இடம், பொருள், ஏவல்!
- melbournesivastori
- Aug 10, 2023
- 9 min read

இது கதை அல்ல, ஆனால் கதையை போன்று விறுவிறுப்பாக அமையப்போகும் கட்டுரை! அப்படி அமைக்க முயற்சிக்கிறேன்.
இது ஒரு தீவிரமான கட்டுரை, ஊன்றி படித்தால் மட்டுமே புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். பல பல வருடங்களாக என்னுள் சுழன்றுக் கொண்டிருந்த பல துறைகளைப் பற்றிய பல கேள்விகள், அந்தக் கேள்விகளை தொக்கி நிற்கும் வினோதங்கள், அந்த வினோதங்களை நோக்கி பயணப்படும் போது ஏற்படும் அதிர்ச்சிகள், ஆச்சரியங்கள், அற்புதங்கள் பற்றிய என்னுடைய தேடல்கள், தேடிப் புரிந்தவைகள், புரிந்து தெளிந்தவைகளை இதில் தொகுத்து கொடுக்க முயற்சிக்கிறேன்.
இது அன்றாட பிரச்சினைகளில் உழன்று சோர்வுற்று சிறிது நேரமாவது இதிலிருந்து விடுபட கேளிக்கை நிகழ்ச்சிகளை சிறிது நேரம் பார்த்து விட்டு மனம் இலகுவாகி உறங்கச் செல்லும் சாமானிய மக்களுக்கு அல்ல..
உண்மையைப் பற்றி எனக்கு கவலை இல்லை…. நீ என்ன சொன்னாலும் நம்ப போவதில்லை.. என்னுள் ஒரு கருத்து பதிந்து விட்டிருக்கிறது அதைத்தான் நம்புவேன், அதைத்தான் பின்பற்றுவேன்… என் கருத்தை/ நம்பிக்கையை மீறி என்னுள் எதையும் புக விட மாட்டேன் என்று முரட்டுத்தனமாக அடம் பிடிப்பவர்களுக்கும் இது இல்லை.
கிரிக்கெட்டிலோ, வீடியோ கேம்களிலோ, அரசியலிலோ, திரைப்படங்களிலோ அதிக நேரம் செலவிடும் இளைஞர்களுக்கும் இது இல்லை.
இவைகளில் அடங்கா ஒரு கூட்டம் யோசித்துக் கொண்டிருக்கிறது… இயற்கையைப் பற்றி, பிரபஞ்சத்தை பற்றி, கடவுளைப் பற்றி, வாழ்க்கையைப் பற்றி… அந்த ஒரு சிறு கூட்டத்திற்காக தான் இது.
இடம், பொருள், ஏவல் என்று இங்கு நான் குறிப்பிடுவது சயின்ஸ், டெக்னாலஜி அண்ட் கான்ஷியஸ்னஸ் அதாவது அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் உணர்வு.. உணர்வு என்ற சொல்லை தமிழ்நாட்டில் சர்வ சாதாரணமாக தேவையற்ற இடங்களில் பயன்படுத்துவதால் அதன் உண்மை பொருளே மாறிவிட்டிருக்கிறது அல்லது மாற்றப்பட்டிருக்கிறது. அதே உணர்வை ஆங்கிலத்தில் கான்ஷியஸ்னஸ் என்று சொல்லும் போது அதே பொருள்தான் என்றாலும் வேறு பரிமாணத்திற்கு நம்மை கொண்டு செல்கிறது. அந்த கான்ஷியஸ்னஸ் எங்கிருக்கிறது என்பது கடவுளைப் பற்றிய கேள்வி போன்றது… மூளையை கசக்கி பிழிந்தாலும் விடை கிடைக்குமா என்றால் கேள்விக்குறியே! அது பிரபஞ்சத்தின் எல்லையை போன்றது…
நிறைய அறிவியல் ஆய்வாளர்கள்… விஞ்ஞானிகள் என்றே பொதுவாக கூறுவோம், இதை ஆராய்ந்து; ஆராய்ந்து பல; பல கட்டுரைகளை வெளியிட்டு முனைவர் பட்டங்களை பெற்றார்கள் தவிர முடிவு இன்னமும் தெளிவாகவில்லை. சிறு உதாரணத்திலிருந்து துவங்குவோம்,
நம் மனது எங்கு இருக்கிறது? யோசிக்காமல் சட்டென்று எல்லோரும் சொல்வது, படித்தவர்கள் என்றால் மூளை என்றும் சாமானியர்கள் என்றால் இதயம் என்றும் கூறுவர். மனது கொஞ்சம் சிக்கலான விடயம்..
முதலில் நினைவுகளுக்கு வருவோம்…. நினைவுகள் மூளையிலிருந்து உற்பத்தியாவதாக வைத்துக் கொண்டாலும் நினைவுகள் சேமிக்கப்படுவது மூளையில் அல்ல என்று நிரூபிக்க பட்டுக் கொண்டிருக்கிறது.. மறுபிறவியை நீங்கள் நம்புபவர்கள் என்றால் அதை நிரூபிக்க/விளக்க மிக எளிதாகும். மூளை மனிதன் இறந்த சில நிமிடங்களுக்கும் செயலிழந்து விடும், பிறகு மனித உடலோடு மக்கி மன்னாகும்.. இப்படி இருக்கையில் எங்கோ பிறக்கும் ஒரு குழந்தையிடம் மறுபிறவியின் நினைவுகள் எங்கிருந்து வந்திருக்கக்கூடும்?! இதிலிருந்து ஒன்றை மட்டும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது… ஒரு பிறவியின் நினைவுகள் அந்தப் பிறவியை தாங்கிய உடலில்/ மூளையில் சேமிக்கப்பட்டு இருக்கவில்லை என்று.. அப்படி என்றால் வேறு எங்கு அந்தப் பிறவியின் நினைவுகள் சேமிக்கப்பட்டுள்ளது அல்லது சேமிக்கப்படுகிறது? அதுதான் பல பிரம்மாண்டமான கேள்விகளில் ஒன்றாகிறது. இவற்றிற்கு பின்னால் வருவோம்….
சயின்ஸ் ( அறிவியல்) புரியாததை புரிந்து கொள்ள முற்படும் துறை/பாடம். அறிவியலின் புரிதல் எப்போதுமே மாற்றத்துக்குள் ஆகிறது, இன்று அறுதி இட்டுச் சொல்லக் கூடிய விடயங்கள் நாளை வேறு நிரூபனங்களால் மாற்றப்படுகிறது.. ஒரு விஞ்ஞானியின் கோட்பாடு அல்லது நியதி நிரூபிக்கப்பட்டது என்று மற்ற விஞ்ஞானிகளால் ஒத்துக் கொள்ளப்பட்டால் அதுவே நியதியாக மாறுகிறது.. இதில் ஜனநாயகத்தின் சாயல் தெரிகிறதே தவிர உண்மை சாயல் அல்ல. உண்மை சாயலாக இருந்தால் அந்த நியதி/ கோட்பாடு என்றுமே மாறக் கூடியது அல்ல… நிரூபிக்கப்படாதது எதுவுமே உண்மை இல்லை என்று முரட்டு பிடிவாதம் பிடிக்கும் விஞ்ஞானிகள் தான் பெரும் மாற்றத்திற்கான தடையாக இருக்க முடியும்.. நமக்குப் புரியாதது, நம் அறிவியல் அறிவுக்கு எட்டாதது இந்த பிரபஞ்சத்தில் கடல் போன்று இருக்கிறது என்ற ஏற்றுக்கொள்கிற திறந்தமனப்பான்மையின்மையே இதற்கு காரணம். அறிவியலின் அடுத்த பரிமாணத்திற்கு வருவோம்…. அறிவியல் கண்டுபிடிப்பு வெகுவாக எதற்கு பயன்படும் என்றால் தொழில்நுட்பத்திற்கு… தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனித இனம் மேம்பட, மனித வாழ்க்கை எளிதாக, பூமிக்கு வரும் ஆபத்துக்களை தவிர்க்க பயன்பட வேண்டும்.. மேம்போக்காக பார்த்தால் அப்படித்தான் நடக்கிறது… ஊன்றி கவனிக்கும்போது நமக்கு புரிவது அப்படி அல்ல என்று தெரிகிறது. அணு சக்தியை கண்டுபிடித்த நாம் முதன் முதலில் பயன்படுத்தியதே அதை வைத்து மக்களை அழிக்கத்தான்.
பிளிப் கார்சோ என்பவர் 1942ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்தார், 1945ஆம் ஆண்டு ஐரோப்பாவில் அமெரிக்க ராணுவ உளவுப்பிரிவில் பணியாற்றும்போது சுமார் பத்தாயிரம் யூதர்களை இத்தாலியிலிருந்து தற்போதுள்ள இஸ்ரேலுக்கு ஜெர்மனியின் நாசிப் படைகளிலிருந்து காப்பாற்றி அனுப்பி சேர்த்தார்.. இது அவரின் பதவி காலத்தின் முற்பகுதியில் பெரும் வெற்றியாகக் கருதப்பட்டது. 1953 இல் இருந்து 1957 வரை அமெரிக்க ஜனாதிபதி ஐசனாவரின் NSC (நேஷனல் செக்குரிடி கவுன்ஸில்) யில் இருந்தார். அப்போது கர்னலாக பதவி வகித்தார். அவரின் தி டே ஆப்டர் ராஸ்வெல் புத்தகம் வெளிவந்தவுடன் இலை மறைவு காய் மறைவாக இருந்த ஏலியன் என்கவுண்டர்கள் பொதுவெளிக்கு வந்தது.
அவர் ஜெனரல் ட்ரூடோ என்பவரின் கீழ் கர்னல் ஆக வேலை செய்யும்போது.. ட்ரூடோ அவருக்கு மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைத்தார்… 1961-ம் ஆண்டு பென்டகனின் அண்ணிய தொழில்நுட்பப் பிரிவின் தலைவராக ட்ரூடோ வால் நியமிக்கப்பட்டார்.. அன்றைய காலகட்டத்தில் அவருக்கு தெரியாது பின்வரும் காலங்களில் அதீத தொழில்நுட்ப வளர்ச்சி அங்கிருந்து அந்த அறையிலிருந்து தொடங்கப் போகிறது என்று…. எப்படி என்று பிறகு கூறுகிறேன், அதற்கு முன்பு இதற்கான அடிக்கோல் எங்கிருந்து தொடங்கியது என்பதை பற்றி கூற வேண்டும்.
1947 பிற்பகுதியில் ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவிற்கு மாற்றப்பட்டு ரோஸ்வெல்லில் டூட்டி ஆபீசராக நியமிக்கப்பட்டார். ஒருநாள் இரவு ஒயிட் ஸ்சாண்டில் உள்ள பேட்டர்சன் விமான பிரிவின் கிடங்குகளுக்கு பார்வையிடச் சென்றார். அவ்வாறு செல்லும்போது பணியில் இருந்த ஒரு காவலர் இவரின் பொது நல விசாரிப்பின் போது முக்கியமான சிலவற்றை இங்கு வைத்திருக்கிறார்கள் என்றும் நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களா என்றும் கேட்டார், தான் பார்க்காததா என்ன தான் இருக்கப் போகிறது என்று இவரும் பார்க்கச் சென்றார்… அங்கு ஐந்து சிறிய சவப் பெட்டிகளை போன்று வைக்கப்பட்டிருப்பதை காண்பித்து இவைகள்தான் அவை என்றும் அந்தக் காவலர் கூறினார். உள்ளே என்னவென்று இவரும் கேட்க காவலர் திறந்து காண்பிக்க... சுமார் பத்து பதினைந்து நொடிகள் தான் பார்த்திருப்பார்.. இரண்டாம் உலகப்போரில் எவ்வளவோ பார்த்திருந்தும் இது அதிர்ச்சியையே தந்தது…. சுமார் மூன்றிலிருந்து 4 அடி உயரம் இருக்கும் சிறிதளவு மனித உருவம் போன்று தோற்றமளிக்கும் உருவங்கள் கிடத்தபட்டிருந்தன.. இரண்டாம் உலகப்போரும் ஐரோப்பாவில் அமெரிக்க ராணுவ புலன் அமைப்பின் வேலைச்சுமையும் முடித்து திரும்பிய அவருக்கு இதைப் பற்றி அதிகமாக யோசிக்கத் தோன்றவில்லை… இதை அன்று மறந்தவர் 1961 ஆம் ஆண்டு புதிய பதவியை பற்றி ஜெனரல் ட்ரூடோ விவரிக்க அவரின் வேலையின் முக்கியத்துவம் புரிய ஆரம்பித்தது.
1947 ஆம் ஆண்டு நடந்தது ஏலியனின் UFO விபத்து என்றும் அதிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட முக்கிய பொருட்களை பாதுகாப்பதுடன் அதிலிருந்து எவ்வளவுக்கெவ்வளவு முடியுமோ அவ்வளவு தொழில்நுட்பத்தையும் தன்னகப்படுத்தி நாட்டின் ராணுவத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று இவரிடம் விவரித்தார். மேலும் சிலவற்றை ஏற்கனவே பல முக்கிய ரகசிய இராணுவக் கட்டமைப்பின் தொழிற்சாலைகளில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூற அதிர்ச்சி கலந்த வியப்புடன் கேட்டுக் கொண்டார்.
அந்த விபத்தின் மூலம் உலகத்திற்கு கிடைத்தது மைக்ரோ சிப், பிரிண்டட் சர்க்யூட் போர்ட், லேசர் கருவிகள், நைட் விஷன் காகுல்கள் மற்றும் மிக முக்கியமான ஆப்டிக் பைபர். இவைகளை வேறு ஒரு அத்தியாயத்தில் விவரிக்கிறேன்… இந்த அத்தியாயத்தில் நான் கூற வந்தது செயற்கை நுண்ணறிவை பற்றி அது அழிவைப்பற்றியா என்று காலம் தான் முடிவு செய்ய வேண்டும்.
அந்த ஏலியன் உடல்கள் நமக்கு விளக்கத்தை தருவதற்கு பதிலாக விவரிக்க இயலாத அதிர்ச்சியை தான் தந்தது.. ஒரு ஏலியன் உடலை முழுவதுமாக பரிசோதித்தபோது மனித மூளையைப் போல் அவைகளுக்கு இல்லை மாறாக இரு பகுதி மூளையாக இருந்தது மட்டுமல்லாமல் ஜீரண மற்றும் இனவிருத்தி அங்கங்களும் இல்லாமல் இருந்தது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது… பல வருடங்கள் மிகச்சிறந்த விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப வல்லுனர்களும் பெரிதும் குழம்பி கடைசியாக முடிவுக்கு வந்தது அவைகள் க்ளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட உயிரினங்கள் என்று.
குழப்பம் அதோடு நிற்கவில்லை அந்த UFO வில் நம் ஊர்திகளில் சாதாரணமாக இருக்கும் கண்ட்ரோல் பேனல் போன்று ஏதுமில்லை. முழுவதுமாக தேடியும் எந்த ஒரு ஆயுதமும் இல்லை… இதற்கான விளக்கம் அறுபதுகளின் தொடக்கத்தில் தான் கிடைத்தது… அதாவது அந்த ஏலியனின் ஒரு பகுதி மூளை தான் ஊர்தியை இயக்க பயன்பட்டது என்றும் அந்த ஊர்தியே ஒரு பகுதி உயிரினம் என்றும் நம் அன்றைய மூளைக்கு எட்டாத அதிர்ச்சி, ஆச்சரியம், குழப்பம் தரும் விளக்கம் கிடைத்தது…
இதையே கீழே 75 வருடங்கள் கழித்து… இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறோம்… கீழே உள்ள மூவரும் கொடுத்த வாக்குமூலங்கள் இவைகளைத் தொன்று தொட்டு பின்பற்றி வரும் என்னைப் போன்றவர்களுக்கு அதிர்ச்சியாக இல்லை என்றாலும் சாமானிய பொது மக்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.. அவைகளைப் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம்.. Ryan Graves, David Grusch and David Fravor testify before a House subcommittee about unidentified anomalous phenomena on July 26, 2023, in Washington, D.C.
இதைப் பற்றியும் உலகில் நடைபெறும் வேறு பல முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள நீங்க விரும்பினால் தொடர்ந்து பார்த்து வரும் தொலைக்காட்சி ஊடகங்களை பார்க்காமல் வாரம் ஓரிரு முறையாவது DW, NHK போன்ற வெளிநாட்டு செய்திகளை ஆங்கிலத்தில் தான் பாருங்கள்.
இதுதான் நான் இந்த அத்தியாயத்தில் விளக்க முற்படும் செயற்கை நுண்ணறிவின் தொடக்கம்….
இந்த ஏலியன் கிளோன்களை உருவாக்கியது யார் என்பதற்கு அப்போது சரியான விளக்கம் கிடைக்காமல் ஒன்றை மட்டும் புரிந்து கொண்டார்கள்… இந்த ஏலியன்கள் செயற்கை நுண்ணறிவு ஊட்டப்பட்டவை என்று… மிகவும் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால் இவைகளுக்கு தனக்கு இடப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றுவதுதான் பிரதான குறிக்கோள். அன்பு, பாசம், பண்பு, இறக்கம் இவைளுக்கு கிடையாது. இப்போது பெரும்பாலான மனிதர்களுக்கும் இது இல்லை என்பது வேறு விஷயம்...அன்று புரிந்துகொள்ளப்பட்ட செயற்கை நுண்ணறிவின் பாதிப்பு இருபத்தி ஓராம் நூற்றாண்டில் பூதாகரமாக வெடிக்க போகிறது என்று அப்போது தெரியாது.
இன்று இந்த காலகட்டத்தில்… நீங்கள் அறிந்தோ; அறியாமலோ புரிந்தோ; புரியாமலோ தெரிந்தோ; தெரியாமலோ தினசரி செயற்கை நுண்ணறிவின் செயல்பாடுகளை பயன்படுத்துகிறீர்கள். மிக அதிகமாக ஸ்மார்ட் போன்களிலும், ஐ பேட் களிலும் ஸ்மார்ட் டிவி களிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் மேற்கூறிய மூன்றும் On செய்யப்படாமல் இருந்தால் உறக்கத்தில் உள்ளது என்று…. தவறு.. அதன் சுற்று வட்டத்தில் உள்ள எல்லாவித ஒலிகளையும் உள் வாங்கி அதன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்புகிறது…. இதைக் கேட்கும்போது நான் கூறுவது பைத்தியக்காரத்தனமாக தெரியும்.. இல்லை நான் கூறுவது முற்றிலும் உண்மை… இன்னும் விளக்கமாக கூற விரும்பவில்லை. இவைகள் முற்றிலும் சரியாக செயல்படுகின்றன என்றும் கூற முடியாது... தவறுகளும் அதிகமாக நடக்கின்றன.. ஒரே ஒரு உதாரணம் மட்டும் உங்களுக்கு தருகிறேன். நீங்கள் உங்கள் ஸ்மார்ட் போனில் யூட்யூப் சேனல்களை எதைப் பார்க்கலாம் என்று தள்ளிக்கொண்டு வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளலாம், அந்த சமயத்தில் யாரோ ஒருவர் கூப்பிட நீங்கள் அந்த ஸ்மார்ட் போனை அப்படியே வைக்க அந்த சமயத்தில் அந்தத் திரையில் இருந்தது SPB அவர்களின் ஒரு பாடல் என்று வைத்துக் கொள்வோம்... நீங்கள் திரும்பி வரும் வரை அந்த திரை அப்படியே இருந்ததால் ஸ்மார்ட்போனின் AI நீங்கள் SPB பாடல்களை அதிகமாக விரும்புவர் என்று எடுத்துக்கொண்டு சில நாட்களுக்கு நீங்கள் சலிக்கும் வரை அவைகளையே முன்னிறுத்திக் காட்டும். இப்போது புரியும் என்று நினைக்கிறேன் AI யின் பாதிப்பும் பங்களிப்பும்.
ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸினால் அளவுக்கு அதிகமான நன்மைகள் உண்டு (அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் விஷம் ஆகும் என்பது கிட்டத்தட்ட AI க்கு பொருந்தும் ) இந்தத் துறை எந்த துறை என்று இல்லாமல் எல்லாத்துறைகளிலும் இப்போது செயற்கை அறிவு பயன்படுத்தப்படுகிறது... நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நடக்கிறது; நடக்கப்போகிறது; நடந்தேறப்போகிறது... சென்ற நூற்றாண்டின் கடைசி வரை செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு இவ்வளவு தூரம் இருக்கும் என்று யாராலும் கற்பனை கூட செய்ய முடியவில்லை. மிகவும் மதிக்கத்தக்க ஆராய்ச்சியாளர்கள் கருதுவது என்னவென்றால் குறிப்பிட்ட காலத்தை வகுக்க முடியவில்லை என்றாலும் ஒரு நாள் இந்தச் செயற்கை அறிவு நம் மனித அறிவை சமன்செய்து அதற்கு மேலும் செல்லும் என்று….. இது சாதாரணமாகத் தோன்றினாலும் மறைமுக பேராபத்து இருப்பதை எத்தனை பேர்களால் புரிந்துகொள்ள முடியும்? செயற்கை அறிவு மனித அறிவை முந்தி செல்வதாக வைத்துக் கொள்வோம்... அது அதோடு நிற்கப் போவதில்லை… மிக மிக எளிதாக நம் எண்ணங்களை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளும். அந்தக் காலகட்டத்தில் மனிதர்களின் இயலாமையால் அவைகளின் இடத்தில் நாம் சரணாகதி ஆவோம். ஒரு சிலர் இது மிகவும் வரவேற்கத்தக்கது என்றும் கூறுவர். மருத்துவத்துறையில் மிகப்பெரிய மாற்றங்களை செயற்கை அறிவினால் கொண்டுவரமுடியும். Nano பொருட்களைப் பற்றி ஒரு சிலருக்காவது தெரிந்திருக்ககூடும்.. அதாவது எதையுமே அப்படியே மிக மிகச் சிறியதாக செய்தால் அதை நேனோ என்று கூறலாம்.. இப்போது நினைத்துப் பாருங்கள் ஒரு சிறிய எந்திரத்தை நேனோ அளவில் செய்து உடலுக்குள் செலுத்தினால் அது வெளியே உள்ள செயற்கை அறிவினால் இயக்கப்பட்டு உடலின் எந்தப் பகுதியில் குறை இருக்கிறதோ அதை எளிதாக அறுவை சிகிச்சை இல்லாமல் சில மணித்துளிகளில் சரி செய்ய முடியும். இது அறவே அறுவை சிகிச்சை முறையை நீக்கிவிடும். நினைத்துப் பார்த்தாலே எவ்வளவு பெரிய வரப்பிரசாதம் இது என நினைக்கத்தோன்றும். ஆமாம் அளவாக நம் மனித இனத்தின் கை மீறாமல் செயற்கை அறிவை பயன்படுத்தினால் நன்மைகள் பல கோடி. ஆனால் நடக்க இருப்பதுவோ பொதுமக்களிடம் இல்லை… அதிகார வர்க்கத்தை கட்டுப்படுத்தும் குழுவிடமே உள்ளது.
நடக்கப்போவது நல்லதாகவே நடக்கும் என்று நினைப்போம். பருவநிலை மாற்றங்களை மிக மிக துல்லியமாக பல நாட்களுக்கு முன்னதாகவே முன்னெச்சரிக்கையாக அறிந்து கொள்ள முடியும்.. மின்சாரத்தை எடுத்துக்கொள்ளலாம்…. செயற்கை அறிவினால் அதன் பங்கீட்டு முறை மிகத் துல்லியமாக இருக்கும் அதனால் இழப்பு மிக மிகக் குறைவாக குறைக்கப்படும். எப்போதும் மனிதர்களால் செய்யப்படும் மாடலிங்கில் நிறைய குறைபாடுகள் இருக்கும் பெரும்பாலும் பரிசோதனை முறை தான் அது… ஆனால் செயற்கை அறிவு எல்லாவித சூழ்நிலைகளையும் கருத்தில்கொண்டு மிகத்துல்லியமாக இந்த மாடலிங் வேலையை செய்யும். அதைப் பயன்படுத்தி தரை, கடல், விமான போக்குவரத்தினை மிக எளிதாக கையாளலாம். AI யின்
பயன்களைப் பற்றி கூறிக் கொண்டே போகலாம்… உங்களுக்குப் புரியும் படியாக மிக முக்கியமான மூன்று விசயங்களை எடுத்துக்கொள்ளலாம்.
சட்டம், ஒழுங்கு, அரசியல்….
கிட்டத்தட்ட செயற்கை அறிவை எல்லா இடத்திலும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டோம் என்று வைத்துக் கொள்வோம். அந்தக் காலகட்டத்தில் பொய்கள் மிக மிக எளிதாக வேர் அறுக்கப்படும். உங்களுக்கு தெரிந்த ஒரு காவல் துறை அத்துமீறல் நிகழ்ச்சியை எடுத்துக் கொள்ளுங்கள்.. இப்போதைய காலத்தில் நடப்பது போல் நடக்காது…. சம்பவம் நடக்கும் இடத்தின் எல்லா கோணங்களும் அலசப்படும், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பாதிப்பை உண்டாக்கியவர்களின் அதை விசாரித்த காவல்துறையினரின் மனநிலை அவர்களின் அந்த சம்பவத்திற்கு முந்தைய பேச்சுக்கள் அவர்கள் அதை அனுகிய கோணங்கள் எல்லாம் அலசப்பட்டு துல்லியமாக கணிக்கப்படும் இதில் வழக்கை ஜோடிப்பது என்பதே பழக்கத்தில் இருந்து எடுக்கப்படும். கிட்டத்தட்ட நூறு சதவிகித நம்பகத்தன்மை உருவாகும்.
இதே நிலைமை தான் சட்டத்திலும் நீதிமன்றங்களிலும் நடைபெறும்… பொய்மைக்கே இடமில்லாமல் போகும்.. வழக்குகளின் தேக்கம் என்பதே இருக்காது… கிட்டத்தட்ட வக்கீல்களுக்கு வேலையே இருக்காது.. எல்லா சம்பவங்களும் நேரம் காலம் தவறாமல் துல்லியமாக எடுத்து வைக்கப்படும்…
நம் நாட்டைப் பொறுத்தவரை மிக முக்கியமான நிகழ்வாக அரசியலை எடுத்துக் கொள்ளலாம். இப்போது நடைபெறுவது போல அதிகாரமும் பணமும் அரசியலை நிர்ணயிக்க முடியாது… தேர்தல் நடைபெறுவதாக வைத்துக்கொள்வோம். எந்த ஒரு வேட்பாளரை பற்றியும் அந்தக் கட்சியைப் பற்றியும் மிக மிக துல்லியமாக எல்லோருக்கும் கிடைக்கும் வண்ணம் வந்துவிடும். அவர் சார்ந்த கட்சி எப்போது தோற்றுவிக்கப்பட்டது அதிலிருந்து அவர்கள் மக்கள் தொண்டினை எங்கெங்கு எப்படி செய்தார்கள் அவர்களின் நம்பகத்தன்மை, சொத்து, மனநிலை எல்லாம் அக்குவேறு ஆணிவேராக காண்பிக்கப்படும். இவைகளை வெறும் data entry ஆக கருதவேண்டாம்... இவையெல்லாம் AI யின் அல்காரித அலசல்கள் வித்தியாசம் என்னவென்றால் டேட்டா என்ட்ரி நம்மால் ஏற்றப்படுவது… இதை ஏற்றுபவரின் அல்லது அவரை கட்டுப்படுத்துபவரின் எண்ணங்களின் பிரதிபலிப்பாகவே அது இருக்கும். ஆனால் செயற்கை நுண்ணறிவின் அல்காரித அலசல்கள் தூய்மைத்தன்மை வாய்ந்தவை… ஒரு குறிப்பிட்ட நபரை பற்றி அவரின் மனநிலை, உடல்நிலை, தொடர்புகள், உறவினர்கள், நண்பர்கள் எல்லோருடைய எல்லாவிதமான AI ஆல் சேகரிக்கப்பட்ட விபரங்களை ஆய்ந்து அலசி மிகத்துல்லியமாக கொடுத்துவிடும்… இவ்வாறு இருக்கும்போது மக்களுக்கு மிகச்சரியான அரசியல்வாதியை தேர்ந்தெடுப்பது மிக எளிதாக இருக்கும். ஆனால் இப்போது இந்த காலகட்டத்தின் அவசரகதியில் பொதுவாக மக்களுக்கு ஆராய்ந்து முடிவு எடுக்கும் தன்மை மிக மிக குறைவே.. விளம்பரங்களினால் புகுத்தப்படும் எண்ணங்களின் பிரதிபலிப்பாகவே அவர்களின் முடிவு இருக்கிறது…
இவைகளெல்லாம் செயற்கை நுண்ணறிவின் அளவற்ற பயன்களாக இருந்தாலும் பாதிப்புகள் ஒரு சிலவற்றை கூறுகிறேன்… ஒரு தனி மனிதனுடைய உடல்நிலை, மனநிலை, பொருளாதார சுமை எல்லாம் தெரிந்த AI க்கு அவருக்கு உடல் சரியில்லாத பட்சத்தில் என்னென்ன மருந்து மாத்திரைகள் எந்தெந்த அளவில் கொடுக்கவேண்டும், எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதையும் தீர்மானிக்கும் இங்கு மருத்துவரின் வேலை இல்லாமல் போகும், ஏற்கனவே கூறியது போல நேனோவினால் அறுவைசிகிச்சை போன்றவைகளும் மிக மிக குறைவான ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்படும். வக்கீல்களும் சாதாரண காவல் அதிகாரிகளும் தேவை படப் போவதில்லை தொழில்நுட்ப வல்லுனர்களின் தேவையுமில்லை..
இப்பொழுது ஓபன் ஏ ஐ யின் சேட் ஜி பி டி 3, 4 வரப்போகிற 5 அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்களின் மொத்த வேலைப்பாட்டியும் எடுத்துக் கொள்ளும்.. மாணவர்கள் இவைகளை இப்பொழுதே பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.. அவர்கள் கேட்கும் கேள்விகளால் ஆசிரியர்களால் பணி செய்ய முடியாது அவர்கள் அதிக மன அழுத்தத்திற்கு தள்ளப்படுவார்கள். மாணவர்களுக்கு எல்லாவித கேள்விகளுக்கும் விடை எப்படி வந்தது என்று தெரியாமல் எல்லா விடைகளும் எந்தவித அனுபவமும் இல்லாமல் தெரியும். மிகப்பெரிய சமுதாய அழுத்தத்தை இது உண்டாக்கும்.. ஒவ்வொரு பெரிய நிறுவனமும் இந்த ஓபன் ஏ ஐ நிறுவனத்தின் சேட் ஜி பி டி க்கு போட்டியாக கூகுளின் பார்ட், ஈலான் மஸ்கின் எக்ஸ் ஏ ஐ, மற்ற நிறுவனங்களின் கிலாடி, சிங்கிளாரிட்டி AI இவைகள் போதாது என்று மைக்ரோசாப்ட்டின் கொரில்லா, கூகுளின் வரப்போகும் ஜெமினை இவைகள் போட்டி போட்டுக் கொண்டு எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் செயற்கை நுண்ணறிவை மக்கள் ஓட்டத்தில் விடப் போகின்றனர்.
திரைப்படத் துறை எடுத்துக் கொண்டால், எந்தவிதமான கதை வேண்டும் என்று கொடுத்து விட்டால் போதும் கதை, திரைக்கதை, வசனம் காமிரா, படப்பிடிப்பு தளங்கள், இசை, பாடல்கள் இவைகள் மட்டுமல்லாமல் எத்தகைய நடிகர்கள் வேண்டுமென்றாலும் உருவாக்கி மொத்த திரைப்படத்தையுமே செயற்கை நுண்ணறிவினால் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் உருவாக்கித் தந்து விட முடியும். இப்போது அவ்வாறு சிறு கதைகளை செய்கிறது.
ஓரளவிற்கு செயற்கை நுண்ணறிவினால் வரப்போகும் பாதிப்பினை புரிந்து கொண்டிருப்பீர்கள்.
இவ்வாறு கூறிக் கொண்டே போகலாம்.. ஏன் விவசாயம் கூட செயற்கை நுண்ணறிவு கொண்ட மனிதர்களால் செய்யப்படும். கடைசியாக கணித்துப்பார்த்தால் 95% மனிதர்களுக்கு வேலை இல்லை. மீதமுள்ள ஐந்து சதவீதத்தையும் எந்தெந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கலாம் என்று சேர்க்கை அறிவே முடிவு செய்யும்.
அளவிற்கு மிஞ்சினால் செயற்கை அறிவும் அழிவே!
இடமும், பொருளும் பார்த்தாகிவிட்டது ஏவலுக்கு வருவோம்…
கான்ஷியஸ்னஸ் ( உணர்வு ) இது இதுவரை மனித வரலாற்றில் புரிந்து கொள்ள முடியாத ஒரு பிரம்மாண்டமான திறவுகோல்.. நமக்கு முன் வாழ்ந்து சுவடே தெரியாமல் மறைந்த பல நாகரிகங்களுக்கு இதைப் பற்றி தெரிந்திருக்க கூடும்.. இதில் நம்மை ஈடுபடுத்திப் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றால் குமரி கண்டத்தை கூறலாம்.. அது கடல் கொண்டது மாபெரும் ஆழி அலையினால் சுமார் பனிரெண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு, இப்போது நாம் வாழும் இக்காலத்திய நாகரிகம் அதற்குப் பின் வந்தது.. இப்போது நாம் நம்மை புரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம்.
ஸ்ப்ரிட்சுவலிசம் பற்றி பார்ப்போம்.. அதாவது ஆன்மீகத்தைப் பற்றி, ஆன்மீகத்திற்கும் எந்த மதத்திற்கும் சம்பந்தமில்லை அதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அது ஒரு தனிப்பயணம்.. நம்மைப் பற்றி, நம் வாழ்க்கை பற்றி, இயற்கையைப் பற்றி, கடவுளைப் பற்றி இவைகளையெல்லாம் ஒருங்கிணைத்த உணர்வு மற்றும் உள்ளுணர்வு பற்றி….
நம் சித்தர்கள் என்றோ சொன்ன இங்கும், எங்கும்.. உன்னில், என்னில் எங்கும் இருப்பான் இறைவன் என்று.. தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று. இதற்கு நேரடியான அர்த்தத்தை எடுத்துக் கொள்ளாமல் இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றிற்கும் உணர்வு உண்டு என்று எடுத்துக் கொள்ளலாம். ஆம் இந்த பிரபஞ்சமே உணர்வுள்ள ஒன்று, இதை உணர்வுடன் தான் புரிந்து கொள்ள முடியுமே தவிர அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியாது..
ஒளி நேர்கோட்டில் தான் செல்லும் என்பார்கள், அதை ஏற்றும் கொள்கிறோம்.. ஆனால் அந்த ஒளியை புவி ஈர்ப்பு விசையினால் வளைக்கவும் முடியும். மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் உணரக்கூடிய அந்த ஈர்ப்பு விசையின் உண்மையை, தன்மையை ஐசக் நியூட்டன் கூறித்தான் புரிந்து கொள்ள முடிந்தது… அதற்கான நிரூபணம் கண்ணெதிரே இருந்தாலும் கண்டுகொள்ள யாருக்கும் நேரம் இல்லை…
இந்த அறிவியல் நியதிகளினாலும், தொழில்நுட்ப முன்னேற்றங்களினாலும் நம் வாழ்க்கையின் தரத்தை உயர்த்த முடியுமே தவிர வாழ்க்கை முடிந்த பிறகு அடுத்த படி நிலைக்கு நம்மை எடுத்துச் செல்ல பயன்படாது… ஆன்மீகப் புரிதலே அதற்கு வழி வகுக்கும், அந்தப் புரிதலைப் பெற நீங்கள் எந்த மதத்தையும் பின்பற்ற தேவையில்லை. இந்தப் புரிதலை உலக மக்கள் எட்டி விட்டால்… உலகில் அமைதி, அன்பைத் தவிர வேறு எதையுமே பார்க்க முடியாது… உலகமே வாழ்க்கையின் அடுத்த படி நிலைக்கு மாறும் தருணமாக அது அமையும்.
நம்புவோம் நல்லது நடக்கும் என்று!