உயர்ந்த ‘மனிதம்’
- melbournesivastori
- Apr 19, 2022
- 7 min read
இன்னும் இரண்டரை மணி நேரங்கள் உள்ளது… இன்டர்நெட் செக்கிங் செய்து விட்டதால் பரவாயில்லை… இரண்டரை வருடங்கள் கழித்து அம்மாவை பார்க்க தாயகம் செல்கிறேன்… இந்த சமயத்தில் கோவிட் ரெஸ்ட்ரிக்க்ஷன் அமலில் இருந்ததால் ஏர் பபுள் முறையில் ஏர் இந்தியா மற்றும் குவாண்டாஸ் மட்டுமே ஆஸ்திரேலியா விற்கும் இந்தியாவிற்கும் இடையே அனுமதிக்கப்பட்டிருந்தது… முதல் முறையாக ஏர் இந்தியாவில் செல்கிறேன். திரு டாட்டா அவர்கள் வாங்கிவிட்டார்கள்… இப்போது நன்றாக இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். மெல்போர்ன் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் வந்து சேர்ந்தோம்.. லக்கேஜ்களை இறக்க மருமகன் என்னை அனுமதிக்கவில்லை.. மெயின் லக்கேஜை அவரும் கையுடன் எடுத்து ச்செல்லும் லக்கேஜை என் மகளும் இழுத்து வர நானும் மனைவியும் உடன் நடந்தோம்….
இதுவரை நான் சென்றது போல இல்லை இந்த முறை…. இன்டர்நெட் செக்கிங் செய்தவர்களுக்கு தனியாக ஒரு வரிசை இருந்தது இது வரை ஆனால் இங்கு இப்போது ஒரே வரிசை.. மனம் சிறிது சலிப்புற்றாலும் நின்று ஏர் லைன் ஊழியர் அழைக்க சென்றேன்… சென்னை வரை இரு போடிங் பாஸ்களையும் தந்துவிட்டு.. ‘மன்னிக்கவும் நேற்று இரவிலிருந்து இந்திய அரசாங்கத்தின் புதிய கட்டளைப்படி புதுடில்லியில் நீங்கள் உங்கள் லக்கேஜை எடுத்து மறுபடி சென்னை விமானத்தில் செக்கிங் செய்ய வேண்டும்’ என்றது எனக்கு கோபத்தை கிளரினாலும் இவரால் என்ன செய்ய முடியும் என்று அமைதியாகிவிட்டேன். மெயின் லக்கேஜை அனுப்பிவிட்டேன்…. எப்போதும்போல மெக்டொனால்ட்ஸ் சென்று சிறு சிற்றுண்டியை முடித்துக்கொண்டு பயணப்பட கிளம்பினேன். செக்யூரிட்டி செக்கிங் வாசலிலிருந்த கெடுபிடியால் மூவரிடம் இருந்தும் சரியான பிரியாவிடை பெறாமல் உள்ளே வந்து விட்டதை காலம் தாழ்ந்து புரிந்து கொண்டேன்.
செக்யூரிட்டி ஜெக்குக்கு உள்ளே சென்றேன்… செல்லும் வழியிலேயே ஏனோ ஒரு இருவரை ஓரம் கட்டினார்கள்… அதை கடந்தேன் லைன் ‘சி’யில் இருக்க சொன்னார்கள்… என் முறை வந்ததும் கையில் இருந்த வாட்ச் வாலெட் மற்றும் பேண்டில் இருந்து எல்லாவற்றையும் எடுத்து அதற்காக வைத்திருந்த டிரேயில் போட்டேன்.. பக்கத்தில் கையுடன் சுமந்து செல்லும் லக்கேஜயும் வைத்தேன்… ஸ்கேன் செய்யும் செவ்வக வாசலைக் கடந்து வெளியே வந்தவுடன் அங்கிருந்த பெண் ஸ்கேனிங் கருவியால் ஒரு முறை ஸ்கேன் செய்தாள். அப்போதுதான் கவனித்தேன்… என்னுடன் கையில் எடுத்துச் செல்லப் போகும் லக்கேஜ் நேராக வந்தது ஆனால் நான் டிரேயில் போட்ட சாமான்கள் வேறு பாதையில் டைவர்ட் செய்யப்பட்டு சென்றது ஏன் என்று எனக்குப் புரியவில்லை…. என் ஹாண்ட் லக்கேஜ் எடுத்துக்கொண்டு அந்த டிரேக்காக காத்திருந்தேன்…..
ஒரு 3, 4 நிமிடங்கள் கழித்து அங்கிருந்த சுங்கப் பெண்மணி… 25 வயதிலிருந்து முப்பது வயதிற்குள் இருக்கும்… ஆஸ்திரேலிய வெள்ளைக்காரப் பெண்மணி தான்.. (ஏன் இதை சொல்கிறேன் என்றால் முன்பு போல் அல்ல, இப்போதெல்லாம் வெவ்வேர் இனத்தவர்கள் அதிகம் எல்லாத் துறைகளிலும் இருக்கிறார்கள்..) இந்த ட்ரெ யாருடையது என்று கேட்டார்.. நான் அது என்னுடையது என்று அருகில் சென்றேன்.. பல பல வருடங்கள் பழக்கம் என்பதால் பதட்டம் இல்லை. உங்களுடைய வாலட்டில் தான் ஏதோ கத்தி போன்ற கூர்மையான பொருள் உள்ளது என்றார்…
இதுவரை இல்லாத பதட்டம் எனக்குத் தொற்றிக்கொண்டது, இருக்க வாய்ப்பில்லையே என்னவாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டே அவரிடம் கேட்டேன், அவரும் ஏதோ தெரியவில்லை என்று அதிலிருந்த எல்லா கார்டுகளையும் பணத்தையும் வெளியே எடுத்து டிரெயில் போட்டார்… அதற்குப் பிறகும் அந்தக் கூர்மையான பொருள் இருந்துகொண்டே இருந்தது.. இப்போது வெகுவாக குழப்பமடைந்த அந்தப் பெண்மணி அதை என்னிடம் தந்து ‘நீங்களே பாருங்கள் ஏதாவது தெரிகிறதா என்று’ கேட்க நானும் வாங்கி பார்த்தேன்… இந்த சமயத்தில் ஒன்று கூற வேண்டும்…..
அந்தப் பெண்மணி என்னைப் பார்த்த விதம் பரிவுடன் ஒரு சக மனிதனாக……
அவள் என் இனத்தை பார்க்கவில்லை…
அவள் என் மதத்தை பார்க்கவில்லை…
அவள் என் உடையை வைத்து என்னை எடை போடவில்லை….
மொத்தத்தில் ‘மனிதத்தை’ அங்கு பார்த்தேன்…
நானும் வாலெட்டை வாங்கி பார்த்து தேடினேன்.. எனக்கும் தென்படவில்லை…( நம்மூரில் பர்ஸ் என்று பொதுவாக ஆணுக்கும் பெண்ணுக்கும் சேர்ந்து கூறுவது புழக்கத்தில் உள்ளது… ஆனால் பெண்ணுக்கு பர்ஸ் ஆணுக்கு வாலெட்… ) நானும் குழப்பமடைந்து அந்தப் பெண்ணைப் பார்க்க…
அந்த சமயத்தில் தான் மற்றொன்று நடந்தது… அடுத்த டேபிளில் இருந்த பொருள்களுக்கு சொந்தக்காரர் ஒரு வயதான வியட்நாம் முதியவர்.. ஆங்கிலம் பேசத் தெரியவில்லை அவரை கவனிக்க வேண்டிய சுங்க அதிகாரி என்னைக் கவனித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் ஒரு நிமிடத்தில் வருகிறேன் என்று சொல்லிவிட்டு எங்கோ சென்றார்….
ஓரிரு நிமிடங்களில் அந்த வரிசையில் கடைக்கோடியில் இருந்த வியட்நாம் மொழியை பேசத் தெரிந்த வேறு ஒரு சுங்க அதிகாரியை அழைத்து வந்தார்.. அப்போதுதான் புரிந்தது அந்த முதியவரை புரிய வைக்க தான் அது என்று…
சரி விஷயத்திற்கு வருகிறேன். என்னை கவனித்துக் கொண்டிருந்த அந்த பெண்மணி முதல்முறையாக தான் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த அந்த ஸ்கேனிங் மானிட்டரை என் பக்கம் திருப்பி ‘இப்போது பாருங்கள் ஏதாவது புரிகிறதா என்று’ என்று கூற, அந்த மானிட்டரை பார்த்தவுடன் எனக்கு புரிந்து விட்டது…. அந்தப் பொருள் என் மகள் சுமார் ஒரு வருடத்துக்கு முன்பு எனக்கு வாங்கி கொடுத்த பாக்கெட் மல்டி டூல்…. சுருங்கச்சொன்னால் ஒரு கிரெடிட் கார்ட் போல் சிறிய கத்தி ஒருபுறம், சிறிய கேன் ஓபனர் ஒருபுறம், இரு சென்டிமீட்டர் கோடுகள் உள்ள மறுபுறம் இருக்கும் ஒரு ஸ்டீல் தகடு..
நான் உடனடியாக அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கோரினேன், ஒரு வருடத்திற்கு முன்பு என் மகள் எனக்கு கொடுத்தது… அப்போது வைத்தது முற்றிலுமாக மறந்து விட்டேன் என்னை மன்னிக்கவும் என்றேன்.. அந்தப் பெண் அவசரஅவசரமாக என்னை தடுத்து அதனால் என்ன பரவாயில்லை உங்கள் பெண் கொடுத்தது உங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று எனக்கு புரிகிறது… என்னால் இதை அனுமதிக்க முடியாது… ஒரு நிமிடம் பொறுங்கள் என்னுடைய மேலதிகாரியை கேட்டுவிட்டு வருகிறேன் என்று கூறிச் சென்று திரும்பிவந்து மன்னிக்கவும், இதை எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டார் என்றார்… நானும் நல்லகாலம் பிரச்சனை இதோடு முடிந்ததே என்று அதனால் என்ன பரவாயில்லை என்று கூறினேன். அந்தப் பெண்ணிற்கு மனமில்லை… நான் வேண்டுமென்றால் ஒரு ஐந்து நிமிடங்கள் பொறுத்துக் கொள்கிறேன் நீங்கள் வெளியே சென்று உங்கள் மகள் இருந்தால் இதை கொடுத்துவிட்டு வாருங்கள் என்றாள்.
ஒரு நிமிடம் என் மனதிற்குள் ஆயிரம் வாழ்த்துக்களை அந்தப் பெண்ணுக்கு சூட்டினேன்….. நான் இனத்தால்… மதத்தால்… பொருளாதார தரத்தால் வேறுபட்டிருப்பினும் ‘மனிதம்’ கொண்டு என்னிடம் நடந்தது என் மகள் அளித்த பரிசின் உணர்ச்சிபூர்வமான மதிப்பை அறிந்து அவள் எனக்கு அளித்த அனுமதி….. அந்தப் பெண் வாழ்க!
அவளை இந்தப் பண்பாடோடு வளர்த்த அவள் பெற்றோர்கள்… ஆசிரியர்கள்…. இந்த நாடு…. அவளுக்கு கொடுக்கப்பட்ட சுங்க ட்ரைனிங்….
நினைக்கும்போதே ஒரு மேன்மையான மதிப்பு வந்தது…
இது இனிய மேம்பட்ட சமுதாயம் …
‘இல்லை, என் வீட்டார்கள் சென்று விட்டிருப்பார்கள் நீங்கள் இதை டிஸ்போஸ் செய்துவிடலாம்’ என்று கூறிவிட்டேன். நான் புதுடில்லி சேர்ந்து அடைந்தவுடன் இதற்கு எதிர்மறையான அனுபவத்தைப் பெற்றதை பகிர நினைக்கும் போது…
என்னை சுற்றியுள்ளோரே நான் அனுபவித்த இன்னல்களை கூறுவதை நாட்டை குறை கூறுவதாக நினைப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதால்….
இக்கணமே இந்த பயணத்தைப் பற்றி எழுதுவதைவிட பயணத்தில் நான் ஆவலாக சந்திக்க இருந்த ஒரு மாமனிதரை சந்தித்ததை பற்றி கூற வேறு திசையில் சென்று இனி கூறப்போகிறேன்…..
புகழின் உச்சியில் சென்ற அவருக்கு புகழ்ந்தால் பிடிக்காது… தெரியும்…. இருப்பினும் இதை எழுதுவது என் கடமை! இதை அவர் கண்டிப்பாக மன்னிக்க வேண்டும்…
கலைச் செல்வர், இதிகாச விரிவுரையாளர், ஓவியர், நடிகர் என் அன்பிற்கினிய மதிப்பிற்குரிய உடன்பிறவா அண்ணன் திரு சிவகுமார் அவர்களைப் பற்றித்தான். 192 படங்களில் நடித்தவர் அதில் 175 படங்களில் கதாநாயகனாக நடித்தவர்…
அவ்வப்போது என் கதைகளையும் கட்டுரைகளையும் படித்து விமர்சனம் செய்தது.. அதுவே மிகப்பெரிய ஊக்குவிப்பாக எனக்கு அமைந்தது…
புகழின் நிழலில் எப்போதும் இருக்கும் எல்லோரும் வெளியே வர தயங்குவார்கள்… இவர் புகழ் நிழலில் மட்டுமல்லாமல் மக்களின் மனதில் நிறைந்துள்ள பிரபலமான மூன்று நட்சத்திரங்களை குடும்பத்தே பெற்றிருந்தாலும் அந்த புகழின் நிழலில் தங்காமல்; தயங்காமல் வெளியே வந்து தன்னால் எவ்எப்போது முடியுமோ அவ்வப்போது தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் ஆற்றும் பணி அவரின் ‘மனிதத்தை’ மட்டுமல்லாமல் பன்முக ஆற்றலையும் பறைசாற்றுகிறது!
முன்பு ஒருமுறை அவர் எல்லோரையும் கேட்டுக்கொண்டது ‘தாய்மை அடைந்த பெண் தெரு நாயை தயவுசெய்து விரட்டா தீர்கள் ‘… என்றது….இது என் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து விட்டது.
இது மனிதத்தையும் மீறி வள்ளலாரின் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!’ என்ற தத்துவத்திற்கு உயிர் ஊட்டுவதாக இருந்தது.
ஒரே மூச்சில் 2.10 மணி நேரத்தில் 26-10-15-ந்தேதி ஈரோடு – திண்டல்- வேளாளர் மகளிர் கல்லூரியில், நடந்த விழாவில்,
2009 -ம் ஆண்டு 100 பாடல்கள் வழி -கையில் எந்தக் குறிப்பும் இல்லாமல்- ஒரு சொட்டு நீர் அருந்தாமல்- இளைய தலைமுறையினர் 8000 பேர் முன்னிலையில்’கம்பராமாயணம்’ – உரைநிகழ்த்தியதை யாரும் எளிதில் செய்ய முடியாது என்பதைப்போலவே – ராமாயணத்தைவிட கதை
அமைப்பில் 4 மடங்குபெரியதான – உலக இலக்கியங்களில் பெரியது என்று சொல்லப்படும் -மகாபாரததின் மொத்தக்கதையையும் 4 ஆண்டுகள் தீவிர ஆய்வு செய்து -பாமரனும் எளிதில் புரிந்து கொள்ளும் எளிய மொழியில். முக்கிய கதாபாத்திரங்களின் வழியாக – ஒரே மூச்சில் 2.10 மணி நேரத்தில் 26-10-15-ந்தேதி ஈரோடு – திண்டல்- வேளாளர் மகளிர் கல்லூரியில்உணர்ச்சிகரமாக பேசிமுடித்திருப்பதும் எனக்கேவிடுத்த சவாலாகத்தான்
தோன்றுகிறது என்று அண்ணன் கூறியது மிகையானது அல்ல… ஏனென்றால் ஒவ்வொரு தினமும் தனக்குத்தானே விட்டுக்கொண்ட சவால் படித்தான் அவருடைய திட்டமிடலும் தினமும் உள்ளது.
அவரைப் பற்றி நிறைய காணொளிகள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள், அவரைப் பற்றி நிறைய செய்திகளை எல்லோரும் படித்து இருப்பீர்கள்… நான் கூறப்போவது எனக்குத் தெரிந்த ஒரு அற்புத மாமனிதர் பற்றி.
அண்ணன் ஓவியக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது உடன் படித்தவர் இமானுவேல் .. நன்றாக ஓவியம் தீட்டக் கூடியவர். கடந்த பல வருடங்களாக அவரை பலவழிகளில் அண்ணன் தேடி இருக்கிறார்…. தேடி களைத்து மறந்தும் போய்விட்டார்.. ஒன்றை வாரங்களுக்கு முன்பு வருத்தங்களை தாங்கிய அந்த செய்தி கிடைத்தது, இமானுவேல் மனநலம் குன்றி எங்கெங்கோ அலைந்து ஏதோ ஒரு சிறிய இடத்தில் தனக்கிருந்த அந்த அற்புதமான ஓவியக் கலையை மறக்காமல் ஓவியங்களை தீட்டி கொண்டே இருந்திருக்கிறார்.. இந்தச் செய்தி எப்படியோ ஐம்பத்தி ஏழு வருடங்களுக்குப் பிறகு அண்ணன் காதுக்கு எட்ட…. நண்பனுக்கு ஏற்பட்ட இன்னல்களைக் கண்டு துடித்து அவரை சென்று காண முடிவு செய்தார்… முதலில் அன்பு கார்த்தியை அனுப்ப… மாணிக்கத்திற்கு பிறந்த மாணிக்கம் ஆயிற்றே அவர்…. என்ன செய்வார்… அப்பாவின் நெடு நாளைக்கு முந்தைய நண்பரின் சுயமரியாதைக்கு எந்த பாதகமும் வராமல் இலவசமாக பணம் கொடுப்பது தவறாக இருக்கும் என்று இரண்டு ஓவியங்களை இரண்டு லட்ச ரூபாயை கொடுத்து வாங்கி அவருக்கு இனி மீதமிருக்கும் வாழ்நாள் அமைதியாக இருக்க ஒரு கேர் டேக்கரையும் கௌரவமாக தங்க ஒரு இடத்தையும் ஏற்பாடு செய்துவிட்டு வந்தார்.
மறுநாள் அண்ணன் சென்றார் ஐம்பத்தி ஏழு வருடங்களுக்கு பிறகு உடன் படித்த இமானுவேலை சந்தித்தார்…. உலக தமிழ் மக்களுக்கு தெரிந்த பன்முகத் தில் இடம்பெறாத ஒருமுகம் உணர்ச்சிபூர்வமான மனிதத்துவ முகம்.. கட்டித் தழுவிக் கொண்டார்.. உடன்வந்த அதை காலத்திய நண்பர் சந்திரசேகருக்கு நடப்பதெல்லாம் கனவா நினைவா என்றே புரியவில்லை…

பொருளாதாரத்தில் சற்றே மேலோங்கி இருந்தாலும் பழகிய நட்புகளையும் சுற்றங்களையும் மறக்கும் அல்லது மறந்தார்போல் பாவனை செய்யும் இந்த காலத்தில்… உலகத் தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் பெரும்பாலான இந்தியர்களுக்கும் தெரிந்த அண்ணனின் இந்த செயல் இதை தெரிந்து கொள்ளப் போகும் ஒவ்வொருவருக்கும் முன்னுதாரணமாக அமையப் போவது உறுதி! இதைக் காணொளியாக காண விரும்புவோர் கீழ்க்கண்ட லிங்கில் பார்த்துக்கொள்ளலாம்.
இது போன்ற உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்…. அது தொடர்கதையாக போய்விடும் தொடர் கதை எழுதுவது என் எண்ணமும் அல்ல.. அவரை, அந்த அற்புத மனிதரை சந்தித்ததை பற்றி கூறவே இதை எழுதுகிறேன்..
தமிழகம் சென்று அடைந்தேன்.. கோவிட் இடைவெளியால் பார்க்காது இருந்த அம்மாவைப் பார்த்தேன்.. அந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை… மறுநாள் அண்ணனுக்கு நான் வந்தது பற்றியும் அவரை என்று சந்திக்கலாம் என்பது பற்றியும் குறுஞ்செய்தி அனுப்பினேன். ஏற்கனவே நான் கூறியது போல நம்மைவிட 2-3 படிகளுக்கு மேல் உள்ளவர்களே உடனடியாக பதிலளிக்க தயங்கும் இந்த காலத்தில் என் நிலையை விட எங்கோ பல நூறு மடங்கு மேலுள்ள அண்ணன் உடனடியாக பதில் அளித்து ஒரு சில நாட்கள் மட்டும் வெளியூர் செல்வதால் முடியாது என்றும் மற்ற நாட்களில் முன்னறிவிப்பு கொடுத்துவிட்டு வர செய்தி அனுப்பினார். அண்ணனிடம் பலமுறை பேசி இருந்ததாலும் எண்ணற்ற முறை பகிர்ந்து இருந்ததாலும்.. அவர் உடனடியாக பதில் தந்தது வியப்பு அளிக்காமல் அவரின் பண்பை உறுதிசெய்தது.
அவரை சந்திக்கும் நாளும் வந்தது, நான் கேட்பதற்கு முன்பே…. எவ்வளவு அனுபவம் வாய்ந்தவர் என்பதைச் சொல்லாமல் சொல்ல முழு விலாசமுடன் மற்றும் சில புகைப்படங்களுடன் வாட்ஸ் அப் செய்தி வந்தது. அண்ணனை சந்திக்க வருகிறாய் நீ, எந்த பதட்டமும் உனக்கு தேவை இல்லை என்ற அவரின் செய்தி
தமிழின் முற்றும் அறிந்த சித்தன் வள்ளுவன் கூறிய நற்பண்புகள் அனைத்தும் ஒருங்கே அமைந்து இருந்தது….
என் அண்ணன் மகனுடன் சென்றேன், செக்யூரிட்டியில் விஷயத்தை கூறியதும்.. செய்தி பரிமாறப்பட்டு உள்ளே அழைத்துச் செல்லப்பட்டேன். அமர்ந்து சிலநிமிடங்களில் பொன்னிறத்தில் வறுக்கப்பட்ட முந்திரியுடன் காரமிக்க சிப்ஸ் மற்றும் இனிப்பு பலகாரங்கள் வழங்கப்பட்டது.
எதிரே மேஜையில் அண்ணன் எழுதிய பல புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க…. என் அண்ணன் மகன் கேட்டான், ” இந்தப் புத்தகத்தை எடுத்துப் பார்க்கலாமா சித்தப்பா? ” என்று… வேண்டாம் அண்ணன் வந்ததும் கேட்டு பிறகு பார் என்றேன்.
ஓரிரு நிமிடங்களே… அண்ணன் வந்தார்…. ஒரு இனிய பல நாள் கனவு.. அங்கு நினைவாகி கொண்டிருந்தது….
நான் முதல் முதல் உயர்ந்த மனிதனில் திரையில் பார்த்த அந்த மனிதர் இன்று உயர்ந்த மனிதனாக என் உள்ளத்தில் மட்டுமல்ல உலகத் தமிழ் மக்களின் உள்ளத்திலும் நிலைத்திருக்க இதோ என் அருகில் இருக்கிறார். அன்புடன் என்று கூறுவது பொருந்தாது பாசத்துடன் வரவேற்றார் என்று கூறுவதே பொருந்தும்… அந்த முதல் ஓரிரு நிமிடங்கள் என்ன நடந்தது என்று என்னால் நினைவு கூற முடியவில்லை.. நான் பதட்டத்துடன் இல்லை என்றாலும் உணர்ச்சிப்பூர்வ நிலையில் இருந்ததால் நினைவுக்கு வரவில்லை… அண்ணி தன் கைப்பட செய்தது இந்த இனிப்பு என்று அவர் கூறியது, கொங்குநாட்டின் கொம்பு தேனாய் தித்தித்தது போன்ற உபசரிப்பு! பேசினார்… பேசினேன்…
அப்போது எதையோ மறந்தால் போல் எப்படி வந்தாய் என்று கேட்டார் நான் கூற டிரைவர் எங்கே என்று கேட்க…. வெளியில் இருக்கிறார் என்று சொல்ல ஏன் அழைத்துக்கொண்டு வரவில்லை என்று என்னைக் கடிந்து கொண்டு ஒருவரை அனுப்பி என் நண்பரைப் போன்ற டிரைவரை கவனிக்கச் சொன்னார்.
ஊடே கிண்டலான பேச்சுக்கள் மறக்கக் கூடியவை அல்ல…..
காபி வேண்டுமா? டி வேண்டுமா? என்று கேட்டார்… அரை மணி நேரத்துக்கு முன்புதான் குடித்துவிட்டு வந்தேன் என்றதும், அப்படியா அப்படி என்றால் பிராந்தியா? விஸ்கியா? என்று கிண்டல் அடித்து விட்டு ஜூஸாவது குடி என்றார்… காபி போதுமென்று காபி குடித்தேன்.
அண்ணன் மகனின் இருப்புக் கொள்ளாமமையை புரிந்துகொண்டேன்… அண்ணா இந்த புத்தகத்தை பார்க்கலாமா என்று கேட்கிறான் என்று நான் கேட்க, இங்கிருக்கும் எல்லா புத்தகங்களும் தம்பிக்கு தான் என்று அவர் கூற… நான் நன்றி கூற மறந்து அவரைப் பார்த்தேன்…. முதல் புத்தகத்தை எடுத்தார் ‘கோல்டன் மோமன்ட்ஸ் ஆஃப் சிவகுமார் இன் தமிழ் சினிமா’ என்ற புத்தகம் அது..

அவருக்கு மிகவும் அறிமுகமான என் ஒன்று விட்ட அண்ணனின் அண்ணியின் பெயரை எழுதி என் குடும்பத்தார் ஒவ்வொருவரின் பெயரையும் எழுதி வாழ்த்துக்களுடன் அவர் பெயர் முதல் குடும்பத்தார் எல்லோருடைய பெயரையும் எழுதி ஒருபுறம் வைத்துவிட்டு மற்ற புத்தகங்களில் என் பெயரையும் என் மனைவி பெயரையும் வாழ்த்தி எழுதி கையொப்பமிட்டு பரிசளித்தார். எனக்கு மயக்கமே வந்து விடும் போல இருந்தது.

இந்தப் பண்பான மனிதருடன் அன்று இருந்த அந்த மணி நேரம் என்னை மீறி என் நினைவுகளில் பெருமை கொள்ளச் செய்தது.
அண்ணியை அழைத்து அறிமுகப்படுத்தினார்… அவரும் அன்புடன் விசாரித்தார்…. அந்த விசாரிப்பிலேயே தெரிந்தது மாணிக்கங்களை பெற்றது மட்டுமல்ல மாணிக்கங்களகா வளர்த்ததும் அவர்தானே?
நான் தயங்கிக்கேட்க, அதற்கென்ன என்று பல புகைப்படங்களை எடுத்துக் கொண்டோம்.
இந்த லைட்டிங்கில் செல்பி எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று அவர் சொல்ல, நானும் அவரும் அந்த வெளிச்சத்தை நோக்கி நிற்க…

அப்போது அவர் பாசத்துடன் கடிந்தது இன்று நினைத்தாலும் புன்முறுவல் பூக்க வைக்கிறது…
” சிரி, உன் சொத்தையா கேட்கிறேன்?” என்று கடிந்தது தான் அது..