங்கள் ஜாதி!'

  எல்லாவற்றிலும் ஆன்மா இருக்கிறது என்ற நம்பிக்கை இருந்தது அந்த காலத்தில்… அந்த நம்பிக்கைக்கு வலு சேர்க்காமல்… அதை புரிந்து கொள்ளவும் முயற்சி செய்யாமல் தான்தோன்றித்தனமாக தனக்கு தோன்றியதை எல்லாம் சிலர்  கூறியதை, புரியாததையெல்லாம், புரிந்து கொள்ள முடியாததை எல்லாம் மூடநம்பிக்கைகள் என்று மூர்க்கத்தனமாக எதிர்த்த பகுத்தறிவு என்ற வார்த்தையை படாதபாடு படுத்திக் கொண்டிருக்கும், கடவுள் மறுப்பு ஒன்றே  முனைவர் பட்டம் என்று கருதிக் கொள்ளும் கூட்டம் குழப்ப…. அவசர கதியில் ஓடிக்கொண்டிருக்கும்  பெருங்கூட்டம் அதை நம்ப… ஆன்மீகப் பயணம் என்ற அற்புத பயணத்தை ஒரு கூட்டம் கடவுளின் பெயராலும் மறு கூட்டம் கடவுள் மறுப்பின் பெயராலும் சின்னா பின்னம் படுத்தியது.

   இதைப் படிப்பதே குழப்பமாக இருந்தால் இனி வருபவற்றை படிப்பது கடினமாகத்தான் இருக்கும்… இருப்பினும் எவ்வளவு எளிதாக விளக்க முடியுமோ முயற்சி செய்கிறேன்.

  பிரபஞ்சமே ஒரு ஆன்மா என்று குழப்பமாக இருந்தாலும் நம்புங்கள்…

 ஈர்ப்பு விசை,  அண்டத்தையும் வளைக்கும்  ஒளியையும் வளைக்கும்…

 வேகம், காலத்தையும் வளைக்கும்.

 காலம் அதாவது நேரம் ஒரு நேர்கோட்டில் ஒரே சீராக  பயணிக்கிறது என்று நினைக்க…. இல்லை அது நேர்கோட்டிலும் இல்லை ஒரே சீராகவும் இல்லை என்று  இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக புரிய வருகிறது….

 ஒளியின் வேகம்  ஒரு வினாடிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டருக்கும் சற்றே குறைவு.. அறிவியல் படி அந்த ஒளியின் வேகத்தையும் கடந்து வேகம் எடுத்தால்  நேரம் மெதுவாக நகரும் என்கிறது…  அதாவது அந்த வேகத்தில் ஒரு மணி நேரம் பயணம் செய்வதாக வைத்துக் கொள்வோம்… நமக்கு ஆன நேரம் ஒரு மணி நேரம், அதே சமயத்தில்  பூமியில் இருக்கும் நமது சுற்றத்திற்கும் நட்புக்கும் பூமியில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் ஒரு வருடத்திற்கு மேலும் கடந்து இருக்கலாம்… எளிதாக புரிந்து கொள்ள  தோராயமாக கூறினால்  ஒளியின் வேகத்தை விட அதிக வேகத்தில்  ஒரு மணி நேரம் பயணம் செய்து திரும்பி வந்தால் உங்களைத் தவிர மற்றவர்களுக்கு  ஒரு வருடத்திற்கு மேலாக  வயது கூடிவிட்டிருக்கும்…

 வேகம் மட்டுமா நேரத்தை பாதிக்கிறது என்றால் இல்லை… ஈர்ப்பு விசையும் பாதிக்கிறது. நம் பூமியை எடுத்துக் கொள்வோம்.. ஈர்ப்பு விசையை நம் பூமியில் புவி ஈர்ப்பு விசை என்கிறோம்.  இங்கும் நேரம் மாறுபடுகிறது.. கடல் மட்டத்தில் கடக்கும் நேரத்தை விட  மிகச் சிறிய அளவு இமயமலை மேல் குறைவாக கடக்கும். நேரத்தையாவது புரிந்துகொள்ள  கடிகாரம் என்று ஒன்று உள்ளது… இந்த அண்டத்தை புரிந்துகொள்ள  மூளையை கசக்க வேண்டியதாக இருக்கும்.

   இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாம் ஒரே நேரத்தில் நடக்கிறது என்றால் அதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வதே கடினம். அப்படித்தான் நடக்கிறது, நிகழ்கிறது என்ற ஒரு நியதி இப்போது வலுக்கிறது. எளிதாக புரிய வைக்க முயற்சி செய்கிறேன்…

  காலம் ஒரு புத்தகத்தை போன்றது..

அதில் எல்லாம் அச்சிடப்பட்டிருக்கிறது. நீங்கள் படிக்கும் இந்தப் பக்கங்கள் நிகழ்காலமாக எடுத்துக் கொள்ளுங்கள்.. படித்து முடித்த பக்கங்கள் இறந்த காலம்…. அதே புத்தகத்தில் எதிர்காலமும் இருக்கிறது ஆனால் இன்னும் நீங்கள் படிக்கவில்லை… இது போலத்தான் காலமும் என்கிறார்கள்.

  அமெரிக்காவில் நடந்த இரு நிகழ்ச்சிகளை உதாரணமாக கொடுத்துவிட்டு நம் கதைக்கு செல்வோம்…

   சென்ற நூற்றாண்டில் ஒரு முறை ஒரு கிராமத்தில் ஏதோ ஒரு விதமான மொழியில் மக்கள் உரையாடுவது தெள்ளத்தெளிவாக கேட்க துவங்கியது… அதைக் கேட்டுக் கொண்டிருந்த சிலருக்கு குழப்பம் அதிகமாகி பேய்கள், பிசாசுகள் போன்று ஏதோ ஒன்று என்று நம்ப ஒரு சிலர் இதை  அறிவியல் பூர்வமான ஆராய்ச்சி செய்ய முடிவு செய்து உலகின் பல மொழிகளை ஒப்பிட்டுப் பார்க்க…. கடைசியாக அது வேல்ஸ் நாட்டில் பேசப்பட்ட மொழி என்று தெரிந்தது. அடுத்து ஆராய அப்போதைக்கு சுமார் 150 வருடங்களுக்கு முன்பு அங்கு வேல்ஸ்  நாட்டில் இருந்து வந்தவர்கள் குடியேறி இருந்தது தெரிந்தது.

   கால தடுமாற்றத்தால்  (கிலிட்ச்) அந்த சமயத்தின் மக்களின் நடமாட்ட பேச்சுக்கள் தற்செயலாக எதிர்காலத்தில் இருந்த மனிதர்களுக்கு கேட்டது. அப்படி என்றால் நிகழ்கால மனிதர்கள் பேசிய பேச்சுக்களும் அந்த சமயத்தில் வாழ்ந்த அந்த மக்களுக்கும் கேட்டிருக்கும்.

   இது காலத்தின் ஒலி தடுமாற்றம்.

 மற்றொரு சமயத்தில், அமானுஷ்ய விடயங்களை  ஆராயும் கும்பல்  ஒரு பழைய  தொழிற்சாலையில் தரைமட்டத்திற்கு கீழே இருந்த கட்டிடத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று ஒரு திரை போலவும் ஹாலோகிராம் போலவும் ஒரு காட்சி தெரிய… அந்த காட்சியில் மூன்று சிறுவர்கள் இவர்களை கண்ணாடி ஜன்னல் வழியாக தட்டி கூப்பிடுவது போல கூப்பிட  இவர்களுக்கு ஏதும் புரியாமல் அவர்களைப் பார்க்க அந்த சிறுவர்களும் உங்களைத்தான் கூப்பிடுகிறோம் வந்து எங்களை காப்பாற்றுங்கள் இன்று கதறும் காட்சியும் தெரிய அருகே சென்று பார்க்க முயன்ற போது  அந்த சிறுவர்கள் ஆவலாக  காத்திருக்க…. சற்றென்று  அந்த காட்சி மறைந்தது… இது காலத்தின் ஒளி தடுமாற்றம் என்று அந்த ஆய்வாளர்களுக்கு புரிந்து கொள்ள நேரம் எடுத்தது…. எந்த காலத்திலோ அங்கு அடைபட்டு இருந்த சிறுவர்களுக்கு இந்த ஆய்வாளர்கள் கண்ணுக்கு தெரிந்திருக்கிறார்கள்…. இந்த ஆய்வாளர்களுக்கும் அந்த சிறுவர்கள் தெரிந்திருக்கிறார்கள்.

 இந்த இரண்டு நிகழ்ச்சி உண்மையாக அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சிகள்.  

   நான் மகேந்திரன், பௌதிக விஞ்ஞானி என்று சொல்கிறார்கள்….  விஞ்ஞானி என்ற வார்த்தை என்னைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய வார்த்தை.. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், நிக்கோலா டெஸ்லா போன்ற மிகப்பெரிய அறிவியலாளர்களை சொல்ல வேண்டிய வார்த்தை… சரி போகட்டும்.. நான் சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன்.

   விஞ்ஞானி என்றாலே ஒரு தவறான கருத்து நம் மக்களிடையே  நிலவுகிறது… அவர்களெல்லாம் கடவுள் மறுப்பாளர்கள் என்று. இது தான்தோன்றித்தனமான கருத்து என்று நம்புகிறேன்….  விஞ்ஞானிகள் தெரியாததை தெரிந்து கொள்ள முற்படுவார்களே தவிர அவற்றை மறுப்பவர்கள் என்று முத்திரையிடக்கூடாது. நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன், என் வழி மத வழி அல்ல… ஆன்மீக வழி!  என்னிடம் கடவுளைப் புரிந்து கொள்ள தேடுதல் இருந்து கொண்டே இருக்கிறது… இது ஒரு புறம் ஆன்மீகத் செயலாக இருக்கும் பட்சத்தில் மறுபுறம் காலப் பயணத்தில் அதிக நாட்டம் உண்டு.

  காலப் பயணத்தில் ( டைம் டிராவலில்) எனக்கு அவ்வளவாக  நம்பிக்கை இல்லை, இருப்பினும் ஏதோ ஒரு உணர்வு என்னை உறுத்திக் கொண்டிருக்கிறது…. என் அறிவியல் அறிவை நான் விரிவு படுத்திக்கொள்ளவில்லை என்று… இந்த உந்துதல் என்னை நாள்தோறும் வாட்ட… இதற்கு விடை  ஸ்பேஸ் டைமில் இருக்கும் என்று நம்பினேன், நம்பி அதை நோக்கி என் ஆராய்ச்சியை  தொடர்ந்தேன்.

   இந்த நேரத்தில் தாத்தா முரண்பாடு ( கிராண்டேட் பேரடாக்ஸ்) ஹிட்லர் முரண்பாடு ( ஹிட்லர் பேரடாக்ஸ் ) என்று இரு முரண்பாடுகள் கால பயணத்தில்  பிரபலமானவை…

  இதைப் பற்றி கூறும் முன்பு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் விளக்கம் ஒன்றை கூற வேண்டும். அதாவது மூன்று பரிமாணங்கள் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.. நீள, அகல, உயரம். நான்காவது பரிமாணம் நேரம் என்று எல்லோரும் ஏற்றுக் கொண்ட ஒன்று. ஐன்ஸ்டீன் சொல்வது என்னவென்றால்  முதல் மூன்று பரிமாணங்களும் அண்டம் நான்காவது பரிமாணம் நேரம்  இரண்டும் ஒரே பரிமாணம் என்று… அதாவது ஸ்பேஸ் டைம் இஸ் அ சிங்கிள் டைமென்ஷன்.

   இப்போது கால பயணத்தில் தாத்தா முரண்பாட்டிற்கு செல்வோம்..

 மிக எளிதாக சொல்ல முற்படுகிறேன்…

 ஒருவர்  காலப் பயணத்தில் பின்னோக்கிச் சென்று அவருடைய இளம் வயது தாத்தாவை கொன்று விடுகிறார் என்று வைத்துக் கொண்டால்  அதன் சங்கிலி நிகழ்ச்சிகள் முரண்பாட்டில் கொண்டு விடும். தாத்தா இறந்து விட்டால்  அந்த கணமே  அவருக்கு சந்ததிகள் கிடையாது…. பிறகு எப்படி அந்த ஒருவர் கால பயணத்தை மேற்கொள்ள முடியும்?

  இதே வித  முரண்பாடு தான்  உலக நிகழ்ச்சிகள் ஹிட்லரை சிறுவயதில் கொன்றால் கூட…

   அறிவியலினால் காலப்பயணத்தை மேற்கொள்ள முடிந்தால் கூட பிரபஞ்சம் எதோ ஒரு வகையில், ஒரு நியதியில்  தொடர் நிகழ்ச்சிகளுக்கு பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்கிறது என்று கருதுகிறார்கள். மற்றொரு கருத்தும் நிலவுகிறது.. அதாவது  காலப் பயணத்தில் பின்னோக்கி தான் சொல்ல முடியுமே தவிர முன்னோக்கிச் செல்ல முடியாது என்று… விளக்கமாக பார்த்தால், நடந்த நிகழ்ச்சிகளை தான் பார்க்க முடியுமே தவிர நடை பெற போவதை பார்க்க முடியாது என்று… இது ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ள கூடியதாக  இருக்கிறது.

  என் பணியிடத்திலிருந்து இரு மாதங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டிருந்தேன். விஞ்ஞானிகளின் மூளை ஒருநிலைப்பட்டதாக இருக்கும் என்பது சாபக்கேடோ என்னவோ தெரியவில்லை… அது என்னையும் விட்டு வைக்கவில்லை… ஓய்வு நேரத்தில் மட்டுமே ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த நான் இந்த விடுமுறை நாட்களில் நாள்தோறும் கால பயணத்தை நிரூபிக்க தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டேன்.  என்னுடையது எப்படிப்பட்ட ஆராய்ச்சி கூடம், என்னென்ன உபகரணங்களை பயன்படுத்துகிறேன் என்று விளக்கிக் கூறுவது நான் சொல்லப்போவதற்கு தேவையில்லாத ஒன்று.

    அன்று ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை ஒரு மூன்று மணி இருக்கும் திடீரென ஒரு யோசனை மின்னல் போன்று தோன்றியது…. பைத்தியம் பிடித்தது போல் என் ஆராய்ச்சி கூடத்தை நோக்கி ஓடினேன்.

   எனக்குத் தோன்றிய யோசனைப்படி உபகரணங்களின் அளவுகளை நிர்ணயித்து வெள்ளோட்டம் விட்டேன்.

   ஒரு பிம்பம் சற்றென்று  தோன்றி மறைந்தது… உண்மையிலேயே தோன்றி மறைந்ததா இல்லை எனக்கு அப்படி தோன்றியதா என்று புரியவில்லை… மறுமுறை துவக்கி பார்த்தேன்… ஏதும் நடைபெறவில்லை. அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து தீவிரமாக யோசித்தேன். எனக்கு உதித்த யோசனை நன்றாகத்தான் இருந்தது அந்த பிம்பம் உண்மையிலேயே வந்து சென்றது என்றால் காலப் பயணம் சாத்தியமே! அந்த பிம்பம் தெரிந்தது போல என் மூளையே என்னுடன் சடுகுடு விளையாடுகிறதோ என்னவோ?!

 தொடர்ந்து மூன்று நாட்களாக எவ்வளவு முயன்றும் எந்தவித வெற்றியும் கிடைக்கவில்லை.

  புதன்கிழமை காலை அதேபோன்று விடியற்காலை இரண்டரை மணிக்கு மேல் இருக்கும், பளிச்சென்று நான் சென்ற முறை  செய்த தவறு  நினைவுக்கு வந்தது… கேட்க வேண்டுமா….. உடனடியாக ஆராய்ச்சி கூடத்திற்கு  சென்றேன். செய்த தவறை நிவர்த்தி செய்தேன்.

 முருகனை மனதில் நினைத்துக் கொண்டு மறு வெள்ளோட்டம் விட்டேன்.

 மகிழ்ச்சிக்கு உயரமும் உண்டு என்று இன்று கண்டு கொண்டேன்…. ஆமாம் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி இமயமலை உயரத்துக்கு இருந்தது…

 திரையில் தெளிவான பிம்பம் தெரிந்தது.. மகிழ்ச்சி தான் இமயமலை உயரத்துக்குச் செல்லும் என்பதல்ல….  அதிர்ச்சியும் அந்த உயரத்தை எட்டும். ஆம் நான் கண்ட காட்சி அப்படி.

   அந்த உபகரணத்தின் கண்ணாடியில் தெரிந்த பிம்பம்  நான் சிறு வயதில் நண்பர்களுடன்  விளையாடிக் கொண்டிருந்ததின் பிம்பம்.

   இந்த நேரத்தில் உங்களுக்கு ஒன்றை  விளக்க வேண்டும். என்னுடைய ஆராய்ச்சி உபகரணங்கள் ஸ்பேஸ் டைமை கட்டுப்படுத்த உபயோகப்படுகிறது. மனித வரலாற்றில் முதன்முறையாக  காலப் பயணத்தை எனக்குத் தெரிந்து நிகழ்த்தி  இருக்கிறேன். பொதுமக்களுக்கு தெரியாமல்  எந்தெந்த நாட்டில் எந்தெந்த அரசாங்கம் இவற்றை ஏற்கனவே நிகழ்த்தி இருக்கிறதோ என்னவோ?!

  எனக்கு மகிழ்ச்சியிலும், அதிர்ச்சியிலும் கை, கால்கள் படபடத்தன… சிறிது நேரம் என்னால் எதையும் செய்ய முடியவில்லை. அப்படியே பேய் அறைந்தார் போல்  சற்று நேரம் சிலையாக நின்றிருந்தேன். 

   எவ்வளவு நேரம் சென்றதோ தெரியவில்லை… சற்று நிதானத்திற்கு வந்து, அளவுகோல்களை மாற்றி அமைத்து மறுபடியும் இயக்கினேன்.

 மகிழ்ச்சியின் உச்சிக்கு சென்றேன்… இந்த முறை நான் கண்ட பிம்பம்  என்னை கை பிடித்துக் கொண்டு என் அப்பாவும் அம்மாவும் நடந்து செல்வது…

 இப்பொழுதுதான் என்னால் முழுவதுமாக ஜீரணிக்க முடிந்தது… ஆம் நான் கண்டுபிடித்தது ஒரு கால பயண பிம்ப  எந்திரம்.

  பைத்தியம் பிடித்தது போல் கொஞ்சம் கொஞ்சமாக அளவுகோல்களை மாற்றி மாற்றி பல பிம்பங்களை கண்டேன்.

 இதுவரை புகைப்படமே இல்லாத என் தாத்தா, பாட்டியை கண்டேன்… ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்களின் மகிழ்ச்சியை அனுபவிப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.. கண்கள் கொஞ்சம் இருண்டது… தாகம் ஏற்பட்டது… அப்போதுதான் நினைவுக்கு வந்தது கடந்த 10 மணி நேரமாக  எதையும் உண்ணாமல் தண்ணீரும் குடிக்காமல் ஈடுபட்டு கொண்டிருந்தேன் என்று… மயக்கம் வருவது போல் இருந்ததால் அன்றைய ஆராய்ச்சியை அத்தோடு முடித்து மூன்று பிஸ்கட்டுகளை சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்த, படுத்து சாய்ந்தேன்.

   தடதடவென்று கதவை தட்டுவது கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன்.. கதவைத் திறந்து பார்க்கும் போது அங்கு அம்மா நின்று கொண்டிருந்தார். 'என்ன மகேந்திரா சாப்பிட கூட வரவில்லை… நீ வெளியே சென்று இருக்கிறாய் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.. உன் நண்பன் பொன்னம்பலம் வந்திருக்கிறான் அவன் கூறிய பிறகு தான் நீ வெளியே செல்லவில்லை என்று தெரிந்தது…'

   கடிகாரத்தை பார்த்தேன்,  இரவு 8 மணி ஆகிறது.

   வா பொன்னம்பலம், நான் இன்னும் சாப்பிடவில்லை… இருவரும் சாப்பிட்டுக் கொண்டே பேசலாம்.

 இருவரும் சப்பாத்தி சாப்பிட்டு கொண்டிருக்கும் போதே,

' என்ன மகேன் ரொம்ப டயர்டாக தெரிகிறாய்… ஆராய்ச்சியே கதி என்று இருக்காதே'

' அதெல்லாம் ஒன்றும் இல்லை பொன்னம்பலம், அது சரி உனக்கு மிகவும் பிடித்த உன் வாழ்க்கையில் நடந்த ஒரு முக்கியமான நிகழ்ச்சியை கூறு '

 பொன்னம்பலம் என்னை அதிசயமாக பார்த்துவிட்டு, ' எனக்கு மட்டும் இல்லை என் குடும்பத்திற்கும் முக்கியமான நிகழ்ச்சி… நான் ஒரு வயது குழந்தையாக இருந்தேனாம்  அப்போது ஒரு நிகழ்ச்சிக்காக அவ்வழியாக சென்ற காமராஜர் என் தாத்தாவை கண்டுச்செல்ல திடீரென்று வீட்டுக்குள் வந்தாராம். அந்த நிகழ்ச்சி தான் இன்று வரை என் குடும்பத்தில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர் '

' ஓ அப்படியா, கொடுத்து வைத்த குடும்பம் உங்களது… உன்னுடைய தாத்தா காமராஜுக்கு தெரிந்தவரா?'

' ஆமாம் இருவரும் ஒரே சிறையில் இருந்திருக்கிறார்கள் சுதந்திரப் போராட்டத்தின் போது '

' எங்கு நடந்தது, சரியாக எப்போது நடந்தது என்று கூற முடியுமா?'

' என் குடும்பத்தில் உள்ளோர் எல்லோருக்கும் தெரியும் அது'

 என்று நிகழ்ச்சி நடந்த இடத்தையும் நாளையும் பொன்னம்பலம் கூறினான்.

  என்னுள் பலவாறு யோசனைகள் தோன்றியது…. சிறிது நேரம் பேசி விட்டு பொன்னம்பலத்தை அனுப்பிவிட்டு படுக்கச் சென்றேன். இரவு அவ்வளவாக தூக்கம் வரவில்லை… எப்போதும் போல விடியற்காலை தூக்கம் வராததால் மீண்டும் ஆராய்ச்சி கூடத்திற்கு சென்றேன்.

   ஸ்பேஸ் உபகரணத்தில் இடத்தின் புள்ளிகளையும், டைமில் நிகழ்ச்சி நடந்த நாளையும் மணி நேரத்தையும் மாற்றி, துவக்கி மிக ஆவலாக காத்திருந்தேன்…

  என்னையே என்னால் நம்ப முடியவில்லை… ஆமாம் நான் கண்ட காட்சி அப்படி.

 எதிரே கண்ணாடியின் பிம்பத்தில் பொன்னம்பலம் ஒரு வயது குழந்தையாக… தாய் தந்தை அருகே இருக்க,  தாத்தா இ சி சேரில் சாய்ந்திருக்க, பாட்டி பால் பாட்டிலில் பால் எடுத்து வர அதே சமயத்தில் காமராஜரும் உள்ளே சென்றிருந்தார்.

 இது எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு என்று ஜீரணித்து பார்க்கும் நிலையிலும் நான் இல்லை….

  அடுத்த ஒரு வாரம்  நம் நாட்டின்  பல வரலாற்று நிகழ்ச்சிகளை கண்டேன்.. சில நிகழ்ச்சிகள் நமக்குத் தவறுதலாக கூறப்பட்டிருக்கிறது..

   என்னுள் கிளர்ந்த இந்த உணர்ச்சி பிழம்பு கடவுளை நேரிலேயே கண்டது போல் இருந்தது…..  எந்த வகையிலும் இந்த உணர்ச்சியை உள்ளது உள்ளபடியே உங்களுக்கு உணர்த்த முடியாது… பிரம்ம ரகசியம் போல இது பிரம்ம உணர்ச்சி!

    தனிப்பட்டவர்களுடைய அறிவியல் கண்டுபிடிப்புகள் அந்த தனிப்பட்டவர்களுக்கு எந்தவித இன்னல்களை கொடுத்தது என்று எனக்குத் தெரியும், அதனால் இந்த அரும்பெரும் கண்டுபிடிப்பை யாரிடமும் பகிராமல் என்னுள்ளேயே வைத்துக் கொண்டேன். என் பெற்றோர்களுக்கு கூட தெரியாது…. ஏன் நெருங்கிய நண்பன் பொன்னம்பலத்துக்கு கூட தெரியாது.

   கடந்த ஒரு வாரத்தில் நான் கண்ட காட்சியின் பிம்பங்கள், என் மூளையை கசக்கி கண்டுபிடித்த இந்த கண்டுபிடிப்புகள் அந்த மூளையையே வெடித்து சிதற வைத்துவிடும் போல் இருக்கிறது. குறைந்தது ஒரு நாளாவது  இதிலிருந்து தள்ளி இருக்க வேண்டுமென்று நினைத்து ஆராய்ச்சி கூடத்தை மூடி பூட்டினேன்.  

   ஒரு நாளோ இரு நாளோ,  இந்த நினைவுகளில் இருந்து விடுபட்டு இருக்க விரும்பினேன். யாருக்கும் தெரியாத பல விஷயங்களை தெரிந்து கொண்டு அதை யாரிடமும் பகிர முடியாமல் இருப்பது கொடுமையிலும் கொடுமை! ஒரு அரை மணி நேரம் கூட அந்த நினைவுகளில் இருந்து நான் விடுபட  முடியவில்லை…… மதியம்  அம்மா சமைத்து வைத்திருந்த  அசைவ உணவை சாப்பிட்டுவிட்டு என் அறைக்கு படுக்க வந்தேன்.. எவ்வளவு முயன்றும் அந்த நினைவுகளில் இருந்து என்னால் மீள முடியவில்லை…

 சுமார் ஒரு மணி நேரம் கழிந்திருக்கும், சென்ற வருடம் நண்பன் வாங்கி வந்து கொடுத்த இதுவரை திறக்காமல் இருந்த ஹென்னெஸியை திறந்து ஒரு சிறு கப் குடித்தேன்…. ஏற்கனவே உணவு உண்டு முடிந்து விட்டதால் அந்த ஒரு கப்பே என்னை உறக்கத்திற்கு இழுத்துச் சென்றது..

 இரண்டு மணி நேரத்திற்கு மேல் தூங்கி இருக்கிறேன்… முழிப்பு வந்தவுடன் பளீர் என்று ஒரு யோசனை,

 ஏன் இவ்வளவு நினைவு தடுமாற்றங்கள்… என்னதான் நடக்கும், நடக்கப் போகிறது என்று பார்க்க வழி தேடினால் என்ன என்று.

   தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தேன்… இரு நாட்களாகியும் எந்த ஒரு நம்பிக்கையான யோசனையும் வரவில்லை… மூன்றாம் நாள் விடியற்காலை எப்போதும் போல் அப்பொழுதும் முழிப்பு வந்தது.. முழிப்புடன் ஒரு அற்புதமான யோசனையும் வந்தது… பிறகென்ன உடனடியாக தயாராகி ஒரு காபி குடித்துவிட்டு ஆராய்ச்சி கூடத்திற்கு சென்றேன்.

    நான் இருக்கும் இடத்தின் கோர்டினேட்டுகளையே கொடுத்துவிட்டு நேரத்திற்கு மறுநாள் மத்தியம் ஒரு மணி என்று கொடுத்தேன்… என்னப்பன் ஞானப்பண்டிதன் முருகனை மனதில் நினைத்துக் கொண்டு, வேண்டிக்கொண்டு கருவியை துவக்கினேன்…

   ஒரு சில நிமிடங்களுக்கு கண்ணாடியில் பிம்பத்தை பார்க்க தைரியம் வரவில்லை.. துணிவை வரவழைத்துக் கொண்டு பார்த்தேன்.. முருகன் என் துணை நின்றான்! என் ஆராய்ச்சிக்கு கிடைத்த மற்றும் ஒரு மாபெரும் வெற்றி!

  ஆமாம், கருவியின் கண்ணாடியில் மறுநாள் மதிய ஒரு மணியின் பிம்பம் தெரிந்தது… சில நொடிகள் அதிர்ச்சி…

 அதில் தெரிந்த பிம்பம் அவ்வாறு…

 வீட்டுக்கு பக்கத்தில் இருந்த சந்தில் இருந்து வந்த ஒரு மோட்டார் சைக்கிளின் மேல் ஒரு பெரிய கார்  மோதி இருந்த காட்சி அது..!

 மோட்டார் சைக்கிளில் இருந்தவர் அந்த காரின் அடியில் டயரில் சிக்கி கொண்டிருப்பது தெரிந்தது… இறந்து விட்டிருக்கலாம்… சுற்றிலும் மக்கள் நின்று கொண்டிருந்தனர். நினைப்பது தவறு தான்… இருப்பினும் மனதிற்குள் வந்து சென்றது, அந்த மோட்டார் சைக்கிள், அந்த கார் எனக்குத் தெரிந்தவை அல்ல என்று…

   இந்த எதிர்கால பிம்பத்தை பார்க்கும் வெற்றி எனக்கு மிகப்பெரிய போதையையே தந்தது.

  அடுத்தடுத்து நிறைய எதிர்கால பிம்பங்களை  இடங்களை மாற்றி, நேரத்தை மாற்றி கண்டேன்.

 அந்த சில மணி நேரங்கள் உணர்ச்சிகளின் கலவையாக இருந்தது. அதிர்ச்சி, ஆச்சரியம், நடுக்கம், பயம், மகிழ்ச்சி போன்ற  ஒட்டுமொத்த உணர்ச்சிகளும் அந்த கலவையில் இருந்தது. 

  இத்தோடு நிறுத்திக் கொண்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று நினைப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை…  வெற்றியின் போதை தலைக்கேறி இருந்தது…

   2027 என் பிறந்தநாள் எப்படி இருக்கும் என்று நான் இருக்கும் இடத்தின் கோர்டினேட்டுகளையும் நேரத்திற்கு மாலை ஆறு மணியும் கொடுத்து, நிறைய வெற்றிகள் வந்ததால்  முருகனை மறந்து  கருவியை இயக்கி பார்த்தேன்…  சிறிது நேரம் ஒன்றுமே புரியவில்லை.. ஏனென்றால்   கண்ணாடி பிம்பத்தில் வெறும் கருமையாக இருந்தது..

   கருவி பழுதாகி விட்டிருக்கிறதா என்று எல்லாவற்றையும் சோதனை செய்ய சரிபார்த்தேன். எல்லா உபகரணங்களும்  சரியாகத்தான் இருந்தது…. பின் எப்படி, ஏன், எந்த காட்சியும் பிம்பமாக தெரியவில்லை?!

 நாற்காலியில் அமர்ந்து சில நிமிடங்கள் யோசித்துப் பார்த்தேன், பிறகு வந்த யோசனையில்  என் 2027 பிறந்தநாளுக்கு முன்பு ஒவ்வொரு நாளாக பார்த்துக் கொண்டே வந்தேன்… சரியாக 12 நாட்களுக்கு முன்பு நான் கண்ணாடியில் கண்ட பிம்பத்தின் காட்சி தலையில் பேரிடியாக இறங்கியது…..

   எங்கும் தீப்பிழம்பாக  எரியும் காட்சி தெரிந்தது. கை கால்கள் நடுங்கியது.. நான் இருக்கும் இடம் ஏதோ ஒரு  காரணத்தால் தீக்கு இரையாகிக் கொண்டிருந்தது. எனக்கு ஏற்பட்ட நடுக்கத்தில் சுமார் பத்து நிமிடத்திற்கு மேல் பயத்தில் சாய்ந்திருந்தேன்.

   பிறகு சுதாரித்துக் கொண்டு வேறொரு இடத்தின் புள்ளிவிவரத்தை கொடுத்து பார்க்கலாம் என்று முயற்சி செய்தேன். அதிர்ச்சியை ஆயிரம் மடங்காக பெருக்கி பார்க்க ஏதேனும் வார்த்தை உண்டா? ஆயிரமா இல்லை, இல்லை கோடி மடங்காக பெருக்கி பார்க்க வேண்டும்…. நான் கண்ட பிம்பத்தின்  காட்சி அப்படி. கண்ட இடங்கள், கண்ட நாடுகள் எல்லாவற்றிலும் ஒரே காட்சி, எல்லாம் தீப்பிழம்பாக பற்றி எரிந்து கொண்டிருந்தது.. சரி எப்படி தொடங்கியது எனப் பார்க்க கொஞ்சம் கொஞ்சமாக நேரத்தை குறைத்துக் கொண்டே வந்து பார்த்தேன்.

  நான் என்ன பிம்பத்தை கண்டேன் என்று உங்களிடம் சொல்லலாமா…. இல்லை நான் பெற்ற அதிர்ச்சியை ஏன் உங்களுக்கெல்லாம் கடத்த வேண்டும் என்று மறைத்து விடலாமா என்று  தெரியவில்லை.. நடக்காது என்று நம்பி உங்களிடம் சொல்கிறேன்….

   2027 என் பிறந்தநாளுக்கு சரியாக 13 நாட்களுக்கு முன்பு சூரியனிலிருந்து வெடித்து சிதறிய சூரிய கதிர்கள் மாபெரும் தீ நாக்குகளாக பூமியை தாக்கி ஒட்டுமொத்த பூமியையும் கருக பிரளயத்தை ஏற்படுத்தியது… இதை உங்களிடம் சொன்னது தவறு என்றால் மன்னித்துக் கொள்ளுங்கள்.. இதற்கு மேலும் என்னால் அந்த ஆராய்ச்சி கூடத்தில் இருக்க முடியவில்லை.. நான் பார்த்தது தவறு… அப்படி எதுவும் நடக்காது  என்று மனதை தேற்றிக்கொண்டேன். எவ்வளவோ அறிவியல் முன்னேற்றங்களை கண்ட நாடுகள் இருக்கின்றன, அவர்களுக்கெல்லாம் இது தெரியாமலா இருந்திருக்க போகிறது? என் கருவியில் தான் ஏதோ தவறு இருக்கிறது.

  நடந்ததை மறக்க நினைத்து ஆராய்ச்சி கூடத்தை பூட்டிவிட்டு என் அறைக்கு வந்து படுத்தேன்.. இரவு மணி 8 இருக்கும் அம்மா கதவைத் தட்டி  இரவு உணவை வந்து சாப்பிடும்படி அழைத்தார்கள்.  சாப்பிட மனதில்லை என்று எப்படி சொல்ல முடியும், சென்றேன் ஏனோ தானோ என்று எதையோ சாப்பிட்டு விட்டு மறுபடியும் மாடியில்  என் அறைக்கு வந்து படுத்தேன்…தூக்கம் வரவில்லை… பதற்றம் கொஞ்சம் கொஞ்சமாக என் ரத்தக் கொதிப்பை அதிகப்படுத்தியதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நடக்காது என்று என் மனதிற்குள் என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டாலும் முடியவில்லை…. இரண்டு கப் ஹென்னெஸி குடித்தேன்.

    எப்பொழுது தூங்கினேன் என்றே எனக்கு தெரியாது.. காலை 7 மணிக்கு அம்மா அழைத்த உடன் தான் எழுந்தேன். சிறிது நிதானத்திற்கு வந்திருந்தேன்.. காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டேன்.

   ' என்ன மகேந்திரா, உன் லீவு  பாதி கழியப்போகிறதே வேறு எங்கும் சொல்லப்போவது இல்லையா?' என்று அம்மா கேட்டதற்கு பதில் சொல்லாமல் இல்லை என்று  தலையை மட்டும் அசைத்து விட்டு அறைக்கு வந்து சேர்ந்தேன்.

   இப்பொழுது நேரம் சரியாக காலை ஒன்பதரை… என் நினைவுகள் எல்லாமே மதியம் ஒரு மணியை  நோக்கி காத்திருந்தது…… ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு யுகமாக கழிந்தது… யூட்யூபை மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தேன்…  இதயத்துடிப்பு எங்கோ எகிறி கொண்டிருந்தது….. மணி பன்னிரண்டரை… இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கிறது….  இப்போது மணி 12:50 PM  கடந்த 20 நிமிடங்கள் செல்ல  20 வருடங்கள் போலிருந்து……

 அப்போது 'டமார்!' என்று பெருத்த சத்தம் அதைத் தொடர்ந்து 'ஐயோ!' என்ற சத்தம்…. நான் உடனடியாக ஓடி சென்று ஜன்னலை திறந்து பார்த்தேன்..

 கீழே வீட்டருகில் சந்தில் இருந்து வந்த ஒரு மோட்டார் சைக்கிளை ஒரு பெரிய கார் மோதி இருந்தது…. மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் காருக்கு அடியில் கார் டயரில் சிக்கிக் கொண்டு துடித்துக் கொண்டிருந்தார். 

 
 
bottom of page