top of page
Search

புகழ்!

  • melbournesivastori
  • Feb 5, 2023
  • 5 min read

டோக்கியோ நரிட்டா ஏர்போர்ட்டில் வந்து இறங்கினேன்.. பயணத்தில் ஓரிரு இந்தியர்களைத் தவிர வேறு இந்திய முகங்கள் இல்லை. சுங்கம் முடித்து வாடகை காரில் டோக்கியோவின் விலை உயர்ந்த இடமான கின்சாவில் ஓர் இரவு தங்க சென்றேன். பல உலக நகரங்களுக்கு சென்றிருந்ததால் பத்தோடு பதினொன்றாக தான் தெரிந்தது கின்சா நகரம். இரவு உறக்கம் வரும்வரை நகர வீதிகளில் யாருடைய தொந்தரவும் இன்றி உலா வந்தேன்.. நல்ல அனுபவம் பல வருடங்களுக்குப் பிறகு. ஹோட்டல் அறைக்கு வந்து உறங்கி எழுந்து மறுநாள் ஊனோ தொடர் வண்டி நிலையத்திற்கு சென்றேன், நான் செல்லப் போகும் இடத்திற்கான புல்லட் ட்ரெயின் நிறுத்தி இருக்கும் தளத்திற்குச் சென்று நான் ஏற வேண்டிய பெட்டியை கண்டுபிடித்து உள்ளே சென்றேன்.. இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தது தோட்டா தொடர்வண்டி புறப்பட… இருக்கையில் அமர்ந்தேன். வண்டி புறப்பட சரியாக இரண்டு நிமிடங்கள் இருக்கும்போது என் பக்கத்து இருக்கைக்கு இந்தியரைப் போன்று தோற்றம் அளித்த ஒருவர் வந்து அமர்ந்தார். ஒரு சில வினாடிகளே என்னை திரும்பிப் பார்த்து சற்றே புன்முறுவல் பூத்தார். நானும் பதிலுக்கு புன்முறுவலுடன் அவரை விசாரிக்க நினைக்க, அவரோ இருக்கையில் அமர்ந்து ஒரு புத்தகத்தை கையில் எடுத்துக் கொண்டார். சரியான நேரத்தில் தோட்டா தொடர்வண்டி கிளம்பியது. எனக்கு ஏதோ சற்று ஏமாற்றமாக இருந்தது.. இப்போது என்னைப் பற்றி நான் கூறியாக வேண்டும்….. நான் ஏ பீ என்று ஒட்டுமொத்த இந்தியர்களாலும் அன்பாக; வெறித்தனமாக அழைக்கப்படும் அர்ப்பன் பட்டேல்…. ஆமாம், விவியன் ரிச்சர்ட்ஸ், வீரேந்திர சேவாக், ஸ்ரீகாந்த், கிளன் மேக்ஸ்வெல் எல்லோரையும் கலந்த கலவை நான் என்று புகழப்படுபவன். நான் மட்டை வீச கிரிக்கெட் மைதானத்திற்குள் செல்ல எழுவதிலிருந்து விண்ணை முட்டும் கரகோஷம் எங்கும் ஒலிக்கும். இது போன்ற வெறித்தனமான அன்பில், புகழ்ச்சியில் பல வருடமாக திளைத்தேன். புகழ் போதையின் உச்சம் தொட்டேன்.. போதையின் நடுவில் கொஞ்சம் கொஞ்சமாக என் சுதந்திரம் பறிபோவதை உணர்ந்தேன். எங்கு சென்றாலும் என் விசிறிகளுடைய அன்புத் தொல்லை. சென்ற வாரம் தான் இதிலிருந்து ஓரிரு வாரங்களாவது என்னை அறியாத மக்கள் இருக்கும் இடத்தில் கழிக்க யோசித்து தான் இதோ இப்போது ஜப்பான் வந்து ஜப்பானின் குளிர் தலைநகரமான நகானோவிற்கு செல்ல இந்த தோட்டா தொடர்வண்டியில் அமர்ந்து கொண்டிருக்கிறேன். வண்டி புறப்பட்டு ஒரு பத்து நிமிடங்கள் கழிந்திருக்கும், நான் அவரைப் பார்த்து நீங்கள் இந்தியரா? என்று ஆங்கிலத்தில் கேட்டேன். ‘ஆமாம்’ என்றார். இந்த ஒற்றை வார்த்தை பதில் எனக்கு சற்று எரிச்சலை ஊட்டியது… ‘ எந்தப் பகுதி இந்தியாவை சேர்ந்தவர் நீங்கள்?’ என்று கேட்டேன். ‘எனக்கு ஆங்கிலம், ஜப்பானிய மொழி, தமிழைத் தவிர வேறு மொழிகள் தெரியாது’ என்று ஆங்கிலத்தில் கூறினார். அப்போதுதான் உணர்ந்தேன், அவர் இந்தியர் என்றதும் என்னை அறியாமல் ஹிந்தியில் பேசத் தொடங்கி விட்டேன் என்று. இருப்பினும் அதிர்ச்சியாக இருந்தது ஒரு இந்தியனுக்கு ஹிந்தி தெரியவில்லை என்று… ‘ மன்னிக்கவும் இந்தியர் என்று ஹிந்தியில் பேச தொடங்கி விட்டேன் ‘ ‘பரவாயில்லை, இந்தத் தவறை பல வட இந்தியர்கள் செய்கிறீர்கள் ‘ அவரின் இந்த பதில் எனக்கு கோபம் மூட்டினாலும் பொறுத்துக் கொண்டு கொஞ்சம் மௌனித்தேன். என்னை மீறி அவர் என்ன புத்தகம் படிக்கிறார் என்று ஆவலுடன் பார்த்தேன். ஏதோ ரவீந்திரநாத் தாகூர் போன்றவரின் உருவப்படம் போட்டு தமிழ் என்று நினைக்கிறேன் அதில் இருந்தது. ‘ கேட்பதற்கு மன்னிக்கவும் அது யார் ரவீந்திரநாத் தாகூரா?’ ‘ இல்லை’ ‘ அவரைப் போன்றே இருப்பதால் கேட்டேன் யார் இவர்?’ ‘நம்மாழ்வார்’ ‘ ஓ,எனக்கு யார் என்று தெரியாது’ ‘ ஆமாம் நல்லவர்களை பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ‘ அந்த பதில் கொஞ்சம் வெறுப்புடன் இருந்ததாக தோன்றியது… இருப்பினும் என் தான்மையை மறைத்து, ‘ எதற்காக நகானோ செல்கிறீர்கள்? ‘ என்று கேட்டேன். ‘ வேலை நிமித்தமாக’ என்றார். அதற்குப் பிறகு போக வேண்டிய நகானோ தொடர்வண்டி நிலையம் வரும் வரை பேசாமல் இயற்கை காட்சிகளை ரசிக்க முற்பட்டேன்… என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. இந்த நிமிடம் வரை அவர் என்னிடம் எந்த கேள்வியும் கேட்காதது…. இந்தியர் என்கிறார் என்னைப் பற்றி எப்படி தெரியாமல் இருந்திருக்கும்? என்னுடைய அனுபவத்தில் இப்பேர்ப்பட்டவரை நான் சந்தித்தது இல்லை… ஒருவேளை பல வருடங்களாக வெளிநாட்டிலேயே இருந்திருந்தால் உண்மையிலேயே தெரியாமல் இருந்திருக்கும். நகானோ தொடர்வண்டி நிலையம் வந்து சேர்ந்தோம். இறங்கும்போதுதான் சற்று நட்பு பார்வை பார்த்தார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, ‘எங்கு தங்க போகிறீர்கள்?’ என்று கேட்டேன். ‘ தி மெட்ரோபாலிட்டன், மினாமி ஈசிடோவில்’ ‘ ஓ நன்றாக போய்விட்டது… நானும் அங்கே தான் தங்கப் போகிறேன்… நீங்கள் எவ்வளவு நாள் தங்கப் போகிறீர்கள்?’ ‘ஒரு வாரம்’ ‘ நானும் ஒரு வாரம் தான், இங்கு ஏற்கனவே வந்திருக்கிறீர்களா?’ ‘ பலமுறை, என்னை அழைத்துச் செல்ல என் ஜப்பானிய நண்பர் கமினோ வருவார் நீங்களும் என்னுடனே வரலாம் ‘ அப்பாடா கொஞ்சம் நட்பு தெரிகிறது… இறுக பற்றி கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து வெளியே வந்தோம். அவருடைய ஜப்பான் நண்பர் இவரைப் பார்த்து அருகில் வந்து தலையை சாய்த்து வணக்கம் சொல்ல இவரும் அதே முறைப்படி வணக்கம் சொல்ல என்னை அறிமுகப்படுத்தினார்… அப்போதாவது என்னை யார் என்று கேட்பார் என்று நினைத்தேன். ஆனால்… ‘ என் சக நாட்டவர் உடன் பயணித்தார் ஒரே இடத்திற்கு செல்ல போகிறோம் அதனால் அழைக்கிறேன் உங்களுக்கு ஒன்றும் சங்கடம் இல்லையே?’ கமினோ, ‘கண்டிப்பாக இல்லை… இவரும் நம் விருந்தினரே’ அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு வந்தோம், அந்த ஜப்பானியர் எங்களை விட்டு விட்டு விடை பெற்றுச் சென்றார். மலை அடிவாரத்தில் அமைந்திருந்தது… இயற்கையின் பேரழகை முதன்முறையாக ரசிக்க தோன்றியது. அதிர்ஷ்டவசமாக என் அறைக்கு நேர் எதிரே அவர் அறையும் அமைந்தது. இப்போதுதான் நினைவுக்கு வந்தது அவர் பெயரையே கேட்கவில்லை… ‘உங்கள் பெயரை தெரிந்து கொள்ளலாமா?’ ‘நடராஜ்’ நான் யார் என்று கேட்பார் என்று எதிர்பார்த்தேன்…. ஏமாற்றுமே! ‘ சற்று ஓய்வெடுத்துக் கொண்டு பிறகு பார்க்கலாம்’ என்று அவர் அறைக்குச் சென்று கதவை சாத்திக் கொண்டார். என்னை யாரும் அறியாமல் இருக்கும் இடத்திற்கு சென்று அமைதியாக ஓரிரு வாரங்கள் கழிக்கலாம் என்று வந்திருந்தும்…. தெரிந்த ஒரே ஒருவர் என்னை உதாசனைப்படுத்துவது மிகுந்த மன வேதனையுடன் லேசாக மன உளைச்சலும் ஏற்பட்டது. என்னால் ஓய்வெடுக்க முடியவில்லை, என்னுடைய பெட்டியை வைத்துவிட்டு கைபேசியை மட்டும் எடுத்துக் கொண்டு அறையை பூட்டி வெளியே வந்தேன்… அவர் அறை இன்னும் சாத்தியப்படியே இருந்தது. எங்கும் ஜப்பானிய முகங்கள்… டோக்கியோவில் பல இனத்தவரை பார்க்க முடிந்தது இங்கு அது போல் இல்லை… ஹோட்டலுக்கு வெளியே கால் ஆற நடக்க ஆரம்பித்தேன்… என் குளிர் உடுப்புக்களையும் மீறி குளிர்ந்தது.. எங்கும் அடர்த்தியான மரங்கள் இருந்த மலைகள்… இங்குதான் முன்பு குளிர்கால ஒலிம்பிக் நடந்தது. இயற்கையின் அழகை ரசிக்க எவ்வளவு முற்பட்டும் என் தான்மை (Ego) என்னைப் பற்றி விசாரிக்காமல் இருந்ததையே நினைத்துக் கொண்டிருந்தது. நான் என் புகழுக்கு கொடுக்கும் சுதந்திரத்தின் விலை அதிகம் என்று நினைத்தேன்… இதுவோ புகழின் மறுபக்கமாக இருக்கிறது. காலை ஓட்டலின் சிற்றுண்டி உண்ணும் போது தவிர ஐந்து நாட்களும் அவரை பார்க்க முடியவில்லை.. நான் தனியாக எல்லா இடங்களையும் சுற்றி பார்த்தேன். கடைசி நாள் சிற்றுண்டி உண்ண ஹோட்டலின் மேல் தளத்திற்கு வந்து சுய சேவையில் வைக்கப்பட்டிருந்த எனக்கு பிடித்த உணவுகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்கும்போது நடராஜன் வந்தார். ‘காலை வணக்கம்’ முதல் நாள் ஹிந்தியில் விசாரித்த அந்த ஒரு வரியைத் தவிர எங்களுடைய எல்லா பேச்சு வார்த்தைகளும் ஆங்கிலத்திலேயே இருந்தது. ‘காலை வணக்கம் உங்களுக்கும்’ பிடித்த உணவுகளை எடுத்துக் கொண்டு இருவரும் பிரம்மாண்ட மலைகளைப் பார்த்தவாறு இருந்த ஜன்னல் ஓரத்தில் சென்று அமர்ந்தோம். சிற்றுண்டி உண்டு முடித்தோம்.. என்னால் இனியும் தாங்க முடியாது… அவரிடம் கேட்டே ஆகவேண்டும். ‘ என்னைப் பற்றி நீங்கள் விசாரிக்கவே இல்லையே?’ ‘ நான் மற்றவருடைய சுதந்திரத்தில் தலையிடுவதில்லை… நீங்கள் விரும்பினால் நீங்களே சொல்லப் போகிறீர்கள் ‘ இந்த பதிலும் என் தான்மையை சோதித்தது… பொறுத்துக் கொண்டேன். நானே கூறினேன், ‘ நான் அர்ப்பன் பட்டேல் இந்திய கிரிக்கெட் வீரர் ‘ ‘ தெரியும்’ என்று அவர் கூறியது என் தான்மைக்கு சம்மட்டி அடியாக விழுந்தது… ‘தெரியுமா? என்னை தெரிந்தது போல காட்டிக் கொள்ளவில்லையே நீங்கள் ஏன் கிரிக்கெட் விளையாட்டு பிடிக்காதா உங்களுக்கு?’ ‘ பிடித்தது முன்பு ‘ ‘ஏன் பிடிக்கவில்லை இப்போது?’ ‘ பிடிக்கவில்லை என்பதை விட தவிர்க்கிறேன் என்பது பொருந்தும் ‘ ‘ஏன்?’ ‘இந்திய இளைஞர்களின் பொன்னான நேரம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மக்கள் தொகையே இவ்வளவு வெறித்தனமாக இருக்கிற வேலைகளை எல்லாம் ஒத்தி வைத்து விட்டு பார்ப்பது நாட்டுக்கு செய்யும் தீங்கு என்று நினைக்கிறேன் ‘ இந்த வித்தியாசமான பதிலை நான் எதிர்பார்க்கவில்லை…. ‘திரைப்படங்களின் மோகமும் அப்படித்தானே?’ ‘ ஆமாம் நீங்கள் திரைப்பட நடிகர் இல்லியே உங்களிடம் ஏன் அதைப் பற்றி பேச வேண்டும்? மேலும் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டுமே தவிர சப்பைக் கட்டு கட்ட மற்ற விடயங்களை மேற்கோள் காட்டுவது இயலாமை ‘ இவரின் பதில்கள் எல்லாம் வெகு கூர்மையாக இருந்தது… மனது வலித்தது… முதன்முறையாக இந்த அனுபவம் எனக்கு. ‘ உங்களுக்கு காமராஜரை தெரியுமா?’ என்று கேட்டார். ‘ தெரியாது’ ‘ பாரதியாரை தெரியுமா?’ ‘ தெரியாது’ ‘ வ உ சிதம்பரம் பிள்ளையை தெரியுமா?’ ‘ தெரியாது’ ‘ வேலு நாச்சியாரை தெரியுமா?’ ‘தெரியாது’ ‘ஜான்சி ராணியை தெரியுமா?’ ‘ ஓ, நன்றாக தெரியுமே!’ ‘ எங்கள் வேலு நாச்சியார் ஜான்சிராணி பிறப்பதற்கு முன்பே பிறந்து ஆண்ட மாவீர பெண்மணி!’ ‘அப்படியா’ என்னால் உண்மை என்று நம்ப முடியவில்லை. ‘குயிலியை தெரியுமா?’ ‘தெரியாது யார் அவர்?’ ‘ தனியே தன்னையே தியாகம் செய்து கொண்டு ஆங்கிலேயரின் ஆயுத கிடங்கை துவம்சம் செய்த வேலு நாச்சியாரின் தளபதி ‘ ‘ ஓ, இவ்வளவு நடந்து இருக்கிறதா? நான் கேள்விப்பட்டதே இல்லையே…’ ‘ இது மட்டும் இல்லை எங்களின் வீர வரலாறு எவ்வளவோ உள்ளது…’ ‘ சரி திருவள்ளுவர் தெரியுமா?’ ‘ மன்னிக்கவும், தெரியாது…’ என்னுடைய தான்மை கொஞ்சம் கொஞ்சமாக குழி தோண்டி புதைக்கப்படுவது தெரிந்தது….. ‘உங்களால், எங்களுடைய பல்லாயிரக்கணக்கான வருடங்களின் வீர; பண்பட்ட; மேம்பட்ட வரலாறு புறக்கணிக்கப்படுகிறதா இல்லை அழிக்கப்படுகிறதா என்று தெரியவில்லை….. திருவள்ளுவர் மட்டுமல்ல பல ஆயிரம் வருடங்களுக்கு முன் தோன்றிய அகத்தியர், திருமூலர் முதல் கம்பன், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், பாரி, தீரன் சின்னமல, மருதுபாண்டி, வள்ளலார் போன்றோர் வரை சொல்லிக் கொண்டே போகலாம்…. திருவள்ளுவரையே தெரியாத உங்களுக்கு இல்லை இல்லை… காமராஜரையே தெரியாத உங்களுக்கு எவ்வளவு எடுத்துச் சொல்லியும் எந்தப் பயனும் இல்லை ‘ எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை மௌனித்தேன். ‘சரி, சென்ற ஒலிம்பிக் விளையாட்டில் பளு தூக்குவதில் வெள்ளி வென்ற வீரர் யார் தெரியுமா?’ ‘ தெரியாது, யாரோ மதராசி என்று கேள்விப்பட்டிருக்கிறேன்’ ‘மதராசி…….. நாங்கள் எல்லோரையும் இந்தியர்கள் என்று தான் கூறுவோம், அந்த மதராசியின் பெயர் குமரன்’ ‘ ஓ, உங்களுக்கு தெரியுமா?’ ‘அந்த குமரனின் அண்ணன் தான் நான்’ நான் தடுமாறினேன் மகிழ்ச்சியில் அல்ல அதிர்ச்சியில்….. சமாளித்துக் கொண்டு. ‘ குமரன் இப்போது எப்படி இருக்கிறார், எங்கு இருக்கிறார், என்ன செய்து கொண்டிருக்கிறார்?’ ‘ வாழப் போராடிக் கொண்டிருக்கிறார், வேலூரில் இருக்கிறார்… சிறிய சைக்கிள் கடை வைத்துக் கொண்டிருக்கிறார்.’ எனக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ‘ ஏன் நீங்கள் உதவி செய்யக் கூடாதா அவருக்கு?’ அவர் வெற்றுப் பார்வையுடன் ‘அவர் யாருடைய உதவியும் ஏற்க மாட்டார்… தன் காலிலேயே எப்போதும் நிற்க நினைப்பார்’ ‘ ஏன் அரசாங்கத்தின் உதவி கிடைக்கவில்லையா?’ அவரின் வெற்று பார்வை வெறுப்பு பார்வையாக மாறியது…. இதுவரை நாங்கள் கற்றதே கேள்விக்குறியானது.. இந்த அனுபவத்தை நான் திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ளப் போகிறேனா இல்லை மனச்சாட்சியை புதைத்து புகழின் போதையில் திளைக்கப் போகிறேனா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

bottom of page