top of page
Search
melbournesivastori

நரகம்.


  பயத்தின் சிகரம் எது என்று உங்களுக்கு தெரியும், அது மரண பயம்.

 அந்த அளவிலான பயத்தை உணர்ந்தேன்.. ஆனால் அது மரண பயம் அல்ல… ஒரு சிக்கலில் இருந்து என் இயலாமையினால் வெளிவர முடியாமையினால். நீங்கள் எளிதாக சொல்லி விடுவீர்கள் என்ன பெரிய சிக்கல் அது, என்ன பெரிய இயலாமை? மனோதிடம் வேண்டும் மனோதிடம் இருந்தால் எதிலிருந்தும் வெளி வரலாம் என்று ஆலோசனை எளிதாக கூறிவிடலாம்… எனக்கு என்ன சிக்கல் என்ன இயலாமை என்று நான் கூறின பிறகு தான் உங்களுக்கு புரியும்… கூறுகிறேன் ஆனால் இப்போது  இல்லை கடைசியாக கூறுகிறேன்.

   ராபர்ட் தாமஸ் பிகிலோ அமெரிக்க கோடீஸ்வர தொழிலதிபர். பணத்திற்கு குறைவில்லை இருந்தும் மற்ற பணக்காரர்கள் போல் இவர் இல்லை….

 பட்ஜெட் சூட்ஸ் அமெரிக்கா எனும் ஹோட்டல் சங்கிலியின் சொந்தக்காரர் மற்றும் பிகிலோ ஏரோஸ்பேஸ் நிறுவனர் மற்றும் சொந்தக்காரர் இவைகளைத் தவிர்த்து அறிவியல் முன்னேற்றத்திற்கு ஒரு அறக்கட்டளை போன்றும் நடத்துகிறார்.. இவைகள் எல்லாம் இருந்தும் மனம் எதையோ தேட யூ எஃப் ஓ ஆராய்ச்சிக்கு தன்னால் முடிந்த பண உதவியும் ஊக்குவிப்பும் தருகிறார். என்னடா இவர் பணத்தை வைத்துக்கொண்டு அனுபவிப்போம் என்று இல்லாமல் இதையெல்லாம் போட்டு குழப்பிக் கொள்கிறாரே என்று நினைத்தால்…. அவர் இதோடு நிற்கவில்லை… ஆழ்மனத்தின் பிரபஞ்ச தொடர்பு பற்றி ஆராய பெரும் நேரத்தையும் பொருளையும் செலவிடுகிறார்.

   மற்றுமொரு கோடீஸ்வரர் பிரண்டன் பியூகள், இவரின் முக்கிய தொழில் ரியல் எஸ்டேட்.. அது ஆடம் ஆன்ட்டியம் ரியல் எஸ்டேட்  எனும் பெயர் கொண்டது. மிகப் பெரும் புள்ளி…


இவருடைய அறிவியல் ஆலோசகர்கள் திரு ராபர்ட் பிகிலோவை 2016 ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்துகின்றனர்.


  ஸ்கின் வாக்கர் ரான்ச் ( பண்ணை) எனும் இடம் அமெரிக்காவில்  இல்லையில்லை உலகத்திலேயே மிகவும் அறிவியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள் நடக்கும் இடம்.

 சுமார் 512 ஏக்கர் பரப்பளவு உடையது. அது,  இது தான் என்று இல்லை எல்லாவித வினோதங்களும் நடைபெறுவதாக பேச்சுக்கள் அடிபட்டன. எந்தவித வினோத நிகழ்வுகளும் ரசிக்கும்படியாக இல்லை மாறாக திகிலூட்டும் படியாக இருந்தது… இந்த கதைகளை / உண்மை செய்திகளை இன்று நேற்றல்ல பல நூற்றாண்டுகளாக பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வருவதாக பேச்சு வழி  செய்திகள் உலாவின ….  100 வருடத்திற்கான பதிவான சான்றுகளும் உள்ளன. அங்கு வசித்த பழங்குடிகளே இந்தப் பெயரை வைத்திருந்தனர்… மேலும் ஏலியன்களின் நடமாட்டம் இருப்பதாகவும் பிக் புட் எனும் அதிஉயர மனிதர்கள் நடமாட்டம் இருப்பதாகவும் இது போதாதென்று ஷேப் ஷிப்ட்ர்ஸ் எனும் தோன்றி மறையும் அல்லது வேறு உருவம் எடுக்கும் அருவங்களை பற்றியும் மிகத் தீவிரமான செய்திகள் பரவியிருந்தது. இவையெல்லாம் காலம்காலமாக இருந்த செய்தி… தெரியாத செய்தி பின்னால் தெரிய வந்தது என்னவென்றால் அந்த பண்ணையின் சொந்தக்காரர் திரு ராபர்ட் பிகிலோ என்பது… 1990 களில் வாங்கியிருக்கிறார் ஏப்ரல் 2016 ஆம் ஆண்டு திரு பிரண்டன் அவர்களுக்கு விற்கத்தான் அந்த சந்திப்பு… முதலில் அவ்வளவாக பிடிப்பில்லாமல் இருந்த பிரண்டனுக்கு ராபர்ட் தெரிவித்த செய்திகள்.. விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்ட செய்திகளை அவ்வளவாக நம்பாத, அவைகளை சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் ப்ரண்டனுக்கு அந்த பண்ணையை வாங்கினால்தான் என்ன என்று தோன்றியது…


      ராபர்ட் பிகிலோ வெளியில் தெரிவிக்கக் கூடாது என்று ஒளிவு மறைவு இல்லாமல் கூறியது, 2008ல் இருந்து 2013 வரை ஐந்து வருட காலங்கள் உலகின் சக்திவாய்ந்த பென்டகனின் விஞ்ஞான ஆராய்ச்சிக்கு அந்தப்பண்ணை உட்படுத்தப்பட்டது என்றும் அதில் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்கள் அமெரிக்க நாட்டு இரகசியக் காப்பில் அடங்கிய தகவல்கள் என்று கூறினார்.


    ஒருவழியாக பிரண்டன்  முடிவெடுத்து 

அந்தப் பண்ணையை  பார்க்க மிகத் திறமை வாய்ந்த ராணுவ பயிற்சி எடுத்துள்ள பாதுகாவலர்கள் சூழ எலிகாப்டரில் பயணம் செய்து அந்த இடத்தை அடைந்தார். இறங்குவதற்கு முன் கண்ட காட்சிகள் சில உருவங்கள் நிலப்பரப்பில் தெரிய…. சில உருவங்கள் பாறைகளில் வரையப்பட்டிருக்க…..இறங்குவதற்கு சற்று முன்  கண்ட காட்சி ஒருவித பய உணர்வு ஊட்டும் படியாக இருந்தது… அது வேலிகளில் விலங்குகளின் பாகங்கள் தொங்கவிடப்பட்டிருந்தது.. விசாரித்ததில் சுற்றியிருக்கும் பழங்குடிகள் அந்தப் பண்ணையில் இருந்து எந்தவித பாதிப்பும் வெளிய வர விடாமல் தடுக்கவே  அப்படி செய்திருந்தனர் என்று. மேலும் அந்த பழங்குடிகளிடம் அந்தப் பண்ணையை பார்க்கவே கூடாது என்ற அறிவுரையும் பன்னெடுங்காலமாக இருப்பது தெரிந்து…  விசாரித்ததில் அந்த பண்ணையைப் பார்த்தாலே எல்லா வித கெட்ட நிகழ்ச்சிகளும் அப்போதிலிருந்தே தொடங்கும் மற்றும் பார்த்தவர்கள் எங்கு சென்றாலும் தொடரும் என்றும் நம்பப்பட்டது…. இது திகிலுக்கு  தீப்பந்தம் பிடித்தது.

     பிரண்டன் அந்தப் பண்ணையை சுற்றி பார்த்தபின் முடிவு செய்து வாங்கியும் விட்டார்.  பண்ணைக்கு வரும் சாலை மட்டுமே இவர்களுக்கு சொந்தம்… சுற்றியுள்ள எல்லா நிலங்களும் பழங்குடிகளுக்கு சொந்தம். சுமார் ஆறு மாத காலங்கள் எந்த ஒரு நிகழ்ச்சியும் பெரிதாக நடைபெறவில்லை.. ஆறு மாதங்கள் கழித்து ஒரு நாள் ஒரு முக்கியமான நபர் அந்தப் பண்ணையை பார்க்க விரும்பியதால் சில நண்பர்களுடன் அங்கே சென்றார்.  சாதாரணமாக தொடங்கிய அந்த பார்வையிடல் மதிய நேரத்தை சிறிது கடந்தவுடன் யாரும் எதிர்பார்க்காத நிலையில் திடீரென்று சுமார் 100 மீட்டர் தொலைவில் 50 மீட்டர் உயரத்தில் 40 மீட்டர் விட்டமுள்ள சில்வர் கலரில் ஒரு பறக்கும் தட்டு தோன்றியது…… மிகவும் அதிர்ச்சியில் எல்லோரும் அதைப் பார்க்க ஒரு நண்பர் மட்டும் உடனடியாக மொபைல் போனில் அந்தக் காட்சியை படம் பிடிக்க எடுத்தால் சார்ஜ் முழுவதுமாக இறங்கி விட்டிருந்தது தெரிந்தது .. பறக்கும் தட்டு மறைவதற்குள் எப்படியாவது படம் பிடித்து விட வேண்டும் என்ற அவசரத்தில் மற்றவர்கள் அவரவர்கள் போனை பார்க்க எல்லோருடைய மொபைல் போன்களும் ஜார்ஜ் இறங்கி  விட்டிருக்கிறது…. ஆச்சரியமா, அதிர்ச்சியா, பீதியா என்ற எந்த மனநிலைக்கும் ஒத்துவரும் அந்த நிகழ்வு சுமார் 20 நொடிகளே நிலைத்து கண்ணிமைக்கும் நேரத்தில் கண்ணெதிரே மறைந்தது.. மிகவும் குழம்பிய மனநிலையில் எல்லோரும் அன்றைய பார்வையிடலை  முடித்துக்கொண்டு நகரத்துக்கு திரும்பினர்…. இந்த நிகழ்வின் செய்தியை அவர்களின் ஒருவர்கூட யாரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை…. மனநிலைக் கோளாறு என்று நினைத்து விடுவார்களோ என்று. அதன் பிறகு அவ்வப்போது பிரண்டன் தன்னுடைய அறிவியல் ஆலோசகர்களுடன் பண்ணைக்கு சென்று ஆராய்ச்சி செய்து வந்தார். இது, அது என்று இல்லாமல் பலவித மர்மங்கள் ஒரு முடிவுக்கு வர முடியாமல் தொடர்ந்தது.

 இப்படியாக 2  வருடங்கள் கடந்தது… அந்த சமயத்தில் பிரபலமான ஹிஸ்டரி சேனல் பல வழிகளில் பிரண்டனை தொடர்புகொண்டு அந்தப் பண்ணையின் மர்மங்களை படம்பிடிக்க அனுமதி கேட்டனர்… தொடர்ந்து அந்த அழைப்புகளை தவிர்த்து வந்த பிரண்டன் ஒருவழியாக மூன்று விதிகளுடன் சம்மதித்தார். முதலாவது எல்லா நிகழ்வுகளும் ஒலி ஒளியாக பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் முற்றிலும் உண்மை தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்றும், இரண்டாவதாக படப்பிடிப்புக்கு ஹாலிவுட் குழு எதுவும் வரக்கூடாது என்றும் தன்னுடைய குழுவே எல்லாவித படப்பிடிப்புகளை நடத்தும் என்றும், மூன்றாவதாக எந்தக் காரணத்தை முன்னிட்டும் தான் தான் அந்தப் பண்ணையின் சொந்தக்காரர் என்று தெரியக்கூடாது என்றும் நிர்ப்பந்தித்தார்.  முதல் இரண்டு விதிகளுக்கு சம்மதித்த ஹிஸ்டரி சேனல் மூன்றாவதற்கு சம்மதிக்கவில்லை.. யார் அந்த நிலத்திற்கு அந்தப் பண்ணைக்கு சொந்தக்காரர் என்று அறிவிக்க வில்லை என்றால் அந்த சீரியல் முழுவதற்குமே நம்பகத்தன்மை போய்விடும் என்றும் அதற்காக அவர் தன்னை வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்திக் கொண்டே ஆக வேண்டும் என்றும் கூறினர். மிகத் தீவிர ஆலோசனைக்குப் பிறகு பிரண்டன் அதற்கு ஒத்துக்கொண்டார்.

       ஹிஸ்டரி சேனலின் ஜோ குழு 4மாத இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நடத்தியது. இதில் முக்கியமாக பங்கேற்றவர்கள் பிரண்டனின் குழு. அவர்களின் பெயர்கள் நான் இங்கு பகிர போவதற்கு தேவை இல்லாத ஒன்று… இருப்பினும் அதில் மிக முக்கியமானவர் டிராவிஸ் டைலர் இவர் ஒரு விஞ்ஞானி அஸ்றோபிசிக்ஸ் அண்ட் ராக்கெட் சயின்ஸ் இரண்டிலும் முனைவர் பட்டம் பெற்றவர்… பென்டகன் நாசா இரண்டு நிறுவனங்களிலும் பலகாலம் வேலை செய்தவர். ஐ செக்யூரிட்டி கிளியரன்ஸ் உடையவர்.


           டிராவிஸ் ஒரு விஞ்ஞானி என்பதால் இந்த அபூர்வ புதிரான விஷயங்களில் சிறிதும் நம்பிக்கை இல்லாதவர்…. நம்பிக்கை இல்லாமல்தான் இந்த ஆராய்ச்சிகளைத் துவங்கினார். அந்தப் பண்ணையை கவனித்துக் கொள்ளும் தாமஸ் என்பவர் டிராவிஸிடம்  முதன்முதலில் பேசும்போது அந்தப் பண்ணையை ஒரு உயிராகவே கருதி பேசியது மிகுந்த வியப்பில் ஆழ்த்தியது… போக போகத்தான் தெரிந்தது அதன் பொருள். டிராவிஸ் இந்த பண்ணையை பற்றி படித்தது கேள்விப்பட்டது பார்த்தது எல்லாம் நகைப்புக்கு இடமாக தெரிந்தது… அவைகளை சிறிதும் நம்பவில்லை. அந்தப் பண்ணையை அடைந்து முகாமிட்டு எல்லோரும் ஒன்றாக அமர்ந்து திட்டமிடத் தொடங்கி அரை மணி நேரத்திற்குள்ளாகவே எலக்ட்ரோ மேக்னடிக் மாயாஜாலங்கள் டிராவிஸை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எலக்ட்ரோ மேக்னடிக் கண்டறியும் கருவியின் முட்கள் தாறுமாறாக காண்பித்தது. நம்பிக்கை இல்லாத டிராவிஸிற்கு பண்ணை வரவேற்பு கொடுத்ததாகவே தாமஸ் நம்பினார். சில நாட்களிலேயே காமா ரேஸ் பாதிப்பினால் இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க வேண்டியதாக போய்விட்டது இத்தனைக்கும் எந்தவித  ரேடியேஷனும் அந்தப்பகுதியில் எந்தவித கருவியிலும்  கண்டுபிடிக்க முடியவில்லை … இது அந்தப் பண்ணையின் மீது மிகுந்த ஆர்வத்தையும் புதிரை விடுவிக்க உத்வேகத்தையும் தந்தது. அவர் கடைசியாக இரு பகுதிகள் படப்பிடிப்பு முடிந்தவுடன் கூறியது மற்றவர்கள் வாழ்நாளில் பார்க்கும் அல்லது அனுபவ படும் UFO & UAP களின் அனுபவம் தனக்கு சில வாரங்களிலேயே கிடைத்துவிட்டதாக கூறியதுதான்.

      பண்ணை முழுவதிலும் கேமராக்கள் மற்றும்  எல்லாவித அளவிடல் கருவிகளும் பொருத்தப்பட்டன… எந்த விதமான நிகழ்வையும் பதிவு செய்யாமல் விட்டு விடக் கூடாது என்ற கருத்து மொத்த குழுவிடம் இருந்தது. ஒரு முறை காமிராக்கள் எல்லாம் கண்காணித்துக் கொண்டிருக்கும் போதே  சாதாரணமாக மேய்ந்து கொண்டிருந்த ஒரு பசு திடீரென்று சுருண்டு விழுந்ததும் அதே சமயத்தில் ஒரு UAP தோன்றி மறைந்ததும் வியப்பில் அதிர்ச்சியில் ஆழ்த்த.. மொத்தக் குழுவும் அந்த பசுவின் அருகில் சென்று பார்க்க பசு இறந்து கிடந்தது.. இது விஞ்ஞானிகளுக்கு பெரும் சவாலாகவே பட அந்தப் பசுவை உடற்கூறு ஆய்வுக்கு இரு வேறு இடங்களுக்கு அனுப்பியும் இறந்ததற்கான காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை.. மொத்த முடிவுகளுமே மிகவும் நல்ல உடல்நிலையில் இருந்ததாகவே கூறின. இது நடந்த சில வாரங்கள் கழித்து காலை பண்ணையை சுற்றி பார்க்கும் போது மற்றுமொரு மாடு ஒரு சிறு ரத்தத் துளியும் இல்லாமல் பல உறுப்புக்கள் காணாமல் போயிருந்தது.. வேறு இடத்தில் ஒரு நாய் பேப்பரை போன்று தட்டையாக ஒரு ரோடுரோலர் இல் எழுதியது போன்று இருந்தது...அங்கு நடந்த நிகழ்வுகள் புதிருக்கு புதிராக சவாலுக்கு சவால் விடும் அளவிற்கு இருந்தது.

         'ஹிட்ச் ஐகர் நிகழ்வு' மற்றும் ஒரு புதிர்.. பண்ணையில் இருக்கும் போது ஏற்படும் வினோத நிகழ்ச்சி  சிலருக்கு அவர்கள் வீட்டுக்குச் சென்றாலும் தொடர்வது விவரிக்க இயலாமல் இருந்தது… அதைப் பற்றி பேசவோ விவரிக்கவோ எல்லோரும் பயந்தனர்… பேசினாலே தமக்கும் நிகழ்ந்து விடுமோ என்ற பயம் தான் அதற்கு காரணம்.

     டிராவிஸ் விவரித்த மற்றும்  ஒரு வினோத நிகழ்வு…. ஒரு முறை மிகப் புதிதான ஒரு காரில் பண்ணைக்குள் நுழைந்தவுடனேயே திடீரென்று ஒட்டுமொத்த கருவிகளும் செயலிழந்து போனதும் ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு தானாகவே எல்லாக் கருவிகளும் உயிர் பெற்றதும் எல்லா விளக்குகளும் அணைந்து எரிந்து அணைந்ததும்  காரில் இருந்தவர்களுக்கு பேயறைந்தது போல் இருந்தது ( கிளோஸ் என்கவுன்டர்ஸ் ஆஃ த திர்ட் கயின்ட் திரைப்படத்தில் வருவது போன்றே )

    மற்றுமொருமுறை ஒரு ஞாயிற்றுக்கிழமை டிராவிஸ் மற்றும் சிலர் செக்யூரிட்டி கேமரா மானிடர்களில் பண்ணையில் வினோதமாக ஒரு நிகழ்வை காண அதை பண்ணைக்குள் இருந்தவர்களுக்கு  இவர்கள் வாக்கி டாக்கியில் கூற மேலும் ஒரு  அதிர்ச்சி…. அங்கிருந்தவர்களுக்கு அது நடப்பது தெரியவில்லை.



        ஒரு முறை எல்லோரும் தங்கியிருந்த அறைக்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருக்க தலைமை பாதுகாவலர் மொபைல் போன் அலற எடுத்துப் பார்க்கும்போது தானாகவே அந்த போன் இயங்க ஆரம்பித்து FF பட்டனை அழுத்தியது போல் மெசேஜ் மற்றும்  வீடியோக்கள் மாறி மாறி ஓட திடீரென்று நின்றுவிட்டு 911( நம்ம ஊர் 100) க்கு தானாக போன் செய்தது… எல்லோரையும் அதிர்ச்சியின் எல்லைக்கு செல்ல வைத்தது. இது எதனால் நிகழ்ந்தது என்று அங்கு இருந்த நிபுணர்களே யூகிக்க முடியவில்லை..

         பலமுறை பலர் அனுபவப்பட்டது காதருகே யாரோ பேசியது போன்றது.. ஆனால் அருகில் இருந்தவர்களுக்கு அது கேட்கவில்லை… சிலமுறை பலருக்கு எங்கிருந்தோ மனதிற்குள் யாரோ தொடர்பு கொள்வது புரிந்தது…

 எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு முறை எல்லோருடைய கருவிகளும் தாறுமாறாக காண்பிக்க வானத்தில் ஸ்டார் கேட்டில் வருவது போன்று ஒரு பெரிய வெளிச்சம் தோன்றி சில நொடிகளில் மறைய.. எல்லோரும் அது ஒரு போர்ட்டல் திறந்து மூடியது என்ற முடிவுக்கு வந்தனர்.

       இத்தகைய வினோத நிகழ்வுகளை எவ்வளவோ கூறிக்கொண்டே போகலாம்….. உங்களுக்கு விருப்பம் இருக்கும் பட்சத்தில் நிறைய புத்தகங்கள், காணொளிகள், பேட்டிகள் இந்த பண்ணையை பற்றி வந்துள்ளது அதை படித்துப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இங்கு மிக முக்கியமான ஒன்றை நாம் கவனிக்க வேண்டும்…. டெலிபதி நம் சித்தர்களாலும் முனிவர்களாலும் அதிகமாக பயன்படுத்தப்பட்டதை இலக்கியங்கள் மூலம் படித்திருக்கிறோம்… ஆனால் அதை உணர்வுபூர்வமாக உணர உபயோகிக்க முடியாமல் இருப்பது நமது தவறே... இதை நான் சொல்வதற்கு காரணம் உண்டு. பறவைகளை விலங்குகளை கண்காணிப்போர் ஒன்றை கவனிக்க தவறி இருப்பார்கள்… அவைகள் அதிகம் பேசுவதில்லை ஆனாலும் ஒருவித ஒருமித்த நடவடிக்கைகள் ஒரே சமயத்தில் மேற்கொள்ளும், இதை சற்று நேரம் சிந்தித்துப் பாருங்கள்… ஒன்றுடன் ஒன்று பேசிக்கொள்வதில்லை ஆனாலும் எண்ண பரிமாற்றங்கள் நன்றாகவே நடைபெறுவது தெரியவரும். அது வேறொன்றுமில்லை டெலிபதியே… நமக்கும் அந்த சக்தி இருக்கிறது அதை பயன்படுத்தாமலேயே  ஆயிரக்கணக்கான வருடங்களாக இயற்கையிலிருந்து வெகுதூரம் வந்துவிட்டோம்… ஆனால் பறவைகளும் விலங்குகளும் நமது பெயரளவில் உள்ள நாகரிக வளர்ச்சியில் ஈடுபடாமல் இயற்கையோடு ஒன்றி இருப்பதாலேயே இன்னும் அவைகளால் அந்த சக்தியை பயன்படுத்த முடிகிறது. அந்த சக்தியின் சிறிதளவை செல்ல பிராணிகளை வளர்ப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும்… அதாவது நீங்கள் வளர்க்கும் மாடோ, நாயோ, பூனையோ, பறவையோ பலமுறை உங்களுக்கு என்ன உணர்த்த வருகிறது என்று உங்களால் புரிந்து கொள்ள முடியும். அது டெலிபதியின் மாதிரியே! இப்போது உங்களுக்குப் புரியும் நாம் கற்ற, தெரிந்த, புரிந்த அறிவியலுக்கு அப்பாற்பட்ட எவ்வளவு வினோத நிகழ்வுகள் நம்மைச் சுற்றி நடைபெறுகிறது என்று... என்னதான் முயன்றாலும் நமக்கு இருக்கும் அறிவியலின் அறிவை வைத்து இவற்றுக்கு விளக்கம் காண முடியாது.

   மயர் பேமிலி அந்தப் பண்ணையை சுற்றிப் பார்த்தவுடன் மிகவும் பிடித்து விட்டது, வாங்க முடிவு செய்து வாங்கியும் விட்டார்கள்… நகரத்தில் வாழ்ந்தவர்கள் அமைதியைத் தேடி  இயற்கையுடன் ஒன்றி வாழ நரகத்தைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று அப்போது அவர்களுக்கு தெரியாது……

   அவர்கள் வாழ்க்கை சாதாரணமாகத்தான் துவங்கியது, கணவன் மனைவி இருவரும் நகரத்தில் வேலை செய்ய அங்கேயே மகனையும் பள்ளியில் சேர்த்திருந்தார்கள். ஒரு நாள் மனைவி மளிகை சாமான்களை வாங்கி வந்து மேஜையின் மீது வைத்து  ஒவ்வொன்றாக எடுத்து அதனதன் இருப்பிடத்தில் வைத்தார், பிறகு பிரிட்ஜில் வைக்க வேண்டிய பொருட்களை எடுத்து பிரிட்ஜில் அடுக்க துவங்கினார்… அடுக்கி விட்டு  மேஜையை பார்க்கும் போது தூக்கி வாரி போட்டது.. மளிகை சாமான்கள் வாங்கி வந்த பையிலே ஏற்கனவே அடுக்கி வைத்திருந்த பொருட்கள் யாவும் திரும்பி பைக்குள்ளே இருந்தன. அதிர்ச்சியுற்றாலும்  வெளியே காண்பிக்காமல் துவட்ட டவலை எடுத்துக்கொண்டு குளிக்கச் சென்றார், குளித்து முடித்து துவட்ட  பார்த்தால்  டவலை கானோம்.. சிறிது நேரத்திற்குள்ளாக இரண்டாவது அதிர்ச்சி.. என்னவென்று புரியாமல் கணவனிடம் சொல்ல தோன்றவில்லை அவருக்கு அப்போது.

  சில நாட்களுக்குப் பிறகு கோடை இரவில் மூவரும் வெளிவந்து நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருக்கும்போதே  சிறுசிறு  சூரியனைப் போன்ற வெள்ளை கோளங்கள் மரங்கள் ஊடே ஒளிந்து, ஒளிந்து செல்வது போல் சென்றது கொஞ்சம் அதிர்ச்சியாக  இருந்தாலும் வினோதமாகவே  இருந்தது. சில நாட்கள் கழித்து அதேபோன்று சிறிய கோளங்கள் சிவப்பு வண்ணத்தில்  தோன்றி மாட்டு மந்தைகளுக்கிடையே செல்லும்போது மாடுகள் மிரண்டு தாறுமாறாக ஓட துவங்கியது மிகுந்த அதிர்ச்சிக்குளாக்கியது.

   சில நாட்கள் கழித்து அந்த கணவன் முள்வேலி கட்ட மரத் தூண்களுக்கு குழி எடுத்துக் கொண்டிருந்தார்…. சற்றே சில நொடிகள் தான் இருக்கும், வழிந்த வியர்வை துடைத்து  மீண்டும் குழி தோண்ட பார்த்தால் குழி தோண்டும் கருவியை காணோம்….. அவருக்கு இனம் புரியா அதிர்ச்சி தோன்றியது. ஒரு வாரம் கழித்து அந்த குழி தோண்டும் கருவி ஒரு மரத்தின் உச்சியில் இருப்பது தெரிந்தது மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அன்றையிலிருந்து மூவரும் ஒரே அறையில் பயத்தினால் உறங்கினர். சில வாரங்கள் எந்த ஒரு நிகழ்வும் நடக்காமல் இருக்க ஒரு இரவு உணவு முடித்துக் கொண்டு வெளியே வந்து நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருந்தனர்…. திடீரென்று வானத்தில் ஒரு வட்டமாக ஓட்டை விழ அதற்குள் தெரிந்த காட்சி ஆச்சரியப்படவா, அதிர்ச்சி அடையவா என்று குழம்ப வைத்தது… ஆமாம் இங்கு இரவு, அந்த வானத்து  ஓட்டைக்குள் தெரிந்ததோ மதிய வேலை சூரிய வெளிச்சம்.. அந்த ஓட்டையிலிருந்து  சற்றென்று ஏதோ வெளியே வர, ஓட்டை மூடிக்கொண்டது.

 சில நிமிடங்களில் திடீரென்று முன்பு பார்த்த கோளத்தை விட  இரு மடங்கு பெரிய நீல கலரில் ஒரு கோளம் எதிரே தோன்ற அதைப் பார்த்த கணத்திலேயே மூவரும் செயலற்று போய் சிலை போல் ஆனார்கள், சற்றென்று அந்தக் கோளமும் மறைந்தது  பிறகு அவர்கள் சுய நினைவிற்கும், சுய நிலைக்கும் வந்தனர். அன்று இரவு உறக்கமில்லாமல் அதே அதிர்ச்சியில் மறுநாளும் இருக்க மாலை ஆனது, இரவு ஏன் தான் வருகிறது என்ற நடுக்கம் ஏற்பட்டது.

   மயக்கம் தரும் அந்திமாலை, இருட்டலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது மூவரும் மாடுகளை இரவு உறங்கும் கொட்டிலில் அடைக்க சென்றனர்,   எல்லா மாடுகளையும் அடைத்து விட்டு  அதன் கேட்டை சங்கிலியால் பூட்டி திரும்பும்போது தான் உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு பெரிய ஓநாய் ஒன்று கணவன் மனைவிக்கு நடுவில் நுழைந்து சென்றது. அந்த ஓநாய் நிற்கும் போது கணவனின் நெஞ்சளவுக்கு வரும் உயரம்… பார்க்க படு பயங்கரமாக இருந்தாலும்  இவர்களை சட்டை செய்யாமல் கடந்து சென்றது மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது.

   அந்த ஆச்சரியம் சில நொடிகளே நிலைக்க  மாடுகள் மிரள, இளம் கன்று பயம் அறியாதது எனும் மொழிக்கேற்ப ஒரு இளம் கன்று வேலியில் இருந்து தலையை வெளியே நீட்ட அதுதான் சமயம் என்று அந்த ஓநாய் அந்த கன்றை கவ்வியது.

  பதற்றத்துடன் கணவன் பையனிடம் காரில் இருந்த ஷார்ட் கண் எடுத்து வரச் சொல்ல, அதன் மூலம் மூன்று முறை அந்த ஓநாயை பார்த்து சுட்டார். என்ன நடக்கிறது என்றே புரியவில்லை, அந்த ஓநாய்  குண்டு பட்டதையோ இல்லை அந்த சத்தத்திலையோ ஒரு சிறிய பாதிப்பும் இல்லாமல் பிடியை விடாமல் இருந்தது கணவன் ஓடிச்சென்று  அண்டிங் ரைப்பில்  எடுத்து வந்து  சுட்ட போது முதல் குண்டு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்க இரண்டாவது முறை சுட்டபோது  அந்த குண்டு உடலில் பாய்ந்து கொத்தாக அந்த ஓநாயின் சதையை தூக்கி அடித்தது.

  அப்போதுதான் ஏதோ நடப்பது புரிந்து அந்த ஓநாய் அந்த கன்றை  கவ்வியதை  விட்டுவிட்டு எவ்வித அவசரமும் இல்லாமல் புதர்களை நோக்கி நடந்து சென்றது.. அடிபட்ட அந்த ஓநாயை வலியுடன்  விட பிடிக்காமல் நெற்றியில் சுட தொடர, தொடரும் போதே சற்றென்று  மறைந்தது. அதிர்ச்சி மேல் அதிர்ச்சியுடன்  வீட்டை நோக்கி திரும்ப அந்தக் கொத்தான  ஓநாய் சதை விழுந்த இடத்தில் அழுகின பிண துர்நாற்றம்  அடிக்க,  அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை… அதற்குள்  எப்படி அழுகின பிண துர்நாற்றம் அடிக்க முடியும் என்று.

  பதற்றம், அதிர்ச்சி, அசதி தொடர தூக்கம்  இல்லாமல் இரு இரவுகள் இருந்தது பாதிக்க அப்படியே மூவரும் சாய்ந்தனர். சூரிய உதயத்தில் அலறி அடித்தபடி ஒரே சமயத்தில் கணவனும் மனைவியும் எழ, நேற்று இரவின் சம்பவத்தை நினைக்கவே பயந்தாலும் வேறு வழி இல்லாமல் ஒரு முடிவுக்கு வந்தனர்…. இனி எந்த ஒரு மாடு பாதிப்படைந்தாலும் மனைவி, மகனை அழைத்துக் கொண்டு நகரத்திற்கு திரும்புவதாகவும் கணவன் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அந்த பண்ணையை விற்றுவிட்டு  அவர்களுடன் இனி நகரத்திலே வசிக்கப் போவதாகவும். மனைவி கூறினார், சாதாரண மாடு பாதிப்படைவதையே நம்மால் தாங்க முடியவில்லை நம்மிடம் இருக்கும் அந்த விலை உயர்ந்த நான்கு காளை மாடுகளுக்கு ஏதாவது பாதிப்பு என்றால்…. அந்த நஷ்டத்தை நினைத்தும் பார்க்க முடியவில்லை என்று.

   எது எப்படியும் மாடுகளுக்கு முக்கிய தீவனம் வாங்க வெளியே சென்று ஆக வேண்டும்…… சென்றனர். சரியாக ஒன்றரை மணி நேரம் கழித்து திரும்பியதும், முதல் வேலையாக கணவனும் மனைவியும்  மாடுகள் நலமாக இருக்கின்றனவா என்று பார்க்கச் சென்றனர். எல்லா மாடுகளும் நன்றாக இருந்தன…. அப்போது தான் கவனித்தனர் குறிப்பாக அந்த நான்கு காளை மாடுகளும் இல்லாததை… பேய் அறைந்தது போல் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர். உடனடியாக பண்ணையின் மோட்டார் வண்டியில் பண்ணை முழுவதும் சுற்றி வந்தனர். எங்கு தேடியும் அந்த நான்கு காளை மாடுகளை காண முடியவில்லை. கணவன் மனம் சோர்ந்து கடைசியாக தான் பார்க்காத இடமான அங்கிருந்த கண்டெய்னரை திறந்து பார்க்க முடிவெடுத்தார்… தான் செய்யப் போவதில் ஒரு சதவீதம் கூட நம்பிக்கை இல்லை அவருக்கு… ஏனென்றால் அந்த கண்டெய்னரில்  ஒரு காளை மாடு மட்டுமே தாராளமாக நிற்க முடியும். இருப்பினும் அதனுள் காளை மாட்டை ஏற்ற 20 பேர் இருந்தாலும் முடியாது…

   சோர்வுடன் கண்டெய்னர் அருகில் சென்று அங்கிருந்த துவாரம் வழியாக பார்க்க…. ஆச்சரியம் அடைய வேண்டிய இடத்தில் மரண பயம் அடைந்தார்… அந்த கண்டெய்னரில்  நான்கு காளை மாடுகளும் சற்றும் இடைவெளி இல்லாமல் அழுத்தி அடைக்கப்பட்டு இருந்தன… அதிர்ச்சியில் கன்டெய்னரை  பிடித்திருந்த பிடியை விட அப்படியே விழ, அந்த சத்தத்தில்  செயலற்று ஒருவித  மயக்க நிலையில் இருந்த அந்த காளை மாடுகள்  விழித்துக் கொள்ள…. கடுமையான போர் மூண்டது போல் ஒன்றை ஒன்று இடித்துக் கொண்டு இரும்பிலான கன்டெய்னரையே  உடைத்துக் கொண்டு வெளியேறின.

     இந்த நரகத்திலிருந்து தப்பிக்க தான் அந்தப் பண்ணையை  முதலில் கூறியபடி  திரு ராபர்ட் தாமஸ் பிகிலோவிற்கு 1990 ல் இந்த மயர் குடும்பம் விற்றனர்.

     சரி, ஏதோ, எங்கேயோ அமெரிக்காவில் நடந்ததை கூறி இதுதான் நரகம் என்றும், மரண பயம் என்றும் கூறப் போகிறாயா என்று கேட்கிறீர்களா? இல்லை, எனக்கு நடந்ததை கூறப்போகிறேன்.

     நான் பயோ மெடிசன் மாஸ்டர்ஸ் படிப்பவன், அன்று மிக முக்கியமான பயோ என்ஜினியரிங் பாடத்தில் தேர்வு.. முன்பாகவே கிளம்பி காரை பார்க் செய்துவிட்டு தேர்வு ஹாலை நோக்கி நடக்கும்போது தான் என் ஐடெண்டி கார்டை மறந்து காரிலேயே விட்டு வந்தது ஞாபகத்திற்கு வந்தது…. உடனடியாக அதை எடுத்து வர  காரை நோக்கி நடந்தேன்….. எனக்கு ஒன்றுமே புரியவில்லை, சில நிமிடங்களுக்கு முன்னால் தான் பார்க் செய்த என் காரை காணோம்… சுற்றும் முற்றும்  எங்கும் தேடினேன்…. இந்த மெல்லிய குளிரிலும் எனக்கு வேர்த்துது… நெஞ்சு வலிப்பது போல் இருந்ததால் நெஞ்சை பிடிக்க ஐடென்டிட்டி கார்ட் மேல் சட்டை பாக்கெட்டில் இருந்தது தெரிந்தது.. அப்பாடா என்று தேர்வு அறைக்குச் சென்று அமர்ந்தேன். வினாத்தாள்கள் மேஜையிலேயே இருக்கும், தேர்வு தொடங்கும் சமயத்தில் தான் அதை தெரிந்து பார்க்க வேண்டும்.

   அந்த நேரமும் வந்தது, வினாத்தாளை எடுத்துப் பார்த்த எனக்கு அதிர்ச்சியாக இருந்தது…. ஏனென்றால் அது அக்கவுண்டன்சி வினாத்தாள். பயோ மெடிசனுக்கும் அக்கவுண்டன்சி வினாத்தாளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை… தவறுதலாக அந்த அறைக்கு வந்து விட்டேனா என்று எக்ஸாமினியரை பார்த்து கேட்க, அவரோ எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நான் சரியான இடத்தில் தான் இருக்கிறேன், அக்கவுண்டன்சி வினாத்தாளும் என்னுடையதுதான் என்று கூற எனக்கு நெஞ்சே வெடித்து விடும் போல் இருந்தது…. என்ன செய்வது என்றே புரியவில்லை… வியர்வையில்  உடல் முழுவதும் நனைந்தது… எப்படி அக்கவுண்டன்சி பாடம் எனக்கு இருப்பது தெரியாமல் போய்விட்டது, இன்று பயோ என்ஜினியரிங் தேர்வு தான் என்று உறுதியாக நம்பினேனே… அக்கவுண்டன்சி புத்தகத்தை கூட பார்த்ததில்லையே… குழப்பத்தில், அதிர்ச்சியில், அதீத பயத்தில் நெஞ்சே வெடித்து விட்டது.

 தாங்க முடியாத வலியில் ‘ஆ!’ என்று அலற, ‘ என்னங்க கெட்ட கனவா?’ என்று மனைவி கேட்கும் போது தான் மறுபடியும் உயிரே வந்தது. 

36 views
bottom of page