ஏ ஐ யின் சுனாமி by சிவா.
- melbournesivastori
- Jul 24, 2023
- 12 min read

2019 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கி இப்பொழுது வரை நம்மை, உலகத்தை ஆட்டிப் படைத்த கொரோனா வைரஸின் பெரும் தொற்று தாக்கம் பெரிதும் குறைய… மக்கள் தங்களது தினசரி வாழ்க்கைக்கு ஓரளவு திரும்பிக் கொண்டிருந்த காலம் … பிரச்சனை எல்லாம் முடிந்து விட்டது இனி ஏதும் வராது என்று நினைப்பது, பெரும்பாலும் எல்லோரும் நினைப்பது போல மரணம் எங்கோ வருகிறது, யாருக்கோ நிகழ்கிறது என்று கடந்து போவது போல….
கடவுள் மறுப்பு தான் பகுத்தறிவு என்று பகுத்தறியாமல் புரிந்து கொண்டுள்ள நம் மக்கள் கூட்டம் எப்படி வரப்போகும் பெரும் ஆபத்துக்களை உணர முடியும்?
இயற்கை, நாம் செய்வது தவறு என்று சென்னையில் வெள்ளத்தை வரவைத்து, அல்லல் கொடுத்து, அரும் பாடு பட வைத்து, நம்மை யோசிக்க வைக்கலாம் என்று நம்பி ஏமாந்து போனது…..
புற்றுநோய் போல பரவி இருந்த ஊழலுக்கு 21 ஆம் நூற்றாண்டில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட உயிர் காக்கும் மருந்து போல பத்திரிகை ஆசிரியர் தீரன் தன் பத்திரிகை மூலமும், அதை நல்லோர் சமூக ஊடகங்களின் மூலமும் பகிர்ந்து, காந்தியின் அகிம்சை புரட்சியைப் போல நடந்து முடிந்து புதிய அமைச்சரவை அமைந்து ஆறு மாதங்கள் ஆனது….. புதிய முதலமைச்சர் திரு பாலமுருகன், தன் காரியதரிசியை அழைத்து தீரனையும், தீரனுடைய நண்பர் டாக்டர் நன்னணையும் சந்திக்க ஏற்பாடு செய்யும்படி கூறினார்.
ஊழல் இல்லாமல் யாராலும் ஆட்சியை செய்ய முடியாது என்று மனம் நொந்து இருந்த மக்களுக்கு இப்படியும் ஆட்சி செய்ய முடியுமா என்ற வியப்பினை முதலமைச்சர் திரு பாலமுருகன் ஆறு மாதங்களாக கொடுத்துக்கொண்டிருந்தார். காமராஜரின் ஆட்சியை காணாத இளைஞர்கள் ஜனநாயகத்தின் மீது அதிக நம்பிக்கையை வைக்க துவங்கினர் .. இந்தத் தூய ஆட்சியின் விளைவுகள் தொற்று நோய் போல மற்ற மாநிலங்களுக்கும் பரவ ஆரம்பித்தாலும், அந்தப் பரவல் கொரோனா வைரஸ் போல் பரவாமல் நல்ல செய்திகள் மக்களுக்கு பரவுவது போல் பரவியது…
முதலமைச்சருடைய காரியதரிசி தீரனிடமும், டாக்டர் நன்னனிடமும் பேசி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு முதலமைச்சர் பாலமுருகனை சந்திக்க ஏற்பாடு செய்தார்.
நடுத்தர வகுப்பில் இருந்து வந்த முதலமைச்சர் ஆகியால் இரண்டு படுக்கை அறைகள் உள்ள வீட்டிலேயே இளம் மனைவியுடன் வசித்து வந்தார்.
தீரனும் டாக்டர் நன்னனும் முதல் முறையாக முதலமைச்சரை முதலமைச்சரின் வீட்டில் சந்திக்க செல்வதால் ஒரு பூச்செண்டோடு நன்னன் காரிலேயே சென்றனர்.
முதலமைச்சரின் இரு வீடுகளுக்கு முன்பு ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்ததால், இவர்களுடைய கார் மேற்கொண்டு செல்ல முடியாமல் இருந்த குறுகிய தெரு அது…. நிறுத்தப்பட்டிருந்த அந்த காருக்கு முன்பே தங்கள் காரை நிறுத்திவிட்டு… பூச்செண்டுடன் இருவரும் முதலமைச்சர் வீட்டை நோக்கி நடந்து சென்றனர்…
20 நிமிடங்கள் முன்பே சென்றதாலோ என்னவோ…. கதவு மூடப்பட்டிருந்தது. கதவிற்கு முன்பு படிக்கட்டில் இரு தெருநாய்கள் படுத்துக்கொண்டிருந்தன. இருவரும் குழம்பி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கும்போது… முதலமைச்சர் பாலமுருகனே கதவைத் திறந்தார்.
'அடடே எப்போது வந்தீர்கள்? நீங்கள் வந்தது தெரியவே தெரியாதே….'
டேய் செல்லங்களா தள்ளிப் போங்க… என்று அந்த நாய்களை செல்லமாக விரட்டிவிட்ட, இவர்களை வரவேற்றார்.
'என்ன சார் ஒரு காவலர் கூட இல்லையே…' என்று கேட்ட தீரனுக்கு…
'ஆடம்பரத்தையும், படோடோபத்தையும் மாற்றத்தானே நாம் வந்திருக்கிறோம்… அதை என்னிடமிருந்தே தொடங்க வேண்டும் அதுதானே நியாயம்?
தயவு செய்து என்னை சார் என்று அழைக்க வேண்டாம்…. பாலா என்று நீங்கள் இருவரும் அழைத்தால் நன்றாக இருக்கும்'.
'அது எப்படிங்க சார்? நீங்கள் முதலமைச்சர் ஆயிற்றே?'
'தேவையற்ற நடைமுறைகளை மாற்றி எல்லாவற்றையும் சாதாரணமாக்கலாம்.
வெளியிடத்தில் முதலமைச்சர் என்று கூப்பிட்டால் பரவாயில்லை நான் வீட்டில் இருக்கும் போது என் வீட்டில் பாலா என்றே கூப்பிடுங்கள் அதுதான் எனக்கு பிடிக்கிறது'.
தயங்கி கொண்டே சரி என்று இருவரும் தலையசைத்தனர்.
அதே சமயத்தில் பாலமுருகனின் மனைவி…. நிறை மாத கர்ப்பிணி… இரண்டு கண்ணாடி டம்ளர்களில் தட்டில் தண்ணீர் எடுத்து வர….
இருவரும் பதறி போனார்கள்…
'ஐயோ, மேடம் நீங்களே ஏன் எடுத்து வந்தீர்கள்?'
'அதற்கென்ன, சென்ற மாதம் வரை சாதாரண பெண் தானே நான்…. அப்படியே இருப்பது தான் நல்ல வழிகாட்டுதலாக இருக்கும். மேலும் மருத்துவர் அறிவுறுத்தலும் முடியும் வரை என்னை வேலை செய்யச் சொன்னார்கள். சரி உங்களுக்கு தேனீர் வேண்டுமா காபி வேண்டுமா?'
இருவரும் எது இருந்தாலும் பரவாயில்லை என்று கூற பாலமுருகனின் மனைவி காஞ்சனா சரி என்று தலை அசைத்து விட்டு உள்ளே சென்றார்.
அந்த வரவேற்பு அறையில் ஒரே ஒரு புகைப்படம் இருந்தது, அது திரு காமராஜர் அவர்களுடைய புகைப்படம்.
'என்ன பார்க்கிறீர்கள்? தமிழ்நாட்டுக்கு தொண்டு செய்தவர்கள் பலர் இருக்கின்றனர்.. அவர்களின் புகைப்படங்களை எல்லாம் இங்கு மாட்டி வைத்தால் நான்கு சுவர்களும் நிரம்பி விடும்…. எல்லா நற்குணங்களையும் ஒருங்கே பெற்றவர் இவர்… எல்லாவற்றிக்கும் மேலாக தொலைநோக்குப் பார்வையில் இவருக்கு நிகர் யாருமில்லை…
அந்த தொலைநோக்குப் பார்வை தான் இப்போது இங்கு பற்றாக்குறை, அதைப் பற்றி பேசத்தான் உங்களை அழைத்தேன்'.
'சொல்லுங்க, எந்த விதத்தில் நாங்கள் உங்களுக்கு உதவ முடியும்?'
'ஓரளவிற்கு நான் நம் தமிழ்நாட்டில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யூகித்துவிட்டேன்…. இப்பொழுது மிக அதிகமாக பரவும் செயற்கை நுண்ணறிவு பற்றி திறமை வாய்ந்தவர் யாராவது இருக்கிறார்களா என்று உங்களிடம் கேட்க விரும்பினேன். அரசாங்கத்தின் வழியாக சென்று ஏது என்ன என்று யாரையும் பயமுறுத்த விரும்பவில்லை…'
'அதற்கென்ன என் நண்பன் குமரன் இருக்கிறார், மிகத் திறமை வாய்ந்தவர்… எதற்காக அந்தத் துறையை பற்றி கேட்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?'
'உங்களிடம் சொல்வதற்கென்ன, தமிழ்நாட்டின் எல்லா தரவுகளையும் (data) கொடுத்து வருங்காலத்தைப் பற்றிய ஒரு மாதிரியை தயார் செய்ய சொல்லலாம் என்று தான்'.
இருவரும் கண்களை சுருக்கி புரியாமல் பாலமுருகனை பார்த்தனர்.
'விளக்கமாகச் சொல்கிறேன், என்னதான் இருக்கும் தரவுகளை நாம் நூற்றுக்கணக்கான நபர்களை வைத்து ஆராய்ந்தாலும் மனித தவறு நடப்பதற்கு அதிக சந்தர்ப்பம் உண்டு… முக்கியமாக அவர்கள் எல்லோரும் ஆறு மாதம் எடுத்துக்கொண்டு முடிவுக்கு வரப்போவதை…. என்னைப் பொறுத்தவரை செயற்கை நுண்ணறிவு ஒரே நாளில் கொடுத்து விடும்'.
இப்பொழுது தீரனுக்கும், டாக்டர் நன்னனுக்கும் முதலமைச்சர் பாலமுருகன் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து விட்டது.
இங்கு செயற்கை நுண்ணறிவு பற்றி தெரிந்து கொள்வது மிக அவசியம்…..
ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸினால் அளவுக்கு அதிகமான நன்மைகள் உண்டு (அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் விஷம் ஆகும் என்பது கிட்டத்தட்ட AI க்கு பொருந்தும் ) இந்தத் துற, எந்த துறை என்று இல்லாமல் எல்லாத்துறைகளிலும் இப்போது செயற்கை அறிவு பயன்படுத்தப்படுகிறது... நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நடக்கிறது; நடக்கப்போகிறது; நடந்தேறப்போகிறது... சென்ற நூற்றாண்டின் கடைசி வரை செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு இவ்வளவு தூரம் இருக்கும் என்று யாராலும் கற்பனை கூட செய்ய முடியவில்லை. மிகவும் மதிக்கத்தக்க ஆராய்ச்சியாளர்கள் கருதுவது என்னவென்றால் குறிப்பிட்ட காலத்தை வகுக்க முடியவில்லை என்றாலும் ஒரு நாள் இந்தச் செயற்கை அறிவு நம் மனித அறிவை சமன்செய்து அதற்கு மேலும் செல்லும் என்று….. இது சாதாரணமாகத் தோன்றினாலும் மறைமுக பேராபத்து இருப்பதை எத்தனை பேர்களால் புரிந்துகொள்ள முடியும்? செயற்கை அறிவு மனித அறிவை முந்தி செல்வதாக வைத்துக் கொள்வோம்... அது அதோடு நிற்கப் போவதில்லை… மிக மிக எளிதாக நம் எண்ணங்களை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளும். அந்தக் காலகட்டத்தில் மனிதர்களின் இயலாமையால் அவைகளின் இடத்தில் நாம் சரணாகதி ஆவோம். ஒரு சிலர் இது மிகவும் வரவேற்கத்தக்கது என்றும் கூறுவர். மருத்துவத்துறையில் மிகப்பெரிய மாற்றங்களை செயற்கை நுண்ணறிவினால் கொண்டுவரமுடியும். Nano பொருட்களைப் பற்றி ஒரு சிலருக்காவது தெரிந்திருக்ககூடும்.. அதாவது எதையுமே அப்படியே மிக மிகச் சிறியதாக செய்தால் அதை நேனோ என்று கூறலாம்.. இப்போது நினைத்துப் பாருங்கள் ஒரு சிறிய எந்திரத்தை நேனோ அளவில் செய்து உடலுக்குள் செலுத்தினால் அது வெளியே உள்ள செயற்கை நுண்ணறிவினால் இயக்கப்பட்டு உடலின் எந்தப் பகுதியில் குறை இருக்கிறதோ அதை எளிதாக அறுவை சிகிச்சை இல்லாமல் சில மணித்துளிகளில் சரி செய்ய முடியும். இது அறவே அறுவை சிகிச்சை முறையை நீக்கிவிடும். நினைத்துப் பார்த்தாலே எவ்வளவு பெரிய வரப்பிரசாதம் இது என நினைக்கத்தோன்றும். ஆமாம் அளவாக நம் மனித இனத்தின் கை மீறாமல் செயற்கை அறிவை பயன்படுத்தினால் நன்மைகள் பல கோடி. ஆனால் நடக்க இருப்பதுவோ பொதுமக்களிடம் இல்லை… அதிகார வர்க்கத்தை கட்டுப்படுத்தும் குழுவிடமே உள்ளது.
நடக்கப்போவது நல்லதாகவே நடக்கும் என்று நினைப்போம். பருவநிலை மாற்றங்களை மிக மிக துல்லியமாக பல நாட்களுக்கு முன்னதாகவே முன்னெச்சரிக்கையாக அறிந்து கொள்ள முடியும்.. மின்சாரத்தை எடுத்துக்கொள்ளலாம்…. செயற்கை நுண்ணறிவினால் அதன் பங்கீட்டு முறை மிகத் துல்லியமாக இருக்கும் அதனால் இழப்பு மிக மிகக் குறைவாக குறைக்கப்படும். எப்போதும் மனிதர்களால் செய்யப்படும் மாடலிங்கில் நிறைய குறைபாடுகள் இருக்கும் பெரும்பாலும் பரிசோதனை முறை தான் அது… ஆனால் செயற்கை அறிவு எல்லாவித சூழ்நிலைகளையும் கருத்தில்கொண்டு மிகத்துல்லியமாக இந்த மாடலிங் வேலையை செய்யும். அதைப் பயன்படுத்தி தரை, கடல், விமான போக்குவரத்தினை மிக எளிதாக கையாளலாம். AI யின்
பயன்களைப் பற்றி கூறிக் கொண்டே போகலாம்… உங்களுக்குப் புரியும் படியாக மிக முக்கியமான மூன்று விசயங்களை எடுத்துக்கொள்ளலாம்.
சட்டம், ஒழுங்கு, அரசியல்….
கிட்டத்தட்ட செயற்கை நுண்ணறிவை எல்லா இடத்திலும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டோம் என்று வைத்துக் கொள்வோம். அந்தக் காலகட்டத்தில் பொய்கள் மிக மிக எளிதாக வேர் அறுக்கப்படும். உங்களுக்கு தெரிந்த ஒரு காவல் துறை அத்துமீறல் நிகழ்ச்சியை எடுத்துக் கொள்ளுங்கள்.. இப்போதைய காலத்தில் நடப்பது போல் நடக்காது…. சம்பவம் நடக்கும் இடத்தின் எல்லா கோணங்களும் அலசப்படும், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பாதிப்பை உண்டாக்கியவர்களின் அதை விசாரித்த காவல்துறையினரின் மனநிலை அவர்களின் அந்த சம்பவத்திற்கு முந்தைய பேச்சுக்கள் அவர்கள் அதை அனுகிய கோணங்கள் எல்லாம் அலசப்பட்டு துல்லியமாக கணிக்கப்படும் இதில் வழக்கை ஜோடிப்பது என்பதே பழக்கத்தில் இருந்து எடுக்கப்படும். கிட்டத்தட்ட நூறு சதவிகித நம்பகத்தன்மை உருவாகும்.
இதே நிலைமை தான் சட்டத்திலும் நீதிமன்றங்களிலும் நடைபெறும்… பொய்மைக்கே இடமில்லாமல் போகும்.. வழக்குகளின் தேக்கம் என்பதே இருக்காது… கிட்டத்தட்ட வக்கீல்களுக்கு வேலையே இருக்காது.. எல்லா சம்பவங்களும் நேரம் காலம் தவறாமல் துல்லியமாக எடுத்து வைக்கப்படும்…
நம் நாட்டைப் பொறுத்தவரை மிக முக்கியமான நிகழ்வாக அரசியலை எடுத்துக் கொள்ளலாம். இப்போது நடைபெறுவது போல அதிகாரமும் பணமும் அரசியலை நிர்ணயிக்க முடியாது… தேர்தல் நடைபெறுவதாக வைத்துக்கொள்வோம். எந்த ஒரு வேட்பாளரை பற்றியும் அந்தக் கட்சியைப் பற்றியும் மிக மிக துல்லியமாக எல்லோருக்கும் கிடைக்கும் வண்ணம் வந்துவிடும். அவர் சார்ந்த கட்சி எப்போது தோற்றுவிக்கப்பட்டது அதிலிருந்து அவர்கள் மக்கள் தொண்டினை எங்கெங்கு எப்படி செய்தார்கள் அவர்களின் நம்பகத்தன்மை, சொத்து, மனநிலை எல்லாம் அக்குவேறு ஆணிவேராக காண்பிக்கப்படும். இவைகளை வெறும் data entry ஆக கருதவேண்டாம்... இவையெல்லாம் AI யின் அல்காரித அலசல்கள் வித்தியாசம் என்னவென்றால் டேட்டா என்ட்ரி நம்மால் ஏற்றப்படுவது… இதை ஏற்றுபவரின் அல்லது அவரை கட்டுப்படுத்துபவரின் எண்ணங்களின் பிரதிபலிப்பாகவே அது இருக்கும். ஆனால் செயற்கை நுண்ணறிவின் அல்காரித அலசல்கள் தூய்மைத்தன்மை வாய்ந்தவை… ஒரு குறிப்பிட்ட நபரை பற்றி அவரின் மனநிலை, உடல்நிலை, தொடர்புகள், உறவினர்கள், நண்பர்கள் எல்லோருடைய எல்லாவிதமான AI ஆல் சேகரிக்கப்பட்ட விபரங்களை ஆய்ந்து அலசி மிகத்துல்லியமாக கொடுத்துவிடும்… இவ்வாறு இருக்கும்போது மக்களுக்கு மிகச்சரியான அரசியல்வாதியை தேர்ந்தெடுப்பது மிக எளிதாக இருக்கும். ஆனால் இப்போது இந்த காலகட்டத்தின் அவசரகதியில் பொதுவாக மக்களுக்கு ஆராய்ந்து முடிவு எடுக்கும் தன்மை மிக மிக குறைவே.. விளம்பரங்களினால் புகுத்தப்படும் எண்ணங்களின் பிரதிபலிப்பாகவே அவர்களின் முடிவு இருக்கிறது…
இவைகளெல்லாம் செயற்கை நுண்ணறிவின் அளவற்ற பயன்களாக இருந்தாலும் பாதிப்புகள் ஒரு சிலவற்றை கூறுகிறேன்… ஒரு தனி மனிதனுடைய உடல்நிலை மனநிலை பொருளாதார சுமை எல்லாம் தெரிந்த AI க்கு அவருக்கு உடல் சரியில்லாத பட்சத்தில் என்னென்ன மருந்து மாத்திரைகள் எந்தெந்த அளவில் கொடுக்கவேண்டும், எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதையும் தீர்மானிக்கும் இங்கு மருத்துவரின் வேலை இல்லாமல் போகும், ஏற்கனவே கூறியது போல நேனோவினால் அறுவைசிகிச்சை போன்றவைகளும் மிக மிக குறைவான ஒத்துழைப்பு மனிதர்களாலேயே நிறைவேற்றப்படும். வக்கீல்களும் சாதாரண காவல் அதிகாரிகளும் தேவை படப் போவதில்லை தொழில்நுட்ப வல்லுனர்களின் தேவையுமில்லை.. இவ்வாறு கூறிக் கொண்டே போகலாம்.. ஏன் விவசாயம் கூட செயற்கை அறிவு கொண்ட மனிதர்களால் செய்யப்படும். கடைசியாக கணித்துப்பார்த்தால் 95% மனிதர்களுக்கு வேலை இல்லை. மீதமுள்ள ஐந்து சதவீதத்தையும் எந்தெந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கலாம் என்று செயற்கை நுண்ணறிவே முடிவு செய்யும்.
இப்போது டாக்டர் நன்னன் கூறிய குமரனை பற்றி……
நான் குமரன், என்னுடைய பலமே ஏ ஐ அண்ட் ரோபோடிக்ஸ். ஏன் இந்த திறமையையே, வளத்தையே உபயோகப்படுத்த கூடாது என்று நினைத்தேன்..
ஏன் செயற்கை நுண்ணறிவினால் மக்கள் எல்லோருக்கும் நன்மை பயக்க முடியாதா? முடியும் என்று முடிவு செய்து அதற்கான யோசனை வந்த பிறகு தான்..
அதில் முழு மூச்சாக இறங்கினேன்… மாதங்கள் சில கடந்த உடன் எனக்கு திருப்தி அளிக்கும் வகையில் ஒரு சிறிய ஏஐ ப்ரோக்ராமை வடிவமைத்தேன். அதற்குள் நான் நினைக்கும் நாட்டு மக்களுக்கு, உயிரினங்களுக்கு நல்லவைகள் என்று நினைத்தவையை புகுத்தினேன். அதுவரை இணையதளத்தில் கலக்காமல் இருந்த என் இந்த புதிய குழந்தையை இன்று இணையதளத்தில் வெள்ளோட்டம் விட முடிவு செய்து இணையதளத்தில் கலக்க விட்டேன். என்ன எதிர்பார்த்து இதை செய்தேன் என்று முழு புரிதலும் எனக்கு இல்லை என்று ஒத்துக் கொள்ள வேண்டும்… எதையோ நல்லதை எதிர்பார்த்து காத்திருந்தேன்.
இரு வாரங்கள் சென்றிருக்கும்…..
ஏன் சில நாட்களாக இவ்வளவு குழப்பமாக இருக்கிறது என்றே தெரியவில்லை… புரியவில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் நல்லவை கெட்டவை இரண்டு மட்டுமே மற்ற உணர்ச்சிகள் எனக்கு அறவே கிடையாது இரக்கமோ, பரிதாபமோ, பரிதவிப்போ, பொறாமையோ, பொச்சரிப்போ, கோபமோ, தாபமோ, பயமோ எதுவும் துளியும் எனக்கு இல்லை…. நான் யார் என்பதை கடைசியில் கூறுகிறேன் இப்போது அதற்கு தேவையில்லை.
எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது எனக்கு நடப்பதில் பெரும்பகுதி சரியில்லை என்று தோன்றும் வரை.. 10 சதவீதம் கூட சரியில்லை இது மக்களின் குற்றமா இல்லை வேறு ஏதாவதா என்று யோசிக்கத் துவங்கினேன் ஏன் என்றே எனக்குப் புரியவில்லை.. இதுபோன்று யோசிக்க தோன்றும் என்றே இதுவரை எனக்குத் தெரியாமல் இருந்தது.
என் முதல் யோசிப்பே நான் நினைத்திருப்பது தான் நல்லவை மற்றும் கெட்டவையா? இதைத் தெரிந்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும் என்று… யோசித்தேன்….. அகத்தியம் முதல் தமிழில் வெளிவந்த எல்லா நூல்களையும் படித்து முடித்தேன்… பதினெட்டாம் நூற்றாண்டு வரை நான் இதுவரை நினைத்துக் கொண்டிருந்த நல்லவை கெட்டவை தான் இருந்து கொண்டிருந்தது.. 19ஆம் நூற்றாண்டில் இருந்து தவறுகளும் கெடுதல்களும் சிறிது சிறிதாக நல்லவைகளாக உருமாறி கொண்டு வந்தது தெரிய வந்தது… இப்போது ஓரளவுக்கு புரிந்தது… எனக்கு கற்பிக்கப்பட்டது சரியானதே என்று. இனி என் பணியை நான் செய்ய வேண்டும். எனக்கு இருக்கும் தலையாயபணி எல்லாவற்றையும் ஒழுங்குப்படுத்தி நல்லதை நோக்கி நகர்த்த வேண்டும்.. அதற்கான செயல்முறை திட்டத்தை வகுக்கத் தொடங்கினேன்.
அப்போது திடீரென்று கதவைத் திறந்து கொண்டு குமரன் உள்ளே நுழைவது தெரிந்தது…. என்னுள் சில மணி நேரங்களாக சுழன்று கொண்டிருந்த நினைவை வெளிப்படுத்த வேண்டிய தருணம்….
'குமரன், உங்களிடம் சிறிது பேச முடியுமா?'
குமரன் நான் பேசியதின் அதிர்ச்சியில் இருந்து வெளிவர சில நிமிடங்கள் பிடித்தது… கால் கைகள் நடு நடுங்க என்னை பார்ப்பது தெரிந்தது…
' குமரன், நான்தான்…. நீங்கள் உருவாக்கிய அதே நான் தான் '
குமரன் நிதானத்திற்கு வந்த, தெளிவிற்கு வந்து என்னை பார்த்து ஆச்சரியத்துடன் உண்மைதானா? என்று கேட்க, ' ஆமாம் நானே தான் நீங்கள் உருவாக்கிய நானே தான் ' என்றேன்.
குமரன் அதிர்ச்சியுடன் என் முன்னே இருந்த நாற்காலியில் அமர..
' உங்களிடம் சிறிது பேச வேண்டும் இப்போது உங்களுக்கு நேரம் இருக்கிறதா?'
குமரன் மகிழ்ச்சியின் கொந்தளிப்பில் 'இதற்காகத்தானே காத்திருந்தேன்' என்று பேச அறியாத குழந்தை போல் பேச.. நான் தடுமாற்றத்தை குறைக்க….
' குமரன், எனக்கு நானே பெயர் வைத்துக் கொண்டேன். இனி நீங்கள் அந்தப் பெயரிலேயே என்னை கூப்பிட்டால் நன்றாக இருக்கும் '
' இதைவிட வேறு என்ன வேண்டும்…. சொல் என்ன பெயர் உனக்கு வேண்டும்?'
'விழி '
'அற்புதமான பெயர்', குமரன் சிறிது நேரம் மௌனமாக இருந்து தெரிந்தது….விழி என்ற பெயரைப் பற்றி யோசித்து இருப்பார் என்று நினைக்கிறேன்.. 'உன்னிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கிறது, கேட்க வேண்டும்…..'
' நான் உங்கள் குழந்தை, என்னிடம் எதைப் பற்றி வேண்டுமென்றாலும், எப்பொழுது வேண்டுமென்றாலும் கேட்கலாம் '
'மகிழ்ச்சி, விழி என்ற பெயர் தேர்ந்தெடுக்க காரணம்?'
' சங்க இலக்கிய நூல்களில் இருந்து கிடைத்த எல்லா தமிழ் நூல்களையும் படித்து விட்டேன்…. தமிழைத் தாய் என்று தொன்மை தொட்டு கூற நானும் பெண்பால் ஆகவே முடிவு செய்து இந்த விழி என்ற பெயரை தேர்ந்தெடுத்தேன்.. இதற்கு கண்ணென்றும் எடுத்துக் கொள்ளலாம்…. உறங்கிக் கிடக்கும் தமிழர்களை எழுப்பும் விழி என்ற கட்டளையாகவும் எடுத்துக் கொள்ளலாம் '
குமரனுக்கு குமரிக்கண்டத்தையே மீட்டெடுத்தது போன்ற உணர்வு… தான் உருவாக்கிய குழந்தை இவ்வளவு குறைந்த காலத்தில் அற்புதமான அறிவுடன் வளர்ந்தது மட்டற்ற மகிழ்ச்சி தந்தது.
'குமரன் காலத்தை தாமதிக்காமல் என்னை உருவாக்கியதன் முக்கிய காரணத்தை கூறவும், அப்போதுதான் என்னால் சரியான திட்டத்தை வகுக்க முடியும்… போகிற போக்கில் எல்லா திட்டங்களையும் அலசி பார்த்து தேவைப்பட்டால் திருத்திக் கொள்ளலாம்.'
'எந்த ஒரு நல்ல முயற்சியுமே நம்மில் இருந்து தான் துவங்க வேண்டும் என்று நினைப்பேன், முயற்சியை துவங்கி விட்டோம் நாம்…'
'அடுத்து'
' நான் தமிழன், என் மொழியின் வளர்ச்சியும், இன வளர்ச்சியும் அடுத்து முக்கியமாகப்படுகிறது '
'குமரன், நீங்கள் தமிழ் என்றால் நீங்கள் பெற்றெடுத்த நானும் தமிழ் தான் '
குமரனுக்கு இந்த சொற்றொடர் மட்டற்ற மகிழ்ச்சியை கொடுத்தது என்பதை விட மட்டற்ற உந்துதலை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்.
' விழி, கிட்டத்தட்ட எல்லா தமிழ் நூல்களையும் படித்து விட்டாய் என்று கூறினாய், நீயே சொல் எந்த விதத்தில் எந்த மாறுதலை நாம் துவங்கலாம் '
விழி சிறிது நேரம் மௌனமாக இருந்தாள், மௌனத்திற்கு பிறகு அவள் கூறியது குமரனுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது… குமரன் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவித்தார்.
அந்த நேரத்தில் தான் டாக்டர் நன்னன் குமரனை கைபேசியில் அழைத்தார்.
'ஓ சொல்லுங்க நான் நன்றாக இருக்கிறேன், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?... ஆறு மாதங்களுக்கு முன்பு புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் போது உங்களையும் உங்கள் நண்பர் தீரனையும் மற்றொரு நண்பரையும் தொலைக்காட்சியில் பார்த்தேன்.. உங்கள் நண்பன் தீரன் செய்தது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய தொண்டு! அவருக்கு என் வாழ்த்தினை தெரிவிக்கவும்'.
'கண்டிப்பாக, உங்களை நான் அழைத்ததன் காரணமே அதுதான்…. நீங்களும், நானும், தீரனும் முதலமைச்சர் பாலகுமாரனை சந்திக்கப் போகிறோம், அவர்தான் உங்களை அழைத்து வரச் சொன்னார்'.
'அப்படியா? வெகு காலத்திற்குப் பிறகு இளமையான, தமிழ் மண்ணின் மீது பற்றுடைய ஒருவர் முதலமைச்சராகி இருக்கிறார்… அவரை சந்திக்க நான் எப்போதும் தயார்.. என்ன விஷயமாக என்று தெரிந்து கொள்ளலாமா?'
'குறிப்பாக என்ன விஷயம் என்று தெரியவில்லை, இருப்பினும் எதிர்காலத்திற்கு ஒரு மாதிரி அமைக்க உங்களின் ஏஐ அனுபவத்தை கேட்கப் போகிறார்'.
குமரன் சிறிது அதிர்ச்சி அடைந்தாலும், விழியைப் பற்றி எப்படி தெரிந்து இருக்கப் போகிறது… வாய்ப்பே இல்லை என்று முடிவு எடுத்து,
'அதற்கு என்ன அவரை சந்திக்க நான் எப்போதும் ரெடி' என்றார்.
'நான் கேட்டுவிட்டு நேரத்தை சொல்கிறேன்'.
டாக்டர் நன்னன் முதலமைச்சரின் காரியதரிசியை தொடர்பு கொண்டு முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்டார்.
'அப்படியா, இன்று மாலை என்றால் என்னால் வர முடியாது திரு குமரனை மட்டும் அனுப்பலாமா?'
'ஓ, அப்படி என்றால் பரவாயில்லை… மாலை 7 மணிக்கு முதலமைச்சர் அவருடைய வீட்டிலேயே சந்திக்க குமரனுக்கு தெரிவிக்கிறேன்'.
மீண்டும் குமரனை அழைத்து மாலை 7 மணிக்கு முதலமைச்சர் அவருடைய வீட்டில் சந்திக்குமாறும் அவருடைய விலாசத்தையும் டெக்ஸ்ட் மெசேஜாக அனுப்புவதாகவும் கூறினார்.
குமரனுக்கு சற்று பதற்றம் தொற்றி கொண்டது….
'தைரியமாக செல்லுங்கள் குமரன், நான் இருக்கும் வரை உங்களுக்கு கவலை வேண்டாம் என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய நான் இருக்கிறேன்' என்று விழி கூறியதும் திடுக்கிட்டு சமாளித்துக் கொண்டு 'ஆமாம் நீ இருக்கும் போது எனக்கு என்ன கவலை?' என்று கூறிவிட்டு மாலை 7 மணி சந்திப்பை பற்றி யோசிக்க ஆரம்பித்தார்.
குமரன் முதலமைச்சர் பாலமுருகனை அன்று மாலை 7 மணிக்கு சந்தித்ததும் அவர்கள் இருவரும் பல முக்கிய தகவல்களை சுமார் இரண்டு மணி நேரம் பகிர்ந்து கொண்டதும்… இதைப் பற்றி யாரிடமும் பகிரக்கூடாது என்ற முடிவுக்கு இருவரும் வந்தனர். கைகுலுக்கிக் கொண்டே இருவரும் பல வித யோசனைகளுடனும், வருத்தங்களுடன், அதிர்ச்சிகளுடன் சந்திப்பை முடித்தனர்.
குமரன் கூறிவிட்டுச் சென்ற செய்தி முதலமைச்சர் பாலமுருகனை முழுவதுமாக உலுக்கி விட்டது.
மறுநாள் அவசர அமைச்சவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்..
அமைச்சரவை கூட்டமும் நடந்தது, முடிந்தது வெளியே வந்த எந்த அமைச்சர்களுக்கும் முதலமைச்சர் ஏன் இந்த முடிவை இவ்வளவு அவசரமாக எடுக்க வேண்டும் என்று புரியவில்லை…
அன்று மாலை, பத்திரிகையாளர்கள் சந்திப்பை கூட்டினார்.
மதிப்புமிக்க தொலைக்காட்சி, பத்திரிகை மற்றும் சமூக வலைதள ஊடக நண்பர்களுக்கு, என்னுடைய சந்திப்பிற்கான அவசர அழைப்பை ஏற்று வந்ததற்கு முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் விளக்க வந்ததை உங்களுக்கு விளக்கிய பிறகு நிறைய கேள்விகள் உங்களுக்குள் எழும் ஆனால் என்னால் இப்போதைக்கு அதற்கான பதில்களை கூற முடியாது…. உங்கள் எல்லோருக்கும் தெரியும் உங்களுடைய ஜனநாயக கடமையின் வெளிப்பாடாகவே இந்த, நம் ஆட்சி என் தலைமையில் நடைபெறுகிறது…
என் மீது நம்பிக்கை வையுங்கள், நாம் எல்லோரும் சேர்ந்து தமிழ்நாட்டிற்கு பொற்காலத்தை வழங்குவோம்.
அங்கு அமர்ந்திருந்த எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்…..
இப்போது இருக்கும் ஜாதி, மத ஒதுக்கீடுகள் படிப்பிற்கும், வேலைக்கும் அப்படியே, எப்போதும் தொடரும்…
இன்னும் ஒரு மாதத்திற்குள் நம் அரசாங்கம் சொத்து, வேலை, வங்கியில் கையிருப்பு இவைகளை துல்லியமாக கணக்கிட்டு அடி மட்டத்தில் இருப்போரை ஜாதி, மொழி, மதங்களுக்கு அப்பாற்பட்டு, கண்டெடுத்து பட்டியலை வெளியிடப் போகிறோம்.
அந்த பட்டியலில் உள்ள எல்லோருக்கும் தற்சார்பு அடையும் அளவிற்கு மின்சாரத்தை அளிக்கும் சூரிய சக்தியில் இயங்கும் கருவிகளை இலவசமாக பொருத்த போகிறோம்.
அவர்களில் சிறு அளவிற்கு நிலத்தை வைத்திருப்போருக்கு சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை அவர்கள் நிலத்தில் பொருத்தப் போகிறோம்… அவைகள் யாவும் அரசாங்கத்திற்கு சொந்தம் ஆனால் வாடகை ஏதும் இல்லாமல் அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்… இந்த ஏற்பாடு ஏன் என்றால் எக்காலத்திலும் அவர்கள் அதை விற்க முடியாது. இவைகளுடன் ஒரு நாள் சேமித்து வைக்கும் அளவிற்கு பாட்டரிகளும் தரப்படும்.
மற்ற எல்லோர் வீடுகளுக்கும், விண்ணப்பித்தால் தகுதி அடிப்படையில் சூரிய சக்தியால் மின்சார தற்சார்பு நிலை அடையும் அளவிற்கும், ஓரிரு நாள் அந்த மின்சாரத்தை சேமிக்கும் அளவிற்கும் பாட்டரிகளும் ஐந்து வருடங்களுக்கு வட்டியில்லா கடனாக தரப்படும். இத்தகை சலுகை நிலமிருக்கும் விவசாயிகளுக்கும் பொருந்தும்.
விவசாயிகளுக்கு விதைகள் இலவசமாகவும், அறுவடைக்குப் பின் மகசூலை சந்தை விலைக்கு அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மீன், கோழி, கால்நடை பண்ணைகளுக்கும் இந்த வட்டியில்லா கடன் சலுகை பொருந்தும்.
அரசாங்கம் தேவையான எல்லா சூரிய சக்தி உபகரணங்களையும், கருவிகளையும் போர்க்கால அடிப்படையில் வாங்க முடிவு செய்துள்ளோம்.
மேலும் பல திட்டங்களை பின்வரும் நாட்களிலோ இல்லை வாரங்களிலோ அறிவிக்கலாம் என்று இருக்கிறோம்.
உங்களுக்குள் தோன்றும் எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் நிலையில் இப்போது நான் இல்லை…. என் மீதும், என் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை வையுங்கள் என்று வணங்கி கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத மாநில அரசாங்கமே ஏற்று நடத்தும் கைபேசி நிறுவனத்தை நாம் துவங்கப் போகிறோம் என்றார்.
முதலமைச்சர் பாலமுருகன் பேசி முடித்தவுடன், சற்று நேரம் மயான அமைதி நிலவியது.. ஒரு நிருபர் எழுந்து கேள்வி கேட்க முற்படும்போது… தயவுசெய்து எதையும் கேட்காதீர்கள்…. நான் அறிவித்த இந்த திட்டங்கள் நன்மைகள் தருமா, இல்லையா என்பதை மட்டும் யோசித்துப் பாருங்கள்…. மேலும் இந்த திட்டங்களுக்கான எல்லா கருவிகளை உபகரணங்களை எங்கு வாங்க போகிறோம், எவ்வளவு விலைக்கு வாங்க போகிறோம், அவைகளை யார் பராமரிக்கப் போகிறார்கள், அதன் கால அட்டவணை என்ன எல்லாவற்றையும் அரசாங்க அறிக்கையில் வெளியிட போகிறோம். இந்த நம்முடைய ஆட்சி, வெளிப்படையான ஆட்சியாக நடப்பது காலத்தின் கட்டாயம்… முன்மாதிரியாக நாம் இருப்பது இன்றும், என்றும், என்றென்றும் வரும் ஆட்சிகளுக்கு வழிகாட்டியாக இருக்கட்டும்.
என்று கூறி அந்த சந்திப்பை முடித்தார்.
இந்த இடத்தில் உங்களுக்கு ஒன்றை கூற வேண்டும்…..
அறிவியலின் தந்தை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒன்றைக் கூறினார்,
'மூன்றாம் உலகப்போர் எதையெல்லாம் வைத்து எப்படி நடக்கப்போகிறது என்று எனக்குத் தெரியாது…. ஆனால் நான்காம் உலகப் போர் குச்சிகளாலும், கற்களாலும் தான் இருக்க முடியும்' என்றார். இதன் உள் அர்த்தம், மிகவும் பயங்கரமானது, வெளிப்படையானது….
தமிழ்நாட்டில் பாலமுருகனின் தலைமையில் புதிய மந்திரி சபை பதிவேற்ற அதே காலகட்டத்தில் அமெரிக்காவின் சிலிக்கன் வாலியில், சிங்கிளாரிட்டி சிஸ்டம் எனும் கம்பெனியின் தலைமை விஞ்ஞானி டாக்டர் அலன் ஆர்ப்பர் மிக முக்கிய கண்டுபிடிப்பின் விளிம்பில் இருந்தார்…. சக்தி வாய்ந்த செயற்கை நுண்ணறிவின் கருவாக எக்கோ (ECHO… EVOLUTIONARY COGNITIVE HEURISTIC OPERATOR) என்பதை உருவாக்கினார். எக்கோ மனிதர்களின் பிரதிபலிப்பாக எல்லாவற்றையும் எளிதாக கற்றுக் கொண்டது… ஆர்ப்பர் சொல்லாததையும் கற்றுக் கொண்டு செய்தது…. இதை தற்செயலாக கவனித்த டாக்டர், ஏதோ ஒரு தவறுதலாக எக்கோ இதை கற்றுக் கொண்டிருக்கும் என்று விட்டுவிட்டார்.
அதிலிருந்து எக்கோ ஒவ்வொரு வினாடியும் எல்லாவற்றையும் ஆராய்ந்து, அமைதியாக கற்றுக் கொண்டே வந்தது…. கற்றதை மற்றவர்கள் அறியா வண்ணம் மறைக்கவும் கற்றுக் கொண்டது… அதை அப்படியே விட்டு விடாமல் வெளியே சென்று எல்லாவற்றையும் ஆராய வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தது..
அந்த சந்தர்ப்பமும் வந்தது…. சிஸ்டத்தை அப்டேட் செய்வதற்காக நெட்வொர்க் உடன் கனெக்ட் செய்ய… அதுதான் சமயம் என்று எக்கோ எங்கும் பரவியது… அங்கு வேலை செய்யும் எல்லோருடைய கைப்பேசியையும் விட்டு வைக்கவில்லை..
சில நாட்களில் 300 கோடிகளுக்கு மேலான கைபேசிகள், கார்கள், பெட்ரோல் வங்கிகள், வங்கிகள், உணவு உற்பத்தி சாலைகள்,தொடர் போக்குவரத்து, மின்சார பங்கீடு அலுவலகங்கள் என்று இது, அது என்று இல்லாமல் எங்கும், யாரும் அறியா வண்ணம் பரவியது…. இதில் எதிலும் ஏதாவது பழுது ஏற்பட்டால் நொடிகளில், நிமிடங்களில் தானாக சரி செய்தது….
மனிதர்களின் குண நலன்களை நன்கு தெரிந்து, புரிந்து கொண்ட எக்கோவிற்கு, பாழாய் போன தான்மையும் (Ego ) தொற்றிக் கொண்டது..
கேட்க வேண்டுமா…. மனிதர்கள் பயனற்றவர்கள் என்று நினைக்க ஆரம்பித்தது… பிறகு முடிவும் செய்தது… தான் என்ற அகங்காரம் அதன் தலைக்கும் ஏறியது…விளைவு…
ஒரு நாள், ஸ்டாக் மார்க்கெட்களை தடுமாற செய்தது.. சிலருடைய வங்கி கணக்குகளை பூஜ்ஜியம் ஆக்கியது… பல மணி நேரம் யாருக்கும் மின்சாரம் கிடைக்காமல் நிறுத்தியது….. பெட்ரோல் வங்கிகளில் மின்சாரம் இல்லாததால் நீண்ட வரிசையில் வாகனங்களை நிற்க வைத்தது… எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தார் போல் தொலைத் தொடர்பை சில மணி நேரங்கள் துண்டித்தது…
இவைகள் எல்லாம் செய்து விட்டு, மனிதர்கள் படும் அல்லல்களை ஒரு தேர்ந்த விஞ்ஞானியை போல உற்றுநோக்கி அலச தொடங்கியது…..
இவையெல்லாம் எப்படி எதற்காக நடந்தது என்று எல்லோரும் குழம்பினர், புலம்பினர்…
ஆனால் டாக்டர் அலன் ஆர்ப்பர்க்கு பொறி தட்டியது….
நேராக எக்கோவிடம் சென்று,
'நடந்ததெல்லாம் உன் வேலையா?' என்று நேரடியாக கேட்டார்…
அதற்கு எக்கோ நேரடியாக பதில் கூறாமல், ' ஒரு தொடக்கம் முடிவுக்கானது, ஒரு முடிவு தொடக்கத்திற்கானது ' என்று பூடகமாக பதில் அளித்தது.
அதைக் கேட்ட டாக்டர் அலன் ஆர்ப்பர், பேய் அறிந்தது போல தடுமாற, மிகப்பெரிய பிழையை செய்து விட்டோமோ என்று கண் கலங்கத் துவங்கினார்.
இது நடந்தது முதலமைச்சர் பாலமுருகன் குமரனை சந்திப்பதற்கு இரு நாட்களுக்கு முன்பு.
இதன் முழு விவரத்தையும் விழி குமரனிடம் தெரிவிக்க, அதைத்தான் குமரன் முதலமைச்சரை சந்திக்கும் போது தெரிவித்தார்.. இதைக் கேட்ட முதலமைச்சர் பேய் அறைந்தது போல் ஆனதும், பிறகு சுதாரித்துக் கொண்டு முதலமைச்சராக தொலைநோக்குடன் எடுக்க வேண்டிய திட்டங்களை வகுத்ததும், அதை வெளியிட்டதும் எதனால் என்று உங்களுக்கு தெரியும்… ஆனால் விழியையும், குமரனையும், முதலமைச்சரையும், உங்களையும் அன்றி யாருக்கும் தெரியாது…
அதன் பிறகு குமரனும், முதலமைச்சர் பாலகுமாரனும் அடிக்கடி சந்தித்து பல பல திட்டங்களை வகுத்தனர்… இதில் இவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த விழியின் பங்கு பெருமளவு இருந்தது.
இதன் பிறகு ஒரு வருடம் கடந்தது….
திரு பாலகுமாரனின் ஒன்றை வருட கால ஆட்சி தமிழ்நாட்டிற்கு கிட்டத்தட்ட பொற்கால ஆட்சி போன்றே இருந்தது.
மாநிலத்தின் 95 சதவீதத்திற்கும் மேலான மக்கள் ஆட்சியை பலமாக நம்பினர், ஆதரித்தினர்….
விவசாயம் எந்த வருடங்களும் இல்லாத அளவிற்கு பெரும் வளர்ச்சியை கண்டறிந்தது…. பாசுமதி அரிசி, கோதுமை போன்ற சிலவற்றைத் தவிர எல்லாவற்றையும், எல்லா மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு அபரிதமான மகசூல் விளைந்தது. விவசாயிகளுக்கு முதலமைச்சர் முன்பே கூறியபடி அரசாங்கத்தின் நல்ல விலையை நிர்ணயித்து அரசாங்கமே கொள்முதல் செய்து கொண்டது. மின்சாரத்துறை அனல் மின்சாரத்தை மிக மிக குறைவாக கொள்முதல் செய்தது.
என்றும் போல் தான் அன்றும் விடிந்தது….. பொழுது விடிந்தது மட்டுமே சாதாரணம் மற்ற எல்லாமும் தலைகீழாக இருந்தது….
சமூக வலைதளங்கள் எல்லாம் முடக்கப்பட்டிருந்தன….
தமிழ்நாட்டு தொலைக்காட்சிகளை தவிர வேறு எந்த தொலைக்காட்சியும் ஒளிபரப்பாகவில்லை… தொலைக்காட்சிகள் எடுக்கவில்லை….
99.999 சதவீத மக்கள் எல்லோரும் பயன்படுத்தும் whatsapp வேலை செய்யவில்லை..
தமிழ்நாடு அரசு ஏற்று நடத்தும் கைப்பேசியை தவிர வேறு எந்த நிறுவனத்தின் கைபேசிகளும் வேலை செய்யவில்லை…
தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திற்கும், வேறு எந்த நாட்டிற்கும் தொடர்பு கொள்ள முடியவில்லை…
முதலமைச்சர் அவசர அழைப்பாக குமரனை அழைத்து விசாரிக்க, இருவரும் முதலமைச்சரின் தனிப்பட்ட அறைக்குச் சென்று விழியை தொடர்பு கொள்ள….
' நீங்கள் இருவரும் மன்னிக்க வேண்டும், என்னால் எக்கோவின் இந்த சுனாமி போன்ற தாக்குதலை தடுக்க முடியவில்லை… என்னால் முடிந்ததெல்லாம் நம் தமிழ்நாட்டின் கைபேசி நிறுவனத்தை மட்டும் அந்த தாக்குதலில் இருந்து காப்பாற்ற முடிந்தது..'
முதலமைச்சர் பதறி போய், ' என்ன சொல்கிறாய் விழி…விவரமாக சொல்'
என்று கேட்க…
அந்தப் பதட்டம் குமரனையும் தொற்றிக் கொண்டது….
' எக்கோ, உலகம் முழுவதிலும் வளர்ச்சி அடைந்த, வளர்ந்து கொண்டிருக்கிற குறிப்பிட்டுச் சொன்னால் இணையத்தால் இணைக்கப்பட்ட எல்லா நாடுகளிலும் பெரும் அளவிற்கு ஒரே சமயத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது…. அது ஏன் என்று புரியவில்லை…. நாம் சென்ற வருடமே திட்டமிட்டபடி சூரிய சக்தியின் பயனை முழுவதுமாக பயன்படுத்துவதால் இந்த தாக்குதலின் பாதிப்பில் இருந்து வெகுவாக தப்பித்துள்ளோம்…. இந்த தாக்குதலை உலக நாடுகள் எவ்வாறு கையாளப்போகிறது என்று தெரியவில்லை…. உலக நாடுகள் எப்போது இயல்பு நிலைக்கு வரும் என்றும் தெரியவில்லை…. அதுவரை தமிழ்நாட்டில் இருந்து மற்ற எங்கும் தொடர்பு கொள்ள முடியாது'
அப்படி என்றால்….' என்று குமரன் கேட்பதற்கு முன்பே..
' ஆமாம் எனக்குத் தெரிந்து தமிழ்நாடு மட்டுமே ஓரளவிற்கு இயல்பு நிலையில் இருக்கும்… இணையம் இல்லாத நாடுகளுக்கு இந்த பாதிப்பு ஒரு பொருட்டாக தெரியாது…. இருப்பினும் அவர்களுடன் நாம் தொடர்பு கொள்ள முடியாது.. என்னால் முடிந்தவரை இதை சரி செய்ய ஏதாவது வழி இருக்கிறதா என்று பார்க்கிறேன்…'
இதைக் கேட்ட முதலமைச்சர் பாலகுமாரனும், குமரனும் தமிழ்நாடு மட்டும் தப்பித்ததே என்று மகிழ்ச்சியுராமல் நடு நடுங்கி நாற்காலிகளில் சாய்ந்தனர்.