இறந்தவன் பேசுகிறேன்! By சிவா
- melbournesivastori
- Aug 1, 2021
- 5 min read

‘வாய்மையே வெல்லும்’ என்ற கனவு உலகத்தில் நான் என்றுமே இருந்ததில்லை, ஆனால் நல்லதே நினைக்க வேண்டும், செய்ய வேண்டும் என்ற மனநிலையில் என்றுமே இருந்து இருக்கிறேன்.
நரக வேதனை அடைந்தேன் என்று எல்லோரும் ஒரு முறையாவது கூறி இருப்போம், நீங்கள் எல்லோரும் சொல்வது நரகத்தின் மாதிரி தான். நரகத்தின் முழு வேதனையையும் நான் அடைந்திருக்கிறேன். அதற்காக என்னை ஒரு கெட்டவனாகவும் சமூக விரோதியாக நினைத்துவிடாதீர்கள்.. நானும் உங்களைப் போன்ற சாதாரண மனிதன் தான்… பிறகு ஏன் நரகத்திற்கு இவ்வளவு பில்டப் என்கிறீர்களா? கூறுகிறேன்…. எல்லாவற்றையும் கூறுகிறேன். ஏன் நல்லதே நடக்க வில்லையா உனக்கு என்று கேட்கிறீர்களா? நீங்கள் கேட்கவில்லை என்றாலும் புரிகிறது நீங்கள் நினைத்திருப்பீர்கள் என்று. கூறுகிறேன் அதையும் கூறுகிறேன்.
சொர்க்கமே அது இது தானா என்று நீங்கள் நினைத்திருந்தால் அது சொர்க்கமே அல்ல……. நான் சொர்க்கத்தை முழுவதுமாக உணர்ந்து இருக்கிறேன். நீங்கள் இப்போது உன்னிப்பாக படிக்க துவங்குவதை என்னால் உணர முடிகிறது…..
ஏன் இந்தப் பெண்மணி என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்? யோசித்துப் பார்த்தேன் இவரை எனக்குத்தெரியாது…. அவரின் புன்னகைக்கும் எனக்கு அர்த்தம் புரியவில்லை, நான் யோசித்துக் கொண்டிருக்கும்போதே அவர் பேசத் துவங்கினார்… என்னை ஞாபகம் இருக்காது உங்களுக்கு ஆனால் பல பல வருடங்களுக்கு முன்பு பேருந்து விபத்தில் நீங்கள் சிலரை காப்பாற்றினீர்கள் அதாவது ஞாபகம் இருக்கிறதா? என்று வினவினார். ஆமாம் பலப்பல வருடங்களுக்கு முன்பு நடந்தது. அது ஒரு சனிக்கிழமை என்று நினைக்கிறேன்.. மாலை சுமார் ஏழு மணி இருக்கும் ஒரு நண்பரை பார்த்துவிட்டு பாலத்தின் மேல் வீட்டை நோக்கி மோட்டர் பைக்கில் சென்று கொண்டிருந்தேன், சுமார் 100 மீட்டர் தூரத்தில் என் முன்னே சென்று கொண்டிருந்த பேருந்து நிலை தடுமாறுவது அதன் பின்புறம் இருந்த விளக்குகளில் இருந்து தெரிந்து… கண்ணெதிரே நிலைதடுமாறி பாலத்தை தாண்டி சரிவில் விழுவதைக் கண்டேன். உடனடியாக அருகே சென்று பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு விபத்து நடந்த இடத்தை நோக்கி ஓடினேன்.. முதலில் தெரிந்தது ஒரு வயது முதிர்ந்த பெண்… விபத்தினால் என்ன பாதிப்பு ஏற்பட்டது என்று அந்த மங்கிய ஒளியில் ஏதும் தெரியவில்லை, ஆனால் வலியில் துடித்துக் கொண்டிருந்தார்.. உடனடியாக அவரை தாங்கிப் பிடித்து மேல் நோக்கி வந்து சாலையை அடைந்தேன். அதற்குள் சிறிய கூட்டம் கூடிவிட்டது… அருகே இருந்த ஆட்டோ டிரைவர் உதவிக்கு வர அந்த பெண்மணியை அதில் ஏற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கேட்டுக் கொள்ள, அவரும் அழைத்து சென்றார். அந்தப் பெண் என்னை நன்றியுடன் பார்த்ததை நான் கவனிக்கவில்லை… திடீரென்று எனக்குள் ஒருவித அற்புதமான உணர்ச்சி தோன்றியது.. என்ன என்று என்னால் விவரிக்க முடியவில்லை ஆனால் அந்தப் பெண்மணி நன்றியுடன் என்னை பார்த்ததை அந்த சில நிமிடங்களின் எல்லா நொடிகளையும் அணுவணுவாக என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எதிரே இருந்த அந்த பெண்மணியின் புன்னகை இப்போதுதான் புரிந்தது… அவர்தான் இவர்.
யார் இந்த இளைஞர்.. என்னை இந்த ஒரு சோகத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறார்? யோசித்துப் பார்த்தும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை இவர் யாரென்று. அவரே கூறினார், அதே பேருந்து விபத்தில் என்னருகே வந்தும் எனக்கு நீங்கள் உதவி செய்யவில்லை என்றார். எனக்கு ஏதும் புரியவில்லை… நான் அவ்வாறு செய்திருக்க மாட்டேனே என்று யோசிக்க.. அவரே தொடர்ந்தார்… நான் துடிப்பதை பார்த்து என்னை நோக்கித்தான் வந்தீர்கள்.. ஆனால் உங்களைப் பார்த்து யாரோ கூப்பிட உடனடியாக அவரை நோக்கி சென்று அவருக்கு உதவி செய்ய ஆரம்பித்தீர்கள்…. என்ன இது உடலெல்லாம் நடுங்குகிறது ஒவ்வொரு அணுவும் வலிக்கிறது….. இந்த வலி குறையாதா உதவி கிடைக்காதா எனும் அந்த சில நிமிடங்களின் பல நொடிகளின் சித்ரவதையை முழுவதுமாக உணர்ந்தேன். ஆமாம் அந்தப் பெண்மணியை ஆட்டோவில் ஏற்றி விட்டு வந்த பிறகு அந்தப் பாலத்தின் அடிவாரத்தில் ஒரு இளைஞர் துடித்துக் கொண்டிருப்பது பார்த்து அவரை நோக்கி ஓடினேன்…. அந்த சமயத்தில்தான் ரவி என்று யாரோ கூப்பிடுவது கேட்டது.. குரல் வந்த திசையை நோக்கி பார்த்தேன்…. அது யாருமில்லை என் நண்பனுடைய மாமா. உடனடியாக ஓடிச்சென்று அவரை அணுகி உதவி செய்து தாங்கலாக அவரைப் பிடித்துக் கொண்டே சாலையின் மேல் பகுதிக்கு வந்தேன். நிறைய அடிபட்டு இருந்ததால் அவரால் என் பைக் பின்புறத்தில் அமர முடியாது… மற்றொரு ஆட்டோவை தேடிப்பிடித்து அவரை அமர்த்தி அருகே உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல கேட்டுக்கொண்டு நானும் பைக்கில் பின்தொடர்ந்தேன்… இப்பொழுது புரிந்தது அவர்தான் அந்த துடித்துக்கொண்டிருந்த இளைஞர் என்று.. அவருக்கு உதவி செய்ய முடியாமல் போனது என்னுடைய தவறல்ல என்று புரிந்தாலும் அவரின் அந்த நொடிகளின் ஏக்கமான எதிர்பார்ப்பை அணு அணுவாக அனுபவித்தேன்.
ஏன் இந்த பெரியவர் என்னை ஒரு தெய்வீக புன்முறுவலுடன் பார்க்கிறார்… அவரை எனக்குத் தெரியாது இதுவரை பார்த்த ஞாபகமும் இல்லை. ‘ஏன் என்னை தெரியவில்லையா?’ என்று அவரே பேச்சு கொடுத்தார். ஆமாம் என்று தலையசைத்தேன். 2004ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன்.. நீங்கள் விமான நிலையத்தை நோக்கி விஷ்ணு காஞ்சிபுரத்தை கடந்து பயணம் செய்து கொண்டிருந்தது ஞாபகம் வருகிறதா? என்று கேட்டார்.
பொதுவாக ஒவ்வொரு வருடமும் நான் விமான பயணம் மேற்கொண்டு இருக்கிறேன்… அதில் பலமுறை காஞ்சிபுரம் வழியாக மீனம்பாக்கம் சென்றிருக்கிறேன்… 2004ஆம் ஆண்டும் இருந்திருக்கும்… ‘இருக்கலாம்’ என்று அவரிடம் கூறினேன். அப்படி என்றால் நீங்கள் எனக்கு செய்த உதவி பெரிதாக உங்களுக்கு தெரியவில்லை… அன்று என் மனைவியும் மகனும் அவ்வழியாக செல்லும் அனைத்து கார்களையும் நிறுத்தி உதவி கோரினர்.. பலவகை காரணத்துக்காக அவர்கள் நிற்காமல் போயிருக்கலாம் ஆனால் நீங்கள் நிறுத்தினீர்கள். அன்று மிக மோசமான மாரடைப்பு எனக்கு, என்னையும் மனைவியையும் மகனையும் நீங்கள் அழைத்துக்கொண்டு மீனம்பாக்கத்தில் செல்லும் வழியில் உள்ள மருத்துவமனையில் எங்களை விட்டுச் சென்றீர்கள். இன்னும் சில மணி நேரம் தாமதித்திருந்தால்… அன்றே மரணம் என்னை தழுவி இருக்கும். அவரைப் பார்க்கும்போது அவருடன் பயணம் செய்த அந்த ஒரு மணி நேரத்தில் அவரின் வலியின் ஊடே நன்றியுடன் என்னை நினைத்துப் பார்த்ததை என்னால் அப்படியே உணர முடிந்தது. அவர் கூறும்போது இருந்த மகிழ்ச்சி அந்த நன்றி விவரிக்க இயலாத ஒரு மனோநிலையை எனக்குள் கொடுத்தது.
ஊர் வந்து சேர்ந்தேன். இங்கு விளம்பர பேப்பர்களும் புத்தகங்களும் வைப்பதற்கான தனியாக கடிதங்களைப் போடுவதற்கான தபால் பெட்டியின் கீழ் ஒரு வசதி வைத்திருப்போம்…
இதோ யார் இவர்….. அன்றைய ஆப்பிரிக்காவிலிருந்து வந்தது போல் மிகவும் மெலிந்து காணப்பட்ட ஒருவர் முகத்தில் எந்தவித சலனமுமின்றி என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்…. இப்பொழுது நினைவுக்கு வருகிறது யார் இவர் என்று…. அன்றொரு நாள் சனிக்கிழமை காலை சுமார் 11 மணி இருக்கும் விளம்பர பேப்பர்களையும் புத்தகங்களையும் எடுத்துவர வெளியே சென்றேன்.. அப்பொழுதுதான் சுமார் 40 லிருந்து 50 வயது இருக்கும் அவருக்கு…. ஒரு மனிதர் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு கட்டான விளம்பர துண்டு காகிதங்களில் ஒன்றை என் வீட்டு தபால் பெட்டியின் கீழே இருந்த இடத்தில் செருகி விட்டு திரும்பிக் கொண்டிருந்தார்… அவர் இந்தியரோ இல்லை பங்களாதேஷியரோ இல்லை இலங்கையோ சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை…. நான் வருவதை கண்டு திரும்பி புன்னகை பூத்தார்…. புன்னகையிலும் இவ்வளவு சோகங்களை தாங்கி இருக்க முடியுமா என்று அன்றுதான் உணர்ந்தேன். ஹலோ என்றேன், அவர் நீங்களும் இலங்கை இருந்து வந்தவரா என்று கேட்டார்… இல்லை நான் இந்தியன் என்று கூறிவிட்டு நீங்கள் என்று கேட்டேன்… நான் இலங்கையில் இருந்து வந்தவன் என்று கூறினார்.. புரிந்து கொண்டேன் அவர் கண்டிப்பாக அகதியாக தான் வந்திருப்பார்.. ஏதாவது வேலை செய்கிறீர்களா என்று கேட்டேன்….
அவர் என்னையே பார்த்துக் கொண்டிருந்து என் மனதை ஊடுருவிச் சென்றது… அந்த துளைத்தெடுக்கும் பார்வை என் நாடி நரம்புகளில் எல்லாம் பரவியது.. நானும் தமிழனாக இருப்பதாலோ என்னவோ? அன்று அவருக்கும் எனக்கும் என் வீட்டுக்கு முன்னே நடந்த உரையாடல்கள் நினைவுக்கு வந்தது….
இல்லை வேலை செய்யவில்லை, வேலையும் கிடைக்கவில்லை என்றார்.
அவருக்கு சில நிமிடங்களில் நேர்ந்ததை என்னிடம் கூறினார்… சிலரைப் பார்க்கும்போது மனதில் உள்ள குறைகளை கூறி அமைதி தேட முற்படுவார்களே அதேபோன்று என்னயும் நினைத்தாரோ என்னவோ… மிகக்கொடுமையான அந்த தினத்தில் நடந்ததை அவர் கூறியது.. இரண்டு பிள்ளைகளை வீட்டின் முன்பே வெட்டிக்கொன்ற கும்பல் வீட்டிற்குள் நுழையும் முன்பே தன் மனைவி 4 வயது பிள்ளையை அவரிடம் ஒப்படைத்துவிட்டு உடனடியாக இங்கிருந்து ஓடி விடுங்கள் நான் எப்படியாவது உங்களை வந்து பார்க்கிறேன் என்றதும் யோசிக்கக்கூட சில நொடிகளும் இல்லாத கட்டாயத்தில் இவர் 4 வயது மகனை தூக்கிக்கொண்டு ஓடி ஓடி வாழ்க்கையின் மூலைக்கே ஓடி 14 மாதங்கள் நரக வேதனையை அடைந்து உலகத்தின் மூலைக்கே வந்து சேர்ந்திருக்கிறார்… இது நடந்தே ஆறு வருடங்கள் ஆகிவிட்டது என்றார்… நான் அவரைப் பார்த்து அடுத்த கேள்வி கேட்பதற்கு முன்பே.. இல்லை அது தான் நான் என் மனைவியை கடைசியாகப் பார்த்தது என்று அவர் கூறும் போது அந்த 4 வயது மகன் இல்லை என்றால் அன்றே இறந்திருப்பார் என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது… பார்ப்பதற்கு இறுகின மனது உடையவனாக நான் தோன்றினாலும் உண்மையில் இது போன்றவைகளை என்னால் தாங்க முடியாது… அவரின் செல் நம்பரை வாங்கிக்கொண்டு என்னுடைய அலுவலக அட்டையை அவரிடம் கொடுத்து செவ்வாய்க்கிழமை என்னை வந்து சந்திக்கும்படி கூறினேன். அலுவலக வேலைப்பளு சுமையில் அவரை மறந்தே போனேன் இன்று இங்கு பார்க்கும் வரை..
கொரோனாவின் டெல்டா மாற்று தாக்கியதாகவும் இரண்டு நாட்களில் எல்லாம் முடிந்து விட்டதாகவும் கூறி மகன் என்ன கதி ஆனானோ என்று நினைத்து இப்போது என்னை பார்ப்பது நரகம் என்று நீங்கள் நினைப்பது ஒரு டிரெய்லர் படம் போன்றதே…. நான் முழு படத்தையும் அந்த நிமிடங்களில் அனுபவித்தேன். நாடி நரம்பெல்லாம் என்ன மூளையின் 200 கோடி நீயுரோன்களும் ஒருசேர நான் அவருக்கு ஒரு வாரம் கழித்தாவது போன் செய்து இருக்க வேண்டும் என்ற குற்ற உணர்ச்சி என்னுள் புகுத்தியது.
திடீரென்று இந்த காட்சிகள் எல்லாம் மறைந்துவிட்டது. நரக வேதனையிலிருந்து சொர்க்கத்தின் எல்லையை தொட்டேன்…. இது தெய்வீகமா இல்லை சித்த நிலையா இல்லை முத்தி நிலையா என்று புரிந்து கொள்ள முடியாத, ஆனாலும் ஒவ்வொரு நொடியின் பாகங்களையும் அணுவணுவாக ரசிக்கும்படி ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் என்னுள் உருவாக்கியது……
படபடவென்று சில பறவைகள் என் மேல் வந்து அமர்ந்தன… பல பறவைகள் என்னை சுற்றி அமர்ந்தன.. அதில் சில பறவைகளையே என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது.. ஆமாம் இந்த சில பறவைகள் கடைசி காலத்தில் அவைகளால் பறக்க முடியாமலோ இல்லை நோயுற்றோ இல்லை உணவு பஞ்சத்தாலோ என்னிடம் அடைக்கலம் வந்தவை… என்னால் முடிந்தவரை எல்லாவற்றையும் காப்பாற்ற முனைந்தேன்….. சிலவற்றை காப்பாற்றினேன் சிலவற்றிற்கு இறுதி அஞ்சலிகளையும் செலுத்தினேன். என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடியாத மற்ற பறவைகளுக்கு உணவு அளித்து இருப்பேனோ என்னவோ…..
சொர்க்கம் நரகம் என்பது, நானும் நீங்களும் நினைப்பதுபோல் அல்ல….. அது நம் வாழ்க்கைப் பயணத்தில் செய்த நல்லவைகளும் தீயவைகளும் தான்.. இரண்டின் பலாபலன்களும் தான் சொர்க்கமும் நரகமும்….. இந்தப் பிறவிக்கடலில் நல்லவைகளை மட்டுமே செய்து நீந்துவர் இனி எப்போதும் வாழ்க்கைப் பயணம் செய்ய தேவையில்லை என்று புரிந்து கொண்டேன்.