top of page
Search

குமரி கண்டம். காரணியின் இறுதி பாகமாக By சிவா

  • melbournesivastori
  • Jul 24, 2021
  • 6 min read

எங்கள் காலத்திற்கு வந்து சேர்ந்தோம், எல்லாமே புதிதாக இருந்தது… மனிதர்களும் சரி கட்டிடங்களும் சரி எல்லாம் எதிர்பார்த்ததுதான்… 3000 வருடத்திய முன்னேற்றங்களும் மாற்றங்களும் .. ஒரே ஒரு கட்டிடத்தை தவிர, புரிந்து கொண்டிருப்பீர்கள் ஆமாம் தாய் கணினி இருக்கும் கட்டிடம் தான் அது. 21ஆம் நூற்றாண்டின் பௌதீக விதிகளால் புரிந்துகொள்ளமுடியாத பிரபஞ்ச விதிகளை உள்ளடக்கியது. அதன் உள்ளிருக்கும் பெட்டகத்தை பார்த்தால்தான் நாங்கள் இங்கிருந்து ஏற்கனவே சென்று திரும்பி வருபவர்கள் என்பதனை அந்தக்கால சமயத்தில் இருக்கும் அரசாங்கமோ அல்லது அதைப் போன்ற ஒரு அமைப்போ புரிந்து கொள்ள முடியும். கட்டிடத்திற்கு வெளியே எந்த ஒரு மாற்றம் எந்த காலத்தில் நிகழ்ந்தாலும் நாங்கள் பயணப்பட்ட போது இருந்த எல்லாவித சூழ்நிலைகளையும் உள்ளடைக்கி ஸ்பேஸ் அண்ட் டைமுக்கு அப்பாற்பட்டு இருக்கும் இந்த கட்டிடத்தின் உள்புறம். அதிகமாக குழம்ப வேண்டாம்… அந்த பெட்டகத்தை திறந்து பார்த்து புரிந்து கொண்டார்கள் நாங்கள் மூவரும் ஒரு திட்டத்துடன் மூவாயிரம் வருடத்திற்கு முன்பான காலகட்டத்திற்கு சென்று திரும்பியவர்கள் என்று.

எல்லோரும் திடமான உடல்நிலையை கொண்டிருப்பது கண்டு மிகவும் சந்தோஷம் அடைந்தோம்… காதுகளில் பொருத்தக்கூடிய ஒரு சிறு கருவியை கொடுத்தார்கள்… முதலில் என்னவென்று புரியவில்லை… நாங்கள் புறப்பட்டுச் செல்லும் போது இந்த உலகத்தில் குறிப்பிட்டுச் சொல்லும் படியாக வழக்கிலிருந்தது ஒரு பத்து மொழிகளே .. பொதுவான மொழியாக ஆங்கிலம் ஆயிரக்கணக்கான வருடங்களையும் கடந்து எங்கள் காலம் வரை தொடர்பு மொழியாக இருக்கிறது . அவர்கள் கொடுத்த கருவியை காதில் பொருத்திக் கொண்டோம். அதில் தலைமையேற்று இருப்பவர் எங்களை வரவேற்பதாக கூறினார்… ஆச்சரியம் என்னவென்றால் அதை அவர் ஏதோ ஒரு மொழியில் கூற எனக்கு புரியும் படியாக அந்தக் காதில் பொருத்திய கருவி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கூறியது…. இதற்காகத்தான் அந்த கருவியை எனக்கு கொடுத்தார்கள் என்று தெரிந்து.. ஒரு மகத்துவம் என்னவென்றால் இந்தக் கருவி தன்னிச்சையாக இயங்க கூடியது, ஒலி அலைகளை பரப்ப கோபுரம் ஏதும் தேவையில்லை… இது மிகப்பெரிய கண்டுபிடிப்பாக கருதினேன்… ஏனென்றால் இருபத்தி ஓராம் நூற்றாண்டில் பயன்படுத்திய எந்த மின்சார மின்னணு கருவிகளையும் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு கூட எடுத்துச்சென்று பயன்படுத்த முடியாது ஆனால் இந்த காதில் பொருத்திக் கொள்ளக் கூடிய கருவி எந்த காலத்திலும் அதனுள் சக்தி இருந்தால் போதும் வேலை செய்யும்…இதுவும் ஒரு மாற்றம். ஆண்களும் பெண்களும் 21ஆம் நூற்றாண்டுகளில் அணிந்திருந்த உடையை போல் அணிந்து இருக்காமல் கிட்டத்தட்ட நான் சென்ற 1965 இல் அணிந்திருந்தது போன்ற உடைகளை அணிந்து இருந்தார்கள். சரித்திரம் திரும்புகிறதோ என்னவோ!? நன்றி என்று கூறிவிட்டு அசதியாக இருந்ததால் நாங்கள் மூவரும் ஓய்வெடுக்கச் சென்றோம்… என் பயண அறிக்கையை எவ்வாறு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். இன்னும் இரண்டு நாட்கள் கழித்து அறிக்கையுடன் விவரித்தால் போதும் என்று சொன்னார்கள். இந்த இரு நாட்களில் அறிக்கையும் தயார் செய்துகொண்டு திட்டமிடலும் செய்ய வேண்டும்.

என் உள்ளுணர்வு கூறியது.. என் பிறவிப் பயனே அடுத்து நான் மேற்கொள்ளப்போகும் குமரிக்கண்ட பயணம்தான் என்று. இந்த நெருங்கிய எதிர்காலத்தில் எனக்கென்று என்ன இருக்கப் போகிறது என்று புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் குமரி கண்ட பயண எண்ணமே ஒரு புத்துணர்ச்சியை தந்தது. நான் தரப்போகும் அறிக்கை ஒன்றும் பெரிதாக கருதவில்லை… உடனடியாக தாய் கணினி மூலம் குமரி கண்ட பயணத்திற்கு விண்ணப்பித்தேன். என்னுடைய சென்ற பயணம் எவ்வளவு பெரிய வெற்றி என்பதை இந்நேரம் புரிந்து கொண்டிருப்பார்கள். 3000 வருடங்களாக சிதைந்து இருந்த மரபணுவை மீட்டது பெரிய வெற்றிதான். என்னத்தான் நாங்கள் நடைமுறைப்படுத்தி இருந்தாலும் தாய் கணனியின் திட்டமிடல் தான் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம்.

சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கையை அன்றிரவே முடித்துவிட்டு உறங்கச் சென்றேன். மறுநாள் காலை எழுந்தவுடனே ஒரு இனம் புரியாத சந்தோஷத்தில் இருந்தேன்… மனதிற்குள் தொடர்ந்து திட்டமிடல் நடந்துகொண்டே இருந்தது… இனி நான் தமிழ் சார்ந்த வருடத்தை குறிப்பிடப் போகிறேன். அதாவது திருவள்ளுவர் பிறந்த ஆண்டு நமக்கு ஒரு மையமாக வைக்கிறேன்…. முன்பு ‘0’ என்று இருந்ததற்கு பதிலாக இப்போதைய கணக்கின்படி அந்த வருடம் -31 ஆகும்…. இனி அதையே பூஜ்யமாக கருதுகிறேன். சரியாக அந்த வருடத்தில் இருந்து 10 ஆயிரத்து 200 வருடங்களுக்கு முன்னால் உலகமகா வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மிகப்பெரிய அற்புதமான கலாச்சாரங்கள் மக்களோடு அழிந்ததை தெரிந்துகொண்டேன். மிகத் தீவிரமான யோசனைக்குப் பின்பு திருவள்ளுவர் பிறந்த ஆண்டிற்கு 13000 வருடங்களுக்கு முன்பு செல்ல தீர்மானித்தேன். முன்பு குமரிக்கண்ட மாபெரும் சக்கரவர்த்தியை தூரத்திலிருந்து பார்த்தேனே.. சரியாக அதைவிட பத்து வருடங்களுக்கு முன்பாக செல்ல திட்டமிட்டேன்.

தாய் கணனியிடம் 3 தனித்தனியான குறிப்புகளை வாங்கிக்கொண்டேன்…. அது சாதாரண குறிப்புகள் இல்லை.. அதாவது 18,000 வருடங்களுக்கு முன்பாக எந்த வகை தமிழ் எழுத்துக்கள் வழக்கத்தில் இருந்திருக்கும் என்று கணினியால் கணிக்கப்பட்டு அந்த மூன்று குறிப்புகளும் காணொளி பரப்பும் கருவியில் ஏற்றிக்கொண்டேன். அந்தக் கருவியில் உள்ள ஒரு பொத்தானை அழுத்தினால் போதும் வெட்டவெளியில் அதிலுள்ள எழுத்துக்களோ புகைப்படங்களோ இல்லை காணொளிகளோ ஒளிபரப்ப ஆரம்பிக்கும்…. என்னுடன் நான் எடுத்துச் செல்லும் கருவிகள் எல்லாம் ஊர்தியில் இருந்து சக்தியைப் பெற்றுக் கொள்ளும். மூன்று குறிப்புகள் என்னென்ன என்று நான் பயணத்திற்கு முன்பாக கூறுகிறேன். எல்லா திட்டமிடல்களும் முடித்துவிட்டேன், திட்டமிடலின் சரிபார்த்தலும் முடித்துவிட்டேன். நிம்மதியுடன் உறங்கச் சென்றேன்.

மறுநாள் காலை ஒருவித எதிர்பார்ப்புடன் என் சென்ற பயணத்தினுடைய அறிக்கையை சமர்ப்பித்து விவரிக்க சென்றேன். பேசத் துவங்கினேன்… ஒரு பெரிய இன்ப அதிர்ச்சி, தலைமைக்குழு என்னிடம் ஏதும் பேச தேவையில்லை தாய் கணினியே சுருக்கமாக எல்லாவற்றையும் பதிவேற்றம் செய்து விட்டது… நீங்களும் அமர்ந்து பார்க்கலாம் என்றனர். அப்படியே நானும் அமர்ந்து காணொளியாக தாய் கணினி தயாரித்த பயணத்தின் சுருக்கத்தை கண்டு மெய்சிலிர்த்துப் போனேன். நாங்கள் மூவாயிரம் வருடத்துக்கு முன்பு செல்லும்போது இங்கு நிலைமை எவ்வாறு இருந்தது என்றும் எல்லோருக்கும் உடல்வலிமை எப்படி இருந்தது என்றும் என்னுடைய பயணத்தினால் அது எப்படி மாற்றமடைந்தது என்றும் இதனுடன் நிற்காமல் அதற்கு முந்தைய பயணத்தைப் பற்றியும் தெளிவாக புகைப்படங்களாகவும் சிறுசிறு காணொளிகள் ஆகவும் திரையில்லா வெட்டவெளியில் திரையிட்டது. எல்லோர் முகத்திலும் எவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து தப்பித்து இந்த வெற்றியை பெற்றுள்ளோம் என்பது கண்கூடாக தெரிந்தது, என்னுடைய குமரி கண்டத்தின் பயணமும் அங்கீகரிக்கப்பட்டது. எல்லாம் நல்ல விதமாக முடிந்ததால் ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டேன். இருப்பினும் தாய் கணினி ஏன் நான் தயாரிக்க வேண்டிய அறிக்கையையும் விவரிக்க வேண்டிவைகளையும் தானே செய்தது என்று குழம்பினேன், குழப்பம் தெளிய அதனிடமே சென்றேன். என்னுடைய வருகைக்கு காத்திருந்தார் போல் உடனடியாக தெரிவித்தது, என் குமரி கண்ட பயணத்திற்கு எந்தத் தடையும் வரக்கூடாது என்று தயார் செய்ததாகவும்…. அந்தப் பயணம் வருங்காலத்திற்கு தேவை என்றும் தெரிவித்தது.

அதில் இடம் பெற்ற குறிப்புகள்.

குறிப்பு 1, நான் தமிழன், வேறு நாட்டின் ஒற்றன் அல்ல. தயவு செய்து என்னை உங்களின் பேரரசரிடம் அழைத்துச் செல்லவும்.

குறிப்பு 2, மதிப்பிற்குரிய அரசரே, நான் தமிழன் ஆனால் வேற்று உலகில் இருந்து வந்தவன்…தயவுசெய்து நான் கூறப்போகும் விஷயங்களை ஒரு சில மணித்துளிகள் கேளுங்கள்.

குறிப்பு 3, சக்கரவர்த்தியே, இந்தக் கருவியை நான் என் காதில் பொருத்திக் கொள்வது போல் நீங்களும் தயவுசெய்து பொருத்திக் கொள்ளுங்கள். இதன்பிறகு நான் பேசுவதெல்லாம் உங்களுக்கு தெள்ளத் தெளிவாகப் புரியும். இந்த குறிப்புகள் மூன்றும் ஒலி வடிவிலும் கேட்கும்.

ஏற்கனவே அந்த காலகட்டத்திற்கு நாங்கள் சென்று இருப்பதால் அந்த சமயத்தில் எடுத்த புகைப்படங்களை காண்பித்து அதேபோன்று உடைகளைத் தைத்து பெற்றுக் கொண்டோம். ஒருவிதமான இனம்புரியா மகிழ்ச்சி எனக்குள்… தாய் நாட்டிற்கா இல்லை இல்லை என் இனத்தின் சிகரம் தொட்ட நாட்களுக்கே செல்லப் போகிறேன்.

எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டேன்.. ஒரு முறைக்கு பலமுறை சரி பார்த்துக் கொண்டேன். ஒரே ஒரு குழப்பம் ஊர்தியை நேராக அரண்மனைக்குள்ளே நிறுத்துவதா இல்லை வேறெங்காவது நிறுத்திவிட்டு அரசரைக் காண செல்வதா என்றுதான்…. முடிவெடுத்துவிட்டேன் அரண்மனைக்கு நேராக சென்று இறங்குவது அவ்வளவு சரியான முடிவாக இருக்காது என்று. கிளம்பிவிட்டேன்………

போர்டலில் இருந்து வெளிய வந்தேன் ஆளரவமற்ற ஒரு சிறு குன்று போன்று இருந்த இடத்தில் ஊர்தியை நிற்க வைத்தேன். மறையும் தன்மை பொத்தானை அழுத்தினேன்… இனி ஊர்தி இருக்கும் இடம் யார் கண்களுக்கும் தெரியாது. நானும் மறையக் கூடிய பொத்தானை அழுத்தி கொள்ளலாம்…. ஆனால் அரண்மனைக் காவலர்களின் திறமையையும் சமயோசித புத்தியையும் சிறிது சோதிக்க விரும்பி அப்படியே சென்றேன். நான் முன்பு சென்ற காலக்கட்டத்திற்கு 10 வருடம் முன்பு இது…. மனித உடலுக்கு ஏற்ற அருமையான தட்பவெப்ப நிலை சுமார் 24, 25 டிகிரி செல்சியஸ் இருக்கும்.

அரண்மனை வாயிலுக்கு வந்து நின்றேன்… பிற்காலத்தில் இருந்து என்ன ஒரு வித்தியாசம்…. மதில் சுவர் இல்லாத அரண்மனை… அரண்மனை எல்லைகளாக செடிகள் மட்டுமே…. 2 அரண்மனை நுழைவு வாயில் காவலர்களும் திடகாத்திரமாக கூர்மையான அறிவுடையவர்களாகவும் திகழ்ந்தார்கள். அவர்கள் முன்னே சென்று குறிப்பு ஒன்றின் ஒலியை மட்டும் ஒலிக்கச் செய்தேன்…. அது அன்றைய தமிழ் என்று நினைத்தேன்… அவர்கள் குழம்புவதைப் பார்த்தால் அவ்வளவு சரியாக புரியவில்லை என்று உடனடியாக ஹாலோகிராம் முறையில் உள்ள எழுத்துக்களை ஒளிபரப்பினேன்.. மிகுந்த அதிர்ச்சியும் ஆச்சரியமும் அவர்களின் கண்களில் பார்த்தேன்… நான் கூற வந்ததை புரிந்து கொண்டார்கள், வணக்கத்துடன் என்னை உள்ளே அழைத்துச் சென்றனர். இவ்வளவு எளிதாக அரசரைக்காண எனக்கு அனுமதி கிடைக்கும் என்று நினைத்தும் பார்க்கவில்லை. மிக பிரம்மாண்டமான அரண்மனை… அதைப்பற்றி விவரிக்க இப்போது நேரமில்லை… எந்த சமயத்திலும் அரசரை சந்திக்க அழைப்பார்கள்…. முகப்பில் இருந்த ஒரு பெரிய கூடத்தில் இருந்த இருக்கையில் அமரச் சொன்னார்கள். என்ன இது… அந்த காலத்தில் தங்கத்தை தயக்கமே இல்லாமல் பயன்படுத்தி இருந்தனர்….. நான் அமர்ந்து இருந்த இருக்கை விளிம்புகள் எல்லாம் தங்கத்திலிருந்தது. காத்திருந்த ஒவ்வொரு நொடியும் யுகங்களாக சென்றது, என் இனத்தின் பேரரசனை சந்திக்கப் போகிறேன் இல்லையா? காத்திருத்தலும் கவர்ந்தது!

அந்த நேரமும் வந்தது…. இரு காவலாளிகளுடன் வந்த ஒருவரை பார்க்கும்போதே என்னை எழ வைத்தது.. தீர்க்கதரிசி போன்ற தீர்க்கமான முகம்… என்னை கைகாட்டி அழைத்துச் சென்றார். என் திட்டமிடலின் முழு வெற்றியும் இந்த கணத்தில் தான், முந்தைய பயணத்தில் தூரத்திலிருந்து பார்த்தேனே அவரே இதோ அருகில் அமர்ந்திருக்கிறார்!

இந்த சந்திப்பை உங்களுக்கு விளக்குவதற்கு வார்த்தைகளே எனக்கு கிடைக்கவில்லை.. ஆயிரமாயிரம் அற்புதங்களும் ஆச்சரியங்களும் கலந்த கலவை போல் இருந்தது அந்த கணம்… ஆடை ஆபரணங்களுடன் மிகவும் பிரம்மாண்டமாக இருப்பார் என்று நினைத்தேன்…. ஆனால் நேரெதிர், கட்டுடலுக்கு ஏற்ற ஆடை ஆனால் ஆபரணங்கள் ஏதும் காணோம். அவர் என்னைப் பார்த்த பார்வையிலேயே ‘அனைத்தும் யான் அறிவேன்’ என்று கூறாமல் கூறியது. என்னைப் பார்த்து ஏதோ கூறினார்… எனக்கு புரியவில்லை.. என்னை மறந்து அவரை பார்த்துக் கொண்டிருந்ததால் எடுத்துவந்த குறிப்புகளை மறந்துவிட்டு இப்போது நினைவுக்கு வந்து, குறிப்பு இரண்டை ஒலி ஒளிபரப்பினேன். சுற்றியிருந்தோர் ஆச்சரியத்துடன் பார்க்க…. அவரோ புன்முறுவலுடன் தலையசைத்து கேட்டுக்கொண்டார். அந்த கணத்தில் மூன்றாவது குறிப்பை ஒலி ஒளிபரப்பி என்னுடன் எடுத்துவந்த அந்த காதில் பொருத்திக் கொள்ளக்கூடிய கருவியில் ஒன்றை அவரிடம் கொடுத்தேன்… என்னிடமிருந்த மற்றொன்றை நான் பொருத்திக்கொள்ள அவரும் அவ்வாறே செய்தார். இனி அவர் என்னுடன் பேச போது எல்லோருக்கும் புரிந்தாலும் நான் பேசப்போவது அவருக்கு மட்டுமே புரியும்.

பதட்டமாக இருந்தாலும் நடுக்கமாக இருந்தாலும்…. சுருக்கமாக என்னுடைய பயணத்தை பற்றி கூறினேன்… மிகுந்த அதிர்ச்சியுருவார் என்று நினைத்தேன்… நான்தான் அதிர்ச்சியுற்றேன் அவர் அதிர்ச்சி அடையாதது கண்டு….. சமாளித்துக்கொண்டு அவரை நான் வந்து ஊர்தியை காண அழைத்தேன்.

அவரும் கிளம்பினார்… உடன் வர இருந்த மற்றவர்களை வரவேண்டாம் என்று சைகை செய்துவிட்டு அவர் மட்டும் என்னுடன் வர கிளம்பினார்.. அதிர்ச்சியுற்ற நான் ஊர்தியை காண அழைத்தேனே தவிர உங்களை அங்கே அழைத்துச்செல்ல அல்ல.. நானே ஊர்தியை இங்கே ஓட்டி வருகிறேன் என்றேன். அரண்மனையின் பின் திடலுக்கு வருமாறு கூறினார்… நானும் கிளம்பி சென்று ஊர்தியை திருப்பி அவர் கூறின பின் திடலுக்கு வந்து இறங்கினேன். அங்கு அவரைத்தவிர யாரும் இல்லை… வெகுதொலைவில் கண்காணித்துக் கொண்டு இருப்பார்களோ என்னவோ? நான் நிறுத்திய இடத்திலிருந்து இங்கு வருவதற்கு போர்ட்டலை பயன்படுத்தாமல் சில நிமிடங்களில் பறந்து வந்தேன்… அந்த சில நிமிடங்களில் நான் கண்ட காட்சி கண்கொள்ளாக் காட்சி எவ்வளவு அற்புதமான திட்டமிடல்கள், நேர்த்தியான கட்டட கடற்கரை அமைப்புகள், மிக பிரம்மாண்டமான கப்பல்கள் மக்களின் உறுதிமிக்க ஒழுக்கமான அன்றாட நடவடிக்கைகள்…. சொல்லிக்கொண்டே போகலாம்…. சுருங்கச் சொன்னால் பொற் காலத்திற்கும் மேலது.

பேரரசர் என்னை நோக்கி வரத் துவங்கினார்… நான் பதட்டத்துடன் கதவைத் திறந்து கொண்டு அவரை நோக்கி ஓடாத குறையாக நடந்தேன். அவரை உள்ளே அழைத்து வந்து என் இருக்கையில் அமர செய்தேன். அப்போதுதான் கவனித்தேன், ஆச்சரியம் ஏதும் இல்லாமல் ஒரு புன்முறுவலுடன் என்னை பார்த்ததை.

நான் ஏதேனும் தவறு செய்கிறேனோ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே நான் முன் பயணத்தில் அரைகுறையாக மூழ்கின குமரிக்கண்டத்தின் காணலையே அவருக்கு ஒளியிட்டு காட்டினேன்…. எந்தவித சலனமும் இல்லாமல் அவர் அதைப் பார்த்தார்.. மேலும் ஆயிரம் வருடங்களுக்கு முன் சென்று இவரை நான் தூரத்திலிருந்து கண்டதையும் ஒளிபரப்பினேன். அதையும் கண்டார், கண்டும் முகபாவத்தில் எந்த மாற்றமும் இல்லை… ஏன் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதிக நேரம் என்னைக் காக்க விடாமல், அவரே கேட்டார், ‘ உன்னுடைய பயண நோக்கம் இதன் தொடர்ச்சியை சரிசெய்யவா அப்படி என்றால் உன்னுடைய யோசனை என்ன ‘ என்று. ஒரு நொடி சிலிர்த்து சமாளித்துக்கொண்டு கூறத் துவங்கினேன்…. நான் யோசனை சொல்வதாக தயவு செய்து நினைக்க வேண்டாம், ஏன் நீங்கள் வடக்கு நோக்கி உங்கள் தலைநகரை மாற்றி மக்களையும் அழியப்போகும் கண்டத்திலிருந்து வடபகுதி கண்டத்திற்கு இடம்பெயர கட்டளை இட கூடாது’ என்று வினவினேன். அவர், ‘ சரி அப்படியே செய்யலாம்…. இது காலத்தின் கட்டாயம் என்று உனக்கு மட்டுமே புரியும்… நீ உன் காலத்திற்குச் சென்ற பிறகு அங்கு உனக்கு பெருமகிழ்ச்சி காத்திருக்கிறது’ என்றார். என்ன சொல்கிறார் இவர்? நான் திரும்பி செல்லும் போது என்ன மகிழ்ச்சி காத்திருக்க போகிறது அது எப்படி அவருக்கு தெரியும்… நான் குழம்பினேன். இவரிடம் தோன்றியதெல்லாம் கேட்க கூடிய நிலையில் நான் இல்லை… சரி என்று தலையாட்டிவிட்டு மேலும் ஏதாவது சொல்வாரா என்று காத்திருந்தேன். ‘நீ இன்னும் சில நாட்கள் தங்கியிருந்து சுற்றிப் பார்த்துவிட்டு செல்லலாம்’ என்று என்னைப் பார்த்து கூறிவிட்டு அதோடு எங்களுடைய பேச்சு முடிந்துவிட்டது என்று குறிப்பால் உணர்த்தி விட்டு இருக்கையிலிருந்து எழுந்து வெளியே சென்றார். எதிர் காலத்தில் இருந்து வந்த எனக்கு எல்லாம் தெரிந்திருந்தது என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது அவர் என்னிடம் கூறியதன் மர்மத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. பிறகு அங்கிருந்து குமரிக்கண்டத்தை சுற்றிப் பார்த்த மற்ற மூன்று நாட்களும் என் வாழ்க்கையில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை……

இதோ என் காலத்தை நோக்கி கிளம்பும் நேரம் வந்துவிட்டது…. புறப்பட்டு என் காலத்தை வந்தடைந்தேன்…. வந்தடைந்த அந்த நொடியிலிருந்தே கடல் போன்ற மகிழ்ச்சி எனக்கு காத்திருந்தது…. அவர் என்னிடம் கூறிய அந்த ஒரு சில வரிகளின் அர்த்தம் ஓராயிரம் மடங்கு பெரிதாக இங்கு இருந்தது……

இதற்கு மேலும் உங்களை காக்க வைக்க விரும்பவில்லை…… எல்லாம் தலைகீழாக மாறிவிட்டிருந்தது… எங்கள் காலத்திய இந்த காலத்து ஒட்டுமொத்த உலகத்திற்குமான மொழியாக ‘தமிழாக’ இருந்தது தான் அது. அதுமட்டுமல்ல… திருவள்ளுவர் பிறப்பின் 10 ஆயிரத்து இருநூறு வருடங்களுக்கு முன்பான பேரழிவு நடைபெறாமல் தடுக்கப்பட்டிருந்தது..

அதன் தொடர்ச்சியாக குமரிக்கண்டமும் காப்பாற்றப்பட்டு இன்று இங்கு தாய் கணினி இருக்கும் கட்டிடத்திலிருந்து நான் உங்களுக்கு விளக்கிக் கொண்டிருப்பதே அதை குமரிக்கண்டத்தில் இருந்து தான்!

எல்லாம் விளங்கின எனக்கு இன்னமும் விளங்காமல் இருப்பது அந்த மாமன்னன், பேரரசர், சக்கரவர்த்தி இவைகளில் எந்த அடை மொழிக்கும் பொருந்தாமல் அதற்கு மேல் இருந்த அவர் யார் என்பதே!

bottom of page