முரண்.
- melbournesivastori
- Feb 16
- 7 min read

தர்மன், படிப்பு பொறியியல், தொழில் பொறியாளர்… ஆனால் பிரபலமானது தன்னுடைய வசீகர பேச்சால். தன் பெயருக்கு ஏற்றார் போல் ‘தர்மம் தலைகாக்கும்!’ இந்தத் தலைப்பில் தர்மன் பேசுவதை கேட்டால் கொடை வள்ளல்களே மெய்மறந்து கேட்பர்.
அத்தகைய பேச்சுகளில் தொடர்ந்து பங்கேற்ற கோமதியின் தொடர் நட்பு திருமணத்தில் கொண்டு போய் முடித்தது. கோமதியின் அன்பில், பண்பில், காதலில் தன்னை மறந்து ஒரு வருடம் முழுவதும் பிரசங்கம் செய்வதையே மறந்து விட்டான். இவன் மீது உறவினர்களுக்கு என்றுமே மதிப்பிருந்தது இல்லை… அது தானோ என்னவோ தர்மன் உறவினர்களை அண்ட விட்டதில்லை.
சில நண்பர்கள், ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டதற்கு இணங்க.. வேண்டா வெறுப்பாக ஏனோ தானோ என்று மறுபடி தன் ஊக்குவிக்கும் பேச்சுக்களை துவங்கினான். முதல் பேச்சே தர்மத்தை பற்றி அல்லாமல் மனைவியை மகிழ்விப்பது எப்படி என்று இருந்தது எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது… தர்மன் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை.. இந்தத் தலைப்பும் எல்லோருடைய வரவேற்பையும் பெற்றது. வேலை சுமையில் ஆழ்ந்து குடும்பத்தை அவ்வளவாக கவனிக்காதவர்கள் கூட.. தர்மனின் பேச்சைக் கேட்டு உணர்ந்து, உள்வாங்கி தத்தம் மனைவிகளை மகிழ்விக்க துவங்கினர்… தர்மனின் வசீகர பேச்சு ஆண்களைவிட பல மடங்கு பெண்களைக் கவர்ந்தது.
பொறியியல் வேலையையும் கவனித்து விட்டு.. வார இறுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்குகளில் பங்கேற்று விட்டு வீடு திரும்பும் போது சோர்வில் தன் வீட்டின் அப்போதைய நிலைமை அவன் கண்ணில் படவில்லை.
வாரத்தின் ஏழு நாட்களும் ஏதோ ஒரு வகையில் தர்மனின் நேரத்தை ஆட்கொள்ள.. அவன் கோமதியின் உடல் நலத்தை கவனிக்க தவறினான். அன்று சனிக்கிழமை, அன்றும் ஒரு கருத்தரங்கிற்கு செல்ல வேண்டியது இருந்தது.. பொதுவாக ஆறு மணிக்குள் எழுந்து கொள்ளும் பழக்கத்திலிருந்த தர்மனுக்கு அன்று ஏனோ ஏழு மணி வரை படுக்கையில் இருந்து எழ முடியவில்லை… உடல் அசதியாக இருந்தது..
‘உடல்நிலை சரியில்லையா என்ன? நீங்கள் எப்பொழுதும் 6 மணிக்குள் எழுந்திடுவீங்களே’
‘ ஏனோ தெரியவில்லை.. உடல் சோர்வாக உள்ளது, இப்போது பரவாயில்லை இன்னும் அரை மணி நேரத்தில் ரெடியாகி வருகிறேன்’
‘ தேநீர் வேண்டுமா இல்லை சிற்றுண்டி நேராக வேண்டுமா?’
பதில் கூற கோமதியை பார்த்த தர்மனுக்கு கொஞ்சம் அதிர்ச்சி….
கோமதி சிறிது மெலிந்தும், கவலையுடனும் இருப்பதாகப்பட்டது…
‘ என்ன கோமதி உன் உடல் நிலை எப்படி உள்ளது? என்னைப் பற்றி கேட்கிறியே நீ உன்னை கவனித்துக் கொள்ள வேண்டாமா? ஏதேனும் கவலை உள்ளதா உனக்கு?’
இந்த பேச்சுக்காக காத்திருந்தது போல், ‘ பிறகு பேசலாம், தேநீர் போட்டு வைக்கிறேன்… காலை சிற்றுண்டி என்ன வேண்டுமென்று அப்போது கூறுங்கள்’
சரி என்று தலை ஆட்டிவிட்டு குளியலறை சென்று தயாராக தொடங்கினான்..
எப்போதுமே தேநீர் எடுத்துக் கொண்டு தொலைக்காட்சி முன்பு அமரும் தருமன் அன்று உணவருந்தும் மேஜையின் நாற்காலியில் அமர்ந்தான்.
கோமதி கொடுத்த தேநீரை அருந்திக் கொண்டே, ‘என்ன கோமதி ஏதோ பேச வேண்டும் என்று சொன்னையே?’
அது ஒன்றும் இல்லை…. நீங்கள் முதலில் தேநீரை அருந்துங்கள்’
தர்மன் தேநீர் அருந்தி கொண்டே கேட்டான், ‘சரி இப்போது சொல்லு..’
‘ நீங்க மகிழ்ச்சியாக தானே இருக்கிறீங்க’
‘ என்ன இப்படி கேக்குற, நீ மகிழ்ச்சியாக இல்லையா?’
‘ இன்னும் ஐந்து நாட்களில் நம் திருமணம் முடிந்து ஐந்து வருடங்களாக போகிறது… நினைவிருக்கிறதா?’
‘ ஆமாம் அதற்கு என்ன, நான் ஏற்கனவே அதைக் கொண்டாட கொடைக்கானலில் மூன்று நாட்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்து விட்டேன்.. உன்னிடம் கடைசி நேரத்தில் கூறி ஒரு இன்ப அதிர்ச்சி தரலாம் என்று இருந்தேன்’
‘ நாம் கொண்டாடுவது இருக்கட்டும், வேறு ஏதும் தோன்றவில்லையா உங்களுக்கு?’
‘ என்ன கோமதி நீ அளவு கடந்த மகிழ்ச்சி அடைவாய் என்று எதிர்பார்த்தேன்’
‘ மகிழ்ச்சி தான்…. ம்ம் ‘
‘ பிறகு என்ன, ஏதோ சொல்ல தயங்குகிறாய் என்று புரிகிறது… நேரடியாக சொல்லிவிடேன்’
‘ என்னை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்’
‘ஏன் என்னவாயிற்று உனக்கு’
‘ ஊரெல்லாம் பிரசங்கம் செய்கிறீர்கள்.. அதைக் குறை சொல்லவில்லை… நான் என்ன கூற வருகிறேன் என்று புரியவில்லையே உங்களுக்கு…’
தர்மன் புரியாமல் கோமதியை பார்த்தான்.
‘ எனக்கு உடல்நிலை நன்றாக தான் இருக்கிறது… திருமணம் நடந்து 5 வருடங்கள் முடியப்போகிறது இன்னும் நமக்கு குழந்தை பேர் இல்லையே?!’
ஊருக்கெல்லாம் உபதேசம் செய்த தர்மனுக்கு அந்தக் கவலை இல்லாமல் இல்லை.. தினமும் மனதுக்குள் அழுதது அவன் இன்றி யாருக்கு தெரியும்? … சிறிது நேரம் நிலை தடுமாறினான்… ஆமாம் தமக்கென்று வாரிசு பற்றிய நினைப்பே கோமதிக்கு வராமல் தடுத்து மறைத்து விட்டோமே என்ற வருத்தம் பற்றி கொண்டது.
‘ இதோ உடனடியாக எனக்கு தெரிந்த மகப்பேறு மருத்துவரிடம் உன்னை அழைத்துச் செல்கிறேன், நானும் பரிசோதனை செய்து கொள்கிறேன்’
‘இப்போதுதான் எனக்கு நிம்மதி, இதைப் பற்றித்தான் பேச இருந்தேன் இனி என்ன சிற்றுண்டி வேணும் என்று சொல்லுங்கள்’
இரு மாதங்களுக்குள் தெரிந்து விட்டது குழந்தை பெறும் வாய்ப்பு இல்லை என்று.. அடுத்த ஆறு மாதங்களுக்கு இருவரிடமும் ஆழ்ந்த வருத்தத்தை தவிர வேறு எதுவும் இல்லை… தர்மன், பிரசங்கம் செய்வதையே தற்காலிகமாக நிறுத்தி விட்டான்.
பல பல யோசனைகள் வந்து சென்றன… அதில் கடைசியாக தத்து எடுத்துக்கொள்ளும் யோசனையும் வந்து சென்றது.. எல்லாவித கோணங்களையும் யோசித்து விட்டு இருவரும் முடிவு எடுத்தனர் வாழ்க்கையை அப்படியே கழிப்பது என்று.
கடந்த ஐந்து வருடங்களாக கோமதியின் உடல்நிலை, மனநிலை இவற்றை சரியாக கவனிக்கவில்லையே என்ற குற்ற உணர்ச்சி தர்மனை தொற்றி கொண்டது. ஒரு முடிவுக்கு வந்து நெருங்கிய சிலரிடம் தன் தேவையை கூற..
அந்த நெருங்கிய சிலரில் ஒருவரான கோதண்டம் அன்று வீட்டிற்கு வந்தார்.
‘ தர்மா, நீ கேட்டதை சிலரிடம் கேட்டேன். ஒரு தெரிந்தவர் வீட்டில் ஒரு பெண் இருப்பதாகவும் திருமணமான சில மாதங்களிலேயே கணவனை இழந்து விட்டதாகவும்.. அவள் அவர்களுடைய வீட்டிலேயே தங்கி இருந்து வீட்டின் அன்றாட வேலைகளையும், சமையலையும் கவனித்துக் கொள்வதாகவும் இப்போது அவர்கள் வெளிநாட்டில் இருக்கும் அவர்களுடைய மகன் வீட்டிற்கு சென்று அங்கேயே இருந்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்தார்கள், உனக்கு சம்மதம் என்றால் அந்தப் பெண்ணை உங்கள் வீட்டோடு வேலைக்கு வைத்துக் கொள்’
‘ ஓ அப்படியா? …நல்லது, எதற்கும் கோமதியை கேட்கிறேன்… கோமதி, சற்று வர முடியுமா?’
கோதண்டத்திற்கு தேநீர் எடுத்துக் கொண்டு கோமதியும் அங்கு வர..
‘ கோதண்டம் நீயே சொல்லுப்பா’
கோதண்டம் தர்மனிடம் கூறியதையே கூற..
‘ நல்லதுங்க அண்ணா, பெண்ணிற்கு எவ்வளவு வயது இருக்கும்?’
கோதண்டம் வயதைக் கூற,
‘ ஓ என்னை விட இரு வயதே பெரியவங்க…ரொம்ப வசதியாக போச்சு.. எனக்கும் பேச்சுத் துணைக்கு நன்றாக இருக்கும்… அவங்கள பார்த்து அவங்களுக்கு சம்மந்தமான்னு நான் பேசி பார்க்கணும்’
‘அதுக்கு என்ன அப்படியே செய்றேன்மா நாளைக்கு கூட்டிட்டு வரேன்’
‘ ஏங்க உங்களுக்கு சம்மதம் தானே?’ என்று கோமதி தர்மனை பார்த்து கேட்க..
‘ என்ன கோமதி இப்படி கேக்குற உன் விருப்பம் தான் எனக்கு’
மறுநாள் கோதண்டம் அந்த பெண்ணை அழைத்து வந்தார்.
இந்தப் பெண் தயக்கத்துடன் உள்ளே வர, கோமதி ‘ என்ன தயக்கம் உள்ளே வாம்மா’ என்று அழைத்து அருகில் இருந்த நாற்காலியில் அமர சொல்ல, அந்தப் பெண்,
‘பரவாயில்லீங்க நான் நிற்கிறேன்’
அந்தப் பெண்ணை கோமதிக்கு உடனே பிடித்து விட்டது.. அவள் தர்மனை பார்க்க, தர்மன் கண்களாலேயே சம்மதத்தை கோமதிக்கு கூறினான்.
‘ உங்க பேர் என்னம்மா?’
‘ நீ வா போன்னு கூப்பிடுங்க வாங்க போங்கன்னு தேவையில்லை… என் பெயர் சாரதா’
‘ சாரதா எங்க வீட்டிலேயே தங்கிட உனக்கு விருப்பமா?’
‘ அடுத்த வாரத்தில் இருந்து என் கதி என்னன்னு யோசிக்கும்போது, முருகனே என்ன உங்க வீட்டுக்கு அனுப்புவதாக தோணுது… எனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லம்மா… ஒரு விதத்தில முழு நிம்மதி’ என்று சாரதா கூற….
‘ சாரதா, உனக்கு ஒரு அளவுக்கு சமைக்க தெரியும்னு சொன்னாங்க, என்னென்ன சமையல் தெரியும்?’
‘ எல்லா வகை சமையலும் தெரியும்மா, கடந்த எட்டு வருஷமா அவங்களுக்கு நான் தான் சமைக்கிறேன்’
கோமதிக்கு அளவற்ற மகிழ்ச்சி…
‘ கூடவே எனக்கு உதவியா வீட்டு வேலை செய்ய முடியுமா?’
‘ என்னம்மா இப்படி கேட்டுட்டீங்க, நீங்க எதுவுமே செய்யாதீங்க… நானே எல்லா வேலையும் செய்கிறேன்’
கோதண்டத்திற்கு தெரிந்தவர் சாரதாவை பற்றி மிக மிக உயர்வாக கூறியது தர்மனுக்கும் கோமதிக்கும் தெரியும்.. மேலும் அவர்கள் அவர்களுடைய மகனின் கட்டாயத்தின் பெயரில் தான் வெளிநாட்டில் செட்டிலாக செல்கிறார்கள் என்று புரிந்து கொண்டார்கள்.
‘ரொம்ப சந்தோஷம் சாரதா, எப்போதிலிருந்து வருகிறாய்?’
‘எட்டு வருடங்களாக அவர்களிடமே இருந்து விட்டேன்.. வருகிற வாரம் அவர்கள் ஊருக்கு செல்கிறார்கள், அதுவரை அவர்களுக்கு உதவியாக இருந்து விட்டு அவர்கள் புறப்பட்டு சென்றதும் வரட்டுமா?’
சாரதாவின் இந்த பதில் தர்மன் கோமதிக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது.
‘சரி சாரதா, வா வீட்டை காண்பிக்கிறேன் நீ தங்கப் போகும் அறையையும் காண்பிக்கிறேன்’
சாரதாவிற்கு பெரிய நிம்மதி கிடைத்தது… தனி அறை, தனி குளியலறை இவற்றுடன் இருக்கப் போகிறோம் என்று.
தர்மன், ஆன்மீக பிரச்சாரத்தை துவங்க.. அதிலும் மிகவும் வரவேற்பை பெற்றார்.
சாரதா, தர்மன் கோமதி வீட்டிற்கு வந்து ஐந்து வருடங்களுக்கு மேலாகியது.. தர்மனும் கோமதியும் அடிக்கடி வெளியூர்களுக்கு செல்ல சாரதா வீட்டைப் பார்த்துக் கொண்டார்.
அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை… ‘அக்கா, அக்கா’ என்று ஒருவன் அழைத்துக் கொண்டே அழைப்பு மணியை அழுத்திக் கொண்டிருந்தான்.
சாரதா வெளியே வந்து ‘யார் தம்பி வேண்டும் உங்களுக்கு?’ என்று வினவ..
‘ கோமதி அக்காவை பார்க்க வந்தேன்’
தான் தங்கியிருக்கும் இந்த ஐந்து வருடங்களில் கோமதியின் உறவினர்கள் ஒரு பெரியவரும் அவருடைய மனைவியும் தவிர யாரும் வந்து பார்த்ததில்லை… கோமதி புருவங்களை உயர்த்தி, ‘நீங்க கோமதி அக்காவுக்கு சொந்தங்களா?’
‘ஆமாம் தூரத்து சொந்தம்’
‘உள்ள வா தம்பி இதோ கூப்பிடுகிறேன்’
கோமதி வயதில் சிறியவராக இருந்தாலும் அவரை அக்கா என்று கூப்பிட்டுப் பழக்கப்பட்ட சாரதா,
‘அக்கா உங்களை யாரோ பார்க்க வந்திருக்காங்க’ என்று கோமதியை அழைக்க…
கோமதியுடன் தர்மனும் மாடியில் இருந்து இறங்கி வந்தார்.
கோமதி, ‘ நீ…. பாபு இல்ல?’
ஆமாம் என்று வந்தவன் தலையாட்ட…
‘ நீ சின்ன வயசா இருக்கும்போது பார்த்தது.. ஒரு 15 வருஷம் இருக்கும்..’
‘ ஏங்க, இவன் என் தம்பி முறை வேணும்… தூரத்து சின்ன தாத்தா பேரன்’
‘அப்படியா, ஒக்கருப்பா’
பாபு அங்கிருந்த நாற்காலியில் அமர…
‘ என்னப்பா பண்ற, எந்த ஊர்ல இருக்க?’
ஊர் பேரைச் சொல்லி அங்கு பிளஸ் 2 படித்துவிட்டு வந்ததாக கூறினான்.
‘ சந்தோஷம், மேற்கொண்டு என்ன படிக்கப் போற என்று தர்மன் பாபுவை பார்த்து கேட்க…
‘ அதபத்தி பேச தான் வந்தேன்…’
எதைப் பற்றி என்று அவர்கள் பாபுவை நோக்க…
‘ இங்கே இருக்கிற காலேஜ்ல பொறியியல் படிக்கலாம்னு நினைக்கிறேன்’
‘ரொம்ப சந்தோஷம், சீட்டு கிடைத்ததா?’
‘ கிடைச்சுச்சு…அங்கேயே ஹாஸ்டலில் தங்கி படிப்பதற்கும் சேர்த்து’
‘ ரொம்ப நல்லது… எப்ப சேரனும்?’ என்று தர்மன் கேட்க.
‘ பிரச்சனை அது இல்லைங்க… ஹாஸ்டலில் தங்கி படிக்கிற அளவுக்கு வசதி இல்லை… அதுதான் யோசனையா அப்பாவுக்கு இருக்குது..’
தர்மன் சற்றும் யோசிக்காமல், ‘அட நீ என்னப்பா… கோமதி தம்பி முறை…இது கூட செய்யலன்னா எப்படி.. நாங்க ரெண்டு பேரு தான் இந்த வீட்ல…. நீ இங்கேயே தங்கி படிக்கலாம்’
‘ஐயோ அதெல்லாம் வேணாம் மாமா… அப்பாவால காசு கொடுக்க முடியாது’
தர்மன் அவனைப் பார்த்து முறைத்து, ‘முட்டாள்தனமா பேசாதே…கோமதி தம்பிய பணம் வாங்கிக் கொண்டுதான் தங்க விடுவேனா…அது போல தான் நீயும்…தங்கி நன்றாக படி அதுவே எனக்கு போதும்’
பாபு இதை எதிர்பார்த்தது போல பவ்வியமாக தலையாட்டினான்.
‘சரி என்ன பொறியியல்லபடிக்கப் போற?’
பாபு இப்போது சற்றென்று உரிமை எடுத்துக் கொண்டு, ‘மாமா இப்ப ஏ ஐ தான் பிரபலம்.. அதுவே படிக்கலாம்னு இருக்கேன்’
‘ரொம்ப சந்தோஷம் பாபு நானும் என்ஜினீயர் தான்… மெக்கானிக்கல்’
பாபு அங்கு தங்கி இருந்து படிக்க, சாரதாவிற்கு வேலை சுமை ஒன்றும் பெரிதாக தெரியவில்லை.
பாபுவை தர்மன் கோமதிக்கு மட்டுமல்லாமல் சாரதாவிற்கும் மிகவும் பிடித்தது…
பாபு கம்ப்யூட்டரில் விளையாடினான்… அவனை அறியாமல் ஹேக்கிங் கைவந்த கலையாக வந்தது… இதில் ஏ ஐ பற்றிய அறிவு வேறு…
தர்மனுக்கு மேடைப்பேச்சியில் தான் வசீகரம்.. பாபுவிற்கு 360° வசீகரம் இருந்தது….
ஐந்து வருட படிப்பு முடிந்தது தெரியவில்லை… நன்றாக படித்து முடித்தது மட்டுமல்லாமல்.. ஒரு புதிதாக துவங்கப்பட்ட புதுடில்லியில் இருக்கும் A I கார்ப்பரேட் கம்பெனியில் நல்ல மாத சம்பளத்தில் வேலையும் கிடைத்தது..
ஐந்து வருடங்கள் தங்கிப் படித்தது…யாரோ ஒருவனாக இல்லை தத்து பிள்ளை போலவே இருந்தது….. தர்மனுக்கும் கோமதிக்கும் ஏன் சாரதாவிற்குமே ஆழ்ந்த வருத்தத்தை தந்தது…
அந்த நாளும் வந்தது… அவன் தங்கி நல்லபடியாக வேலை பார்க்க தேவையான எல்லாவற்றையும் தர்மன் வாங்கி கொடுத்து அவனை வழி அனுப்பினார்.
இரண்டு மூன்று வாரங்கள் கழித்தும் பாபுவிடமிருந்து எந்த தகவலும் இல்லை…தகவல் வரும் என்று எதிர்பார்த்து இரண்டு மூன்று வாரங்கள் இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டது…
அன்று ஒரு சனிக்கிழமை, தர்மன், ‘பெற்றால் தான் பிள்ளைகளா?’ என்ற ஒரு அற்புதமான தலைப்பில் பிரசங்கம் செய்து விட்டு வீட்டுக்கு வந்த போது.. கோமதி பேயரைந்தது போல் இருப்பதைக் கண்டு பதறி என்னவென்று விசாரித்தார்.
கோமதியினால் கூற வந்ததை கூற முடியாமல் அழுகை மேலோங்க..
தர்மன், கோமதியை சமாதானப்படுத்தி மெதுவாக விசாரிக்க..
‘ இன்னைக்கு காலையில என் பேங்க் பேலன்ஸ் செக் பண்ணி பார்த்தேன்… நீங்க எனக்கு போட்டிருந்த 11 லட்சமும் அதுல இல்லைங்க…’
தர்மன் அலரி அடித்துக்கொண்டு கோமதியின் வங்கிக் கணக்கை சரி பார்க்க லாகின் செய்ய…
கோமதி கூறியது சரிதான் …. சரியாக 111 ரூபாய் மட்டும் வைத்துவிட்டு மீதமிருந்த பணம் சூறையாடப்பட்டிருந்தது..
தன் உலக அனுபவத்தால் தர்மனுக்கு சட்டென்று புரிந்து விட்டது… இருப்பினும் கோமதியிடம்,
‘ கவலைப்படாதே… தவறுதலாக ஏதாவது நடந்திருக்கும் … நாளை வங்கியில் புகார் செய்கிறேன்’ என்று சமாதானப்படுத்தினார்.
மாதங்கள் உருண்டோட இழந்த பணத்தைப் பற்றி செய்தி ஏதும் இல்லாமல் வருடங்களும் உருண்டோடியது..
கோமதிக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருந்தாலும் தேவையற்ற வருத்தங்கள் மனதை ஆட்கொள்ள… சாரதாவுடன் செய்த சிறு சிறு வீட்டு வேலைகளையும் நிறுத்தி எப்போதும் தொலைக்காட்சியை பார்ப்பதே வேலையாக மாறிவிட்டது.
பாபுவை பற்றி எந்த செய்தியும் தெரியாதது மிகுந்த வேதனை கொடுத்தது.. இதன் நடுவில் பாபுவின் தந்தை, தன் தூரத்து சித்தப்பாவின் மரணத்திலும் பாபுவை காணாதது அவனுக்கு என்ன ஆயிற்றோ என்ற வேதனை வாட்டியது.
எந்த ஒரு ஆக்டிவிட்டியும் இல்லாமல், குறைந்தபட்சம் சில நிமிடங்கள் நடைபயிற்சி கூட இல்லாமல் இருந்ததால் கோமதியின் உடல் பாதித்து எடை நாளுக்கு நாள் கூட ஆரம்பித்தது…
இதனால் தர்மனுக்கும் இயல்பு வாழ்க்கை பெருமளவிற்கு பாதித்தது..
கோமதியின் 59 வது வயதில்.. தொடர் மருத்துவ பரிசோதனையும், சிகிச்சையும் பலனளிக்காமல் அவருடைய உடல் பருமனை தாங்காமல் இதயம் நிற்க… தர்மனுக்கு உலகமே இருண்டது போல் இருந்தது… அதன் பிறகு தர்மன் ஒரு நடைபிணமே.. வேறு வழியில்லாமல் சாரதா பணத்தை தவிர எல்லா விவகாரத்தையும் கவனிக்கத் தொடங்கினார்.
சாரதா அந்த வீட்டிற்கு வந்து 29 வருடங்களுக்கு மேல் ஆகியது.. கோமதியை அக்கா என்று கூப்பிட்டதற்கு மேலாக தர்மனுக்கு உடன்பிறவா தங்கை போலவே இருந்தார்.
ஒரு மூன்று வருடங்கள் கடந்து இருக்கும்..
அன்று காலை வந்த தினசரி செய்தித்தாளை பார்த்து தர்மனுக்கு ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது.
ஆமாம் அதில் பார்த்த புகைப்படமும் செய்தியும் அப்படி.
செய்தித்தாளின் முதல் பக்கத்தில் இருந்த புகைப்படத்தில் பாபு.
செய்தியில்… ஆளும் கட்சியின் செய்தி தொடர்பு தலைவராக பாபு நியமிக்கப்பட்டார் என்று..
சுமார் 22 வருடங்கள் கழித்து பாபுவின் புகைப்படத்தை தர்மனும், சாரதாவும் பார்த்தனர்.
மனது கேட்காமல் தர்மன் பாபுவை தொடர்பு கொள்ள பலமுறை முயற்சித்தும் பாபுவின் தொடர்பு கிடைக்கவில்லை…
தர்மனின் உடலும் சோர்வுற்றது… நிறைய தடுமாற்றங்கள் வந்தது.. மனது பேதலித்தது.. அன்று ஒரு நாள் காலை தர்மன் தயாராகி சாரதா விடம் விவரங்கள் கூறாமல்.கால் டாக்ஸியில் வெளியே சென்றது சாரதாவிற்கு வித்தியாசமாக இருந்தது…
இது நடந்து இரு மாதங்களே இருந்திருக்கும்.. அன்று காலை சுமார் ஆறு மணிக்கே எழுந்து வர வேண்டிய தருமன் எட்டு மணி வரை வராமல் இருந்ததால்… தேநீர் எடுத்துக் கொண்டு சாரதா, தர்மனின் படுக்கை அறை கதவை தட்ட பலனளிக்காமல் திரும்பி கீழே வந்து கைபேசியில் அழைத்தும் பலனளிக்காமல் பதட்டமடைந்து …. பக்கத்து வீட்டில் உள்ளோரை உதவிக்கு அழைக்க…. ஆம் நடக்க கூடாதது நடந்து விட்டது….
தர்மனின் இறுதிச்சடங்கை சில நண்பர்களும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் நடத்த சாரதாவிற்கு உலகமே முடிவிற்கு வந்தது போல் இருந்தது… சாரதா பாழும் கிணற்றில் விழவிருந்த சமயத்தில் பிடித்துக் கொண்டிருந்த தர்மனின் கை பிடி தளர்ந்து பாழும் கிணற்றை நோக்கி விரைவாக விழுவதைப் போல் உணர்ந்தார்.
ஒரே ஒரு நாள் தான், எல்லோரும் லேசாக சாரதாவின் காதில் படும்படி வீட்டைப் பற்றியும் மற்ற தர்மனின் பணம் சொத்து பற்றியும் பேச…
அந்த சமயத்தில்தான் ஆரவாரமாக ஒரு பெரிய கார் வந்து நிற்க.. அதிலிருந்து பலரும் இறங்க முதன்மையாக வந்தவரை பார்க்க சாரதா வருத்தத்திலும் மகிழ்ச்சி உற்றார். ஆமாம் வந்தது பாபு….
சாரதாவின் மகிழ்ச்சி ஓரிரு நிமிடங்களே நிலைத்தது…
அடை மழை அல்ல… சூறாவளி சூறையாடி சென்றது போல்… தர்மன் மறைந்து இரண்டே நாட்களில் அந்த முதியோர் இல்லத்தில் கடந்த 32 வருட வாழ்க்கை, நிம்மதி எல்லாம் சூறையாடப்பட்டு இங்கு நிற்போம் என்று சாரதா கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. அந்த ஜன்னலின் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு வெறித்த பார்வையோடு கண்களில் கண்ணீர் வழிய நின்று கொண்டிருந்தாள் சாரதா.
ஆம், அன்று ஒரு நாள் தர்மன் தயாராகி கால் டாக்ஸியில் சென்றது தன் சொத்துக்கள் எல்லாவற்றையும் பாபுவின் பெயரில் எழுதத்தான்.