top of page

‘அண்டார்டிகா’

  • melbournesivastori
  • Oct 5, 2021
  • 7 min read

தமிழுக்கு அமுதென்று பேர் அந்த இன்ப தமிழ் என் உயிருக்கும் மேல்!

நான் தமிழன், என் மொழியையும் என் இனத்தையும் உயர்வாக நினைப்பது என் கடமை என்றே நினைக்கிறேன்… இது எந்த விதத்திலும் மற்ற மொழியையும் மற்ற இனங்களையும் தாழ்வாக மதிப்பதாக ஆகாது. அவரவர்கள் அவரவர்கள் மொழியையும் அவரவர்கள் இனத்தையும் தூக்கி பிடிக்கட்டும் அது அவர்களுடைய கடமை!

தமிழர்களின் சிறப்புமிக்க வரலாற்றை பல இடங்களில் தவறாகவும், பல இடங்களில் திரித்தும், குறைத்தும் கூறப்பட்டுள்ளது…. இது தவறுதலாக நடந்ததா இல்லை தவிர்க்க நடந்ததா என்று இப்போது யோசித்து எந்த பயனும் இல்லை.. ஆனால் இனி வரும் காலங்களில் பண்டைய தமிழின் தேடுதலும்; புரிதலும்; தெளிதலும் இக்கால மற்றும் வருங்கால இளைஞர்களிடம் இருக்கப் போவது தவிர்க்க முடியாததாக போகிறது.

திருவள்ளுவன், தொல்காப்பியன், திருமூலர், அகத்தியன் போன்றோர் ஒளவையார் அதியமான் போன்றோர் மற்றும் சமீபத்திய இராமலிங்க அடிகள் சுப்பிரமணிய பாரதி போன்ற எண்ணற்ற, ஒப்பற்ற தமிழ் அடையாளங்களால் சிறப்பைப் பெற்ற நாம் எக்காலத்திலும் நாகரீகத்தில் சிறந்து விளங்கியவர்கள் என்பதை மறப்பது நாம் நம் முன்னோர்களுக்கு செய்யும் துரோகம்.

இப்போது சொல்லுங்கள்… தமிழ் இன நாகரிகத்தின் வயது எவ்வளவு என்று.. தமிழ்நாட்டின் நாகரிகம் 50 வருடங்கள் என்றால் நமக்கு மட்டுமல்ல தமிழ் நாட்டில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் கோபம் வரும், வரவேண்டும் …

தமிழை காட்டுமிராண்டி மொழி என்ற போதும், திருக்குறளை பெரிய விருந்தில் வைக்கப்பட்ட மலம் என்று கூறியபோதும் சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்டது நம் முட்டாள்தனத்தை காட்டுகிறதா அல்லது இயலாமை காட்டுகிறதா என்று புரியவில்லை…. அதே போல் தான் நம் வரலாற்றை நாம் தவறாக தெரிந்து; புரிந்து கொண்டுள்ளோம். என்ன எங்கெங்கோ செல்கிறேன் என்று நினைக்கிறீர்களா? விவரமாக சொல்கிறேன்… இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைந்து விட்டோம்.. கண்ணெதிரே இருக்கும் கீழடிக்கு வயதை நிர்ணயிக்க போராடுகிறோம்.

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா என்று பழக்கத்தில், புழக்கத்தில் சொல்லி வைத்த நாம் கீழடிக்கு அங்கீகாரத்தை யாராவது தர மாட்டார்களா ஏங்குவது நம் பரிதாபமான நிலையை காண்பிக்கிறது…. ஒரு சிறிய விளக்கம் தருகிறேன்… ஒருவர் முனைவர் பட்டம் பெற (Phd) குழந்தைப் பருவத்திலிருந்து எல்லாவற்றையும் கல்லூரி மேற்படிப்பு வரை கற்க வேண்டும் பிறகு ஒரு பிரிவை ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டு ஆராய்ந்த பிறகு அந்த ஆராய்ச்சிக் கட்டுரையை சமர்ப்பித்து வெற்றி பெற்ற பிறகே முனைவர் பட்டம் கிடைக்கும். இதன் அடித்தளம் கல்வியின் கட்டமைப்பு அது ஓரிரு ஆண்டுகளில் நிகழக்கூடியது அல்ல.. நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் தொகுப்பு.

திருவள்ளுவரின் காலத்தை போகிற போக்கில் சுமாராக 2100 ( கிமு 100) என்று நிர்ணயித்தார்கள்.. அந்த மகான்; அந்த சித்தன்; அந்தப் பெரும் கல்வியாளன் எதைப் பற்றி எழுதாமல் விட்டான்? இவர்களெல்லாம் சொல்வது போலவே சுமார் இரண்டாயிரத்து 150 வருடங்களுக்கு முன்பு இருந்ததாகவே வைத்துக் கொள்ளலாம்… அவ்வளவு அற்புதமான திருக்குறள்களை இயற்ற, எழுத எவ்வளவு அறிவு இருந்திருக்க வேண்டும், அந்த அறிவினைப் பெற அக்காலத்திய கல்வி கட்டமைப்பு எப்படி இருந்திருக்க வேண்டும்… அந்தக் கல்வி கட்டமைப்பை அமைக்க எவ்வளவு அற்புதமான சமுதாய கட்டமைப்பு இருந்திருக்கவேண்டும்? இவைகளெல்லாம் உரு பெற சில ஆயிர வருடங்களாவது எடுத்திருக்கும். இப்போது நினைத்துப் பாருங்கள் நம் பண்டைய தமிழ் நாகரிகம் எவ்வளவு ஆயிரக்கணக்கான வருடங்கள் கடந்து, சுமந்து வந்தது என்று.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடியவர்கள் நாம்,

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்று சொன்னவர்கள் நாம்,

எம்மதமும் சம்மதம் என்று மதத்தை தாண்டி மனிதத்தை போற்றியவர்கள் நாம்!

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்னவர்கள் நாம்!

இருந்த இடத்திலிருந்து தூரதேசம் காண்பேன் ( இது அமெரிக்காவும் ரஷ்யாவும் பலப்பல ஆண்டுகள் கடுமையான ஆராய்ச்சிக்குப் பிறகு கண்டுபிடித்த ரிமோட் வீவிங் தான் ) என்றார் திருமூலர்.

முதலில் தோன்றியது ஒரு செல் உயிரினம் என்று மேலைநாடுகளின் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுவதற்கு முன்பே அன்றே சொன்னான் தொல்காப்பியன்.

பகுத்தறிவு எல்லா உயிரினங்களுக்கும் உள்ளது என்ற புரட்சிக் கருத்தை சொன்னவன் நம் தலைசிறந்த மண்ணின் மைந்தன் தொல்காப்பியன்!

  முருகன் தோற்றுவித்த நம் மொழியை; இனத்தை; வரலாற்றை; நாகரீகத்தை அளவிட கணக்கிட மானிடர்க்கு ஏது அறிவு?  அன்பே சிவம் என்று போற்றிய நாம் நாகரீக கலாச்சாரத்தின் அடையாளம்!

அண்டார்டிகாவிற்கும் அன்பே சிவத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? நமக்கு ஏற்பட்ட இந்த சறுக்கல்கள் உலக நடப்பில், புரிதலில் பலவற்றிற்கும் ஏற்பட்டிருக்கிறது.. அதில் ஒன்றுதான் அண்டார்டிக்கா!

அண்டார்டிகா வெள்ளை வெளேரென்ற பணி படர்ந்த தென்துருவ கண்டம்.. 1938யில் அடால்ப் ஹிட்லரின் பார்வை இந்த கண்டத்தின் மீது படர்ந்தது முதல் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்த கண்டம் உயிர்பெற்று எழுந்தது… ஹிட்லருக்கு ஏன் அந்த கண்டத்தின் மீது பார்வை வந்தது என்று பலர் பலவிதமாக கூற வெளிப்படையான காரணம் நாசிகளால் கூறப்பட்டது திமிங்கல எண்ணெய் எடுப்பதற்காக தான் என்று.

ஊரறிந்த ரகசியமாக எல்லோரும் புரிந்து கொண்டது ஜெர்மனிக்கு இரண்டாம் கட்ட நாடாக அதை தயார்படுத்துவது தான். உண்மையில் 1938 லிருந்து 1945 வரை சுமார் 7 வருடம் ஜெர்மனிய ரகசிய படைகள் அங்கு என்ன செய்தன என்பது இன்று வரை புரிந்து கொள்ள முடியவில்லை.

1945 இல் இருந்து அமெரிக்காவில் தொடங்கி சுமார் 15 நாடுகள் அண்டார்டிகாவில் ஆராய்ச்சி செய்ய அங்கு தளங்களை அமைத்தனர். அமெரிக்கா தன்னுடைய தளத்தினை பெரிதாகிக்கொண்டே வந்தது.. .

இன்வெஸ்டிகட்டிவ் ஜெர்னலிசத்தில் உலக ஆராய்ச்சியாளர்களின் நன்மதிப்பைப் பெற்ற லிண்டா மோல்டனுக்கு ஜனவரி 2, 2015 ஆம் தேதி வந்த மின்னஞ்சலில் தொடங்கியது இந்த அண்டார்டிகாவின் மறுபக்கம், அந்த மின்னஞ்சலில் தன்னை பிரைன் என்று அழைக்குமாறு கூறிக்கொண்டு 1997இல் ஓய்வுபெற்ற அமெரிக்க நேவி விமானப் படையில் பணியாற்றிய ஒருவர் தன் மனதில் தேங்கியிருந்த பல ரகசியங்களை பகிர தயாரானார். அவர் கூறியவைகளின் தொகுப்பு……

1983 இல் இருந்து 1997 வரை எல்லா கோடை காலங்களிலும் அதாவது நவம்பர் முதல் பிப்ரவரி வரை அண்டார்டிகா கண்டத்திற்கு பயண பட்டதாகவும் அதில் சில அவார்டுகளையும் வாங்கியதாகவும் சான்றுகளோடு நிரூபித்து அவரின் மன சங்கடங்களையும் இரகசியங்களையும் பகிர தொடங்கினார்.. அவரின் முழு நேர வேலை C -130 விமானத்தில் விஞ்ஞானிகளையும் சரக்குகளையும் ஏற்றிச்சென்று அங்கேயே தங்கியிருந்து அவர்களுக்குத் தேவைப்படும்போது அவ்வப்போது கண்டத்தின் பல இடங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்வதுதான். அவ்வாறு செல்லுகையில் சிலமுறை சில்வர் கலரில் இருந்த சில பறக்கும் தட்டுக்களை தான் மட்டுமில்லாமல் உடன் வந்தோரும் கண்டதாகவும், ஒரு சமயத்தில் நோயுற்ற ஒரு விஞ்ஞானியை ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு அவசரமாக அழைத்துச்செல்ல சுற்றி அழைத்துச் செல்லாமல் பறக்க தடை செய்யப்பட்ட அண்டார்டிகாவின் தென்துருவ பகுதியில் பறக்க, காணக்கூடாததை கண்டதாகவும் கூறினார்.

ஒரு பெரிய கிரிக்கெட் மைதானம் அளவிற்க்கு துவாரம் இருந்தது தான் அது… பின்னால் தெரிந்தது அது மனித விஞ்ஞானிகளும் ஏலியன்களும் கூட்டாக நடத்தும் ஆராய்ச்சிக் கூடத்தின் முகவாசல் என்பது. இதனை அறிந்த ராணுவ மேலிடம் அந்த பயணத்தில் சென்ற எல்லோரிடமும் நீங்கள் இந்த இடத்திற்கு மேல் பறக்கவில்லை, எதையும் காணவில்லை இனி இதைப் பற்றி பேசப் போவதுமில்லை.. என்று ராணுவத்தின் கட்டளையாக பிறப்பித்தனர். பிரச்சனை அதோடு முடிந்தது என்று எல்லோரும் நினைக்க அதுதான் தொடக்கம் என்று பின்னால் தெரிய வந்தது.. Murray birdland எனும் இடத்திலிருந்து 12 விஞ்ஞானிகள் காணாமல் போய்விட்டதாக வந்த செய்தியை அடுத்து அப்பகுதியில் எங்கு தேடியும் கிடைக்காமல் சரியாக இரண்டு வாரங்கள் கழித்து அந்தப் பன்னிரண்டு விஞ்ஞானிகளும் அந்த இடத்தில் தென்பட அவர்களை காப்பாற்ற அனுப்பி அழைத்து வரும்போது பேயறைந்தது போல் என்று சொல்வார்களே அதே நிலைமையில் தான் அவர்கள் இருந்தார்கள். வெளிறிய முகத்தோடு அவர்கள் ஏதும் பேசாமலேயே இரண்டடுக்கு மாக்முர்டோ ராணுவத் தளத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இவைகளை தெரிவிக்கும் பிரைனிடம் அமெரிக்க ராணுவம் செய்த ஒரே தவறு என் டி ஏ வில் கையெழுத்து வாங்காதது தான், இதனால் இவைகளை லிண்டா மூலமாக பொதுமக்களுக்கு தெரிவித்தாலும் சட்டப்படி அவரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. பிரைன் மற்றும் சில ராணுவ அதிகாரிகளும் அந்த கட்டிடத்தின் முற்பகுதியில் ஒரு சில இடங்களுக்கு மட்டுமே செல்ல அனுமதி…. இதனால் அந்த கட்டிடத்தை இவர்கள் puzzle palace என்றே அழைத்தனர். இவைகளையெல்லாம் எல்லாம் ராணுவத்தின் அன்றாட வேலையாகக் கருதி 1997இல் ஓய்வுபெற்ற பின் பொதுஜன வாழ்க்கையில் மறந்து இருந்தவருக்கு பிபிசிக்கு அட்லாண்டிஸ் மேப்பிங் ப்ராஜெக்ட் செய்த குழு காணாமல்போன தகவலைச் செய்தித்தாளில் படிக்க… மேற்கூறியவற்றை கூறினார். அந்தக்குழு கண்டுபிடித்தவை அண்டார்டிகாவில் பிரமிட் இருப்பதுவும், மிக மிகப் பழமை வாய்ந்த கட்டிடங்கள் இருப்பதுவும் அதிலிருந்து சிலவற்றை அமெரிக்க நேவி எடுத்துச் சென்றதாகவும்…. அதுவரை பெரிதும் கவனத்தை ஈர்க்காத இருந்த இந்த செய்தி டாம் என்பவர் எழுதிய ‘ரைசிங் அட்லான்டிஸ்’ புத்தகத்தை தடை செய்ய அமெரிக்க அரசாங்கம் முயற்சி செய்ததும் எல்லோர் கவனத்தையும் ஈர்த்து விட்டது.

லிண்டா சில மாதங்கள் கழித்து மற்றுமொரு ராணுவ இன்டலிஜென்ஸ் ஆபீஸரை பேட்டி கண்டார்.. அந்தத்துறையில் இருபத்தி மூன்று வருட அனுபவம் வாய்ந்தவர். அவர் கூறியவைகளை நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம், சுமார் 230 மில்லியன் வருடங்கள் ( ஒரு மில்லியன் என்பது 10 லட்சம் ) மூன்றுவித ஏலியன்களால் இந்த பூமி பலவித பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது என்றும் டைனோசர்களை உருவாக்கியதும் அழித்ததும் ஒரு பிரிவு ஏலியன்கள் என்றும் கூற, நமக்கு தோன்றிய அதே கேள்வியை லிண்டா கேட்க…. இத்தகைய தகவல்கள் அமெரிக்காவிடம் மட்டுமல்லாமல் வேறு சில நாடுகளிலும் உள்ளது என்றும் அதற்குமேல் நிரூபிக்க தனக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறினார். அவர் மேலும் மனிதர்களைப் பற்றிக் கூறியது இன்னும் குழப்பத்தை தான் உண்டாக்கும்… அதை அப்படியே விட்டு விடுகிறேன்.

அமெரிக்காவின் நடவடிக்கை இன்னும் தீவிர படுத்தப்பட 2004ஆம் ஆண்டும் 2012ஆம் ஆண்டும் நேவி சீல் எனப்படும் அமெரிக்காவின் சிறப்பு இராணுவப் பிரிவின் சிலர் சென்று வந்ததில் அதில் ஒருவரும் இதில் ஒருவரும் லிண்டாவிற்கு அளித்த பேட்டியில் கூறியவைகள், உலக வரலாற்றை, உலக நம்பிக்கையை, நாம் நம்பும் அறிவியலை தலைகீழாக இல்லை இல்லை தலையை சுற்ற வைத்து புரட்டிப் போட்டது. இருவேறு காலகட்டங்களில் சென்ற இருவரும் கூறிய செய்திகள் முற்றிலும் பொருந்தின.. அவர்கள் சென்ற இடங்கள, ரகசியமாக வைத்திருந்த போட்டோக்கள், அவர்களின் ராணுவ அடையாளங்கள் எல்லாவற்றையும் லிண்டாவிடம் காண்பித்த பிறகு முழு நம்பிக்கை வந்ததும் பொதுவெளியில் பகிர தொடங்கினார்.

2012இல் சென்றவர் கூறியதை அவர் விவரிப்பதாக விவரிக்க முயற்சி செய்கிறேன்…

2012ஆம் ஆண்டு எங்களின் நேவி சீல் குழு நீர்மூழ்கி கப்பலில் அண்டார்டிகாவின் தென் பகுதியை அடைந்தோம். எங்கு செல்ல வேண்டும் என்பது துல்லியமாக வரைபடத்தில் கொடுக்கப்பட்டு எங்களிடம் கொடுக்கப்பட்டது (இதை ஐஸ் பெனேடிரேட்டிங் ரேடார் மூலமாக ஏற்கனவே கண்டறிந்திருந்தனர்) , அதன்படியே அந்த இடத்தை அடைந்தோம்.. அப்போது நாங்கள் இருந்தது சுமார் 3.2 கிலோ மீட்டர் ஆழத்தில்… அந்த ஆழ்கடலில் நாங்கள் கண்ட காட்சி பிரம்மாண்டம் என்ற சொல்லுக்கு பல மடங்கு பொருந்தும்… அத்தகைய பிரம்மாண்டமான நுழைவுவாயில் தென்பட்டது. போகுமிடம் வடிவமைத்தது போலல்லாமல் வார்த்தது போல் இருந்தது இவை கருப்பு எரிமலை பாறைகளால் செய்யப்பட்டிருந்தது.. பாறைகளால் என்பது தவறு எங்கும் ஒட்டு இருப்பதற்கான அறிகுறியும் இல்லை. உள்ளே நுழைகிறோம்.. நமது இருபத்தி ஓராம் ஆண்டு நாகரீக உலகம் இல்லை கற்காலம் என்று தோன்றுகிறது… மிக பிரம்மாண்டமான அறை… அளவு எடுத்ததில் ஒரு அறை சுமார் 9 ஏக்கர் அளவு கொண்டது… உள்ளே செல்லும்போதே தானாகவே வெளிச்சம் வந்தது, தொடர்ந்தது.. எங்கிருந்து ஒளி வருகிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.. மிகப்பெரும் சுவர், அதில் மிக மிக நேர்த்தியாக சுவர் முழுவதும் சுமார் 7 சென்டி மீட்டர் ஆழ அளவிற்கு எழுத்துக்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன.. அந்த எழுத்துக்கள் மயன் எழுத்துக்களுக்கும் எகிப்திய எழுத்துக்களுக்கும் இடைப்பட்டு நாசாவினால் பாதுகாக்கப்படும் செவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களில் காணப்பட்ட எழுத்துக்களை ஒத்திருந்தது. இவைகளை டீ கோட் செய்ய முடியவில்லை என்றும் கேள்விப்பட்டிருக்கிறோம்.. டி கோட் செய்ய முடியவில்லை என்பது உண்மையா என்று தெரியவில்லை. இத்தகைய எழுத்துக்களை வார்த்த விதம் இன்றைய காலத்திலும் நமக்குள்ள தொழில்நுட்பதிலும் செய்ய இயலாது. அங்கு சுமார் 16 லிருந்து 20 டிகிரி C வரை (66 -72°F) வெப்பநிலை சீராக இருந்தது. அண்ணாந்து அளவெடுத்து பார்த்தால் இதன் கூரை 80 அடிகள் உயரத்தில் இருந்தது.. சற்றே கற்பனை செய்து பாருங்கள் 80 அடி கூரை ஒன்பது ஏக்கர் அளவிற்கு எந்தவித தூண்களும் இல்லாமல் கிட்டத்தட்ட அந்தரத்தில் இருந்தது… இதுவே பிரம்மாண்டம் என்றால் சுமார் மூன்று கிலோமீட்டர் அளவிற்கு அதற்குமேல் பனிக்கட்டி இருந்தது.. எந்த ஒரு கூரையினாலும் இவ்வளவு மேல் எடையை தாங்க சாத்தியக்கூறே இல்லை.. அமெரிக்க விஞ்ஞானிகள் பல பல வருடங்கள் ஆராய்ச்சிக்குப் பிறகு வந்த முடிவு.. இங்குள்ள தொழில்நுட்பம் நம் இயற்பியலுக்கு அப்பாற்பட்டது என்று, ஏனென்றால் அந்த கட்டிடத்திற்குள் புவியீர்ப்பு தன்மையை எடுத்துவிட்டு இருந்ததால் ( செல்ப் சஸ்டைனிங் கிராவிட்டி ) அந்தக் கூரையால் அவ்வாறிருக்க முடிகிறது என்ற முடிவுக்கு வந்தனர். ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்கு செல்ல சுமார் 15 நிமிடம் எடுத்ததாகவும் 62 ஏக்கர் பரப்பளவில் இதேபோன்று 6 அறைகள் இருந்ததாகவும் தெரியவந்தது. இது பண்டைய மனிதர்களால் கட்டப்பட்டதா என்று யோசித்துப் பார்க்கும்போது இந்த அளவிற்கான அதீத தொழில்நுட்பம் மனித சக்திக்கு அப்பாற்பட்டது என்று யோசிக்கத் தோன்றியது. இங்கு மிக முக்கியமான ஒன்றை யோசித்துப் பார்க்க வேண்டும்….கடைசியாக இந்த கண்டத்தில் பனி இல்லாமல் இருந்த காலம் சுமார் 33 லிருந்து 34 மில்லியன் வருடங்களுக்கு முன்பு.. ஆராய்ச்சியிலிருந்து தெரிய வந்தது அதற்குமுன் வெப்பமண்டல ( பாறைகள் ஆகிவிட்டு இருந்த மரங்களைக் காண முடிந்தது ) காடாக இருந்த இந்த கண்டம் 70 மில்லியன் வருடங்களாக சிறிது சிறிதாக நகர்ந்து தென்துருவத்தில் இருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. 2004இல் சென்ற நேவி சீல் நீர்மூழ்கி கப்பல் வழியாக செல்லாமல் மேலே குறிப்பிட்ட தென்துருவ துவாரத்தின் வழியாக வந்ததாக கூறினார்.

ஜான் கெர்ரி, டிக் செனி நிலவில் இரண்டாவதாக கால் வைத்த பஸ் ஆல்ட்ரின் ஆகியோர் அண்டார்டிகாக்கு சென்று வந்தது இனம்புரியா முக்கியத்துவத்தை இவைகளை ஆராய்வோற்கு அளித்தது.

மற்றுமொரு ஆச்சரியமூட்டும் நிகழ்வு என்னவென்றால், சுமார் முப்பத்தி மூன்று மில்லியன் வருடங்கள் வெளி உலகுக்குத் தெரியாமல் பனிக்கட்டியால் மூடியிருந்த அண்டார்டிகா கண்டத்தின் துல்லிய வரைபடம் 1513 வருடத்தின் துருக்கிய ஜெனரலாக இருந்த பெரி ரீஸ் என்பவரால் வரையப்பட்டிருந்தது. இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் மட்டுமே வரையறுக்கப்பட்ட அண்டார்டிகாவின் எல்லைகளை அதே துல்லியமாக 500 வருடங்களுக்கு முன்பாக அதே துல்லியத்துடன் துருக்கிய ஜெனரல் வரைந்திருந்தது அதற்கு முந்தைய காலகட்டத்தின் சோர்ஸ் மேப்பில் இருந்து எடுத்து வரையப்பட்டிருக்கும் என்று கணித்தாலும் அதை யார் வரைந்திருப்பார்கள் எப்படி அவர்களுக்கு தெரிந்திருக்கும் என்பது அந்தக் கட்டிடத்தின் மர்மம் போலவே!

இந்த வரைபடத்தின் தற்போதைய விலை சுமார் பத்து மில்லியன் இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 60 கோடி!

இப்போது மிக முக்கியமான 2012 இல் நிகழ்ந்த ஒரு நிகழ்வைக் குறிப்பிட வேண்டும், அந்த நிகழ்வு உலக மக்களுக்கு தெரிவிக்கப்படாமல் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு செய்தியாக தெரிவிக்கப்பட்டது.

ஜூலை இருபத்தி மூன்றாம் தேதி 2012 ஆம் வருடம் சூரியனிலிருந்து தொடங்கிய அல்லது கக்கிய மிகப் பிரம்மாண்டமான 3 தீச்சுவாலை புயல்கள் நமது பூமியை 14 மணி நேரம் பயணித்து தாக்கியிருக்க வேண்டும், அவ்வாறுதான் எல்லா ஆராய்ச்சிகளும் கூறின… உலக மக்களை பயமுறுத்தாமல் இதைத் தெரிந்த உலக அரசாங்கங்கள் மௌனம் காத்தன. அவ்வாறு அந்த மூன்றும் தாக்கி இருந்தால் அன்றைய தினத்திலிருந்து நம் பூமி அழிய தொடங்கி இருக்கும்… ஆராய்ச்சியின் படி சரியாக ஆறு மாதங்கள் கழித்து மீதம் ஏதாவது உயிரினம் இருந்திருந்தால் டிசம்பர் இருபத்தி ஒன்று 2012ஆம் ஆண்டு அவைகளும் இறந்திருக்கும். மயன் கேலண்டர் பற்றிய கல்வெட்டு கேள்விப்பட்டிருப்பீர்கள்…. அதன்படி மிகச்சரியாக நடக்க இருந்தது… ரகசியமாக கசிந்த செய்தியின்படி அண்டார்டிகாவில் இருந்து ஏதோ ஒன்றின் வினோத நிகழ்வு அந்த மூன்று புயல்களையும் சிறிதே திசைதிருப்ப பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே கடந்து சென்றதை சரியாக இரண்டு வருடங்கள் கழித்து நாசா உலகுக்கு அறிவித்தது. இவ்வளவு பெரிய பேரழிவை 10,000 கிலோ மீட்டர் இடைவெளியில் மட்டுமே நாம் கடந்ததும் தெரியாது… அந்த நிகழ்ச்சியின்போது டீப் இம்பாக்ட் திரைப்படத்தில் வருவது போல மிக முக்கியமானவர்கள் ஒரு மலைப்பகுதியில் ரகசியமாக உள்ள பேரழிவை சமாளிக்கக்கூடிய மிகப்பெரிய குகையினுள் தஞ்சம் அடைந்தார்கள் என்ற செய்தியும் தற்பொழுது லேசாக கசிய ஆரம்பித்துள்ளது. மற்ற நாடுகளில் இதேபோன்று நடந்ததா என்று சிவனுக்கே வெளிச்சம்!

தெரியாததும் புரியாததும் உலகில் எவ்வளவோ இருக்க எனக்கு புரிந்ததோ இல்லை புரிந்தது என்று நம்புகிறேனோ

தொல்காப்பியன் கூறிய தென்புலம் குமரிக்கண்டத்தோடா நின்றிருக்கும் இல்லை தென் துருவம் வரை நீண்டிருக்கும்….. நம் இனத்தை, நம் மொழியை தோற்றுவித்த தென்புலத்தான் சிவனே நம்மை காப்பாற்றியதாக நான் நினைத்தாலும் தவறில்லை!

bottom of page