மிகத் தீவிரமாக யோசித்துப் பார்த்தால் அறிவியலும், மதமும் ஒன்று என்றே தோன்றுகிறது… இரண்டிலும் மாற்றுக்கருத்து இருந்தால் ஏற்றுக் கொள்வது என்பது மிக மிக கடினம்.. மிகத் தீவிர முயற்சியில் நிரூபிக்க முற்பட்டாலும் இவை இரண்டின் அதிகார பீடமும் அதனை தகர்த்துவிடும். இதையே வேறு விதமாக யோசித்துப் பார்த்தால் ஆன்மிகத்திற்கும் அமானுஷ்ய நிகழ்வுகளுக்கும் ஒருவித ஒற்றுமையைக் காண முடிகிறது… இவை இரண்டும் தனி ஒருவருடைய அனுபவமும், புரிதலும் மட்டுமே… இந்த அனுபவங்களைப் பெற்ற ஒருவர் அதை மற்றவர்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லை…. இவைகளை நோக்கித்தான் நம் உலகம் வேகமாக சென்று கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது…. இவைகளை ஏன் நான் குறிப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதா? இனி நான் கூற போவதற்கும் இவைகளுக்கும் தொடர்புள்ளதா என்று நீங்களே தெரிந்துகொள்ளுங்கள், புரிந்துகொள்ளுங்கள்.
' காக்கை குருவி எங்கள் ஜாதி' என்றான் நம் பாட்டன் சுப்பிரமணிய பாரதி!
நாம் ஒரு படி மேலே சொல்வோம்,
' கல்லும் மண்ணும் கூட எங்கள் ஜாதி!'
எல்லாவற்றிலும் ஆன்மா இருக்கிறது என்ற நம்பிக்கை இருந்தது அந்த காலத்தில்… அந்த நம்பிக்கைக்கு வலு சேர்க்காமல்… அதை புரிந்து கொள்ளவும் முயற்சி செய்யாமல் தான்தோன்றித்தனமாக தனக்கு தோன்றியதை எல்லாம் சிலர் கூறியதை, புரியாததையெல்லாம், புரிந்து கொள்ள முடியாததை எல்லாம் மூடநம்பிக்கைகள் என்று மூர்க்கத்தனமாக எதிர்த்த பகுத்தறிவு என்ற வார்த்தையை படாதபாடு படுத்திக் கொண்டிருக்கும், கடவுள் மறுப்பு ஒன்றே முனைவர் பட்டம் என்று கருதிக் கொள்ளும் கூட்டம் குழப்ப…. அவசர கதியில் ஓடிக்கொண்டிருக்கும் பெருங்கூட்டம் அதை நம்ப… ஆன்மீகப் பயணம் என்ற அற்புத பயணத்தை ஒரு கூட்டம் கடவுளின் பெயராலும் மறு கூட்டம் கடவுள் மறுப்பின் பெயராலும் சின்னா பின்னம் படுத்தியது.
இதைப் படிப்பதே குழப்பமாக இருந்தால் இனி வருபவற்றை படிப்பது கடினமாகத்தான் இருக்கும்… இருப்பினும் எவ்வளவு எளிதாக விளக்க முடியுமோ முயற்சி செய்கிறேன்.
பிரபஞ்சமே ஒரு ஆன்மா என்று குழப்பமாக இருந்தாலும் நம்புங்கள்…
ஈர்ப்பு விசை, அண்டத்தையும் வளைக்கும் ஒளியையும் வளைக்கும்…
வேகம், காலத்தையும் வளைக்கும்.
காலம் அதாவது நேரம் ஒரு நேர்கோட்டில் ஒரே சீராக பயணிக்கிறது என்று நினைக்க…. இல்லை அது நேர்கோட்டிலும் இல்லை ஒரே சீராகவும் இல்லை என்று இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக புரிய வருகிறது….
ஒளியின் வேகம் ஒரு வினாடிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டருக்கும் சற்றே குறைவு.. அறிவியல் படி அந்த ஒளியின் வேகத்தையும் கடந்து வேகம் எடுத்தால் நேரம் மெதுவாக நகரும் என்கிறது… அதாவது அந்த வேகத்தில் ஒரு மணி நேரம் பயணம் செய்வதாக வைத்துக் கொள்வோம்… நமக்கு ஆன நேரம் ஒரு மணி நேரம், அதே சமயத்தில் பூமியில் இருக்கும் நமது சுற்றத்திற்கும் நட்புக்கும் பூமியில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் ஒரு வருடத்திற்கு மேலும் கடந்து இருக்கலாம்… எளிதாக புரிந்து கொள்ள தோராயமாக கூறினால் ஒளியின் வேகத்தை விட அதிக வேகத்தில் ஒரு மணி நேரம் பயணம் செய்து திரும்பி வந்தால் உங்களைத் தவிர மற்றவர்களுக்கு ஒரு வருடத்திற்கு மேலாக வயது கூடிவிட்டிருக்கும்…
வேகம் மட்டுமா நேரத்தை பாதிக்கிறது என்றால் இல்லை… ஈர்ப்பு விசையும் பாதிக்கிறது. நம் பூமியை எடுத்துக் கொள்வோம்.. ஈர்ப்பு விசையை நம் பூமியில் புவி ஈர்ப்பு விசை என்கிறோம். இங்கும் நேரம் மாறுபடுகிறது.. கடல் மட்டத்தில் கடக்கும் நேரத்தை விட மிகச் சிறிய அளவு இமயமலை மேல் குறைவாக கடக்கும். நேரத்தையாவது புரிந்துகொள்ள கடிகாரம் என்று ஒன்று உள்ளது… இந்த அண்டத்தை புரிந்துகொள்ள மூளையை கசக்க வேண்டியதாக இருக்கும்.
இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாம் ஒரே நேரத்தில் நடக்கிறது என்றால் அதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வதே கடினம். அப்படித்தான் நடக்கிறது, நிகழ்கிறது என்ற ஒரு நியதி இப்போது வலுக்கிறது. எளிதாக புரிய வைக்க முயற்சி செய்கிறேன்…
காலம் ஒரு புத்தகத்தை போன்றது..
அதில் எல்லாம் அச்சிடப்பட்டிருக்கிறது. நீங்கள் படிக்கும் இந்தப் பக்கங்கள் நிகழ்காலமாக எடுத்துக் கொள்ளுங்கள்.. படித்து முடித்த பக்கங்கள் இறந்த காலம்…. அதே புத்தகத்தில் எதிர்காலமும் இருக்கிறது ஆனால் இன்னும் நீங்கள் படிக்கவில்லை… இது போலத்தான் காலமும் என்கிறார்கள்.
அமெரிக்காவில் நடந்த இரு நிகழ்ச்சிகளை உதாரணமாக கொடுத்துவிட்டு நம் கதைக்கு செல்வோம்…
சென்ற நூற்றாண்டில் ஒரு முறை ஒரு கிராமத்தில் ஏதோ ஒரு விதமான மொழியில் மக்கள் உரையாடுவது தெள்ளத்தெளிவாக கேட்க துவங்கியது… அதைக் கேட்டுக் கொண்டிருந்த சிலருக்கு குழப்பம் அதிகமாகி பேய்கள், பிசாசுகள் போன்று ஏதோ ஒன்று என்று நம்ப ஒரு சிலர் இதை அறிவியல் பூர்வமான ஆராய்ச்சி செய்ய முடிவு செய்து உலகின் பல மொழிகளை ஒப்பிட்டுப் பார்க்க…. கடைசியாக அது வேல்ஸ் நாட்டில் பேசப்பட்ட மொழி என்று தெரிந்தது. அடுத்து ஆராய அப்போதைக்கு சுமார் 150 வருடங்களுக்கு முன்பு அங்கு வேல்ஸ் நாட்டில் இருந்து வந்தவர்கள் குடியேறி இருந்தது தெரிந்தது.
கால தடுமாற்றத்தால் (கிலிட்ச்) அந்த சமயத்தின் மக்களின் நடமாட்ட பேச்சுக்கள் தற்செயலாக எதிர்காலத்தில் இருந்த மனிதர்களுக்கு கேட்டது. அப்படி என்றால் நிகழ்கால மனிதர்கள் பேசிய பேச்சுக்களும் அந்த சமயத்தில் வாழ்ந்த அந்த மக்களுக்கும் கேட்டிருக்கும்.
இது காலத்தின் ஒலி தடுமாற்றம்.
மற்றொரு சமயத்தில், அமானுஷ்ய விடயங்களை ஆராயும் கும்பல் ஒரு பழைய தொழிற்சாலையில் தரைமட்டத்திற்கு கீழே இருந்த கட்டிடத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று ஒரு திரை போலவும் ஹாலோகிராம் போலவும் ஒரு காட்சி தெரிய… அந்த காட்சியில் மூன்று சிறுவர்கள் இவர்களை கண்ணாடி ஜன்னல் வழியாக தட்டி கூப்பிடுவது போல கூப்பிட இவர்களுக்கு ஏதும் புரியாமல் அவர்களைப் பார்க்க அந்த சிறுவர்களும் உங்களைத்தான் கூப்பிடுகிறோம் வந்து எங்களை காப்பாற்றுங்கள் இன்று கதறும் காட்சியும் தெரிய அருகே சென்று பார்க்க முயன்ற போது அந்த சிறுவர்கள் ஆவலாக காத்திருக்க…. சற்றென்று அந்த காட்சி மறைந்தது… இது காலத்தின் ஒளி தடுமாற்றம் என்று அந்த ஆய்வாளர்களுக்கு புரிந்து கொள்ள நேரம் எடுத்தது…. எந்த காலத்திலோ அங்கு அடைபட்டு இருந்த சிறுவர்களுக்கு இந்த ஆய்வாளர்கள் கண்ணுக்கு தெரிந்திருக்கிறார்கள்…. இந்த ஆய்வாளர்களுக்கும் அந்த சிறுவர்கள் தெரிந்திருக்கிறார்கள்.
இந்த இரண்டு நிகழ்ச்சி உண்மையாக அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சிகள்.
நான் மகேந்திரன், பௌதிக விஞ்ஞானி என்று சொல்கிறார்கள்…. விஞ்ஞானி என்ற வார்த்தை என்னைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய வார்த்தை.. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், நிக்கோலா டெஸ்லா போன்ற மிகப்பெரிய அறிவியலாளர்களை சொல்ல வேண்டிய வார்த்தை… சரி போகட்டும்.. நான் சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன்.
விஞ்ஞானி என்றாலே ஒரு தவறான கருத்து நம் மக்களிடையே நிலவுகிறது… அவர்களெல்லாம் கடவுள் மறுப்பாளர்கள் என்று. இது தான்தோன்றித்தனமான கருத்து என்று நம்புகிறேன்…. விஞ்ஞானிகள் தெரியாததை தெரிந்து கொள்ள முற்படுவார்களே தவிர அவற்றை மறுப்பவர்கள் என்று முத்திரையிடக்கூடாது. நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன், என் வழி மத வழி அல்ல… ஆன்மீக வழி! என்னிடம் கடவுளைப் புரிந்து கொள்ள தேடுதல் இருந்து கொண்டே இருக்கிறது… இது ஒரு புறம் ஆன்மீகத் செயலாக இருக்கும் பட்சத்தில் மறுபுறம் காலப் பயணத்தில் அதிக நாட்டம் உண்டு.
காலப் பயணத்தில் ( டைம் டிராவலில்) எனக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை, இருப்பினும் ஏதோ ஒரு உணர்வு என்னை உறுத்திக் கொண்டிருக்கிறது…. என் அறிவியல் அறிவை நான் விரிவு படுத்திக்கொள்ளவில்லை என்று… இந்த உந்துதல் என்னை நாள்தோறும் வாட்ட… இதற்கு விடை ஸ்பேஸ் டைமில் இருக்கும் என்று நம்பினேன், நம்பி அதை நோக்கி என் ஆராய்ச்சியை தொடர்ந்தேன்.
இந்த நேரத்தில் தாத்தா முரண்பாடு ( கிராண்டேட் பேரடாக்ஸ்) ஹிட்லர் முரண்பாடு ( ஹிட்லர் பேரடாக்ஸ் ) என்று இரு முரண்பாடுகள் கால பயணத்தில் பிரபலமானவை…
இதைப் பற்றி கூறும் முன்பு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் விளக்கம் ஒன்றை கூற வேண்டும். அதாவது மூன்று பரிமாணங்கள் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.. நீள, அகல, உயரம். நான்காவது பரிமாணம் நேரம் என்று எல்லோரும் ஏற்றுக் கொண்ட ஒன்று. ஐன்ஸ்டீன் சொல்வது என்னவென்றால் முதல் மூன்று பரிமாணங்களும் அண்டம் நான்காவது பரிமாணம் நேரம் இரண்டும் ஒரே பரிமாணம் என்று… அதாவது ஸ்பேஸ் டைம் இஸ் அ சிங்கிள் டைமென்ஷன்.
இப்போது கால பயணத்தில் தாத்தா முரண்பாட்டிற்கு செல்வோம்..
மிக எளிதாக சொல்ல முற்படுகிறேன்…
ஒருவர் காலப் பயணத்தில் பின்னோக்கிச் சென்று அவருடைய இளம் வயது தாத்தாவை கொன்று விடுகிறார் என்று வைத்துக் கொண்டால் அதன் சங்கிலி நிகழ்ச்சிகள் முரண்பாட்டில் கொண்டு விடும். தாத்தா இறந்து விட்டால் அந்த கணமே அவருக்கு சந்ததிகள் கிடையாது…. பிறகு எப்படி அந்த ஒருவர் கால பயணத்தை மேற்கொள்ள முடியும்?
இதே வித முரண்பாடு தான் உலக நிகழ்ச்சிகள் ஹிட்லரை சிறுவயதில் கொன்றால் கூட…
அறிவியலினால் காலப்பயணத்தை மேற்கொள்ள முடிந்தால் கூட பிரபஞ்சம் எதோ ஒரு வகையில், ஒரு நியதியில் தொடர் நிகழ்ச்சிகளுக்கு பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்கிறது என்று கருதுகிறார்கள். மற்றொரு கருத்தும் நிலவுகிறது.. அதாவது காலப் பயணத்தில் பின்னோக்கி தான் சொல்ல முடியுமே தவிர முன்னோக்கிச் செல்ல முடியாது என்று… விளக்கமாக பார்த்தால், நடந்த நிகழ்ச்சிகளை தான் பார்க்க முடியுமே தவிர நடை பெற போவதை பார்க்க முடியாது என்று… இது ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்கிறது.
என் பணியிடத்திலிருந்து இரு மாதங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டிருந்தேன். விஞ்ஞானிகளின் மூளை ஒருநிலைப்பட்டதாக இருக்கும் என்பது சாபக்கேடோ என்னவோ தெரியவில்லை… அது என்னையும் விட்டு வைக்கவில்லை… ஓய்வு நேரத்தில் மட்டுமே ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த நான் இந்த விடுமுறை நாட்களில் நாள்தோறும் கால பயணத்தை நிரூபிக்க தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். என்னுடையது எப்படிப்பட்ட ஆராய்ச்சி கூடம், என்னென்ன உபகரணங்களை பயன்படுத்துகிறேன் என்று விளக்கிக் கூறுவது நான் சொல்லப்போவதற்கு தேவையில்லாத ஒன்று.
அன்று ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை ஒரு மூன்று மணி இருக்கும் திடீரென ஒரு யோசனை மின்னல் போன்று தோன்றியது…. பைத்தியம் பிடித்தது போல் என் ஆராய்ச்சி கூடத்தை நோக்கி ஓடினேன்.
எனக்குத் தோன்றிய யோசனைப்படி உபகரணங்களின் அளவுகளை நிர்ணயித்து வெள்ளோட்டம் விட்டேன்.
ஒரு பிம்பம் சற்றென்று தோன்றி மறைந்தது… உண்மையிலேயே தோன்றி மறைந்ததா இல்லை எனக்கு அப்படி தோன்றியதா என்று புரியவில்லை… மறுமுறை துவக்கி பார்த்தேன்… ஏதும் நடைபெறவில்லை. அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து தீவிரமாக யோசித்தேன். எனக்கு உதித்த யோசனை நன்றாகத்தான் இருந்தது அந்த பிம்பம் உண்மையிலேயே வந்து சென்றது என்றால் காலப் பயணம் சாத்தியமே! அந்த பிம்பம் தெரிந்தது போல என் மூளையே என்னுடன் சடுகுடு விளையாடுகிறதோ என்னவோ?!
தொடர்ந்து மூன்று நாட்களாக எவ்வளவு முயன்றும் எந்தவித வெற்றியும் கிடைக்கவில்லை.
புதன்கிழமை காலை அதேபோன்று விடியற்காலை இரண்டரை மணிக்கு மேல் இருக்கும், பளிச்சென்று நான் சென்ற முறை செய்த தவறு நினைவுக்கு வந்தது… கேட்க வேண்டுமா….. உடனடியாக ஆராய்ச்சி கூடத்திற்கு சென்றேன். செய்த தவறை நிவர்த்தி செய்தேன்.
முருகனை மனதில் நினைத்துக் கொண்டு மறு வெள்ளோட்டம் விட்டேன்.
மகிழ்ச்சிக்கு உயரமும் உண்டு என்று இன்று கண்டு கொண்டேன்…. ஆமாம் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி இமயமலை உயரத்துக்கு இருந்தது…
திரையில் தெளிவான பிம்பம் தெரிந்தது.. மகிழ்ச்சி தான் இமயமலை உயரத்துக்குச் செல்லும் என்பதல்ல…. அதிர்ச்சியும் அந்த உயரத்தை எட்டும். ஆம் நான் கண்ட காட்சி அப்படி.
அந்த உபகரணத்தின் கண்ணாடியில் தெரிந்த பிம்பம் நான் சிறு வயதில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்ததின் பிம்பம்.
இந்த நேரத்தில் உங்களுக்கு ஒன்றை விளக்க வேண்டும். என்னுடைய ஆராய்ச்சி உபகரணங்கள் ஸ்பேஸ் டைமை கட்டுப்படுத்த உபயோகப்படுகிறது. மனித வரலாற்றில் முதன்முறையாக காலப் பயணத்தை எனக்குத் தெரிந்து நிகழ்த்தி இருக்கிறேன். பொதுமக்களுக்கு தெரியாமல் எந்தெந்த நாட்டில் எந்தெந்த அரசாங்கம் இவற்றை ஏற்கனவே நிகழ்த்தி இருக்கிறதோ என்னவோ?!
எனக்கு மகிழ்ச்சியிலும், அதிர்ச்சியிலும் கை, கால்கள் படபடத்தன… சிறிது நேரம் என்னால் எதையும் செய்ய முடியவில்லை. அப்படியே பேய் அறைந்தார் போல் சற்று நேரம் சிலையாக நின்றிருந்தேன்.
எவ்வளவு நேரம் சென்றதோ தெரியவில்லை… சற்று நிதானத்திற்கு வந்து, அளவுகோல்களை மாற்றி அமைத்து மறுபடியும் இயக்கினேன்.
மகிழ்ச்சியின் உச்சிக்கு சென்றேன்… இந்த முறை நான் கண்ட பிம்பம் என்னை கை பிடித்துக் கொண்டு என் அப்பாவும் அம்மாவும் நடந்து செல்வது…
இப்பொழுதுதான் என்னால் முழுவதுமாக ஜீரணிக்க முடிந்தது… ஆம் நான் கண்டுபிடித்தது ஒரு கால பயண பிம்ப எந்திரம்.
பைத்தியம் பிடித்தது போல் கொஞ்சம் கொஞ்சமாக அளவுகோல்களை மாற்றி மாற்றி பல பிம்பங்களை கண்டேன்.
இதுவரை புகைப்படமே இல்லாத என் தாத்தா, பாட்டியை கண்டேன்… ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்களின் மகிழ்ச்சியை அனுபவிப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.. கண்கள் கொஞ்சம் இருண்டது… தாகம் ஏற்பட்டது… அப்போதுதான் நினைவுக்கு வந்தது கடந்த 10 மணி நேரமாக எதையும் உண்ணாமல் தண்ணீரும் குடிக்காமல் ஈடுபட்டு கொண்டிருந்தேன் என்று… மயக்கம் வருவது போல் இருந்ததால் அன்றைய ஆராய்ச்சியை அத்தோடு முடித்து மூன்று பிஸ்கட்டுகளை சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்து, படுத்து சாய்ந்தேன்.
தடதடவென்று கதவை தட்டுவது கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன்.. கதவைத் திறந்து பார்க்கும் போது அங்கு அம்மா நின்று கொண்டிருந்தார். 'என்ன மகேந்திரா சாப்பிட கூட வரவில்லை… நீ வெளியே சென்று இருக்கிறாய் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.. உன் நண்பன் பொன்னம்பலம் வந்திருக்கிறான் அவன் கூறிய பிறகு தான் நீ வெளியே செல்லவில்லை என்று தெரிந்தது…'
கடிகாரத்தை பார்த்தேன், இரவு 8 மணி ஆகிறது.
வா பொன்னம்பலம், நான் இன்னும் சாப்பிடவில்லை… இருவரும் சாப்பிட்டுக் கொண்டே பேசலாம்.
இருவரும் சப்பாத்தி சாப்பிட்டு கொண்டிருக்கும் போதே,
' என்ன மகேன் ரொம்ப டயர்டாக தெரிகிறாய்… ஆராய்ச்சியே கதி என்று இருக்காதே'
' அதெல்லாம் ஒன்றும் இல்லை பொன்னம்பலம், அது சரி உனக்கு மிகவும் பிடித்த உன் வாழ்க்கையில் நடந்த ஒரு முக்கியமான நிகழ்ச்சியை கூறு '
பொன்னம்பலம் என்னை அதிசயமாக பார்த்துவிட்டு, ' எனக்கு மட்டும் இல்லை என் குடும்பத்திற்கும் முக்கியமான நிகழ்ச்சி… நான் ஒரு வயது குழந்தையாக இருந்தேனாம் அப்போது ஒரு நிகழ்ச்சிக்காக அவ்வழியாக சென்ற காமராஜர் என் தாத்தாவை கண்டுச்செல்ல திடீரென்று வீட்டுக்குள் வந்தாராம். அந்த நிகழ்ச்சி தான் இன்று வரை என் குடும்பத்தில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர் '
' ஓ அப்படியா, கொடுத்து வைத்த குடும்பம் உங்களது… உன்னுடைய தாத்தா காமராஜுக்கு தெரிந்தவரா?'
' ஆமாம் இருவரும் ஒரே சிறையில் இருந்திருக்கிறார்கள் சுதந்திரப் போராட்டத்தின் போது '
' எங்கு நடந்தது, சரியாக எப்போது நடந்தது என்று கூற முடியுமா?'
' என் குடும்பத்தில் உள்ளோர் எல்லோருக்கும் தெரியும் அது'
என்று நிகழ்ச்சி நடந்த இடத்தையும் நாளையும் பொன்னம்பலம் கூறினான்.
என்னுள் பலவாறு யோசனைகள் தோன்றியது…. சிறிது நேரம் பேசி விட்டு பொன்னம்பலத்தை அனுப்பிவிட்டு படுக்கச் சென்றேன். இரவு அவ்வளவாக தூக்கம் வரவில்லை… எப்போதும் போல விடியற்காலை தூக்கம் வராததால் மீண்டும் ஆராய்ச்சி கூடத்திற்கு சென்றேன்.
ஸ்பேஸ் உபகரணத்தில் இடத்தின் புள்ளிகளையும், டைமில் நிகழ்ச்சி நடந்த நாளையும் மணி நேரத்தையும் மாற்றி, துவக்கி மிக ஆவலாக காத்திருந்தேன்…
என்னையே என்னால் நம்ப முடியவில்லை… ஆமாம் நான் கண்ட காட்சி அப்படி.
எதிரே கண்ணாடியின் பிம்பத்தில் பொன்னம்பலம் ஒரு வயது குழந்தையாக… தாய் தந்தை அருகே இருக்க, தாத்தா இ சி சேரில் சாய்ந்திருக்க, பாட்டி பால் பாட்டிலில் பால் எடுத்து வர அதே சமயத்தில் காமராஜரும் உள்ளே சென்றிருந்தார்.
இது எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு என்று ஜீரணித்து பார்க்கும் நிலையிலும் நான் இல்லை….
அடுத்த ஒரு வாரம் நம் நாட்டின் பல வரலாற்று நிகழ்ச்சிகளை கண்டேன்.. சில நிகழ்ச்சிகள் நமக்குத் தவறுதலாக கூறப்பட்டிருக்கிறது..
என்னுள் கிளர்ந்த இந்த உணர்ச்சி பிழம்பு கடவுளை நேரிலேயே கண்டது போல் இருந்தது….. எந்த வகையிலும் இந்த உணர்ச்சியை உள்ளது உள்ளபடியே உங்களுக்கு உணர்த்த முடியாது… பிரம்ம ரகசியம் போல இது பிரம்ம உணர்ச்சி!
தனிப்பட்டவர்களுடைய அறிவியல் கண்டுபிடிப்புகள் அந்த தனிப்பட்டவர்களுக்கு எந்தவித இன்னல்களை கொடுத்தது என்று எனக்குத் தெரியும், அதனால் இந்த அரும்பெரும் கண்டுபிடிப்பை யாரிடமும் பகிராமல் என்னுள்ளேயே வைத்துக் கொண்டேன். என் பெற்றோர்களுக்கு கூட தெரியாது…. ஏன் நெருங்கிய நண்பன் பொன்னம்பலத்துக்கு கூட தெரியாது.
கடந்த ஒரு வாரத்தில் நான் கண்ட காட்சியின் பிம்பங்கள், என் மூளையை கசக்கி கண்டுபிடித்த இந்த கண்டுபிடிப்புகள் அந்த மூளையையே வெடித்து சிதற வைத்துவிடும் போல் இருக்கிறது. குறைந்தது ஒரு நாளாவது இதிலிருந்து தள்ளி இருக்க வேண்டுமென்று நினைத்து ஆராய்ச்சி கூடத்தை மூடி பூட்டினேன்.
ஒரு நாளோ இரு நாளோ, இந்த நினைவுகளில் இருந்து விடுபட்டு இருக்க விரும்பினேன். யாருக்கும் தெரியாத பல விஷயங்களை தெரிந்து கொண்டு அதை யாரிடமும் பகிர முடியாமல் இருப்பது கொடுமையிலும் கொடுமை! ஒரு அரை மணி நேரம் கூட அந்த நினைவுகளில் இருந்து நான் விடுபட முடியவில்லை…… மதியம் அம்மா சமைத்து வைத்திருந்த அசைவ உணவை சாப்பிட்டுவிட்டு என் அறைக்கு படுக்க வந்தேன்.. எவ்வளவு முயன்றும் அந்த நினைவுகளில் இருந்து என்னால் மீள முடியவில்லை…
சுமார் ஒரு மணி நேரம் கழிந்திருக்கும், சென்ற வருடம் நண்பன் வாங்கி வந்து கொடுத்த இதுவரை திறக்காமல் இருந்த ஹென்னெஸியை திறந்து ஒரு சிறு கப் குடித்தேன்…. ஏற்கனவே உணவு உண்டு முடிந்து விட்டதால் அந்த ஒரு கப்பே என்னை உறக்கத்திற்கு இழுத்துச் சென்றது..
இரண்டு மணி நேரத்திற்கு மேல் தூங்கி இருக்கிறேன்… முழிப்பு வந்தவுடன் பளீர் என்று ஒரு யோசனை,
ஏன் இவ்வளவு நினைவு தடுமாற்றங்கள்… என்னதான் நடக்கும், நடக்கப் போகிறது என்று பார்க்க வழி தேடினால் என்ன என்று.
தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தேன்… இரு நாட்களாகியும் எந்த ஒரு நம்பிக்கையான யோசனையும் வரவில்லை… மூன்றாம் நாள் விடியற்காலை எப்போதும் போல் அப்பொழுதும் முழிப்பு வந்தது.. முழிப்புடன் ஒரு அற்புதமான யோசனையும் வந்தது… பிறகென்ன உடனடியாக தயாராகி ஒரு காபி குடித்துவிட்டு ஆராய்ச்சி கூடத்திற்கு சென்றேன்.
நான் இருக்கும் இடத்தின் கோர்டினேட்டுகளையே கொடுத்துவிட்டு நேரத்திற்கு மறுநாள் மத்தியம் ஒரு மணி என்று கொடுத்தேன்… என்னப்பன் ஞானப்பண்டிதன் முருகனை மனதில் நினைத்துக் கொண்டு, வேண்டிக்கொண்டு கருவியை துவக்கினேன்…
ஒரு சில நிமிடங்களுக்கு கண்ணாடியில் பிம்பத்தை பார்க்க தைரியம் வரவில்லை.. துணிவை வரவழைத்துக் கொண்டு பார்த்தேன்.. முருகன் என் துணை நின்றான்! என் ஆராய்ச்சிக்கு கிடைத்த மற்றும் ஒரு மாபெரும் வெற்றி!
ஆமாம், கருவியின் கண்ணாடியில் மறுநாள் மதிய ஒரு மணியின் பிம்பம் தெரிந்தது… சில நொடிகள் அதிர்ச்சி…
அதில் தெரிந்த பிம்பம் அவ்வாறு…
வீட்டுக்கு பக்கத்தில் இருந்த சந்தில் இருந்து வந்த ஒரு மோட்டார் சைக்கிளின் மேல் ஒரு பெரிய கார் மோதி இருந்த காட்சி அது..!
மோட்டார் சைக்கிளில் இருந்தவர் அந்த காரின் அடியில் டயரில் சிக்கி கொண்டிருப்பது தெரிந்தது… இறந்து விட்டிருக்கலாம்… சுற்றிலும் மக்கள் நின்று கொண்டிருந்தனர். நினைப்பது தவறு தான்… இருப்பினும் மனதிற்குள் வந்து சென்றது, அந்த மோட்டார் சைக்கிள், அந்த கார் எனக்குத் தெரிந்தவை அல்ல என்று…
இந்த எதிர்கால பிம்பத்தை பார்க்கும் வெற்றி எனக்கு மிகப்பெரிய போதையையே தந்தது.
அடுத்தடுத்து நிறைய எதிர்கால பிம்பங்களை இடங்களை மாற்றி, நேரத்தை மாற்றி கண்டேன்.
அந்த சில மணி நேரங்கள் உணர்ச்சிகளின் கலவையாக இருந்தது. அதிர்ச்சி, ஆச்சரியம், நடுக்கம், பயம், மகிழ்ச்சி போன்ற ஒட்டுமொத்த உணர்ச்சிகளும் அந்த கலவையில் இருந்தது.
இத்தோடு நிறுத்திக் கொண்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று நினைப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை… வெற்றியின் போதை தலைக்கேறி இருந்தது…
2027 என் பிறந்தநாள் எப்படி இருக்கும் என்று நான் இருக்கும் இடத்தின் கோர்டினேட்டுகளையும் நேரத்திற்கு மாலை ஆறு மணியும் கொடுத்து, நிறைய வெற்றிகள் வந்ததால் முருகனை மறந்து கருவியை இயக்கி பார்த்தேன்… சிறிது நேரம் ஒன்றுமே புரியவில்லை.. ஏனென்றால் கண்ணாடி பிம்பத்தில் வெறும் கருமையாக இருந்தது..
கருவி பழுதாகி விட்டிருக்கிறதா என்று எல்லாவற்றையும் சோதனை செய்ய சரிபார்த்தேன். எல்லா உபகரணங்களும் சரியாகத்தான் இருந்தது…. பின் எப்படி, ஏன், எந்த காட்சியும் பிம்பமாக தெரியவில்லை?!
நாற்காலியில் அமர்ந்து சில நிமிடங்கள் யோசித்துப் பார்த்தேன், பிறகு வந்த யோசனையில் என் 2027 பிறந்தநாளுக்கு முன்பு ஒவ்வொரு நாளாக பார்த்துக் கொண்டே வந்தேன்… சரியாக 12 நாட்களுக்கு முன்பு நான் கண்ணாடியில் கண்ட பிம்பத்தின் காட்சி தலையில் பேரிடியாக இறங்கியது…..
எங்கும் தீப்பிழம்பாக எரியும் காட்சி தெரிந்தது. கை கால்கள் நடுங்கியது.. நான் இருக்கும் இடம் ஏதோ ஒரு காரணத்தால் தீக்கு இரையாகிக் கொண்டிருந்தது. எனக்கு ஏற்பட்ட நடுக்கத்தில் சுமார் பத்து நிமிடத்திற்கு மேல் பயத்தில் சாய்ந்திருந்தேன்.
பிறகு சுதாரித்துக் கொண்டு வேறொரு இடத்தின் புள்ளிவிவரத்தை கொடுத்து பார்க்கலாம் என்று முயற்சி செய்தேன். அதிர்ச்சியை ஆயிரம் மடங்காக பெருக்கி பார்க்க ஏதேனும் வார்த்தை உண்டா? ஆயிரமா இல்லை, இல்லை கோடி மடங்காக பெருக்கி பார்க்க வேண்டும்…. நான் கண்ட பிம்பத்தின் காட்சி அப்படி. கண்ட இடங்கள், கண்ட நாடுகள் எல்லாவற்றிலும் ஒரே காட்சி, எல்லாம் தீப்பிழம்பாக பற்றி எரிந்து கொண்டிருந்தது.. சரி எப்படி தொடங்கியது எனப் பார்க்க கொஞ்சம் கொஞ்சமாக நேரத்தை குறைத்துக் கொண்டே வந்து பார்த்தேன்.
நான் என்ன பிம்பத்தை கண்டேன் என்று உங்களிடம் சொல்லலாமா…. இல்லை நான் பெற்ற அதிர்ச்சியை ஏன் உங்களுக்கெல்லாம் கடத்த வேண்டும் என்று மறைத்து விடலாமா என்று தெரியவில்லை.. நடக்காது என்று நம்பி உங்களிடம் சொல்கிறேன்….
2027 என் பிறந்தநாளுக்கு சரியாக 13 நாட்களுக்கு முன்பு சூரியனிலிருந்து வெடித்து சிதறிய சூரிய கதிர்கள் மாபெரும் தீ நாக்குகளாக பூமியை தாக்கி ஒட்டுமொத்த பூமியையும் கருக பிரளயத்தை ஏற்படுத்தியது… இதை உங்களிடம் சொன்னது தவறு என்றால் மன்னித்துக் கொள்ளுங்கள்.. இதற்கு மேலும் என்னால் அந்த ஆராய்ச்சி கூடத்தில் இருக்க முடியவில்லை.. நான் பார்த்தது தவறு… அப்படி எதுவும் நடக்காது என்று மனதை தேற்றிக்கொண்டேன். எவ்வளவோ அறிவியல் முன்னேற்றங்களை கண்ட நாடுகள் இருக்கின்றன, அவர்களுக்கெல்லாம் இது தெரியாமலா இருந்திருக்க போகிறது? என் கருவியில் தான் ஏதோ தவறு இருக்கிறது.
நடந்ததை மறக்க நினைத்து ஆராய்ச்சி கூடத்தை பூட்டிவிட்டு என் அறைக்கு வந்து படுத்தேன்.. இரவு மணி 8 இருக்கும் அம்மா கதவைத் தட்டி இரவு உணவை வந்து சாப்பிடும்படி அழைத்தார்கள். சாப்பிட மனதில்லை என்று எப்படி சொல்ல முடியும், சென்றேன் ஏனோ தானோ என்று எதையோ சாப்பிட்டு விட்டு மறுபடியும் மாடியில் என் அறைக்கு வந்து படுத்தேன்…தூக்கம் வரவில்லை… பதற்றம் கொஞ்சம் கொஞ்சமாக என் ரத்தக் கொதிப்பை அதிகப்படுத்தியதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நடக்காது என்று என் மனதிற்குள் என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டாலும் முடியவில்லை…. இரண்டு கப் ஹென்னெஸியை குடித்தேன்.
எப்பொழுது தூங்கினேன் என்றே எனக்கு தெரியாது.. காலை 7 மணிக்கு அம்மா அழைத்த உடன் தான் எழுந்தேன். சிறிது நிதானத்திற்கு வந்திருந்தேன்.. காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டேன்.
' என்ன மகேந்திரா, உன் லீவு பாதி கழியப்போகிறதே வேறு எங்கும் சொல்லப்போவது இல்லையா?' என்று அம்மா கேட்டதற்கு பதில் சொல்லாமல் இல்லை என்று தலையை மட்டும் அசைத்து விட்டு அறைக்கு வந்து சேர்ந்தேன்.
இப்பொழுது நேரம் சரியாக காலை ஒன்பதரை… என் நினைவுகள் எல்லாமே மதியம் ஒரு மணியை நோக்கி காத்திருந்தது…… ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு யுகமாக கழிந்தது… யூட்யூபை மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தேன்… இதயத்துடிப்பு எங்கோ எகிறி கொண்டிருந்தது….. மணி பன்னிரண்டரை… இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கிறது…. இப்போது மணி 12:50 PM கடந்த 20 நிமிடங்கள் செல்ல 20 வருடங்கள் போலிருந்து……
அப்போது 'டமார்!' என்று பெருத்த சத்தம் அதைத் தொடர்ந்து 'ஐயோ!' என்ற சத்தம்…. நான் உடனடியாக ஓடி சென்று ஜன்னலை திறந்து பார்த்தேன்..
கீழே வீட்டருகில் சந்தில் இருந்து வந்த ஒரு மோட்டார் சைக்கிளை ஒரு பெரிய கார் மோதி இருந்தது…. மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் காருக்கு அடியில் கார் டயரில் சிக்கிக் கொண்டு துடித்துக் கொண்டிருந்தார்.
2027… இன்னும் நான்கே வருடங்கள்.. அது உண்மையாக நடக்கும் பட்சத்தில், நினைக்கவே கதி கலங்குகிறது… கவலை என்பது ஆடு நாற்காலியில் அமர்ந்து ஆடுவது போல்… அங்கேயே ஆடிக் கொண்டிருக்க வேண்டியது தான் எங்கும் செல்லப்போவதில்லை… ஆமாம் கவலைப்படுவதை விட்டுவிட்டு இதிலிருந்து மீண்டு வேறு எதையாவது யோசிக்க வேண்டும்.. வேறு எதை யோசிப்பது…. பயம் கொரோனா வைரஸ் போல உடல் முழுவதும் பரவி இருக்கிறது.. திடீரென பயத்தின் உச்சமான மரண பயம் வந்து விட்டது. ஒட்டு மொத்த உலகமே அழியப் போகிறது, அதை நினைக்கத் தோன்றவில்லை நான் இறக்கப் போகிறேன்… இறந்தால் என்னாகுவேன்.. எங்கு செல்வேன்? இறந்த பிறகு என்னுடைய பெயரை சொல்லப்போவதில்லையே… பூத உடல் என்று தானே சொல்வார்கள்…. என்ன ஒரு முட்டாள்தனமான நினைப்பு… எல்லோரும் இறக்கப் போகிறார்கள் அதில் யார் யாரை பார்த்து பூத உடல் என்று சொல்ல தோன்றும்? எப்படிப்பட்ட மரணம் என்று கண்முன்னே வந்து சென்றது.. தீப்பிழம்பில் கருகி இறக்கப் போகிறோம். என் ஆத்மா எங்கு செல்ல போகிறது? நினைக்கும் போதே நடுக்கமாக இருக்கிறது… சுற்றமும், நட்பும் உலகத்தில் உள்ள ஒட்டும், உறவும் ஏதுமில்லாமல் பிரியப் போகிறோம்… ஒருவேளை எல்லோரும் இறப்புக்குப் பிறகு சந்திப்போமா என்னவோ!? அப்படி சந்திக்கும்போது இதே உடல் இருக்குமா… இல்லை ஆவி வடிவில் இருப்போமா? ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்வோமா? நினைக்க நினைக்க குழப்பமும், பயமும் சிவதாண்டம் ஆடின.
இந்த நாகரிக உலகத்தில் தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ந்தும் என்ன பயன்… இயற்கை வெகுண்டு எழும்போது பெட்டி பாம்பாக அடங்கத்தானே முடிகிறது? ஆமாம் நாகரீகம் என்பது என்ன? நம்மை நாமே நாகரிகம் அடைந்தவர்கள் என்று கூறி கொள்ள முடியுமா? கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன்…
பொறாமை, தான்மை, குரூரம், வஞ்சம், அதிகாரம், பணபலம், தற்புகழ்ச்சி, ஏற்றத்தாழ்வுகள் இவை போதாது என்று ஜாதி, மத, மொழி, இன வேறுபாடுகள். மிகவும் ஆழ்ந்து யோசித்துப் பார்க்கையில் இவைகளுக்கு இரண்டே மூல காரணங்கள் தான். பரந்த மனம், மற்றும் திறந்த மனம் இல்லாது தான்.. பரந்த மனம் எல்லோரையும் சமமாக நடத்த தோன்றும், திறந்த மனம் எவ்வித மாற்றுக் கருத்துகளுக்கும் செவி சாய்க்கும். சற்றே யோசித்துப் பார்த்தாலும் தெரியும் நாகரீகம் என்ற சொல்லுக்கு நெருக்கத்தில் கூட நாம் வரவில்லை என்று.
சரி தொழில்நுட்பத்திற்கு வருவோம்… ஆமாம் தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமான முன்னேற்றங்களை கண்டிருக்கிறோம், நினைக்கும் போது யாரிடத்திலும் உலகத்தில் எந்த மூலையிலும் தொடர்பு கொண்டு பேசலாம், பார்க்கலாம். 32 வயது என்பது நியாண்டர்தால் மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் முழுமை பெற்ற வயது, அதாவது நூறு வயது போல். இப்போதோ இந்த நவநாகரிக உலகத்தில் அதே 32 வயதில் தான் வாழ்க்கையே தொடங்குகிறது. நோய்களும் அவைகளை சரி செய்ய மருந்துகளும் ஓடுகளத்தில் ஓட்டப்பந்தயத்திற்கு ஓடுவது போல் சரி நிகராக ஓடிக்கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சி பெட்டிகள் நம்மை இழுத்து அமர வைத்து உடல் சோர்வுக்கு வித்திட்டது பெரிதல்ல என்று தோன்றும் அளவிற்கு சிரிக்கள், அலெக்சாக்கள், google கள் நமக்கு இருக்கும் இடத்திலேயே பதில் சொல்வது மட்டுமல்லாமல் நாம் விடும் கட்டளைகளை ஏற்று அதற்கு தொடர்புடைய எல்லா மின்னணு சாதனங்களையும் நாம் எழுந்து சென்று இயக்காதவாறு அவைகளே இயக்குவது நம் உடல் கூறு எந்த வகையில் எல்லாம் பாதிக்கப் போகிறது என்று வர வரத்தான் தெரியப்போகிறது. மனித முன்னேற்றத்திற்கு தான் தொழில்நுட்பம் உதவுகிறது என்று ஏற்றுக் கொண்டாலும் நம்மை அறியாமல் எல்லா தொழில்நுட்பத்திற்கும் நாம் சிறிது சிறிதாக அடிமையாகி இயற்கையிலிருந்து வெகு தூரம் வந்து விட்டோம் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இயற்கையிலிருந்து நாம் விலகி வந்த தூரம் தேவை ஏற்பட்டால் மறுபடி அதே இயற்கைக்கு சென்று அடைய முடியுமா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
' மகேந்திரா வந்து சாப்பிட்டு விட்டு செல் ' என்று அம்மா கத்தின கத்தில் தான் சுய நினைவுக்கு வந்து,
இதோ இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்து விடுகிறேன் என்று கூறினேன்.
அம்மாவிடம் கூறி விடலாமா என்று ஒரு கணம் யோசித்தேன்… இல்லை அலுவலக வேலையாக வேறு மாநிலத்திற்கு சென்றிருக்கும் அப்பா வந்தவுடன் இருவருக்கும் கூறலாமா? இல்லை இருக்கும் நான்கு வருடங்களை நிம்மதியாக கழிக்க அப்படியே விட்டு விடலாமா என்று பல வித யோசனைகள் வந்து சென்றன.
மதிய உணவை உண்டு விட்டு வந்தபின் பலவித யோசனைகள் வந்து சென்றன. ஏன் பாதகமாகவே நினைக்க வேண்டும் சாதகமாக ஏதாவது இருக்கிறதா என்று பார்க்கலாமே என்று தோன்றியது.. அந்த எண்ணம் தோன்றிய உடனே மின்னல் என ஒரு நம்பிக்கை பிறந்தது… ஏன் உலகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் சென்று பிம்பங்களை பார்க்கலாமே, ஏதாவது ஒரு இடம் இதில் பாதிப்பு இல்லாமல் இருக்குமா என்று …
உடனடியாக செயலில் இறங்கினேன். ஆய்வுக்கூடத்திற்கு சென்று 2027 என் பிறந்தநாள் அன்று 25 முக்கிய இடங்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொன்றாக பார்க்க துவங்கினேன்.
முதலில் கனடா நாட்டின் மூன்று நகரங்களை பார்த்தேன் வான்கூவர்,மான்ட்ரியால், டொரன்டோ…. பெருத்த ஏமாற்றம், ஆமாம் மூன்று நகரங்களும் கருகி விட்டு காண கலங்க வைக்கும் காட்சியாக இருந்தன.
அடுத்து யூ எஸ் ஏ வின் ஏழு நகரங்களை தேர்ந்தெடுத்து பார்த்தேன்… அதில் உலகப் பொருளாதாரத்தின் மூலமாக இருந்த நகரமும், நாகரிகத்தின் அடையாளமாக இருந்த நகரமும், தொழில்நுட்பத்தின் உச்சத்தைத் தொட்ட நகரமும், திரைப்படத் துறையில் உலகத்தை ஆட்டி படைத்த ஆலிவுட்டும் அதே விதியின் கோரப் பிடியில் சிக்கி, கருகி செயலற்று மயானமாக இருந்தது வருத்தப்படுவதற்கு வாய்ப்பையும் தரவில்லை.
சிறிது நேரம் சிலையாக அமர்ந்திருந்தேன்.. என் கருவிக்கு ஜார்ஜும் போட வேண்டி இருந்தது….. பிரபஞ்சத்தை விடுவோம், இந்த உலகின் அழிவின் பிரம்ம ரகசியத்தை என் மனதுக்குள்ளேயே பூட்டி வைப்பது மிகவும் ஆபத்தானது என்று புரிகிறது… அதில் என் இதயம் தாங்காமல் சற்றென்று உறைந்து நின்று விடவும் வாய்ப்பு உள்ளது… இருப்பினும் ஏதேனும் நம்பிக்கை இருந்தால் ஒழிய யாரிடமும் இந்த உலகின் அழிவின் ரகசியத்தை பகிர விரும்பவில்லை.
மனதை தளரவிடாமல், மெக்சிகோ மற்றும் தென் அமெரிக்காவின் முக்கிய நகரங்களை பார்த்தேன்… இதுவரை ஏமாற்றமே.. தொடர்ந்து நான் பார்த்த ஐரோப்பிய, ஆசிய, ஆஸ்திரேலிய நகரங்களையும் அவைகளின் கொடூர முடிவுகளையும் சொல்ல மனம் வரவில்லை…
இதில் கிழக்கு ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவிலும் காணப்பட்ட நிலை மற்ற இடங்களில் இருந்து கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது….
நம்பிக்கை இன்மையில் மனது வெடித்து விடும் போல் இருந்தது.. அப்படியே சாய்வு நாற்காலியில் சாய்ந்தேன். ஓய்வு எடுக்க முடியவில்லை பதற்றம் தான் அதிகரித்தது. இதற்கு மேலும் என்னால் பதற்றத்தை தணிக்காமல் இருக்க முடியவில்லை… கண்ணாடி குவலையில் ஹென்னசியை ஊற்றி குடித்தேன்… சிறிது நேரத்துக்குப் பிறகு என்னை அறியாமல் உறங்கி விட்டிருக்கிறேன். சில சமயம் மாலை நேரத்தில் உறங்கி எழும்போது நம் மனது ஒரு நிலையில் இருப்பதில்லை… இனம் புரியா பீதி மனதை ஆக்கிரமித்து இருக்கும்.. சாதாரண நிலைமையிலேயே இப்படி என்றால் நான் இருக்கும் நிலையில் மாலை 7 மணி இருக்கும், நான் எழும்போது பீதி உச்சத்தில் இருந்தது.. நான் இதே நிலைமையில் இருந்தால் 2024 ஐ பார்ப்பதே கடினம்… புரிந்தது, ஏதாவது செய்து என் மனதை சமநிலைக்கு கொண்டு வர வேண்டும். குடும்ப டாக்டரின் காரியதரிசிக்கு தொலைபேசியில் அழைத்து சந்திக்க நேரத்தை கேட்டேன். முடியும் என்றால் இப்பொழுதே கிளம்பி வர சொன்னார்கள்.
டாக்டரிடம் போகும் வழியில் யோசித்துக் கொண்டே சென்றேன், பதற்றம் எதனால் என்று அவருக்குச் சொல்வது? இனம் புரியா பயம் என்று சொல்ல வேண்டியதுதான்..
குடும்ப டாக்டர் என்பதால் என்னைப் பற்றி எல்லாமே தெரியும்… கேள்விகளால் துளைத்து எடுத்தார்.. நான் சமாளித்துக் கொண்டு, ஏனோ தெரியவில்லை ஒரு வாரமாக இப்படித்தான் இருக்கிறது என்று சொன்னேன். பதற்றம் வரும் போது மட்டும் போட்டுக்கொள்ள மாத்திரையை கொடுத்தார். ஒரு வாரத்திற்குப் பிறகும் சரியாகவில்லை என்றால் மறுபடி வந்து சந்திக்கும்படி கூறினார்.
வீட்டுக்கு வந்து ஒரு சப்பாத்தி மட்டும் சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்றேன். உறக்கமே வரவில்லை எப்படி வரும்? நெடுநேரம் புரண்டு புரண்டு படுத்துவிட்டு எப்பொழுது உறக்கம் வந்தது என்றே தெரியவில்லை…
அம்மாவின் அழைப்பு மணி சப்தம் கேட்டு எழுந்து பார்த்தபோதுதான் காலை மணி எட்டரை ஆகிவிட்டது என்று தெரிந்தது. இன்னும் அரை மணி நேரத்தில் வருகிறேன் என்று கூறிவிட்டு தயாரானேன். காலை சிற்றுண்டி முடித்து மேலே வர மணி 10 ஆகிவிட்டது… சிந்தனை தடுமாறி தாறுமாறாக ஓடியது… இன்னும் நான்கு வாரங்கள் விடுமுறை உள்ளது… நான்கு வாரங்கள் முடிந்து வேலைக்கு செல்லத்தான் வேண்டுமா? செல்லப் போவதில்லை என்று முடிவெடுத்தால் மற்றவர்களுக்கு என்ன சொல்வது? குழப்பமே மிஞ்சியது. எங்கும் ஓடுவதற்கும் இடமில்லை.. ஒளிவதற்கும் இடமில்லை…
அப்போது சட்டென்று ஒரு யோசனை தோன்றியது… நான் பார்க்காத இடமும் ஒன்று உண்டு என்று. ஆமாம் அண்டார்டிகாவை பற்றி பார்க்கவே இல்லையே…. ஓரிரு சதவீத புத்துணர்ச்சி மட்டுமே இருந்தது அதையும் சென்று பார்த்து விடலாம் என்று, ஆய்வு கூடத்திற்குச் சென்று.. ரேகைகளின் புள்ளி விவரங்களை கொடுத்து இயக்கி காத்திருந்தேன்.
என் கண்களால் நம்ப முடியவில்லை …இது எப்படி சாத்தியம்? மறுபடி சரியான ரேகை புள்ளிகளையும் காலத்தையும் கொடுத்தேனா என்று பார்த்து சரி செய்து மறுபடியும் இயக்கி காத்திருந்தேன்….. அதிர்ச்சி மகிழ்ச்சியிலும் வரும் என்று தெரிந்து கொண்டேன்.. ஆமாம் தெரியும் பிம்பம் அண்டார்டிகாதான்… ஒரு பெரிய வித்தியாசம், பணிப்படர்ந்திருக்கவில்லை மாறாக கீசா பிரமிடை விட மிகப்பெரிய கருப்பு பிரமிட் ஒன்றும் அதைச் சுற்றி இதுவரை மனிதர்களால் கண்டிராத கண்டுபிடிக்கப்படாத மிக மிக பிரம்மாண்டமான கருப்பு கட்டிடங்கள் தெரிந்தது..
எனக்கு சில நிமிடங்கள் என்னவென்றே புரியவில்லை, நான் ஏற்கனவே அண்டார்டிகாவை பற்றி நிறைய படித்து இருந்ததால் சிறிது சிறிதாக புரிய வந்தது…. இந்தப் பிரமிடையும், இந்த கட்டிடங்களையும் தேடித்தான் முதன் முதலில் ஹிட்லரின் நாசி ஜெர்மனியப்படைகளும், பிறகு அமெரிக்க ஐக்கிய நாடுகளும், தொடர்ந்து முக்கிய நாடுகளும் இந்தியா உட்பட ஆராய்ந்தன.. இன்று வரை எந்த நாடும் கண்டுபிடித்த உண்மைகளை மக்களுக்கு தெரிவிக்கவில்லை அதன் ரகசியம் இன்று எனக்குத் தெரிந்தது.
எனக்கு இனம் புரியா மகிழ்ச்சியும் யோசனையும் ஒருங்கே வந்தது.. ஆமாம் 2027 உலகமே அழியும்போது அண்டார்டிகா மட்டும் தப்பித்துள்ளது… மாபெரும் துன்பத்திலும் பேரழிவிலும் ஒரு இன்பம், மக்கள் தப்பித்து வாழ ஒரு இடம் இருக்கிறது.. அதுவும் கொடூர பனிப் படலம் இல்லாமல் வாழ்வதற்கு ஏற்ற இடமாகவும் உடனடியாக தங்குவதற்கு பெரிய கட்டிடங்களும் இருப்பது.
சரி 2027 க்கு பிறகும் வாழலாம்… அதற்கு வழி உள்ளது… அதை எப்படி செயல்படுத்துவது? நான் அறிந்த உண்மைகளை தெரிவித்தால் என்னை பைத்தியக்காரன் என்று நினைப்பார்கள்…. தெரிவிக்காமல் நான் மட்டும் அண்டார்டிகா செல்லவும் முடியாது.. என்ன செய்யப் போகிறோம் என்ற கவலையில் படபடப்பு அதிகமானது… அப்போது தான் நினைவுக்கு வந்தது குடும்ப மருத்துவர் கொடுத்த மாத்திரை. மாத்திரையை உட்கொண்டு சாய்வு நாற்காலியில் அப்படியே சாய்ந்தேன்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மனது அமைதியானது. எப்படி அண்டார்டிகாவுக்கு செல்வது என்பதை பிறகு யோசிக்கலாம், முதலில் நிரந்தரமாக அங்கு சென்று குடியேற வேண்டும் என்றால் என்ன என்ன எடுத்துச் செல்வது என்று திட்டமிட ஆரம்பித்தேன்.
அத்தியாவசிய தேவைகளுக்கு பட்டியலிட்டேன்.
முதலில் உணவு, நிறைய காய்கறிகள், பழ வகைகள், கீரை வகைகளின் விதைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இறைச்சி என்பதை மறந்து விட வேண்டும்… வேண்டுமென்றால் அங்கிருந்து மீன் பிடித்துக் கொள்ளலாம்.
உடை, எவ்வளவுதான் எடுத்துக் கொள்வது.. இயற்கையில் இருந்து எப்படி உடை தயாரிப்பது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.
இருக்க இடத்தைப் பற்றி கவலைப்பட தேவையில்லை ஏனெனில் நல்ல கட்டிடங்கள் உள்ளன.
படிப்பதற்கு நிறைய புத்தகங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்…. என்ன முட்டாள்தனமான யோசனை உலகமே, உயிரினங்களே பெரும்பாலும் அழியப் போகிறது இதில் புத்தகத்தை படிப்பதற்கு ஏது நேரம்? புதிதாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
அத்தியாவசிய மாத்திரைகளை, மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அவைகள் செயலிழக்கும் தேதிக்குப் பிறகு என்ன செய்வது… நினைக்கும் போதே நடுக்கமாக இருந்தது.
டார்ச் லைட்டுகள், மின்விசிறிகள், வெப்ப மின்விசிறிகள், கைப்பேசி, மடிக்கணினி…. வேறேன்ன தேவை? திசை காட்டும் கருவி….. இது தேவையில்லை கைபேசியிலேயே உள்ளது…. அப்போதுதான் சுளீரென்று உரைத்தது…. மின்சாரமும் இருக்கப்போவதில்லை, கைப்பேசி கோபுரங்களும் இருக்கப் போவதில்லை… அப்பொழுதுதான் புரிந்தது இயற்கையின் கோரத்தாண்டவம் மனித இனத்தின் கர்வம் மிகுந்த தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு சாவு மணி அடிக்கப் போகிறது என்று!
கற்கால மனிதர்களைப் போல வாழக் கற்றுக் கொள்ள வேண்டும், மிக மிக முக்கியமாக விவசாயத்தை முழுவதுமாக கற்றுக் கொள்ள வேண்டும். இப்படி எல்லாம் வாழக் கற்றுக் கொண்டு வாழ்ந்து என்னதான் செய்யப் போகிறேன்?! இந்த நினைவு வந்தவுடன் மறுபடியும் சோர்ந்து சாய்வு நாற்காலியில் அமர்ந்தேன்.
எதையோ விட்டு விட்டோமே என்று மனது குழம்பியது… தீவிரமாக யோசித்து பார்த்தேன், கிழக்கு ஐரோப்பாவும் மேற்கு ஆசியாவும் ஏன் வேறுபட்டு காணப்பட்டது என்பது தான் அது…
அது ஏன் என்று கண்டிப்பாக பார்க்க வேண்டும், மறுபடியும் கிழக்கு ஐரோப்பாவின் மத்திய ரேகை புள்ளியை எடுத்துக்கொண்டு 2027 ஜனவரி மாதம் நேரத்தை குறிப்பிட்டு கருவியை இயக்கி பார்த்தேன்.
அதிர்ச்சியாக இருந்தது… உலகம் அழிவதற்கு பல மாதங்களுக்கு முன்பே அழிந்து விட்டிருக்கிறது… 2026 ஜனவரி மாதத்தை குறிப்பிட்டேன்… அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அப்போதும் அதே நிலைமை தான்.
தேதியை குறைத்துக் கொண்டே வந்து பார்த்தேன்…. என் கை கால்கள் உதற ஆரம்பித்து விட்டன.. நடுக்கத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை..
இப்படியும் நடக்குமா? பகுத்தறியும் குணம், ஆறாம் அறிவு மனிதர்களுக்கு உண்டு என்பதே கேலிக்கூத்தானது.
லேசாக மாரடைப்பது போன்று இருந்தது. ஒரு அரை மணி நேரம் இருக்கும் சமாளித்துக்கொண்டு மத்திய கிழக்கு நாடுகளின் மத்திய நாட்டை எடுத்துக்கொண்டு கடைசியாக சோதித்த நாளை எடுத்து கருவியை இயக்கி பார்த்தேன்..
கண்ட காட்சி என் இதயத்தை வெடிக்கச் செய்யும் போல் இருந்தது.. கை கால்கள் நடுங்க…. என்னை மீறி கண்கள் குளமாக நம் இந்தியாவின் ஒரு பகுதியை எடுத்துப் பார்த்தேன்..
மேலும் ஒரு பகுதியைப் பார்த்தேன்….
2027 ல் இயற்கையின் கோர தாண்டவம் என்றால்…. 2024 ல் மே மாதத்தில் மனிதர்களின் காட்டுமிராண்டித்தனத்தால், சகிப்புதன்மை இல்லாததால்……. இந்தியாவில் மீதமிருந்தது, கொஞ்சம் கேரளா, கொஞ்சம் கர்நாடகா, கொஞ்சம் ஆந்திரா, கொஞ்சம் தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு. மீதமிருந்து என்ன பயன்…. அணு கதிர்வீச்சு ஈழத்தையும் தீண்டியிருந்தது.
இன்னும் ஆறு மாதங்கள் கூட இல்லை…. எவ்வளவு பெரிய துயரம் நடக்கப்போகிறது… எனக்குத் தெரிந்து என்ன பயன்? இந்த கோர நிகழ்வை தடுக்க என்னால் எப்படி முடியும்? நாட்டின் தலைவர்களிடம் சொல்லலாம்…. சொன்னாலும் அவர்களுக்கு புரிய வேண்டுமே… நம்ப வேண்டுமே! முதலில் அவர்களை எப்படி அணுகுவது? முதலும் கடைசியுமாக என்னை நானே காட்டிக் கொண்டால் ஒழிய இந்த ரகசியத்தை மற்றவர்களுக்கு கடத்த முடியாது. அப்படி என் கண்டுபிடிப்பை வெளிப்படுத்தினால் அது எனக்கு பாதகமாகவே முடியும் என்று புரிந்து கொண்டேன். அரசியல்வாதிகள் எந்த ஒரு செய்தியையும் வளைத்து தமக்கு சாதகமாக்கி சுயநலமாக நடந்து கொள்வார்கள்… இதுவரை வரலாற்றில் நடந்தவைகளை பார்க்கும்போது நான் என்னை வெளிப்படுத்திக் கொண்டால் 99 சதவீதம் நான் கொல்லப்படுவது உறுதி என்று புரிந்தது.
மக்களைக் காப்பாற்ற, இது நடைபெறாமல் தடுக்க வேறு ஏதாவது வழி உண்டா என்று யோசிக்க துவங்கினேன். உலக நாடுகள் பல கேட்டுக் கொண்ட பிறகும் கொழுந்துவிட்டு எரியும் இனப் பகைமையில் இருப்பவர்களிடம் ஒரு சாதாரணமானவன் நான் எப்படி இதை சாதிக்க முடியும்? எப்படி யோசித்துப் பார்த்தாலும் என்னால் இதை செயல்படுத்த முடியாது என்று புரிகிறது… விதி வலியது என்று யாரோ சொன்னது புரிகிறது!
கடவுளே நேரில் வந்து இது நடக்கப் போகிறது என்று கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் சொன்னாலும் யாரும் செவி மடுத்து கேட்க போவதில்லை…. அவர் தம்மை கடவுள் என்று நிரூபித்தால் ஒழிய! கடவுளுக்கே அந்த கதி என்றால் சாதாரண எனக்கு?!... கடவுளினால் இது நடைபெறாமல் தடுக்க முடியுமா? முடியும்…. ஏன் அவர் அதை செய்ய வேண்டும் மனிதனுக்கு மூளையும் கொடுத்து அதில் சிந்திக்கும் திறமையும் அளித்து நல்லது கெட்டது என்ற பாகுபாட்டை பகுத்தறிந்து உணரும் சக்தியும் கொடுத்து…. அவன் செய்யும் செயல்களை ஏன் தடுக்க வேண்டும்?
சரி இதை யோசிப்பதை விடுத்து நாம் எப்படி இதிலிருந்து தப்பித்து வெளியேறலாம் என்று யோசிக்கத் தொடங்கினேன்….
முதல் கட்டமாக அம்மாவிடம் சென்று பேசினேன், அம்மாவின் அப்பாவின் பாஸ்போர்ட்டுகளை கேட்டதும் அம்மாவிற்கு தடுமாற்றம் வந்தது…
‘ எதற்காக திடீரென்று கேட்கிறாய் மகேந்திரா?’
‘ ஆஸ்திரேலியாவில் எனக்கு பெரிய வாய்ப்பு இருப்பதாக தோன்றுகிறது, அதற்கு முயற்சி செய்து பார்க்கலாம்… அப்பா வெளிநாடு சென்று இருக்கிறார்.. நீங்களோ இதுவரை வெளிநாடு சென்றதில்லை அதனால் மூவரும் ஆக சுற்றுலா பயணி விசாவை எடுத்துக்கொண்டு மூன்று மாதம் அங்கு தங்கலாம் அதற்காக’
அம்மா அதிர்ச்சி அடைந்து சற்று சுதாரித்துக் கொண்டு…
‘ அது சரி மூன்று மாதங்கள் எப்படி தங்குவது? அப்பா வேலையை விட்டுவிட்டு…’
ஒரு நிமிடம் தடுமாறி விட்டேன்.
‘ இல்லையம்மா நான் மூன்று மதங்கள் தங்குகிறேன் நீங்கள் இருவரும் வேண்டுமென்றால் ஒரு மாதத்திற்குள் வீடு திரும்பி விடலாம் ‘
‘ என்னவோ அப்பாவிடம் கேட்டுக்கொள் பாஸ்போர்ட்டுகள் ஃபைலிங் கேபினட்டில் மூன்றாவது டிராவில் இருக்கிறது ‘
இரு பாஸ்போர்ட்டுகளையும் எடுத்துக்கொண்டு மாடிக்கு வந்தேன்.
மெல்பர்ன் நகரில் என்னுடன் படித்த நீண்ட நாளைய நண்பனுக்கு போன் செய்தேன்.
எதற்காக என்ற காரணமும் கேட்காமல், குறிக்கிடும் இல்லாமல் உடனடியாக எப்போது வேண்டுமானாலும் வா என்று அழைத்தான். அதற்கான அழைப்பு மின்னஞ்சலை அனுப்பினான்.
எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து மூன்று மாத சுற்றுலா பயணி விசாவிற்கு விண்ணப்பித்தேன்…. ஒரு வாரத்திற்குள் மூன்று விசாக்களையும் கிராண்ட் செய்து ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அனுப்பியது.
ஊரிலிருந்து வந்த அப்பாவிடம் போராடி ஒரு வாரத்தில் கிளம்ப சம்மதிக்க வைத்து பிளைட் டிக்கெட்டுகளையும் பிப்ரவரி முதல் வாரத்திற்கு புக் செய்து விட்டேன்.
இதுவரை எல்லாம் சரி ஆனால் நான் மூன்று மாதங்களுக்குள் அங்கு வேலை தேடிக் கொள்ள வேண்டும்…. அங்கிருக்கும் அரசாங்கம் அதற்கு அனுமதிப்பதில்லை, ஆனால் நேர்முகத் தேர்விற்கு செல்லலாம், தேர்வாகும் பட்சத்தில் அப்ளை செய்துவிட்டு நிரந்தர குடி உரிமை கிடைக்கும் பட்சத்தில் பக்கத்தில் ஏதாவது ஒரு நாட்டிற்குச் சென்று அங்கிருக்கும் ஆஸ்திரேலியா எம்பஸியில் எண்டோஸ் செய்து கொள்ளலாம். நான் ஒரே மகன் என்பதால் என் தாய் தந்தையருக்கு என்னுடன் தங்க ஏதொரு பிரச்சனையும் வராது.
முருகனின் அருளால் எல்லாம் திட்டமிட்ட படியே நடந்தது. நண்பன் சிவசங்கரன் எல்லா வித உதவிகளையும் செய்தான்.
நண்பன் சிவசங்கர் குடும்பத்தையும், என் தாய் தந்தையும் பார்க்கும்போது மனம் கனத்தது….
‘முருகா இவ்வளவு உதவி செய்த எனக்கு அழிவிலிருந்து காப்பாற்ற இந்த உலகத்திற்கும் செய். எனக்குத் தெரிந்ததை நடக்காமல் தடு!’ வேண்டுவதை தவிர என்னால் வேறு என்ன செய்ய முடியும்?
முதல் இரு மாதங்கள் தமிழ்நாட்டின் நினைவாகவே இருந்த என் பெற்றோர் மெல்பர்ன் வாழ்க்கையை சிறிது சிறிதாக ரசிக்க துவங்கினர்….. ரசித்துப் பாராட்டுவும் செய்தனர்.
தூய்மையான சுவாசக் காற்று, சுத்தமான குடி தண்ணீர், எங்கும் விளையாட்டு அரங்குகள், எல்லோரிடமும் கார்கள் இருந்தாலும் போக்குவரத்து வசதி.. என்று பாராட்டிக் கொண்டே போனார்கள்… எனக்கோ கிடைத்த வேலையில் முழு மனதாக கவனத்தை செலுத்த முடியவில்லை..
மே மாதத்தில் நிகழப்போகிறதோ இல்லையோ தெரியாது… நிகழ்ந்துவிடும் என்று 90% க்கு மேல் என் மனது சொல்கிறது… புதிய நாடு, புதிய வேலை, புதிய கலாச்சாரம் எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டு 100% உழைப்பை கொடுக்க கடுமையான முயற்சி எடுத்தேன்… வேலை முடித்துக் கொண்டு வந்தவுடன் பெற்றோருக்கு உற்சாகம் அளித்து பேச வேண்டும்.. என் கடும் மன அழுத்தத்தை ஒரு துளியும் அவர்களுக்கும், நண்பன் குடும்பத்திற்கும் வெளி காண்பிக்க விரும்பவில்லை.
மே மாதமும் வந்தது, எனக்கு இருக்கும் மன அழுத்தத்தில் இந்த மாபெரும் ரகசியத்தை என் மனதில் வைத்துக்கொண்டே எல்லோருக்கும் முன் இறந்து விடுவேனோ என்னவோ… இந்த சந்தேகம் கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை எனக்கு வந்து சென்றது.. முன்பு டாக்டர் கொடுத்த மாத்திரைகளை வைத்திருந்தேன், அதை அவ்வப்போது எடுத்துக் கொண்டேன். ஓரளவிற்கு சமாளித்து விடுவேன் என்று நினைக்கிறேன்.. இனி என் விதி என்னிடம் இல்லை முருகனிடம் உண்டு… என்ன ஒரு குழப்பமான சிந்தனை? விதி என்று கூறிவிட்டு முருகனிடம் தான் உண்டு என்று நினைக்கிறேனே…. பைத்தியம் பிடிக்காமல் இருந்தால் சரி.
அந்த மே 18 ஆம் நாளும் வந்தது…
என் வீட்டிற்கு நண்பன் சிவசங்கரன் குடும்பத்தை அழைத்து இருந்தேன்…
எல்லோரும் மதிய உணவை முடித்துக் கொண்டு தோட்டத்தில் பர்கோலாவின் கீழ் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது தான் எனக்கு மட்டுமே தெரிந்த அந்த மாபெரும் ரகசியம் உலகிற்கு பேரிடியாக இறங்கியது…
ஆமாம் அது நடந்தே விட்டது..
மூன்றாம் உலகப் போர் என்று எல்லாவித செய்தி நிறுவனங்களும் அலறின…. நாங்கள் வெகு தூரத்தில் இருந்தாலும் ஆஸ்திரேலிய நாடே மயான அமைதிக்கு சென்றது.. என்ன நடந்தது என்றே யாருக்கும் புரியவில்லை, தெரியவில்லை… ஏன் மூன்றாவது உலகப்போர் என்கிறார்கள் என்றும் புரியவில்லை.
எங்களுக்குள்ளும் பேய் அறைந்தது போல் நடுக்கம் ஏற்பட்டது.
‘அணுகுண்டு ஏதாவது யாராவது போட்டு விட்டார்களா?’ என்று எனக்குள் இருந்த ரகசியத்தை என்னை மீறி நான் கூற…
சற்றும் தாமதிக்காமல் ஒரு முகமாக எல்லோரும், ‘ அப சகுனமாக பேசாதே’ என்றனர்.
இரண்டு மணி நேரம் கழித்து ஏ பி சி டெலிவிஷனில் இரு வேறு இடங்களில் இரு வேறு நாடுகளில் அணுகுண்டு வெடித்ததாகவும் பெருத்த சேதம் பல நாடுகளுக்கு ஏற்பட்டதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிப்பதாக தெரிவித்தனர்.
எல்லோரும் ஒரு சேர என்னை அதிர்ச்சியுடனும் .. கோபத்துடனும் பார்த்தனர். அவர்களுக்கு எப்படி புரியப்போகிறது என்னுடைய கடந்த ஆறு மாத வலி!
‘ என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது சரியான செய்திகள் இன்னும் வரவில்லை, நம் ஆஸ்திரேலியாவிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை எல்லோரும் அமைதி காக்க வேண்டுகிறேன்… அரசாங்கம் எல்லாவற்றிலும் எல்லோருக்கும் பாதுகாப்பை உறுதி செய்யும் ‘ என்று ஆஸ்திரேலியா பிரதம மந்திரி அல்பனீசி எல்லா தொலைக்காட்சி ஊடகங்கள் மூலமாகவும் அடிக்கடி உறுதி செய்தார்.
நண்பன் சிவசங்கர் குடும்பத்தை எங்கள் வீட்டிலேயே இருக்க செய்து விட்டோம்.. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை தான் ஓரளவிற்கு என்ன நடந்தது என்று தெரிந்தது…
கிழக்கு ஐரோப்பாவில் ஒரு நாட்டின் மீது மற்றொரு நாடும், மத்திய கிழக்கில் மற்றொரு நாடு மற்றொரு நாட்டின் மீதும் தற்செயலாக ஒரே சமயத்தில் அணுகுண்டை வீசியதாகவும் அதனால் கிழக்கு ஐரோப்பா முழுவதும், மேற்கு ஆசியாவில் தென்னிந்தியா வரையிலும் சீனாவின் பாதிப்பகுதி வரையிலும் அணுக்கதிரின் பாதிப்பு இருப்பதாகவும் பல நாடுகள் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து விட்டதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் உறுதி செய்யப்படாத தகவல்கள் உள்ளங்களை கொலை நடுங்கச் செய்தன.
அணுகுண்டை போட்ட நாடுகள் இரண்டும் தங்கள் நாட்டுக்கு பாதிப்பு வராது என்று தவறாக நினைக்க.. இயற்கையின் நீதியோ வேறு விதமாக இருந்தது. ஐரோப்பிய நாட்டின் அணுகுண்டு தனக்கு கீழ் இருக்கும் நாடுகளுக்கு பாதிப்பை உண்டாக்க, ஆசிய நாட்டின் அணுகுண்டோ தனக்கு மேலிருக்கும் நாடுகளுக்கு பாதிப்பு உண்டாக்க…. கெடுவான் கேடு நினைப்பான் எனும் தமிழ் முதுமொழிக்கு ஏற்ப போட்டவர்களும் போடப்பட்டவர்களும் அழிந்தார்கள். உலகம் இந்த பேரழிவிலிருந்து மீள
எவ்வளவு காலம் பிடிக்குமோ அந்த முருகனுக்கு மட்டுமே வெளிச்சம்.
எல்லா பாதிப்பும் தெரிய கிட்டத்தட்ட ஆறு மாத காலம் பிடித்தது. உப்பு சப்பில்லாமல் கிடந்த ஐக்கிய நாடுகள் சபையை இதுவரை ஆட்டி படைத்த அமெரிக்கா ஆட்டம் கண்டு இருந்ததால், மீதமிருந்த உலக நாடுகளுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் அல்பநீசி தலைமை ஏற்று முன்னெடுத்து இனி எக்காலத்திலும், எக்காரணத்திற்காகவும் மீதமிருக்கும் மனித சமுதாயத்தை காக்க ஒரு நாடு மற்ற நாட்டின் மீது போர் தொடுப்பதில்லை என்று எல்லோரும் முடிவு எடுக்க… இதோ 2025 மே மாதம் வந்துவிட்டது….. உலகமே ஒரு மயான அமைதியில் நாட்களைக் கடத்த… விவசாயத்தை மட்டும் மீதமிருந்த எல்லா நாடுகளும் வெறி பிடித்தார் போல் துவங்கி; தொடர.. ஓரளவிற்கு அவரவர்கள் அவரவர்களுக்கு தேவையான உணவை உற்பத்தி செய்து கொண்டனர்.
நான் அண்டார்டிகா செல்ல விண்ணப்பிக்கப் போவதாக சொன்னவுடன் என் பெற்றோரும் சரி, நண்பன் சிவசங்கரனும் சரி என்னை பைத்தியக்காரனை பார்ப்பது போல் பார்த்தார்கள்.. இருந்தும் அவர்கள் மனதில் ஏதோ இனம் புரியாத கேள்விக்குறி இருந்தது… என்னுடைய கட்டாயத்தின் பேரில் பெற்றோர் சரியான சமயத்தில் சம்மதித்து ஆஸ்திரேலியா வந்தது அவர்கள் மனதை நெருடி இருக்கலாம்.
நான் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் சிவசங்கரன் அண்டார்டிக்கா வர மறுத்துவிட்டான். நான் விடாப்பிடியாக அண்டார்டிகாவிற்கு விண்ணப்பிப்பது அவனுக்கு புரியாத புதிராக இருந்தது. அவனுக்கு இரு வயது மகள் இருந்ததால் அண்டார்டிகா பயணம் சாத்தியமாகாது என்று நான் அவனுக்கு உண்மையைச் சொல்லி கட்டாயப்படுத்தவில்லை.
2025 டிசம்பர் மாதம் அண்டார்டிகாவின் ஆஸ்திரேலிய ஆராய்ச்சி நிலையத்திற்கு தேர்வு செய்யப்பட்டேன்.
எஞ்சி இருக்கும் நாடுகளில் ஆஸ்திரேலியாவிற்கும் நியூசிலாந்திற்கும் எஞ்சி இருக்கும் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு வரும் இந்த காலகட்டத்தில் நான் இங்கிருந்து அண்டார்டிகா செல்ல விண்ணப்பித்தது அவர்களுக்கே அதிர்ச்சி அளித்தது போலும்!
இங்கு என் பெற்றோரை கவனிக்க நான் மட்டுமே உள்ளதால் விசேட அனுமதி அவர்களுக்கும் கொடுத்தார்கள். எனக்கு மெலிதான சிறு மகிழ்ச்சி.. ஏனென்று சரியாக எனக்கும் புரியவில்லை. 2026 மார்ச் மாத இறுதிக்குள் நான் செல்ல வேண்டும். பெற்றோர்கள் அண்டார்டிகாவின் குளிருக்கு இங்கிருந்தே நடுங்கிக் கொண்டு பயண ஏற்பாடுகளை செய்தனர்.
மற்ற குழு நபர்களுடன் நான் மட்டுமே பெற்றோர்களுடன் ஆஸ்திரேலிய விமானப்படை விமானத்தின் மூலம் அண்டார்டிகா வந்தடைந்தோம். ஆஸ்திரேலியாவில் இது இலையுதிர் காலம்…. அண்டார்டிகாவில் உடல் குடல் நடுங்கும் குளிர்… எல்லாவித முன்னேற்பாடுகளும் செய்ததால் சமாளிக்க துவங்கினோம்.
என் குழுவினருக்கு மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா அண்டார்டிகா கேம்பில் உள்ள எல்லோருக்கும் நான் ஏன் பெற்றோருடன் வந்தேன் என்பது புரியாத புதிதாக இருந்தது… நான் எப்படி சொல்வது, எதைச் சொல்வது?
என் பெற்றோரின் நிலை தான் பரிதாபகரமாக இருந்தது… அவர்கள் மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் என்னால் மௌனமாக நாட்களைக் கடத்தினர். ஒரு வருடத்திற்கு மேல் எப்படி கடத்தினோம் என்றே தெரியவில்லை…. டின் ஃபுட்டுகளும், உறைய வைக்கப்பட்ட காய்கறிகளும் உதவ பெரிதும் பயன்பட்டது தேனீரும் காப்பியுமே! எனக்கும் குழுவினருக்கும் உதவிக்கு பலவகை மதுபானங்கள் இருந்தன.
2027 ஆகஸ்ட் மாதம் துவங்கியது.. எல்லோரும் தத்தம் தினசரி வேலைகளில் மூழ்கி இருக்க, என்னால் மட்டும் அந்த மாபெரும் ரகசியத்தில் இருந்து மீள முடியவில்லை.. ஒரு கணம் யோசித்தேன் 2012ல் ஏற்பட்ட நிகழ்வைப் போலவே தப்பிப்போமா என்று… இல்லையே அதற்கு வாய்ப்பில்லையே, ஏனென்றால் நான் கண்ட காட்சிகள் அப்படி… தப்பித்திருந்தால் ஏன் அண்டார்டிகா மட்டும் தப்பித்திருக்கும்?!
ஒவ்வொரு நிமிடத்தை கடப்பதும் எனக்கு அச்சமாக இருந்தது…. என்னுடைய அச்சத்தை யாரிடமும் காட்டவில்லை. சென்ற வாரம் கடைசி முயற்சியாக சிவசங்கரனை சுற்றுலா பயணியாக வரவழைக்கும் முயற்சி தோல்வில்தான் முடிந்தது… சரி விதிப்படி நடக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.
ஆகஸ்ட் 12, 2027 காலை எப்போதும் போல் தான் விடிந்தது… ஒரு வித்தியாசம் சூரிய உதயத்தின் போது லேசாக பொன்னிறமாக காட்சியளிக்கும் வானம் இன்று பிரகாச பொன்னிறமாக காட்சியளித்தது ஏனென்று எனக்கு மட்டும் தான் தெரியும். ஆமாம் நான் பயந்தது நடக்கப் போகிறது. அண்டார்டிகா நேரப்படி காலை 10 மணி இருக்கும் பெரிய பூகம்பமா இல்லை பிரளயமா என்று உணரக்கூட நேரமில்லாமல் பெரிய குலுங்கல் ஏற்பட்டது. எல்லா நாட்டின் கேம்புகளில் இருந்தும் எல்லோரும் வெளியே ஓடி வந்தனர்… எனக்கு ஒன்று புரியவில்லை, ஏன் இந்த மாபெரும் நிகழ்வை எந்த ஒரு நாட்டினாலும் கணிக்க முடியவில்லை என்று.. 2024 மனித காட்டுமிராண்டித்தனமான அழிவில் இருந்து எல்லா நாடுகளும் மீளவில்லையோ என்னவோ? தங்கத்தியே வெறுக்கும் அளவிற்கு தங்க நிறமான வானம் எல்லோருக்கும் அதிர்ச்சியை தந்தது… சற்றென்று குளிர் நீங்க, எல்லா பனிக்கட்டிகளும் சற்றென்று உருக ஆரம்பித்தது. எல்லா நாட்டு கேம்புகளும் உயரமான இடத்தில் பெரிய பாறையின் மீது அமைக்கப்பட்டிருந்ததால் பனிக்கட்டி உருகளிலிருந்து தப்பித்தது.
என் தந்தையை ஒருவித தலைவரைப் போன்று அண்டார்டிகாவே கொண்டாடியது… அவரும் அதற்கேற்றார் போல் தனக்குத் தெரிந்தவைகளை எல்லோருக்கும் கூறினார்… நான் எடுத்து வந்த விதைகள் அற்புதமாக, செழுமையாக வளர அதனுடன் பல்லாயிருக்கணக்கான வருடங்களாக புதைந்திருந்த அக்காலத்து மரம் செடி வகைகள் அதிசயமாக உயிர் பெற்று முளைக்க…..
மன்னிக்கவும், கடந்த மூன்று வருடங்களாக என்ன நடந்தது என்று கூறாமலேயே சற்றென்று என் தந்தையை பற்றி கூற ஆரம்பித்து விட்டேன்…
இப்போது 2030 நவம்பர் மாதம்.. 2027 ஜூலை 30ஆம் தேதி இயற்கையின் நியதியா இல்லை நீதியா என்று வகையறக்க முடியாமல் அந்த அதிசயம் நடந்தது.. எனக்குத் தெரிந்த அந்த மாபெரும் பிரபஞ்ச ரகசியம் நடந்தே விட்டது, அப்போது தப்பித்தது அண்டார்டிகா மட்டும்தான் என்று எனக்கு மட்டுமே தெரியும் மற்றவர்களுக்கு தெரியாது… அது அதிசயம் அல்ல….
தமிழ் ஆராய்ச்சியாளர்களின், தமிழ் ஆர்வலர்களின் கனவு என்று எப்போதும் எல்லோராலும் எள்ளி நகையாடபட்டது இப்போது நனவாகியது!
பலப்பல ஆயிரம் வருடங்களாக நடந்தவைகளுக்கு இயற்கை நீதி வழங்கியது…
ஆமாம், அண்டார்டிகா அல்ல இது… நம் முருகனை முதன்மையாகக் கொண்டு இருந்த குமரிக்கண்டம் இது…
பனிக்கட்டிகள் உருக சிறிது சிறிதாக தெரிய ஆரம்பித்த மாபெரும் கட்டிடங்கள் ஆச்சிரியத்தை கொடுக்க… அதைவிட பல மடங்கு அதிசயத்தை அள்ளித் தெளிக்குமாறு பண்டைய தமிழ் எழுத்துக்கள் எங்கும் காணப்பட்டது. ஆமாம் இதுதான் குமரிக்கண்டம் என்று உறுதி செய்யப்பட்டது. என் தந்தை தொல்பொருள் துறையில் இருந்ததால் ஒரு அளவிற்கு அதைப் படித்துக் காண்பித்தார். அதிலிருந்து அவரை ஒரு தலைவரை போன்று; ஒரு அறிஞரைப் போன்று; ஒரு சித்தரைப் போன்று பார்த்தனர்…
மிக மிக பிரம்மாண்டமான அரண்மனை போன்று இருந்த கட்டிடத்தில் முதன்மை பீடத்தில் அமர்ந்திருப்பது போல மிக கம்பீரமாக முருகனின் சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது.