top of page
Search
melbournesivastori

இயலாமை. by சிவா.

Updated: May 26

 

என் உடலில் ஏற்படும் அறிகுறிகள் தெள்ளத் தெளிவாக எனக்கு புரிய வைத்தது… எப்படி இவ்வளவு அஜாக்கிரதையாக இருந்தேன் என்று எனக்கே புரியவில்லை… இதுதான் விதியா இல்லை  ஓவர் கான்ஃபிடன்சா? சிறு வயது முதலே எனக்கு இயற்கை வாழ்க்கையின் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு இருப்பினும் வேறு வழியில் என் வாழ்க்கை பாதையை மாற்றிக் கொண்டு மருத்துவத்துறையில் படிப்பை, மேற்படிப்பை முடித்து புற்றுநோயில் நிபுணத்துவம் பெற்றேன். திருமணம் முடிந்து இரு குழந்தைகளைப் பெற்றேன்….. குழந்தைகளா…… மகன், மகள்  இருவருக்கும் திருமணம் நடந்து அவர்களுக்கும் குழந்தை உள்ளது.

     வாழ்க்கை அவசரகதியில் ஓடியது… அவசரகதி எனக்கில்லை என்னைத் தேடி வரும் நோயாளிகளுக்கு. இவ்வளவு பேருக்கு எப்படி, ஏன் புற்றுநோய் வருகிறது என்றே எனக்குப் புரியவில்லை. விதவிதமான புற்று நோய்கள்… வயதில் ஏற்றத்தாழ்வே இல்லை.. முதன் முதலில் சிகிச்சை  அளிக்கும் போது அந்த மன வருத்தத்தில் இருந்து வெளியே வர இரண்டு மூன்று நாட்களாகும்…இவ்வளவு காலம் கடந்து எல்லாவற்றையும் பார்த்துவிட்டு முதிர்ச்சி வந்து விட்டது…. வயதினால் கூட இருக்கலாம்.

     சரி இனி யோசித்து பயனில்லை, எல்லா வகை சோதனைகளையும் எனக்கு நானே செய்து பார்க்க முடிவு செய்துவிட்டேன். சரியான முடிவுகள் வர இரண்டு மூன்று நாட்களாகும், அதன் பிறகு அந்த முடிவுகளால் மேற்கொண்டு எந்தெந்த சோதனைகள் செய்ய வேண்டுமோ அதையும் செய்து பார்த்து விட வேண்டும். 

   மனைவியின் அழைப்பு கேட்டு கீழே சென்றேன். நாளை மறுநாள் என் பேரனுக்கு அதாவது மகளின் மகனுக்கு பிறந்தநாள். அவனுக்கு பரிசு பொருள்கள் வாங்கவும், துணிமணிகள் வாங்கவும் இன்று செல்லலாம் என்று கூறினாள்.. என்னுள் நடக்கும் மனப் போராட்டத்தை அவளிடம் தெரிவிக்க விரும்பவில்லை.. சரி செல்லலாம் என்றேன். ஏன் சில நாட்களாக குறைவாக சாப்பிடுகிறீர்கள் எனக்கு தெரியாமல் ஏதாவது நொறுக்கு தீனி சாப்பிடுகிறீர்களா என்று சில முறை கேட்க, வெற்று சிரிப்பையே பதிலாக தந்தேன். 

     எனக்குப் பிறகு எப்படித்தான் இருக்க போகிறாளோ…. மகனிடமும், மகளிடமும், மருமகளிடமும், மருமகனிடமும் பாசம் உண்டு தான்..  அவர்களும் இவளை நன்றாக பார்த்துக் கொள்வார்கள்… இருப்பினும் என் மனைவி பற்றி எனக்கு நன்றாக தெரியும்… அவள் தனிமை விரும்பி அல்ல ஆனால் யாருடைய தைவிலும் இருக்க விரும்பாதவள் ஏன் நான் சம்பாதித்த, சம்பாதிக்கும் பணத்தையும் மகன், மகள் குடும்பத்திற்கே செலவு செய்தாள். அவள் அலுவலகத்தில் இது நாள் வரை சம்பாதித்த பணத்தையே தன் செலவுகளுக்கு பயன்படுத்திக் கொண்டாள். தன் காலிலேயே நிற்க வேண்டும் என்று நினைப்பவள்… அது ஒரு மனோநிலை… உரிமை பாராட்டாத நிலை, ஒட்டுதல் இல்லாத நிலை… தான் பெற்ற மகனுக்கும், மகளுக்குமே அந்த மனோநிலையை புரிந்து கொள்ள முடியவில்லை…. அதன் குழப்பத்தை ஏற்க முடியாமல் என்னிடமே விட்டுச் சென்றார்கள்… நினைத்துப் பார்த்தேன் புன்முருவல் வந்தது… என்ன உங்களுக்கு நீங்களே சிரித்துக் கொள்கிறீர்கள் என்று என் மனைவி கேட்க, என்னவென்று சொல்ல… நான் எதையாவது சொல்ல, எவருமே  எதிர்பாக்காத காரணத்தை அதற்கு அவள் புரிந்து கொள்ள… இன்றைய பொழுது வெளியே செல்லாமல், பேரனுக்கு பரிசுப் பொருட்கள் வாங்காமல், துணிமணிகள் வாங்காமல், பிரிட்ஜில் இருக்கும் நேற்றைய உணவே சாப்பிட வேண்டிய நிலைமை ஏற்படும். நான் இருக்கும் இந்த நிலையில்… இன்று வருமோ அல்லது நாளை வருமோ அல்லது என்று வருமோ என்ற குழப்பம் எனக்கே இருக்க… இனி விளையாட்டாக கூட என் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள  விரும்பவில்லை.

   தன் சொந்த வருத்தங்களை மற்றவர்களுக்கு கடத்தக் கூடாது என்று எனக்கு என் அண்ணன் கூறியது பசு மரத்து ஆணி போல பதிந்து, துருப்பிடித்து தங்கியும் விட்டது.. 

   என் பேரனின் பிறந்த நாள் கோலாகலமாக  துவங்கியது… என் குடும்பம் மட்டுமல்லாமல், மருமகள், மருமகனின் குடும்பங்களும், நட்பு வட்டாரங்களும் கலந்து கொள்ள நான்கு வயது பேரனும் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று புரிந்து கொண்டேன். ஒரு சிலர் என் மெலியும் தேகத்தைக் கண்டு இந்த வயதிலும் கட்டுக்கோப்பாக இருக்கிறீர்கள் என்று சொல்ல எனக்கு சிரிப்பு தான் வந்தது….  இதையும் கடந்து என் நண்பன் ஒருவன் நூறு வயது வரையிலும் கண்ணு மாதிரி இருப்பாடா என்று சொல்ல.. இந்த வாக்கியமே அடுத்த வருடம் அவனுக்கு உறுத்தலாக அமையும் என்று புரிந்து வருத்தப்பட்டேன்.

   ‘லைப் கோசான்’ என்று சொல்வார்கள்… ஆமாம் இன்னும் பத்து நாட்களில் என் பேத்திக்கு  அதாவது மகனின் மகளுக்கு இரண்டாவது பிறந்தநாள்… அதற்கு நாளை முதலே என் மனைவியின் ஏற்பாடுகள் துவங்கிவிடும். 

    இதன் நடுவில் நன்கு தெரிந்த  ஒருவர் தன் பேரப்பிள்ளைகளுக்கு மொட்டை அடித்து காது குத்த போகிறார்கள்…. தட்ட முடியாத நட்பு…. இன்று கிளம்பி செல்கிறேன். நானும் என் மனைவியும் மட்டும் தான்… அந்த ஊரும் வந்து சேர்ந்தது. காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு டிரைவர் அங்கேயே இருக்க, நாங்கள் மட்டும் அந்த கோவிலை நோக்கி சென்றோம்.

   ஆரம்பமே மனதிற்கு வலியை தந்தது.

 ஏற்கனவே அங்கு கும்பிட்டு கொடுத்த பிரசாதத்தை வைத்திருந்த ஒரு பிச்சைக்கார குடும்பம், நான் கொடுக்க நீட்டிய ஐம்பது ரூபாய் நோட்டை  வாங்க, கீழே  வைத்த பிரசாதத்தை அருகில் இருந்த இரு நாய்கள் கவ்விச்சென்ற நிகழ்ச்சி தான் அது.. என்று நம் மக்கள் இதிலிருந்து மீளப் போகிறார்களோ…

  இவையெல்லாம் நின்று யோசிக்க யாருக்கும் நேரமில்லை, எனக்கும் நேரமில்லை…  யாராவது ஒரு முற்போக்கு எழுத்தாளர் இதைப் பற்றி எழுதப் போகிறார் இல்லை எழுதியும் இருப்பார். அதன்மூலம் அரசாங்கத்தின் விருதையும் வாங்கி இருப்பார்… யாருக்கு தெரியும்!?  கோவிலை நோக்கி தொடர்ந்து நடந்தேன்.  

   அடுத்து நான் கண்ட காட்சி இதுவரை எனக்கு இருந்த நம்பிக்கையையே ஆட்டம் காண வைத்தது….

   அதைக் கண்டு என் மனைவியும் அதிர்ந்தாள். 

    சாலை ஓரத்தில்  குவியலாக கொட்டி வைக்கப்பட்டிருந்த பழங்கால சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்த கற்தூண்கள், அவைகளுக்கிடையில்  பண்டைய தமிழ் எழுத்துக்களால் குறிப்புகள் பொறிக்கப்பட்ட கற்பலகைகள் அவைகளின் மீது  அமர்ந்திருந்த இரு இளைஞர்கள்…. தாங்கள் அணிந்திருந்த உள்ளாடைகள் தெரியும்படி கட்டியிருந்த லுங்கியுடன்.

  இது பரவலாக தமிழ் நாடு எங்கும் தெரியக்கூடிய காட்சியாக இருப்பினும் அவர்கள் பேசிக் கொண்டது இனி நாம் திருந்த வாய்ப்பே இல்லை ராஜா என்றே நினைக்கத் தோன்றியது.

  நான் அவற்றை விவரிப்பதை விட அவர்கள் பேச்சினை அப்படியே தருகிறேன்.

  ‘ நம்மாளு செய்து காண்பிச்சிட்டார் மச்சான்…. பாரு கோவிலு இப்ப இன்னா  நல்லா இருக்குது’

  ‘ என்னடா சொல்ற ஒய்’

  ‘ போன வருஷம் அசிங்கமா  பாழடைஞ்சி கெடந்த கோவில மாத்தி கல்ல எல்லாம் தூக்கி வீசிட்டு சிமெண்ட்ல தூளா கட்னார் பாரு…. அதுதான் சொல்றேன் ‘

‘ இதோ இந்த கல்லுங்கள சொல்றியா?’

 ‘ஆமா’

‘ போன வாரம்,  லூசு மாதிரி ஒருத்தன் வந்தானாம்… வந்து இதெல்லாம் சுத்தம் பண்ணி பத்திரமா வைக்கணும்னு சொன்னானாம் ‘

 ‘அதுக்கு நம்ம ஆளு என்ன சொன்னார்?’

‘ சுத்தம் பண்றதா, அடுத்த மாசம் என் வீட்டுக்கு காம்பவுண்ட் கற்றத்துக்கு  யூஸ் பண்ணிக்கலாம்னு இருக்கேன்… ஒனும்னா  சொல்லு ஒரு ரேட் போட்டு கொடுத்துட்டு  எடுத்துட்டு போயிடுன்னு’

‘ உன்னும் ஏன் இங்கேயேஇருகுது? அந்த லூசு வாங்கிலையா?’

‘ ஆமா மச்சான், அந்த லூசுக்கு நம்மாளுடைய பவர் தெரியாது போல… ஐயோ இதெல்லாம் வாங்குனா ஜெயில்ல போடுவாங்கன்னு சொல்லிட்டு ஓடாத குறையா ஓடிட்டானாம்’

 இதற்கு மேலும் எங்களுக்கு இன்றைய தலைமுறையின் இத்தகைய அறியாமை பேச்சுக்களைக் கேட்கும் மனதிடம் இல்லை… தொடர்ந்து சென்று அருகில் கட்டப்பட்டிருந்த கருப்பு வெள்ளாடை கடந்து கோவிலுக்குள் சென்றோம். நிறைய கலர்ல இருக்கும் ஆட்டிற்கு ஏன் வெள்ளாடு என்று பெயர் வந்தது?!.

  நிகழ்ச்சியில் ஒரு மணி நேரம் இருந்து விட்டு நாங்கள் விடைபெறுகிறோம் என்று கூறினோம்..

 அதற்கு அந்தத் தெரிந்தவர், ‘ எளம் கடாவ இப்பதான் பலி கொடுத்தோம்… கொஞ்ச நேரம் இருங்க சூப்பரா பிரியாணி ஆயிடும் சாப்டு போங்க’ என்று சொன்னதை கேட்டு அந்தக் கருப்பு வெள்ளாடு நொடியில் நினைவில் வந்து தடுமாறினேன்..

 ‘ மன்னிச்சிடுங்க, கொஞ்சம் வேலை இருக்குது சீக்கிரம் ஊருக்கு போனம்’ என்று கூறிவிட்டு கனத்த மனத்துடன் கிளம்பினோம்.

   இரு நாட்கள் கழிந்தது, நான் செய்து கொண்ட சில சோதனைகளின் முடிவு எனக்கு பாதகமாக வந்தது. நான் எதிர்பார்த்ததுதான்…. இருப்பினும் என் மனதின் ஓரத்தில் எங்கையோ ஒரு எதிர்பார்ப்பு…ஒரு நம்பிக்கை சாதகமாக வரலாம் என்று இருந்தது, சுக்கு நூறாக உடைந்தது. மனதை திட படுத்திக் கொண்டு ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் வேறு வழி இல்லை. எனக்குள் நானே ஒரு முடிவு செய்து கொண்டேன்.  இதை என் குடும்பத்தாருக்கும் மற்றும் யாருக்கும் எக்காலத்திலும் தெரிவிக்க கூடாது என்று. எனக்குள் சிரிப்பு வந்தது… எக்காலத்திலும்… அது என்ன எக்காலத்திலும் நான் இருக்கும் வரை தானே…பிறகு அனைவருக்கும் தெரியத்தானே போகிறது?…..

  ஒரு வாரம் கழிந்து என் மகனின் மகளுக்கு…..என் பேத்தியின் இரண்டாவது பிறந்த தினமும் வந்து சென்றது.. சாதாரண மனிதர்களும் அசாதாரண நடிப்புத் திறனை வெளிப்படுத்த முடியும் என்று அந்தப் பிறந்தநாளில் என் மனதின் தடுமாற்றங்களை யாரும் அறியா வண்ணம் நான் பார்த்துக்கொண்டதே அதற்குச் சான்று. 

   எக்காலமும் என்பது ஒரு சில மாதங்களே என்று என் உடலின் மாற்றங்கள் எனக்குத் தெள்ளத் தெளிவாக புரிய வைத்தது. ஒரு முடிவுக்கு வந்தேன்…. 

     வெளிநாட்டில் இருக்கும் என் நண்பன் இளங்கோ ஒரு அலாதியான இயற்கை பிரியன் என்னை போன்று.. கடைசி காலத்தில் நம் ஊரிலேயே மனிதர்களின் தொடர்பு இல்லாமல் இயற்கை சூழலில் வாழ வேலூர் அருகில் ஆலங்காயம் காட்டுப் பகுதியில் ஒரு சிறு வீட்டையும் சுற்றிலும் தோட்டத்தையும் அமைத்துக் கட்டியிருந்தான்… அதைக்கட்ட படாத பாடு பட்டான்… ஏனென்றால் அங்கு செல்ல சாலை வசதி இல்லை ஒற்றையடி பாதை மட்டுமே. அந்த சூழ்நிலை தான் அவனுக்கு பிடித்தது.. கடைசி காலத்தை அங்கு கழிக்க விரும்பியவனின் விதி அவன் பேரன், பேத்தியின் அபார பாசப்பிணைப்பு வெளிநாட்டிலேயே கட்டி போட வைத்தது. ஊருக்கு வந்திருந்த அவன் என் பேரன், பேத்தி இருவருடைய பிறந்த நாளில் கலந்து கொள்ளும் போது தான் இனி அவனால் அங்கு தங்க முடியாது என்று என்னை எடுத்துக் கொள்ளச் சொன்னான். எவ்வளவு பணம் என்று கேட்டேன்.. அதற்கு அவன் நீ உன் மனைவியுடன் போய் ஓரிரு வாரங்கள் அங்கு தங்கி பார்… நான் இன்னும் இரு மாதங்கள் இந்தியா முழுவதும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சுற்றிப் பார்க்கப் போகிறேன்..  அந்த வீடு உனக்கு பிடிக்கும் பட்சத்தில் உன் பெயருக்கு மாற்றித் தருகிறேன். அரசாங்க நிர்ணய மதிப்பீட்டின்படி எவ்வளவு தர வேண்டுமோ அதை நாம் இருவருமே சென்று வேலூர் வள்ளலார் முதியோர் இல்லத்திற்கு கொடுத்துவிடலாம் என்றான். இக்காலத்தில் இது போன்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

      ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்து, தேவையான அளவிற்கு என் மருந்துகளையும் ஓரிரு மாதங்கள் தங்க தேவையானவற்றையும் எடுத்துக் கொண்டேன். மகனும் மகளும் என் முடிவிற்கு குறுக்கே நிற்க போவதில்லை… ஆனால் மனைவியிடம் மட்டும் எப்படி சொல்வது என்று தடுமாறினேன்…. நீண்ட சிந்தனைக்கு பிறகு ‘ இயற்கை உணவில் புற்றுநோயை தவிர்த்தல் ‘ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதலாம் என்று இருக்கிறேன், அதற்காக ஆலங்காயத்தில் இருக்கும் இளங்கோ வீட்டிற்குச் சென்று இரண்டு மூன்று வாரங்கள் இருக்கலாம் என்று நினைக்கிறேன் என்று மனைவியிடம் கூறினேன். 

    மனைவிக்கு எந்த சந்தேகமும் வரவில்லை ஏனென்றால் நான் புற்றுநோய் நிபுணன்… ‘ ஐயோ என்னால எல்லாம்  அங்கு போய் நம் பேரன், பேத்திகளை விட்டு தாங்க முடியாது…. நீங்க வேணா போய் தங்கிட்டு வாங்க… ஆனா மூன்று வாரம் வேணாம் ரெண்டு வாரத்துக்கு பிறகு வந்து போங்க’ என்று என் மனைவி சொன்னது எனக்கு பெருத்த நிம்மதியை கொடுத்தது. கடைசி காலம் அங்கு என் குடும்பத்தை விட்டு இருக்கப் போகிறேன் என்று நினைக்கும் போதே மனது கனத்தது… ‘ சரி இரண்டு வாரங்கள் கழித்து வந்து ஓரிரு நாட்கள் இருந்து விட்டு செல்கிறேன் ‘ என்றேன்.   

    ஏற்கனவே இளங்கோவிடம் கூறி அவன் ஆலங்காயம்  வீட்டுக்கு அருகில் இருக்கும் தெரிந்த ஒருவரிடம்  இரண்டு மூன்று மாதங்களுக்கு வேண்டிய மளிகை சாமான்களையும் மூன்று கேஸ் சிலிண்டர்களையும் அங்கு வைக்க ஏற்பாடு செய்து விட்டேன். எனக்கு தேவையான மருந்துகள்தான் என் பெட்டியின் பாதி பகுதிக்கு மேல் அடைத்தது….. துணி மணிகளை எடுத்துக்கொள்ள உல்லாசமா செல்ல போகிறேன்?…. மாற்றிக்கொள்ள இரு செட் துணிகளை மட்டும் எடுத்துக் கொண்டேன். ஒரு மாதத்திற்கு முன்பே நோயாளிகளிடம் சொல்லிவிட்டேன், இரு மாதங்கள் இருக்கப் போவதில்லை என்று. இனி இருக்கப் போவதில்லை என்று சொல்ல மனம் வரவில்லை.

     ஆலங்காயம்  கிராமத்துக்கு ஒதுக்குப்புறமாக இருந்த பாழடைந்த கோவில் வரை காரில் சென்று பிறகு நடக்க ஆரம்பித்தேன். டிரைவர் என் பெட்டியை எடுத்துக் கொண்டு தங்கப் போகும் வீடு வரை வந்து விட்டுப் போவதாக  அடம் பிடித்ததால் சரி என்றேன். சுமார் இரண்டு கிலோமீட்டர் நடக்க வேண்டும். நடக்க ஆரம்பித்தோம்.

    சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்திருப்போம், ஒரு புதர் அருகில் முனகல் சத்தம் கேட்டு தேடிப் பார்க்கையில் தனியாக ஒரு நாய்க்குட்டி அழுவதற்கும் சக்தி இல்லாமல் முனகி  கொண்டிருந்தது…. நானாவது வாழ்ந்து முடித்தவன்.. இது சிறு குழந்தை… ஒரே நிமிடம் தான் யோசித்தேன்… பிறகு முடிவு செய்து விட்டேன். பத்து நிமிடங்கள் சுற்றும் முற்றும் பார்க்கலாம் தாய் நாய் வந்தால் விட்டுவிடலாம், இல்லையெனில் என்னுடன் அழைத்துச் செல்லலாம் என்று. உடன் எடுத்து வந்த பிஸ்கட் கொடுத்தேன்.. அதை உண்ணவே  கடினப்பட்டது. தண்ணீரில் நனைத்துக் கொடுத்தவுடன் ஒரு பிஸ்கட்டை மட்டும் உண்டது. பத்து நிமிடங்கள் கடந்தும் தாய் நாயை காணாததால் அந்த குட்டி நாயை  என்னுடன் எடுத்துக் கொண்டேன். 

   இளங்கோவின் வீடு வந்து சேர்ந்தோம். தெரிந்தவர் சுத்தம் செய்து வைத்திருந்தார். எல்லா மளிகை பொருட்களும் சீராக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது… முக்கியமாக ஒன்றை தேடினேன், அதுவும் இருந்தது.. எனக்காக வாங்கியது இனி இந்த குட்டி செல்லத்திற்கு உபயோகப்பட போகிறது. மூன்று பெரிய பால் பவுடர் டின்கள்.

     டிரைவரிடம் கூறினேன், ‘ மனோ அம்மாவிடம் சொல்லிவிடு எல்லாம் நன்றாக இருக்கிறது.. இரு வாரங்கள் கழித்து வருகிறேன், மாற்றம் இருந்தால் ஆலங்காயம் வந்து மொபைல் போனில் ரிசப்ஷன் கிடைக்கும் இடத்தில் இருந்து போன் செய்கிறேன் என்று’ அவரும் சரி என்று வேறு ஏதாவது தேவை என்றால்  அழைக்கும் படி கூறிவிட்டு சென்றார். 

     முதல் வேலையாக கொஞ்சம் பவுடர் பாலை காய்ச்சி பிஸ்கட் துண்டுகளுடன் அந்தக் குழந்தைக்கு கொடுத்தேன்.. பாலுடன் இருப்பதால் தடுமாறி ஆவலுடன் சாப்பிட்டது. அருகில் இருந்த கோணிப்பைகளில் அந்தக் குழந்தைக்கு  முடிந்தவரை நல்ல படுக்கையை ஏற்பாடு செய்தேன்.  மாலை பால் இல்லா தேநீர் எடுத்துக்கொண்டு தோட்டத்தில் அமர்ந்து பருக ஆரம்பித்தேன்.. இனி தேநீரை பால் இல்லாமல் தான் பழகிக் கொள்ள வேண்டும்.. என்னை நம்பி இந்தச் செல்லம் இருப்பதால். நகர்ப்புறத்தின் வெளிச்சங்கள் இல்லாமல் ஆகாயத்தில் நட்சத்திரங்களின் கூட்டம் வைரத்தைப் போல் மின்னியது. 

   மூன்றுநாட்கள் சென்றது… உடல் வலி, சோர்வு நாளுக்கு நாள் அதிகரித்தது.. கடைசி காலத்தில் தனியாக இருக்க விருப்பப்பட்டவனுக்கு ஏனோ இந்த குழந்தையின் அறிமுகம் பெரும் பொறுப்பினை தந்தது. அதை வேலா வேலைக்கு கவனிக்க தடுமாறினேன்… 

 ஒரு வாரம் கழிந்தது, கழிந்தது என்பதை விட கழிக்க ஒவ்வொரு நிமிடத்தையும் உணர வைத்தது என்பதுதான் என் நோயின் கொடுமை. 

 10 நாட்கள் கடந்தது, படுக்கையிலிருந்து எழவே மிகுந்த சிரமப்பட்டேன்.. நான் கண்விழித்ததை பார்த்து தன் குட்டி வாலை ஆட்டிக் கொண்டே செல்ல குட்டி என்னை நோக்கி ஓடிவந்து நான் தடுமாறியதைக் கண்டு  ‘வூங்’ என்று முனகி அருகில் அமர்ந்தது.

  முருகா ஏன் எனக்கு இந்த சோதனை கடைசி காலத்தில்… வலி குறைப்பு மாத்திரைகளை எடுத்துக் கொண்டும் வலி குறைந்த பாடு இல்லை.. தங்கத்தின் விலையைப் போன்று ஏறிக் கொண்டே இருந்தது. என் உள் மனது எனக்கு கூறியதை தொடர்ந்து தடுமாறி எழுந்து பெரிய பாத்திரத்தில் நிறைய பால் பவுடரை போட்டு கொதிக்க வைத்தேன்… நன்றாக கொதித்து அதை இறக்கி  ஆற வைத்து தரையில் பல கிண்ணங்களில் ஊற்றி வைத்தேன். எடுத்து வந்த எல்லா பிஸ்கட் பாக்கெட்டுகளையும் பிரித்து பெரிய தட்டில் பரப்பி வைத்தேன். பெரிய இமாலய வேலை செய்து முடித்த அயற்சி எனக்கு இருந்தது.. அருகில் இருந்த டாய்லெட்டுக்கு  செல்லவே கடினப்பட்டேன்…. இன்னும் ஐந்து ஆறு நாட்கள் கழித்து தான் ஆலங்காயம் சென்று வீட்டுக்கு போன் செய்வதாக இல்லை செல்வதாக கூறி இருந்தேன்.. ஆனால் தோட்டத்திற்கு செல்வதே முடியுமா என்று எனக்கு சந்தேகம் வந்துவிட்டது… இதைத்தான் உயிர் போகும் வலி என்கிறார்களோ?!

   டாய்லெட்டில் இருந்து வந்து மீண்டும் படுக்கையில் அமர்ந்தேன். ஏதோ நடக்கிறது என்று இவற்றையெல்லாம் அந்த செல்லக்குட்டி முனகிக் கொண்டே என்னை பார்த்துக் கொண்டிருந்தது. பல பல வருடங்கள் கழித்து… இந்த உயிர் போகும் வலியிலும் கண்ணீர் விடாத நான், இந்த செல்லக் குழந்தையை பார்த்து என்னை மீறி வாய் திறக்காமல் அழுதேன். நீண்ட நேரம் அமர முடியவில்லை…. அப்படியே படுக்கையில் சாய்ந்தேன்…. இந்தக் குழந்தையை பார்த்துக் கொண்டே என் கண்கள் நிலை குத்தியது.

62 views

Recent Posts

See All
bottom of page