top of page
Search

அணுவிற்குள் ஆன்மா!

  • melbournesivastori
  • Aug 17, 2023
  • 6 min read

கண்ணால் பார்ப்பதும் தவறு, காதால் கேட்பதும் தவறு, தீர விசாரிப்பதும் ( யாரிடம் என்பதை பொறுத்து ) தவறு….

  பிறகு எது தான் சரி…..

தேடுதலும், தேடி புரிதலும், புரிந்து தெளிதலும்.

   ஒரே விதமான செயலை திரும்பத் திரும்ப செய்துவிட்டு வேறு விதமான முடிவுகளை எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம் என்று சொல்வார்கள். யோசிக்கும் திறனை மனிதனுக்கு கொடுத்துவிட்டு  அதை அவன் பயன்படுத்தாமல் செக்கு மாடு போல் காலம் காலமாக ஒரே விதமான செயலை செய்து கொண்டு அற்புதங்களை எதிர்பார்ப்பதும் பைத்தியக்காரத்தனம் தான்.

   நினைவுகள் எல்லாம் மூளையில் சேர்த்து வைக்கப்படுகிறது!

  எப்படி யோசித்துப் பார்த்தாலும் இது சரி என்றே படும். ஆனால் தவறு.. மூளை டிரான்ஸ் மீட்டர் ஆகவும்,  ரிசீவர் ஆகவும்  மட்டுமே செயல்படுகிறது.

 இந்த கூற்றை புரிந்து கொண்டாலும் சரி, புரிந்து கொள்ளவில்லை என்றாலும் சரி கீழ் வரும் கதையை புரிந்து கொள்ள முடியும் என்று பலமாக நம்புகிறேன்.

    ஏன் என்னை மீறி நான் அழுது கொண்டிருக்கிறேன் என்று புரியவில்லை.. துக்கம் ததும்புகிறது…

 இப்பொழுது தான் அந்த விழாவில் இருந்து வந்தேன், ஒரு சதவீத துக்கத்திற்கு கூட முகாந்திரம் இல்லை.. இருப்பினும் ஏன் நீர்வீழ்ச்சி போல துக்கம் வருகிறது என்றே புரியவில்லை. சொல்லன்னா துயரங்களை அனுபவித்த நேரத்திலும் இவ்வளவு துக்கம் வந்ததில்லை, சரி என்ன விழா நடந்தது என்று சொல்லி விடுகிறேன்.

   அணுவுக்குள் ஆன்மா!  ( அணுவுக்குள் ஆன்மீகம் என்று தான் எழுத நினைத்தேன்…. எப்பொழுதுமே நல்லவற்றை தவறாகவே புரிந்து கொள்ளும் நம் தமிழ் மக்கள் ஆன்மிகத்தையும் மதத்தையும் சேர்த்து தவறாக புரிந்து கொண்டதால் ஆன்மீகம் என்ற வார்த்தை எடுத்து விட்டு ஆன்மா என்று போட்டேன் ) என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டதற்கு தான் இந்த பாராட்டு விழா. எழுதி வெளியிட்டது என்னவோ மூன்று வருடங்களுக்கு முன்பு, வெளிவந்த முதல் இரண்டு வருடங்களில் சில ஆயிரம் பிரதிகளே விற்க… தற்செயலாக பிரபலங்களின் கையில் அது கிடைக்க, அதைப் படித்தவுடன் அவர்களை கவர, அவர்கள் அதைப் பற்றி பேச…. கடந்த பத்து மாதத்தில் 10 லட்சம் பிரதிகள் விற்பனையில் தொட்டது… காந்தி இறந்து விட்டாரா என்று தூக்கத்திலிருந்து எழுந்து கேட்பது போல, இப்படியும் ஒன்று இருக்கிறதா என்று மக்களின் சிந்தனையை தூண்டியது அந்த புத்தகம்.

    நான் குமரன், இது என் பெற்றோர்கள் வைத்த பெயர் அல்ல, யார் வைத்த பெயர் என்றும் எதற்காக என்றும் பிறகு கூறுகிறேன்… நமக்கு இருக்கும் வருத்தத்தை மற்றவர்களுக்கு கடத்துவது தவறு என்று சான்றோர் கூறியிருக்கின்றனர்… ஆகையால் இந்த மகிழ்ச்சியான வேலையில் அதைத் தவிர்த்து நான் எழுதிய புத்தகத்தைப் பற்றி கூறுகிறேன். நாம் வாழும் வாழ்க்கையின் நியதி என்னவென்று யோசிக்க ஆரம்பித்தேன். முதலில் புரியாமல் தான் இருந்தது.

   தற்செயலாகவோ  இல்லை தவறுதலாகவோ  எதுவும் படைக்கப்படுவதில்லை.. இதில் குழந்தை பெற்றுக் கொள்வதை சேர்த்துக் கொள்ள வேண்டாம்… அது ஒரு இயற்கையின் நிகழ்வு… அதைப் பெற்றோர்களின் படைப்பாக கருதக்கூடாது.. ஆன்மா என்றுமே அழிவதில்லை என்று பலமாக எல்லோராலும் நம்பப்படுகிறது… அது சரியாக இருப்பதற்கு நிறைய வாய்ப்புள்ளது. மற்ற உயிரினங்களின் வாழ்க்கையை விடுங்கள், மனித வாழ்க்கையே ஆன்மா அனுபவங்களை பெற ஒரு கல்விக்கூடம் போன்ற கட்டமைப்பு தான் என்று எல்லா மதங்களும், எல்லா சமயங்களும் கூறுகின்றன. அதன் சாராம்சத்தை புரிந்து கொண்டால் அதில் தேர்ச்சி பெறும் வரை மறுபிறவிகள் நடந்து கொண்டே இருக்கும் என்று எடுத்துக் கொள்ளலாம். அது சரி என்று எடுத்துக் கொண்டால், வாழும் இக்கணம் மட்டுமே நிதர்சனமானது… கடந்ததை, நடந்ததை விட்டுவிட்டு கடக்கப்போவதை, நடக்கப் போவதை கருத்தில் கொண்டு மானாட, மயிலாட, நம் கால்கள் ஆட வெறும் கேளிக்கைகளில் காலத்தை கழித்து விட்டு காலன் அழைக்கும் போது  சென்றுவிடலாம் என்று நினைக்காதீர்கள்..  மறுபிறவியில்  நீங்கள் வெறுத்த, நிராகரித்த ஒருவராக கூட நீங்களே பிறக்கக் கூடும். இது போன்ற எல்லா கருத்துகளையும் ஒருங்கிணைத்து நான் எழுதியது தான்  அந்த 'அணுவிற்குள் ஆன்மா!' புத்தகம்.

     ஜெகன்  ஒரு தேர்ந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர். பெற்றோருடனும் அண்ணனுடனும் அந்த நாட்டில் வாழ்ந்தது எதுவுமே ஜெகனிற்கு நினைவில் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை அந்த நாட்டில் இருந்து வெளியேறிய போது வயது 1. தந்தையும், தாயும் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக  பணிபுரிந்து வந்த சமயம், அண்ணன் நான்கு வயது பெரியவன்.. வருடம் 1983, பெரும் கலவரம் வெடித்தது… வெடித்ததா அல்லது உருவாக்கப்பட்டதா என்று அப்போது யாருக்குமே தெரியாது.. நாம் எதற்காக தாக்கப்படுகிறோம் என்று யாருக்குமே புரியவில்லை… குடிபோதையில் அதை செய்து விட்டார்கள் இதை செய்துவிட்டார்கள் என்று கேள்விப்படுவது எங்கோ ஒன்று…. ஆனால் குடி போதையை விட கொடூர போதை ஜாதி, மத, இன போதை… இந்த போதை படித்தவர்கள், படிக்காதவர்கள், ஏழைகள், பணக்காரர்கள்,  கிராமத்தில் வாழ்பவர்கள், நகரத்தவர்கள்  என்று எவரையும் விட்டுவைக்காது.. குடி போதை ஓரிருவரை பாதிக்கக்கூடும்…

 ஜாதி போதையோ ஓரிரு கிராமங்களை பாதிக்கக்கூடும்….

 மத போதையோ புற்றுநோய் போன்றது…. நாட்டையே பின்னோக்கி அழைத்துச் சென்று விடும்.

  இன போதையோ இன்று, நேற்று அல்ல… என்றென்றும் கொடூர போதை… அந்த போதை  ஆயிரக்கணக்கில் அல்ல, லட்சக்கணக்கில் அப்பாவி மனிதர்களை  காவு வாங்கிவிடும். அந்தக் கொடூர போதையில் சிக்கி ஆயிரக்கணக்கானோருடன் சின்னா  பின்னம் ஆனது தான் ஜெகனின் குடும்பமும்..  அந்தக் கலவரத்தில் இருந்து  ஒரு வயது ஜெகனுடன் ஜெகனின் தந்தை தப்பிக்கும் போது அவர் கண்ட காட்சிகள் 40 வருடங்கள் கடந்து இன்றும் அவரை பேச்சற்ற சிலையாக  வைத்திருந்தது.. அந்தக் காட்சியை, மனசாட்சி உள்ளவர்கள் யார் இன்று நினைத்துப் பார்த்தாலும்  மனிதர்களுக்கு பகுத்தறிவு உண்டா என்று கூனிக்குறுகி  போய்விடுவார்கள்…  அந்தக் காட்சி சரா மரியாக வெட்டப்பட்டு  கண்கள் நோண்டப்பட்டு  நிர்வாணமாக மரத்தில் தொங்கவிடப்பட்ட ஜெகனின் தாய் மற்றும் ஐந்து வயது அண்ணனின் உடல்கள்…  இத்தகைய கொடூரம் தன் குடும்பத்திற்கு நேர்ந்தது என்றே இன்று வரை  தந்தை, மனைவி, இரண்டு குழந்தைகளுடன் மெல்போர்னில் வாழ்ந்து வரும் ஜெகனுக்கு தெரியாது.

  2009 ஏப்ரல் முதல் வாரம் ஜெகனின் தந்தை முன்பு வாழ்ந்த அந்த இடத்திற்கு சிறிது அருகாமையில் 24 வயது ராஜீவன் குடும்பத்திற்கு ஜெகனின் குடும்பத்தை விட பல மடங்கு நினைத்தும்  பார்க்க முடியாத கொடூரங்கள் நிகழ, குடும்பமே சீரழிக்கப்பட்டு இறந்து விட்ட பிறகு மண்டையில் அடிபட்டு பெரும் ரத்த வெள்ளத்தில் மயக்கமுற்றிருந்த  ராஜீவனை இறந்து விட்டிருக்கிறான் என்று விட்டு விட்டிருந்தனர்…. அந்த மாலை வேலையில் இந்தக் கொடூரங்களிலிருந்து தப்பி ஓடிக்கொண்டிருந்த குட்டிமணியின்  கண்களில் ராஜீவன் அசைவது பட…. தன்னுடன் தப்பிக் கொண்டிருந்த மற்றொருவரின் துணையுடன் ராஜீவனை  சிறிய படகில் அழைத்துக் கொண்டு சென்றது, ஒரு மாதம் கழித்து ஆஸ்திரேலியா நாட்டின் கரையில்  ஒதுங்கியது, ஆஸ்திரேலிய கடற்படையால் காப்பாற்றப்பட்டது ஒரு கனவு போல் நிகழ்ந்தது.

    2013 ஏப்ரல் 14, தமிழ் வருட பிறப்பு…

 அற்புதமான வயல்வெளி..  இல்லை விவரிக்கிற இயலாத அற்புதமான வண்ணங்கள் நிறைந்த பூக்கள் பூத்த சமவெளி, ரம்யமான  தெய்வீக இசை, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை  என்னைத் தவிர யாரும் இல்லை.. இடது பக்கமும், வலது பக்கமும் அதே காட்சிகள்.. பின்புறம் என்ன இருக்கிறது என்று பார்க்க நினைத்தேன், எவ்வளவு முயற்சி செய்தும் திரும்பவே முடியவில்லை.. ஏன் என்று யோசிக்கவும் எனக்கு ஏனோ தோன்றவில்லை.. இவ்வளவு காலம், என்றும் இல்லாமல்  இந்த தெய்வீக அமைதி இன்று எனக்கு கிடைத்தது. இந்த வினாடியின் அமைதி என்றும் நிலைக்க வேண்டும் என்று நினைத்தேன்.. இது காலையா, மதியமா, மாலையா என்று புரிந்து கொள்ள முடியவில்லை. மிக மிக பாதுகாப்பான இடத்திற்கு வந்திருக்கிறோம் என்று புரிந்தது.. ஏன் யாருமே இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே தூரத்தில் சிலர் நடந்து என்னை நோக்கி வருவது தெரிந்தது.

     ஆங்கில புத்தாண்டின் கொண்டாட்டம் போல் அல்லவே நமது தமிழ் புத்தாண்டின்  கொண்டாட்டங்கள்.. குட்டி மணியின் வீட்டிற்கு வந்திருந்தான் ராஜீவன். குட்டி மணிக்கு திருமணமாகி ஒரு வயது மகளும் இருந்தாள். குட்டி மணியின் மனைவி செவ்வந்தி இரண்டு தட்டுகளில் போளியும் வடையும் எடுத்து வந்து தந்தார்.

   நான்கு வருடங்கள் கடந்தும் வாழ்க்கையின் சோகத்திலிருந்து ராஜீவன் விடுபடவே இல்லை… குட்டிமணி தன்னால் முடிந்த அளவிற்கு ராஜீவனை இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முயற்சிகள் எடுத்தும் அவ்வளவாக பயன் அளிக்கவில்லை. மன சோகத்திற்கும் மன அழுத்தத்திற்கும் மருத்துவர்கள்  தந்த மாத்திரைகளை சாப்பிட்டும் எந்த பயனும் இல்லை. உலகில் வாழ மிகச் சிறந்த இடங்களில் ஒன்றான மெல்போர்னில் வாழ்ந்தும் ராஜீவனால் இயல்பு நிலைக்கு திரும்ப முடியவில்லை.

     டாக்டர் ஜெகன்,  தந்தையுடனும்  இரு குழந்தைகளுடனும் உணவு அருந்தும் மேஜையில் காத்திருக்க ஜெகனின் மனைவி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு  சமைத்த போளியும் வடையும் பரிமாற  தொடங்கினார். ஜெகன் போளியை ஒரு வாய் தான்  எடுத்திருப்பார்… கைபேசி அழைக்க எடுத்துப் பேச மருத்துவமனையில் இருந்து அவசர அழைப்பு என்று தெரிந்து கொண்டு கிளம்பினார். ஜெகனின் மனைவிக்கு வருத்தம் இருந்தாலும் செல்ல வேண்டியதின் முக்கியத்துவத்தை அறிந்து வழி அனுப்பினார்.

    மருத்துவமனை சென்றடைந்ததும் அவசர சிகிச்சை பிரிவில் இதய அடைப்புடன் ஒருவர் காத்திருப்பதாகவும் அன்று தலைமை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் தவிர்க்க முடியாத காரணங்களால் வர முடியாததாலும் முதன்முறையாக தனியாக ஜெகன் அன்று அந்த நோயாளியை கவனிக்க வேண்டியதாகிற்று. நோயாளியின் அட்டையை வாங்கிப் பார்த்தார். ஓ, தமிழர்…. நோயாளி ராஜீவன், அழைத்துக் கொண்டு வந்தது  குட்டிமணி. ஆமாம் போளி சாப்பிட்டுக் கொண்டிருந்த ராஜீவன் அப்படியே நிலைகுலைய, தோளில் பாரமாக இருப்பதாக கூற, பேச்சுத் தடுமாற குட்டிமணி உடனடியாக ஆம்புலன்ஸை அழைத்து இந்த மருத்துவமனையில் சேர்த்தார்.

    டாக்டர் ஜெகன், ராஜீவனை  அழைத்து வந்த குட்டிமணியை சுருக்கமாக விசாரித்துவிட்டு ஐ சி யு  அறைக்குள் சென்றார்.

     தூரத்தில் நடந்து வரும் அந்த சிலரை காண, கண்டு பேச மிக ஆவலாக இருந்தேன்.. நான் அவர்களை நோக்கி செல்லவும் அவர்களும் என்னை நோக்கி நடந்து வந்தார்கள். 

    என்ன இது,  இதற்கு மேல் என்னால் நடக்க முடியவில்லை… யாரோ என்னை பின்னோக்கி இழுத்தார்கள்… அதே சமயத்தில் தூரத்தில் தெரிந்த அந்த சிலரும் இப்போது கண்ணுக்கு தெரியவில்லை. இந்த அற்புதமான சூழ்நிலையில் இருந்து எங்கும் செல்ல நான் விரும்பவில்லை… ஏன் என்னை யாரோ தடுக்கிறார்கள் என்று கோபம் வந்தது… அவர்கள் தடுப்பதை என்னால் தடுக்க முடியவில்லை…. இதுவரை என் வாழ்க்கையில் இருந்த சோகமெல்லாம் கோபமாக மாற என்னை பின்னிருந்து இழுத்த யாரோ ஒருவரோ  அல்லது ஒன்றோ அவர் மீது அல்லது அதன் மீது கோபத்தை பாய்ச்ச நினைத்து தோல்வியுற்றேன். தோல்வியுற்றதாக நினைக்கும் நொடியில் வெற்றி பெற்றேன்.. என்னால் நடக்க முடிந்தது, என்னை நோக்கி வந்த சிலரும் தெரிய ஆரம்பித்தனர்.. இதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு முடிவு தெரிந்தது.. தூரத்திலிருந்து வரும் சிலர் வேறு யாரும் அல்ல, நான் 2009 இல் இழந்த என் இறந்த குடும்பமே!

  என்ன இது மறுபடியும் என்னால் முன்னோக்கி நடக்க முடியவில்லை… கடவுளின் மீது அளவுக்கதிகமான கோபம் வந்தது, கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருந்த என் குடும்பம் என் கண்ணில் இருந்து மறைந்தது… அடுத்த கணமே ஒரு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவிலிருந்தேன்…

   ஒரு உடல் அறுவை சிகிச்சை மேடையின் மீது கிடத்தப்பட்டிருந்தது. முகம் திறந்து இருக்க, உடல் முழுதும் மூடி இருக்க.. இருதய பகுதி மட்டும்  மூடி இருந்த துணி திறக்கப்பட்டிருக்க…. இன்றே உலகம் முடியப்போவது போல ஒரு மருத்துவரும் மூன்று செவிலியர்களும் படபடப்பாக இருக்க , அந்த மருத்துவர் அங்கிருந்த உடலின் இருதயத்தில் ஏதோ செய்து கொண்டிருந்தார்.. அந்த மருத்துவரின் பெயர் மேலிருந்த மெல்லிய  வெள்ளை உடையின்  உள்ளே நன்றாக தெரிந்தது. டாக்டர் ஜெகன்.  இவர்கள் சரி….. யார் இந்த இரண்டு பேர்? மனிதர்கள் போல் இருந்தும் இல்லாமல் இருக்கிறார்கள்… உயரம் ஏழு அடிக்கு மேல் இருக்கும். இந்த இருவர் இருப்பதையே அங்கிருந்த மற்ற நால்வரும்  பொருட்படுத்தவில்லை… ஏன் என்றும் புரியவில்லை. அவர்கள் இருவரும்  ஏதும் செய்யாமல் அங்கு நடப்பதையே  கண்காணித்துக் கொண்டிருந்தனர். சில நிமிடங்கள் கடந்து இருக்கும், அங்கிருந்த எல்லா மானிட்டர்களிலும்  ஒரு நீண்ட கோடு மட்டும் வர, அந்த மருத்துவர் இதயத்தின் மேலிருந்த தோலை தையலிட்டு மூடி சோகத்துடன் செவிலியர்களை நோக்க, அவர்கள் மேற்கொண்டு செய்ய வேண்டிய பணிகளை துவங்கினர்.

  திடீரென்று என் குடும்பம் மறுபடி என் கண்களுக்கு தெரிய துவங்கியது… எனக்கு மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது… கண்ணுக்கெட்டிய தூரத்தில்  என் தாய், தந்தை, அக்கா, தங்கை எல்லோரும். இந்த மகிழ்ச்சி  ஒரு சில நொடிகள் கூட தாங்கவில்லை நான் மறுபடியும் இழுக்கப்பட்டேன்… மறுபடி அதே மருத்துவமனையில், அதே அவசர சிகிச்சை பிரிவினில், அதே உடலின் அருகில்…. அந்த மருத்துவரும் மூன்று செவிலியர்களும் அங்கு இல்லை. அந்த 7 அடி இருந்த உருவங்கள் மட்டும் இருந்தன.. என்ன இது அந்த இரண்டு உருவங்களும் அந்த உடலில் ஏதோ செய்கின்றனவே… அந்த இரண்டு உருவங்களும் அந்த உடலின் இரு பக்கவாட்டிலும் நின்று கொண்டு இரண்டு கைகளையும் அந்த உடலின் மார்பின் மீது வைக்க.. நான்கு கையிலும் ஒளிர…. என்ன இது சற்றென்று எல்லாம் எனக்கு மறைந்தது… 

  கண் திறந்து பார்த்தேன்.. அறையில் யாரும் இல்லை.. கடைசியாக எனக்கு நினைவிருந்தது  குட்டிமணி வீட்டில் போளி சாப்பிட்டது மட்டுமே… பிறகு நடந்தது எதுவுமே எனக்கு ஞாபகம் இல்லை.. மெதுவாக எழ முற்பட்டேன்.. முடியவில்லை. என் நினைவில் இருந்த அந்த இரண்டு உருவங்களும் இப்பொழுது தெரிந்தது. இந்த இரண்டு உருவங்களில் ஒன்று என்னை பார்த்ததே தவிர ஏதும் பேசவில்லை, இருப்பினும் அந்த உருவம் என்ன நினைக்கிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

  ' நீ பட்ட துயரம் எங்களுக்கு தெரியும், அப்பொழுது எங்களால் எதையும் தடுக்க முடியவில்லை… இனி இது போல் எப்போதும் நடக்காது.. மனிதர்களுக்கு ஆறாம் அறிவு இருந்தும் எந்த பயனும் இல்லை என்று இப்போது புரிந்து கொண்டோம், இனி உன் துணை நிற்போம் நிழல் போல்… உனக்கு மட்டுமல்ல, இயலாமையில்  இருக்கும் எல்லோருக்கும்.  இனி நீ சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. கடந்தது கடந்ததாகவே இருக்கட்டும். முன்னோக்கி செல், உங்களை அழிக்க  நினைத்தோறும் வெட்கி தலை குனியும் படி செய் ' என்று கூறி மற்றொன்றுடன்  மறைந்தது.     

  சற்றென்று கதவு திறந்தது… உள்ளே வந்த இரு  நபர்களும் பேய் அறைந்தது போல் ஆனார்கள்…

' டாக்டர் இவர் சாகவில்லை ' என்று ஆங்கிலத்தில் கூச்சலிட்டுக் கொண்டே ஓடினர்.

   சில நிமிடங்கள் தான்… டாக்டர் ஜெகன் படை சூழ அங்கு வந்தார். அங்கு வந்த அனைவரும் ஆச்சரியத்தில், அதிர்ச்சியில் மலைத்து நிற்க…

  ' என்ன டாக்டர், எனக்கு என்ன நடந்தது?' என்று டாக்டர் ஜெகனைப் பார்த்து கேட்டேன்.

 அவர் சற்று தடுமாறி, ' ஏதும் நடக்கவில்லை சற்று மயக்கமாக இருந்தீர்கள் ' என்றார்.

  'அப்படியா?' என்றேன்.

 நான் ஏதோ உள் அர்த்தத்துடன் கேட்கிறேன் என்று அவருக்கு புரிந்தது…

  அவர் மற்றவர்களை பார்த்து சிறிது நேரம் வெளியே இருங்கள் என்று ஆங்கிலத்தில் கூறினார்… எல்லோரும் வெளியே செல்ல அவர் மட்டும் உள்ளே இருக்க கதவை மூடிவிட்டு என் அருகே வந்தார்.

  ' குமரா, ஓ சாரி நீங்கள் ராஜீவன் அல்லவா?'

 'ஆமாம் டாக்டர், நான் ராஜீவன்.'

 'என்ன நடந்தது ராஜீவன்?'

 ' முதலில் சொல்லுங்கள் ஏன் என்னை குமரன் என்று அழைத்தீர்கள்?'

' தெரியவில்லை, சற்றென்று வந்துவிட்டது '

' யாரேனும் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா அந்த பெயரில்?'

' இல்லை, நான் முருக பக்தன்… மன்னிக்கவும்.'

' டாக்டர் அந்த முருகனை மட்டும் தான் நாங்கள் கும்பிட்டோம்…. ' அதற்கு மேல் என்னால் எதையும் கூற முடியாமல்  குலுங்கி குலுங்கி அழுதேன்.

' என் வீட்டிலும் முருகரை மட்டும் தான் என் தந்தையும் கும்பிடுவார், அவர் கும்பிடுவதால் நானும் கும்பிடுவேன்.. ஆனால் எனக்கு கடவுளைப் பற்றி வேறு புரிதல் உண்டு '

' டாக்டர், நான் நொந்து நூலாகி வந்தவன் எனக்கு நீங்கள் பேசுவது எதுவும் புரியவில்லை'

' புரிகிறது, உங்களுக்கு நடந்த விடயத்தை மற்றவர்கள் வரும் முன்  சுருக்கமாக சொல்லவும்'

 நான் மடை திறந்த ஏரியை போல் அந்த இரு உருவங்களை தவிர்த்து மற்றவற்றை சொல்லி முடித்தேன்.

  சரியாக பத்து வருடங்கள் கழித்து இதோ இந்த விழாவை முடித்துவிட்டு உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். மருத்துவமனையில் இருந்து வந்த பிறகு டாக்டர் ஜெகன் வீட்டிலேயே இன்று வரை தங்கியிருக்கிறேன். என் 'அணுவிற்குள்  ஆன்மா!' புத்தகம் பெரும் வரவேற்பை பெற்றது.. எல்லோருக்கும் ஆன்மாவை பற்றி புரிதலை ஏற்படுத்தியது…. எனக்கு மட்டும் அந்த இரண்டு உருவங்கள் யார் என்ற குழப்பம் இன்று வரை தீரவில்லை. 

 
 
bottom of page